modi and amit shahஉலகளவில் கொரானா நோய்த் தொற்று மானுடத்தை உலுக்கி வருகிறது. சமூகப் பொருளாதாரத் திட்டங்களை விரைந்து நிறைவேற்றி வளர்ந்த நாடுகள் குறைந்த வளர்ச்சி யைக் காணுகிற வளர்கின்ற நாடுகள் என்ற வேறுபாடுகள் தொடர்ந்த வண்ணமே உள்ளன.

வளர்ந்த நாடுகள் வளர்கின்ற நாடுகளுக்குப் போதிய நிதி தொழில் நுட்ப ஆதாரங்களை வழங்க வேண்டும் என 2000 புத்தாண்டு குறிக்கோள்களாக அறிவிக்கப்பட்டன. உலகில் உள்ள நாடுகள் இந்த அறிவிப்பை மதித்து ஏற்றுக் கொண்டு வளர்கின்ற நாடுகளுக்கு நிதி பல தொழில்நுட்ப வசதிகளை வழங்க வேண்டும் என வலியுறுத் தப்பட்டது.

அரசியல் ரீதியாக உலகில் ஐந்து நாடுகள் ஐக்கிய நாடுகள் மன்றத்தின் பாதுகாப்பு அவையில் இடம் பெற்றுள்ளன. இந்த நாடுகள் ஐக்கிய நாடுகள் மன்றத்தின் தனித்த முத்திரையோடு அடையாளத்தோடு ஆடிய ஆட்டங்கள் எத்தனை. பாதுகாப்பு அவையில் இடம் பெற்ற அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, பிரான்சு, சீனா நாடுகளில்தான் நிதி வளங்களும் தொழில் நுட்பத் திறன்களும் அதிக அளவிற்கு இராணுவத் தளவாடங்களை உற்பத்தி செய்கிற தொழிற்சாலைகளும் இருக்கின்றன.

இந்த நாடுகளை ஏகாதிபத்திய நாடுகள் எனப் பல அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். மேற்கூறிய ஐந்து நாடுகள்தான் உலக நாடுகளுக்கு இராணுவத் தளவாடங்களை ஏற்றுமதி செய்கின்றன. எனவேதான் நோபல் பரிசுப் பெற்ற அமெர்தியா சென் போன்றவர்கள் இந்த நாடுகளை மரண வணிகர்கள் (Merchants of Death) எனத் தனது நூலில் (ArgumentativeIndian) மேற்கோள் காட்டியுள்ளார்.

மேற்குறிப்பிட்ட மரண வணிகர்களாகச் செயல்படுகிற இந்த நாடுகளையும் கொடிய கொரானா நோய்த் தாக்கி அந்நாடுகளை மரண பயத்தில் வைத்துள்ளது என்பது இயற்கையின் விளையாட்டோ என்று எண்ணத் தோன்றுகிறது. சீனாவில்தான் இந்த நோய்த் தொற்று தொடங்கியது. உலகளவில் ஆகஸ்ட் 13ஆம் நாள் புள்ளிவிவரப்படி இரண்டு கோடியே 17 இலட்சம் மக்களைத் தாக்கியுள்ளது. 7 இலட்சத்து 30 ஆயிரம் மக்கள் மடிந்துள்ளனர்.

இத்தகைய புதிய தாக்குதல் ஒரு நோய்த் தொற்றால் ஏற்படும் என 2020ஆம் ஆண்டு தொடக்கத்தில் யாரும் நினைத்துப் பார்க்கவில்லை. இந்த நோய்த் தொற்றுக்கு அஞ்சி உலகளவில் இயங்கி வந்த பல பெருந்தொழில்கள் நிறுத்தப்பட்டன. அனைத்துப் போக்குவரத்துகளும் பல நாடுகளில் முடக்கப்பட்டன. இதன் விளைவாக பூமியிலிருந்து வெளிப்படும் கரியமிலவாயு வானத்து எல்லையைத் தாக்கவில்லை. இதன் காரணமாக நான்கு மாதங்களிலேயே சுற்றுச்சூழலின் பாதுகாப்பு பெருமளவில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

சுவாசிக்கும் காற்றில் மாசு இல்லை. நீரில் மாசு கலக்கவில்லை. நிலத்தில் நோய்களை உருவாக்கும் கழிவுகள் கொட்டப்படுவது நின்றுள்ளது. எனவே கொரானா நோய்த் தொற்று சொல்லும் முதல் பாடம் என்ன? 

வெறும் வளர்ச்சி வளர்ச்சி எனக் கூக்குரலிட்டுக் கொண்டே இயற்கை வளங்களை நீர் ஆதாரங்களை அழிக்கின்ற போக்கினை உலகளவில் தடுக்க வேண்டும் என்ற பாடத்தை கொரானா கற்பித்துள்ளது.

சுற்றுச்சூழல் பாதுகாப்புத் தொடர்பாக வளர்ந்த நாடுகள் எடுக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகளை அமெரிக்கா முற்றிலும் புறந்தள்ளி வருகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் இன்று வரை கையொப்பமிடவில்லை. உலகிலேயே கொரானா நோய்த் தொற்றால் இறப்பவர்களின் எண்ணிக்கை அமெரிக்காவில்தான் அதிகளவில் உள்ளது.

அமெரிக்காவின் குடியரசுத் தலைவர் டிரம்ப் இதை முற்றிலும் உணராமல் ஓர் அரசியல் கோமாளி போலச் செயல்படுகிறார். மரண எண்ணிக்கையில் உலகளவில் மூன்றாம் இடத்தில் இருக்கின்ற இந்தியாவிலும் அரசியல் கோமாளித்தனத்திற்கு அளவே இல்லை. சான்றாக கொரானா எனும் கொடிய நோய் வழங்கிவரும் பாடத்தை உணராமல் 2020 சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தை மோடி அரசு தான்தோன்றித்தனமாக அறிவித்துள்ளது. 

எவ்விதத் தடையுமின்றி முதலாளித்துவ பன்னாட்டு உள்நாட்டு பெரு நிறுவனங்கள் இயற்கை வளங்களைத் தொழில் வளர்ச்சி எனும் போர்வையில் சூறையாட இச்சட்டம் வழிவகுக்கிறது. அமெரிக்காவிலே பல மாநிலங்கள் குடியரசுத் தலைவர் டிரம்பினுடைய பல அறிவிப்புகளை ஏற்றுக் கொள்ளவில்லை.

மாநிலங்களே தங்களுக்கான சுற்றுச்சூழல் பாதுகாப்புச் செயல்திட்டங்களைத் தீட்டி நடைமுறைப்படுத்தி வருகின்றன. உண்மையான கூட்டாட்சி இயலைப் பின்பற்றி வருகின்ற நாடுகளில் ஒன்றல்லவா. நியுயார்க் நகரின் மேயர் டிரம்ப் அவர்களைப் பார்த்து உங்களது அறிவிப்புகள் செயல்பாடுகள் முன்னுக்கு முரணான அறிக்கைகள் இந்த கொரானா நோய்த் தொற்றின் தாக்கத்தை அதிகரிக்கவே வழிவகுத்துவிட்டது எனக் குறிப்பிட்டார்.

டெக்சாஸ் மாநிலத்தைச் சார்ந்த ஒரு உயர் காவல் அதிகாரி உங்கள் (டிரம்ப்) வாயை மூடிக்கொண்டு அமைதியாக இருங்கள் என்று கூறினார். ஆனால் இந்தியாவில் நடப்பது என்ன? கொரானா நோய்த் தொற்றுக் காலத்திலும் சிறிதளவும் பொறுப்பின்றி பொருளாதாரம் பெருமளவில் சரிவதைக் கண்டு மோடி கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.

இத்தகையப் பின்னணியில் ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டு வளர்ச்சி அமைப்பு 2020ஆம் ஆண்டு மானுட மேம்பாட்டு அறிக்கையில் (Human Development Report 2020) இக்காலக்கட்டத்திற்குத் தேவையான செயல்திட்டங்களை அறிவித்துள்ளது. இந்த அறிக்கையில் நாம் இயற்கையோடு கொண்ட உறவைச் சீர் செய்ய வேண்டும். எதிர்கால மக்களினுடைய நலன் கருதி இப்புவியிடம் நல்லுறவைப் பேணுகிற அணுகுமுறையைப் பின்பற்ற வேண்டும்.

இப்புவியிலிருந்து வேறுபட்டு மக்களின் எதிர்காலத்தையும் முன்னேற்றத்தையும் பற்றி நினைத்துப் பார்க்க முற்படுவது ஓர் அறிவார்ந்த செயலாக இருக்க முடியாது. நாம் புவியோடு புதைந்து இருக்கிறோம். இதை மறுப்பது எதிர்கால தலைமுறைக்குத் தீமை விளைவிப்பது மட்டுமல்லாமல் ஏற்கெனவே அழிந்து கொண்டிருக்கும் மக்களின் வாழ்க்கையை அழிவுப் பாதைக்கு எடுத்துச் சென்றுவிடும்.

மானுட மேம்பாட்டு அறிக்கை 2020இல் மூன்று அடிப்படைக் கூறுகள் முன்னிலைப் படுத்தப்பட்டுள்ளன.

  1. ஏற்கெனவே வறுமை ஒழிப்பு, குடிநீர் வசதி, போதிய சுகாதார வசதி கல்வி மேம்பாடு பெண்கள் நலன் வேலைவாய்ப்பு, கருவுற்ற தாய்மார்களுக்கும் பிறந்த குழந்தைகளுக்கும் ஊட்டச்சத்து அளித்தல், போன்ற பல்வேறு மானுட மேம்பாட்டுக் குறியீடுகளை 29 உலக மானுட மேம்பாட்டு அறிக்கைகள் எடுத்துக்காட்டியுள்ளன. இந்த முதன்மையான காரணிகளின் அடிப்படையில் உலகில் உள்ள பெரும்பாலான மக்கள் வறுமைக்கோட்டிற்குக் கீழ் வாடுகின்றனர். ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில்தான் இந்த மக்கள் தொகை எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது. தற்போது கொரானா நோய்த் தொற்றால் வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளைக் கூடப் பெறாமலிருக்கும் இந்த மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு சமத்துவக் கண்ணாடி கொண்டு காணுங்கள் என்று உலக நாடுகளுக்கு இவ்வறிக்கை வேண்டுகோள் விடுத்துள்ளது.
  2. பொருளாதார வளர்ச்சியையும் பொதுச் சுகாதாரத்தையும் ஒருங்கிணைத்து மக்களின் வாழக்கைத் தரத்தை உயர்த்த வேண்டும். மேலும் எதிர்காலத்தில் உருவாகக் கூடிய அதிர்ச்சிகளை ஓரளவிற்குக் குறைக்க இது வழிவகுக்கும்.
  3. கொரானா நோய்த்தொற்று காலத்தில் ஒரு பன்முகத் தன்மையுடன் கூடிய அணுகுமுறையைப் பின்பற்ற வேண்டும். காரணம் இந்நோய் பல நிலைகளில் பல தளங்களில் மக்களைத் தாக்கிக் கொண்டு வருகிறது. ஏற்கெனவே பொருளாதார வளர்ச்சிக்காக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற துறை சார்ந்த அணுகுமுறைகளை மாற்றி பொது நிதி ஆதாரத்தையும் பொதுச் சுகாதாரத்தையும் சமூகக் கட்டமைப்பையும் உயர்த்துவதற்குப் பயன்படுத்த வேண்டும்.

இந்த கொரானா நோய்த் தாக்குதலுக்குப் பிறகு கடந்த நான்கு மாதங்களில் உலகின் 14 நாடுகளில் ஐக்கிய நாடுகள் மன்றத்தால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் மக்கள் தெரிவித்த கருத்துகள் அடிப்படையில்தான் மேற்கூறிய கருத்துருக்களை ஐக்கிய நாடுகள் அமைப்பு மானுட மேம்பாட்டு அறிக்கையில் இணைத்துள்ளது. இந்த ஆய்வில் 71 விழுக்காடு மக்கள் சுற்றுச்சூழல் சீரழிவுதான் இந்த நோய்க்கான காரணங்களில் ஒன்றாக எடுத்துக் கொள்ள வேண்டும் எனக் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

கொரானா நோய்த் தொற்றைத் தடுப்பதற்கு மேற்கூறிய கருத்துருக்களின் அடிப்படையில் ஒன்றிய அரசும் மாநில அரசுகளும் செயல்படுமா? என்பதே நம்முன் உள்ள முதன்மையான பிரச்சினையாகும். சீனாவைப் போன்றோ மற்ற நாடுகளைப் போன்றோ இந்தியாவின் சமூக பொருளாதார அரசியல் தன்மைகள் முற்றிலும் வேறுபடுகின்றன.

பல்வேறு மொழி பேசுகிற பல்வேறு மத நம்பிக்கைகள் உடைய பல்வேறு பண்பாட்டுப் பின்னணிகளை உடைய பல்வேறு இனங்கள் வாழ்கிற பல நாடுகளின் தொகுப்பாகவே இந்தியப் பெரும் கூட்டமைப்பு உள்ளது. மருத்துவ முறையில்கூட தமிழர்களின் மருத்துவமுறை தனித்த அடையாளங்களோடு அரசு மருத்துவமனைகளில் கொரானா நோய்த்தடுப்பிற்கு உதவியாக உள்ளது. 

இதைப் பற்றி அறிந்தும் குறுகிய அரசியல் காரணங்களுக்காக ஒரே நாடு ஒரே மொழி ஒரே மதம் என பாசக ஆட்சி கூறி வருகிறது. மோடி அரசு இரண்டாவது முறையாகப் பதவியேற்ற பின் காசுமீர், நாகாலாந்து போன்ற மாநிலங்களின் தனித்த இன மத பண்பாட்டு அடையாளங்களை அழிக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

மோடி அரசின் நிர்வாகம் ஒரு தோல்வியடைந்த ஆட்சியைத்தான் அடையாளப் படுத்தப்படுகிறது. பொய்கள் கட்டவிழ்த்துவிடப்படுகின்றன. கொரானா நோய்த் தொற்று தாக்கிய பிறகுதான் பொருளாதாரம் வீழ்ந்து விட்டது என்ற பொய்த் தோற்றத்தை அளிக்க முற்படுகின்றனர்.

ரூ.500 ரூ.1000 பணத்தாள் மதிப்பிழப்பு நடவடிக்கைதான் இந்தியப் பொருளாதாரத்தை வீழ்ச்சிப் பாதைக்கு முதலில் எடுத்துச் சென்றது. இரண்டாவதாக சரக்கு சேவை வரி என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்ட மிகவும் கொடுமையான வரிவிதிப்பு இந்தியாவினுடைய எல்லாத் தொழில்களையும் வணிக அமைப்புகளையும் தேக்க நிலைக்குத் தள்ளிவிட்டது.

சிறுகுறு தொழில்கள் முற்றிலுமாக முடங்கிப் போனதால் பல கோடி இளைஞர்கள் கொரானா நோய்த்தொற்று தாக்கத்திற்கு முன்பே வேலை இழந்துவிட்டனர். உலக சுகாதார நிறுவனம் அறிவித்த எச்சரிக்கைகளை ஒன்றிய அரசு கண்டு கொள்ளவே இல்லை. இதன் காரணமாகத்தான் கடந்த நான்கு மாதங்களில் நாளுக்கு நாள் எல்லா மாநிலங்களிலும் இந்த நோய்த் தொற்று பரவி முழுமையான அளவில் பொருளாதாரத்தையும் ஏழை மக்களின் வாழ்நிலையையும் சிதைத்து வருகிறது. 

ஏறக்குறைய 30 கோடி அமைப்பு சாராத் தொழிலாளர்கள் தங்கள் தங்கள் மாநிலங்களுக்கு நடந்தும் இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்தும் சென்றுள்ளனர். பெரு நகரங்களில் பெரும் தொழில்களில் பணியாற்றிய தொழிலாளர்களும் வேலைகளை இழந்து வருகின்றனர்.

பெரும் வணிக வளாகங்களில் பணியாற்றிய பல கோடி இளம் வயதினர் வேலைகளை இழந்து வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இவற்றையெல்லாம் தில்லியில் உட்கார்ந்துகொண்டு தொலைக்காட்சி வழியாக நிர்வாகம் செய்துவிடலாம் என்ற பகற்கனவில் உள்ளார் பிரதமர் மோடி.

இந்த நோய்த் தொற்று எப்போது முடியும் எப்போது பள்ளி கல்லூரிகள் தொடங்கும் எப்போது உயர் கல்வி நிறுவனங்கள் இயங்கும் என்பதை யாரும் அறுதியிட்டுக் கூற முடியாது. 

சுற்றுச்சூழல் மாசு பெருமளவில் கடந்த 4 மாதங்களில் குறைந்து வருவதால் கடந்த 75 ஆண்டுகளில் இல்லாத அளவிற்குப் பருவமழை எதிர்பார்த்ததைவிட 46 விழுக்காடு அதிகமாகப் பெய்துள்ளது. பொருளாதாரத்தின் முதன்மைத்துறையான வேளாண் துறையில்தான் உற்பத்தி நடவடிக்கை நடைபெற்று வருகின்றன. வேளாண் தொழில்தான் வயிற்றுக்குச் சோறிடுகிறது. வேலையிழந்து வரும் கோடிக்கணக்கான இளைஞர்களைத் தாங்கி நிற்கிறது. 

சீனாவிற்கு இரண்டு முறை நான் பயணம் செய்த போது அரசு நிர்வாகத்தில் அதிகார பரவலாக்கல் முறை இருப்பதை என்னால் உணர முடிந்தது. மாசேதுங் அவர்கள் ஒரு கிராமத்தைத்தான் உற்பத்திக் குழு (Production Team)) என்று அறிவித்தார். பல நூற்றுக்கணக்கான மிகச் சிறிய அளவிலான கிராம குழுக்கள் இணைந்ததுதான் கம்யுன் முறை என்று அழைக்கப்பட்டது.

இந்த கம்யுன் அமைப்பு ஊரகப் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்தது. இந்த கம்யுன் அமைப்பைச் சுற்றித்தான் பல இலட்சக்கணக்கான சிறுகுறு தொழில்கள் தொடங்கப்பட்டன. சான்றாக கொரானா நோய்த்தொற்று முதன்முதலில் இனம் காணப்பட்ட ஊகான் நகருக்கு இருமுறை பயணம் செய்துள்ளேன். அங்குள்ள நிர்வாக அமைப்பு சுயாட்சித் தன்மையோடு இயங்கி வருவதை நேரில் கண்டேன். இதன் காரணமாகத்தான் நோய்த் தொற்று பெருமளவில் பரவாமல் தடுக்கின்ற முழு அதிகாரங்களையும் அந்த நகர நிர்வாகம் பெற்றிருந்தது என்ற உண்மையைத் தற்போது ஊடகங்கள் வாயிலாக வெளி வருகின்றன.

மாவோவின் அணுகுமுறையிலிருந்து விலகி டெங் அணுகுமுறையை சீனா கடைப்பிடித்த காலத்திலும் பெரும் பாலங்கள் நீண்ட தொடர் வண்டி பாதைகள் பெரும் தொழில் நகரங்கள் உருவாயின என்றாலும் பொதுக் கல்வி பொதுச் சுகாதாரம் போன்ற மக்கள் வாழ்வியலோடு தொடர்புடைய இத்துறைகளுக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

சிறு நகரங்கள் நகரங்கள் மாநில அளவிலான அரசு அமைப்புகளுக்கு அதிகாரங்கள் பரவலாக்கப்பட்டன. மாவோ 1972ஆம் ஆண்டில் அவருடைய நீண்ட கால நண்பரும் புரட்சிக் காலத்தில் அவருடைய கருத்துகளை உலகளவில் ஆங்கில மொழியில் எடுத்துச் சென்ற அமெரிக்கப் பத்திரிக்கையாளர் எட்கர் ஸ்னோவிடம் அமெரிக்கா 50 மாநிலங்களுக்கிடையே தனது செல்வத்தையும் பொறுப்புகளையும் விரிவாக்கி அதிகாரப் பகிர்வை மேற்கொண்டு பகிர்ந்து வளர்ந்த முறையை சீனா கற்றுக் கொள்ள வேண்டும்.

ஒரு மத்திய அரசு எல்லாவற்றையும் செய்துவிட முடியாது. மாநில உள்ளாட்சி அமைப்புகளை நம்பித்தான் செயல்பட முடியும் என்று மாவோ குறிப்பிட்டார். இக்கருத்தைச் சீனா இன்றளவும் பின்பற்றி வருகிறது என்பதைக் கொரானா நோய்த் தொற்றுப் பரவலைத் தடுத்த தன்மைகளிலிருந்தே அறியலாம். 

இதற்கு மாறாக இந்தியா தனது நிர்வாகத்தை முழு அளவில் ஒற்றையாட்சி முறையாக மாற்றிவிட்டது. இன்று பிரதமர் நரேந்திர மோடி ஒரு சர்வாதிகாரியாகச் செயல்படுகிறார். மோடியின் எதேச்சதிகாரமான நிர்வாக நடவடிக்கைகள் பிரச்சினைகளை மேலும் சிக்கலுக்கு உள்ளாக்குகின்றன. நன்றாக இயங்கி வருகின்ற தமிழ்நாடு போன்ற மாநிலங்களின் உரிமைகள் ஒவ்வொன்றாகப் பறிக்கப்பட்டு வருகின்றன.

கடந்த 50 ஆண்டுகளாகத் தமிழ்நாடு மருத்துவக் கட்டமைப்பு வசதிகளைச் செம்மைப்படுத்தி வருவதாலும் அரசு மருத்துவமனைகள் எல்லா மாவட்டத் தலைநகரங்களிலும் நகரங்களிலும் இருப்பதால்தான் இந்த நோய்த் தொற்றால் இறப்பவர்களின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் தமிழ்நாட்டிலிருந்து திரட்டப்பட வரி வருமானங்களை குறிப்பாக தமிழ்நாட்டிற்குத் தரப்பட வேண்டிய சரக்கு சேவை வரியின் பங்கை அளிக்காமல் ஒன்றிய அரசு செயல்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டின் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் கூட்டுகிற இணைய வழிக் கூட்டங்களில் தமிழ்நாட்டிற்கு அளிக்க வேண்டிய நிலுவைத் தொகையையும் கொரானா நோய்த்தொற்றுப் பரவலைத் தடுக்கும் உரிய நிதி ஆதாரத்தையும் பேரிடர் நிதியிலிருந்து கொடுக்க வேண்டிய தொகையையும் தராமல் இருக்கிற நிலையைச் சுட்டி வேண்டுகோள் விடும் காட்சிகளை நாம் தொலைக்காட்சி வாயிலாகக் காண்கிறோம்.

ஒன்றிய அரசின் அதிகாரக்குவியல் முழுமையாக மாற்றப்பட்டு மாநிலங்களின் உரிமைகள் முழு அளவில் பிரித்துத் தரப்பட்டால்தான் எதிர்காலத்தில் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி நிலை பெறும். இன்றைய கொரானா நோய்த் தொற்று பாதிப்பால் தமிழ்நாட்டின் நிதியாதாரங்களும் நாளுக்கு நாள் சிதைந்து வருவதும் மக்களின் வறுமை நிலை அதிகரித்து வருவதும் பெரும் அறைகூவல்களாக அமைகின்றன. இக்காலக்கட்டத்தில் மானுட மேம்பாட்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள கொரானா நோய்த் தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகளை ஒன்றிய அரசு தனது அதிகாரக் குவிப்பில் நின்று கொண்டு எவ்வித ஆக்கப்புர்வமான திட்டங்களையும் செயல்பாடுகளையும் நடைமுறைப்படுத்த முடியாது.

இக்காலக்கட்டத்திலாவது மாநிலங்களுக்குத் தன்னுரிமை அளிப்பார்களா? அல்லது ஒன்றிய அரசும் வீழ்ந்து மாநில அரசுகளும் அதனுடன் வீழ்ந்து, வருகின்ற பத்தாண்டுகளில் தீர்வு காண முடியாத நிலைக்கு இந்திய நாட்டை தள்ளி விடுவார்களா? 

- குட்டுவன்

Pin It