hospitalஉலகில் பல நாடுகளில் மக்கள் மீண்டும் கோவிட்19-ன் தொற்று அதிகரித்து பாதிக்கப்படுவதால் உலக சுகாதார நிறுவனம் (WHO) இரண்டாவது அலை எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

இதை இந்திய - தமிழக அரசுகள் ஒரு பொருட்டாக எடுத்துக் கொண்டதாகத் தெரியவில்லை. விதித்த கட்டுப்பாடுகளை தளர்வாக்கவே முனைகின்றன. தமிழகத்தில் பள்ளிகளைத் திறக்க கருத்துக் கேட்கும் கூத்து நடத்துகிறார்கள்.

இரண்டாம் அலையல்ல முதல் அலையிலேயே பல உண்மைகள் வெளிவராமல் இருட்டடிப்பு செய்யப்படுகின்றன. அதில் நோய் உறுதிப்படுத்தலில் உள்ள துள்ளிய மற்றும் தரக் குறைபாடுகள் (Accuracy and sample qualitive problems in RT-PCR test) என்பதும், அரசு × தனியார் மருத்துவமனைகளின் முரண்பட்ட சிகிச்சை முறைகள் (Different type of Treatment protocol) என்பதும் முக்கியமானவை.

1. Accuracy and sample qualitive problems in RT-PCR test:

சீனாவிலும் வேறுசில நாடுகளிலும் கொரோனா பரவிய தொடக்கத்திலேயே RT-PCR test ல் negative வந்தவர்களும் நோய் கடுமையாகி இறந்தது இருந்தன. அதனால் அதன் துள்ளியம், தரம் பற்றிய கேள்விகள் எழுந்தன. Swab type sample collectionல் தவறுகள் (அதாவது மூக்கிலும் தொண்டையிலும் எடுக்கும் சளி மாதிரி சரியாக எடுக்கவில்லை என்றால் அல்லது அவற்றைச் சரியாக பாதுகாக்கப்படவில்லை என்றால்) இருந்தால் முடிவுகள் தவறாக வரும்.

மேலும் நோய்க் கிருமி குறிப்பிட்ட சில நாட்களிலேயே சளியில் தங்கியிருக்கின்றன: அந்நாட்களில் அல்லாது வேறு நாட்களில் எடுக்கும் மாதிரிகளும் தவறான முடிவுகளையே தரும். இதனால் இதன் தரமும் துள்ளியமும் 100℅ என எடுத்துக் கொள்ளக்கூடாது என்றும் இதனுடன் எக்ஸ்ரே, சிடி ஸ்கேன், ரத்த பரிசோதனைகள் எடுத்து அதன் மூலமும் ஒப்பீடு செய்தே கொரோனா தொற்றறிய வேண்டும் என்றும் மருத்துவ உலகம் முடிவு செய்தது.

ஆனால் இவ்வசதி எல்லா கிராமங்களிலும் அல்லது உட் பகுதிகளிலும் அநேக நாடுகளில் இல்லை என்பதால் WHOம் ஆட்சியாளர்களும் RT-PCRஐ மட்டும் பிடித்துத் தொங்கி கொண்டுள்ளனர். இதைவிட செலவு குறைவான Anti body test kit மூலம் கண்டறியும் முயற்சி தோல்வியில் முடிந்ததால் RT-PCRஐ விட்டால் வேறு வழியில்லை என்றாகிவிட்டது.

RT-PCR சோதனையில் நெகட்டிவ் வந்தவர்கள் அல்லது கொரோனா சிகிச்சைக்குப்பின் வீடு திரும்பியவர்களுக்கும் நுரையீரல் தொடர்பான நோய் பாதிப்புகள் அதிகமாகி இறந்த சம்பவங்கள் நம்நாட்டிலும் பல நடந்துள்ளன; நடந்து கொண்டிருக்கின்றன.

இவர்கள் அரசின் கணக்குபடி கொரோனா இல்லாதவர்கள் அல்லது குணமானவர்கள் என்றிருப்பர்; இறப்பும் கொரோனாவிற்குப் பிந்தைய வேறு நோயாக (Post Covid Infection) பதியப்படும். ஆனால் உண்மையில் கொரோனாவின் பாதிப்பாகவே - இறப்பாகவே இருக்கும்.

தொடக்கத்தில் கொரோனா இல்லாது வேறு பாதிப்பால் இறந்தவர்களையும் கொரோனா கணக்கில் சேர்த்தார்கள். தற்போது கொரோனாவில் இறந்தவர்களையும் வேறு நோய் கணக்கில் சேர்க்கிறார்கள்.

ஆக்சிஜன் உள்ளீடு SpO2 அளவு குறைந்தவர்களை முறையாக அரசு மருத்துவமனைகளில் கவனிப்பதில் பல குறைபாடுகள் உள்ளன. அதனால் பலர் தனியார் மருத்துவமனைகளையே நாடவேண்டிய நிலை.

தனியார் மருத்துவ உலகம் அரசின் கொரோனா குளறுபடிகளை - தோல்விகளை எல்லாம் காசாக்குவதற்கு பயன்படுத்திக் கொள்கிறது. தமிழக நகரங்களில் இயங்கும் தனியார் மருத்துவமனைகள் பெரும்பாலும் கோவிட் நோயாளிகளை வைத்து சம்பாதிக்கின்றன.

அதற்கு வழியமைத்துக் கொடுத்திருப்பது தனிமைப்படுத்தப்பட்ட வார்டு - அட்டெண்டர் தடை செய்யப்பட்ட பகுதி என்பது ஒரு முக்கிய காரணமாகும். அவர்கள் செய்வதுதான் சிகிச்சை, சொல்வதுதான் செலவு என்றாகிவிட்டது.

அவர்களது சிகிச்சை தவறுகளால் இறக்கிறார்களா என ஆராய எந்த வழிமுறையும் கிடையாது. இறந்தவரின் உறவினர்கள் கேள்விக் கேட்டாலும் எதிர்ப்பு காட்டினாலும் மருந்தே இல்லை, சிகிச்சையே இல்லை என கைவிரித்து விடுகிறார்கள். அரசிடம் போனாலும் அதிகாரிகளும் அவ்வாறே ஒத்தூதுகிறார்கள்.

அரசு, நெறிமுறைகள் (protocol) வகுத்து கொரோனாவிற்கு சிகிச்சை தரும்படி அறிவுறுத்திய முழு ஊரடங்கு காலத்தில் (அதாவது மார்ச்-ஏப்ரல் - மே - ஜூன் மாதத்தில்) தனியார் மருத்துவமனைகள் எந்த நோய்க்குமே சிகிச்சை அளிக்க மறுத்தன.

இன்று கோவிட் 19 சோதனை - சிகிச்சைக்காக அங்கீகரிக்கப்படாத தனியார் மருத்துவமனைகளும் கொரோனா நோயாளிகளை கூவி அழைத்து ஹோட்டல் தொகுப்பு பட்டியல் (hotel room tariff) போல் தொகுப்பு வகைகளைச் சொல்லி (treatment package) சட்டவிரோத சிகிச்சையளிக்கின்றன. (அரசு தனியாருக்கு நிர்ணயித்த கட்டணத் தொகையை விட்டுவிட்டு, தொகுப்பு அறிவிப்பு முறையை மட்டும் கடைபிடிக்கின்றன).

மருத்துவர்களுக்கும் ஊழியர்களுக்கும் கோவிட்19 தொற்று வந்துவிடும் என்ற காரணத்தால் அன்று சிகிச்சை தர மறுத்தார்கள் என்று நாம் நினைத்தோம். ஆனால் அவர்கள் பதுங்கி பாய்ந்திருக்கிறார்கள். அக்கிருமி பற்றிய புரிதலைப் பெறவும் அதை வைத்து எப்படி காசாக்கும் சிகிச்சையை தருவது என திட்டமிடவும் சிறிது காலம் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

நோயாளி இறந்துவிட்டால் பணம் வராது என 5 முதல் 10 லட்சம் வரை முன்பணம் கட்டினால்தான் அட்மிசனே போடுகிறார்கள். சிறிய அளவு கொரோனா தொற்றிருப்பவர்களை தனிமைப்படுத்தி சத்துணவு சத்து மாத்திரை கொடுத்தாலே குணமாகிவிடுபவர்களை அரசு கணக்குகாட்டி தனது சேவையின் சுயதம்பட்டத்திற்கு பயன்படுத்திக் கொள்கிறது என்றால் தனியார் மருத்துவமனைகளோ குறைந்தது 2-3 லட்சம் கரக்க பயன்படுத்திக் கொள்கின்றன.

2. Different type of Treatment protocol:

நோய் அறிகுறிகள் வந்தவர்கள் அரசு மருத்துவமனைகளுக்கு வந்தால் அவர்கள் முதலில் RT- PCR test எடுத்து பாசிட்டிவ் வந்தால் அட்மிசன் போட்டு பாதிப்பை ஒட்டி வார்டுக்கோ, தனிமைப்படுத்தப்பட்ட சிகிச்சை முகாமுக்கோ அனுப்புகிறார்கள்.

கடும் பாதிப்பு உள்ளவர்களுக்கு மட்டுமே Chest X-Ray அல்லது Chest CT- SCAN எடுக்க பரிந்துரைக்கிறார்கள். Room Air-ல் ஆக்சிஜன் அளவு (SpO2 <90℅) 90℅க்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே செயற்கை ஆக்சிஜன் வழங்குகிறார்கள். சிறப்பு பிரிவு (ICU), வென்டிலேட்டர் சிகிச்சை என்பதும் 80℅க்கு கீழ் உள்ள மிகமிகச் சிலருக்கே வழங்குகிறார்கள்.

நோய் அறிகுறிகள் வந்தவர்கள் தனியார் மருத்துவமனைகளுக்கு வந்தால் அவர்கள் முதலில் Chest/ Thorax CT- Scan-ம் கூடவே correlation finding-ற்காக சில ரத்த பரிசோதனைகளையும் எடுக்கிறார்கள்.

அதிலுள்ள தொற்று அளவை பொருத்தும் வயது - முந்தைய பிற நோய்களைப் பொருத்தும் முக்கியமாக பணம்கட்ட வசதியுள்ளவரா என்பதைப் பொருத்தும் அட்மிசன் போடுகிறார்கள்.

பிறகே RT- PCR test எடுத்து கணக்கிற்காக அரசுக்கு அனுப்புகிறார்கள். Room Air-ல் ஆக்சிஜன் அளவு (SpO2 <95℅) 95-க்கு கீழ் வந்தாலே செயற்கை ஆக்சிஜன் தேவை, ICU தேவை என வலியுறுத்துகிறார்கள்.

87-85℅ அளவிலேயே வென்டிலேட்டருக்கு மாற்றுகிறார்கள். Remdesvir, Ulitryp, Sepsivac, Rosinox, NAC போன்ற விலையுயர்ந்த / சிறப்பு மருந்துகளையும் பிளாஸ்மா தெரப்பியும் (Convalescent plasma therapy) பெரும்பான்மை நபர்களுக்கு தந்துவிடுகிறார்கள்.

இது சரியான அணுகுமுறையா என சோதிக்க எந்த protocolம் அரசிடம் இல்லை. அதுமட்டுமல்ல தனியார்களது அனுபவத்தை பகிர்ந்து சரியானவற்றை ஆவணப்படுத்துவதற்கு எந்த வழிவகைகளும் முயற்சியும் இரு தரப்பினரிடமும் இல்லை.

கொரோனா இறப்பு விழுக்காடு அரசு மருத்துவமனைகளில் குறைவாகவும் தனியார் மருத்துவமனைகளில் அதிகம் இருப்பது ஏன் என்ற ஆய்வோ கட்டுப்படுத்தும் எண்ணமோ ஆட்சியாளர்களிடம் இல்லை.

கீழ் நடுத்தர பிரிவிலிருந்து - மேல் தட்டு பிரிவினர் வரை பலர் தனியார் மருத்துவமனைகளில் தமது சேமிப்பு பணத்தையும் கொரோனாவிற்கு உயிரையும் இழப்பதுதான் நடக்கிறது.

அங்கீகரிக்கப்படாத மருத்துவமனைகள் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளிடம் சோதனை, சிகிச்சைக்கான அறிக்கை / உதவி பெற்று அரசு தொடர்பான கட்டுப்பாடுகளை நீக்கி கொள்வதும் நடக்கிறது.

இதில் பல அங்கீகரிக்கப்படாத தனியார் மருத்துவமனைகளில் RT - PCR test எடுக்காமல் CT Scan மற்றும் பிற சோதனைகளை மட்டுமே வைத்து கொரோனா சிகிச்சையளித்து மன்னிக்கவும் பணம் பிடுங்கிவிட்டு infection குறைந்ததும் டிஸ்சார்ஜ் செய்கிறார்கள்.

கொரோனா வந்ததை அவமானமாக கருதும் ஒருசில நடுத்தர வர்க்கத்தினர் இம்முறையை விரும்புவதால் இது நிகழ்கிறது. அரசின் கணக்கிற்கே வருவதில்லை. எல்லாம் அரசு அதிகாரிகளுக்கு தெரிந்தே நடக்கிறது.

எனவே கொரோனா தொற்று குறைந்துவிட்டது என்கிற அரசின் புள்ளிவிவர லட்சணம் இவ்வாறு இருக்கையில் இரண்டாவது அலை வந்தால் என்னாகும் என்று யூகித்துக் கொள்ளுங்கள்.

மருத்துவம் அனைவருக்கும் ஒன்றே அதுவும் அரசு மருத்துவமே என்று மாறவேண்டும் என்பதை கோவிட்19 நோய் பல முறை நமக்கு இப்படி உணர்த்துகிறது. இருந்தும் தனியார் மருத்துவமனைகளிடம் சிக்கி அனுபவப்பூர்வமாக உணர்ந்தாலும் நடுத்தர வர்க்கம் தனியார்மய மோகத்திலிருந்து விடுபடுவதில்லை.

அரசின் ஒரே பொதுவான தரமான சிகிச்சைக்காகப் போராடவும் முன்வருவதில்லை. அனைத்து எதிர்கட்சிகளும் இத்தகைய நடுத்தர வர்க்க மனோநிலை கண்ணோட்டத்தில்தான் இப்பிரச்சினையை அணுகுகிறார்கள்.

அதனால்தான் கொரோனா பாதித்த தொடக்கத்தில் சிகிச்சையளிக்க மறுத்த போதும் சரி, தற்போது முறையற்று சிகிச்சையளித்து பணமாக்கும் பொழுதும் சரி கோபமோ எதிர்ப்புகளோ இங்கு எழவில்லை.

- ஞாலன்

Pin It