மொய் வைத்தல்... கல்யாண காது குத்து சடங்கு என்று விசேஷ வீடுகளில் பெரும்பாலும் மனதுக்குள் பதியாமல் கடந்து விடும் ஒரு காட்சி தான். ஆனால் இம்முறை மொய் எழுதவே ஒரு வாய்ப்பு கிடைத்தது. வாய்த்ததையெல்லாம் வாய்ப்பாக்கி கொள்ளும் மனோதிடம் நம்மிடம் இருப்பதால்... ஆஹா வனம் உள்ளே. சரி என்று ஆரம்பித்தேன். நீண்ட நாட்களுக்கு பின் காசு புரளும் கைகளை காணும் ஆர்வம். குல்லாவை சரி செய்து கொண்ட போது... குளிர் தாண்டியும் மனம் கவனத்தில் குவிந்தது.

ஒரு வேடிக்கையைப் போல நிகழ்ந்து கொண்டிருந்த மொய் எழுதும் படத்தில்தான் எத்தனை எத்தனை வெரைட்டி மனிதர்கள். அவர்கள் மத்தியில் கதைகளுக்கா பஞ்சம். ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு கதை. படிக்க... பார்க்க... கேட்க... உணர என்று ஒவ்வொரு முறை ஒருவர் பெயர் எழுதும் போதும்... கதைக்காரன் கண் விழித்தே கிடந்தான். கவிதைக்காரன் கன்னம் மினுங்கி கிடந்தான். கட்டுரைக்காரன் கணக்கு போட்டுக் கொண்டே இருந்தான். கலைஞனின் வாழ்வில் எல்லாமே பரிசோதனை தான்.

பெயரை இனிஷியலோடு சொல்லி... கூடவே மனைவி பெயரையும் சொல்லி... ஊர் பேர் சொல்லி.. இன்னார் மகன் என்ற அடைமொழியோடு ஐநூத்தி ஒன்றை வைத்து... எழுதி முடிக்கும் வரை கண்களை சிமிட்டாமல்... அது நம் பெயர் தானா என்று உறுதி படுத்திக் கொண்டு... அந்த காசை நான் அதற்குண்டான பெட்டியில் போடுகிறேனா என்று பார்த்து விட்டு தான் நகர்ந்தார்கள். எந்த காரணம் கொண்டும் தன் வரவும்....தன் தரவும்.... எதிலும் மிஸ் ஆகி விடவே கூடாது என்ற கவனம் ஒவ்வொரு மனிதனிடமும் இருந்தது.


ஆயிரத்து ஒன்றை நீட்டி விட்டு நம்ம பேர் தெரியுமில்ல என்று மிரள வைத்தவர்களும் உண்டு. நிஜமாகவே பெயரை மறந்து விட்டு மீசையை எங்கேயோ பார்த்திருக்கிறேனே என்று உள்ளே நொடிகளில் 15 வருடங்களுக்கு முன் சென்று சுற்றி சுழற்றி தடுமாற... புரிந்து கொண்ட தம்பி... "குட்டிண்ணா.... அவரு பேரு இது..." என்று காதில் கிசுகிசுக்க... ஓ.... எஸ் எஸ்.. என்று எழுதி சமாளித்த போதும்... அவர் பார்த்துக் கொண்டே புன்னகைத்தபடி நின்றாரே தவிர பெயரை சொல்லவில்லை. யாருகிட்ட... யார் பேர சொல்றது போன்ற பாவனையை ரசிக்கலாம் தான். 

ஒருவருக்கு அவரின் மனைவி பேரை முதலில் எழுதிவிட்டேன். ஒப்புக் கொள்ளவே இல்லை அந்த கிருதாக்காரர். அது என்ன வழக்கம்... நம்ம பேரை முதல்ல எழுதி.. அப்புறம் அவ பேர எழுதுங்க தம்பி என்று... கிட்டத்தட்ட அது கட்டளை. அவர் கண்கள் வேறு நம்பியார் கோபப்படுவது போல கன கனவென மேலும் கீழும் வேண்டுமென்றே அசைந்து கொண்டிருந்தது. எதுக்கு வம்பு என்று அப்படியே எழுதி சிரித்தேன்.

வைக்க வேண்டியதை வைத்து விட்டு... "நீங்க இப்பிடி பண்ணுவீங்கன்னு நினைக்கல" என்று சொன்ன மனிதன்... ரெம்ப நேரம் அதையே திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டே இருந்தார். முதலில் ஒன்றும் புலப்படவில்லை. பிறகு ஒருவேளை நாம ஏதோ பண்ணி இந்த ஆள்கிட்ட எதுவோ மாட்டிகிச்சோ... என்று கூட கற்பனைக்காரன் சும்மா கரகாட்டம் ஆட ஆரம்பித்து விட்டான். பிறகு அவரை கண்டு கொள்ளாமல் மற்றவரை பார்க்க.. ஆனாலும் சற்று தள்ளி நின்று ஒரு கிறக்க பார்வையை வீசிக் கொண்டே கழுத்தை மெல்ல ஆட்டியபடியே இருந்தார். என்னடா இது என்பது போல இருந்தாலும்... உள்ளே சிரிப்பு வராமல் இல்லை. நான் என்ன பண்ணேன் என்று கடைசி வரை அவரும் சொல்லவில்லை. நானும் கேட்கவில்லை. நாலைந்து நிஜாம் பாக்குகளை பிரித்து பிரித்து ஒவ்வொரு முறை அதை சொல்கையிலும் வாய்க்குள் போட்டபடியே இருந்தார். ஓ இதுக்கு தானா என்று ஒரு மாதிரி புரிந்து கொண்டு சிரித்து வைத்தேன். குளிருக்கு போட்ட உள் ஸ்வெட்டரின் உருட்டு வேலை அது.

"சித்தி குடுத்து விட்டத.... வெச்சாச்சு.." என்றவரை பார்த்தேன். குடுத்து விட்டதில்... பாதி குடித்து விட்டது. மீதி தான்... குடுத்து விட்டது என்று சும்மா தன்னை தானே போட்டுக் கொடுத்துக் கொண்டது. சரி என்று எழுதிக் கொண்டேன்.

பழைய சொந்தங்களை... பழைய நண்பர்களை... மொய் வாங்குகையில் பார்க்க... பேச முடிந்தது. ஆசையாய் பார்த்தவர்களும் உண்டு. அதிசயமாய் பார்த்தவர்களும் உண்டு. இவனா என அலட்சியமாய் பார்த்தவர்களும் உண்டு. ஆனால் பார்வை பலமாக இருந்தது. சிறுவயதில் பார்த்த நிறைய முகங்களில் சுருக்கம் கூடி....நல விசாரிப்புகள் என்று நான் எழுதியது என்னவோ மொய். எழுத எழுதவே படித்தது காலத்தின் மெய்.

கோத்தகிரி குளிர்... நான்கு வால்பாறைக்கு சமம் போல. ஒவ்வொரு துளியிலும் ஊசி முனை. ஒவ்வொரு நொடியிலும் காதடைத்த ஓசை. 

இப்போதெல்லாம் டைப்பித்து டைப்பித்து எழுதுவதே மறந்து விட்டது. குளிரும் சேர... எழுத்தில் வடிவம் வளைய மறுத்து... ஸ்டக் ஆகையில் எல்லாம் பெருமூச்சு வாங்கிக் கொள்ள வேண்டி இருந்தது. 

ஒருவர் வந்தார். மற்றவருக்கு நான் எழுதுவதை பார்த்துக் கொண்டே இருந்தார்.

இல்ல தம்பி.. தமில்ல எழுதுங்க... என்றவர்.. இல்ல விடுங்க நானே எழுதிடறேன் என்றார்... சரி என்று அவரைப் பார்த்துக் கொண்டே நோட்டை தலைகீழாக்கினேன்.

அடைமொழி மட்டுமே ஒரு வரியை நிரப்பியது. அப்பா பெயர் அம்மா பெயர்.. தன் பெயர் ஊர் பெயர்.. பின்கோடு உள்பட எழுதி விட்டு... ஒருமுறை உற்று நோக்கி ஏதாவது விடுபட்டு விட்டதா என்றும் பார்த்தார். பிறகு இந்தாங்க என்று காசை நீட்டினார். வடிவேலு காமெடி தான் நினைவுக்கு வந்தது. இந்த ரூவாக்கு தான் இத்தனை பேரா.. என்று ஒரு பார்வை பார்த்தேன். அவரும் வடிவேலு மாதிரியே ஹ்ம்ம்ம்....என்பது போல சத்தம் வராமல் சமாளித்துக் கொண்டே நகர்ந்து விட்டார். வாய்விட்டே சிரித்து விட்டேன். 

நூத்தி ஒன்னு இருநூத்தி ஒன்னு.. ஐநூத்தி ஒன்னு என்று இந்த ஒன்னை எதற்கு சேர்க்கிறார்கள் என்று புரியவில்லை. எதற்காக இருந்தாலும். அது லாஜிக்காவாவே இருந்தாலும்..அதில் மொய் வாங்குவோனுக்கு சுமை தான். சுவை இல்லை. ரெண்டு ரூபாயை கொடுத்து விட்டு மீதி ஒரு ரூபாய் குடு என்று கேட்டவர்களும் உண்டு. ஐநூரை கொடுத்து விட்டு முன்னூறு எடுத்துக்கோங்க என்று கேட்க... இருநூறுக்கு... சில்லறை இல்லாமல் அல்லாடிய நொடிகளும் உண்டு. மொய் வைக்கும் இடத்திலும் மொத்தமாக கொடுத்து சில்லறை வாங்குவது...வித்தியாசமாக இருந்தது. 

கவரில் பக்காவாக பேர் எழுதி தந்து விட்டு நாம் நோட்டில்... எழுதும் போது இன்னும் சில பேர்களை சேர்க்க சொல்லி அந்த நேர ஞானத்தில் படுத்தி எடுத்ததை எல்லாம் நினைத்தாலே வியப்பு சிரிப்பு தான். நாலைந்து பேர்களை அடுத்தடுத்து சொல்லி விட்டு... முதல் பேருக்கு இவ்ளோ.. அடுத்ததுக்கு இவ்ளோ என்று சொல்லி மொத்தமாக பணத்தை நீட்டிய போது அந்த நேர குளறுபடி கண்களை குறுகுறுக்க வைத்தது. பிறகு வந்து தருகிறேன் என்று சொன்ன அந்த ஒரு ரூபாய்களை தந்தார்களா... இல்லையா என்று கணக்கு வைக்க முடியாமல்... ஒரு மிக மெல்லிய யுத்தம் மொய் டேபிளில் அடுத்தடுத்து நிகழ்ந்து கொண்டிருந்தது.

நான் பார்த்ததும் 'ஓஹ் இவுங்களா..!' என்று புருஷன் பொண்டாட்டி பேரை சேர்த்து எழுதி விட்டேன். 

"அய்யயோ அவன் பேரை அழிங்க தம்பி... அவன் இப்போ என் கூட இல்ல.... என் பேரு மட்டும் போதும்.." என்றது ஒரு பெண்மணி. எதுக்கு இந்த அவசர குடுக்கை வேலை என்று வழிந்து கொண்டு மெல்ல கோடிட்டு அந்த மன்மதன் பேரை அழித்தேன். அந்த அழித்த கோட்டை ஆசையாய் பார்த்து நகர்ந்த மனுஷியை பார்க்க....அது விடுதலையின் வீறு நடை. 

"ஐயோ இது வில்லங்கம் புடிச்ச வேலை" என்று எனக்கு இந்த வேலை வருவதற்கு முன் ஒருவர் சொல்லி கழன்று கொண்டது நினைவில் இன்னும் கொஞ்சம் குளிரை விசிறியது. ஆனாலும் கிட்டத்தட்ட மூன்று மணி நேரங்கள் பொறுப்பாக... ஒரு கனவானாக... தோரணையில் நேர்மையோடு அமர்ந்து வாங்கிய மொயில் இனம் புரியாத சுவாரஷ்யம். கடைசியில் எட்டு ரூபாய் குறைவாக இருந்தது. சார்ட்டேஜ் என்று எழுதி வட்டமிட்டு... வந்த தொகையை உரியவரிடம் சேர்த்து விட்டு சாப்பிட கிளம்பினேன். 

ஒவ்வொரு மனிதனின் முகத்திலும்... ஓராயிரம் கணக்குகள். சில கணக்குகள்... சிரிப்பும்... சிலது சிந்தனையும்... சிலது கள்ளத்தனமும்... சிலது வெகுளித்தனமுமாக... அவரவர் இருத்தலின் வழியே நானும் மிக அற்புதமான ஒரு பாத்திரமானேன். பாத்திரம் அறிந்து தான் வாழ்வும் நிறைகிறது.

- கவிஜி

Pin It