"எதை வணங்குபவனும் எதை வணங்காதவனும்; ஒரு கடவுள்காரனும் பல கடவுள்காரனும்; தானே கடவுள் என்கின்ற ஸ்மார்த்தனும்; கடவுளே கிடையாது என்கிற நிரீச்சுரவாதியும்; சுவர்க்க, பாவ, புண்ணியம் இல்லை என்கின்ற மாயவாதியும்; ஆண் – பெண் குறிகளே கடவுள் என்கின்ற சக்திவாதியும் மற்றும் மதச்சம்பந்தமாய் எந்தவிதமான கொள்கை கொண்டவனும் (அதாவது, தான் கிருத்துவனல்ல; மகமதியனுமல்ல என்று சொல்ல விடுவானேயானால்) எவனும் இந்துவே ஆவான்…

"இப்படிப்பட்ட ‘இந்து’ என்கிற பதம் இருக்கும் காரணத்தாலேயே நாட்டில் மதச்சண்டை நடக்கின்றது என்பதல்லாமல் மற்றபடி இந்த நாட்டில், இந்தியாவில் மதச்சண்டை ஏற்படச் சிறிதும் இடமே இல்லை. ஆகையாலேயே இந்துக்கள் என்றழைக்கப்படும் திராவிட மக்கள் – இந்நாட்டின் நலன் கருதி நாட்டின் விடுதலையும் மக்கள் சுயமரியாதையும் கருதி – பெரும்பாலான மக்களுக்குப் பிறவியின் காரணமாகவே சுமத்தப்பட்ட இழிவு ஒழிக்கப்பட வேண்டும் என்பது கருதியும் – முதலாவதாகச் செய்யப்பட வேண்டிய வேலை – இந்து மதம் என்கின்ற புரட்டை விளக்கி மக்களுக்குத் தெளிவு ஏற்படுத்தி, அந்தச் சிறையிலிருந்து வெளியேறும்படிச் செய்வதேயாகும்." – பெரியார், ’குடி அரசு’- 15.02.1947

periyar book1. இந்திய நாட்டுக் குடிமக்கள் தீவிர சுதந்திரப் போராட்ட மனநிலையில் இருந்ததாகச் சொல்லப்பட்ட காலகட்டத்திலும்கூட, இந்நாட்டின் பெரும்பான்மை (திராவிடர்) மக்களை - இந்து மதச் சிறையிலிருந்து வெளியேற்றுவதையே - தம் குறிக்கோளாகக் கொண்டிருந்தார் பெரியார். நாடு சுதந்திரம் பெற்று முக்கால் நூற்றாண்டாகும் நிலையிலும் அவருடைய குறிக்கோளை நிறைவேற்றுவதற்கான தேவை அதிகரித்திருக்கிறது. ஏனெனில் உலகமயமாக்கலின் கேடுகளைவிட, இந்துமயமாக்கலின் கேடுகள் ஆபத்தானவை.

கடந்த ஏழாண்டுக் கால பா.ஜ.க. அரசின் இந்துத்துவ செயல்திட்டங்கள் தீவிர செயல்வடிவம் பெற்றுள்ளன. குடியுரிமைத் திருத்தச் சட்டம், காஷ்மீருக்குரிய சிறப்புரிமையை ரத்து செய்தது, புதிய கல்விக் கொள்கை, ‘நீட்’ தேர்வு போன்ற கல்வி மறுப்புத் திட்டங்கள், சமூக நீதித் தத்துவத்தை முற்றாகச் சிதைத்திடும் பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு என இவையெல்லாமே மநுதர்மத்தின் அடிப்படையில் ஆர்.எஸ்.எஸ். வகுத்துக் கொடுத்துள்ள நீண்டகாலத் திட்டங்கள். இப்பேராபத்தை முறியடிக்க உறுதியான செயல்திட்டங்களை உருவாக்காமல் – சங்பரிவாரங்களின் உளறல்களை மட்டும் விமர்சனம் செய்து கொண்டிருப்பதோ, 'ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. பாசிசம் விரைவில் நம் அனைவரையும் பலி கொண்டுவிடும்' என்று - மக்களை அச்சமூட்டிக் கொண்டிருப்பதோ எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தும். இந்துத்துவம் என்ற பெயரில் ஒளிந்து கொண்டிருக்கும் பார்ப்பனியத்தின் மூலவேர் எங்கிருக்கிறது என்பதைத் துல்லியமாகக் கண்டறியாமல் மேற்கொள்ளப்படும் முயற்சிகளால் எந்தப் பயனும் இருக்க முடியாது.

2. உலகில் வேறெங்கும் இல்லாத வகையில் பிறவி ஆளும் வகுப்பினரான பார்ப்பனர்கள் தங்கள் ஆதிக்கத்தை 3,000 ஆண்டுகளுக்கு மேலாக – இந்து மதத்தின் துணை கொண்டே – தக்கவைத்துக் கொண்டுள்ளனர். ஆளும் வகுப்பினரின் ஆதிக்கத்திற்கு மூல காரணமான இம்மதக் கருத்தாக்கத்தைச் சிதைக்காமல் அதன் மீது கட்டப்பட்டுள்ள ஆதிக்கத்தை மட்டும் அரசியல் ரீதியாக எப்படித் தகர்க்க முடியும்?

பன்னூற்றாண்டு காலமாக இந்நாடு எந்த வகுப்பினரால் ஆளப்படுகிறது என்பதை டாக்டர் அம்பேத்கர் விளக்குகிறார்:

"அனைத்துச் சமூகங்களும் ஆளும் வர்க்கம் என்றும் ஆளப்படும் வர்க்கம் என்றும் அரசியல் ரீதியாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இக்கேடு இத்துடன் நின்றிருந்தால் அது பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருந்திருக்காது. ஆனால், இதில் கெடுவாய்ப்பானது எதுவென்றால் இப்பிரிவு, மாற்றி அமைக்கப்படாத வகையிலும் படிநிலைப்படுத்தப்பட்ட நிலையிலும் அமைக்கப்பட்டிருப்பதுதான். இதன் விளைவு, ஆட்சியாளர்கள் எப்பொழுதுமே ஆளும் வர்க்கத்திலிருந்தே வருகிறார்கள்; ஆளப்படும் வர்க்கத்தினர் - எப்பொழுதுமே - ஆளும் வர்க்கத்தினராக முடிவதில்லை.

"மக்கள் தங்களைத் தாங்களே ஆளுவதில்லை. அவர்கள் ஓர் அரசை உருவாக்கிய பிறகு – அது தங்களுடைய அரசு என்பதையே மறந்துவிட்டு – தங்களைப் பிறர் ஆள அனுமதிக்கின்றனர். இச்சூழல் நிலவுவதால்தான் நாடாளுமன்ற ஜனநாயகம் என்பது எப்பொழுதும் மக்களுடைய அல்லது மக்களால் ஆளப்படும் அரசாக இருந்ததில்லை என்பது மட்டுமல்ல; அதனால்தான் அது எப்பொழுதுமே மக்களுக்கான அரசாங்கமாக இருந்ததே இல்லை. ஒரு மக்கள் அரசாங்கத்துக்குரிய அம்சங்களைக் கொண்டிருந்த போதிலும் உண்மையில் அது பாரம்பரிய ஆளும் வர்க்கத்தினரால் நடத்தப்படும் – பாரம்பரிய ஆளப்படும் வர்க்கத்தினரின் அரசாகவே உள்ளது.”

 - டாக்டர் அம்பேத்கர், டெல்லியில் நடைபெற்ற தொழிற்சங்க மாநாட்டில் ஆற்றிய உரை, 8 – 17 செப்டம்பர் 1943 (டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு 10; பக்கம்: 241).

பார்ப்பனர்கள் தங்கள் ஆதிக்கத்திற்காக உருவாக்கிய ஒரு மதத்தில் – இந்நாட்டின் பெரும்பான்மை மக்கள் – அடிமை வகுப்பினராக இருந்து கொண்டு, அதைக் கேள்வி கேட்காமல் அவர்களின் நலன் காக்க உருவாக்கப்பட்டதாகச் சொல்லப்படும் அரசின் சர்வாதிகாரத்தை மட்டும் எப்படி எதிர்த்து வெற்றி பெற முடியும்? காங்கிரஸ், பா.ஜ.க. தவிர்த்த தேசிய, கம்யூனிச, மாநில, தலித் மற்றும் திராவிடக் கட்சிகளால் அவ்வப்போது ஆட்சியைக் கைப்பற்ற முடியுமே தவிர, நீதித்துறை, நிர்வாகத்துறை, ஆய்வுத்துறை, ஊடகத்துறை ஆகியவற்றில் நீக்கமற நிறைந்திருக்கும் ஆளும் வகுப்பினரின் ஆதிக்கத்தை முறியடிக்க முடியாது.

இந்துத்துவ பயங்கரவாதம் என்று சொல்லப்படும் பார்ப்பனப் பயங்கரவாதத்தை அம்பேத்கர் – பெரியார் சிந்தனைகளின் அடிப்படையிலான இந்து மத எதிர்ப்பை அடிநாதமாகக் கொண்ட சமூக, பண்பாட்டுச் செயல்பாடுகளால்தான் முறியடிக்க முடியும்!

3. இந்துத்துவத்தின் மூல பலம், ஆணி வேர் இந்து மதம். இங்கு ஒவ்வொரு வினாடியும் இந்து ஆன்மிகப் பாசிசத்தின் (பார்ப்பனியம்) அடிப்படையில் நிலை கொண்டுள்ள ஜாதிய சமூக அமைப்பின் மூலம்தான் இந்நாட்டின் பெரும்பான்மை மக்களுக்கு அநீதிகள் இழைக்கப் படுகின்றன. அதனால்தான் டாக்டர் அம்பேத்கர், ‘இந்து ராஜ்ஜியம் எப்பாடு பட்டாவது தடுக்கப்பட வேண்டும்’ என்று எச்சரித்தார். சாதிய சமூகப் பாகுபாட்டின் அடிப்படையில்தான் இங்கு இன்றளவும் பொது வளங்களும் பொருள் ஆதாரங்களும் பகிர்ந்தளிக்கப்பட்டு வருகின்றன. இச்சமூகப்பாகுபாடுகளை நேர் செய்யாதவரை, இங்கு பெரும்பான்மை மக்களின் சமூக நீதிக்கும் அதன் வழி பொருளாதாரச் சமநிலைக்கும் வாய்ப்பே இல்லை. சமூகப் பாகுபாடுகளை வேரறுக்காத நீதிக்கானப் போராட்டம் போராட்டமே அல்ல.

ஜாதியும் இந்து மதமும் வெவ்வேறானது அல்ல. இவை இரண்டும் ஒன்றாகவே வாழும்; ஒன்றாகவே வீழும். எனவே இந்நாட்டின் பெரும்பான்மை மக்களான தீண்டத்தகாதவர்களும் சூத்திரர்களும் – இந்துக்களாக இருந்து கொண்டு – தீண்டாமையையும் சூத்திர இழிவையும் ஒருபோதும் ஒழிக்க முடியாது. அதனால்தான் பெரியார் திட்டவட்டமாகச் சொல்கிறார்:

”திராவிடன் என்று சொல்லிக் கொள்வதால் மாத்திரம் சூத்திரப் பட்டம் ஒழியப் போவதில்லை. இன்றைய நிலைமையில் ‘நான் இந்துவல்ல’ என்று சொல்லிக் கொண்டாலும் சூத்திரப் பட்டம் ஒழியப் போவதில்லை. இந்து மதம் லேசில் ஒழியாது. அது, பச்சோந்தி போல் சுலபத்தில் சாகும் மதமல்ல. அதைச் சாகடிப்பதற்கு நம் ஆயுளும் நம் பேரன்மார் ஆயுளும் கூடப் போதாது. ஆகவே நாம் அதை (இந்து மதத்தை) விட்டுவிலகுவதுதான் நாம் ஆயுளில் முடியக் கூடிய காரியமாகும்” (இந்நூல் பக்:143).

ஊருக்கு வெளியே தள்ளப்பட்டுள்ள தீண்டத்தகாத மக்களும் ஊருக்குள்ளேயே அடிமைகளாக்கப்பட்டுள்ள சூத்திரர்களும் எதிரெதிர் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளதற்குக் காரணமான இந்து மதத்தை விட்டொழிப்பதற்கான செயல்திட்டத்தை வடித்தெடுப்பதுதான் இன்றைய முதன்மைத் தேவை. அது, சூத்திரர்களின் சாதி வெறியாக / உணர்வாக இருந்தாலும் பட்டியல் சாதியினரின் சாதி வெறியாக /உணர்வாக இருந்தாலும் - நாம் இந்துக்கள் அல்லர் - என்று விழிப்புணர்வு பெற்றுக் கிளர்ந்தெழும்போதுதான் பார்ப்பனப் பயங்கரவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். எதிரெதிர் துருவங்களாக நின்று கொண்டு, அவரவருக்கான வரலாற்றையும் நீதி நியாயங்களையும் முன்வைப்பது, இம்முரண்களைக் கூர்மைப்படுத்தும் பார்ப்பன சூழ்ச்சிக்கு இரையாவதில்தான் முடியும்.

சட்டமன்றங்கள் மற்றும் நாடாளுமன்றத்தில் ஊர்க்குடிகளையும் சேரிக்குடிகளையும் இணைத்த அரசியல் ஓர்மை – 70 ஆண்டுகளைக் கடந்த நிலையிலும் – ஒரு சமூக ஓர்மையாகப் பரிணாமம் பெறவில்லை. இதைச் சாத்தியப்படுத்தும் விடுதலைச் செயல்திட்டத்திற்குப் பெயர்தான் அம்பேத்கரியம் – பெரியாரியம்!

ஜாதியை அழித்தொழிக்க வேண்டும் என்பதன் பொருள் என்ன? அது நடைமுறையில் எப்படிச் சாத்தியமாகும்? அது, நம் சிந்தனையில் திணிக்கப்பட்டுள்ள ஒரு கருத்தாக்கம். ஆனால், அந்த அருவமான கருத்தியலை விதைத்துள்ள இந்து மதத்திற்கு உருவம் உண்டு. ஜாதியை அழித்தொழிப்பது எனில் இந்து அடையாளங்களை முற்றாக அழித்தொழிப்பது என்று பொருள். இந்து தொடர்பான அனைத்துக் குறியீடுகளையும் அடையாளங்களையும் கடவுளர்களையும் வேத, இதிகாசம் மற்றும் புராணங்களையும் பெரியார் அதிதீவிரத்துடன் இறுதி வரை எதிர்த்ததற்கான காரணமும் அதுதான். ஜாதி ஒழிப்பிற்கான அம்பேத்கரின் திட்டவரைவான (Blue Print) ’ஜாதியை அழித்தொழிக்கும் வழி’ நூலின் சாரமும் செயல்திட்டமும் அதுதான்.

4. இந்துத்துவத்தின் (பார்ப்பனியம்) முதன்மை எதிரிகள் யார்? இந்துத்துவம் பிற மதத்தினர் மீது குறிப்பாக முஸ்லிம்கள் மீது வெறுப்பைக் கக்கினாலும்; ‘முஸ்லிம், கிறித்துவர் மற்றும் பார்சிகள் அல்லாதோர் இந்துக்கள்’ என்று சட்ட விளக்கம் கொடுத்தாலும் - அதன் முதன்மை எதிரிகள் - அந்நிய மதங்களோ, அம்மதத்தைச் சேர்ந்த 'அந்நியர்'களோ அல்லர். அதுவும் இந்தியா மீது யாரெல்லாம் படையெடுத்து வந்தார்களோ அவர்களோடு பார்ப்பனர்கள் அணுக்கமாகவே இருந்து வந்திருக்கின்றனர். அதுமட்டுமல்ல, ஆட்சி நிர்வாகத்திலும் அவர்கள் முதன்மைப் பங்கு வகித்திருக்கிறார்கள் என்பதையும் வரலாறு பதிவு செய்திருக்கிறது. இந்நாட்டின் மதச் சிறுபான்மையினர் கடந்த சில நூற்றாண்டுகளாகத்தான் எதிரிகள் போலச் சித்தரிக்கப்படுகிறார்கள். ஆனால், மூன்றாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இன்றுவரை பார்ப்பனியம் யாரை உண்மை எதிரிகளாகக் கருதுகிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

இஸ்லாம் தோன்றி 1,400 ஆண்டுகள்தான் ஆகின்றன; கிறித்துவம் தோன்றி 2,000 ஆண்டுகள்தான் ஆகின்றன. ஆனால் இம்மதங்கள் இந்தியாவில் வேர் பிடித்து 300 இலிருந்து 500 ஆண்டுகளுக்கும் குறைவாகவே ஆகின்றன. இன்றைய இந்து மதம் என்று சொல்லப்படும் வேத மதம் தோன்றியதாகச் சொல்லப்படும் 3,000 ஆண்டுகளுக்கு முன்பு - முஸ்லிம்களோ, கிறித்துவர்களோ இங்கு இல்லவே இல்லாத நிலையில் - பார்ப்பனியம் யார் மீது வெறுப்பைக் கற்பித்தது?

சந்தேகமேயின்றி, தங்கள் மதத்தைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லப்படும் தீண்டத்தகாதோர் மற்றும் சூத்திரர்கள் மீதுதான் இழிவையும் வெறுப்பையும் கற்பித்தது. அவர்கள் மீதுதான் காலில் பிறந்தவர்கள், இழி பிறவிகள் என்று அவதூறுகளைச் சுமத்தியது. இத்தகு அவதூறுகளையே வேதங்களிலும் இதிகாசங்களிலும் ஸ்மிருதிகளிலும் பதிவு செய்து, அதையே - மாற்றவே முடியாத - சனாதன தெய்வீகத் தத்துவமாக்கினர்.

இன்றளவும் ஊருக்கு வெளியே தள்ளப்பட்டுள்ள இந்நாட்டின் 25 கோடி தலித் மக்கள் அயல் நாட்டைச் சேர்ந்த பிற மதத்தினர் அல்லர்; சூத்திரர்கள் ( விபச்சாரியின் மக்கள்) என்று அழைக்கப்படும் 50 கோடி பிற்படுத்தப்பட்ட மக்கள் அயல் நாட்டைச் சேர்ந்த வேற்று மதத்தினர் அல்லர். இவ்விரு அடிமை வகுப்பினரும் (Servile Classes) இந்நாட்டின் பெரும்பான்மை மக்கள்; தொல்குடியினர்.

இந்நாட்டுக்கு வெளியே இருந்து வந்த ஆக்கிரமிப்பாளர்களிடமோ, அந்நிய மதத்தினரிடமோ இந்துத்துவவாதிகள் வேற்றுமை பாராட்டவில்லை; உண்மையில் அவர்கள் மீது இவர்களுக்கு வெறுப்பும் இல்லை. ஆனால், அந்நிய மதங்களைத் தழுவியுள்ள - இந்நாட்டுத் தொல்குடி - மக்கள் மீதுதான் இவர்கள் இன்றளவும் வெறுப்பைக் கக்குகின்றனர். இந்நாட்டில் தோன்றிய பவுத்த மதத்தைத்தான் முற்றாக அழித்து, அது அயல் நாடுகளில் பரவக் காரணமாக இருந்தனர். அதுமட்டுமல்ல, சொந்த நாட்டில் தோன்றிய பவுத்த மதத்தைத் தழுவிய 25 கோடி மக்களைத்தாம் இன்றுவரை ஊருக்கு வெளியே நிறுத்தியுள்ளனர்; அந்நிய நாட்டு மதங்களைத் தழுவிய கிறித்துவர்களையோ, முஸ்லிம்களையோ அல்ல.

மேலும், இவ்விரு அந்நிய நாட்டு மதங்களைத் தழுவிய பார்ப்பனர்கள் மீதோ, அரபு மற்றும் அய்ரோப்பிய நாடுகளில் வாழும் அந்நிய மதத்தினர் மீதோ இவர்களுக்கு எந்த வெறுப்பும் இல்லை. அந்த அந்நிய நாடுகளில் குடியேறவோ, அங்கு இந்து கோயில்களைக் கட்டி தங்கள் மதத்தைப் பரப்பவோ இவர்கள் சற்றும் வெட்கப்படவில்லை. ஆனால், பாகிஸ்தான் முஸ்லிம்கள் இந்நாட்டின் முன்னாள் தொல்குடியினர் என்ற ஒற்றைக் காரணத்திற்காகத்தான் அவர்கள் மீது வெறி கொண்டு போரிடத் துடிக்கின்றனர்.

5 .இந்துத்துவவாதிகள் நம்முடைய ஒரேயொரு செயல்திட்டத்திற்குத்தான் அஞ்சுவார்கள். இந்துக்கள் என்று தவறாக அழைக்கப்படும் இந்நாட்டின் பெரும்பான்மை மக்கள் இம்மதத்தைவிட்டு வெளியேறிவிடுவர் என்ற நிலை உருவாகும் போதுதான் அவர்கள் பதற்றமடைவர். அதனால்தான் சிற்சில உரிமைகளை அவ்வப்பொழுது கொடுத்தும் பிற மதத்தினரை எதிரிகளாகச் சித்தரித்தும் – இந்துக்கள் பெரும்பான்மை மக்கள் – என்று கூறி மதத்தை அரசியலுடனும் தேசியத்துடனும் இணைக்கும் நாடகத்தை அரங்கேற்றுகின்றனர். இதன் பொருள், பிறவி அடிமைகளை இழக்க அவர்கள் ஒருபோதும் தயாராக இல்லை என்பதுதான்.

பார்ப்பனர் அல்லாத பெரும்பான்மை ’இந்து’க்கள் இன்றுவரை ‘இருபிறப்பாளர்’களாக முடியாது; சாதிய அடுக்கில் அவர்கள் மேலே செல்ல முடியாது; அர்ச்சகர் ஆக முடியாது; அப்படியே அர்ச்சகர் ஆனாலும் அவர்களின் சூத்திர இழிவு மாறப் போவதில்லை; பூணூல் அணிய அனுமதியில்லை; துறவியாகலாம் என்றால் அதற்கும் உரிமை கிடையாது; பெண்கள் எந்த உரிமைக்கும் அருகதையற்றவர்கள். இன்றளவும் இவர்களின் மதத் தகுதியைத் தீர்மானிப்பது பிறப்புதான்; திறமை அல்ல!

எழுபது ஆண்டுகளாக இப்பெரும்பான்மை மக்களுக்கு என்னென்ன அரசியல் உரிமைகள் கிடைத்திருக்கின்றன? சமூக நீதிக்கானப் போராட்டம் (சாகு மகாராஜ் தொடக்கம்) ஒரு நூற்றாண்டைக் கடந்துவிட்ட நிலையிலும் மத்திய அரசின் பணியிடங்களில் 50 சதவிகித பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு சுதந்திரம் பெற்று 40 ஆண்டுகள் கடந்த பிறகுதான் 27 சதவிகித இடஒதுக்கீடுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் அதற்குப் பிறகு முப்பது ஆண்டுகள் கழித்து அதில் 10 சதவிகிதத்தைக் கூட நடைமுறைப்படுத்தாமல் பார்த்துக் கொண்டனர். இந்த 27 சதவிகிதத்தை முழுமையாக நிறைவேற்று என்று போராடுவதிலேயே இன்னொரு அறை நூற்றாண்டு கடந்துவிடும். பிரதிநிதித்துவ கோட்பாடான இடஒதுக்கீட்டுக்கே முடிவு கட்ட வேண்டும் என்பதற்குத்தான் பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு பார்ப்பனர்களுக்காக வழங்கப்படுகிறது. பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினருக்கான இடஒதுக்கீடு எந்தளவுக்கு மோசமாக நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பதைத் தனியே விளக்கத் தேவையில்லை.

பெரும்பான்மை மக்களின் அரசுப் பணியிடப் (வெறும் 2% பதவிகள்தான் உள்ளன) பிரதிநிதித்துவத்திற்கான போராட்டங்கள்தான் இம்முக்கால் நூற்றாண்டாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறதே தவிர, தனியார் துறையிலோ, ஊடகத்துறையிலோ, உயர் கல்வித்துறையிலோ, அறிவியல் ஆய்வுத் துறையிலோ, நீதித் துறையிலோ ராணுவத் துறையிலோ அல்ல.

ஆக, சமூக நீதிக்கானப் போராட்டம் ஒரு நூற்றாண்டைக் கடந்துவிட்ட நிலையிலும் உரிமைகளைக் கேட்டுக் கொண்டே இருக்கும் (Demanding Society) படி பெரும்பான்மை மக்கள் வைக்கப்பட்டுள்ளனர் என்பதைத்தான் புரிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொருவருடைய ஜாதியையும் அவர்கள் பிறப்பு தீர்மானிக்கும்வரை, சட்டம் அளித்திருக்கும் எந்த உரிமைகளையும் மக்கள் அனுபவிக்க முடியாது. எண்ணிக்கையில் ஆகச் சிறுபான்மையாக இருக்கும் பார்ப்பனர்களுக்கும்; அய்ந்தறிவுள்ள விலங்குகளுக்கும் மட்டும் இந்நாட்டின் அனைத்து உரிமைகளும் பிறப்புரிமையாக இருக்கும் போது, எண்ணிக்கையில் பெரும்பான்மையாக இருக்கும் இந்நாட்டின் தொல்குடி மக்களுக்கு மட்டும் ஏன் அது இன்றுவரை போராடினாலும் கிடைக்காத ஒன்றாகவே இருக்கிறது?

இதற்கு விடை காணும்பொழுதுதான் நம்மால் ஆன்மிகப் பாசிசத்தின் முப்பரிமாணத்தையும் புரிந்து கொண்டு அதை முறியடிப்பதற்கான செயல்திட்டத்தை வகுக்க முடியும்.

பிறவி இழிவை ஒழிப்பது என்பது - இந்து மதத்திற்குள் இருக்கும்வரை - சாத்தியமில்லை. அதைவிட்டு வெளியேறும் போதுதான் அது சாத்தியமாகும் என்பதுதான் இந்நூலின் சாரமாகும். இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ள உரைகளில் பெரியார் இஸ்லாத்தையும் பவுத்தத்தையும் தீவிரமாக ஆதரிப்பதற்கும் இதுதான் காரணம். ஜாதி ஒழிப்பை முன்னெடுக்கும் எவருக்கும் இதுதான் அடிப்படைப் பாடமாக இருக்க முடியும்.

6. இறுதியாக, “இந்து மதத்தை பெரியார் எதிர்த்தது உண்மை யெனில் அவர் ஏன் அம்பேத்கரைப் போல வேறு மதத்திற்கு மாறவில்லை? அவ்வாறு மாறாததால் அவர் ஓர் இந்துவாகவே மறைந்தார்” என்றொரு விமர்சனம் எவ்வித அடிப்படை ஆதாரமுமின்றி பெரியார் மீது தொடர்ச்சியாக வைக்கப்படுகிறது.

இந்து மதத்தையும் அதற்கு ஆதாரமாக இருக்கும் அனைத்தையும் வாழ்நாள் முழுவதும் மிக வெளிப்படையாகத் தன் எழுத்து மற்றும் உரைகள் மூலம் - வேறு எவரைக் காட்டிலும் - கடுமையாக விமர்சித்த பெரியாரை, இந்துவாக இறந்தார் என்று சொல்வதே அறிவு நேர்மையற்ற விமர்சனம்.

“நான் -  நாங்கள் இந்துக்கள் அல்லர்” என எண்ணற்ற முறை மாநாடுகள் வாயிலாகவே பெரியார் அறிவித்ததோடு மட்டுமின்றி, அவ்வாறே வாழ்ந்தும் காட்டியிருக்கிறார்.

பகுத்தறிவைப் பரப்புரை செய்யும் நாத்திகப் பேரியக்கத்தின் தலைவர் என்ற முறையில் - பவுத்தமாக இருந்தாலும் அதுவும் பிற மதங்களைப் போல சடங்குகளைக் கடைப்பிடிக்கும் மதமாக நடைமுறையில் ஆக்கப்பட்டு இருப்பதால் - அதில் இணைய வாய்ப்பில்லை என்று டாக்டர் அம்பேத்கரிடமே பெரியார் தெளிவுபடுத்தி இருக்கிறார்.

எந்த மதத்தையும் ஏற்காத பகுத்தறிவாளர்களை எப்படி சட்டம் இந்து என்று கருதுகிறதோ அதேபோலத்தான் ஒருவர் இந்து மதத்தைக் கைவிட்டு  அதிகாரபூர்வமாக பவுத்தராக மாறினாலும் சட்டம் அவரை இந்து என்றே வரையறுக்கிறது. இந்து மதத்தை முற்றாக மறுதலித்து பவுத்தம் ஏற்றாலும் அதை அரசு அங்கீகரிக்க மறுக்கும் நிலையைக் கண்டித்து, நீதிக்கானப் போராட்டத்தை முன்னெடுத்து தீர்வைக் காணத் திராணியற்றவர்கள்தான் பெரியாரை விமர்சனம் செய்கின்றனர்.

ஏறக்குறைய ஒரு நூற்றாண்டுக்கு முன்னால் இந்து மதத்தின் சட்டமான மநுதர்மத்தைக் கொளுத்தி, முக்கால் நூற்றாண்டுக்கு முன்னால் இந்துக்களின் குறியீடாகிய பிள்ளையாரை 15 ஆயிரம் மக்களைத் திரட்டிப் பொதுவெளியில் உடைத்து புத்தர் பிறந்த நாளைக் கொண்டாடி, தன் அரை நூற்றாண்டுப் பொது வாழ்க்கையில் இந்து மதத்தை விமர்சிக்காத நாளே இல்லை என்று அதை ஒரு கலகப் பண்பாடாகவே மாற்றி வாழ்ந்து காட்டிய பெரியார் இந்துவா?

இல்லை, டாக்டர் அம்பேத்கர் வலியுறுத்திய 22 உறுதிமொழிகளைக்கூட ஏற்காமல் பிக்குகள் முன்மொழியும் சடங்குத்தனமான ஒரு நாள் நிகழ்வுடன் தங்கள் பெயரை அரசிதழில் பதிவு செய்து கொள்வதால் மட்டுமே தங்களை பவுத்தர் என்று நம்பிக் கொண்டிருப்பவர்கள் இந்துவா?

- புனிதபாண்டியன்

(காட்டாறு & தலித் முரசு வெளியிட்டுள்ள 'நான் இந்துவாக இறக்கப் போவதில்லை' நூலுக்கான பதிப்புரை)

புத்தகத்தைப் பெற: https://www.periyarbooks.in/naan-indhuvaga-erakkappovathillai.html

Pin It