lenin speechஎனதருமை தொழிலாளர் தோழர்களே...! சமதர்மத்தை காப்பாற்றவே நாம் இங்கு கூடியுள்ளோம். 1917 இராணுவப் புரட்சி ஜார் மன்னரிடமிருந்து ஆட்சியை பறித்து பண்ணையாளர்களிடமும், ஜமீன்தாரர்களிடமும் ஒப்படைத்து விட்டது.

ஜார் என்ற கொடுங்கோலனிடமிருந்து தப்பி இன்னொரு முதலையின் வாய்க்குள் சிக்கிக் கொண்டோம். மார்க்சியத்தின் ஒரே குறிக்கோள் உலகில் பொதுவுடைமையை நிலைநாட்டுவது தான்.

முதலாளித்துவம் ரஷ்யாவிலிருந்து முற்றிலுமாக விரட்டப்பட வேண்டும். தொழிலாளர்கள் அடிமைகள் அல்ல. ஒன்றுபட்டால் நாம் மலையையும் புரட்டிக் காட்டலாம். வாழ்க்கை சிலருக்கு வரமாகவும் பலருக்கு சாபமாகவும் இருக்கிறது.

உங்களின் கையெழுத்து எங்களின் தலையெழுத்தை மாற்றுவதை நாங்கள் ஒருபோதும் பொறுத்துக் கொள்ள மாட்டோம். அதிகாரங்கள் அனைத்தும் ஓரிடத்தில் குவிவதை இனியும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது.

தொழிலாளர்களில் முதுகை படிக்கல்லாக நினைப்பவர்கள் எங்களுக்கு பதில் சொல்லியே ஆகவேண்டும். முதலாளிகள் தொழிலாளர்களின் இரத்தத்தை உறிஞ்சும் இரத்தக் காட்டேறிகளாக இருக்கிறார்கள். மரண வியாபாரிகளின் கைகளில் ரஷ்யா சிக்கிக் கொண்டுள்ளது. எதிர்ப்புக் குரல் எழுப்புபவர்களை ஊமையாக்கி விட்டால் கலகம் தோன்றாது என்பது அவர்களின் எண்ணம்.

தொழிலாளர்கள் கடிவாளமிட்ட குதிரையாக இலக்கு நோக்கியே செலுத்தப்படுகிறார்கள். தொழிலாளர்களுக்கு கல்வியறிவு அளிக்காமல் உடல் உழைப்பாளர்களாகவே ஆயுள் முழுவதும் இருக்க வைத்து வஞ்சிக்கின்றனர். விதியல்ல இது நாசக்காரர்களின் சதி.

அந்த நாசக்கார கும்பல் தொழிலாளர்களின் குருதியைக் குடித்துக் கொண்டுள்ளது. இரத்தம் எல்லோருக்கும் செந்நிறம் தான் இதிலென்ன ஏழை பணக்காரன் பாகுபாடு. விதைப்பவன் ஒருவன் அறுப்பவன் ஒருவன் என்பதை இனி எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது.

பாற்கடல் அமிர்தத்தை நீங்கள் உண்பீர்கள் நஞ்சினை நாங்கள் உண்பதா? பொதி சுமக்கும் கழுதையாக அடிபட்டது போதும். மதம் பிடித்த யானை அங்குசத்துக்கு கட்டுப்படுமா?

ஆள்வோர்களின் கட்டளைக்கு அடி பணிவதற்கு நாங்கள் முதுகெலும்பில்லாத கோழைகள் அல்ல. ரஷ்யா தலை நிமிர்ந்து நிற்கிறதென்றால் அதற்கு தொழிலாளர்கள் தான் காரணம். ரஷ்யாவின் வேராக இருப்பதே தொழிலாளர்கள் தான்.

தொழிலாளர்கள் பசி, பஞ்சம், பட்டினியால் சாகும் போது ஆள்வோர்கள் ஆடம்பரமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். எப்போதும் நுனிக்கரும்பென உண்மை கசக்கத்தான் செய்யும். தொழிலாளர்களை பாழும் நரகத்தில் தள்ளுபவர்கள் சுவர்க்கத்திலிருந்து விரட்டப்படுவார்கள்.

மகுடிக்கு மயங்கி ஆடினாலும் பாம்பு பாம்புதான். உனக்கு சந்தனம் எனக்கு சாக்கடை என்றிருக்க முடியாது. பணத்துக்கு மதிப்பு கொடுக்கும் மனிதனே அதற்கு அடிமையாகிறான். எதையும் விலை பேசி வாங்கி விடலாம் என்று நினைப்பவர்களுக்கு காலம் பதில் சொல்லும்.

பணக்காரர்களுக்கு ஒரு சூரியன் ஏழைகளுக்கு ஒரு சூரியனா கிழக்கில் உதிக்கிறது. இவர்கள் மேம்பட்டவர்கள் என்றால் தண்ணீரின் மீது நடந்து காட்ட வேண்டியது தானே.

நட்சத்திரங்கள் வீழலாம் சூரியன் வீழுமா? மண் பார்த்தா மழை பெய்கிறது. விடுதலை அடையப் போராடிக் கொண்டிருக்கும் வரைதான் அவன் மனிதன். விலங்குகளுக்கு வயிறே பிரதானம். மனிதனுக்கு பசியை அறிவுக்கான வேட்கை வென்று விடுகிறது.

நீ கடவுளின் பிரதிநிதி என்று சொல்லிக் கொண்டு சாத்தான் சபையில் போய் ஜெபம் செய்துக் கொண்டிருக்கிறாய். தோல் நிறத்தாலோ, பிறப்பாலோ ஒருவன் உயர்ந்தவன் என்பதை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது.

பணக்காரர்களுக்குத்தான் சொர்க்கம் என்றால் அது தகர்த்து எறியப்பட வேண்டிய இடம். கடவுள் என்று ஒருவன் இருந்தால் அவன் எல்லோருக்குமானவனாகத் தான் இருந்தாக வேண்டும்.

நீ உமி கொண்டு வா நான் அரிசி கொண்டு வருகிறேன் ஊதி ஊதி தின்போம் என்றா. வாழ்க்கை உயிரைப் பணயம் வைத்து விளையாடும் ஒரு விளையாட்டு.

வெல்பவன் தோற்பதும் தோற்பவன் வெல்வதும் இங்கு சர்வ சாதாரணம். சீட்டாட்டத்தில் எப்போதும் ஜோக்கர் உங்கள் கைகளிலேயே இருக்காது. பந்தயத்துக்கு இறங்கும் முன் யோசிக்க வேண்டும் பிறகு பந்த பாசங்களைக் காரணம் காட்டி பின் வாங்கக் கூடாது.

எங்கேயாவது சிங்கம் சைவமாக இருந்து கேள்விப்பட்டு இருக்கின்றீர்களா? எங்கேயாவது சாத்தான் வேதம் ஓதிக் கொண்டிருக்குமா? நிலைக் கண்ணாடியில் பிரதிபலிக்கும் பிம்பத்திற்கா நாம் தலை சீவி விடுகிறோம்.

மழையும், வெயிலும், இரவும், பகலும் ஒவ்வொரு ஆண்டும் வந்து போய்க் கொண்டு தானே இருக்கிறது. விதையை தூர தூர நட்டாலும் வேர்கள் ஒன்றிணைந்து விடுவதில்லை. ஒருநாள் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தால் உலக இயக்கமே ஸ்தம்பித்துவிடும்.

ஒரு நாட்டின் எதிர்காலம் தொழிலாளர்கள் கையில் தான் உள்ளது. இருகைகள் சேர்ந்தால் தான் ஓசை பிறக்கும். காலம் ரஷ்யாவை எங்கு கொண்டு போய் நிறுத்தும் என்று தெரியாது. நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் புரட்சியை இலக்காக் கொண்டதாக இருக்கட்டும்.

ஒருவர் இருவர் என்றால் அரசாங்கம் கலகத்தை ஒடுக்கி விடும் நாம் ஒன்றிணைந்தால். தோட்டாக்களுக்கு நெஞ்சைக் காட்டி வீதியில் திரள்வோமானால் அரசாங்கம் என்ன செய்யும்.

ஆயிரம் மைல் தூரப் பயணமானாலும் முதல் அடியிலிருந்துதான் துவங்க வேண்டும். பொறுத்தது போதும் பொங்கி எழுவோம். நாளை நாடெங்கும் சோசலிசக் கொடி பறக்கட்டும்.

உலக வரலாற்றைப் பார்த்தோமானால் ஒவ்வொரு நாட்டிலும் புரட்சி  இரத்தக் கறை படிந்ததாகவே உள்ளது. வீதியில் இறங்கி போராடாமல் அரசாங்கத்தின் மேலாதிக்கத்தை நம்மால் அசைத்துப் பார்க்க முடியாது. இராணுவத்தை கையில் வைத்திருக்கும் அரசாங்கம் நம் உயிருக்குத் தான் விலை பேசும்.

எல்லோரும் ஒரே குரலில் பேசும் போது அரசாங்கம் செவிடாக நடிக்க முடியாது. இந்நாள் வரை புரட்சிக்காக இன்னுயிர் இழந்தவர்களின் ஆன்மாக்கள் நமக்குத் துணை நிற்கும். அலை கடலெனத் திரளுவோம்.

முயற்சிகளே இறுதி இலக்கினை அடைய உதவும். ஒவ்வொரு அலையும் நிலவைத் தொடும் முயற்சியிலேயே எழுகிறது. ஆயிரம் முறை நீங்கள் கலைத்தாலும் சிலந்தி வலை கட்டும் முயற்சியிலிருந்து சற்றும் பின்வாங்காது.

சட்டத்தின் முன் ஒவ்வொருவரும் சமம் என நாம் நிரூபித்துக் காட்டுவோம். குனிந்துக் கொண்டே இருக்கும் வரை தான் தலையில் குட்டுவான் எதிர்த்து நில் இந்த சிறு தீப்பொறி நாட்டையே பற்றி எரிய வைக்கக் கூடியதென்று ஒருநாள் அவனுக்குப் புரிய வை.  

நாளை நான் எய்யப் போகும் பிரம்மாஸ்திரம் எதிரிகளின் தலையைக் கொய்து விட்டுத்தான் என்னிடம் திரும்பும். வாழ்க சோசலிசம்.

(இந்த உரை புரட்சியாளனின் வாயிலிருந்து வெளிப்படும் வார்த்தைகள் அணு குண்டுகளை விடவும் ஆயிரம் மடங்கு சக்தி வாய்ந்தது என்று நம்மை உணர வைக்கிறது.)

- ப.மதியழகன்

Pin It