vivekபகுத்தறிவுக் கருத்துகளை நடிப்பாலும், பாட்டாலும், ‘கதா காலட்சேப' மாகவும் தமிழ்த் திரைப்படங்களின் வழியாக நகைச்சுவையாகச் சொன்னவர்களில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள் முதன்மையானவர்.

அவரை அடையாளப்படுத்தும் வகையில் "சின்னக் கலைவாணர் " என்று அழைக்கப்பட்ட நகைச்சுவை நடிகர் விவேக், நெஞ்சுவலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இன்று அதிகாலையில் மரணமடைந்தார்.

நல்ல நடிகர், கலைஞர், மரங்களைப் பரவலாகவும், அதிகமாகவும் நடவேண்டும் என்று ஆர்வம் காட்டிய சுற்றுச்சூழல் ஆர்வலர்.

எலுமிச்சம் பழம் கட்டுவதும், கருப்புக் கயிறு சுற்றுவதும், பூசணிக்காயயைச் சுற்றிச் சாலையில் உடைப்பதும் திருஷ்டி கழிவதற்கு என்று பார்ப்பனியம் சொல்லி வைத்திருக்கிறது, இந்து சடங்காக. நடிகர் விவேக் இதே சடங்கு முறைகளை திரைப்படங்களில் கேலிக் கூத்தாக்கினார். நையாண்டியாகப் பேசியும், நடித்தும் அந்தச் சடங்கால் எந்தப் பயனும் இல்லை என்ற செய்தியைத் துணிச்சலாகச் சொல்லி இருப்பார்.

இதுபோலப் பகுத்தறிவு, முற்போக்குக் கருத்துகளை முடிந்த வரையும் தமிழ் சினிமாவில், தன் கதாப்பாத்திரங்கள் வழியாக நகைச்சுவையாகச் சொன்ன நல்ல கலைஞன் விவேக்.

சில நாள்களுக்கு முன்னர் இவர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். நெஞ்சுவலியால் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் இன்று மரணம் அடைந்து விட்டார். இதற்குத் தடுப்பூசியும் ஒரு காரணம் என்ற பேச்சுக் கிளம்பியது.

உடனே தமிழக சுகாதாரத் துறைச் செயலாளர் இராதாகிருஷ்ணன், விவேக் மாரடைப்பால்தான் காலமானார். தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கும், இவரின் மரணத்திற்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை என்று தொலைக்காட்சி நேர்காணலில் சொன்னார்.

கொரோனா தொற்று பரவிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் தடுப்பூசி போட்டுக் கொள்வது மிக மிக அவசியம். இதை அலட்சியப்படுத்த முடியாது.

அதே நேரத்தில் விவேக் மரணத்தில் கொரொனா தடுப்பூசி மக்களிடையே அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது. ஆகவே இது குறித்த சரியான விளக்கத்தை அரசு தெரிவிக்க வேண்டும்.

'சின்னக் கலைவாணர்' விவேக்கின் மரணம், தமிழ்த் திரையுலகுக்கு மட்டுமன்று, பகுத்தறிவுக் கலைஞராகவும் ஓர் இழப்பு என்பதை மறுக்க முடியாது.

விவேக்கின் மரணம் வருத்தம் தருகிறது !

- கருஞ்சட்டைத் தமிழர்

Pin It