செப்டம்பர் 2021 'புதிய ஜனநாயகம்' ஏடு பற்றி முதல் இதழ் முதலே வாசகராக உள்ள தோழரின் கருத்துகள் – விமர்சனங்கள்.

  1. “திராவிட மாடல்” ஆட்சி: கார்பரேட் சேவை! காவியுடன் சமரசம்!! + 2. கார்ப்பரேட் சேவையில் கழக ஆட்சி.

மேலே குறிப்பிட்ட இரு தலைப்புகளும் ஒரே அம்சத்தை பற்றி எழுதப்பட்டுள்ளன. தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட தி.மு.க தலைமையிலான ஆட்சியைப் பற்றியும், மேலும் அதன் கொள்கைகளைப் பற்றியும் பேசுகின்றன. இரு கட்டுரைகளையும் படித்தவுடன் தொலைக்காட்சி விவாத மேடைகளில் தோன்றும் பார்ப்பன சங்கிகளின் விதண்டாவாதமான மற்றும் தமிழக மக்களின் பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்கு எதிரான விஷமப் பிரச்சாரத்தை கேட்டதுபோல இருந்தது.

 இலவச ரேஷன் அரிசி வழங்குவது தொடங்கி, இலவச கல்வி, வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு இப்படி நூற்றுக்கணக்கான திட்டங்களை விவாத மேடையில் பார்ப்பன சங்கிகள் சாடிப் பேசுவார்கள். கேவலமாக எள்ளி நகையாடுவார்கள். திராவிடம், தமிழுணர்வு, சமூக நீதி, சுயமரியாதை ஆகிய தமிழகத்துக்கே உள்ள சிறப்புச் சொற்களை பகடி செய்து ஏளனச் சிரிப்பைக் காட்டுவார்கள். மக்களையெல்லாம் இலவசத்துக்கு ஏங்கும் ஆட்டு மந்தைகளாக, பிச்சைக்காரர்களாக காட்ட முயற்சிப்பார்கள். பார்ப்பன வெறுப்பைக் கக்குவார்கள். அர்த்தமற்ற, முட்டாள்தனமான புள்ளி விவரங்களை மீண்டும் மீண்டும் கூறி வெறுப்பேற்றுவார்கள்.

 பெரியாரின் சுயமரியாதை, சமூக நீதிக் கொள்கை ஆகியவை கம்யூனிஸ்ட் கட்சியின் வேலைத்திட்டம் அல்ல. ஆனால் உழைக்கும் மக்களின் பெரும்பான்மையோருக்கு அவ்வப்போது செய்யும் சீர்திருத்தங்களாகும். திராவிட இயக்கங்களால் போற்றி கொண்டாடப்படும் இந்த சீர்திருத்தங்கள் இல்லையேல் மக்கள் கொத்துக் கொத்தாக செத்து மடிந்திருப்பார்கள். இந்தியாவிலேயே உயர் படிப்பறிவு பெற்ற மக்களை அதிகம் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு மாறியுள்ளது என்றால் அதற்கு திராவிடம்-சமூக நீதிக் கொள்கையே காரணமாகும். முன்னேறிய ஐரோப்பிய நாடுகளுக்கு ஈடான அளவு உயர்கல்வி பெற்ற மாநிலமாக மாறியதற்கு அம்பேத்கார், பெரியார் ஆகியோரின் சீர்திருத்தக் கொள்கைகளே காரணமாகும்.

 “குஜராத்தைப் பாருங்கள், பீகாரைப் பாருங்கள், உத்திரபிரதேசத்தைப் பாருங்கள், அவர்களை விட நாம் முன்னேறியுள்ளோம்” என்று நாம் மெச்சிக் கொள்கிறோமாம். அது ஒரு வகை தாழ்வு மனப்பான்மை என அறிவுக்குப் புறம்பாக கட்டுரையாளர் கூறுகிறாரே அது நியாயமா? அங்கெல்லாம் பெரியார் என்ற ஒரு சமூகநீதிப் போராளி தோன்றவில்லை. அதனால்தான் இன்றளவும் முன்னேற்றமில்லை என்பது தான் உண்மை. தமிழ்நாட்டைவிட 50 ஆண்டுக்குமேல் பின்தங்கி இருக்கிறார்களே, அந்த உண்மை கட்டுரையாளர் கணக்கில் வரவில்லை போலும்.

 ஆனால் இன்றோ பெரியாரின் சிந்தனை வட மாநிலங்களில்கூட துளிர்விடத் தொடங்கினாலும், பெரியாரைப்போல ராந்தல் விளக்கோடு தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் அலைந்து திரிந்து பிரச்சாரம் செய்ய வடமாநிலங்களில் ஆள் இல்லை. 30 ஆண்டுக்கு முன்னிருந்த நிலைமையுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் உண்மை தெரியும் என்று உளறும் கட்டுரையாளர், அதற்கான புள்ளி விவரங்களை காட்டியிருக்கலாமே. ஒருவகை தாழ்வு மனப்பான்மை இருப்பதாகச் சொல்கிறாரே அது அவருக்கும் சேர்த்தே சொல்கிறாரோ?!

 பசியால் சாக இருப்பவனைத் தடுத்தது திராவிடம்; கல்வி அறிவை வளர்க்க கிராம அளவில் அருகாமைப் பள்ளிகளையும் மாவட்டம் தோறும் கலைக்கல்லூரிகள், தொழில் நுட்பக் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள் ஆரம்பித்து கல்வியில் முன்னேற்றத்தை கொண்டு வந்தது திராவிடம். ஆயிரம் ஆண்டுகளாக தமிழர்களை, ஏன் இந்தியர்களை தற்குறிகளாக ஆடு மாடு மேய்க்கும் பண்ணை அடிமைகளாய், குப்பைகளை அகற்றி, மலத்தை கையால் எடுத்து அப்புறப்படுத்தும் நகரசுத்தி தொழிலாளர்களாய் தீண்டத்தகாதவர்களாய், விலங்கைவிட கேவலமாக நடத்தியது பார்ப்பனியம். தொட்டால் தீட்டு, படித்தால் கொலைக்குற்றம் சாட்டியது பார்ப்பனீயம்.

 படித்த மேட்டுக்குடி வர்க்கமாக, உயர்ந்த வேலைகளில், ஆட்சியின் உயர் பதவிகளில் இன்றளவும் ஆக்கிரமித்துக் கொண்டு வளர்ந்து திமிர்-ஆணவம் பிடித்து நிற்கிறது பார்ப்பனீயம். கோடானு கோடி உழைக்கும் மக்கள் முதுகில் ஏறி மிதித்து அழுத்துகிறது பார்ப்பனீயம். பார்ப்பனீயத்தின் சனாதனக் கொள்கை, வருண-சாதி படிநிலைக் கோட்பாட்டை எதிர்த்து திராவிடம், சமூகநீதி, தமிழுணர்வு, சுயமரியாதை ஆகிய ஆயுதங்களை ஏந்தி பார்ப்பனீயத்தை எதிர்க்க வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தார் பெரியார். அவர் வழியில் பெயரளவுக்கேனும் இன்றும் திராவிடம், திராவிட ஆட்சி தொடர்வதால் பார்ப்பனீயத்தை எதிர்க்க முடிகிறது. பார்ப்பனீயத்தின் கொட்டத்தை கட்டுக்குள் வைத்திருக்க முடிகிறது என்றால் அதற்குக் காரணம் திராவிடம்.

 இந்தியா முழுக்க இன்னமும் பார்ப்பனீயத்தின் ஆதிக்கம் முழுவதுமாக ஆக்கிரமித்திருக்கும் போது தமிழகத்தில் இந்த அடிமைத் தனத்தை எதிர்த்து 2௦ ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்ததே, நீதிக் கட்சியும் அதனைத் தொடர்ந்து, தந்தை பெரியாறும் செய்த பங்களிப்பு மகத்தானது. கம்யூனிஸ்ட் கட்சியும் இதே காலகட்டத்தில் தோன்றியிருந்தாலும் அவர்களின் பங்களிப்பு சொற்பமே. எனவே பெரியார், அம்பேத்கார் இருவரின் கொள்கைகளை பாராட்டும் அளவுக்கு கம்யுனிஸ்டுகள் தங்கள் கொள்கைகளை மறு உருவாக்கம் செய்து கொள்ள வேண்டும். மா-லெ-மா சிந்தனை ஒளியில் பாட்டாளி வர்க்க விடுதலை, உழைக்கும் மக்கள் விடுதலை, தொழிலாளர்கள் – விவசாயிகள் - குட்டிமுதலாளிகள் விடுதலை என்ற போராட்ட திட்டத்தில் வழிகாட்டும் நெறியாக மா-லெ-மா, சிந்தனையுடன் பெரியார் -அம்பேத்கார் வழிகாட்டுதல்களையும் இணைத்துக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் பெருவாரியான மக்களின் விடுதலை இயக்கமாக பரிணமிக்க முடியும்.

 திராவிடம் – சமூகநீதி - சுயமரியாதை-தமிழுணர்வு ஆகிய அம்சங்களை கவனத்தில் கொண்டு நமது திட்டங்களை வகுத்துக் கொள்ள வேண்டும். சீனத்தில் டாக்டர் சன்- யாட் சென்-இன் “மூன்று கொள்கைகளை” மா-சே-துங் எப்படி போற்றிப் புகழ்ந்து உள்வாங்கிக் கொண்டாரோ அப்படியே நாமும் பெரியார் - அம்பேத்கர் கருத்துகளை உள்வாங்கிக் கொண்டு போற்றிக் கொண்டாடுவதுடன் அவர்களின் கொள்கைகளை, படங்களை நாம் தூக்கிப் பிடிக்க வேண்டும். பெரியார் – அம்பேத்கார் சம்பந்தமாக மாற்றி யோசிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.

மாறாக, அவர்களுக்கு பங்கம் உருவாக்கும் வகையில், அவர்களை அம்பலப் படுத்துகிறோம் என்ற தொனியில் நாம் எழுதினாலோ பேசினாலோ தமிழக மக்கள் அதிலும் புரட்சியின் ஆணிவேரான இளைஞர்கள் நம்மை நிராகரிப்பார்கள். பல நூறு ஆண்டுகள் ஆனாலும் நம்மால் முன்னேறவே முடியாது. இன்றைய தமிழக இளைஞர்கள் பெரியார் அம்பேத்கர் ஆகியோரின் கருத்துக்களை ஊடகங்களில் தேடுவதும், புத்தகக் கண்காட்சிகளில் தேடித் தேடி படிப்பதும் அதிகரித்து விட்டது. இதனைக் கவனித்தில் கொண்டு நடக்க நாம் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.

சீர்திருத்தங்கள், இலவசங்கள், மானியங்கள் சாதி-மத எதிர்ப்பு, இடஒதுக்கீடு, பெண்விடுதலை இன்னபிற - தொகுப்பாக சொன்னால் திராவிட மாடல். இது. பார்ப்பனர்களுக்கு வேண்டுமானால் கொச்சையான சொல். அவை அடித்தட்டு ஏழை மக்களின் உரிமைகள்.

 மக்கள் தாங்கள் அன்றாடம் சம்பாதிக்கும் சில நூறு ரூபாய் கூலிப் பணத்தை உப்பு, புளி, மிளகாய், மளிகை சாமான்களாகவும், சோப்பு, சீப்பு, கண்ணாடி, துணி மணிகள் என்று வாங்கும் ஆகப் பெரும்பான்மை மக்கள் வாங்கும் பொருட்களில் வரியும் அடக்கம். அரசு செலவினங்கள், கார்ப்பரேட்டுகளின் கொள்ளை வருமானம் ஆகிய அனைத்தும் உழைக்கும் மக்கள் அளிக்கும் வரியே காரணம். இந்தப் பணத்தில் ஒரு சிறு துளியைத்தான் உழைக்கும் மக்களுக்கு சலுகை, மானியம், சீர்திருத்தங்கள் என்ற பெயரில் ஆட்சியாளர்கள் மூலம் திரும்பக் கிடைக்கிறது. குஜராத் மாடல் என்று மோடி பாசிசக் கும்பலால் ஆட்சி செய்யப்படும் வடமாநில மக்கள் இந்த சீர்திருத்தங்கள் கூட கிடைக்காமல் பின்தங்கி இருக்கிறார்கள். பார்ப்பனீய-பணியா கும்பல் அனைத்தையும் சுரண்டிக் கொள்கிறது. இதனை இந்துராஷ்டிர கனவாக குஜராத் மாடல் கூறுகிறது.

 ஆலைகள் இயங்குவதும் மலிவு விலையில் விவசாயப் பொருட்களை நகரத்து விற்பனைக்கு அனுப்பி நகர்புறத்து தொழிலாளர்களின் செலவினங்களைக் குறைப்பதன் விளைவால் ஆலை முதலாளிகளின் லாபம் பெருகுகிறது. இன்னொரு புறம் கார்ப்பரேட்டுகளுக்கு லட்சக் கணக்கான கோடிகளை வரித் தள்ளுபடி, மானியம் என்ற பெயரில் மோடி அரசு அள்ளிக் கொடுத்து மக்களின் வயிற்றில் அடிப்பதை கண்டிக்க நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். முன்னேறிய நாடுகளில்கூட இலவசங்கள் - மானியங்கள் இருக்கவே செய்கின்றன. அமெரிக்காவில் கொரானா தடுப்பூசியை ஜோ-பைடன் அரசு இலவசமாக செய்ததை கவனியுங்கள். ஆட்சியாளர்களை ஆண்டைகளாக கட்டுரையாளர் கருதுகிறோரோ என்று தோன்றுகிறது. சீமானின் அரசியல் சகதியில் வீழ்ந்து விட்டாரோ எனவும் தோன்றுகிறது. நரம்பு புடைக்க இலவசங்களை எதிர்த்து சீமான் இதேக் கருத்தைதான் பேசி வருகிறார்.

 கொரானா பெருந்தொற்றை திமுக கையாண்ட விதம் பற்றி:- ஊடகங்களை கையில் போட்டுக் கொண்டு பெருந்தொற்றை ஸ்டாலின் “திறமையாக” கையாண்டதாக விளம்பரம் தேடிக் கொண்டனர் என கட்டுரையாளர் கூறுகிறார். கடினமான வேலையை மேற்கொண்டு செவ்வனே ஒருவர் முடித்தபின், வாய்ச்சொல் வீரர்கள் சிலர் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து கொண்டு வாய்பிதுக்கி உதட்டை ஒரு மாதிரி உருட்டி “ஒன்றும் சரியில்லை, அப்படி என்ன பெரிதாக செய்து விட்டார்கள்” என்று வியாக்கியானம் பேசும் வீண் பேச்சாளர்கள் கூட்டத்திலிருந்து கட்டுரையாளர் வந்திருப்பார் போல் தெரிகிறது. பார்ப்பன சங்கிகளின் கூடாரமும் இப்படித்தான் ஸ்டாலின் ஆட்சியைக் கலாய்த்து வருகிறது.

 திண்ணைப் பேச்சாளர்கள் உண்மையை அரைகுறையாகத்தான் ஏற்பார்கள் என யாரோ சொல்லியது போல, கட்டுரையாளர் கொரானவை திமுக கையாண்டதை அரைகுறையாகவே ஏற்கிறார். போதாக்குறைக்கு திமுக கொடுத்த கொரானா நிதியையும் பாதியாக, ரூ4000 கொடுத்ததை ரூ2000 எனக் குறைத்து, கூசாமல் பொய் கூறியுள்ளார்.

 தி.மு.க தலைவர் பதவி ஏற்பதற்கு முதல் நாளிலிருந்தே கொரானா பெருந்தொற்றின் ஆபத்தை உணர்ந்து களத்தில் இறங்கி சரிசெய்யும் வேலையை மேற்கொண்டதை நாடே பார்த்து வியந்தது. சர்வதேச அளவில் பாராட்டுகள் குவிந்தன. சர்வதேச பத்திரிகைகளும் பாராட்டின. இதையெல்லாம் கவனிக்க முடியாமல் கட்டுரையாளர் எங்கோ கும்பகர்ண தூக்கம் போட்டுவிட்டாரோ - அதுவும் ஒரு மாதம் தூங்கி விட்டாரோ என சந்தேகமாக இருக்கிறது.. சுகாதார அமைச்சர் தொடங்கி அதிகாரிகள், முன்களப் பணியாளர்கள் வரை சாத்தியமான அனைத்து சக்திகளையும் முடுக்கிவிட்டு விஞ்ஞான வழியில் தகுதியானவர்களை அடிக்கடி கலந்து ஆலோசித்து களத்தில் இறக்கி இப்படியும் செய்ய முடியுமா என உலகமே உற்று நோக்கி பாராட்டியதை ஒப்புக் கொள்ள கட்டுரையாளருக்கு மனம் இல்லை போலும்.

 ஊடகச் செய்தி, பத்திரிகை செய்திகளை கட்டுரையாளர் படிக்கவில்லை எனக் கருதுகிறேன். அதனால்தான் உத்திரப் பிரதேசத்தில் பொதுவெளியில் பல நூற்றுக் கணக்கில் பிணங்கள் எரிந்து கொண்டும், கங்கை ஆற்றில் நூற்றுக் கணக்கான பிணங்கள் மிதந்து கொண்டும் வந்ததையும் - தமிழ்நாடு கையாண்டதையும் கட்டுரையாளர் ஒப்பிட்டுப் பார்க்கவில்லை. அப்படி பார்க்க நேரமில்லையா அல்லது உண்மையை உணர மனமில்லையா எனத் தெரியவில்லை.

 பெருந்தொற்றினை இந்த அளவுக்கு - ஒரு மாதத்துக்கு மேல் வளரவிட்ட அதிமுக பற்றி - ஒரு வார்த்தை பேசாத கட்டுரையாளர் திமுக மீது மட்டும் ஏன் இந்த வன்மத்தைக் காட்டுகிறார்? ‘திராவிடம்’ என்ற பிடிக்காத சொல்லுக்கு திமுக-வை மட்டும் எடுத்துக் கொண்டதால் கட்டுரையாளருக்கு ஏதோ உள்நோக்கம் இருக்கும் போல் தெரிகிறது. அதிமுக–வும் ‘திராவிட’ பாசறையிலிருந்துதான் வருகிறது என்பதை கட்டுரையாளர் கருத்தில் கொள்ள மறந்துவிட்டார்.

‘அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும்’ என்ற ஆரியப் பார்ப்பன சனாதனத்துக்கு எதிராக மா-லெ-மா-சிந்தனை ஒளியில் திட்டம் வகுத்து ம.க.இ.க. தொடர்ச்சியாக போராடி வந்தது. அந்த கோரிக்கையை நிறைவேற்றி அரசாணை வெளியிட்டு தொடர் நடவடிக்கைகளை திமுக மேற்கொண்டது. இது ம.க.இ.க.-வின் 2௦ ஆண்டு போராட்டத்துக்கு கிடைத்த வெற்றியாகவும், இதனுடன் சனாதன எதிர்ப்புப் போரை ஆரம்பித்தது பெரியாரின் திராவிடம் என்றும், இறுதியாக இதை சட்டமாக்கி நடைமுறைப் படுத்தியது ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் எனும் ஆட்சியுமாகும் எனத் தொகுத்து புரிந்து கொள்ளலாம் என கட்டுரையாளருக்கு சுட்டிக் காட்டுகிறேன்.

 நீட் தேர்வு விவகரத்திலும் சங்கிகள் போலவே கட்டுரையாளர் கேள்வி கேட்கிறார். திமுக இக்கோரிக்கையை கைவிட்டு விட்டதாக தவறாக குறிப்பிடுகிறார். நீட் சம்பந்தமாக திமுக-வின் நடவடிக்கைகளை காணத் தவறியுள்ளார். எதிர்மறையில், திமுக எதுவும் செய்யவில்லை எனக் கருதினால் ‘அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம்’ என்பதற்கு எப்படி ம.க.இ.க. போராடியதோ அதேபோல் மக்களைத் திரட்டி போராடியிருக்கலாமே. கட்டுரையாளரை கட்டிப் போட்டது எது?

 “நீங்கள் திமுக-விடம் சோசலிசத்தை எதிர்பார்க்காதீர்கள்” என யாரோ கட்டுரையாளருக்கு அறிவுரை கூறினார்களாம். நானும்கூட அப்படியே கூறுகிறேன் என வைத்துக் கொள்ளுங்கள். சோசலிசத்தைக் கொண்டுவர புரட்சிகர மா-லெ கட்சியின் தலைமையால் மட்டுமே நடக்கும். நம்மிடம் உள்ள பலவீனங்களைப் புரிந்துகொண்டு வெற்றிநடைபோட நம் சொந்தக்காலில் நின்று சாதித்தால் நிச்சயம் ஆனந்தப்படலாம். அந்த குடுப்பினைதான் நமக்கு இல்லையே. “சாண் ஏறினால் முழம் சறுக்குகிறது” என ஊரில் ஒரு பழமொழி கூறுவார்களே அதுபோல் நம் பொழப்பு ஒரு நூற்றாண்டுக்குமேல் மோசமாகிக் கிடக்கிறது.

 திமுக ஒரு ஆளும் வர்க்க கட்சி; பிழைப்புவாதக் கட்சி; கார்ப்பரேட் கொள்ளைக்கு துணைப் போகும் கட்சி; லஞ்ச ஊழலில் மூழ்கித் திளைக்கும் கட்சி; 1௦ ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாததால் கடும் பசியோடு இருக்கிறார்கள். முடிந்தவரை சுருட்டும் நேரத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்; திமுக என்றாலே கடந்த காலத்தில் கட்டப் பஞ்சாயத்து, ரியல் எஸ்டேட் கொள்ளை எனப் பெயர் எடுத்ததை யாரும் மறக்கவில்லை. மேலும் இனி வரும் காலத்தில் என்னென்ன முறைகளில் கொள்ளையடிக்கலாம் என முயற்சிப்பார்கள். இதில் எந்த சந்தேகமும் இல்லை.

 இதையெல்லாம் நாம் கருத்தில் கொண்டு அவர்கள் எடுக்கும் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்து போராட வேண்டும். மாறாக அவர்கள் தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை பெரும் பொருட்டாக எடுத்துக் கொண்டு அதனை சோசலிசத்துக்கு நிகரான வாக்குறுதி எனக் கருதி கட்டுரை வடிப்பதைப் பற்றி கட்டுரையாளர்தான் யோசிக்க வேண்டும்.

திராவிடம் – சமூகநீதி - சுயமாரியாதை என்ற பெரியாரின் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டே தேர்தல் வாக்குறுதிகளில் சிலவற்றை நிறைவேற்ற முயற்சிப்பார்கள். இல்லையேல் அடுத்தடுத்து ஆட்சிக்கு வர முடியாது என்பது அவர்களுக்கும் தெரியும். திமுக, அதிமுக இரண்டிலும் அதிமுக பெரிய ஆபத்தான கட்சியாகும். பாசிச மோடியின் பாதங்களைக் கழுவி பதவி சுகம் காணத் துடிப்பவர்கள். போராடும் மக்களுக்கு எதிராக பாசிச மோடி பாணியில் தேசத்துரோக, ஊபா சட்டங்களைப் போட்டு போராடுபவர்களை முடக்கி விடுவார்கள். “திமுக அப்படி செய்யாதா” என நீங்கள் கேட்கலாம். அதிமுக போல செய்யவில்லை என இப்போதைக்கு எடுத்துக் கொள்வோம். நான் அந்தக் கட்சிக்காரன் இல்லை, எனவே உங்களுக்கு உத்திரவாதம் கொடுக்க முடியாது.

 மேலும் பாசிச அபாயம் பற்றி நாம் பொதுவெளியில் பிரச்சாரம் செய்தாலும் பருண்மையான ஆய்வு செய்து பாசிசத்தை எதிர்த்து சரியான செயல் தந்திர முழக்கங்களை வகுக்க 12 ஆண்டுகளை கடத்தி விட்டோம். எதிரியை எதிர்த்துப் போராடும் சக்திகள் எவை, ஊசலாடும் சக்திகள் எவை, ஆளும் கட்சிகளிலே என்னென்ன வேறுபாடு, என்ன முழக்கங்களை வைத்துப் போராடுவது, என்ன போராட்ட வடிவங்களைக் கையாளுவது என்ற பல கேள்விகளுக்கும் விடை தெரியாது தவித்து வருகிறோம். ஆரியம் – திராவிடம் - வருண-சாதிப் படி நிலைகள் பற்றியும், இந்தியப் புரட்சியில் இன்னும் ஆழமான, அவசியமான அரசியல் - பொருளாதார நிலைப்பாடுகள் பற்றியும் தொலைநோக்கு இன்றியும் இருக்கிறோம். 55 ஆண்டுகளாக புரட்சி பற்றிய பழைய கோட்பாடுகளையே அப்படியே ஆய்வுகள் இன்றி பயன்படுத்தி வருகிறோம்.

 எனவே, தொகுப்பாக பார்த்தால், ‘திராவிடம்’, ‘திராவிடமாடல்’ என்ற வார்த்தைக்கு பெரியார் சிந்தனையில் பார்த்தால், ஆரியப் பார்ப்பன அதிகாரத்துக்கும் ஆரிய பார்ப்பன சனாதன அரசியல், பண்பாட்டுக்கும் எதிரான சொல். ஈராயிரம் ஆண்டுகளாக நடக்கும் இப்போரில் 2௦ ஆம் நூற்றாண்டின் ஒப்பற்ற சமூகப் போராளி பெரியார். இப்போர் இன்னும் தொடரும். மா-லெ-மா சிந்தனையில், புரட்சி பற்றி சரியான கோட்பாடுகளை வகுத்துக் கொண்டும், கூடவே, பெரியார் - அம்பேத்கார் கொள்கைகளை உள்வாங்கிக் கொண்டும் புரட்சிகர நடவடிக்கைகளை மேற்கொண்டு வெற்றி பெற உறுதி ஏற்போம்.

- குணசேகரன், புரட்சியின் மீது நம்பிக்கை கொண்ட நீண்ட நாள் 'புதிய ஜனநாயகம்' வாசகன்

Pin It