afganistan womenமேற்கில் ஈரான், வடக்கில் உஸ்பெகிஸ்தான், துருக்மினிஸ்தான், தஜகஸ்தான் ஆகிய நாடுகளுடன், கிழக்கில் இருந்து தெற்கு வரையும் பாக்கிஸ்தானை எல்லை நாடுகளாகக் கொண்டிருக்கும் இயற்கை வளமிக்க நாடு - ஆப்கானிஸ்தான். அதற்கு நெடிய வரலாறு இருக்கிறது. அதற்குள் நாம் போக வேண்டாம், இன்றைய நிலையில் அந்நாட்டைச் சற்று உற்றுப் பார்ப்போம்.

1973ஆம் ஆண்டில் ஆப்கானிஸ்தானின் மன்னராக இருந்தவர் சாஃகிர் ஷா. அவரை அவரின் மைத்துனர் சர்தார் தாவுத் அதே ஆண்டில் ஆட்சியைக் கவிழ்த்து அரசரானார். அடுத்த ஐந்தாவது ஆண்டில் அதாவது 1978ஆம் ஆண்டில் அந்நாட்டின் இடதுசாரிக் கட்சியான "ஆப்கானிஸ்தான் மக்கள் ஜனநாயகக் கட்சி" அன்றைய மன்னர் சர்தார் தாவுத்தைக் குடும்பத்துடன் கொலை செய்து, ஆட்சியைக் கைப்பற்றியது. இது இடதுசாரிக் கட்சி என்பதனால் சோவியத் ரஷ்யா அதற்கு ஆதரவாக ஆப்கானிஸ்தானத்தில் தன் படையை இறக்கியது. அன்றையக் காலத்தில் சோவியத்தும், அமெரிக்காவும் நேர் எதிரான வல்லாதிக்க நாடுகளாக இருந்தன.

அன்று அமெரிக்கக் குடியரசுத் தலைவராக இருந்த ஜிம்மி கார்ட்டர், அமெரிக்கத் தேசியப் பாதுகாப்புத் துறை ஆலோசகர் சிக்னிவ் பிரசின்கியின் ஆலோசனையை ஏற்று, பாக்கிஸ்தானின் ஐ.எஸ். ஐ. மூலம் அங்குள்ள முஜாகிதீன்களுக்கு ஆயுதம், பண உதவிகளைச் செய்தார். இதனால் ஆப்கனின் இடதுசாரிகளுக்கு எதிராக முஜாகிதீன்கள் போராட்டம் கடுமையாக மாறியது.

விளைவு? அடுத்த பத்து ஆண்டுகளில், 1989ஆம் ஆண்டு சோவியத்தில் ஒரு லட்சம் படைவீரர்கள் ஆப்கானை விட்டு வெளியேறினார்கள். சோவியத் படை வெளியேற்றத்தை அடுத்து அமெரிக்கா ஆப்கனுக்கான ஆயுத, பண உதவிகளை நிறுத்திக் கொண்டது. இதனால் அமெரிக்காவிடம் ஆத்திரம் கொண்டு, ஆட்சியைப் பிடித்த முஜாகிதீன் அமைப்புகளிடையே இருந்து இரண்டு மத அடிப்படைவாத அமைப்புகள் உருவாயின. அவை 1. தாலிபான், 2.அல்கொய்தா.

முஜாகிதீனுக்குப் பின் 1996 முதல் 2001 வரை தாலிபான்களின் ஆட்சிக் கட்டுப்பாட்டின் கீழ் ஆப்கானிஸ்தான் வந்தது. தாலிபான்கள் இஸ்லாமிய சரியத் சட்டங்களின் கீழ் ஆட்சி செய்வதாகச் சொன்னார்கள். அந்த ஆட்சி ஒரு கொடுமையான, குறிப்பாக ஆப்கானியப் பெண்களின் மீது அடக்கு முறையும், ஒடுக்குமுறையும் செலுத்தி, எல்லை மீறியதாக இருந்தது.

பெண் குழந்தைகள் உள்பட எந்தப் பெண்ணாக இருந்தாலும் வீட்டுக்குள்தான் அடைந்து இருக்க வேண்டும். ஆண் துணையுடன் மட்டுமே அவர்கள் வெளியே வர வேண்டும். அனைத்துப் பெண்களும் "பர்தா"வைக் கொண்டு உடல் முழுவதையும் மூடிக் கொண்டு வர வேண்டும். 12 வயதுக்கு மேற்பட்ட அனைத்துப் பெண்களுக்கும் கல்வி மறுக்கப்பட்டு, பள்ளிகள் இழுத்துப் பூட்டப்பட்டன. இளம்பெண்களைத் தாலிபான்கள் கட்டாயத் திருமணம் செய்தனர், செய்ய வற்புறுத்தினர். இவைகளில் எதையாவது மீறும் பெண்கள் பொதுவெளியில் கசையடி, அல்லது மரண தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டனர். மொத்தத்தில் பெண்கள் அடிமைகள் ஆக்கப்பட்டனர். இதேபோல ஆண்களுக்குக் கட்டாயம் தாடி வளர்ப்பது உள்ளிட்ட கடும் கட்டுப்பாடுகள் இருந்தன.

இந்நிலையில் பின்லேடன் தலைமையிலான அல் கொய்தா 11-09-2001 அன்று அமெரிக்காவின் இரட்டைக் கோபுரங்களை இரண்டு விமானங்கள் மூலம் இடித்துத் தகர்த்தது. வாஷிங்டன் டி. சி. அருகில் உள்ள பென்டகன் அலுவலகம் மீதும் தாக்குதல் நடத்தியது. இதனால் அதிர்ந்து போன அன்றைய குடியரசுத் தலைவர் ஜார்ஜ் புஸ், அக்டோபர் இறுதியில் தாலிபான், அல்கொய்தாவுக்கு எதிராக அமெரிக்கப் படைகளை ஆப்கனில் இறக்கினார். தாலிபான்கள் ஆட்சியிலிருந்து விரட்டப்பட்டனர்.

இருபது ஆண்டுகளுக்குப் பிறகு அண்மையில் அமெரிக்கப் படைகளை திரும்பப் பெற்றது அந்நாடு. தாலிபான்கள் ஆப்கனில் நுழையத் தொடங்கினார்கள்.

அதனால் அந்நாட்டின் அதிபர் அஸ்ரப் கனி நாட்டை விட்டு வெளியேறினார். தாலிபான்கள் மிக விரைவில் தலைநகர் காபூலைக் கைப்பற்றினார்கள்.

தாலிபான்கள் ஆட்சியைக் கண்டு அந்நாட்டு மக்கள் பதறினார்கள், துடித்தார்கள்; அவர்களின் முந்தைய அடிப்படைவாத அடக்குமுறையை எண்ணி.

நாட்டை விட்டு வெளியேற பல்லாயிரக்கணக்கானோர் முயல்கின்றனர். பெண்களோ வாழ்வா, சாவா என்ற அச்சத்தில் இருக்கிறார்கள்.

இந்நிலையில் தாலிபான்கள் முன்பு போலில்லாமல் இம்முறை பெண்களின் கல்வி, வேலைவாய்ப்புகளில் சுதந்திரம் தருவோம் என்று உறுதி கூறினார்கள். ஆனாலும் அந்த உறுதியைக் காற்றில் பறக்க விடுவது போல், ஜலாலாபாத் மக்கள் மீது தாக்குதல், கந்தகாரில் பெண்கள் வேலைக்குப் போவதைத் துப்பாக்கி முனையில் தடுத்தல், ஹராத் நகரில் மாணவர்கள் மீதான தாக்குதல் என்று அடுத்த 24 மணி நேரத்தில் தாலிபானின் அடக்குமுறையை, "லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்" என்ற இதழ் உலகுக்கு வெளிப்படுத்தியது. எனவே தாலிபான்களின் உறுதி மொழிகளை அவ்வளவு எளிதில் ஏற்றுக் கொள்ளவோ, நம்பவோ முடியாது. இனி வரும் காலங்களில் இந்த ஆட்சி ஷரியத் சட்டத்தின் படிதான் நடக்கும். ஒருபோதும் ஜனநாகத்திற்கு இடம் இல்லை என்று தலிபான்கள் வெளிப்படையாக அறிவித்து விட்டார்கள்.

இந்நிலையில் பாக்கிஸ்தான், ஆப்கானை அங்கீகரித்து உள்ளது. சீனா அங்கீகரிக்கத் தயாராகி விட்டது. ஈரானும், ரஷ்யாவும் ஏறத்தாழ அதே நிலைக்கு வந்துவிட்டன.

வளைகுடாவில் கோஹா என்ற இடத்தில் லஷ்கர்-இ-தொய்பாவுக்கு அரசியல் அலுவலகம் இருக்கிறது. அதன் மூலம் இந்தியா உள்ளிட்ட சில நாடுகள் தாலிபான்களிடம் பேசி வருவதாக உறுதிப்படுத்தப்படாத செய்திகள் சொல்கின்றன.

ஆப்கானில் அதிக அளவில் கிடைப்பதாகச் சொல்லப்படும் "காப்பர்" (செம்பு) போன்ற கனிம வளங்களுக்காகவும், அங்கு கிடைக்க இருப்பதாகச் சொல்லும் எண்ணெய் வளங்களுக்காகவும் பல்லாயிரங் கோடிகளில் சீனா முதலீட்டு ஒப்பந்தம் செய்து இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இந்தியா கடந்த காலங்களில் மின் உற்பத்தி, அணை கட்டுவது, அந்நாட்டு நாடாளுமன்றம் கட்டுதல் என்று ரூ.25,000 கோடிகளுக்கு மேல் ஆப்கனில் முதலீடு செய்துள்ளது. இப்பொழுது அங்குள்ள அரசியல் சூழலில் இந்தியா என்ன நிலை எடுக்கப் போகிறது என்பது போகப் போகத்தான் தெரியும்.

பாக்கிஸ்தான் ஆப்கானிஸ்தானத்துடன் நெருக்கமாக இருக்கும் நாடு என்பதுடன், சீனாவுடனும் நட்பு பாராட்டுகிறது என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.

ஆப்கானிஸ்தானமாக இருந்தாலும் சரி, பாக்கிஸ்தானாக இருந்தாலும் சரி, இந்தியாவாக இருந்தாலும் சரி, மத அடிப்படைவாத சித்தாந்தத்தைக் கொள்கையாக நடைமுறைப் படுத்தினால்  அங்கே அமைதியும், நிம்மதியும் இருக்காது.

அதற்கு உதாரணம் இன்றைய ஆப்கானிஸ்தான்!

- எழில்.இளங்கோவன்

Pin It