ஆச்சரியங்கள் மட்டுமே நிறைந்த புரட்சிகர நாள் நவம்பர் 7. உலக அளவில் ஆட்சி மாற்றங்களும், ராணுவ ஆட்சிகளும் புதிதல்ல ஆனால் ரஷ்யாவில் நடந்த இந்தப் புரட்சி ஏன் உலகமெங்கும் பேசப்பட்டது? இன்றும் மாமேதை லெனினும் சோவியத் யூனியனும் உலகில் பல்வேறு புரட்சிகர இயக்கங்களின் முன்னோடியாகத் திகழ்வது ஏன்?

lenin 350இன்றைய காலகட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகளைப் பல்வேறு தரப்பினரும் விமர்சனம் செய்கின்றனர். அதில் குறிப்பாக எண்ணிக்கையில் குறைவான கட்சி என்ற விமர்சனம் தொடர்ச்சியாக வரும். எண்ணிக்கையில் ஏன் குறைவு, எதனால் குறைவு என்பது எல்லாம் விவாதிக்கத் தேவையில்லை, விவாதித்து புரிய வைத்தாலும் இவர்கள் புரிந்து கொள்ளப் போவதும் இல்லை. ஆனால் எண்ணிக்கையில் குறைவாக இருந்தால் மாற்றத்தை எப்படி நிகழ்த்த முடியும் என்ற கேள்விக்குப் பதில் ரஷ்யாவில் லெனின் நடத்திய புரட்சி. சுமார் 80% விவசாயிகளும் 20% தொழிலாளர்களும் கொண்டதுதான் அன்றைய ரஷ்யா. வெறும் 20% தொழிலாளிகளை வைத்து புரட்சிப் பாதையில் தைரியமாக நடக்க முடியாது என்று உணர்ந்த லெனின் வகுத்த யுக்தி மிக முக்கியமானது.

80% விவசாயிகளின் பிள்ளைகள்தான் ஜார் மன்னனின் ராணுவப் படையில் பணியாற்றி வந்தனர், இதைத் தெளிவாகப் புரிந்து கொண்டு விவசாயிகளையும் தொழிலாளிகளையும், விவசாயிகளின் பிள்ளைகளையும் ஒன்றிணைத்து அந்த புரட்சிப் பாதையை வழி வகுத்தார். அதுதான் உண்மையான கம்யூனிஸ்டுகளின் வேலை. உலக மக்களில் கம்யூனிஸ்ட்களின் எண்ணிக்கை என்றுமே சிறுபான்மைதான். ஆனால் புரட்சியை வழிநடத்துவதும் அதைத் தலைமை தாங்குவதும் அதற்கான பலத்தை அனைத்துத் தரப்பிலிருந்து ஒன்றிணைத்து ஒன்றாக செயல்பட்டு வெற்றி பெறுவதும் அவசியம்.

முதலாளித்துவமும், ஏகாதிபத்தியமும் உலகின் வளர்ச்சிக்கு இரண்டு கண்கள் என்று நம்புபவர்களுக்கு இந்த ரஷ்யப் புரட்சி ஒரு சான்றுதான். அன்றைய காலகட்டத்தில் பொருளாதாரத்திலும், வளர்ச்சியிலும் பின் தங்கியிருந்த ரஷ்யா, லெனின் தலைமை தாங்கிய புரட்சியில் பங்கேற்று அங்கு நிலவி வந்த மக்களுக்கு எதிரான ஆட்சியை வேரோடு பிடுங்கி எறிந்து தனக்கான பாட்டாளி மக்களின் ஆட்சியை நிறுவியது. அந்தப் புரட்சியின் வெற்றி அடுத்த அரை நூற்றாண்டுகளில் பல்வேறு நாடுகளில் புரட்சியை நடத்தவும் அதில் பெரும்பான்மையான நாடுகள் வெல்லவும் ஊக்குவித்தது.

இங்கு பலரும் கேட்கும் கேள்வி, எதற்காக வேறு நாட்டின் அரசியல் சிந்தனைகளை நம் நாட்டில் கொண்டாடுகிறோம் என்பது. அதற்கான பதிலும் சோவியத் யூனியன் நமக்குத் தந்துள்ளது. ஜெர்மனியில் வடிவமைக்கப்பட்ட சிந்தனை உலகளாவிய தொழிலாளிகளுக்கானது. அதை தனது நாட்டுக்கு ஏற்றவாறு வடிவமைத்து அங்கு மாபெரும் புரட்சியை நடத்தி தன் நாட்டு மக்களுக்காக அவர்களுக்கு ஏற்றவாறு ஆட்சியை நிறுவியது மட்டும் அல்லாமல், அதைத் தக்க வைக்கவும் செய்தவர் மாமேதை லெனின். பின் நாட்களில் உலகத்தின் அனைத்து முதலாளித்துவத்தின் ஏவல்கள் இந்த வெற்றிகர ஆட்சியை வீழ்த்த சதி செய்தது, சோவியத் யூனியனும் வீழ்ச்சியைச் சந்தித்தது. அதன் தொடர்ச்சியாக முதலாளித்துவம் உலகமெங்கும் தன் பலத்தை நிறுவி தொழிலாளிகள் மீது பல்வேறு தடுப்புகளைச் சுமத்தி தன் கைப்பாவையாக வைத்திருக்கிறது.

என்னதான் முதலாளித்துவமும், ஏகாதிபத்தியமும் உலகமெங்கும் பரவி தொழிலாளிகளைச் சுரண்டினாலும் தொழிலாளிகள் ஒன்று திரண்டால் முதலாளித்துவம் தகர்த்தெறியப்படும் என்பது உறுதி. இன்று கொடூர பலத்தில் உலகமெங்கும் தன் ஆதிக்கத்தைச் செலுத்தும் முதலாளித்துவம் சோசியலிசத்தையும், கம்யூனிசத்தையும், கண்டு பயப்படுகிறது என்றால் அது இந்த சோவியத் யூனியன் புரட்சியின் தாக்கம் தான்.

காரல் மார்க்ஸ் வடிவமைத்த சிந்தனை வெற்றி பெறும் என்பதை உறுதி செய்தது சோவியத் யூனியன். உலகமெங்கும் உள்ள தொழிலாளிகளும் ஒடுக்கப்பட்ட சுரண்டப்பட்ட மக்களின் விடுதலையைக் கருத்தில் கொண்ட அனைத்து மக்களும் இந்த நாளை எந்தப் பண்டிகையையும் விட பெரிய அளவு கொண்டாட வேண்டும். மார்க்சிய லெனினியக் கோட்பாடுகள் இந்த மானுடத்தின் விடுதலைக்கான கோட்பாடுகள்.

- நிகில் தேவ்