இந்தியாவிற்கு வகுப்புவாத வன்முறை என்பது புதிதல்ல ஆனால் சமீப காலமாக அதன் வடிவம் வீரியம் அதிகரித்து வருவது குறித்து சமூகவியல் ஆய்வாளர்கள் எச்சரித்து வருகின்றனர். மோடி அரசு மத்தியில் பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றியதிலிருந்து முஸ்லிம்கள் மீதான வெறுப்பு அரசியலை பாஜக அரசு கட்டவிழ்த்து வருகிறது. இந்தியா வகுப்புவாத பிரச்சினைகளை அதிக அளவில் சந்தித்து வருகிறது. இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்மமான பேச்சுக்களை அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள் வெளிப்படையாகவே பேசி வருகின்றனர். பாஜகவும் அதன் தாய் அமைப்பான சங்பரிவாரங்களும் இந்தியாவின் மதச்சார்பின்மைக்கு எதிரான கருத்தியலைக் கட்டமைப்பதில் முனைப்புக் காட்டி வருகின்றன. குறிப்பாக பாஜக பெரும்பான்மையாக வெற்றி பெற்றுள்ள மாநிலங்களில் முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது.

கடந்த ஆண்டு டெல்லியில் நடந்த கலவரம் குறித்து டெல்லி சிறுபான்மையினர் ஆணையம்,ஆளுநர் அனில் பைஜால் மற்றும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரிடம் சமர்ப்பித்த உண்மை கண்டறியும் அறிக்கையில் இந்துக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் அமைந்துள்ள 18 முஸ்லிம் தளங்கள் கலவரக்காரர்களால் குறி வைக்கப்பட்டதாகவும், முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் உள்ள இந்து கோவில்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனத் தெரிவித்துள்ளது.11 மசூதிகள், 5 மதரசாக்கள் ஒரு கல்லறை அழித்தொழிக்கப்பட்டதாக அந்த அறிக்கை கூறுகிறது.

hindu mob attacks mosqueஉத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள 100 ஆண்டுகள் பழமையான கரீப் நவாஸ் அல் மரூஃப் மசூதி போக்குவரத்துக்கு இடைஞ்சலாக இருப்பதாகக் கூறி போலிசாரின் பாதுகாப்போடு உள்ளூர் நிர்வாகத்தின் மேற்பார்வையில் இடித்து நொறுக்கப்பட்டது.

குஜராத்தில் நடந்த முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்தின் போது 500 மசூதிகள், தர்காக்கள் அழித்தொழிக்கப்பட்டு அந்த இடங்களில் பெரும்பான்மையினரின் மத தளங்கள் நிறுவப்பட்டிருப்பதாக மனித உரிமை அமைப்பு மற்றும் மனித உரிமைகளுக்கான மக்கள் ஒன்றியம் அறிக்கை தெரிவிக்கிறது.

ஊர்வலங்களே வரலாற்று ரீதியாக வகுப்புவாத கலவரங்களுக்கு மிகப் பெரிய தூண்டுகளாக இருந்து வந்துள்ளது. ராமநவமி ஊர்வலங்களுக்கு இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகள் தேர்வு செய்யப்பட்டு ஊர்வலங்களின் போது முஸ்லிம்களுக்கு எதிரான கோசங்களை எழுப்பி இஸ்லாமியர்கள் மீது வன்முறையை நிகழ்த்தி அவர்களின் சொத்துகளைச் சேதப்படுத்தி அவர்களின் வாழ்வாதாரத்தை நிர்மூலமாக்குகிற செயலை சங்பரிவார அமைப்புசெல்வனே செய்துவருகிறது. குஜராத், உத்திர பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஜார்கண்ட் போன்ற மாநிலங்களில் ராமநவமி ஊர்வலங்களின் போது அதிக அளவில் வன்முறைகள் நடந்ததாகப் பதிவாகி இருக்கிறது இவை யாவும் பாஜக ஆளும் மாநிலங்கள் என்று குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியதில்லை.

ஹலால் ஜிகாத், லவ் ஜிகாத், பொருளாதார ஜிஹாத், பிரியாணி ஜிஹாத் மாட்டிறைச்சிக்குத் தடை, முஸ்லிம் கடைகளில் பொருள்கள் வாங்கத் தடை, மசூதிகளை இடிக்க வேண்டும் ஏனெனில் இந்து கோவில்களை அழித்துவிட்டு மசூதிகளைக் கட்டி உள்ளனர், இந்துக்கள் சிறுபான்மையினர் ஆகிவருகின்றனர், முஸ்லிம்களின் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. பாங்கு சத்தம் ஒலி மாசுபாட்டை ஏற்படுத்துகிறது, இந்துக்களின் இனப்பெருக்கத்தைத் தடுக்க சதித்திட்டம் நடந்து வருகிறது என்பது போன்ற தவறான பிரச்சாரங்கள் மற்றும் உண்மைக்குப் புறம்பான செய்திகளைத் தொடர்ந்து சமூக வலைத் தளங்களில் பாஜகவின் ஐடி விங் செய்து வருகிறது.

முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாக, தேசவிரோதிகளாக மக்கள் மனங்களில் கட்டமைக்கும் செயலை மிகவும் தீவிரமாக அரசியல் தலைவர்களே வெளிப்படையாகப் பேசிவருவதைப் பார்க்க முடிகிறது. நடந்து முடிந்த உத்திர பிரதேச சட்டமன்ற தேர்தல் பரப்புரையின் போது முஸ்லிம்களுக்கு எதிரான பிரசாரங்கள் அதிக அளவில் மேற்கொள்ளப்பட்டதையும் பார்க்க முடிகிறது.

‘’வன்முறையை உருவாக்குபவர்களை அவர்களின் ஆடையை வைத்து அடையாளம் கான முடியும்’’ என்றும் மதச்சார்பற்ற நாட்டின் பிரதமர் மோடி பேசிவருவதையும், முஸ்லிம்களுக்கு எதிராகப் புனையப்பட்ட காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்திற்கு பிரதமர் மோடி இலவச பிரச்சாரம் செய்து வருவதையும் எளிதாகப் புறந்தள்ளிவிட முடியாது..

சமீபகாலமாக விஸ்வரூபம் எடுக்கும் பிரச்சினைகளில் ஒன்று ‘’மசூதிகள் இடிப்பு” சங்பரிவார அமைப்புகள் முன்னெடுத்துவரும் இஸ்லாமிய வெறுப்பு அரசியலில் முக்கியமானது மசூதிகள் இடிப்பு. இதற்கு அவர்கள் முன்வைக்கும் வாதம்; மசூதிகள் இருக்கிற இடங்கள் யாவும் முன்னதாக கோவில்களாக இருந்தன. முகலாயர்கள் கோவில்களை இடித்து மசூதிகள் கட்டிக்கொண்டனர் என்பதே.

பாபர் மசூதியும் பின்னணியும்

1528ல் முகலாயர் மன்னர் முஹமத் பாபர் காலத்தில் பாபர் மசூதியானது கட்டப்பட்டது. பாபர் மசூதி தொடர்பான முதல் வழக்கு 1853ல் தான் தொடரப்பட்டது, அப்போதிலிருந்தே பாபர் மசூதி பிரச்சினை தொடங்கியது. 1857ல் பாபர் மசூதியின் நுழைவுவாயிலின் ஒரு பகுதியை மகந்த் ரகுபர்தாஸ் மற்றும் சிலர் ஆக்கிரமித்து திண்ணை அமைக்கின்றனர். 1931ல் அயோத்தியில் நடந்த கலவரத்தில் பாபர் மசூதி தொடர்பான கல்வெட்டு அழித்தொழிக்கப்படுகிறது. அதன்பின் இந்தியா பாக்கிஸ்தான் பிரிவினையின்போது நடந்த கலவரங்களாலும், காந்தி படுகொலைசெய்யப்பட்டதாலும் பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ் தடைசெய்யப்படுகிறது. அன்றைய பிரதமர் நேருவின் காங்கிரஸ் அமைச்சரவையில் இருந்தவர்கள் இந்துத்துவ கருத்தியலை அடிப்படையாகக் கொண்ட, மதச்சார்பின்மையை ஏற்றுக்கொள்ள மறுத்தவர்கள். பசுவதைச்சட்டம் இயற்றப்பட வேண்டும், அம்பேத்கரின் இந்து திருமண சட்டத்தை ஏற்கக் கூடாது முதலான கொள்கைகளை ஆட்சியிலிருந்து வலியுறுத்தியவர்களே. இந்த பின்னணியிலிருந்துதான் பாபர் மசூதி பிரச்சினையைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதை அ.மார்க்ஸ் தனது கட்டுரைகளில் தொடர்ந்து பதிவு செய்து வந்திருக்கிறார்.

பாபர் மசூதி பிரச்சினை ஏதோ மசூதி இடிப்பிற்குப் பின்னர்தான் உருவானது என்பது போலக் காட்டப்படுகிறது ஆனால் இதன் வேர் இந்துத்துவ அமைப்புகள் இங்கு வேரூன்றியதிலிருந்தே தொடங்கிவிட்டது. தீவிரமாகச் செயல்பட்டு வந்த இந்து மகாசபா அமைப்பு பாபர் மசூதி கட்டடத்தை ”ஆக்கிரமிப்பு கட்டடம்” எனப் பிரச்சாரங்கள் மேற்கொண்டன.1949 ஆம் ஆண்டு டிசம்பர் 22 ஆம் தேதி அபிராம்தாஸ் என்பவர் ராமர் சிலையை மசூதிக்குள் வைத்தார் அதன் பின் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. என்பதை சங்பரிவாரங்களின் பிரச்சாரத்தின் விளைவு என்றே பார்க்க முடிகிறது. ’இந்த நிகழ்வு நமது ஜனநாயகத்திற்கும், மதச்சார்பின்மைக்கும் ஆபத்தாக முடியும்” என்று கடித்தின் வழி வருத்தம் தெரிவித்தார் நேரு. சங்பரிவாரங்களால் ஆக்கிரமிப்பு கட்டடம் என அழைக்கப்பட்ட பாபர் மசூதி பின்னாட்களில் சர்ச்சைக்குரிய பகுதியாக அரசாலும், ஊடகங்களாலும் பெயர் மாற்றம் பெற்றது.

1949ல் இருதரப்பினரும் நீதிமன்றத்தை நாடுகின்றனர். 1950ல் இந்துக்கள் தரப்பிலிருந்து போடப்பட்ட ”ராமருக்குப் பூசைகள் செய்ய அனுமதி வழங்க கோரிய” மனு மட்டும் ஏற்றுக்கொள்ளப்பட்டு அனுமதி வழங்கப்படுகிறது. 1961 ஆம் ஆண்டு இறுதியில் தான் ”சன்னி வக்பு வாரியம்’’ வழக்கில் இணைகிறது.1984ல் ‘விஷ்வ இந்து பரிஷத்’ பாபர் மசூதியைத் தகர்த்து அங்கு ராமர் கோவில் கட்டுவது என வெளிப்படையாக அறிவிக்கிறது. இதன் பின் 1986ல் மாவட்ட நீதிபதி பாபர் மசூதியில் சட்ட விரோதமாக வைக்கப்பட்ட சிலைக்குப் பூசைகள் செய்ய அனுமதிக்கிறார்.

ஏன் பாபர் மசூதி வழக்கு குறித்து மட்டும் விரிவாகப் பேசப்பட வேண்டியிருக்கிறது என்றால்? சமீபகாலமாக மசூதிகள் தொடர்பான வழக்குகள் அதிகம் நீதிமன்றங்களுக்கு வருவதான செய்திகள் நாளிதழ்களை நிரப்பி வருகின்றன. அரிதான செய்திகள் எல்லாம் இப்போது வாடிக்கை செய்திகளாகிவிட்டன. அப்படியாகத்தான் தற்போது வந்துள்ள உ.பி.யின்வாரணாசியில் உள்ள கியான்வாபி மசூதி வழக்கு. இது வாரணாசி நீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதே போன்றதொரு வழக்கு மதுராவின் கிருஷ்ண ஜென்ம பூமி என்று சொல்லப்படுகிற பகுதிக்கு அருகில் உள்ள ஷாயி ஈத்கா மசூதி தொடர்பான வழக்கும்மதுரா சிவில் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்விரண்டு வழக்கின் தன்மையையும் பாபர் மசூதி வழக்கின் தன்மையுடன் ஒன்றிப்போவதாகவே உள்ளது. பாபர் மசூதி தீர்ப்பே இவ்விரண்டு வழக்குகளும் வரலாம் என்பதாகவே யூகிக்க முடிகிறது. பாபர் மசூதியின் தீர்ப்பே இனிவரும் மசூதிகள் ஆக்கிரமிப்பு, அழித்தொழிப்புவழக்குகளுக்கும் அடிப்படையாக்கப்படலம் என்பதே.

"அவுரங்கசீப் தன் ஆட்சியில் கோயில்களை உடைத்து உண்மைதான் ஆனால் வாரணாசியில் உடைக்கப்பட்டது சிவன் கோயில் என்பது உறுதி இல்லை,வேறு கடவுள்களின் கோயிலாகவும் இருக்கலாம், கியான் வாபி மசூதியை அவுரங்கசீப் தான் கட்டைனரா? என்பது உறுதியாகவில்லை என்றும் அக்காலங்களில் கட்டப்பட்ட கோயில்கள் மற்றும் மசூதிகளில் புத்த விஹாரங்களின் சிற்பங்களும், கற்களும் கிடைக்கின்றன. இதற்காக அவை மீண்டும் உடைக்கப்படுமா" என்ற கேள்வியை எழுப்புகிறார் வரலாற்றுப் பேராசிரியர் இர்பான் ஹபீப்.

இந்த சர்ச்சைகளுக்கெல்லாம் வேராக இருப்பது ”இந்துத்துவம்”.இந்துத்துவம் தனது வரணாசிரம கோட்பாட்டை வலியுறுத்த, இந்தியாவை இந்து நாடாக, இந்துக்களின் நாடாக மாற்றும் முயற்சிக்குத் தடையாக இருப்பது இந்தியாவின் பன்முகத்தன்மையும்,மதச்சார்பின்மையும் தான். எனவே மதச் சிறுபான்மையினரை எதிரிகளாகக் கட்டமைத்து அவர்களின் உணவு, உடை, வாழ்விடம், பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள் என எல்லாவற்றையும் குறிவைத்து பண்பாட்டு நீதியாக அழித்தொழிக்கிற வேலையினை பாஜகவும் அதன் தாய் அமைப்பான சங்பரிவார அமைப்புகளும் செய்துவருகின்றன. இப்படியாக இந்துத்துவத்தின் அணி திரட்டல்கள் அனைத்திலும் ”பாபரின் பிள்ளைகளே பாகிஸ்தானுக்கு ஓடுங்கள்”. நீங்கள் இந்துஸ்தானில் வாழ விரும்பினால் ”ஜெய் ஸ்ரீ ராம்” என்று சொல்ல வேண்டும். பாஜகவின் பல்வேறு கூட்டங்களிலும், ஊர்வலங்களிலும், பேரணிகளிலும் நேரடியாகவே இஸ்லாமியர்களைக் கொல்ல அழைப்புவிடுக்கும் முழக்கங்களே அதிகம். பாஜக மதங்களைக் கொண்டு மக்களைப் பிளவுபடுத்தி பாசிச அதிகார பலத்தை நிறுவ முயல்கிறது. வரலாற்று ரீதியாகப் பார்ப்பனிய மேலாதிக்கத்திற்கு எதிராக அணிதிரட்டலை உருவாக்கிய மாநிலம் தமிழகம்தான். இங்குப் பார்ப்பனர் அல்லாதோர் இயக்கத்தை உருவாக்கி பார்ப்பனர்களின் மேலாதிக்கத்திற்கு எதிராகக் கேள்வி எழுப்பியவர் ’பெரியார்’. அதனால் தான் இங்குப் பெரியார் என்கிற பெயரைக் கேட்டாலே பலருக்கு வயிற்றெறிச்சாலக இருக்கிறது. பெரியார் முன்னெடுத்த ஆரிய மாடலுக்கு எதிரான திராவிட மாடல் என்னும் தேரை இன்னும் இறுகப் பிடித்து இழுத்துச்செல்ல வேண்டி இருக்கிறது.

இந்தியா முழுக்க சிறுபான்மையினர் பண்பாட்டின்மீது பல்வேறு தாக்குதல்கள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால் இத்தகைய செயல்கள் தமிழகத்தில் இல்லை என்று கூறிவிட முடியாது. இன்னும் மாட்டிறைச்சியைச் சாப்பிடுவதைக் கெளரவ குறைச்சலாகவும், அப்படிச் சாப்பிட்டாலும் அதைப் பக்கத்து அக்கது வீட்டுக் காரர்களுக்குத் தெரியாமல் பார்த்துக்கொள்ளும் குடும்பங்கள் தான் அதிகம். சமீபத்தில் ஆம்பூர் பிரியாணி திருவிழாவில் மாட்டிறைச்சி பிரியாணி வைக்க மாவட்ட ஆட்சித்தலைவர் தடை விதித்ததையும்,அதற்கு எதிராக அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த பின்பு மழையின் காரணமக திருவிழா ஒத்திவைக்கப்படுவதாக அரசு தரப்பு தெரிவித்ததையும் வேறு எப்படிப் பார்க்க முடியும். அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிதான் திராவிட மாடல் என்று சொல்லிவருவதைச் செயலிலும் காண்பிக்க வேண்டியது கட்டாயம். அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவது மட்டும் போதாது பெரியாரின் பண்பாட்டுச் சீர்திருத்தத்தை முன்னெடுத்தால் மட்டுமே தமிழகம் இந்துத்துவத்தின் பாசிச பிடியிலிருந்து தப்பிப் பிழைக்கும். தமிழகம் பேசுகிற சமத்துவம் சமூக நீதி நிலைபெறும்.

- மை.மாபூபீ, முனைவர் பட்ட ஆய்வு மாணவர், சென்னைப் பல்கலைக்கழகம்

Pin It