தமிழ்ப் படைப்பிலக்கியத்திற்கு கொங்குச் சீமை எழுத்தாளர்களின் பங்கு தொடர்ச்சியானது. ஆர்.ஷன்முக சுந்தரம், கு.சின்னப்ப பாரதி, சி.ஆர்.ரவீந்திரன், சூர்யகாந்தன், கௌதம சித்தார்த்தன், க.சீ.சிவக்குமார், எம்.கோபால கிருஷ்ணன், என். ஸ்ரீராம், பெருமாள் முருகன் என்னும் நீண்ட பட்டியலில் இடம்பெற்றிருக்கும் ஒவ்வொரு எழுத்தாளரும் உருவாக்கியளித்திருக்கும் படைப்புகள் தனித்தன்மைமிக்கவை. கொங்கு மக்களின் வாழ்வியலை அவர்களது பேச்சு வழக்குகளின் நறுமணத்தோடு படைத்தளிக்கப்பட்டவை. இந்நிலப் பரப்பின் மிக இன்றியமையாத எழுத்தாளரான தேவிபாரதி எழுதிய ‘நீர்வழிப் படூஉம்’ நாவல் சாகித்ய அகாடமி விருதுக்குக்கு தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறது. முப்பத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக, தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கும் தேவி பாரதி தொடக்க காலத்தில் அங்கீகாரங்களாலும் பாராட்டுகளாலும் ஊக்கமளிக்கப்பட்டவரல்ல. ஆனாலும் தொடர்ந்து இலக்கியத் தகைமை மிகுந்த செறிவான படைப்புகளை அளித்து வருபவர்.

அந்தந்த இனக் குழுக்களுக்கான பண்பாட்டு நுட்பங்களை அதனதன் கலாச்சாரக் கூறுகளோடு அவரவர்வாழ்க்கையைப்பேசும்இலக்கியவகைமைகள் கண்டங்கள் தோறும், மொழிகள் தோறும் உருவாகி, அவை உலகப் பரப்பு முழுவதிலும் பேசப்படுகின்றன. இன்றளவுக்கு தொழில்நுட்பங்கள் பெருகியிராத கடந்த நூற்றாண்டிலேயே இத்தகைய இலக்கியப் பரவல்கள் செயல்படத் தொடங்கி விட்டன.devibharathi 487தமிழ்ப் பரப்பில் காவிரிக் கரை எழுத்துகள், கரிசல் நில எழுத்துகள், நாஞ்சில் நாட்டுப் படைப்புகள், நடு நாட்டு இலக்கியங்கள் என விரிவுகொண்டிருக்கும் பரந்த தளத்தில், உலகெங்கும் மற்ற மொழிகளில் செயல்பட்டு வருவதைப் போல, இங்கும் பெண்ணிய எழுத்துகள், விளிம்புநிலை மக்கள் எழுத்துகள், தலித் எழுத்துகள் இவை இயங்கி வருவதோடு, ஈழ இலக்கியமும் எழுதப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இவற்றின் அந்தந்த வகைமை எழுத்துக்களை எழுதப் போதுமான படைப்பாளிகள் அந்தந்தப் பரப்புக்குள் இருக்கிறார்கள். ஆனால் சமூகச்சிறுபான்மையாளர்களது மிக உண்மையான சாரத்தில் தோய்ந்து வாழ்ந்த அனுபவங்களை ஒரு கலைப் படைப்பாக உருவாக்கும் திறன் பெற்றவர்கள் மழைக்கால இரவு வானத்தின் விண்மீன்களைப் போல மிகவும் அரிதாக ஓரிருவரே தோன்றுகிறார்கள்.

தேவிபாரதி எழுத வந்த தொடக்க காலத்தில் அவர் கொங்கு வட்டார வழக்குகளையோ அந்தப் பகுதி வாழ்க்கை முறைகளையோ மட்டும் எழுதியவரல்ல.

எல்லோருக்கும் பொதுப்படையான இயல்பான தமிழில் கதைப்புலத்தில் காட்சிகளை நகர்த்திச் செல்பவராக, கதை நிகழ்வுகளோடு இயக்கமுறும் கதை மாந்தர்களின் உளவியல் மாறுபாடுகளை யாவருக்குமான தெளிந்த சொற்களில் விவரணை செய்பவராக அவரது தொடக்க காலப் படைப்புகளை வாசகர்கள் அறிந்திருக்கிறார்கள். காரணம், அவை ஏதோ ஒரு பரப்பு மனிதர்களுக்கான தனிப்பட்ட வாழ்க்கை முறையல்ல. இந்தப் பூமிப் பரப்பின் அனைவருக்குமான வாழ்வியல் சாரமாக இருப்பவை அவை.

ஆனால் அவர் நாவல் என்னும் பெரும் பரப்பில் நுழைகையில் அந்த நிலத்தின் மிகவும் மெய்யான சாரத்தை, அதனோடு இயைந்த வாழ்வியல் கூறுகளை நம்பகத் தன்மைகளோடு படைப்புத் தளத்தில் கொண்டு வருவதற்கு அவர் கொங்குத் திணைக்குரிய உரையாடல்களையும் விவரிப்பு முறைகளையும் கையாள வேண்டியிருந்தது. தேவிபாரதியின் 1. நிழலின் தனிமை, 2. நட்ராஜ் மகராஜ், 3. நீர்வழிப் படூஉம்,4. நொய்யல் ஆகியநாவல்களைவாசிப்பதற்குப் பயன்படும் வகையில் அவரே ஒரு கொங்கு வட்டாரத் தமிழ் அகராதியை உருவாக்கித் தரலாம் என்ற அளவுக்கு அவரது நாவல்களில் கொங்குத் தமிழ் செறிந்திருக்கிறது.

தேவிபாரதி தனது படைப்பில் இலக்கியக் கோட்பாடுகள் எதையும் வலிந்து திணிப்பவரல்ல. அவர் தன்னெழுச்சியாக எழுதிச் செல்பவை யாவற்றிற்குள்ளும் இயல்பாகவே கோட்பாட்டின் அம்சங்கள் தானாக வந்து பொருந்திக் கொள்கின்றன. ‘நட்ராஜ் மகராஜ்’ நாவலின் முதன்மைக் கதாபாத்திர மாகிய ஒரு சத்துணவுத் திட்ட ஊழியன் திடீரென தான் ஒரு ராஜ பரம்பரையைச் சேர்ந்தவன் என அவனாக நினைத்துக் கொள்கிறான். அன்றாட வாழ்க்கைப் பாட்டிற்கு அல்லல்பட்டுக் கொண்டிருந்த அவன் ஒரு அரச பரம்பரையைச் சேர்ந்தவன் என்னும் செய்தி சுற்றும் முற்றுமிருந்த கிராமங்களுக்குப் பரவி அந்தப் பகுதி மக்கள் அனைவரையும் பரபரப்படையச் செய்கிறது. அவனது பாழடைந்த பெரிய வீட்டைக் காண ஆண்களும் பெண்களும் திரள் திரள்களாக பார்வையாளர்களாக வருகிறார்கள். அந்தச் சத்துணவு ஊழியன் அதுவரையில் பார்த்திராத அவனது பாழடைந்த வீட்டின் கூடம் ஒன்றின் பதுமைகள் மேல் புற்று மண்கள் திரண்டு மேற்கவிந்திருக்கின்றன. அந்த வீட்டுக்குள் அவன் காணும் பல காட்சிகள் அவன் ஒருஆண்ட பரம்பரைஎன அவனைத் தொடர்ந்து நம்ப வைக்கின்றன. அவனது பழைய வீட்டை வேடிக்கை பார்ப்பதற்காக மக்கள் தொடர்ச்சியாக வந்துகொண்டேயிருக்கிறார்கள். தின்பண்டங்கள் விற்பனை செய்யும் கடைகள், ஐஸ் விற்பவர்கள், விளையாட்டுப் பொம்மைகள் விற்பவர்கள் என அந்த வீட்டின் முன்புறத் திடல் ஒரு திருவிழாக் கடையாக மாற்றமடைகிறது.

இப்படியாகத் தொடர்கின்றன அதன் பகடியான காட்சிகள். இன்று ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் தன் பரம்பரை தொடர்பான தற்பெருமிதங்கள் அவனது நிகழ்கால இன்னல்களைக் கடந்து வளர்ந்து கொண்டிருப்பதை இது எள்ளல் செய்கிறது.

அந்தப் பாழடைந்த வீட்டுக்கு முன்னால் திரண்ட மக்களிடையே ஐஸ் விற்கும் ஒருவன் உற்சாகமாக “ஐஸ்... ஐஸ்... கப் ஐஸ், பால் ஐஸ், கோன் ஐஸ்...” என்று தொடர்ந்து கத்திக் கொண்டே சுறுசுறுப்பாக வியாபாரம் செய்துகொண்டிருக்கிறான்.

அன்றாட வாழ்க்கையின் ஒரே மாதிரியான நிகழ்வுப் போக்குகளால் சலிப்படைந்திருந்த மக்களை இது பரபரப்படையச் செய்து உற்சாகமூட்டுகிறது.

இதன் உள்ளீடாக ஏராளமான உட்கூறுகளை நமக்கு மறைமுகமாக உணர்த்துகிறார் தேவிபாரதி.

மக்கள் உற்சாகமடைய நல்லதாகவோ கெட்டதாகவோ ஏதாவது ஒன்று நிகழ்ந்துவிட வேண்டுமென்று மக்கள் மறைமுக ஏக்கங்கள் கொண்டிருப்பதையும் இது உணர்த்திச் செல்கிறது.

பண்டிகைகள் உருவாக்கப்பட்டது வணிகர்களின் செல்வத்தை கொழிக்கச் செய்யவே. வர்ணாஸ்ரம ஏற்பாட்டின் முதல் படிநிலையைச் சேர்ந்தவர்களுடன் மூன்றாம் படிநிலையைச் சேர்ந்தவர்கள் செய்து கொண்ட மறைமுக ஒப்பந்தம்தான் பண்டிகைகள். இந்த இரு பிரிவினர்கள்தான் பண்டிகைகள் வழியாக லாபம் அடைபவர்கள். மற்ற மக்கள் பண்டிகைக் காலங்களில் அவர்களது குறுகிய சேமிப்பைக் கரைத்துக் காலி செய்பவர்கள். வணிகர்கள் எத்தகைய சூழ்நிலைகளிலும் அவர்களது தொழிலை எளிதாகப் பெருக்கமடையச் செய்யும் பண-மனப்போக்கு கொண்டவர்கள் என்பதையும் சாதாரண மக்களுக்கு கிடைப்பதெல்லாம் அந்த தருணத்திற்கான வெற்றுக் கொண்டாட்டம் மட்டும்தான் என்பதையும் இந்தக் காட்சிகள் வழியாக வாசகர்கள் புரிந்துகொள்ள இயலும். அரசியல் மாநாடுகளையும் தேர்தல் களையும் மக்கள் கருத்தார்ந்த அக்கறையற்று வெறும் பொழுது போக்கு நிகழ்வுகளாக மட்டும் கொண்டாடித் தீர்த்துவிட்டு பிறகு அந்த வாக்காளர்கள் பரிதாபமான குடிமக்களாக வாழ்ந்து கொண்டிப்பதின் நெடிய அரசியல் போக்கை ஒரு வாசகன் இதன் உப பிரதியாகவும் உணர்ந்துகொள்ளவியலும்.

தேவிபாரதியின் படைப்புகளூடாக, அவர் சொல்லாமல் விட்டுச் சென்றிருக்கும் அடுக்கடுக்கான உப பிரதிகளை அவரவர் சிந்தனை சார்ந்து, வாழ்க்கை அனுபவம் சார்ந்து ஒரு தேர்ந்த வாசகன் தன்போக்கில் உருவாக்கிக் கொள்ள முடியும். இது அவரது கலைப் படைப்புகளின் மகத்தான அம்சம்.

‘நிழலின் தனிமை’ நாவல், அதில் வரும் இரண்டு கதாபாத்திரங்கள் அவர்களது முந்தைய மன இயல்புகளுக்கு முற்றிலும் எதிர்த்தன்மையான மனப்போக்கில் பயணித்து அவர்களில் ஒருவரது நல்ல இயல்பு கெட்டதாகவும் இன்னொருவரின் கெட்ட இயல்பு நல்லதாகவும் மாற்றமடைவதின் சூட்சுமத்தை விவரிக்கும் நுட்பமான படைப்பு.

கதைசொல்லியாக வரும் நாயகன், வில்லனின் மனத்தடத்தில் பயணித்து, அவனும் வில்லனின் மன அமைப்பைப் பெற்று விடும் விபரீதம் ஒரு பேரதிர்ச்சியாக நிறைவெய்தும் இக்கதையின் முதன்மை பாத்திரங்கள் மற்றும் உபபாத்திரங்களின் மன இயல்புகள் தொடர்ந்து மாறிக் கொண்டே யிருக்கின்றன.

பறந்து வரும் பந்தை, சட்டென நீளும் ஒரு கரம் தட்டி மோத, அப்பந்து தனது பயணிக்கும் திசையை மாற்றிக் கொள்வது போல, எதிர்பாராமல் நிகழ்ந்தேறும் சம்பவங்கள் அவர்களது மனவோட்டத்தையும் வாழ்க்கைப் போக்கையும் திசை திருப்பிவிடுகின்றன.

தேவிபாரதியின் ‘நீர்வழிப் படூஉம்’ நாவலை முன் வைத்து மொழிபெயர்ப்பாளர் ஜி.குப்புசாமி அவர்கள் தன் முகநூல் பதிவில் “தமிழின் ஆகச் சிறந்த நாவல்களில் ஒன்றாக ‘நீர்வழிப் படூஉம்’ எக்காலத்திலும் நிலைத்து நிற்கும்.” என்றும் மேலும் அதன் தொடர்ச்சியாக, “சமகால உலக எழுத்தாளர்களின் வரிசையில் நாம் பெருமிதத்தோடு வைத்துப் பார்க்கத் தக்கவர் இன்றைய தமிழ் எழுத்தாளர் தேவிபாரதி.” எனவும் குறிப்பிட்டிருந்தார்.

‘நீர்வழிப் படூஉம்’ நாவல் நூல் வடிவம் பெறுவதற்கு முன்னர் அதன் அச்சிடாதப் பிரதிகளை வாசித்துப் புளகாங்கிதமடைந்தஜி.கே தனதுஇல்லத்தில் அவரது மனைவி நர்மதாவிடம், தேவிபாரதி குறித்து சொன்ன உள்ளப்பூர்வமான பாராட்டை, சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்ட அன்று, சகோதரி நர்மதா தனது முகநூல் பதிவில் வெளியிட்டார்:

“தமிழின் தஸ்தயேவ்ஸ்கி தேவிபாரதி.”

உறுதியாக, இது உணர்ச்சிவசப்பட்டு சொன்னதல்ல என்பதை தேவிபாரதியின் படைப்புகளை வாசித்தவர்கள் அறிவர்.

தஸ்தயேவ்ஸ்கி போலவே தேவிபாரதிக்கும் எல்லாம் வல்ல இயற்கை கொஞ்சம் இருண்ட வாழ்க்கையைக் கொடுத்த பிறகே அவருக்கு இந்த கிரீடத்தைச் சூட்டியிருக்கிறது. அவரது படைப் பாற்றலின் வல்லமையும் கலைத் திறனும் அவரது நெடிய முயற்சிகளால் மட்டுமல்லாது அவரது துயரங்களின் அடி உரங்களால் ஊட்டம் பெற்றவை.

‘நொய்யல்’ நாவலில், தன்னுணர்வை மறந்த சன்னதத்தின் பேரெழுச்சியில் சொற்கள் கொட்டுவதாக கரை கடந்து சீறிப் பொங்குகிறது அவரது மொழி நடை. தேவனாத்தா, நரிப்பழனிக் கவுண்டன், சென்னிமூப்பன், ஆறுமுகப் பண்டாரம், காரிச்சி... என அதிமானுடத் தன்மையிலான மாய எதார்த்தவாதப் படைப்பினூடாக அவர் ஒரு நெடுங்கதையை விரிக்கிறார்.

தேவிபாரதி சிறுகதையாளராகவும் புதினப் படைப்பாளியாகவும் தொடர்ச்சியாக இயங்கிக் கொண்டிருக்கும் அதே வேளையில் சிறந்த அரசியல் கட்டுரைகளையும் எழுதி வந்திருக்கிறார். காலச் சுவடு இலக்கிய இதழில் ‘கொங்கு பெல்ட்’ அரசியல் பற்றி அவர் எழுதிய ஒரு கட்டுரை ஒரு ஆக்ஷன் படத்தின் விறுவிறுப்பு கொண்டது. துரித கதியில் அமைந்த மொழிநடையில் தன்னெழுச்சியாக விரைந்து கொண்டிருக்கும் சொற்களின் நகர்வுகள் வாசகனின் குருதியோட்டத்தில் பரபரப்பை கிளர்த்துபவை.

காலச்சுவடு இதழின் பொறுப்பாசிரியராகப் பணியாற்றிய காலத்தில் தேவிபாரதி பல இளம் எழுத்தாளர்களின் முதல் சிறுகதையை வெளியிட்டு அவர்கள் ‘எழுத்தாளர்’ என்னும் அங்கீகாரம் பெற பேருதவியாக இருந்தவர். பேர் பெற்ற எழுத்தாளர்களின் கதைகளைப் பிரசுரம் செய்வதைக் காட்டிலும் பெயர் அறியப்படாத புது எழுத்தாளர்களின் கதைகள் சிறந்ததாக இருக்கும் பட்சத்தில் அவற்றை தயக்கமற்று வெளியிட்டார் அவர்.

கூத்துக் கலைகள் மேம்பாடு அடைவதற்கு இவர் ‘பாதம்’ என்னும் அமைப்பை உருவாக்கினார். அது பின்னர் சாதாரண மக்களின் ஒத்துழைப்பால் தன்னை நிலை நிறுத்திக்கொண்டது என்றாலும் அது நிறுவப்படுவதற்கான தலைக் கல் நட்டவர் இவர்.

சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கும் தேவிபாரதிக்கு நியூ செஞ்சுரியின் உங்கள் நூலகம் இதழின் சார்பில் வாழ்த்துக்கள்.

-  கே.பி.கூத்தலிங்கம்

Pin It