பிஜேபி ஆட்சியில் முஸ்லிம்களுக்கு நீதி கிடைக்காது என்பதால் அவர்கள் கடந்த தேர்தலில் திமுகவை நம்பும்படி கட்டாயப் படுத்தப்பட்டார்கள். அவர்களுக்கு வேறு எந்த மாற்றுமே இருக்கவில்லை. 'அதிமுக பிஜேபியின் பினாமியாக மாறிவிட்டது. அதனால் முஸ்லிம்கள் கண்டிப்பாக திமுகவை வெற்றி பெறச் செய்ய வேண்டும், இல்லை என்றால் தமிழ்நாட்டில் அதிமுக மூலம் பிஜேபி அதிகாரத்துக்கு வந்துவிடும்' என பல முற்போக்கு இயக்கங்களும் தீவிரமாகப் பரப்புரை செய்து முஸ்லிம்களின் ஓட்டுக்கள் திமுகவுக்கே பெரும்பாலும் விழும்படி செய்தன. முஸ்லிம்களின் தயவில் திமுகவும் வெற்றி பெற்றது.
தங்களின் ஆத்ம நண்பன் ஆட்சிக்கு வந்து விட்டதால் இனி தங்களுக்கும் நிச்சயம் நீதி கிடைத்துவிடும் என அந்த மக்கள் மனப்பூர்வமாக நம்பிக் கொண்டிருந்த வேளையில், அண்ணாவின் 113வது பிறந்தநாளை ஒட்டி தமிழ்நாட்டில் உள்ள சிறைகளில் நீண்ட காலம் சிறைவாசம் அனுபவித்து வரும் கைதிகளில் 700 பேரை நல்லெண்ண அடிப்படையில் விடுவிக்க உள்ளதாக கடந்த செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.
ஆனால் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள முருகன், சாந்தன், நளினி, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை தொடர்பாகவோ, அதே போல 20 ஆண்டுகளுக்கு மேலாக கோவை சிறையில் உள்ள 38 இஸ்லாமிய சிறைவாசிகளை விடுவிப்பது தொடர்பாகவோ எந்த அறிவிப்பையும் திமுக அரசு வெளியிடவில்லை.
யார் யார் எல்லாம் முன்விடுதலை பெறத் தகுதியானவர்கள் என்ற ஆணையை வெளியிட்டு பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும், கோவை சிறையில் உள்ள 38 இஸ்லாமிய சிறைவாசிகளும் சிறையைவிட்டு வெளியே வருவதற்கான வாய்ப்பே இல்லை என்பதை திமுக அரசு உணர்த்தி இருக்கின்றது.
அரசு வெளியிட்ட ஆணையில், பயங்கரவாதம், மதமோதல், வகுப்பு மோதல், பாலியல் வன்கொடுமை, சாதி மோதல், அரசுக்கு எதிராக செயல்பட்டவர்கள், சிறைவாசத்தில் இருந்து தப்பிக்க முயன்றவர்கள், ஊழல் வழக்கு, குண்டுவெடிப்பு என 17 குற்றங்களை வகைப்படுத்தி, இந்தக் குற்றங்கள் தொடர்பாக தண்டனை பெற்றவர்களை விடுதலை செய்வதற்கு வாய்ப்பில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் ஆய்வு செய்து பட்டியலைத் தயார் செய்வதற்கான சிறப்புக் குழு ஒன்றையும் அரசு அமைத்துள்ளது.
தற்போது பதவி ஏற்றுள்ள திமுக அரசு மட்டுமல்ல இதற்கு முன் ஆட்சியில் 10 ஆண்டுகள் இருந்த அதிமுக அரசும், அதற்கு முன் இருந்த கருணாநிதி தலைமையிலான திமுக அரசும் இதே துரோகத்தைத்தான் செய்தன.
அண்ணா பிறந்தநாள் நூற்றாண்டு விழா, எம்.ஜி.ஆர் பிறந்தநாள் நூற்றாண்டு விழா போன்றவற்றை முன்னிட்டு கைதிகளை முன்விடுதலை செய்தாலும் அதிலும் இதே விதிமுறைகளைப் பின்பற்றியதால் நீண்ட நாள் சிறையில் உள்ள முஸ்லிம் கைதிகள் விடுதலை செய்யப்படவில்லை. முஸ்லிம்கள் என்பதாலே சிலர் மீது மத மோதல், வெடிகுண்டு வழக்குகள், அரசுக்கு எதிராக செயல்பட்டார்கள் என வழக்கு தொடரப்பட்டுள்ளது என்றும், 1985 இல் அமல்படுத்தப்பட்ட Prevention of Anti-Social Activities Act மற்றும் பொடா சட்டங்கள் முஸ்லிம்களுக்கு எதிராகவே பெரிதும் பயன்படுத்தப்படுகின்றது என்றும் இஸ்லாமிய அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஆனால் ஆட்சியாளர்களின் செவிட்டுக் காதுகளில் அது ஒருபோதும் விழுவதில்லை.
தருமபுரியில் வேளாண் கல்லூரி மாணவிகள் மூன்று பேர் உயிரோடு எரித்து கொல்லப்பட்ட வழக்கு மற்றும் மதுரையில் சி.பி.எம் கட்சியைச் சேர்ந்த லீலாவதி படுகொலை வழக்கில் தண்டனை பெற்றவர்கள் 8 ஆண்டுகள் மட்டுமே சிறையில் கழித்திருந்த நிலையில் முன்விடுதலை செய்யப்பட தகுதி வாய்ந்தவர்களாக அடையாளம் காணப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர். தஞ்சை கீழவெண்மணி வழக்கில் சேர்க்கப்பட்ட பத்து பேரும், பத்து ஆண்டுகளில் விடுதலை செய்யப்பட்டனர்.
ஆனால் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும், கோவை சிறையில் உள்ள 38 இஸ்லாமிய சிறைவாசிகளும் மட்டும் எப்போதுமே விடுதலை செய்யப்படவில்லை. இவர்களைக் காட்டி ஒவ்வொரு தேர்தலுக்கும் ஓட்டுப் பொறுக்க மட்டுமே அரசியல்வாதிகள் பயன்படுத்திக் கொள்கின்றார்கள்.
இவர்களை விடுதலை செய்வதற்கான அனைத்து அதிகாரங்களும் மாநில அரசுக்கு இருந்தும் திட்டமிட்டே அரசியல் லாபத்திற்காக தட்டிக் கழிக்கின்றார்கள்.
ஒரு ஆயுள் தண்டனைக் கைதி 13 ஆண்டுகள் சிறையில் கழித்தவுடன் சிறை Manual படி மாவட்ட நீதிபதி, மாவட்ட கலெக்டர், ஜெயில் கண்காணிப்பாளர் மற்றும் நன்னடத்தை அதிகாரி ஆகியோரைக் கொண்ட ‘Advisory Board’ அவரின் மனுவை பரிசீலனை செய்து 14 வருடத்தில் அவரை விடுதலை செய்ய முடியும்.
ஆனால் முஸ்லிம் சிறைவாசிகள் அனைவருமே 15 வருடத்திற்கு மேல் சிறையில் கழித்திருந்த போது கூட அவர்களுக்காக அட்வைசரி போர்டு கூட்டப்படவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் முஸ்லிம்கள் இரண்டாம்தர குடிமக்களாக நடத்தப் படுகின்றார்கள் என்பதைத்தான் இது காட்டுகின்றது. பல குண்டுவெடிப்புகளில் தொடர்புள்ள காவி பயங்கரவாதிகள் சிபிஐ, என்ஐஏ, நீதிமன்றம் போன்றவற்றின் துணையுடன் விடுதலை செய்யப்பட்டதும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனதும் நடந்தது.
ஆனால் அப்சல் குருக்களும், யாகூப் மேனன்களும் இந்து சமூகத்தின் பொது மனசாட்சியை திருப்திபடுத்த தூக்கில் ஏற்றப்பட்டார்கள்.
இந்திய மக்கள் தொகையில் 14.2 சதவிகிதம் முஸ்லிம்கள் இருந்தாலும் சிறையில் உள்ள கைதிகளில் 16.6 சதவீதம் முஸ்லிம்களே ஆவார்கள். அதில் 18.8 சதவீத கைதிகள் விசாரணைக் கைதிகள் ஆவார்கள். மேலும் தடுப்பு காவலில் உள்ள கைதிகளில் 35.5 சதவீதக் கைதிகள் இஸ்லாத்தை கடைபிடிப்பவர்களாக உள்ளார்கள் என 2019 ஆண்டு வெளியிடப்பட்ட தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் அறிக்கை கூறுகின்றது
இதில் உபி முதலிடத்திலும், மேற்கு வங்கம் இரண்டாம் இடத்திலும், பீகார் மூன்றாவது இடத்திலும் உள்ளது.
இந்துக்களின் மனசாட்சி மட்டுமல்ல இந்தியாவின் பொது மனசாட்சியே முஸ்லிம்களுக்கு எதிராக செயல்பட்டுக் கொண்டு இருக்கின்றது.
பிஜேபி மட்டுமல்லாமல் இந்தியாவில் உள்ள பெரும்பாலான கட்சிகள் முஸ்லிம்களுக்கு எதிரான மனநிலையிலேயே இருக்கின்றன. ஆனால் தேர்தலில் வெற்றி பெற முஸ்லிம்களின் ஓட்டுவங்கி முக்கியம் என்பதால் தேர்தல் காலங்களில் அவர்களிடம் நம்பிக்கையான வாக்குறுதிகள் அளிக்கப்பட்டு தேர்தல் முடிந்த உடன் வழக்கம் போல ஏமாற்றப் படுகின்றார்கள்.
திமுகவுக்கு ஓட்டு கேட்டவர்கள் இப்போது முஸ்லிம்கள் நீதி கேட்டு அரற்றும் போது அவர்கள் சித்தாந்த வகுப்பு நடத்திக் கொண்டு இருக்கின்றார்கள். முஸ்லிம்களின் அழுகுரல் காதில் விழாத தூரத்தில் நின்றுகொண்டு அவர்கள் ஸ்டாலினுக்கும் உதயநிதிக்கும் லாவணி பாடிக் கொண்டு இருக்கின்றார்கள்.
கார்ப்ரேட் கட்சிகளை விட மோசடிப் பேர்வழிகளாய் அதற்கு ஓட்டுப்பிச்சை எடுத்த சித்தாந்தவாதிகள் உள்ளார்கள்.
திமுக ஆட்சிக்கு வந்தால் தன்னுடைய மகனோ, அப்பாவோ, அண்ணனோ, தம்பியோ விடுதலையாவார்கள் எனக் கண்ணீருடன் காத்திருந்த அப்பாவி முஸ்லிம்கள் துயரத்தைச் சொல்ல ஆளற்று வெறுமையில் வலியோடு காத்திருக்கின்றார்கள்.
- செ.கார்கி