1. அறிமுகம்

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் 12 தொகுதிகளில் லெனின் தேர்வு நூல்களை வெளியிடவுள்ளது. இந்த புதிய பதிப்பு நவம்பர் 7ஆம் நாள் வெளியாகிறது. இந்நூல் தொகுப்பின் முதல் தமிழ் பதிப்பு 45 ஆண்டுகளுக்கு முன் வெளியானது. அதனை மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் பதிப்பித்தது.

லெனினின் ஆக்கங்கள் 100 ஆண்டுகளுக்கு முந்தையவை, ரசியாவின் அரசியலை வைத்து எழுதப்பட்டவை. ரசியாவோ நம் நாட்டில் இருந்து 5,000 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு நாடு. அப்படியானால், லெனினின் எழுத்துகளை 21ஆம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் நாம் ஏன் படிக்க வேண்டும்?

ரசியாவின் அன்றைய நிலைமைக்கும் நம் நாட்டின் இன்றைய நிலைமைக்கும் இடையே உள்ள பல ஒற்றுமைகளே இதற்கான விடை.

lenin speech 5922. இறந்தவன் வாழ்பவனை ஆட்டி வைக்கிறான்1

படித்த இளைஞர்களுக்கு முறையான வேலை வாய்ப்பு இல்லை; வேலை கிடைத்தவர்களுக்கு பணிச் சுமை அதிகம்; கிடைக்கும் ஊதியமோ விலைவாசி உயர்வுக்கு ஈடு கொடுக்கவில்லை. இன்னொருபக்கம் பணக்காரர்கள் செல்வத்தைக் குவித்துக் கொண்டே போகின்றனர். இவை "நவீன காலத் தீமைகள்".

"காலத்துக்கொவ்வாத சமூக, அரசியல் முறைகளின்" கேடுகளின் தாக்குதலும் நடக்கிறது. சாதிய ஏற்றத்தாழ்வுகளாகவும் தீண்டாமைக் கொடுமைகளாகவும் மத அடக்குமுறைகளாகவும் பெண்கள் மீது ஆணாதிக்கமாகவும் இளம் காதலர்களை ஆணவக் கொலை செய்வதாகவும் அது நிகழ்கிறது.

இவற்றை விவரிக்க வேண்டியதில்லைதான். செய்திகளை தொடர்ந்து பார்ப்பவர்கள் நன்கறிந்தவை அவை.

-       தமிழ்நாட்டில் பல பன்னாட்டு நிறுவனங்கள் இயங்குகின்றன. அவை ஹூண்டாய், ஃபாக்ஸ்கான், சாம்சங், ஃபோர்ட் போன்றவை. அவற்றுக்கு துணைப் பொருட்களை செய்து கொடுக்கும் துணை நிறுவனங்களும் நூற்றுக் கணக்கில் செயல்படுகின்றன. ஜவுளித் துறை, தோல் துறை, வேதிப் பொருள்கள் உற்பத்தி, கணினி, மென்பொருள், தகவல் தொழில் நுட்பம், வணிகம், கடைகள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் மற்றும் ஏனைய சேவைத்துறைகள் என்று பல முதலாளித்துவ நிறுவனங்கள் இயங்குகின்றன. அவற்றில் வேலை செய்யும் தொழிலாளர்களின் வேலை நேர வரம்புகள் மதிக்கப்படுவதில்லை. பணியிட நிலைமைகள் மோசமாக உள்ளன. ஊதிய விகிதங்களோ அடிமட்ட நிலையில் உள்ளன.

-       ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை நாட்டின் ஜி.டி.பி வளர்ச்சி பற்றி செய்திகள் வெளியாகின்றன. அந்த வளர்ச்சியின் பலன்கள் ஒரு சிலரான பெரு முதலாளிகள் கையில் குவிகின்றன. இந்தச் செல்வங்களை எல்லாம் உற்பத்தி செய்யும் தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் பொருளாதார நெருக்கடி அதிகரித்துச் செல்கிறது.2

        இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும் இன்னொரு தொழிலதிபர் குடும்பத்தைச் சேர்ந்த ராதிகா மெர்ச்சன்டுக்கும் நடந்த திருமணத்துக்கு ரூ 5,000 கோடி செலவிடப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அதே நேரம், சென்னையை அடுத்த சுங்குவார் சத்திரத்தில் ஆப்பிள் ஐஃபோன்களை சேர்த்துப் பொருத்தும் ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையில் மாத ஊதியமே ரூ 15,000 தான். திருமணமாகாத பல இளம் பெண்கள் அங்கு வேலை செய்கின்றனர். ஒரு புறம் பல ஆயிரம் கோடிகளில் ஆடம்பரத் திருமணம். இன்னொரு புறம் ஒரு சில ஆயிரங்களுக்கு கடும் உழைப்பு. இரண்டும் ஒன்றோடொன்று தொடர்புடையவை.

-       அதே நேரம், சாதியப் பாகுபாடுகளும் மத மோதல்களும் தீண்டாமைக் கொடுமைகளும் ஒழிந்தபாடில்லை. வணிகத்திலும் பெரும் தொழில்களிலும் அரசு உயர் பதவிகளிலும் மேல்நிலை சாதியினர் ஆதிக்கம் செலுத்துகின்றனர். பெரும்பான்மை உழைக்கும் சாதியினர் கல்வியிலும் வேலை வாய்ப்புகளிலும் பாகுபாடுகளை எதிர்கொள்கின்றனர். குடிநீர்த்தொட்டியில் மலத்தைக் கலப்பது முதல் வழிபாட்டுத் தலங்களில் அனுமதி மறுப்பது வரை தீண்டாமைக் கொடுமைகள் தொடர்கின்றன.

        பெண்கள் குடும்பத்திலும் பொதுவிடங்களிலும் வேலை செய்யும் இடத்திலும் பாகுபாடுகளை எதிர்கொள்கின்றனர். பாலியல் தாக்குதல்களுக்கு உள்ளாகின்றனர்.

-       சர்வதேச அளவில் வளர்ச்சியடைந்த அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் பல ஆயிரம் கோடி டாலர்களை ஆயுதத் தளவாடங்களுக்கு செலவிடுகின்றனர். போர்களை ஊக்குவித்து நடத்துகின்றனர். ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களின் உயிரையும் வாழ்வையும் பறிக்கின்றனர்.

இதே நிலைமைகளை அல்லது இதோடு ஒப்பிடும் நிலைமைகளை எதிர்கொண்டிருந்த ரசிய சமூகத்தில்தான் 1870ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22ஆம் நாள் லெனின் பிறந்தார்.

3. லெனினின் ரசியா

லெனின் பிறந்தபோது,

-       ரசியாவில் மேற்கு ஐரோப்பிய முதலாளிகளும் ரசிய முதலாளிகளும் உற்பத்தி ஆலைகளை நடத்தத் தொடங்கியிருந்தார்கள். அதில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் நேர வரம்பின்றி வேலை வாங்கப்பட்டனர். அபராதங்கள், தண்டனைகள் மூலம் அவர்களது ஊதியத்தில் கணிசமான பகுதி பிடுக்கப்பட்டது. இதை எல்லாம் எதிர்த்துப் போராடுவதோ தொழிற்சங்கம் அமைப்பதோ சட்டப்படி தடை செய்யப்பட்டிருந்தது.

-       விவசாயிகள் நிலப்பிரபுக்களுக்கு கொத்தடிமைகளாக வேலை செய்ய வேண்டும் என்ற பண்ணையடிமை முறை ரசியாவில் 1860ஆம் ஆண்டு சட்டப்படி நீக்கப்பட்டிருதது. எனினும், சாட்டையால் அடிப்பது, கட்டாய உழைப்பு போன்ற நிலப்பிரபுத்துவக் கொடுமைகள் தொடர்ந்தன. அவற்றை அரசு அதிகாரிகள் நடத்தினர். நிலப்பிரபுக்களில் மிகப்பெரியவரும் பேரரசருமான ஜார் மன்னரின் முற்றதிகார ஆட்சி நடந்தது.

-       ரசியாவில் பின்பற்றப்பட்டது கிறித்தவ மதம். அதன் தலைமை அமைப்பின் பெயர் கிழக்கத்திய பழைமைவாத திருச்சபை. அது மக்களை அறியாமையிலும் மூட நம்பிக்கைகளிலும் ஆழ்த்தி வைத்திருந்தது. அவர்களது உழைப்பைத் தானும் சுரண்டியது.

-       ஜாரின் பேரரசு ரசிய மக்களை ஒடுக்குவதோடு, ரசியாவின் அண்டை நாடுகளில் இருந்த தேசிய இன மக்களை தனது ஆட்சியின் கீழ் பிடித்து வைத்திருந்தது. அதாவது, ஜாரிச ரசியா தேசிய இனங்களின் சிறைக்கூடமாக இருந்தது.

21ஆம் நூற்றாண்டில் தமிழ்நாட்டுத் (இந்தியத்) தொழிலாளர்களும் விவசாயிகளும் சிறுதொழில் செய்பவர்களும் எதிர்கொள்வதைத்தான் லெனினின் காலத்தில் ரசிய மக்கள் எதிர்கொண்டிருந்தனர். இன்னும் மோசமான நிலையில் சங்கம் சேரும் உரிமையோ பேச்சுரிமையோ இல்லாமல் தவித்தனர். நாடாளுமன்ற ஆட்சிமுறை கூட அங்கு இருக்கவில்லை. 'இம் என்றால் சிறைவாசம் ஏனென்றால் வனவாசம்' என்ற ஜார் மன்னனின் கொடுங்கோல் ஆட்சி நடந்து வந்தது.

ரசியாவின் தொழிலாளர்களும் விவசாயிகளும் படைவீரர்களும் ஒன்றுதிரண்டு இந்த ஒடுக்குமுறைகளுக்கும் பொருளாதார சுரண்டல்களுக்கும் முடிவு கட்டினர். அந்த வரலாறும் லெனினின் அரசியல் வாழ்வும் பிரிக்க முடியாதவை.

இன்றைய தமிழ்நாட்டின் இளைஞர்கள் லெனினின் எழுத்துகளில் இருந்து என்ன கற்றுக் கொள்ளலாம்?

4. ரசியாவில் அரசியல் - இந்தியாவில் அரசியல்

இன்றைக்கு நம் நாட்டைப் போலவே அன்றைய ரசியாவிலும் பல்வேறு அரசியல் கட்சிகள் இருந்தன. அவற்றின் இலட்சியங்களும் அரசியலும் பல்வேறுபட்டவை.

-       "முதலாளித்துவம் சரியானது. சமூக ஏற்றத்தாழ்வுகள் இயல்பானவை. அவைதான் சமூக நலனுக்கு உகந்தவை. அவற்றை எதிர்ப்பவர்களை ஒடுக்க வேண்டும். ஏற்றத்தாழ்வான சமூக விதிகளை மீறுபவர்களைத் தண்டிக்க வேண்டும்." இந்தக் கொள்கைகளைக் கொண்ட கட்சிகள் இருந்தன. காடேட்டுக் கட்சி இவ்வகையைச் சேர்ந்தது. நம் நாட்டில் பா.ஜ.க போன்ற கட்சிகளைக் குறிப்பிடலாம்.

-       "மத, இன, மொழிசார் அடக்குமுறைகள் தவறு; ஆனால் முதலாளித்துவம் சரியானது" என்று சொல்லும் கட்சிகள் இருந்தன. தி.மு.க, ஆம் ஆத்மி கட்சி, காங்கிரஸ் போன்றவை இவை. முதலாளித்துவத்தை எதிர்க்காத இவை சமூகப் பாகுபாடுகளையும் எதிர்க்க இயலாமல் முடங்கிப் போகின்றன.

-       நாம் தமிழர் கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி போன்றவை "நாம் நமது இனத்தின் நலன்களை முன்னிறுத்த வேண்டும். மற்ற இனத்தவரை எதிரிகளாக நிறுத்த வேண்டும்" என்கின்றன. சக மனிதர்கள்மீது வெறுப்பைத் தூண்டுகின்றன. அவை மொழி அடிப்படையில் இன அடிப்படையில் மக்களைப் பிளவுபடுத்துகின்றன. இவற்றைப் போலவே யூதர்களுக்கு மட்டுமான கட்சி ரசியாவில் இருந்தது.

-       "முதலாளித்துவத்தை எதிர்க்க வேண்டும், பழைமையான சுரண்டல் ஒடுக்குமுறைகளையும் எதிர்க்க வேண்டும். ஆனால் அதற்குப் பயங்கரவாத வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்." என்று பேசும் கட்சிகள் இருந்தன. ஜாராட்சிக்கு எதிராக பயங்கரவாத செயல்களை முன் வைத்த சோசலிஸ்ட் புரட்சியாளர்கள் கட்சி இவ்வகையைச் சேர்ந்தது. நம் நாட்டில் சில தீவிரவாத கட்சிகள் இந்த அரசியலைப் பின்பற்றுகின்றன.

-       "முதலாளித்துவத்தை ஒழித்து சமதரும சமூகத்தைக் கொண்டு வர வேண்டும். ஆனால், அவசரப்படக் கூடாது. முதலாளித்துவம் முற்றிக் கனியும் வரை காத்திருக்க வேண்டும்" என்று பேசும் கட்சிகள் இருந்தன. ரசியாவில் மென்ஷ்விக்குகளின் கட்சி இத்தகையது.

-       "இல்லை, இல்லை இன, மத, மொழி அடிப்படையிலான ஒடுக்குமுறைகளையும் மூலதனத்தின் சுரண்டலையும் ஒருங்கே எதிர்க்க வேண்டும். அதற்காக தொழிலாளர்களையும் விவசாயிகளையும் ஒன்று திரட்ட வேண்டும். சமூகத்தின் மாறிச் செல்லும் நிலைமைகளைப் பற்றி அவர்களுக்கு தொடர்ந்து கற்பிக்க வேண்டும். சுரண்டல் அமைப்புக்கு எதிராக அவர்களை அணிதிரட்ட வேண்டும்" என்ற கம்யூனிஸ்ட் கட்சி இருந்தது. அதன் பெயர் போல்ஷ்விக் கட்சி. அதன் தலைவர்களில் முதன்மையானவர் லெனின்.

5. லெனினின் அரசியல்

லெனின் தனது அரசியல் வாழ்வின் தொடக்க காலம் முதல் இறுதிவரை இந்தப் போக்குகளுக்கு மத்தியில் போராடி வந்தார். மார்க்சியம் என்ற கருத்தியலை ஆயுதமாகப் பயன்படுத்தினார்.

அகில ரசியாவின் அனைத்து மக்களையும் ஒரே சக்தியாகத் திரட்டவும் ரசியாவை துன்புறுத்தி வந்த முதலாளித்துவத்தையும் பழங்கால அடக்குமுறைகளையும் ஒரே அடியில் துடைத்தெறிவதற்காகவும் தொழிலாளர்கள் மத்தியிலும் விவசாயிகள் மத்தியிலும் பரப்புரை செய்தார், லெனின். அதற்கான நூல்களையும் அறிக்கைகளையும் தொடர்ந்து எழுதி வந்தார். கட்சி காங்கிரஸ்களிலும் மாநாடுகளிலும் கூட்டங்களிலும் உரையாற்றிவந்தார்.

நம் நாட்டிலும் முதலாளித்துவச் சுரண்டலையும் சாதி, மத அடக்குமுறைகளையும் எதிர்த்து முறியடிப்பதற்கு லெனினின் ஆக்கங்கள் உதவ முடியும். ரசியாவின் நிலைமைகளை லெனின் எவ்வாறு ஆய்வு செய்தார், அவற்றுக்கு எத்தகைய வழிமுறைகளை வகுத்தார் என்ற லெனினின் அணுகுமுறையை நாம் கற்கமுடியும். அதைப் பயன்படுத்தி நம் நாட்டு நிலைமைகளை ஆய்வு செய்து வழிமுறைகளை வகுக்க முடியும்.

மார்க்சியம் என்ற கருத்தியலைப் பயன்படுத்தி இந்திய இளைஞர்களும் பழைமைவாத கொடும் ஆட்சியையும் நவீன முதலாளித்துவ கொடும் சுரண்டலையும் ஒழித்துக் கட்ட முடியும் என்பதற்கான வழிகாட்டியாக லெனினின் எழுத்துக்கள் உள்ளன.

6. லெனினை பயில்வது - கட்சி உருவாக்கம்

பொருளாதாரச் சுரண்டலையும் சமூக ஒடுக்குமுறைகளையும் எதிர்த்தப் போராட்டங்களுக்கு என்ன தேவை? போராட்டங்கள் அரசின் வலுவான ஒடுக்குமுறைகளை எதிர்கொள்வது எப்படி? போராட்டங்களில் சமூகத்தின் எந்தெந்த பிரிவினர் ஈடுபடுகின்றனர். இவற்றை சரியாகப் புரிந்து கொள்வதும் சரியான போராட்டப் பாதையை வகுப்பதும் இன்றியமையாதது. அதனை லெனினின் செயல்பாடுகளில் இருந்து கற்றுக் கொள்ள முடியும்.

லெனின், 1893 முதல் 1903 வரை மார்க்சிய அடிப்படையிலான ஒரு தொழிலாளி வர்க்கக் கட்சியை உருவாக்குவதற்கான செயல்பாடுகளில் ஈடுபட்டிருந்தார். இதற்கு முத்தாய்ப்பான ஆக்கமாக லெனின் எழுதி வெளியிட்ட என்ன செய்ய வேண்டும் – நம் இயக்கத்தின் சூடேறிய சிக்கல்கள் தேர்வு நூல்களில் இடம்பெறுகிறது. மேலும் மார்க்சியம் பற்றிய அடிப்படைப் புரிதல்களை வழங்கும் ஆக்கங்கள் தொழிலாளர்களுக்கான அரசியலின் கருத்தியல் அடித்தளத்தைக் கற்றுத் தருகின்றன.

ரசிய கம்யூனிஸ்ட் கட்சியின் (அப்போது அதன் பெயர் ரசிய சமூக ஜனநாயகத் தொழிலாளர் கட்சி) இரண்டாவது காங்கிரஸ் 1903ஆம் ஆண்டு நடைபெற்றது. அதில் கட்சியின் அரசியல் அமைப்புக் கொள்கையின் சரியான பாதையை லெனின் முன்வைத்தார். அம்மாநாட்டில் கட்சிக்குள் நிலவிய இரண்டு போக்குகள் பிளவுபட்டன. லெனின் தலைமையிலான பெரும்பான்மையினரின் கட்சி போல்ஷ்விக்குகள் என்று அழைக்கப்பட்டது. அதை எதிர்த்து முதலாளித்துவ ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தத் தரப்பு மென்ஷ்விக்குகள் என்று அழைக்கப்பட்டது. லெனின் எழுதிய ஓரடி முன்னே, ஈரடி பின்னே என்ற ஆக்கம் ஒரு தொழிலாளர் கட்சியின் ஒற்றுமை எந்த அடிப்படைகளைக் கொண்டிருக்க வேண்டும், எந்தச் சிக்கல்களில் இணக்கம் கூடாது என்பதைத் துல்லியமாக விளக்குகிறது.

7. லெனினை பயில்வது - புரட்சி எழுச்சிகள்

1905ஆம் ஆண்டு ரசியாவில் ஜாராட்சியின் கொடுமைகளையும் சுரண்டலையும் எதிர்த்த போராட்டங்கள் வெடித்தன. இதில் கம்யூனிஸ்டுகளின் செயலுத்திகளைப் பற்றி லெனின் எழுதிய ஆக்கங்கள் லெனின் தேர்வு நூல்கள் தொகுதி 3இல் இடம்பெறுகின்றன. புரட்சி எழுச்சி ஒடுக்கப்பட்டதைத் தொடர்ந்த ஆண்டுகளில் வலுவான கட்சியின் தேவை, தேசிய இனச் சிக்கல் இவற்றைப் பற்றி லெனின் எழுதினார். இவை தொழிலாளர்களின் அரசியல் இயக்கம் அடக்குமுறை காலத்தில் சரியான கொள்கை வழியில் பயணிப்பதை உறுதி செய்வதற்கு வழிகாட்டியாக உள்ளன.

1914ஆம் ஆண்டு முதல் உலகப் போர் வெடித்தது. ஜாராட்சியின் ரசியா, ஐரோப்பாவின் முன்னேறிய நாடுகளுக்கிடையேயான போரில் இணைந்தது; கோடிக்கணக்கான மக்கள் போரில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்தக் கொலைகாரப் போரின் பொருளாதார அடிப்படையை விளக்குகிறது லெனினின் ஏகாதிபத்தியம் – முதலாளித்துவத்தின் உச்சக்கட்டம் என்ற தன்னிகரற்ற ஆக்கம். இன்றைய உலகில் போர்களையும் ஏகாதிபத்தியச் சுரண்டலையும் எதிர்ப்பதற்கான அரசியல் பொருளாதாரக் கோட்பாட்டு அடித்தளத்தை அது வழங்குகிறது.

1917ஆம் ஆண்டு மார்ச் மாதம், ரசியத் தொழிலாளர்களும் விவசாயிகளும் குறிப்பாக பெண்கள் "உணவு சமாதானம் நிலம்" என்ற கோரிக்கைகளை முன்வைத்து கிளர்ந்தெழுந்தனர். ஜாராட்சி வீழ்த்தப்பட்டது. முதலாளிகளின் இடைக்கால அரசாங்கம் அதிகாரத்துக்கு வந்தது. இணை அதிகார அமைப்பாக தொழிலாளர் விவசாயிகள் படைவீரர்களின் சோவியத்துகள் உருவெடுத்தன. புரட்சியின் தன்மையைப் பற்றியும் பாட்டாளி வர்க்கத்தின் கடமைகள் பற்றியும் லெனின் எழுதிய ஆக்கங்களும் முதலாளி வர்க்கத்தின் ஆட்சியை ஏற்றுக்கொள்வது தொழிலாளர் விவசாயிகளின் விடுதலையை உறுதி செய்யாது என்பதை விளக்கும் கருத்தியல் போராட்டமும் இன்றைய தொழிலாளி வர்க்க இயக்கத்துக்கு வழிகாட்டியாக உள்ளன.

1917ஆம் ஆண்டு ஜனநாயகப் புரட்சிக்குப் பிறகு, ரசியாவில் முதலாளிகளின் இடைக்கால அரசாங்கம் உருவானது. மென்ஷ்விக்குகளும் சோசலிஸ்ட் புரட்சியாளர்களும் ஆதரித்த அந்த அரசு போரை நிறுத்தவில்லை; நிலப்பிரபுக்களின் நிலங்களை விவசாயிகள் கைப்பற்றிப் பிரித்துக் கொள்வதை வன்முறை மூலம் தடுத்து நிறுத்தியது. இடைக்கால அரசாங்கத்தால் உணவு நிலைமையை மேம்படுத்த இயலவில்லை. சோவியத்துகளுக்கே அரசியல் அதிகாரம் என லெனின் நடத்திய கோட்பாட்டுப் போராட்டமும் (அரசும் புரட்சியும் என்ற நூல்) அரசியல் போராட்டங்களும் முதன்மையானவை. கொந்தளிப்பான, சிக்கலான ஒரு சூழலில் தொழிலாளி வர்க்கத்தின் நலனைப் பிசகின்றி உறுதிச் செய்வது எப்படி என்பதற்கான வழிகாட்டியாக அவை விளங்குகின்றன.

8. லெனினை பயில்வது - சோசலிசத்தைக் கட்டுதல்

1917ஆம் ஆண்டு நவம்பர் 7ஆம் நாள் தொழிலாளர்கள் விவசாயிகள் படைவீரர்களின் புரட்சிஅலை இடைக்கால அரசாங்கத்தைத் தூக்கிஎறிந்தது; சோவியத்துகளின் அரசாங்கத்தை நிறுவியது.

நவம்பர் 7 அன்று ஆட்சி அதிகாரம் கைப்பற்றப்பட்டது பற்றி லெனின் வெளியிட்ட பிரகடனம் உலக வரலாற்று முதன்மை வாய்ந்தது

அரசு அதிகாரம் தொழிலாளர்கள், படையாளர்கள் பிரதிநிதிகளின் பெட்ரோகிராட் சோவியத்தின் அமைப்பான புரட்சிகர இராணுவக் குழுவின் கைகளுக்கு மாற்றப்பட்டுவிட்டது.

ஜனநாயக சமாதானத்தை உடனடியாக வழங்குவது, நிலப்பிரபுத்துவ நிலவுடைமை உரிமையை ஒழிப்பது, உற்பத்திமீது தொழிலாளர்களின் நெறியாண்மை, சோவியத் ஆட்சி அதிகாரத்தை நிறுவுவது - என்பது உறுதியாக நிலைநாட்டப்பட்டுவிட்டது.

தொழிலாளர்கள், படையாளிகள், விவசாயிகளின் புரட்சி நீடூழி வாழ்க!3

புதிய அரசாங்கம் எதிர்கொள்ளும் சவால்களைக் கையாள்வது தொடர்பாக சோவியத்துகளின் அகில ரசியக் காங்கிரஸ்களிலும் போல்ஷ்விக் கட்சியின் மாநாடுகளிலும் பத்திரிகைகளிலும் லெனின் பங்களிப்புகளை வழங்கினார். உள்நாட்டில் பகைமை வர்க்கங்கள் தொடுத்த தாக்குதல்களை எதிர்கொள்வது, ஏகாதிபத்தியப் போரில் இருந்து ரசியாவை விடுவிப்பது என்று பல முனைகளில் ஏற்பட்ட சிக்கல்களை சோவியத் அரசாங்கம் வென்று சமாளித்தது பற்றி கற்றுக் கொள்வதற்கு இவை உதவுகின்றன.

தொழிலாளர் விவசாயிகள் படைவீரர்கள் சோவியத்துகளின் புதிய அரசாங்கம் உள்நாட்டில் பொருளாதாரத்தை ஒழுங்குபடுத்த நடவடிக்கைகள் எடுத்தது; வெளிநாட்டில் ஜெர்மன் ஏகாதிபத்தியத்துடன் சமாதான உடன்படிக்கை செய்துகொண்டு போரை நிறுத்த முயற்சிகளை எடுத்தது. சோவியத் அரசாங்கத்தின் உடனடி பணிகள், "இடதுசாரி" சிறுபிள்ளைத்தனம் – குட்டி முதலாளித்துவ மனோபாவம், அமெரிக்கத் தொழிலாளர்களுக்குக் கடிதம் முதலான லெனினின் ஆக்கங்கள் தொழிலாளர்கள், விவசாயிகளுக்கான ஓர் அரசாங்கம் எப்படி செயல்பட வேண்டும், எவ்வாறு சிந்திக்க வேண்டும் என்று வழிகாட்டுகின்றன.

1919இல் சோவியத் ரசியாவின் மீதான தாக்குதல்கள் தீவிரமடைந்தன. ஐரோப்பிய நாடுகளில் புரட்சி எழுச்சிகள் பின்னடைவைச் சந்தித்தன. சுரண்டல் வர்க்கத்தினரின் சார்பாகத் தொடுக்கப்பட்ட உள்நாட்டுப் போரை எதிர்த்துச் சமாளிக்க வேண்டியிருந்தது. உற்பத்தியை அதிகரித்து ஒழுங்குபடுத்தி மேம்படுத்தும் பணி, சோவியத் அரசை எதிர்கொண்டது. லெனினின் ஆக்கங்கள், உள்நாட்டு மக்கள்திரளினரையும் சர்வதேச தொழிலாளி வர்க்க இயக்கத்தையும் அணிதிரட்டின. கம்யூனிஸ்ட் கட்சியின் உள்நாட்டு வெளிநாட்டுப் பகைவர்களை எதிர்த்து உழைக்கும் வர்க்கங்களின் உள்நாட்டு வெளிநாட்டு கூட்டணியை ஏற்படுத்துவது பற்றிய புரிதலை அவை வழங்குகின்றன.

1920-களில் ரசியாவில் தொழிலாளர் விவசாயிகள் படைவீரர்களின் சோவியத்து அரசாங்கம் உள்நாட்டு வெளிநாட்டு எதிரிகளை முறியடித்தது; சர்வதேச தொழிலாளி வர்க்க இயக்கத்தை வலுப்படுத்துவதற்கான அடிப்படைகளை உருவாக்கியது. லெனின் எழுதிய இடதுசாரி கம்யூனிசம் – இளம் பருவக் கோளாறு என்ற நூல், ரசியப் புரட்சிக்குப் பிந்தைய உலகில் பல்வேறு நாடுகளின் தொழிலாளி வர்க்கக் கட்சிகளின் செயலுத்திகளைப் பேசுகிறது. ஒவ்வொரு புதிய நிலைமையிலும் தொழிலாளி வர்க்க இயக்கம் தனது செயல்வழியை முடிவுசெய்வதற்கான வழிகாட்டியாக அது உள்ளது.

பின்தங்கிய, சிறுவுடைமையாளர்கள் பெரும்பான்மையாக இருந்த ரசியாவில் சோசலிசத்தைக் கட்டுவது தொடர்பான சிக்கல்களை லெனின் பகுப்பாய்வு செய்து வழிகாட்டினார். இளைஞர் கழகங்களின் பணிகள், பாட்டாளி வர்க்கப் பண்பாடு குறித்து, தொழிற்சங்கங்களின் கடமைகள் – அவற்றை நிறைவேற்றுவதற்கான முறைகள் ஆகிய ஆக்கங்களுடன் பண்ட வரி குறித்து என்ற கட்டுரை புதிய பொருளாதாரக் கொள்கைக்கு அடித்தளமான ஆக்கமாக இருந்தது. சோவியத் அரசு தனது அரசியல் வெற்றிகளைப் பயன்படுத்திப் பொருளாதாரத் துறையில் பின்வாங்கும் உத்தியைப் பயன்படுத்த வேண்டும், அதன் மூலம் சோசலிசத்தை நோக்கி மாறிச் செல்வதற்கான அடித்தளத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்று லெனின் அதில் வாதிடுகிறார்.

தொழிலாளர்கள், விவசாயிகளின் சோவியத் அரசாங்கம் தனது நான்காம் ஆண்டில் (1921-22) அன்னிய முதலாளித்துவ நாடுகளுடன் உறவுகளை ஏற்படுத்துவதற்கான தயாரிப்புகளைச் செய்தது. உலக நாடுகளின் கம்யூனிஸ்ட் கட்சிகளின் அகிலத்தின் காங்கிரஸ்களைக் கூட்டியது. உடல்நலம் தளர்ந்து வந்த லெனின் ரசிய மக்கள் எதிர்கொண்ட பல்வேறு சிக்கல்கள் தொடர்பாக பகுப்பாய்வுகளையும் பரிந்துரைகளையும் தொடர்ந்து முன்வைத்தார். அவரது பங்களிப்புகள் ஒரு மகத்தான தலைவரின் சளைக்காத உழைப்பைக் காட்டுகின்றன.

9. ரசிய மக்களின் சாதனை

லெனினின் தலைமையில் நடந்த நவம்பர் புரட்சி ரசியாவின் வரலாற்றை மட்டுமின்றி உலக வரலாற்றின் போக்கையே மாற்றியமைத்தது.

அனைவருக்கும் உணவும் கல்வியும் மருத்துவமும் வேலை வாய்ப்பும் கிடைப்பதை சோவியத் அரசாங்கம் உறுதி செய்தது. வயது வந்த ஆண், பெண் அனைவருக்கும் வாக்குரிமை வழங்கியது. உற்பத்தியையும் அறிவியல் தொழில்நுட்பத்தையும் திட்டமிட்டு வளர்த்தது. பெண்கள் மீதான பழங்கால அடக்குமுறைகளை துடைத்தெறிந்தது. சமூக உற்பத்தியில் பெண்களுக்கு சமபங்கு வழங்குவதை உறுதிசெய்தது. காதல், திருமணம், குழந்தைப் பேறு இவற்றில் ஆணுக்கும் பெண்ணுக்கும் சரிநிகரான உரிமைகளை வழங்கியது. தேசிய இனங்களின் மொழியிலும் பண்பாட்டிலும் முற்போக்குக் கூறுகளை பாதுகாத்தது. மத நிறுவனங்கள் உட்பட அனைத்தின் பிற்போக்குக் கூறுகளை தடை செய்தது.

உலக அளவில் ரசியப் புரட்சியின் தாக்கமும் சோவியத் அரசின் ஆதரவும் தேச விடுதலைப் போராட்டங்களைத் தூண்டி விட்டன. இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் கம்யூனிஸ்ட் கட்சிகள் தொடங்கப்பட்டன. அன்னியர் ஆட்சிக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்தன. நேரடி காலனிய ஆட்சி அதிகாரங்கள் நீக்கப்பட்டன.

மார்க்சியம் லெனினியம் குறித்த ஆக்கங்களையும் இன்னும் ஏராளமான அறிவியல் தொழில்நுட்ப நூல்களையும் காலத்தால் அழியாத அமர காவியங்களான ரசிய இலக்கியங்களையும் சோவியத் அரசாங்கம் அச்சிட்டு வெளியிட்டது. அவற்றை 100 க்கும் மேலான மொழிகளில் பதிப்பித்து அச்சிட்டு அரைக் கோப்பை தேத்தண்ணியின் விலையில் உலக நாடுகள் அனைத்திலும் விற்றது.

10. கம்யூனிசத்தின் இன்றைய நிலை

லெனின் உருவாக்கிய சோவியத் ஆட்சி அதிகாரம் ரசியாவிலும் பிற சோவியத் குடியரசுகளிலும் 1980-களின் இறுதியில் வீழ்ந்து விட்டது. அந்த ஆட்சியதிகாரத்தின் மரபுகள் அந்த நாட்டு மக்களிடையே தொடர்ந்து நீடிக்கின்றன. சீனா, வியட்நாம், கியூபா, லாவோஸ், வடகொரியா போன்ற நாடுகளில் கம்யூனிஸ்ட் கட்சிகள் இருபதாம் நூற்றாண்டில் அதிகாரத்தைப் பிடித்திருந்தன. அவை பழைமைவாத கொடுங்கோன்மைகளை ஒழித்துக் கட்டியுள்ளன; உலக முதலாளித்துவத்தை எதிர்த்து போராட்டத்தை நடத்தி வருகின்றன.

நம் நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சிகளும் தொழிற்சங்கங்களும் பிற்போக்கு பழைமைவாத ஒடுக்குமுறைகளையும் மூலதனத்தின் சுரண்டலையும் எதிர்த்து போராடி வருகின்றன.

அதிகரித்துக் கொண்டே செல்லும் பொருளாதார நெருக்கடியும் அதனால் தீவிரமடையும் சமூக முரண்பாடுகளும் அவற்றை எதிர்கொள்ள ஆளும் வர்க்கம் கட்டவிழ்த்து விடும் அரசு ஒடுக்குமுறைகளும் அவற்றுக்கான தீர்வை நோக்கிய போராட்டத்தை முடுக்கி விடுகின்றன. சிக்கல்களை ஆய்வு செய்வதற்கும் அதனை நடைமுறையோடு இணைப்பதற்கும் அதன்மூலம் நாட்டின் முற்போக்கு எதிர்காலத்தை உறுதிசெய்வதற்கும் தொழிலாளர்களுக்கும் இளைஞர்களுக்கும் விவசாயிகளுக்கும் சிறுதொழில் செய்பவர்களுக்கும் வழிகாட்டும் அரசியல் இலக்கியத்தின் தேவை இன்று முன்பு எப்போதையும் விட அதிகமாக உள்ளது.

அதனை வழங்கும் லெனின் தேர்வு நூல்கள் 12 தொகுதிகளில் சரியான நேரத்தில் சரியான வடிவில் தமிழ் வாசகர்களின் அரசியல் நடைமுறை அறிவை மேம்படுத்திக் கொள்ள உதவும் வகையில் வெளியாகிறது.

குறிப்புகள்

1      மார்க்ஸ், மூலதனம் முதல் தொகுதி, பக்்கம் 26

2      மூலதனம் தொகுதி 1, பக்்கம் 868

3      ரசியாவின் குடிமக்களுக்கு, லெனின் தேர்வு நூல்கள், தொகுதி 7, பக்்கம் 5

- மா.சிவகுமார், லெனின் தேர்வு நூல்கள் பதிப்புக் குழு உறுப்பினர்.