supreme court 255வன்கொடுமை குறித்து சமீபத்தில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை வெட்கக்கேடு என்று சொல்வதைத் தவிர வேறு வார்த்தை எதுவும் இல்லை. நீதிபதிகளின் தீர்ப்பைப் பற்றி விமர்சனம் செய்யக்கூடாது, அதற்கு உள்நோக்கம் கற்பிக்கக் கூடாது என்ற போர்வையில் பல சனாதனவாதிகளும் தங்களின் சாதிப்பற்றை அம்பலப்படுத்திக் கொள்ளும் இடமாக நீதிமன்றத்தை மாற்றிக் கொண்டு இருக்கின்றார்கள்.

ஏற்கெனவே நீதிபதிகளின் யோக்கியதை பற்றி நாடே காறித் துப்பும் அளவுக்கு மாறிவிட்டாலும், பூணூல் கயிறு அணிந்து கொண்டாலோ அணிந்து கொண்டவனின் சித்தாந்தத்தை ஏற்றுக் கொண்டாலோ மான அவமான உணர்ச்சி இற்றுப் போய்விடும் என்பது மேலும் உறுதியாகி இருக்கின்றது.

ஹிதேஷ் வர்மா -எதிர்- உத்தரகாண்ட் மாநில அரசு என்ற வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் அதில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் பிரிவு 3 (1) ( r) பொருந்தாது என்றும், பாதிக்கப்பட்டவர் வீட்டுக்குள் தனியே இருக்கும்போது - அதாவது நான்கு சுவர்களுக்குள் இருக்கும் போது - அவரை அவமானப்படுத்தும் விதமாகப் பேசியது எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1989 இன் படி குற்றமாகாது என்றும், கூறி உச்சநீதிமன்ற நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், ஹேமந்த் குப்தா மற்றும் அஜய் ரஸ்தோகி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த வழக்கைத் தள்ளுபடி செய்திருக்கின்றது.

பிதெளரகட் மாவட்டத்தைச் சேர்ந்த புகார்தாரர் தான் சொந்தமாக கட்டும் வீட்டை ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர்கள் 6 மாத காலமாக தடுத்ததாகவும், 10/12/2109 அன்று காலை 10 மணி அளவில் தனது நான்கு சுவர்கள் உள்ள வீட்டிற்குள் நுழைந்த நபர்கள் தன்னையும், தன் வீட்டில் பணிபுரியும் நபர்களையும் சாதி ரீதியாக இழிவு படுத்தியதோடு உயிருக்கு அச்சுறுத்தல் விடுத்தாகவும், கட்டிடம் கட்ட வைத்திருந்த பொருட்களை எடுத்துச் சென்றதாகவும் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் மீதுதான் இப்படியான ஒரு தீர்ப்பை உச்ச நீதிமன்றம் அளித்துள்ளது.

தீர்ப்பை வழங்கிய அரிய வகை உயிரினத்தைச் சேர்ந்த நீதிபதியான நாகேஸ்வரராவ் அவர்கள் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக, தொடர்ந்து தீர்ப்புகளை வழங்கி வருகிறார் என்றும், இட ஒதுக்கீடு என்பது அடிப்படை உரிமை அல்ல என்று கூறுவதோடு இட ஒதுக்கீடு சம்பந்தமான எந்த வழக்கு உச்ச நீதிமன்றத்துக்கு வந்தாலும் முந்திக் கொண்டு அதை உடனடியாகத் தள்ளுபடி செய்து விடுகின்றார் என்றும் அவர் மீது புகார்கள் உள்ளன.

2018 ஆம் ஆண்டு மார்ச் மாதமே உச்ச நீதிமன்றம் பழங்குடியினர், பட்டியல் பிரிவினருக்கு எதிராக வன்கொடுமை தடுப்புச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவது பற்றிய தனது அடக்க முடியாத துக்கத்தை வெளிப்படுத்தி இருந்தது.

அதன்படி குற்றஞ்சாட்டப்பட்டவர் அரசு ஊழியராக இருந்தால், நியமன நிர்வாகத்தின் அனுமதி பெற்ற பின்னரே கைது செய்ய வேண்டும்.

அரசு ஊழியராக இல்லாத பட்சத்தில் ஒருவரை மூத்த காவல்துறை கண்காணிப்பாளரின் அனுமதியோடு மட்டுமே கைது செய்ய வேண்டும்.

கைது செய்வதற்கு முன்கூட்டியே பிணை வழங்கப்படுவது இல்லை என்று சட்டத்தின் பிரிவு 18 கூறினாலும், கைதுக்கு முன்னரே பிணை பெறுவதையும் இந்திய உச்ச நீதிமன்றம் அறிமுகப்படுத்தியது. இதற்கு எதிராக கடுமையான எதிர்வினைகள் எழுந்த பிறகே மத்திய அரசு கடந்த ஆண்டு எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் ஒரு திருத்தத்தைக் கொண்டு வந்தது.

அதன்படி முதல்நிலை விசாரணை அவசியம் இல்லை, மேலும், எஸ்சி, எஸ்டி வன்கொடுமை வழக்குகளில் குற்றம் சாட்டப்படுபவர் அரசு ஊழியர்கள் எனில், உயர் அதிகாரிகள் மற்றும் மூத்த காவல்துறை அதிகாரிகளின் ஒப்புதல் இன்றி எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யலாம் என்றும் திருத்தப்பட்டது.

எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு திருத்தச் சட்டத்தை எதிர்த்து வழக்கறிஞர்கள் பிரித்விராஜ் சவுகான் மற்று பிரியா சர்மா ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்பு திருத்தச் சட்டம் 2018, சட்டப்பிரிவு 14, 19, 21 ஆகியவை இந்திய அரசியல் சட்டத்தை மீறுவதாக இருக்கிறது என்று தெரிவித்திருந்தனர். 

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மத்திய அரசு கொண்டு வந்த 2018 வன்கொடுமை திருத்தச் சட்டம் அரசியலமைப்பின்படி செல்லும் என்று தீர்ப்பு அளித்து வழக்கைத் தள்ளுபடி செய்தனர்.

இப்போது மீண்டும் உச்ச நீதிமன்றம் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நீர்த்துப் போகும்படி தீர்ப்பளித்ததோடு, நான்கு சுவருக்குள் எப்படி வேண்டுமானாலும் தலித்துகளை இழிவுபடுத்திக் கொள்ளலாம்; அதற்காக எந்த வழக்கையும் தொடுக்க முடியாது என்ற ரீதியில் தீர்ப்பு வழங்கி இருக்கின்றது. 

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை தலித்துகள் தவறாகப் பயன்படுத்துகின்றார்கள் என்ற சாதி வெறியர்களின் வெற்றுக் கூச்சலுக்கு வலு சேர்க்கும் படியாக இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது. ஆனால் உண்மையில் சாதி வெறியர்களின் கூச்சலுக்கு ஏதாவது ஆதாரம் உள்ளதா?

தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) அறிக்கைகளின்படி, 1995-2016 வரை பட்டியலின மக்களுக்கு எதிராக மொத்தம் 7 லட்சத்து 11,512 குற்றங்கள் பதிவாகியுள்ளன. 2016-ல் மட்டும் 40,801 குற்றங்கள் பதிவாகியுள்ளன. இது 2015-ஐக் காட்டிலும் 5.5% அதிகமாகும். சராசரியாக ஒவ்வொரு பதினைந்து நிமிடத்திற்கும் தலித் மக்களுக்கு எதிராக ஒரு குற்றம் நடைபெறுகிறது. ஒரு நாளைக்கு 7 தலித் பெண்கள் ஆதிக்க சாதியினரால் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். ஒவ்வொரு நாளும் இரண்டு தலித்துகள் கொல்லப்படுகின்றனர். 12 தலித்துகள் படுகாயப்படுத்தப் படுகின்றனர். ஆண்டுக்கு சுமார் 1000 முதல் 1200 கௌரவக் கொலைகள் அரங்கேறுகின்றன. ஒவ்வோர் ஆண்டும் 30,000க்கும் மேற்பட்ட வன்கொடுமை வழக்குகள் பதிவாகின்றன

2016 தேசிய குற்றப் ஆவணக் காப்பகத்தின் அறிக்கையின்படி, 2016-ன் முடிவில், பட்டியலின மக்களுக்கு எதிரான வழக்குகளில் 89.6% வழக்குகளும், பழங்குடியின மக்களுக்கு எதிரான வழக்குகளில் 92.6% வழக்குகளும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.

இது தான் உண்மை நிலை. ஆனால் இது கூட சனாதன சாதி வெறியர்களைக் கோபமூட்டுகின்றது. தலித்துகளுக்கு எப்படியும் எந்த வகையிலும் ஒரு துளி அளவு கூட நீதி கிடைத்து விடக்கூடாது என்று கங்கணம் கட்டிக்கொண்டு அலைகின்றார்கள். அவர்களைப் பொருத்தவரை வன்கொடுமை தடுப்புச் சட்டம் என்பது ஆண்டாண்டு காலமாக தங்களால் அடிமையாக நடத்தப்பட்ட மக்களைத் தொடர்ந்து தாங்கள் அப்படியே நடத்துவதைத் தடுக்கும் ஒரு செயல்திட்டம், அதனால் அதை எப்படியும் முறியடித்தே ஆக வேண்டும். அப்படி முறியடிப்பதுதான் சனாதனத்தின் வெற்றி, அதுதான் மோடியின் வெற்றி.

ராமராஜ்ஜியத்தில் சம்புகன்களை உங்களால் சட்டப்படியே வேட்டையாட முடியும். காக்கிச் சட்டையும், கருப்பு அங்கிகளும், காவி உடைகளும் மதவெறி பிடித்த ஓநாய்களின் தேசிய உடைகளாய் மாறிப் போக, சட்டமோ ஆடைகள் களையப்பட்டு அம்மணமாய் விரட்டி அடிக்கப்பட்டுக் கொண்டு இருக்கின்றது. இதை நாம் பாசிசம் என்கின்றோம், பாசிஸ்ட்டுகளோ அதை மநுநீதி என்கின்றார்கள்.

- செ.கார்கி

Pin It