kumbh mela 5கொரோனா தாக்கத்தின் இரண்டாவது அலை தற்போது துவங்கியுள்ளது. சமீப காலமாக கடந்த 2 வாரங்களாக தொற்று எண்ணிக்கை எண்ணில் அடங்கா அதிகரித்து வருகிறது.

இதற்கு மருத்துவக் குழு தரப்பில் கொரோனா 2 வது அலையின் தாக்கம் என்கின்றனர். சிலர் இதில் அரசியல் ஆதாயம் உள்ளது திட்டமிட்டு நோய் எண்ணிக்கைகளை மத்திய அரசு மறைத்துள்ளது என்கின்றனர்.

இல்லையென்றால் சில வாரங்களில் நோய் தொற்று எப்படி அதிகரிக்கும் என்ற கேள்வியையும் முன்வைக்கின்றனர். அது மட்டுமின்றி மத்திய அரசின் ஆலோசனையின் பெயரில் தான் தேர்தல் ஆணையம் மற்றும் அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு தயராகின.

தேர்தல் நடந்த வரை கட்டுப்பாட்டில் இருந்த கொரோனா எப்படி தேர்தல் முடிந்ததும் அதிகரிக்க தொடங்கியது. அது மட்டுமின்றி மற்ற மாநிலங்கள் ஊரடங்கை அமல்படுத்தி வருகின்றனர்.

கடந்த ஆண்டு நடைபெற்றது அப்படியே மீள் சுழற்சியில் செல்வது போல இரவு நேர ஊரடங்கு பிறகு வார இறுதி ஊரடங்கு அதன் பின் 15 நாள் ஊரடங்கு என்று அந்த அந்த மாநிலங்கள் நோய் தொற்றின் தன்மையை பொறுத்து முடிவெடுத்து வருகின்றனர்.

இது ஒரு புறம் இருக்க நோய் தொற்று பரவும் இந்த நேரத்தில் ஹரித்வாரில் கும்பமேளா நடைபெற்று வருகிறது. இதில் லட்சக்கணக்கான சாதுக்கள், சந்நியாசிகள், பொது மக்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இதில் பங்கேற்றவர்களில் சமீபத்தில் 2167 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த கும்பமேளாவில் பங்கேற்றவர்களுக்கு நோய் தொற்று பரவ அதிகம் வாய்ப்புள்ளது. அதனால் மாநில அரசுகள் கும்பமேளா சென்று வருபவர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என அறிவித்துள்ளது.

கொரோனா 2 வது அலை பரவும் இந்த நேரத்தில் கும்பமேளா அவசியமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. மேலும் லட்சக்கணக்கானோர் பங்கேற்கும் இந்த நிகழ்வு மூலம் தொற்று பரவ அதிகம் வாய்ப்புள்ளது.

இதே நேரத்தில் கடந்த ஆண்டு நோய் தொற்று பரவ காரணம் தப்லீக் ஜமாத் அமைப்பை சேர்ந்தவர்கள் என்று பாஜகவினரால் மதச் சாயம் பூசப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் இது குறித்து பாஜகவினர் கடும் விமர்சனங்களை முன் வைத்தனர். வெளிநாடுகள் வெளி மாநிலங்களிலிருந்து வந்து நோயிப் பரப்ப வந்தார்கள் என உயர் பொறுப்பில் உள்ள பாஜக தலைவர்களே கூறினர்.

பாஜக தலைவர் கூறியவை

டெல்லியில் இருந்து வரும் தப்லீக் ஜமாத்தை சேர்ந்த உறுப்பினர்கள் அனைவரும் மனித வெடி குண்டுகள் என மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் தேவிந்தர பட்னாவிஸ் கருத்து தெரிவித்திருந்தார்.

மேலும் கர்நாடக பாஜக எம் எல் ஏ.,வாக இருந்த ரேணுகாச்சார்யா தப்லீக் ஜமாத் மாநாட்டிற்கு சென்று வந்தவர்களை துப்பாக்கி வைத்துச் சுட்டால் கூடத் தப்பில்லை என்று கூறினார். அதாவது சிறுபான்மையினரை கட்டிக் காக்கும் பாஜக அரசு இது குறித்து வாய் திறக்கவே இல்லை.

பீகாரில் இரண்டு முறை எம்.பி தேர்ந்தேடுக்கப்பட்ட அஜய் நிஷாந்த் தப்லீக் ஜமாத் உறுப்பினர்கள் ஒவ்வொருத்தரும் தீவிரவாதிகள் போல நடத்திட வேண்டும் என்று கூறியுள்ளார். பாஜகவினர் மதம் சார்ந்த கட்சி என்றும் இந்து மக்களிடம் முஸ்லீம்கள் குறித்து தவறான கருத்துக்களைச் சித்தரித்துத் திணிப்பது போன்ற செயல்களைத் தான் தொடர்ந்துச் செய்து வருகின்றனர்.

கொரோனா கும்பமேளா

தற்போது நடந்து வரும் கும்பமேளாவில் பத்து லட்சம் முதல் ஐம்பது லட்சம் வரை பொது மக்கள் கலந்து கொள்வர் என அரசு தெரிவித்துள்ளது. இன்றைய கால கட்டத்தில் கொரோனா தீவிரமாகப் பரவி வருவதாக மத்திய அரசு கூறி வரும் நிலையில் இந்த கும்பமேளா எந்த அளவிற்கு பாதுகாப்பு என்று தெரியவில்லை.

இன்னும் சொல்ல வேண்டுமென்றால் கும்பமேளா நடத்த தடை விதித்திருக்க வேண்டும். இல்லையென்றால் நோய் பரவும் சூழல் தெரிந்த நிலையில் இதனை தடுத்திருக்க வேண்டும்.

கிராமத்தில் ஒரு பழமொழி உண்டு பாம்புக்கும் வலிக்காமல் தடியும் உடையாமல் அடிக்க வேண்டும் என்று அது போல பிரதமர் நோய் தொற்று கும்பமேளா மூலம் அதிகம் பரவும் உடனடியாக நிறுத்தங்கள் என்று கூறாமல் முடிந்த அளவு சீக்கிரமாக முடிக்க பாருங்கள் என்று கூறியுள்ளார்.

சமூக இடைவெளியுடன் முககவசம் அணிந்து தொழுகை நடத்த இஸ்லாமியர்கள் அனுமதி கோரிய போது மறுத்த அரசு கும்பமேளா மட்டும் நடத்த அனுமதி அளித்திருப்பது ஏற்புடையதல்ல. மேலும் நீங்கள் அனுமதி அளித்த கும்பமேளாவில் தான் கொரோனா கும்மி அடித்துக் கொண்டு முப்பதுக்கும் மேற்பட்ட கடவுளாக பார்க்கக் கூடிய சாதுக்களுக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதை விட பெரிய கொடுமை என்னவென்றால் இந்த கும்பமேளாவிற்கு பல்லாயிரக்கணக்கான காவல் துறையினர் பாதுகாப்பில் ஈடுபட்டனர். இவர்களுக்கு தண்ணீரில் இறங்கி குளிக்க வந்தவர்கள் காய்ச்சலுடன் வந்தார்களா என்று கூட தெறியாமல் தண்ணீரில் இறக்கி ஒருவருக்கு இருந்தால் கூட இந்நேரம் காட்டுத் தீயாய் பரவியிருக்கும்.

 கும்பமேளாவிற்கு என வழிகாட்டு நெறிமுறைகளும்,தனிமனித விலகல் முககவசம் அணிதல் உடல் வெப்ப நிலை பரிசோதனை செய்தல் என பல விஷயங்கள் அதில் கூறப்பட்டிருந்தது. ஆனால் அவை எல்லாம் கடைபிடிக்கபட்டதா என்பதை நீங்களே தொலைக்காட்சி செய்திகள் மற்றும் சமூக வலைதளங்களில் பார்த்து இருப்பீர்கள்.

வாய் திறப்பார்களா?

சரி இதன் மூலம் தப்லீக் ஜமாத் அமைப்பினர் தவறு செய்யவில்லை என கூறுகிறீர்களா என்று கேட்பீர்கள். அதை நான் கூறவில்லை நீதிமன்றமே அதை தான் கூறுகிறது. அவர்கள் பல இடங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மேலும் அவர்களுக்கு தீங்கு இழைக்கும் நோக்கத்தோடு வழக்கு தொடரப்பட்டு இருக்கிறது எனவே அவர்களை விடுதலை செய்கிறோம் என நீதிமன்றம் கூறியிருக்கிறது.

தப்லீக் ஜமாத் உறுபினர்களை மீது விஷப் பார்வையுடன் அன்று வசை பாடியவர்கள் இன்று கும்பமேளா குறித்து வாய் திறப்பார்களா அல்லது கொரோனா தொற்று எண்ணிக்கைக்கு பொறுப்பு ஏற்பார்களா?. அன்று மதச் சாயம் பூசிய மாதிரி இன்று இஸ்லாமியர்கள் கும்பமேளா மூலம் இவர்கள் பரப்புகிறார்கள் என்று கூறியிருந்தால் இவர்கள் சும்மா இருபார்க்களா.

அன்றைக்கு இருந்த தொற்றின் நிலை என்ன இன்றைய நிலை என்ன கடந்த முறை இருந்ததை விட 2 மடங்கு அதிகரித்து வருகிறது என்பதை அறிந்து செயல்பட்டிருக்க வேண்டும். ஆனால் அடுத்தவர்களை வசை பாடுவதற்கு மற்றும் குறையில்லை.

இப்போது கூட இதுவரை ஒருவர் கூட கும்பமேளா குறித்து வாய் திறக்கவில்லை. இந்த பாசிச நிலை என்று மாறும்?. தற்போது எதையும் நியாயபடுத்தி கூற விரும்பவில்லை.

நோய் தொற்று குறித்து பேசும் போது,அதனை எப்படி கையாள்வது அதில் இருந்து எப்படி மீள்வது என்று பேச வேண்டியுமே தவிர அதில் மதச்சாயம் பூசுவது எந்த அளவுக்கு தவறானசெயல் முட்டாள்தனமான செயல் என்பதை உணர்ந்தால் போதும். மேலும் எண்ணிக்கை உயரும் என்று உணர்ந்த அரசுக்கு கும்பமேளா இந்த நேரத்தில் வேண்டுமா என்று யோசிக்க தெரியாதா?

அது சரி கங்கை நீர் கொரோனாவுக்கு மருந்தாக இருக்குமா ஆய்வு செய்யுங்கள் என அறிஞர்களுக்கு அறிக்கை கொடுக்கிறது ஒரு அரசு.

உலக அளவில் கொரோனா தொற்றில் முதலிடத்தில் இந்தியா இருந்து கொண்டு உலகத்தில் இருந்து அனைவரும் வந்து கங்கையில் முங்கு போடுங்கள் கொரோனா எல்லாம் வராது கடவுள் பார்த்துப்பார் என சொல்லும் அரசு இருக்கும் தேசம் நமது இந்தியா. இப்படி இருக்க நாம் தான் நமக்கு பாதுகாப்பு

- சேவற்கொடி செந்தில் 

Pin It