modi with corona maskஉத்தரபிரதேசத்தின் சட்டசபை தேர்தல் நெருங்கி விட்டது. இத்தனை நாட்களாக மிகவும் சோர்வாகவும் அழுக்காச்சியாகவும் நடந்து கொண்ட பிரதமர் மோடி துள்ளி குதித்து எழுந்திருக்கிறார்.

தேர்தல் என்றாலோ, பிரச்சாரம் என்றாலோ கூட்டம் என்றாலோ மக்கள் ஆயிரக் கணக்கில் அமர வைக்கப் பட்டாலோ மோடிக்கு இறக்கைகள் முளைத்து விடும்.

பல நாடுகளில் சுற்றுப் பயணம் செய்வதிலேயே தனது 6 ஆண்டுகளை கழித்த பிரதமர் மோடியை கடந்த 2 ஆண்டுகள் கொரோனா எங்கும் செல்லாமல் இறக்கைகளை ஒடித்து வைத்துள்ளது.

அதுமட்டும் அவரால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. ஆனால் பறந்தாக வேண்டுமே என்ன செய்ய? டவ்தேவ் புயல் சேதங்களை பார்க்கப் போகிறேன் என்று சுற்றித்திரிந்த அவருக்கு, தற்போது உத்தரப்பிரதேச தேர்தல் பெரும் ஆறுதலைக் கொடுத்திருக்கிறது. மிகவும் துடிப்பாக காணப்படுகிறாராம்.

இது ஒருபுறம் இருக்க இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகளின் தேவைகள் அதிக அளவில் இருக்க 132 நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றுமதி செய்துள்ளோம் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தன் பெருமை பொங்க சொல்லியிருக்கிறார்.

இதற்குமுன் 2020ம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று செங்கோட்டையில் தனது சுதந்திர தின உரையின் போது வெளியிட வேண்டும் அதை வைத்து ஓர் அரசியலை நடத்த வேண்டும். உலகையே காக்கும் சௌகிதாராக (அதாங்க காவலாளி) தன்னை அறிவித்துக் கொள்ள வேண்டும் என்று படாதபாடு பட்டார்.

அதற்கு அவரது அலுவலகம் எவ்வளவோ மெனக்கெடல்கள் செய்தது. ஆனால் தடுப்பூசியை அந்த குறிப்பிட்ட காலத்திற்குள் தயாரிக்க முடியவில்லை. நினைத்த நேரத்தில் எண்ணெயில் போட்டு எடுக்க இது அமித்ஷா சொன்ன பக்கோடா அல்ல... உங்கள் விளம்பர மோகத்தை எங்களிடம் காட்டாதீர்கள் என்று விஞ்ஞானிகள் சொன்ன பிறகு மனசில்லாமல் "சரி" என்றார்.

அதன் பிறகு பல நாடுகளில் தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டன. இந்தியாவிலும் கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டன. ஒரு வருடங்கள் இருந்த நேரத்தில் அதனை மக்களுக்கு விநியோகிக்கவும், அதனை ஓர் இயக்கமாக நடத்தவும் செய்யாமல் ஐந்து மாநிலத் தேர்தல்கள் அவரது கண்ணை மறைத்தன.

"நானும் பல இடங்களுக்கு சென்று பேசியிருக்கிறேன். ஆனால் இப்படியொரு கூட்டத்தைக் கண்டதில்லை" என்று நோய் தொற்று அதிக அளவில் பரவி வரும் நேரத்தில் பெருமைப்பட்டார் மோடி..

அதே நேரத்தில் உலக நாடுகள் பல விழித்துக் கொண்டு தடுப்பூசி விசயத்தில் முன் பணம் கட்டி தங்களுக்கு தேவையான அளவு வாங்குவதில் முன் தீர்மானமாக இருந்தார்கள்.

தங்கள் நாட்டின் மக்கள் தொகைக்கு ஏற்ற அளவில் அல்லாமல் 3 மடங்கிலிருந்து ஐந்து மடங்கு வரை வாங்கிக் குவித்தார்கள், அல்லது முன் பதிவு செய்து வைத்திருந்தார்கள். ஐந்து மாநில தேர்தல்கள் பாஜகவுக்கு அஸ்ஸாமைத் தவிர 4 இடங்களில் பெரும் தோல்வியை பரிசாக அளித்தன.

உலகின் கோவிட் சூழலை தலைமையேற்று நடத்த மோடியை உலகத் தலைவர்கள் அழைத்து கொண்டிருக்கிறார்கள் அவரை மாபெரும் தலைவனாக்கப் பார்த்தார்கள் முகநூல் போன்ற சமூக ஊடகங்களில் கிறுக்கிக் கொண்டிருக்கும் மூடர்கள்.

கும்பமேளா நடத்தி அம்மண சாமியார்களை லட்சக்கணக்கில் கூட்டினார்கள். ஏன் இப்படி என்று கேள்வி கேட்டோரை, தவ்ஹித் மாநாடு நடந்த போது பேசாமல் தானே இருந்தீர்கள் என்று எதிர்வாதம் செய்தார்கள்.

கடைசியாக நீல சாயம் வெளுத்துப் போச்சு.. டிங்.. டிங்..டிங்... ராஜா வேஷம் கலைஞ்சி போச்சு டிங்..டிங்.. டிங்... என்ற கதையாக எல்லா வெற்றிகளும் என்னால் மட்டுமே நடந்தது என்று இதுவரை பேசி வந்த மோடியும் அவரது சீடர் படையும் தோல்வியை ஒப்புக் கொள்ள முடியாமல் திணறின.

மாநிலங்கள் தான் பொறுப்பு என்று ஒதுங்கும் நிலைக்கு வந்தன. எந்த சமூக ஊடகத்தின் மூலம் பொய்களை பரப்பி முன்னுக்கு வந்தார்களோ, மாநிலங்களை வென்றார்களோ, அதே ஊடகத்தின் மூலமாகவே அவர்கள் அம்பலப்பட்டு நின்றார்கள். இதுவரை நின்று கொண்டிருக்கிறார்கள்.

அதன் காரணமாக சமூக ஊடகங்களை முடக்கும் நடவடிக்கையில் இறங்கினார்கள். ஆனால் இன்று இந்தியா முழுவதும் தனியார் மருத்துவமனைகள் வசம் தடுப்பூசிகள் கைமாறிக் கொண்டேயிருக்கிறது.

இனி பெரும் தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி கிடைக்கும், அங்கே உங்களுக்கு பல தடுப்பூசிகளில் ஒன்றை தேர்வு செய்யும் உரிமை இருக்கும், குளிரூட்டப்பட்ட அறைகளில் உலகின் அதி நுட்பமான சேவைகள் கிடைக்கும் நிலைக்கு சென்று விட்டன.

இவர்களின் செயலற்ற தன்மையை உணர்ந்துக் கொண்டோ என்னவோ, செங்கல்பட்டில் உள்ள மத்திய அரசின் தடுப்பூசி தயாரிப்பு நிறுவனத்தை தமிழகத்திற்கு குத்தகைக்கு தர வேண்டும் என்றும், உலகலாவிய அளவிலான ஒப்பந்தம் கோரியும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பம்பரமாக சுழன்று வருகிறார்.

அனைத்து மாநிலங்களும் தமிழகத்தின் பின்னே அணிவகுக்கும் காலம் இன்னும் கூடிய சீக்கிரத்தில் வரத்தான் போகிறது. அப்போது இவர்களுக்கு தேநீர் கடையும், பக்கோடா மாவு மசியலும் தயாராக இருக்கும். 

- சஞ்சய் சங்கையா

Pin It