tariq aliதாரிக் அலி சர்வதேச அளவில் நன்கு அறியப்பட்ட சமூக அறிவுஜீவி, பத்தி எழுத்தாளர் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர். பிரிவினைக்கு முந்தைய இந்தியாவில் 1943இல் பிறந்த தாரிக் அலி, ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் கல்வி பயின்றவர். மேலும் அவர் அங்கு மாணவர் சங்கத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர். அந்தக் காலக்கட்டத்திலிருந்தே அவர் அரசியல் செயற்பாடுகளில் பங்கேற்பாளராக தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். வியட்நாம் மீதான அமெரிக்காவின் போருக்கு எதிரான பொதுச் சமூகங்களின் கூட்டிணைவில் மிக முக்கியமான ஆளுமைகளில் ஒருவராக அவர் விளங்கினார். மேலும் அவர் ஆப்கானிஸ்தான், இராக் மற்றும் வெவ்வேறு நாடுகளில் நடத்தப்பட்ட போர்களுக்கு எதிரான கிளர்ச்சியாளர்களில் முன்களச் செயற்பாட்டாளராகவும் திகழ்ந்தவர்.

‘தி கார்டியன்’ போன்ற முன்னணி தினசரிப் பத்திரிகைகளில் நன்கு அறியப்பட்ட கட்டுரையாளராகவும் பங்கேற்றிருக்கும் தாரிக் அலி ‘நியூ லெஃப்ட் ரிவீவ்’ இதழிலும் 50 வருடங்களுக்கும் மேலாக தொடர்பு கொண்டிருப்பவர். அவரது புனைவற்ற எழுத்தாக்கங்களில் மிக முக்கியமானவை: The forty - year war in Afghanistan: A Chronicle foretold, The Extreme centre: A second warning, street fighting years: An Autobiography of the sixties, pirates of the Caribbean: Axis of Hope, The clash of Fundamentalism: crusades, Jihads and Modernity, the leopard and the Fox: A pakistani Tragedy and An Indian Dynasty: The story of the Nehru - Gandhi family.

அவர் புனைவு எழுத்தாக்கங்களையும் கூட படைத்திருக்கிறார்: இஸ்லாம் குறித்த ஐந்து தொகுதிகள் உள்ளடக்கிய shadows of the Pomegranate Tree, The Book of the saladin, the stone woman, A sultan in Palermo ñŸÁ‹ Night of the Golden Butterfly.

இந்த நேர்காணலில், 1960களின் போர் - எதிர்ப்பு ‘நாயகர்’ ஆகிய தாரிக் அலி, நம் காலத்திய மிக இன்றியமையாத பல பிரச்சனைகள் குறித்து கருத்துக்களை எதிரொலிக்கிறார்: ஆப்கானிஸ்தானில் நிலவும் சூழல், மேற்குலகின் சக்தி மற்றும் ‘வன்முறை யுத்தம்’, லத்தீன் அமெரிக்காவில் அரசியல் வளர்ச்சி, வலதுசாரிகளின் உலகளாவிய எழுச்சிக்கான காரணங்கள், ஊடக உலகில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள், புதிய ஊடகங்களின் சக்தி, தொலைத்தொடர்பு சாதனங்கள் கண்காணிப்பும் ஜனநாயகமும், இடதுசாரிகளுக்கு முன்நிற்கும் சவால்கள், நிகழ்கால முதலாளித்துவம் மற்றும் ஏழைகள், கோவிட் 19 பெருந்தொற்றிலிருந்து கிடைத்த பாடங்கள் மேலும் இன்னும் பல தகவல்கள் இதில் விவாதிப்பட்டுள்ளன.

ஆஃப்கான் குழப்பச் சூழல்

ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் மிக நீண்ட போர் சச்சரவுகள் இப்பொழுதுதான் முடிவுக்கு வந்திருக்கிறன்றன, தலிபான்களை அதிகாரத்­திலிருந்து இறக்கி அவர்களை சக்தியற்றவர்களாக ஆக்கப்போவதாகவும், அங்கே ஜனநாயகத்தை வளர்த்தெடுக்கப் போவதாகவும் சொல்லிக்கொண்டு, 20 வருடங்களுக்கு முன்பாக, ஆப்கனிஸ்தானில் நுழைந்தது அமெரிக்கா. 2021ஆம் ஆண்டு வரையில் லட்சக்கணக்கான, பெரும்பாலும் அப்பாவி மக்கள் அவர்களது உயிர்களை இழந்திருக்கிறார்கள். அமெரிக்கா $2 ட்ரில்லியனுக்கும் அதிகமான தொகையை போரை முன்னிட்டு செலவழித்திருக்கிறது. ஆனால் தாலிபான்களே மீண்டும் அதிகாரத்தை கைப்பற்றிக் கொண்டனர். இந்த வளர்ச்சியை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

நாம் இன்று ஆப்கானிஸ்தானில் கண்கூடாக பார்த்துக் கொண்டிருப்பதின் முதன்மையான கருத்து யாதெனில், உலகின் மாபெரும் வல்லாண்மையின் தோல்வி மற்றும் ஏகாதிபத்தியத்தின் தோல்வி எனக் கொள்ளவேண்டும். இது வெறும் இராணுவத் தோல்வி அல்ல. இதை நாம் அழுத்தமாகவே சொல்லவேண்டும். ஆப்கானிஸ்தான் நிலவரத்தைப் பொருத்தமட்டில் அமெரிக்காவின் அரசியல் மற்றும் அதன் சித்தாந்தம் மீதான படுதோல்வி இது; இதைக் குறிப்பிட்டுச் சொல்லியாக வேண்டும். இது அமெரிக்காவின் தோல்வியும் கூட. NATO (வட அட்லாண்டிக் ஒப்பந்த நிறுவனம்) வழியாக ஏகாதிபத்திய திட்டங்கள் ஐரோப்பியர்களுக்கும் பகிரப்பட்டிருக்கின்றன. ஏகாதிபத்தியம் நிகழ்த்தியிருக்கும் அட்டூழியங்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாத, மனித உரிமைகளை மதிக்கும் சுதந்திர மனப்போக்கு உடையோருக்கு, இந்த உண்மை அதிர்ச்சியளித்தது.

இதில் இரண்டாவது கருத்து என்னவெனில், நீங்கள் ஏற்றுக்கொண்டாலும் அல்லது அவர்களை ஏற்றுக்கொள்ளாவிடினும், தலிபான்கள் மட்டுமே, ஆப்கானிஸ்தானில், குடியேற்ற ஆட்சியை எதிர்த்துப் போரிடுவதை தீர்மானிப்பவர்களாக விளங்கும் ஒரே சக்தியாக இருக்கிறார்கள். இடதுசாரிகள் மற்றும் சுதந்திர மனப்போக்கு உடைய இடதுசாரிகள் அமைப்பைச் சார்ந்த மிகத் தீவிர பிரிவைச் சேர்ந்த எந்த ஒருவரும், இதை நாங்கள் விரும்பவில்லை, ஏனெனில், இந்த வெற்றி தாலிபான்களால் கிடைத்தது என்றே சொல்வார்கள். இந்த விவாதத்தில் இத்தகு கேள்விகள் கேட்கப் படுகின்றன. அதாவது, நீங்கள் எங்கே போயிருந்தீர்கள்? நீங்கள் ஏன் போரிடவில்லை? ஆப்கானிஸ்தானின் குடியேற்ற ஆட்சியை எதிர்த்து நீங்கள் ஏன் தெருக்களில் வீரநடை போட்டு படையணி நடத்திச் செல்லவில்லை. இந்த தேசத்தின் கட்டமைப்பு மாற்றங்களை மீட்டுக் கொண்டுவருவதற்காக, சில நகரங்களில் சில பெண்களுக்கு பயிற்சியும் கல்வியும் வழங்குவதற்காக NATOக்கள் பணம் வழங்கினார்கள் என்பதை உண்மையாகவே நீங்கள் நம்புகிறீர்களா? அதை நீங்கள் நம்புவீர்கள் எனில் நீங்கள் முற்றிலும் தவறானவர் என்பது நிரூபணமாகிறது. தாலிபான்களால் வெல்ல முடியும் என்பதை ஒருவரும் நினைக்கவில்லை. ஆனால் இன்றைய சகிக்க முடியாத உண்மை அவர்கள் வென்று விட்டார்கள் என்பதுதான்.

NATO மற்றும் அமெரிக்கா, ஆப்கானிஸ்தானில், ‘உறுதியும் வெளிப்படையுமான’ லட்சியங்கள் எதையும் அவர்களால் சொல்ல முடியவில்லை. அவர்கள் 20 வருடங்களாக அந்த நாட்டில் வெற்று அலங்காரத்தையே செயற்படுத்திக் கொண்டிருந்தார்கள். அது புதுமை தாராளவாத முதலாளித்துவத்தின் மிக மோசமான உதாரணங்களாக வகைப்படுத்தப்படுகின்றன. இதன் உச்சமாக குடியேற்ற ஆட்சிக்கு ஆதரவும் பணம் பண்ணும் வழிமுறையும் என சிறு மேனிலை மக்கள் குழு உருவாக்கப்பட்டிருக்கிறார்கள். இது ஒன்றும் ரகசியமில்லை. தி வாஷிங்டன் போஸ்ட் நிறுவனத்தால் பிரசுரிக்கப்படும் ஆப்கானிஸ்தானிய நாளேடுகள் இந்த நோக்கை தெளிவுபடுத்தியிருக்கிறார்கள். அமெரிக்க அரசியல் நிபுணர்கள், படைத் தளபதிகள் மற்றும் சித்தாந்தவாதிகள் இந்தப் போர் எப்படி பேரழிவாக மாறியது என்பதைக் குறித்து வெளிப்படையாகவே பேசிவிட்டார்கள். அவர்களில் சிலர் சொன்னார்கள், நம்மில் பலர் முன்னதாக என்ன கூறினோமோ அதை, அதாவது, ஹமித் கர்சாய் அரசாங்கம், மேற்குலகின் பத்திரிகைகள் முழுவதிலுமாக புகழாரம் சூட்டப்பட்ட அந்த அரசாங்கம், ஊழல் அரசியல்வாதிகளின் கும்பல் என்பதைத் தவிர வேறொன்றுமில்லை. அவர்கள் பணம் பண்ணுவதில் மட்டுமே கருத்தாக இருப்பவர்களாம். வாஷிங்டன் நாளேடுகளிலும் அமெரிக்க அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கைகளிலும் கர்சாய் ஒரு பொருட்டே அல்ல என சொல்லப்படுவதை நீங்களே இப்பொழுது வாசித்து அறியமுடிகிறது. அவர் உருவாக்கியதெல்லாம் தங்களை வளப்படுத்திக்கொள்ளும் ஊழல் அரசமைப்பையே. நாம் செய்திருக்கும் ஏராளமான விமர்சனங்கள் மிகச் சரியாகவே இருந்திருக்கின்றன.

பெண்கள் எதிர்கொண்ட பிரச்சனைகள் என்ன? தாலிபான்கள் அதிகாரத்திற்கு வந்த முதலில், பெண்களை அணுகும் விதத்தில் வன்மையாகவும் கடுமையாகவும் நடந்து கொண்டார்கள். அநேக மக்களுக்கு இதுமாதிரியான பயங்கள் தற்பொழுதும் உள்ளன. பெண்களை அடிமைத் தளைகளிலிருந்து விடுவித்தல் என்பது அமெரிக்கா முன்னெடுத்த போரின் அதிகாரப்பூர்வ குறி இலக்காக இருந்தது. இதில் உங்கள் பார்வை எத்தகையது?

ஆப்கானிஸ்தான் மீதான மிகவும் இன்றியமையாத கேள்விகளில் மிக முக்கியமான ஒன்றாக இருப்பது என்னவென்றால், அது இன்றைய நாட்களில் மட்டும் முன்னிலைப்படுத்தப்படுவதில்லை. ஆனால் அமெரிக்கா ஆக்ரமிப்பு காலக்கட்டங்களிலேயே எழுப்பப்பட்டது யாதெனில், பெண்கள் நிலைமைகள் என்னவாகும்? என்பதே. இந்த விடயத்தில், நான் கேட்கிறேன், நீங்கள் அங்கே 20 வருடங்களாக இருந்திருக்கிறீர்கள். அதனால் நீங்கள் (மேற்குலக சக்திகள்), பெருந்திரளாகவும் பெரும்பான்மையாகவும் நிரம்பி வழியும் ஆப்கானிஸ்தான் பெண்களின் நிலைமைகள் குறித்து, என்னதான் செய்திருக்கிறீர்கள்? மெய்யாகவே, பெண்களின் உரிமைகளை முழுமையாக நான் ஆதரிக்கிறேன். காபூலிலோ அல்லது இன்னும் சில நகரங்களில் வாழும் சிறியதான பெண்கள் குழுக்களைப் பற்றி மட்டும் நான் பேசிக் கொண்டிருக்கவில்லை. ஆப்கானிஸ்தான் முழுமைக்கும் நான் பேசுகிறேன். அந்தப் பெண்களில் சரிபாதியினர் 25 வயதுக்கும் குறைவானவர்கள். அவர்களுக்காக நீங்கள் என்ன செய்தீர்கள்? நீங்கள் இப்பொழுது தாலிபான்கள் மீண்டும் அதிகாரத்தை அடைந்ததும் புகார் சொல்லி புலம்புகிறீர்கள்? ஆனால், நீங்கள் ஆட்சி அதிகாரத்தில் இருந்தபொழுது, அந்தப் பெண்களின் நிலைமைகளை மாற்றமடையச் செய்தீர்களா? இல்லை என்பதே இதற்கான பதில்.

தொடக்கத்தில், அவர்கள் (மேற்குலக சக்திகள்) தீவிரவாதத்திற்கு எதிரான போராகவும், பெண்களின் விடுதலைக்கான போராட்டமாகவும் அதை பிரகடனப்படுத்தினார்கள். இப்படித்தானே திருவாளர் (டோனி) பிளேய்ர் அவர்களும் திருவாளர் (ஜார்ஜ் ஷ்) புஷ் அவர்களும் உலகத்தாரிடம் சொன்னார்கள். ஆனால் வருடங்கள் பல கழிந்த பிறகு கூட்டிக் கழித்துப் பார்த்தால் இருப்பு நிலை என்ன? எத்தனை பேர்களுக்கு (பெண்கள்) நீங்கள் கல்வி புகட்டினீர்கள்? எத்தனை பள்ளிக்கூடங்கள் கட்டினீர்கள்? பெண்களுக்கான ஆசிரியர் பயிற்சி கல்லூரிகள் எத்தனை உருவாக்கப்பட்டன? இதற்கான பதில், ஒன்றும் இல்லை அல்லது ஏதோ கொஞ்சம்.

இத்துடன் நான் இன்னொரு விடயத்தையும் இணைத்துக் கொள்வேன். பெண்கள் நிலைமை, நான் கலந்து பேசிய சில பெண்ணிய செயற்பாட்டாளர்களைப் பொருத்தமட்டில், மேற்குலக அதிகாரங்களின் கீழ் படுமோசமாகிவிட்டது, உண்மையிலேயே. ஏராளமான பெண்கள் ரகசியமாக பாலியல் தொழிலாளிகளாக இழுக்கப் பட்டிருக்கிறார்கள். இது ஏனெனில் பெண்கள் அவர்களது குடும்பங்களின் பீதியாக இருந்தார்கள். பாலியல் தொழிலாளர்கள் உலகத்தின் மற்ற பாகங்களிலிருந்தும் இறக்குமதி செய்யப்பட்டார்கள். யுகோஸ்லாவியா யுத்தத்தின்போது ஏற்பட்டது போல விபச்சார விடுதிகள் உருவாக்கப்பட்டன. ஆப்கானிஸ்தானிய பெண்களின் நிலைமைகள் குறித்து இது என்ன சொல்கிறது? எனது கருத்தளவில், மாபெரும் மாற்றம் என்பது பாலியல் தொழில் ஊக்குவித்தல் மற்றும் விபச்சார விடுதிகள் கட்டமைத்தல் இவற்றிலேயே நிகழ்ந்துள்ளன. இவை தனி இடத்திலும் பொது இடங்களிலுமாக வளர்ந்துள்ளன.

தாலிபான்கள் பெண்களை அணுகும் விதத்தில் மிகவும் பின்வாங்கி விட்டார்கள். ஆனால் அவர்களது அதிகாரத்தின் கீழ் கற்பழிப்புகள் குறைந்திருந்தன. ஏனென்றால் அவர்கள் கற்பழிப்புக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் மேற்கொண்டார்கள். வன்புணர்ச்சியாளர்கள் சில வழக்குகளில் கொல்லப்பட்டார்கள் அல்லது காயடிக்கப்பட்டார்கள். இவ்வகைகளில் இந்தப் பிரச்சனைகளை கையாள்வதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். ஆனால், ஏதோ ஒரு விதத்தில், குற்றச் செயல்களின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் குறைந்தன. 20 வருடங்கள் கடந்திருக்கும் இந்நிலையில் தற்போதைய புள்ளிவிபரங்கள் என்ன?

இந்தப் பிராந்தியத்தின் மற்ற நாடுகளில் வாழும் பெண்களின் நிலைமைகளைக் காட்டிலும் ஆப்கானிஸ்தான் பெண்களின் நிலைமைகள் மோசமாக இருக்கிறதா? தோராயமாக ஒரே மாதிரியாகவே இருக்கும் என நான் சொல்வேன். கட்டமைப்பு ரீதியில், இது வேறுபடலாம். பாலின சமத்துவத்தை உறுதிப்படுத்தும் சட்டங்கள் உடைய நாடுகளில் கூட. புள்ளி விபரங்கள் என்னவாக இருக்கின்றன. அருகருகில் இருக்கும் நாடுகளாகிய பாகிஸ்தான் மற்றும் இந்தியாவில் ஏழைப் பெண்களின் கல்வித் தரம் என்னவாக இருக்கிறது?

அந்தளவுக்கு வேறுபாடெல்லாம் இருக்காது என நான் சொல்வேன். யார் கல்வி பெறுகிறார்கள்? (ஆப்கானிஸ்தானில்) ஆப்கானிஸ்தான் நகரங்களில், அடிப்படையில் நகர்ப்புற பெண்கள், கல்வி கற்ற பெண்களே அமைப்பாக உருப்பெற்றிருக்கிறார்கள். இது சிறந்த விடயம்தான். ஆனால் இதுவே இந்தப் பிரச்சனைக்குப் பதில் அல்ல.

பால்பேதத்தின் மீதான கேள்வியின் மீதுள்ள கவனம், ஆப்கானிஸ்தான் மட்டுமல்லாது இந்த அண்டம் முழுமைக்குமானதாக கருத்தில் கொள்ளப்படுகிறது. மேற்குலக சக்திகள் இதைச் செய்ய விரும்புவதில்லை. ஏனெனில் பால் இனம் தற்காலத்தில் முதன்மையான ஆயுதமாக ஆகிக்கொண்டிருக்கிறது, ஒரு கருத்தியல் ஆயுதமாக, அதை அமெரிக்காவை வீழ்த்திய குழு மீது பிரயோகப்படுத்தப்படுகிறது. இதுதான் ஆப்கானிஸ்தானில் நிலைமை.

உலகத்தின் மாபெரும் ராணுவம் எதிர்த்து தாக்குகையில், தாலிபான்கள் அதிகாரத்தை கைப்பற்ற எது உதவியது?

மாற்று அரசியலை ஏற்படுத்தத் தவறிய அமெரிக்கா அதன் இராணுவம், கட்டமைப்பு அனைத்தின் ஒட்டுமொத்த தோல்வியின் விளைவே இது. பொம்மலாட்டப் பொம்மைகள் கொண்ட இராணுவத்தின் 3,00,000 மக்கள் எளிதாக தளர்ந்து வீழ்ந்தார்கள். அவர்களில் பலர் அகதிகளாக ஆனார்கள். சிலர் தாலிபான்களை எதிர்த்து சண்டையிட மறுத்தார்கள். சிலர் தாலிபான்களுடன் சேர்ந்து கொண்டதோடு அவர்களின் ஆயுதங்களையும் ஒப்படைத்தார்கள். காவல்துறை படையும் கூட தகர்ந்து வீழ்ச்சியடைந்தது.

காவல்துறை படையைச் சேர்ந்த கால்வாசிப் பேர் போதை மாத்திரைகள் விற்பனைகளில் பணம் பண்ணினார்கள். அவர்களில் மேலும் கால்வாசியினர், அதிக எண்ணிக்கை இல்லையென்றாலும், அவர்களில் பலர் தாலிபான் ஊடுறுவாளர்கள். அமெரிக்க ஆக்ரமிப்பு தொடங்கிய பொழுது, அதன் இராணுவத்தை எதிர்த்துப் போரிடப் போவதில்லை என தாலிபான்கள் தீர்மானித்தார்கள். அவர்கள் முடிகளை சவரம் செய்துகொண்டு பாகிஸ்தான் அல்லது ஆப்கானிஸ்தானிய மலைகளுக்குள் மறைந்து கொள்ள விரைந்தார்கள். அமெரிக்க ஆக்ரமிப்பின் உண்மையான சுபாவத்தை ஆப்கன் மக்கள் பார்க்கத் தொடங்கிய பொழுது தாலிபான்கள் மீண்டும் சுறுசுறுப்பானவர்களாக ஆகத் தொடங்கினார்கள்.

ஆப்கானிஸ்தான் தேசத்தைச் சேர்ந்த எந்த ஒரு முற்போக்கு சக்தியும் ஆக்ரமிப்பையும் அத்துமீறலையும் சித்தாந்த ரீதியில் எதிர்த்துப் போரிடவில்லை. ஒருவர் இதைச் சொல்ல வெட்கப்படத்தான் வேண்டும். ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த அநேக முற்போக்கு சக்திகள், முந்தைய POPA (ஆப்கானிஸ்தான் மக்கள் ஜனநாயக கட்சி) உறுப்பினர்கள் உள்பட, அமெரிக்கத் தலையீட்டை ஆதரித்தார்கள். ஆதலால் அவர்கள் எவ்வித நம்பகத் தன்மையும் கொண்டவர்கள் அல்ல. அந்நாட்டின் எந்தவொரு பகுதியிலுமாவது, ஒரு முற்போக்கு இயக்கமாவது அத்துமீறல் மீது எதிர்ப்பு காட்டியிருக்கும் பட்சத்தில், சூழ்நிலையானது கொஞ்சம் சமநிலைப்பட்டிருக்கும். ஆனால் அங்கு அப்படி எந்த முற்போக்கு இயக்கமும் செயல்படவில்லை. வடக்கு கூட்டணி அமைப்பு முழுமையுமாக அமெரிக்காவுடன் சேர்ந்து கொண்டு வேலை செய்தது. வடக்கு கூட்டணி அமைப்பின் ஆதரவில்தான் ஆக்ரமிப்பு நடந்திருக்கும் பட்சத்தில், பெண்களுக்கு உதவி புரியும் முயற்சியாக, அதனிடம் எப்படி தற்பொழுது நிர்வாகத்தை ஒப்படைக்க முடியும்?

நாடு கடத்தப்பட்ட ஒரு ஆப்கான் பெண்ணியவாதி, தனிப்பட்ட முறையில் பேசியபோது சொன்னது, எங்களுக்கு இருந்தது மூன்று எதிரிகள்: குடியிருப்பு ஆட்சி, வடக்கு கூட்டணி அமைப்பு மற்றும் தாலிபான். மேலும் அவர் சொல்லும் போது, இப்பொழுது எங்களுக்கு இருப்பது ஒரே ஒரு எதிரி மட்டும்தான்.

எல்லாவற்றையும் ஆக்ரமிக்க முயற்சிக்கும் ஏகாதிபத்திய பரப்புரைகளையும் மேலும் அவர்களது, தோல்வியில் முடிந்த கேடுகெட்ட பிரச்சாரமாகிய “அய்யோ, தாலிபான்கள் பெண்களுக்கு எப்படியெல்லாம் கொடுமை இழைக்கிறார்கள்” என்பது மாதிரியான, தற்பொழுதைய அவர்களது வார்த்தைகளையெல்லாம் ஒருவர் எதிர்த்திருக்க வேண்டும். இத்தகைய விடயங்களில் எந்தவொரு அக்கறையும் ஆர்வமும் அற்ற இவர்கள் பெண்கள் விடுதலை குறித்த கேள்விகளில் எப்பொழுதும் எவ்விதத்திலும் ஆர்வம் காட்டியதில்லை. மெய்யாகவும் நேர்மையாகவும் இவர்களுக்கு அத்தகைய அக்கறை இருந்தால், பிறகு, பெண்கள் குறித்த அந்தக் கேள்வியை வெறும் ஆப்கானிஸ்தான் பிரச்சனையாக மட்டும் இல்லாமல், பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அண்டம் முழுமைக்குமான பிரச்சனையாக பார்க்கத் தொடங்குவார்கள். அவர்கள் அதை செய்ய மாட்டார்கள்.

தாலிபான்களின் கீழ் இருக்கும் ஆப்கானிஸ்தானின் வருங்காலம் எப்படி இருக்கும்?

அமெரிக்கா தோற்கடிக்கப்படும் போதெல்லாம், அது வியட்நாமில் ஆகட்டும் அல்லது ஆப்கானிஸ்தானாக இருக்கட்டும், அவர்கள் அந்த நாட்டை குட்டுச்சுவராக்கி தண்டித்து விடுவார்கள் என்றே நான் சொல்வேன். வியட்நாம் தேசம் எந்தவொரு மறுசீரமைப்பையும் பெற்றிடவில்லை. அந்த தேசத்தின் மொத்த சுற்றுப்புறச் சூழலும் ரசாயன ஆயுதங்களால் சீரழிக்கப்பட்டது. குடிமக்கள் திரள் மீது நாபாம் குண்டு பிரயோகிக்கப்பட்டது. நான் வியட்நாமில் இருந்தபொழுது, குழந்தைகளின் முதுகுகள் கருகி எரிந்திருப்பதையும், அவர்களின் முகங்கள் பூதங்களின் முகங்கள் போல சிதைந்திருப்பதையும் கண்டேன். நாபாம் குண்டுகளை பயன்படுத்தியதால் இந்த விபரீதம். இப்பொழுது அவர்கள் ஆப்கானிஸ்தானில் என்ன செய்வார்கள்?

20 வருடங்கள் குடியிருப்பு ஆட்சியின் முகமூடிக்கு கீழமைந்த கடினமான உண்மையை நாம் பார்க்க வேண்டியது அவசியம். உண்மை என்னவெனில், ஆப்கானிஸ்தானில் சிறுஉயர்குடி குழுக்கள் மற்றும் மேற்குலகுடன் கைகோர்த்துக் கொண்டவர்கள் தவிர்த்து, இந்நாட்டில் பெரிதாக எந்தவொரு மாற்றமும் ஏற்படவில்லை. மேற்குலகின் சக்திகள் ஆப்கானிஸ்தான் மீது தடுப்பு நடவடிக்கைகளை சுமத்தி இருப்பதோடு, அந்நாட்டிற்கு கிடைக்கும் எல்லா உதவிகளையும் திரும்பப் பெற்றுக் கொள்ளுமாறு அச்சமூட்டப்படுகிறது. இந்நாட்டிற்கு எதிராக அறம் மீறிய குற்றங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. முதன் முதலில், ரஷ்யர்கள் இந்த நாட்டை ஆக்ரமித்தார்கள்; அது மாபெரும் தவறு என்பதோடு மட்டுமல்லாமல், இன்றைய குழப்பத்திற்கு அதுவே வழிவகுத்தது. 40 வருடங்களாக இந்த நாடும் அதன் மக்களும் போர் ஒன்றைத் தவிர்த்து, வேறெதுவும் அறியாதவர்கள். குழந்தைகள் மீது இது ஏற்படுத்தும் பாதிப்பு குறித்து நாம் சிந்திக்க வேண்டும். சிறு குழந்தைகள் போரைத் தவிர வேறெதையும் பார்த்து இங்கே வளர்வதில்லை. அவர்கள் பார்ப்பதெல்லாம் போர் மட்டும்தான். இது வெறும் உளவியல் ரீதியான பாதிப்பு உண்டாக்குபவை மட்டுமல்ல, நாடு முழுவதும் ஒவ்வொரு குடும்பமும் அவர்களது குடும்ப உறுப்பினர்களை இழந்திருக்கிறார்கள். இதுவே ஆப்கானிஸ்தானில் நிலவும் இன்றைய சூழ்நிலை.

ஆப்கானிஸ்தானில் வாழும் மக்களுக்காக, நாம் மேற்குலக சக்திகளிடம் சொல்ல முடிந்ததெல்லாம், அவர்கள் மேல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளாதீர்கள். தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் அவர்களுக்குக் கிடைக்கும் உதவிகள் மேல் முட்டுக்கட்டை போடுதல் இதெல்லாம் அவர்களின் தலைவர்களையோ தலைமைத்துவத்தையோ எவ்விதத்திலும் பாதிப்பதில்லை. அதற்குப் பதிலாக, மக்கள் மீது சுமத்தப்பட்ட தண்டனைகளாக அவை ஆகிவிடுகின்றன. சில சமயங்களில், அமெரிக்கர்கள் இராக்கிற்கு எதிராக வேண்டுமென்றே கெட்ட எண்ணத்துடன் செய்தது போல, அங்கே தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்ட போது, அரை மில்லியன் குழந்தைகள் இறந்து போனார்கள். அவர்கள் அந்நாட்டின் மேல் படையெடுப்பதற்கு முன்பும் கூட இந்த நிலைமை அங்கே ஏற்படுத்தப்பட்டது. இத்தகைய தடுப்பு நடவடிக்கைகளுக்குப் பின்னால் இருக்கும் பகுத்தறிவுக்கு ஒத்த எண்ணம் எதுவாக இருக்கிறதென்றால், ஒரு நாட்டின் மேல் தடுப்பு நடவடிக்கைகள் ஏற்படுத்தினோமாகில், மக்கள் பாதிப்புக்கு உள்ளாகி, அங்கே, அந்த அரசாங்கத்தை கதிகலங்கச் செய்து சீரழிக்கும் கிளர்ச்சிகள் உண்டாகும்.

ஆனால், உண்மை எதுவாக இருக்குமென்றால் பாதிப்படையும் மக்கள் தம் சொந்த தேசத்தை அதற்காக குற்றம் சாட்ட மாட்டார்கள். அந்த பாதிப்புகளை யார் உருவாக்கினார்களோ அவர்கள் மீதே அந்த கோபமும் குற்றச்சாட்டுகளும் நீளும். இந்த அட்டூழியங்களை உருவாக்கியவர்கள் யாரென்பதை மக்கள் அறிவார்கள். இந்த மட்ட ரக சூழ்ச்சித் திறம் அரபு உலகில் எடுபடவில்லை. இதே கணத்தில், வெனிசூலாவில் இத்தகைய எல்லா விஷமங்களும் நடைபெற்றுக்கொண்டிருந்தும்கூட, அங்கே இந்த தந்திரம் வேலை செய்யவில்லை. ஆப்கானிஸ்தானிலும் இந்த விஷம வேலைகள் எடுபடாது. ஆனால் மக்களின் வாழ்க்கையை துயரம் மிகுந்ததாக ஆக்கும் இது.

தாலிபான்கள் மாற்றம் குறித்து அல்லது நிறைவடையா 20 ஆண்டுகள் குறித்து என்பது மற்றொரு விவாதம். கடந்த இருபது ஆண்டுகளாக வளர்ந்து கொண்டிருக்கும் ஆப்கானிஸ்தான் தலைமுறையானது, அவர்களது கைபேசிகளிலும் கணினிகளிலும் பல்வகைப்பட்ட செய்தி ஏடுகளை வாசித்தறியும் தலைமுறை. இதன் பொருள் யாதெனில் அவர்கள் வழக்கமாக இருந்ததைக் காட்டிலும், தற்காலத்தில், பொதுவாக, அவர்கள் நல்ல விதத்தில் தகவல்களை பெறுபவர்களாக இருக்கிறார்கள். ஆப்கானிஸ்தானின் மக்கள் தொகையில், பெருந்திரளானவர்கள் 25 வயதிற்கும் குறைந்தவர்கள். அவர்கள் எப்படி எதிர்வினை ஆற்றுவார்கள் என்பதை நாம் பார்க்கத்தான் போகிறோம். ஆனால் ஒரு விடயம் உண்மை: மிகச் சில ஆப்கான் மக்கள் உள்நாட்டுக் கலகம் திரும்ப நிகழ்வதை விரும்புகிறார்கள்.

தாலிபான்களின் ஆணவ அதிகாரத்தின் கீழமைந்த இந்த நிலப்பரப்பில் நிலவியல் சார்ந்த அரசியல் சிக்கல்கள் என்னவெல்லாம் இருக்கும்?

முதலாவதாக, நிலவியல் சார்ந்த அரசியல் தொடர்பாக ஆப்கானிஸ்தானில் என்ன நடக்கும் என்ற கேள்வியின் மீதாக, நம்மால் சொல்ல இயன்றது என்னவெனில், நாம் இப்பொழுது சற்று மாறுபட்ட காலக்கட்டத்தில் வாழ்ந்து வருகிறோம். இன்று, நம் புவிக் கோளத்தின் மீது இரண்டாவது மாபெரும் சக்தியாக விளங்குவது ஐரோப்பாவோ அல்லது ஐரோப்பிய யூனியனோ அல்ல. அது சீனாதான். சீனா ஆசியாவில் இருக்கிறது. சீனாவின் சந்தைப் பொருளாதாரம் வியப்புக்குரிய வகையில் வளர்ந்துவிட்டது. இதில் பொதிந்திருக்கும் உண்மை, சீனா தன் எல்லைகளை இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுடன் கொண்டிருப்பதால், இன்னும் சில வருடங்களில் இந்நிலப்பகுதியில், நிலவியல் சார்ந்த அரசியல் வளர்ச்சிகளில் ஆப்கானிஸ்தான் பெரும் பங்கு ஆற்றப் போகிறது என்பதாகப் பொருள் படுகிறது. மேலும் தாலிபான் தலைவர்கள் இதில் மிகவும் விழிப்புணர்வு உடையவர்களாக இருக்கிறார்கள். இதனால், தாலிபான்களின் முதல் அயலக தூதுக்குழு சவூதி அரேபியாவிற்குச் செல்லவில்லை. ஆனால், அக்குழுவினர் சீனாவின் அயல்தேச துறை அமைச்சரையும், அதன் உயர் அதிகாரிகளையும் சந்தித்துப் பேசுவதற்காக சீனாவிற்குப் பறந்தனர். ஜின்ஜியாங்கில் எந்தவித தலையீடும் இருப்பதை அவர்கள் ஆர்வம் காட்டவில்லை என்ற உறுதியான உத்தரவாதத்தை அவர்கள் அளித்தார்கள்.

சீனா இந்தப் பேச்சுவார்த்தையில் மகிழ்ச்சியடைந்திருப்பதையே இது காட்டுகிறது.

இரண்டாவது விடயம், தாலிபான்களின் ஈரானிய உறவின் மாற்றம். ஈரானுடன் இதன் உறவு மிகவும் மோசமாக இருந்தது. இது ஏனெனில், ஆப்கானிஸ்தானில் சன்னி அடிப்படை மதவாதிகள் ஷியா சமூகத்திற்கு எதிராக தூண்டிவிடப்பட்டனர். ஆனால் கடந்த ஆறு, ஏழு வருடங்களாக ஈரானிய தலைவர்களுடன் பல தடவைகள் பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டு, சமரசத்திற்கான சூழல் நடந்துள்ளன. ஈரானியர்களுக்கு, புதிய ஆட்சியமைப்பை சீர்குலைப்பதில் ஆர்வம் இல்லை. ஈரானியர்களால் உள்நாட்டுப் போர் நிகழ்வதற்கான ஊக்குவிப்பும் அங்கு இருக்கப் போவதில்லை.

மூன்றாவது, ஒரு தேசத்தை நடத்திச் செல்வது எப்படி என்பது குறித்து ஈரானியர்களிடமிருந்து தாலிபான்கள் பாடங்கள் கற்றுக்கொள்வார்கள் என்பது நடக்கவியலாதது. ஈரானிய மாதிரி அமைப்பு போல உருவாக்குவதற்கு, மெய்யான வேட்பாளர்களைக் கொண்டு, போலி வேட்பாளர்களால் அல்ல, பல்வகை கருத்துகளையும் வெளிப்படுத்தும் ஒவ்வொரு வேட்பாளருக்கும் எதிராக உண்மையான வேட்பாளர்களைக் கொண்டு நடத்தப்படும் தேர்தலை அனுமதிப்பதே முன்னோக்கிய படிநிலையாக இருக்கும். ஈரானிய மாதிரி அமைப்பு போலவே ஆப்கானிஸ்தானிற்கும் உரிய அரசியல் அமைப்பு மாதிரியாக நிகழ வாய்ப்பு இருப்பதற்கான ஆலோசனைகள் நடந்து கொண்டிருப்பதற்கான சில அறிகுறிகள் தென்படுவதாக நான் நினைக்கிறேன். அடுத்த வருடத்தில் என்ன நிகழும் என்பதை மிகவும் முன் கூட்டி இப்பொழுதே கொஞ்சம் நம்பிக்கையுடனாவது பேசப்படுகிறது.

பாகிஸ்தான் உடன் தாலிபான்களின் உறவு மிகவும் நெருக்கமானது. மிகவும் நெருக்கமானதுதான், ஆனாலும் மக்கள் கற்பனை செய்வது போல முழுமையான நட்புறவாக அது இல்லை. முந்தைய தாலிபான் அரசாங்கத்தின் கடந்த வருட காலக்கட்டத்தின் போது கூட, அங்கு பதட்டங்கள் பற்றிக் கொண்டன. கடந்த 20 வருடங்களாக தாலிபான்களுக்கு பாகிஸ்தான் ராணுவம் உதவியிருக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இதுதான் ருசிகரமான விடயம். பாகிஸ்தான் அமெரிக்காவுடன் நெடு காலத்திய நட்பு நாடாக இருந்து வருகிறது. ஆனால் மற்றொரு வகையில், அதே நாடுதான் தாலிபான்களுக்கு போர்த்திற உதவிகள் மற்றும் ஆதரவையும் அளித்து வருகிறது.

அமெரிக்கப் படைகள் இப்பொழுது விலக்கிக் கொள்ளப்பட்டிருக்கும் நிலையில் ஆப்கானிஸ்தான் தீவிரவாதத்தின் நாற்றங்கால் போல ஆகிக் கொண்டிருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்களா? ஐ.எஸ்.ஐ.எஸ் மற்றும் மற்றைய தீவிரவாதக் குழுக்களின் செயல்பாடுகள் எப்படி உள்ளன?

ஐ.எஸ்.ஐ.எஸ் முன்னதாகவே ஆப்கானிஸ்தானில் நுழைந்து தங்களது அஸ்திவாரத்தை அங்கே கட்டமைத்துக் கொண்டனர். அவர்கள் தாலிபான்களின் தயவில் அங்கு இல்லை. உண்மையில் அவர்கள் தாலிபான்களுடன் சண்டையிட்டுக் கொண்டுள்ளனர். தாலிபான்கள் அமெரிக்காவுடன் பேரப்பேச்சு வைத்துக் கொள்ளக்கூடாது என அவர்கள் சொல்கிறார்கள். அரபு உலகத்தில் ஆகட்டும், ஆப்கானிஸ்தானில் ஆகட்டும், ஐ.எஸ்.ஐ.எஸ் வரலாறானது அவர்கள் ஒருபோதும் எதேச்சதிகாரத்தை அல்லது அதன் கூட்டணிகளை குறிவைத்ததில்லை. அவர்களது இலக்கு மற்ற இஸ்லாமிய பிரிவினர் மற்றும் சிறுபான்மை கிறிஸ்தவ மக்கள். இதைத்தான் அவர்கள் செய்து கொண்டிருந்தார்கள். ஆப்கானிஸ்தானின் உள்பகுதிகளில் அவர்கள் மொத்தத்தில் தாலிபான்கள் மீது தாக்குதல் தொடுத்தபடி உள்ளனர். தாலிபான்களிடம் பிடிபட்ட ஐ.எஸ்.ஐ.எஸ். தலைவர் ஒமர் கொரசனி மிகவும் மிருகத்தனமாக கொல்லப்பட்டார் என்பதை நான் சொல்லியிருக்கிறேன். ஐ.எஸ்.ஐ. எஸ் விமானநிலையத்தின் மீது தாக்குதல் நடத்தியதாலும் அவர்கள் முதன் முறையாக யாரோ ஒரு அமெரிக்கனை கொன்றதற்காகவும், அவர்களை பழிதீர்க்கவே கொரசனி கைதும் அந்த கொடூர மரண தண்டனையும். தாலிபான்கள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருக்க வேண்டும் என நான் நினைக்கிறேன். ஐ.எஸ்.ஐ.எஸ் எந்த வகையிலும் எதிர்சக்தியாக ஆகிவிட்டால், மாபெரும் துயரமாக ஆகிவிடும் அது. ஆப்கானிஸ்தானின் பஸ்துண் பகுதியில் இவர்களது பலம் பெரிதாக உள்ளது. அவர்கள் பல்கிப் பரவி இருக்கக் கூடும். மற்றும் அவர்கள் சந்தர்ப்பவாத தொடர்புகளை உருவாக்கிக் கொண்டிருக்கக் கூடும். ஆப்கானிஸ்தானிற்கு இது ஒரு துயரமாக இருக்கும். அதனால் ஐ.எஸ்.ஐ.எஸ் அங்கு இருக்கிறது. ஆனால், அவர்கள் அதிகாரத்தை கைப்பற்றும் நிலையில் உறுதியாக இல்லை.

பல மேற்குலக நாடுகளுக்கு முன்னரே அதாவது, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் பெண்களுக்கு வாக்கு உரிமை அளிப்பதற்கு முன்பாகவே, 1919 ஆம் ஆண்டில் ஆப்கானிஸ்தான் பெண்களுக்கு ஓட்டுப்போடும் உரிமையை வழங்கியிருந்ததை பலர் மறந்தே விட்டனர். ஆப்கானிஸ்தானின் நடப்பு தலைவிதி எங்கே அழைத்துச் செல்லும்?

ஆப்கானிஸ்தானத்தின் கட்டமைப்பை புரிந்து கொள்வதற்கு அது பழங்குடி இனங்கள் பல ஒன்றிணைந்து தன்னைத்தானே எப்படி சுய உருவாக்கம் செய்து கொண்டது என்பதை நாம் பார்க்க வேண்டும். ஆப்கானிஸ்தானமாக அறியப்படும் இந்த நாடு வேறுபட்ட பல பழங்குடி இனங்கள் இணைந்து உருவாக்கப்பட்டது. அவர்களது தனித்தன்மை மற்றும் சுதந்திரத்திற்கு கடிவாளம் இட நினைக்கும் எந்தவொரு முயற்சிக்கும் எதிராக அவர்கள் யுத்தம் செய்தனர். அவர்களை அடிபணிய வைக்க, அவுரங்கசீப் மேற்கொண்ட தாக்குதல்களை எதிர்த்து ஆப்கான் பழங்குடி மக்கள் பல நெடிய போர்களைப் புரிந்தனர். அவுரங்கசீப் அனுப்பிய ராணுவத்தை இந்து, முஸ்லீம் மற்றும் சீக்கிய தளபதிகள் தலைமை தாங்கி வழிநடத்தினர். மொகலாயப் படையில் இந்து மற்றும் சீக்கிய தளபதிகள் எப்பொழுதும் முக்கியப் பங்கு வகித்தனர். அதனால் ஆப்கானிலிருந்து பலத்த எதிர்ப்புகள் கொண்ட படை திரள அவர்கள் அவுரங்கசீப்பின் படைகளில் ஒன்றைத் தோற்கடித்தனர். இதன் தொடர்ச்சியாக, மொகலாயப் பேரரசர் வீழ்ச்சியடைய, ஆப்கானியர்கள் மிகவும் மேம்பட்ட சக்தியாக ஆனார்கள்.

ஆங்கிலேயர் காலக்கட்டத்திலும், இதே நிலைமை தொடர்ந்ததோடு, ஆப்கானிஸ்தானில் ஆங்கிலேயர்கள் மூன்று போர்களை நடத்தினர். முதல் யுத்தத்தில் அவர்கள் தோற்கடிக்கப்பட்டனர். ஆங்கிலேய சாம்ராஜ்யத்திற்கு அது கசக்கிப் பிழியப்பட்ட தோல்வியாக முடிந்தது. இரண்டாவது யுத்தத்தில் இங்கிலாந்திலிருந்து வந்த தாக்குதல்களால் ஆப்கானியர்கள் பாதிக்கப்பட்டனர். ஆனால் மூன்றாவது யுத்தத்தில் தங்களை சரியாக நிர்வகித்துக் கொண்ட ஆப்கானியர்கள் ஒருவழியாக சமாளித்துக் கொண்டு ஆங்கிலேயர்களை தோற்கடித்தனர். இந்தத் தோல்விகளுக்குப் பழிவாங்கும் விதமாக தளபதி பொல்லக், காபூலில் இருந்த, வரலாற்றின் இடைக்காலத்தைச் சேர்ந்த, பழம்பெருமை மிகு அங்காடியை சீரழிக்க கட்டளையிட்டான். அந்த அங்காடித் தெரு கலை வேலைப்பாடுகள் கொண்ட மாபெரும் அழகு உடையது. மக்களைத் தண்டிக்க வேண்டுமெனில் நீங்கள் அவர்கள் எதை நேசித்தார்களோ விரும்பினார்களோ மதித்தார்களோ அதை அழிப்பீர்கள். இந்த வகையில் ஆப்கான் மக்களிடம் ஆங்கிலேயர்கள் நடந்து கொண்ட விதம், அறம் பிறழ்ந்த நேர்மைக்கேடான இனக்குழு சார்ந்த ஏதேச்சிகாரம் என்னும் கோட்பாட்டின் அடிப்படையில் அமைந்தது. (வின்ஸ்டன்) சர்ச்சில் உள்ளிட்டோர் அனுப்பிய செய்தித் தகவல்களை நீங்கள் படிக்க நேர்ந்தால், இது வெட்டவெளிச்சமாக புலப்படும். (ருட்யார்டு) கிப்ளிங் அவர்களின் சில கவிதைகள் வழியாகவும் இதை உணரவியலும்.

ஆப்கானிஸ்தான் குறித்து எனது புதிய நூல் ஒன்றிற்காக நான் சில கூடுதலான ஆய்வுகள் செய்து கொண்டிருந்தேன். ஆங்கிலேய அரசின் பொதுத்துறை ஊழியன் ஒருவன் பஞ்சாப் ஆளுனருக்கு எழுதிய செய்தித் தகவல் ஒன்றை கண்டெடுத்தேன். அந்தக் கடிதத்தில் ஆப்கானிய மக்களைப் பற்றிச் சொல்கையில், அந்த மக்களை காட்டுமிராண்டிகள் என குறிப்பிடுவதோடு, மேலும் அவர்களில் சிலர் உயர்குடி காட்டுமிராண்டிகள் என சொல்லப்பட்டாலும் ஆனால் உண்மையில் அவர்கள் காட்டுமிராண்டிகளே, என்கிறான். பல மிகவும் உன்னதமான கவிதைகளை உருவாக்கிய நாடு ஆப்கானிஸ்தான். குஷல் கட்டாக்

17 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட அழகான படைப்பு. மொகலாய பேரரசரைத் தாக்கும் கவிதைகள், ஆப்கானியர்களை ஆதரிக்கும் கவிதைகள், பாடல்கள் போலமைந்த கவிதைகள், காதல் கவிதைகள், அரசியல் கவிதைகள், இப்படியாக இன்னும் பல... இந்த நிலப்பரப்பில் படைக்கப்பட்டிருக்கின்றன. இந்நாட்டின் மக்களை ‘உயர்குடி காட்டுமிராண்டிகள்’ என்று குறிப்பிடுவதிலிருந்து உண்மை வரலாறை புரிந்துகொள்ள இயலாத ஆங்கில வல்லரசின் தகுதிப் போதாமையை காட்டுகிறது.

ரஷ்யாவில் 1917 ஆம் ஆண்டு நடந்த அக்டோபர் புரட்சி புவிக்கோளம் முழுமையாக மாபெரும் தாக்கத்தை உண்டாக்கியது. போல்ஷ்விக் அரசாங்கத்தின் முதல் அரசாணையே அதிரடியானது. எதேச்சதிகாரத்தின் கீழ் கொடுமை அனுபவித்துக் கிடக்கும் அனைத்து காலனிய நாடுகளுக்கும் விடுதலை என அந்த அரசாணை சொன்னதோடு மேலும் ஜார் அரசாங்கத்தின் அடிமை நுகத்தடியின் கீழ் வாழும்படி தள்ளப்பட்ட இஸ்லாமிய உலகம் அனைத்திற்குமான விடுதலை என்பதே அதில் குறிப்பிடத்தக்க அம்சம். மற்றைய ஏதேச்சதிகார அரசுகளின் கீழிருக்கும் அடிமை நாடுகளுக்கும் விடுதலை என அந்த அரசாணை குறிப்பிட்டது. போல்ஷ்விக் அரசாங்கத்தால் பிரகடனப்படுத்தப்பட்ட தொடக்க கால அரசாணைகளில் ஒன்று ஆப்கானிஸ்தானின் ஆட்சியாளராகிய அமானுல்லா கான் அவர்களை சென்றடைய, அதனால் அவர் மிகவும் அகமகிழ்ந்து போனார். அந்தக் காலக்கட்டத்தில் துருக்கிய தேசியவாதிகள் இஸ்லாமிய சமயத்துறை சார்ந்த அரசியலை மாற்றியமைக்கவில்லை. அதன் தேசியவாதிகள் துருக்கியை நவீனமயமாக்க ஆயத்தமானதோடு பெண்களுக்கு சம உரிமைகள் கொடுத்தார்கள். லெனின் மற்றும் முஸ்தாஃபா கெமால் அடாதுர்க் இவர்களின் ஒருங்கிணைவில் ஆப்கான் உயர்குடி குழுக்கள் மீது மாபெரும் சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தினார்கள். அமானுல்லா ஆதரவு தெரிவித்து தகவல் அனுப்பினார். ஆப்கானிஸ்தான் 1919 ஆம் ஆண்டு தனக்கேயான சொந்த அரசியல் அமைப்பை உருவாக்கத் தயாராகியது. அந்நாட்டின் பெண்களுக்கு முழுமையான சம அந்தஸ்து தந்தது அந்த அரசியல் சட்டம். இதை ஏதேச்சதிகாரத்திற்கு எதிரான சட்டமாக அவர்களால் பார்க்கப்பட்டது. பிறகு, ஆங்கிலேயர்கள் ஆப்கானிஸ்தானிற்குள் தலையிட்டு தொல்லை தந்து அமானுல்லாவின் அரசாங்கத்தை சீரழித்தனர். அமானுல்லா மற்றும் ராணி சொராயா இவர்களுக்கு எதிராக போராட்டம் ஒன்றும் நடத்தப்பட்டது. இது பழங்குடியைச் சேர்ந்த பிற்போக்காளர்களால் முன்னின்று நடத்தப்பட்டது. ஆனால் அதற்கு ஆதரவும், ஆயுதங்களும் நிதியும் ஆங்கிலேய வல்லாண்மை அரசால் அளிக்கப்பட்டது. இதே போலதான் சில வகைகளில் ஒத்ததாக, 1970 களின் பிற்பகுதிகளிலும் 1980களிலும் USSR (union of socialist soviet Republics) ஜிம்மி கார்டரால் (ஜிகாத்) புனிதப்போர் தூண்டிவிடப்பட்டது. அதனால் ஆப்கானிஸ்தான், ஏகாதிபத்திய தலையீடுகளின் மிக நெடிய வரலாற்றைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு தடவையும் அது ஆக்ரமிப்பு ஆட்சியாளர்களை தோற்கடிப்பதில் தொடர்ந்து வெற்றி கண்டு வருகிறது. மொகலாயர்கள் தொடங்கி ஆங்கிலேயர்கள் வரையில், ரஷ்யர்கள் அப்புறம், இப்பொழுது அமெரிக்கர்கள். கல்வியறிவு இன்னும் கூட விரிவடையாத இந்த தேசத்தின் மக்கள் வரலாற்று நினைவுகளில் மிகவும் ஆழமாகப் பதிந்துவிட்டனர், அவர்களின் தொடர்ச்சியான ஏகாதிபத்திய எதிர்ப்பு வெற்றிகளால்.

ஜின்ஜியாங் விருப்பத் தேர்வு

இவற்றிலிருந்தெல்லாம் மேற்குலக சக்திகள் அல்லது அமெரிக்கா குறிப்பிட்டுச் சொல்லும்படியாக, பாடங்கள் எதுவும் கற்றுக் கொண்டார்களா?

இல்லை. கடந்த காலங்களில் அவர்கள் சந்தித்த பின்னடைவுகள் மற்றும் தோல்விகளால் அவர்கள் பாதிப்பு அடைந்திருந்தும் இவற்றிலிருந்தெல்லாம் அவர்கள் எந்தப் பாடங்களும் கற்றுக்கொள்ளவே இல்லை. அவர்கள் பாடம் கற்றுக்கொள்ளும் காலம் ஒரு தடவை வந்தது. இன்னொரு பேரரசு உருவாகி அவர்களுக்கு சவாலாக அமைந்தபோது இது நடந்தது. அமெரிக்கா ஆர்வவெறி மிகுந்த தூதுக்குழுவை கப்பலேற்றி சீனாவை நிலைகுலையச் செய்ய முயற்சித்தது. தைவானின் விருப்பத் தேர்வு அவர்களுக்கு மிக நன்மை பயக்கக் கூடியதாக இல்லை. ஹாங்காங் விருப்பத் தேர்வானது ஏறத்தாழ முடிவாகி இருந்தது. அமெரிக்காவின் கைவசமிருந்த ஒரே வாய்ப்பு ஜின்ஜியாங்கில் உய்குர்ஸ்களுக்கு ஆயுதம் தந்து, அவர்களை அவிழ்த்து விடுவது. அமெரிக்காவின் சார்பாக, துருக்கியில், ஆயிரக்கணக்கானோர்களுக்கு, துருக்கிய அரசாங்கத்தால் பயிற்சி அளிக்கப்படுகிறது என நான் சொல்லியிருக்கிறேன். துருக்கி ஜனாதிபதி ரிசெப் தாயிப் எர்டொகன், அவர்களில் சிலரை இந்நிலப்பகுதியில் இருக்கும் அவரது எதிரிகளுக்கு எதிராகப் போர் செய்யப் பயன்படுத்துகிறார். மிக முக்கியமாக சிரியாவில். அமெரிக்கா இப்பொழுது துருக்கியின் மேல் நம்பிக்கை வைத்திருப்பதால், அது முக்கிய பங்காற்றியாக இருந்தபோதும், அது, தன், வரையறுக்கப்பட்ட சுய ஆர்வங்களை சார்ந்திருப்பதால் அந்நாடு சில சமயங்களில் அமெரிக்காவை எதிர்க்கவும் செய்கிறது.

ஜின்ஜியாங்கில் இதை சீனர்களுக்கு எதிராக அமெரிக்கா பயன்படுத்தினால், அது வெற்றியடைந்துவிடும் என்பதை அது அறிந்து வைத்திருப்பதால் அல்ல; ஆனால் சீனா மற்ற விடயங்களால் ஆக்ரமிக்கப்படும் என்பதனால்தான். இது எத்தகைய சூழ்நிலைக்கு இட்டுச் செல்லும் என்பதை அமெரிக்கர்கள் முன்தீர்மானிக்கவில்லை. மேலும் அது முன்தீர்மானிக்கவும் இயலாதது. இது ஆபத்தான சாகசச் செயல். சீனாவின் கொள்கைகள், அவர்களது தேசிய சிறுபான்மையினர்களைப் பற்றியது என்னவெனில், அவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள் அல்ல. இடதுசாரி அரசியலைச் சேர்ந்த எவரும் இதிலிருந்து ஒன்றையும் கற்றுக் கொள்ளும்படியாக இல்லை. சீனா, மிகவும் கடுமையான மற்றும் மைய அதிகாரம் குவிக்கப்பட்ட மாகாணத்தை உருவாக்கியுள்ளது. சீனா செய்து கொண்டிருக்கும் காரியங்களை யாரும் ஆதரிக்க முடியாது என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் ஜின்ஜியாங்கில் நடந்து கொண்டிருப்பதை இனப்படுகொலையாக மக்கள் வகைப்படுத்த தொடங்கிவிட்டார்கள் என்பது என்னை பதட்டமடையச் செய்கிறது.

இதை இப்படி வகைப்படுத்துவது தவறானது என நான் நினைக்கிறேன். இன்றைய காலக்கட்டத்தில், மேற்கத்திய நாடுகள் விரும்பாத எதையும் எந்த ஒரு நாடோ செய்தார்கள் எனில் அது இனப்படுகொலையாக வகைப்படுத்தப்பட்டு அவ்வப்போது அவர்கள் மீது ராணுவத் தலையீடுகளால் தொல்லை செய்து, அந்நாட்டில் குடியிருப்பு ஆட்சியை உருவாக்க முயல்வார்கள். உலகின் பல்வேறு பகுதிகளில் இனப்படுகொலைகள் நடந்தபடி இருக்கின்றன, யூதர்கள் மீது, அர்மீனியன்கள் மீது இன்னும் பல இனக்குழுக்கள் மீதும்... ஆனால் மேற்சொன்ன மூன்று உண்மையான இன அழிப்புகளிலும், மேற்குலகம், அந்த மக்களைப் பாதுகாக்க எதையும் செய்யவில்லை.

சிறிய படுகொலைகள் எந்தவிதத்திலும் தடுக்க இயலாதவை, ஆனால் அதை இனப்படுகொலையாக பெரிதுபடுத்துவதில், உண்மையில், ஒரே ஒரு செயல்பாடு மட்டும்தான் உள்ளது. அதனால் அமெரிக்கா ஆப்கானிஸ்தானிடமிருந்து எந்தப் பாடங்களும் கற்றுக் கொள்ளத் தவறிவிட்டது.

1975க்குப் பிறகு, அமெரிக்காவிற்கு ஏற்பட்ட அதிர்ச்சியானது மிப்பெரியது, ஏனெனில் வியட்நாமில் குடியேற்ற ஆட்சி ஏற்படுத்தியதற்காக அதன் சொந்த ராணுவத்தைச் சேர்ந்தவர்களே அதனை எதிர்த்து, கருத்து தெரிவித்தார்கள். ஆயிரக்கணக்கான படைவீரர்கள் மற்றும் ஓய்வுபெற்ற, அனுபவம் மிகுந்த படைத்துறை சேர்ந்தவர்கள் பென்டகனுக்கு வெளியே இதைக் குறித்து விரிவாக விமர்சித்ததோடு ஹோசிமின் மற்றும் நேசனல் லிபரேசன் இதில் வெற்றியடையும் என அவர்கள் நம்பிக்கை கொண்டு, அதன் வெற்றியை முன்னரே சொல்லியும் விட்டார்கள். உங்களது சொந்த ஏகாதிபத்திய ராணுவத்திற்குள்ளேயே இப்படியெல்லாம் நடந்து கொண்டிருக்கும்போது, அது உங்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் என்பதோடு, அதை நீங்கள் கவனத்தில் எடுத்துக்கொண்டு, நிதானித்திருக்க வேண்டும். ஆனால், அவர்கள் இன்னொரு நாட்டின் மீது தலையீட்டை உண்டாக்க, ரொம்ப காலம் ஆகியிருக்கவில்லை. இந்த எதிர்ப்பு முரண்பாடு ரொனால்ட் ரீகனால் ஏற்படுத்தப்பட்டு, 1970களின் பிற்பகுதிகளில் நிகராகுவாவின் ஆட்சியமைப்பை நிலைகுலைக்க முயற்சிக்கப்பட்டது. நான்கு அல்லது ஐந்து ஆண்டுகள் கழிந்ததுமே, தென் அமெரிக்காவிலும் உலகின் பிற பகுதிகளிலும் வழக்கம் போல வாணிக நடவடிக்கைகள் செயல்பட்டன. 1975 ஆம் ஆண்டு மாபெரும் தோல்வி ஏற்பட்டது. ஆப்கானிஸ்தானத்தில் ஏற்பட்ட தோல்வி பின்னடைவை ஏற்படுத்தியதை அவர்கள் ஒப்புக்கொண்டார்கள். ஆனால் நீங்கள் ஒரு மாபெரும் சாம்ராஜ்யமாக இருக்கும்போது, இந்த மாதிரியான விஷயங்கள் ஏதோ ஒன்று நடக்கத்தான் செய்யும் என கோடிட்டுக்காட்டி விட்டுவிட்டார்கள்.

மற்றொரு நாட்டில் ஆட்சியமைப்பு மாற்றத்தை நடைமுறைக்குக் கொண்டுவர முயற்சிக்கும் அமெரிக்காவின் நடவடிக்கைகளை ஒருவர் எதிர்த்தால் கூட, உலகின் பல்வேறு பகுதிகளில் நிலவி வரும் ஆட்சியாதிக்கம் என்னும் எதார்த்த உண்மையை ஏற்றுக்கொள்ளும்படி ஆகிவிடும் அல்லவா. இத்தகைய இடங்களில் ஜனநாயக மாற்றம் எப்படி நிகழும்? நிகழ்காலத்திய உலக நடப்பு குறித்த உங்கள் அவதானிப்புகள் என்ன?

என்னுடைய பார்வை எதுவாக இருக்கிறதென்றால், ஒரு தேசத்தைச் சேர்ந்த அதன் குடிமக்களால்தான் அங்கே உண்மையான மாற்றங்களைக் கொண்டுவர இயலும். இது வெளி சக்திகளால் செய்யப்பட்டால், அது எவ்வகையிலும் நன்மையளிக்காது. இது வெட்டவெளிச்சமான பொது அறிவுதான். இராக்கில் யுத்தத்திற்குப் பிறகு நாம் சுதந்திரத்தையோ ஜனநாயகத்தையோ பெற்றுவிட்டோமா? இல்லை. நாம் பதினைந்து லட்சம் மக்களை இழந்திருக்கிறோம். சிரியாவில், அமெரிக்கத் தலையீட்டால் சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் கொண்டுவர முடிந்ததா? இல்லை, எப்பொழுதும் அப்படிச் செய்து விட இயலாது. லிபியாவில் (முயாம்மர்) கடாபியை நிலை குலையச் செய்து, அங்கே ஜனநாயகத்தை மலரச் செய்துவிட முடிந்ததா? இல்லை. அலபமாவில் பல பத்தாண்டுகளாக பணம் பண்ணிக்கொண்டிருந்த ஒரு லிபிய வியாபாரியை அவர்கள் அங்கே இறக்குமதி செய்தார்கள். அவரை அவர்கள் பிரதம மந்திரியாக உருவாக்கினார்கள். அவர் ரொம்ப நாள் நீடிக்கவில்லை. அவர் மிகவும் கொஞ்ச காலம் மட்டும் நீடித்திருந்தாலும் உண்மையில், சில லிபியர்களாவது அவரது பெயரை நினைவில் வைத்திருக்கிறார்கள். அதற்குப் பதிலாக அவர்கள் லிபியர்களுக்கு தந்ததெல்லாம், மூன்று ஜிகாதி தன்னலக் கும்பல்கள் தங்களுக்குள் மோதிக் கொண்டும் ஒருவரையருவர் கொன்று கொண்டும் ஆகும் படியான நிலையை உருவாக்கியதுதான். அரேபிய மாகாணங்களை உடைத்தெறிவதுதான் அமெரிக்காவின் கொள்கை என தோன்றுகிறது. முதல் உலகப் போரிலிருந்தே, இப்படியான பேரழிவுகளை அரேபிய உலகத்தின் மீதாக அவர்கள் கட்டாயமாக சுமத்தியிருப்பது மாபெரும் மோசமான மாற்றத்தை உலகிற்கு நடைமுறைப்படுத்தி உள்ளது. ஒட்டமான்களிடமிருந்து அரபு உலகத்தை கைப்பற்றிய காலந்தொட்டே அது சின்னஞ் சிறிய மாகாணங்களாக உருமாற்றம் செய்யப்பட்டது. ஆங்கில ஏகாதிபத்தியம் இதைச் செய்ததில் முக்கியப் பங்கு வகித்ததோடு, பிற்காலங்களில் அமெரிக்காவினாலும் இத்தகைய உருமாற்றங்கள் செய்யப்பட்டன. அந்தப் புவிப்பரப்பை அவர்கள் இப்பொழுது நாசம் செய்து அழித்துக் கொண்டிருக்கிறார்கள்.

தம் சொந்த மக்களாலேயே மதிக்கப்படாத உயர்குடி குழுக்களால் வழிநடத்தப்படும், ஊழல் மிகுந்த முதலாளித்துவ ஆட்சியமைப்புகள் களைந்தெறியப்படுவதற்கான உண்மையான பாதை கீழ்க்காணும் இயக்க நகர்வுகளால் நடந்துள்ளன. அதுதான் தென் அமெரிக்காவில் நடந்துள்ளது. ஆனால் அவர்கள் தொடர்ச்சியாக அமெரிக்காவின் சவால்களுக்கு எதிராக இருந்து வருகிறார்கள்.

இடதுசாரி முன்னேற்ற சக்திகளை நொறுங்கச் செய்ய, ஏகாதிபத்திய தாக்குதல் முயற்சிகள் எதுவும் முழுமையாக வேலை செய்யவில்லை. பெரு நாட்டின் ஆசிரியக் குடியரசுத்தலைவரின் அண்மைக் காலத்திய வெற்றி அதற்கான அடையாளம். 2020 ஆம் ஆண்டு பொலிவியா தேர்தலில் அமெரிக்க சார்பு சக்திகள் தோற்கடிக்கப்பட்டது ஒரு நல்ல உதாரணம். இவர்கள் தொடக்கத்தில் இவொ மொரால்ஸை வல்லடியாக கவிழ்த்து கலங்கச் செய்தவர்கள். பொலிவிய மக்கள் சொல்வதெல்லாம், எங்களது தலைவர் துரத்தியடிக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டாலும் அவர் இல்லாமலேயே நாங்கள் வென்றுவிட முடியும், ஏனெனில் நாங்கள் வலுவான கட்டமைப்பை உருவாக்கியுள்ளோம்.

ஆசியாவில், சீனா விவகாரம் இதைக் குறித்து முன்னரே நான் விவாதித்துவிட்டேன். தெற்கு ஆசியாவில், இந்தியா தொழில் நுட்ப ரீதியாகவும் அரசியலமைப்பு ரீதியாகவும் ஒரு ஜனநாயக நாடு. இந்தியாவின் நிகழ் கால அரசாங்கம் உருமாற்றத்தை நடைமுறைப்படுத்தவும், தொடக்ககாலங்களில் ஆட்சிமுறைகளில் செயற்படுத்தப்பட்ட காந்தி - நேரு இவர்களது கருத்து ஒருமைப்பாடு என்னும் கோட்பாட்டை முற்றிலும் தகர்க்கவும் அதன் சொந்த சித்தாந்தங்களை உபயோகப்படுத்துகிறது. ஆக, (பிரதம மந்திரி நரேந்திர) மோடி உருவாக்கியிருக்கும் கருத்து ஒருமைப்பாடு என்பது அவரது கட்சிக்கு எதிராக நின்றவர்கள் கூட, அதை எதிர்த்தவர்கள் கூட, அடிப்படையில் அதன் மடியில் விழுந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த அரசியல் கட்சிகள் அதன் சுயமான அரசியல் கட்டமைப்பை ஒருமாதிரியாக சமாளித்து நிர்வகித்து வரலாம், ஆனால் அவர்களது கருத்து வெளியீட்டு விதம், அவர்கள் பேசும் வழிமுறைகள், அவர்கள் வளர்த்தெடுக்கும் ஒத்த சிந்தனைகள், இன்னும் பல வகைகளிலும் ஒற்றுமைகள் அதிகரித்தபடி இருக்கின்றன. என்னுடைய பார்வையில் இந்தியாவின் இருபெரும் எதிர்க் கட்சிகளுள், காங்கிரஸ் கட்சியானது இப்பொழுது கேலியான நிலைக்கு ஆகிவிட்டது. அதனிடமிருந்து, ஏதாவது அதன் மூலத் தத்துவத்திற்கு உரிய முற்போக்கு விஷயங்களை எதிர்பார்ப்பது என்பது நகைச்சுவையாகப் போய்விடும். அது அதிகாரத்திற்காக சண்டையிட்டுக் கொண்டிருக்கிறது. மற்றொரு வகையில், இந்தியாவில் இடது சாரிகள் பலவீன நிலையில் இருந்து வருகிறார்கள் என்பதே அதன் வரலாறு. சோவியத் யூனியன் நொறுங்கியபோது இத்தாலி மற்றும் பிரெஞ்சு நாடுகளின் பலமிக்க இடதுசாரி இயக்கங்கள் சிதைவுற்றன. இந்தியாவில், CPI(M) அதாவது, இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு இதுபோல எதுவும் நடக்கவில்லை. அது கேரளாவிலும் மேற்கு வங்காளத்திலும், திரிபுராவிலும், அதன் பிடிப்பை சமாளித்து தக்க வைத்துக்கொண்டதோடு, நாட்டின் மற்ற பகுதிகளிலும் அடிப்படைகளை நிறுவி வருகிறது. பல அறிவுஜீவிகள் மேலும் இதனுடன் இணையப்பெற்று, CPI(M)ற்கு பலம் அளித்து வருகிறார்கள். ஆனால் வங்காளத்தில் ஏற்பட்டிருக்கும் துடைத்துக் கழுவியது போன்ற தோல்வி இந்தக் கட்சி அதன் சரிவில் உள்ளதற்கான அறிகுறிதான். இந்த உண்மையிலிருந்து ஒருவர் ஓடி ஒளிந்து கொள்ள இயலாது. இதன் கேள்வி யாதெனில், மெய்யாகவே முன்னேற்றம் வேண்டி ஒரு இயக்கம் தேவையாக இருக்கும் ஏராளமான மக்களை நகர்வடையச் செய்வதற்காக சில விஷயங்கள் உருவாக்கப்பட்டிருக்க இயலுமா? நாம் பார்க்கும் படியாக இது தொடர்கிறது.

கொரிய தீபகற்பத்தில், பெரிதாக எதுவும் மாறப் போவதில்லை. ஜப்பான் நாடானது அமெரிக்காவால் மிதமிஞ்சி ஆதிக்கம் செய்யப்பட்டு,கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் உள்ளது, அந்நாடு, அதற்குரிய சுயமான வெளியுறவுக் கொள்கையை செயற்படுத்திக் கொள்ளவில்லை. மேலும் உள்நாட்டிற்குள் அதன் அரசியல் செயற்பாடுகள் பல்வேறு கட்சிகளில் தொங்கிக் கொண்டிருக்கும் உயர்ந்தோர் குழாம்களால் ஆதிக்கம் செய்யப்படுகிறது. சோஷியலிஸ்ட்கள் மற்றும் கம்யூனிஸ்ட்கள் மிகக் கடினப்பட்டே ஜப்பானில் நீடித்து வருகிறார்கள்.

தென் அமெரிக்காவில், பெரும் ஆதரவு பெற்ற இயக்கங்கள் மற்றும் இடதுசாரி சோஷியல் ஜனநாயகம் இவற்றின் கூட்டிணைவு எழுச்சி பெற்றுள்ளது. அவர்கள், மூலதனத்தை ஒழுங்குபடுத்துவது தொடர்பாக தவிர, மூலதனத்திற்கு பெரிய சவாலாக அவர்களின் மனப்பாங்கு இல்லை. மூலதனத்தின் ஆதிக்கம் முழுமையாக தொடர்கிறது. இந்த ஆதிக்கத்தின் விளைவாக, முதலாளித்துவத்தால் உருவாக்கப்பட்ட புழுக்கூட்டிற்குள் இத்தகைய நாடுகளின் முழு எதிர்ப்பும் அடங்கி ஒடுங்கிவிட்டது. மக்களின் உண்மையான தேவைகள் குறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. பிறகு இரண்டு மாபெரும் நிகழ்ச்சிகளை நீங்கள் அறிவீர். முதலாவது, 2008 ஆம் ஆண்டில் நடந்த வாணிகத் தகர்வு, வால் ஸ்ட்ரீட் வாணிகத் தகர்வு. இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு, அவர்கள் செய்தது போல, சில சீர்திருத்தங்கள் உள்பட, கொஞ்சம் உண்மையான மாற்றங்கள் செய்வதற்கு முதலாளித்துவத்திற்கு அது ஒரு வாய்ப்பாக இருந்தது. ஆனால் அவர்கள் இதை செய்யவில்லை. இரண்டாவது பெரிய நிகழ்ச்சி, நோய்ப் பெருந்தொற்று. முரண்நகையாக, நோய்ப் பெருந்தொற்றானது புதுமை தாராளவாதத்திலிருந்து அந்தந்த நாட்டின் தலையீடு என்னும் நிலை நோக்கி லேசான இடப்பெயர்வை நிகழ்த்தச் செய்தது. ஆனால் இதுகாறும் உள்ள நிலை மக்களிடையே நம்பிக்கையை உருவாக்கவில்லை. அவர்கள் அதை உருவாக்க விரும்பவில்லை. ஏனெனில் மக்கள் மிகை உணர்ச்சிக்கு ஆட்படுவார்கள், மேலும் அவர்கள் அந்த மக்களுக்கு கொடுக்க இயலாத அளவிற்கும் வழங்கப்பட இயலாத வகையிலும், மக்கள் ஏராளமாக விரும்பியிருக்கக் கூடும்.

2020 ஆம் ஆண்டில், கோவிட்-19 பெருந்தொற்றின் தொடக்கத்தில் இந்த நெருக்கடிகளிலிருந்து ஒரு மிகச்சிறந்த உலகம் எழுச்சிகொள்ளும் என பல மக்கள் நம்பினார்கள். நெருக்கடி நீடித்த காலக்கட்டத்தில் வேலை இழந்தும் ஊதியம் குறைக்கப்பட்டும், இப்படியாக இன்னும் பல வகைகளில் பல லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர். ஆனால் இதன் பிறகும் கோடீஸ்வரர்கள் பலர் அதிர்ச்சியூட்டும் படியான செல்வங்களை ஈட்டியுள்ளார்கள். பெருந்தொற்று காலத்தில் நடந்திருக்கும் அரசியல் பொருளாதாரம் மற்றும் சமூக வளர்ச்சிகள் இவற்றின் மீதாக உங்களது பார்வை எத்தகையது?

“இன்னொரு உலகத்திற்கு வாய்ப்பு உள்ளது” என்பது எப்பொழுதும் சரிதான். வலது அரசியல் சித்தாந்தம், அது இன்னொரு உலகத்தை உருவாக்க முயல்கிறது. இடதுசாரிகள், மொத்தமாக இவ்விஷயத்தில் பலவீனமாக உள்ளனர், ஆனால் வலதுசாரிகள் இதில் மிக அதிக வெற்றியை ஈட்டியுள்ளனர். (அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்) ட்ரம்ப் வலது சித்தாந்தத்திற்கான மாபெரும் வெற்றியாளராக இருந்தார், இன்னொரு அமெரிக்காவை, தனிமுதன்மை கொண்ட வெள்ளையர்களின் அமெரிக்காவை உருவாக்குவதற்கான மாபெரும் வெற்றி. அதனால், இடதுசாரிகளுக்கு, இதெல்லாம் மிக கடினமான கொள்கைக் குரல்.

“நாம் 99% இருக்கிறோம்” என்ற கொள்கைக்குரல் இடதுசாரி சிந்தனைகளோடு ஒத்துணர்வு உடைய ஒரு விளம்பர நிறுவனத்தால் கட்டமைக்கப்பட்டது. 99% மக்களால் உருவாக்கப்பட்ட செல்வ வளம் 1% மக்களால் கட்டுப்படுத்தப்படுகிறது என்னும் விவாதம் எப்பொழுதும் என்னை கொஞ்சமும் சமரசம் செய்வதில்லை. ஏனெனில், இந்த 99 சதவிகிதத்திற்குள்தான், நூற்றுக்கணக்கானவர்கள் மற்றும் ஆயிரக்கணக்கானோர்கள் உள்ளனர். இவர்களின் உண்மையான சம்பளம் மாறுபாடு உடையவை. அதாவது ஏழைகள் மற்றும் பசியால் பாதிக்கப்பட்டுள்ளோர் இவர்களைக் காட்டிலும் வேறுபட்ட ஊதியங்களைப் பெறுவோர்களும் இந்த மொத்த சதவிகிதத்திற்குள் அடங்குவர். அதனால் அது சமரசம் செய்யும்படியான கொள்கைக் குரல் அல்ல. இந்த 99 சதவிகிதமென்பது கடக்கவியலா பாதாள பெரும்பிளவு. என்னைப் பொருத்தமட்டில், ஆம், நீங்கள் பெருங்கோடீஸ்வரர்களுக்கு எதிரானவராக இருக்கிறீர்கள். ஏராளமானோர் ஈட்டும் ஊதியத்தின் பாதை மக்கள் தொகையின் 50 சதவிகிதத்தினர் ஈட்டும் ஊதியத்திலிருந்து மிகு தொலைவில் உள்ளது என்பதை அந்த கொள்கைக் குரலால் சொல்லித் தீர்த்துவிட முடியாது. எனது வாழ்க்கையின் பெரும்பகுதியில் நான் இந்த நிலைப்பாட்டை சமாளித்து நிர்வகித்து வருகிறேன், அதாவது கொள்கைக் குரலை வலுப்படுத்துதல் என்பது மட்டுமே எப்பொழுதும் போதுமானதாக இருக்காது. அரசியல் மற்றும் பொருளாதாரம் சார்ந்த பரப்பு எல்லைகள் வழியாக உலகம் எப்படி இயக்கம் கொள்கிறது என்பதை புரிந்து கொள்வதுதான் முக்கியம். கேள்வி எதுவாக இருக்கிறதென்றால், சமூகக் கட்டமைப்புகளில் நிகழும் உருமாற்றம் குறித்துதான். அதாவது பெரும்பான்மை ஆதரவுடன் ஒரு நாட்டின் சமூகக் கட்டமைப்பை உருமாற்றம் செய்தல். மேலும் புதிய அரசியல் அமைப்புகள் மற்றும் புதிய அரசியல் அமைப்புச் சட்டங்கள் அடிப்படையிலான பாராளுமன்றங்கள் போன்ற ஜனநாயக அமைப்புகள் நிறுவப்பட்டு அதன் வழியாக சமூக கட்டமைப்புகளில் உருமாற்றம் நிகழ்த்த வேண்டும். தென் அமெரிக்காவால் தரப்பட்ட மாதிரி வடிவம் மோசமான ஒன்றல்ல. சிலியில், பெரும் சக்தி கொண்ட அரசியல் இயங்குமுறையால் இப்பொழுது புதிய அரசியலமைப்பு செயற்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆகவே, இத்தகைய வழிமுறைகளின் இணைவு இடதுசாரி அரசியலை மறுபடியும், முன்னோக்கி நகர்த்திச் செல்லும். ஜீவித்திருப்பதற்கான ஒப்புப்போலி நடிப்பு பற்றியதல்ல இங்கு கேள்வி. புதிய வழிமுறைகளில் நீங்கள் தற்போதைய அரசியல் தகர்வை துரத்தி விரட்ட விரும்பினால் நீங்கள் ஆக்கப்பூர்வமாக படைப்புத்திறனுடன் சிந்திக்க வேண்டும். எவ்வளவு மக்கள் அதை விரும்புகிறார்கள் என்பதே கேள்வி.

முதலாளித்துவத்தின் இன்றைய சமூக மற்றும் பொருளாதாரக் கட்டமைப்பு, கடந்த காலங்களில் இருந்தது போல, அதனைச் சார்ந்து பல அமைப்புகளை நிறுவனமாகக் கொண்டுள்ளது. இன்றைய காலக்கட்டத்தின் நிதித் தொடர்புடைய முதலாளித்துவம், அது உலகத்தை மிதமிஞ்சி ஆதிக்கம் செய்கிறது, அரசியல் குழுக்கள் ஒட்டுமொத்தமாக இத்தகு முதலாளித்துவ வாதிகளோடு கூட்டு இணைவில் இருக்கிறார்கள். 2008 ஆம் ஆண்டின் தகர்வுக்குப் பிறகு, ஒரு தெளிவார்ந்த சமூக குடியாட்சி விருப்புடையோர், இதுபோல வருங்காலத்தில் நடப்பதற்கு நாங்கள் அனுமதிக்க மாட்டோம், என சொல்லியிருப்பார்கள். ஆனால் நோய்ப் பெருந்தொற்று அவர்களை சிந்திக்க வைத்திருக்கிறது.

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அவர்களது சில கொள்கைகள் தெரியப்படுத்தியவை யாதெனில், அந்நாடு எப்படியெல்லாம் லாபகரமாக பயன்பட்டிருக்க முடியும். பெரும்பான்மையாக, அது விரும்பியிருக்கும் பட்சத்தில். இந்த திசையில் அதை தள்ளுவதற்கு ஒரு வைரஸ் பெருந்தொற்று தேவைப்படுகிறது என்பதே உண்மை. அத்தகைய இன்னல் மிகுந்த உலகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

(தொடரும்)

நேர்காணல்: ஜிப்சன் ஜான் & ஜித்தீஷ் பி.எம்.

தமிழாக்கம் : கே.பி.கூத்தலிங்கம்

நன்றி: நேர்காணல், படங்கள் ‘Frontline'  (14.01.2022)

Pin It