pen lady2005ஆம் ஆண்டு இலண்டனில் நடைபெற்ற இலக்கியச் சந்திப்பில் திலகபாமா பேசியதன் ஒரு சிறு பகுதியின் (திண்ணை இணையப் பக்கத்தில் இருந்து எடுக்கப்பட்டது) அடிப்படையில் இக்கட்டுரையை அமைத்துக் கொள்ள விரும்புகிறேன்.

ஒரு கூட்டத்தில் கவிஞர் ஞானக்கூத்தன் பேசினார். பொது வாழ்க்கைக்கு வரும் பெண்கள் தங்கள் வாழ்க்கையைத் தொலைத்து விடுகின்றார்கள் என்று. அதற்கு உதாரணாமாக அவர் சொல்லிய பெண்கள் ஒளவை, ஆண்டாள், காரைக்கால் அம்மையார். அந்த மேடையிலேயே எனது கேள்வியும் இருந்தது. அப்போ எதை வாழ்க்கையாய் நினைக்கின்றீர்கள்.

ஒரு பெண் கணவனோடு குழந்தைகளோடு வாழ்ந்தால் மட்டும் தான் வாழ்க்கை என்றா? அப்பொழுதுதான் அவள் வாழ்வில் வெற்றி கண்டவள் என்றா? என்னைப் பெறுத்தவரை இவர்கள் எல்லாரும் தாங்கள் எதை வெற்றியாகக் கருதினார்களோ அதைத் திறப்படச் செய்து வென்றவர்கள் தான்.

திலகபாமாவின் இந்தக் கூற்றில் ஓர் உண்மை இருக்கிறது. வெற்றி என்பது தான் நினைத்தைச் சாதிப்பது. அதில் எந்த மாற்றுக் கருத்தும் எவர்க்கும் இருக்க முடியாது. ஒருவன், இந்திய ஆட்சிப் பணியை அடைய வேண்டும் என்று கடுமையாக முயற்சித்து அதை அடைதல் அவனின் வெற்றியே.

ஒருத்தி, ஆண்களுக்கு இணையாக என்னால் எதையும் சாதிக்க முடியும் என்று கூறி அதனை அடைதல் அவளின் வெற்றி. கம்பனுக்கு இணையாக ஏன், கம்பனை விடச் சிறந்த காப்பியத்தை என்னால் படைக்க முடியும் என்று கூறி அவ்வாறு செய்து காட்ட முடிந்தால் அதுவும் வெற்றிதான். ஆனால், இந்த வெற்றிகள் எல்லாம் வாழ்க்கை வெற்றி ஆகாது.

ஏனென்றால்,வாழ்க்கை என்பது ஒரு போட்டியோ பந்தயமோ அல்ல. வாழ்க்கை என்பது அன்பின் வயப்பட்டது. எனவே,அங்கு வெற்றி தோல்விக்கு இடமில்லை. இதற்கு,

ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும்
கூடலில் காணப் படும் (குறள். 1327)

என்னும் திருவள்ளுவரின் கூற்றுத்தான் மிகப் பொருத்தமான சான்று. கவிஞர் ஞானக்கூத்தனும் இதைத்தான் இந்த அன்பு வாழ்க்கையைத்தான் பொது வாழ்க்கைக்கு வரும் பெண்கள் தொலைத்துவிடுகிறார்கள் என்று கூறியிருப்பார் என்று கருதுகிறேன்..

ஆம், நல்லெண்ணத் தூதர் அவ்வையாரும், சூடிக் கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாளும், மாங்கனி கொடுத்துப் பேயுரு கொண்ட காரைக் காலம்மையாரும் இயல்பான இன்பமான இல்லற வாழ்க்கையை வாழவில்லை. அதற்கு முரணான பற்றற்ற துறவு வாழ்வை வாழ்ந்தார்கள்.

வாழ்க்கை என்பதே கணவன்-மனைவி-பிள்ளைகள் தானே. இதைத் தவிர்த்துவிட்டு, அல்லது இதில் முரண்பட்டு வாழ்வது எதற்காக? அதனால் யார்க்கு என்ன பயன்?

நம்முடைய வாழ்க்கை மற்றவர்கள் பின்பற்றக் கூடியதாக இருக்க வேண்டும். அவ்வையாரையோ, காரைக்கால் அம்மையாரையோ, ஆண்டாள் நாச்சியாரையோ எந்தப் பெண்ணும் பின்பற்றியதாக வரலாறு இல்லை. இல்லறத்தைப் புறந்தள்ளிய இவர்களின் வாழ்க்கையை எவராலும் வாழ முடியாது. எவரும் இதுபோன்ற வாழ்க்கையை விரும்பவும் மாட்டார்கள்.

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.
அறன்எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்பது இல்லாயின் நன்று

என்னும் திருவள்ளுவப் பெருந்தகையின் வாய்மொழிப்படி வாழ்வதுததான், வெற்றி வாழ்க்கை.

வெற்றி வாழ்க்கை அன்போடும், அறத்தோடு இயைந்ததாகவும் இருக்க வேண்டும். அத்தகைய அன்பு நிறைந்த அறவாழ்க்கையும் பிறர் எவ்வழியிலும் பழித்துச் சொல்லா வண்ணம் செம்மையானதாக இருக்க வேண்டும். இதுவே திருவள்ளுவர் காட்டும் வெற்றி வாழ்க்கை.

இந்த வெற்றி வாழ்க்கை இலக்கியத்தில் மட்டுமல்ல, எந்தப் பொது வாழ்க்கையில் ஈடுபடுகின்ற பெண்களுக்கும் பொதுவாக அமைவதில்லை. அதற்குக் காரணம், பெண்களா? என்றால் இல்லை என்று உரத்துக் கூறலாம். இந்த ஆண் நடுவக் குமுகம்தான் இதற்குக் காரணம்.

கோழி, ஆடு, மாடு, கழுதை என அனைத்திலும் பெண் பிறப்பை எதிர்நோக்கும் இக்குமுகம்,மாந்த வாழ்க்கையில் மட்டும் ஆண் குழந்தையையே எதிர்பார்க்கிறது. பிறக்கும்போதே பெண்குழந்தைக்குத் தடை.

வளர்க்கும்போது, ஆண் குழந்தைகளுக்குத் துப்பாக்கி, கத்தி, யானை, சிங்கம், புலி போன்ற வன் பொருள்களைக் கொடுத்து வளர்க்கும் பெற்றோர், பெண் குழந்தைகளுக்கு, பொம்மைச் சட்டிப்பானைகள், பார்பி மொம்மை, மரப்பாச்சிப் பொம்மை போன்றவற்றைக் கொடுத்து வளர்க்கிறார்கள். வளர்க்கும் போதும் பெண் குழந்தைகளுக்கு அதைச் செய்யாதே! இதைச் செய்யாதே! அங்கே விளையாடாதே! இங்கே விளையாடாதே! எனத் தடைகள்.

பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்றுவரும் பெண் பிள்ளைகள் உரிய நேரத்தில் வீட்டுக்கு வந்தே ஆக வேண்டும். இல்லையென்றால், வயிற்றில் கட்டிய நெருப்பு தெருவெங்கும் பற்றிக்கொள்ளும். ஆண் பிள்ளைகளுக்கு இப்படியில்லை. எப்போது வேண்டுமானாலும் வரலாம். எங்கு வேண்டுனாலும் செல்லலாம். பெண்களுக்குக் கல்வி பயிலுவதிலும் தடை மேல் தடைகள்.

தப்பித்தவறி, வேலைக்குச் சென்றுவிட்டால், அங்கு என்றேனும் வேலைச்சுமை காரணமாகச் சிறிது நேரங்கழித்து வீட்டுக்கு வந்தால், அவளின் கற்பின்மீது களங்கம். ஆண்கள் நேரங்கழித்து வீட்டுக்கு வந்தால், அவனுக்குக் கடுமையான வேலை எனப் புகழாரம்.

ஆண்கள் வேறு பெண்களுடன் தொடர்பு வைத்திருந்தால், அதை வீரமாகக் கருதி, இல்லத்துப் பெண்கள் அதைப் பெரிதுபடுத்தாமல் அவனை அப்படியே ஏற்றுக்கொண்டு வாழவேண்டும்.

இதையே ஒரு பெண் செய்திருந்தால், அவள் சோரம் போய்விட்டாள் என்று கூறி அவளைக் கொல்வதும், தற்கொலைக்குத் தள்ளுவதும், குடும்பத்தில் இருந்து தள்ளிவைப்பதும் குமுக வழக்கம்.

இதையெல்லாம் மீறி ஒரு பெண் பொதுவாழ்க்கையில் வெற்றிபெற முடியுமா? குறிப்பாக இலக்கிய உலகில் சாதித்துக் காட்ட முடியுமா? சங்ககாலப் பெண்கள் முடியும் எனக் காட்டியிருக்கிறார்கள். அவர்களைப் பார்க்கலாம்:

சங்கப் பாடல்களின் மொத்த எண்ணிக்கை 2381. இவற்றில் ஆண்பாற் புலவர்களும் பெண்பாற் புலவர்களும் உள்ளடங்கிய 473 புலவர்களின் பெயர்கள் காணக் கிடைக்கின்றன. பேராசிரியர் எஸ். வையாபுரிப்பிள்ளை தம் சங்க இலக்கியப் பதிப்பில் 30 பெண்பாற் புலவர்களைக் குறிப்பிடுகிறார். அவர்கள்,

1. அவ்வையார்
2. வெள்ளி வீதியார்
3. காக்கைபாடினியார் நச்சௌ;ளையார்
4. ஒக்கூர் மாசாத்தியார்
5. கழார்கீரெனயிற்றியார்
6. கச்சிப்பேட்டு நன்னாகையார்
7. மாறோக்கத்து நப்பசலையார்
8. நக்கண்ணையார்
9. காமக்கண்ணியார்
10. பூங்கண் உத்திரையார்
11. நெடும்பல்லியத்தை
12. மாற்பித்தியார்
13. அஞ்சியத்தை மகள் நாகையார்
14. அஞ்சில் அஞ்சியார்
15. ஆதி மந்தி
16. ஊண்பித்தை
17. காவற்பெண்டு
18. குமிழி ஞாழலார் நப்பசலையார்
19. குறமகள்இளவெயினி
20. குறமகள் குறியெயினி
21. தாயங்கண்ணியார்
22. நப்பசைலையார்
23. பாரி மகளிர்
24. பூதப்பாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு
25. பேய்மகள் இளவெயினி
26. போந்தைப் பசலையார்
27. வருமுலையாரித்தி
28. வெண்ணிக்குயத்தியார்
29. வெண்மணிப்பூதியார்
30. வெண்பூதியார்

இவர்களுக்கு மேலும், பெண்பாற் புலவர்கள் இருந்திருக்கலாம். அதேபோல், இவர்கள் அனைவரும், அவ்வையார் – காரைக் காலம்மையார - ஆண்டாள் போன்று இயல்பான இல்லற வாழ்க்கையைத் துறந்தவர்கள் என்று சொல்லி விட முடியாது. இவர்கள் வள்ளுவரின் அன்பு வாழ்க்கையை வாழ்ந்திருக்கலாம். அதற்குச் சான்றாகச் சில பாடல்கள்:

அவ்வையின்,

முட்டுவேன் கொல்? தாக்குவேன் கொல்?
ஓரேன், யானும்ஓர் பெற்றிமேலிட்டு
'ஆ அஒல்' எனக்கூவுவேன் கொல்?
அலமரல் அசைவளி அலைப்ப,என்
உயவுநோய் அறியாது துஞ்சம் ஊர்க்கே (குறு. 28)

ஆத்திசூடி பாடிய அவ்வையார்தான் இந்தப் பாடல் பாடிய அவ்வையார் என்று சொல்வதற்கு இல்லை.

என் தலைவன் இல்லாமல் நான் தவித்திருக்கும் இவ்வேளையில் நன்றாக உறங்கிக் கொண்டிருக்கும் ஊரைச் சாடுகின்ற இந்த அவ்வையார் பெரும்பாலும் இல்லற வாழ்க்கையில் இன்புற்று வாழ்ந்தவராகத்தான் இருப்பார் என்று கருதுதற்கு இடமிருக்கிறது. இந்தப் பாடல் அப்படித்தான் உணர்த்துகிறது.

குறுந்தொகையில் இடம் பெற்றுள்ள வெள்ளிவீதியாரின் ஒருபாடல்:

அரிதோ தானே நாணே நம்மொடு
நனிநீடு உழந்தன் றுமன்னே, இனியே
வான்பூங் கரும்பின் ஓங்குமணற் சிறுசிறை
தீப்புனல் நெரிதா வீந்துஉக் காஅங்கு

தாங்கும் அளவைத் தாங்கி
காமம் நெரிதரக் கைந் நில்லாதே

இப்பாடல், தலைவன் இன்றித் தவிக்கின்ற ஒரு பெண் தன் தோழியிடம் கூறுவதாக அமைந்த பாடல். நாணம் நம்மைவிட்டுப் பிரியாமல் பற்றிக் கொண்டுள்ளது. தலைவன் இன்றி, அவன் நினைவால் காமம் மிகுந்து தாக்குவதால் இயல்பாக இருக்கக் கூடிய நாணம் என்னிடம் இருந்து நீங்கி விடுமோ? என்று தலைவி தன்னுடைய அச்ச உணர்வைத் தோழியிடம் எடுத்துரைப்பதாக அமைந்த பாடல் விளக்குகிறது. இதுபோன்று பாடுகின்ற எந்தப்பெண்ணும் துறவறத்தை ஏற்ற பற்றற்ற பெண்ணாக இருக்க முடியாது என்றே எண்ணத் தோன்றுகிறது. வெள்ளிவீதியாரும் இல்லறத்தைப் போற்றியவராகவே இருந்திருக்கக் கூடும்.

சங்ககாலம் - சங்கம் மருவிய காலம் - பக்தி இலக்கியக் காலம் ஆகியவற்றைக் கடந்து 20ஆம் நூற்றாண்டில் பெண் கவிஞர்களின் இலக்கியப் பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாக அமைந்துள்ளது. தமிழ்ச்சூழலில், இருபதாம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் பெண்கள் எழுதத் தொடங்கியிருந்தாலும் எழுபதுகளில்தான் பெண் கவிஞர்களின் கவிதைத் தொகுதிகள் அதிக அளவில் வெளிவரத் தொடங்கின. அவற்றுள், இரா.மீனாட்சியின் நெருஞ்சி (1970), சுடுபூக்கள்(1978), திரிசடையின் பணியால் பட்ட பத்து மரங்கள் (1976) ஆகிய நூல்கள் இலக்கிய உலகின் கவனத்திற்குரியதாகக் கருதப்பட்டன.

அதைத் தொடர்ந்து எண்பதுகளில் பெண் கவிஞர்கள் அதிக அளவில் எழுதத் தொடங்கினர். தொண்ணூறுகளிலும் அதற்குப் பின்னரும் அவர்களின் கவிதைத் தொகுப்புகள் அதிகமாக வெளிவந்தன. இந்தக் காலக்கட்டத்தில் தான் பெண் கவிஞர்கள் பலரின் கவிதைகள் பரவலாகக் கவனிப்புக்கு உள்ளாயின.

கி.விஜயலட்சுமி, சுகந்தி சுப்பிரமணியன், இரா.ஆனந்தி, கனிமொழி, ப.கல்பனா, இளம்பிறை, குட்டிரேவதி, சல்மா, அ.வெண்ணிலா, சே.பிருந்தா, திலகபாமா, உமாமகேஸ்வரி, வத்ஸலா, பெருந்தேவி, மாலதி மைத்ரி, கிருஷாங்கினி, சுகிர்தாரணி, ரெங்கநாயகி, வைகைச்செல்வி, ரிஷி ஆகியோர் பெண் கவிஞர்களில் குறிப்பிடத்தக்கவர்களாக அறியப்படுகின்றனர்.

இவர்களுடன் புதுச்சேரியைச் சேர்ந்த அழகு நிலா, பூங்கொடி பராங்குசம், மணிமேகலை குப்புசாமி, கரசூர் பத்ம பாரதி, முனைவர் கு.தேன்மொழி, கு.அ.தமிழ்மொழி, வ.விஜயலட்சுமி, கலாவிசு, தேவகி ஆனந்து மற்றும் மனுஷி ஆகியோரும் தங்கள் பங்களிப்பைத் தமிழ்க்கவிதை வளர்ச்சிக்கு அளித்துள்ளனர் என்று முனைவர் சுந்தரமுருகன் அவர்கள் தம்முடைய இருபதாம் நூற்றாண்டுப் பெண்கவிஞர்கள் என்னும் நூலில் குறிப்பிடுகிறார். அவர்களின் சில பாடல்கள்:

வைகைச் செல்வி

காதலித்த பொழுதுகளில்
காலை முதல் மாலை வரை
அப்பாவை அம்மாவைத்
தப்பாமல் தரிசிப்பாய்
அக்கா தங்கையிடம்
சக்கரைச் சிரிப்பலைகள்
வண்ணத்திரைப் பார்ப்பதற்கு
அண்ணன்தான் கூட்டாளி
ஆனால் அத்தனை பேர்களையும்
திருமணம் என்றவுடன்
அறுத்தெறியும் பாதகனே!
கல்யாணம் ஆகிவிட்டால்
கல்லாகி விடுவேனோ?
கயவர்கள் உலகத்தில்
சுயநலமே வாழ்க்கையெனில்
எனக்கு-
பந்தக்கால் தேவையில்லை
சொந்தக்கால் போதுமடா. (அம்மி, ப.55)

இளம்பிறை

வந்தவுடன்
ஆடை தளர்த்திக் கொள்ளல்
அழுதுவிட்டு
முகம் கழுவிக் கௌ;ளல்
தலைவலிக்குத்
தைலமிட்டுக் கொள்ளல்
வேலைகளை
முடிக்கும்வரை உறங்கி
குழந்தை தந்த நிம்மதி
இவற்றினூடே உன்னை…
அறியாமல் அல்ல.
உன் கபடங்களோடு சேர்த்தே
அணைத்துக் கொள்கிறேன். (முதல் மனுசி, ப.38)

கரசூர் பத்மபாரதி

எங்களை இழிவுபடுத்தும்
இன்பர்களே!
இதோ வருகிறோம்
வந்து கொண்டேயிருக்கிறோம்
காவியச் சீதைகளாய் அல்ல
கலியுகச் சீதைகளாய் - ஆம்
சந்தேகத் தீக்குளித்து
சந்தோஷ இராமருக்கு
இராமாயணச் சீதைகளாய்
வாழ்வதைவிடச்
சந்தோஷிக்கும் சாமானியர்களைச்
சந்தேகத் தீக்கு
இரையாக்கி
இன்றைய சராசரிகளாய்
வாழ்ந்துவிட்டுப் போகிறோம்.
(இளமை நதியில் முதுமை ஓடங்கள், பக்.4-5)

கனிமொழி

அர்த்தநாரீஸ்வரனின்
அழகிய பாதியாய்
அமர்ந்திருப்பவள்
அவனுள் அடங்கிப் போனது
போல்தான் நாமும்…
ஏற்றி வைக்கப்பட்டதென்னவோ
உச்சாணிக்கொம்பில்…
உள்ளதென்னவோ துணைமந்திரியாய்… (கருவறை வாசனை, ப.20)

சுகந்தி சுப்பிரமணியன்

பசியில்லாத போதும்
சுவையான உணவுண்டு
வெற்றிலை மெல்லும் மனிதர்கள்
வெளியே சக்கைகளாய்க் கிடைத்ததைத்
தின்னும் பிச்சைக்காரர்கள்
வாசலில் ஓடி விளையாடும்
ஒரு குழந்தை
குழந்தை மனம்
வேண்டும் எனக்கு (மீண்டெழுதலின் ரகசியம், ப.24)

தமிழச்சி தங்கபாண்டியன்

திறந்திருக்கும்பொழுது
தீர்மானங்களின்றியும்
மூடப்பட்டிருக்கையில்
மௌனமாயும்
அனுமதிக்கப்படாதனவற்றிற்குத்
தாழ்ப்பாளிட்டும்
இருக்குமாறு கதவுகள்
அறிவுறுத்தப்படுகின்றன
ஆயினும்
ஆவை
இல்லத்திற்கு மிக
இன்றியமையாதவை (எஞ்சோட்டுப் பெண், ப.131)

பூரணி

பிரசவிக்கும் பசுவை வலம்வந்து
அரசனின் நிபந்தனைக்கேற்ப
அதற்குப் பொருள் கற்பித்து
அகலிகையை மணந்தான் முனிவன்
முனிசாபத்துக்கு அஞ்சிய அரசன்
மணமுடித்துக் கொடுத்தான் மகளை
உள்ளமும் விருப்பமும்
பெண்களுக்கு உண்டு என்ற
எண்ணமே இருவருக்கும் இல்லை! (பூரணி கவிதைகள், ப.110)

மீனாட்சி. இரா

பட்டியலை
எழுத ஆரம்பித்தேன்
ஒளவையார்
காரைக்கால் அம்மையார்
ஆண்டாள்
பாரதி
பாரதி
பாரதி
ஏன் எழுதுவதை நிறுத்திவிட்டாய்?
புதிய எழுத்துக்கள்
ஆய்தத்துடன் எதிரே நடந்து வருகின்றன
எழுது
பட்டியலைத் தொடர்ந்து எழுது
உன் கையெழுத்து
அழகாகவே இருக்கிறது பெண்ணே
ஆண் எழுத்தைவிட
அர்த்தம் ததும்பி இருக்கிறது.
மெய்யும் உயிர்மெய்யும்
உயிரோடு தகித்துக் கொண்டிருக்கிறது
எதிராளியின் போலியில் மயங்கி
இழந்துவிடாதே வரி வடிவங்களை.
எஃகிலேயெ எழுது
இறகை மட்டும் நீவிவிட மறந்துவிடாதே. (வாசனைப்புல், ப.18)

வெண்ணிலா

உள்ளே வீசப்படும்
செய்தித்தாளை
அப்பாவிடம் கொடுக்கவும்
கீரை விற்பவள் வந்தால்
அம்மாவைக் கூப்பிடவும்
கற்றுக்கொள்கிறது குழந்தை
யாரும் கற்றுத் தராமலேயே (நீரிலலையும் முகம், ப.79)

வத்சலா

அதிகம் இல்லை பெண்ணே!
சிறிதளவு தங்கமும் வெள்ளியும்
வசதிக்கேற்ப வாகனமும்
குடித்தனம் நடத்த பாத்திரங்களும்
ஆயுசுக்கும் விசுவாசமும் உழைப்பும்
வன் பசிகளுக்குணவும் தந்து
நீ
குருடாய் செவிடாய் ஊமையாய்
முடமாய்
மூடமாய்
நின்றால் போதும் (சுயம், ப.32)

கனிமொழி

அவள் உழைத்த காசில்,
தினம் குடித்துவிட்டு வந்து
அவளை அணைக்கும் கணவனை,
பத்தினியார் வரிசையில் இடமின்றிப்
போகுமோ? என நிதம்
பொறுத்துக்கொள்வாள் (கருவறை வாசனை, ப.28)

பொன்மணி வைரமத்து

நான்கு சுவர்களுக்குள்
நங்கையவள் சிறைப்பட்டாள்
அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்கிற
நான்கு திரைகளுக்குள்
நங்கையவள் மறைந்திருந்தாள்
நான்கு பேர் வம்புக்கே
நடுங்கி வீட்டின் உள்ளிருந்தாள்
……
…….
நான்கு பேர் சுமக்கின்ற
நாளில்தான் சுதந்திரமாய்
வீதிகளுக்கு வந்தாள் (பொன்மணி வைரமுத்து கவிதைகள், ப.109,107)

முனைவர் கு.தேன்மொழி

சேலையைத் தெரியும்
யாருக்கும் தெரிவதில்லை
உசுரு+மனசுஸ்ரீபெண் (உசுரு+மனசுஸ்ரீபெண், ப. 78)

நீ வள்ளுவன் இல்லை
நான் வாசுகி இல்லை
உயிர்கள். (உசுரு+மனசுஸ்ரீபெண்,, ப.34)
திலகபாமா

தாவணி போட்டது என்
கலைகளுக்குத் தடை
கால்களுக்குத் தடை
விரல்களுக்குத் தடை
எண்ணங்களுக்குத் தடை
படிப்புக்குத் தடை (சிறகுகளொடு அக்னிப்பூக்களாய், ப.54)

சுகிர்தராணி

எதை எதை
சுமக்க வேண்டியிருக்கிறது
பிறந்ததும்
பெண்ணென்ற பழித்துணியை
வளர்ந்தபின்
கக்கத்தில் இடுக்கிய தம்பியும்
தொங்கிய கையில்
தூக்குச் சட்டியை.

பருவம் கண்டதும்
கணவனை
உயிரின் திரட்சியான
கர்ப்பத்தை
பின் பிள்ளையை, குடும்பத்தை
நெஞ்சிலும்
வயிற்றிலும்
அவரவர் காலத்தில்
அவரவரைச் சுமந்து
உருமாறிவிட்டன உறுப்புகள்

மூளியாகும் உடம்பைவிட
காற்றுக்கும் மழைக்கும்
அழுத்தமாய் நிற்கும்
சுமைதாங்கிக் கல்லாய்
பிறந்து தொலைக்கலாம். (கைப்பற்றி என் கனவு கேள், ப.50)

சல்மா

எண்ணற்ற ஜடப்பொருட்களுடனும்
ஒரு மனிதனோடும்
தொடரவியலா வாழ்க்கை
தொடர்கிறது அதே அறையில் (ஒரு மாலையும் இன்னொரு மாலையும், ப.21)

குட்டி ரேவதி

வருடிப் பார்த்திருக்கிறாயா? என் காமத்தை
ஒரு புதிய காகித்தில் எழுத விரும்புவதைப் போலவோ
அல்லது
ஒரு குழந்தையின் விரல்களைப் பற்றும்
ஆர்வத்துடனோ? (முலைகள், ப.31)

இன்று கவிஞர்களாக அறியப்பட்டிருக்கும் சில பெண் கவிஞர்களின் கவிதைகளை எடுத்துக் காட்டியிருக்கிறேன். அதில்,

பந்தக்கால் தேவையில்லை
சொந்தக்கால் போதுமடா!

என்னும் வைகைச் செல்வியின் பாடல் அடிகளும்

அழுத்தமாய் நிற்கும்
சுமைதாங்கிக் கல்லாய்ப்
பிறந்து தொலைக்கலாம்

என்னும் சுகிர்தராணியின் பாடல் அடிகளும்,

உன்னை அறியாமல் அல்ல
உன் கபடங்களோடு சேர்த்தே
அணைத்துக்கொள்கிறேன்

என்னும் இளம்பிறையின் பாடல் அடிகளும், திருமண வாழ்க்கையில் ஒருவித வெறுப்புணர்வையும் சலிப்பையும் எடுத்துக்காட்டுகின்றன.

இன்னைய சராசரிகளாய்
வாழ்ந்துவிட்டுப் போகிறோம்

என்னும் கரசூர் பத்மபாரதியின் பாடல் அடிகளும்,

பத்தினியார் வரிசையில் இடமின்றிப்
போகுமோ? என நிதம் பொறுத்துக் கொள்வாள்

என்னும் கனிமொழியின் பாடல் அடிகளும்,

நான்குபேர் சுமக்கும்
நாளில்தான் சுதந்திரமாய்
வீதிகளுக்கு வந்தாள்

என்னும் பொன்மணி வைரமுத்துவின் பாடல் அடிகளும் இந்தக் குமுகத்தின்பால் பெண்கள் கொண்டிருக்கும் அச்ச உணர்வை வெளிப்படுத்துகின்றன.

ஏற்றி வைக்கப்பட்டதென்னவோ
உச்சாணிக் கொம்பில்
உள்ளதென்னவோ துணைமந்திரியாய்

என்னும் கனிமொழியின் பாடல் அடிகள் பெண்கள் ஏய்க்கப்படுதலை வெளிப்படுத்துகின்றன.

வாசலில் ஓடி விளையாடும்
ஒரு குழந்தை மனம்
வேண்டும் எனக்கு!

என்னும் சுகந்தி சுப்பிரமணியனின் பாடல் அடிகளும்,

உள்ளமும் விருப்பமும்
பெண்களுக்கு உண்டு என்ற
எண்ணமே இருவருக்கும் இல்லை

என்னும் பூரணியின் பாடல் அடிகளும்,

சேலையைத் தெரியும்
யாருக்கும் தெரிவதில்லை
உசுரு + மனசு ஸ்ரீ பெண்

என்னும் கு.தேன்மொழியின் பாடல் அடிகளும்,

வருடிப் பார்த்திருக்கிறாயா
என் காமத்தை?

என்னும் குட்டி ரேவதியின் பாடல் அடிகளும் பெண்களின் ஏக்கத்தை வெளிப்படுத்துகின்றன.

திறந்திருக்கும்பொழுது
தீர்மானங்களின்றியும்
மூடப்பட்டிருக்கையில்
மௌனமாயும்
அனுமதிக்கப்படாதனவற்றிற்குத்
தாழ்ப்பாளிட்டும்
இருக்குமாறு கதவுகள்
அறிவுறுத்தப்படுகின்றன

என்னும் தமிழச்சியின் பாடல் அடிகளும்,

கற்றுக்கொள்கிறது குழந்தை
யாரும் கற்றுத் தராமலேயே!
என்னும் வெண்ணிலாவின் பாடல் அடிகளும்,
நீ
குருடாய், செவிடாய், ஊமையாய்
முடமாய், மூடமாய்
நின்றால் போதும்

என்னும் வத்சலாவின் பாடல் அடிகளும்

தாவணி போட்டது என்
கலைகளுக்குத் தடை
கால்களுக்குத் தடை
விரல்களுக்குத் தடை
எண்ணங்களுக்குத் தடை
படிப்புக்குத் தடை

என்னும் பாடல் அடிகளும் பெண்கள் அடிமைத்தனத்தைச் சகித்துக் கொண்டு வாழ்வதை எடுத்துக் காட்டுகின்றன.

எதிராளியின் போலியில் மயங்கி
இழந்து விடாதே! வரி வடிவங்களை
எஃகிலேயே எழுது!

என்னும் இரா.மீனாட்சியின் பாடல் அடிகளும்,

நீ வள்ளுவன் இல்லை
நான் வாசுகி இல்லை
உயிர்கள்

என்னும் கு.தேன்மொழியின் பாடல் அடிகளும் பெண் உரிமைக் குரலை எழுப்புகின்றன.

அற்றைப் புலவர்கள் அவ்வையாரும் வெள்ளி வீதியாரும் தலைவனின்றித் தவிக்கும் தங்களின் காம உணர்வையும் தனிமையையும் வெளிப்படுத்திய பாங்கு அவர்கள் இல்லற வாழ்க்கையை, இன்ப வாழ்க்கையைத் துய்த்தவர்கள் என்பதை எடுத்துக் காட்டுகிறது.

ஆனால், இற்றை நாளின் பெண் கவிஞர்கள் இல்லற வாழ்க்கையில் நம்பிக்கையின்மையையும், வெறுப்புணர்வையும். சலிப்புத் தன்மையையும், யாவற்றையும் சகித்துக்கொண்டும், பொறுத்துக் கொண்டும், வேறுவழியின்றி ஏற்றுக் கொண்டும் வாழ்வதையும் வெளிப்படுத்தியுள்ளர்.

சிலர், தங்களின் ஏக்கத்தையும், உரிமைக் குரலையும் பதிவு செய்துள்ளனர். இதிலிருந்து, இற்றை நாளின் பெண்கவிஞர்கள் இல்லற வாழ்க்கையைக் கசப்புணர்வுடனே நடத்துகிறார்கள் என்பதை அறிந்துகொள்ள முடிகிறது.

இவை, பெண்கள் எவருமே அன்பு வாழ்க்கை வாழ்வதில்லையா? இன்ப வாழ்க்கை வாழ்வதில்லையா? என்ற ஐயத்தை ஏற்படுத்தினாலும், கவிஞர்கள் சற்று மிகையாகப் பாடியுள்ளதாகக் கருதினாலும், பெண்கள் இன்னமும் அடிமைப்படுத்தப் பட்டவர்களாகவே இருக்கிறார்கள் என்பதே உண்மை.

இந்த அடிமை நிலையை அகற்ற முயற்சிக்காமல் பொதுவாழ்க்கையில் ஈடுபடும் பெண்கள் உரிமைக்குரல் எழுப்புவதற்குப் பதில் எதிர்க்குரல் எழுப்பித் தங்கள் வாழ்க்கையைத் தொலைத்து விடுவதுடன் தங்கள் குடும்பத்தினரையும் அமைதியிழக்கச் செய்து விடுகின்றனர். இதைத்தான் கவிஞர் ஞானக்கூத்தன் பொதுவாழ்க்கையில் ஈடுபடும் பெண்கள் தங்களின் வாழ்க்கையைத் தொலைத்து விடுகின்றனர் என்று கூறினார்போலும்.

பெண்கள் ஆண்களுக்கு இணையாகப் பார்க்கப்படவேண்டும், இணையாக நடத்தப்பட வேண்டும் என்றால் பெண் கவிஞர்கள் என்ன செய்ய வேண்டும்?

பெண்கள் கல்வி கற்றால், ஆண்களுக்கு இணையாக மதிக்கப்படுவர் என்ற கருத்தின் அடிப்படையில் கற்கும் உரிமையைப் பெற்றார்கள். ஆனாலும், ஆண்களுக்கு இணையான உரிமையைப் பெற்றார்களா? என்றால் இல்லை என்பதே பதிலாக இருக்கும்.

பெண்களின் பொருளாதாரம் உயர்ந்தால் ஆண்களுக்கு இணையாக மதிக்கப்படுவர் என்ற கருத்து முன் வைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் வேலைக்குச் சென்று பொருள் ஈட்டத் தொடங்கினர். இருந்தும், சமஉரிமை பெற்றார்களா? என்றால் இல்லை.

பெண்களுக்குச் சொத்துரிமை கிடைத்தால் சமஉரிமை பெற்று விடுவார்கள் என்றார்கள். சொத்துரிமையும் அளிக்கப்பட்டது. ஆனாலும் இன்னும் சமஉரிமை கிடைத்தபாடில்லை.

சரி, என்ன செய்தால் பெண்களுக்கு ஆண்களுக்கு இணையாக உரிமைகள் கிடைக்கும். எப்பொது சமமாக மதிக்கப்டுவர்?

வீட்டிலும், நாட்டிலும் முடிவெடுக்கும் அதிகாரம் கிடைத்தால் 'ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காணீர்" என்னும் பாரதியின் கூற்று மெய்யாகும் என்றனர். அது மட்டும் போதுமா? போதாது.

பெண்கள் ஆண்களுக்கு இணையாக உடல் வலிமை பெறவேண்டும். திருப்பி அடிப்பான் என்று தெரிந்தால் எவனும் அடிப்பதற்கே அச்சப்படுவான். எனவே, பெண்கள் உடல் வலிமை பெற்றால், வாழ்விடத்தில், பயிலகத்தில், பணியிடத்தில், இன்னபிற இடங்களில் நிகழ்த்தப்படும் பாலியல் வன்கொடுமைகள் நடக்காது.

மணக்கொடை மற்றும் இன்னபிறவற்றின் பேரில் இல்லங்களில் நிகழ்த்தப்படும் குடும்ப வன்முறைகள் நிகழாது,

ஆண்களும், பெண்களும் அவரவர் வேலைகளை அவரவர் செய்ய வேண்டும் என்ற நிலை ஏற்படும். அப்படி ஒரு நிலை ஏற்பட்டால், ஆணுக்குப் பெண்ணோ அல்லது பெண்ணுக்கு ஆணோ அடங்கி நடக்க வேண்டிய நிலை இருக்காது.

இவை எல்லாவற்றையும் விட, மனத்தளவில் பெண்களும் தங்களைப் போன்ற ஒரு உயிர் என்ற எண்ணம் ஆண்களுக்கு ஏற்படும். பெண்களுக்கும் தாங்கள் எவர்க்கும் தாழ்ந்தவர்கள் அல்ல என்ற உள்ள உறுதி ஏற்படும். இருவருக்கும் இடையே அன்பு மேலோங்கும். அன்பு மேலோங்கினால்

கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
நன்றுஒன்று எண்ணக் கெடும்.

என்னும் திருவள்ளுவரின் வாய்மொழியின்படி, ஒருவர் கொல்லுகின்ற அளவுக்குப் பெருந்துன்பம் தரினும், அவர்செய்த நன்மை ஒன்றை நினைத்துப்பார்த்தால், அவரைப் பொறுத்தாற்ற முடியும்.

இந்த நிலையை எய்தப் பெண் கவிஞர்கள் தங்கள் படைப்புகளைத் தரவேண்டும்.

பாலை மணலில் நடப்பதும், கடலில் பயணிப்பதும், விண்வெளியில் பறப்பதும் போலிருந்த இலக்கணமற்ற இலக்கியத்திற்கு வாய்மொழி இலக்கியத்தையும், அதைத் தொடர்ந்து ஏற்பட்ட ஏட்டிலக்கியத்தையும் அடிப்படையாகக் கொண்டு இலக்கணப் பாதை அமைத்து இலக்கியப் பயணத்தை எளிதாக்கினர். அந்த இலக்கணத்தைப் பின்பற்றி இலக்கியங்கள் படைக்கப்பட்டன. எனவே,

அச்சமும் நாணும் மடனும் முந்துறுத்த
நிச்சமும் பெண்பாற்கு உரிய என்ப (தொல். கள. 96)

கற்பும், காமமும், நற்பால் ஒழுக்கமும்,
மெல்இயல் பொறையும், நிறையும் வல்லிதின்
விருந்து புறந்தருதலும், சுற்றம் ஓம்பலும்,
பிறவும் அன்ன கிழவோள் மாண்புகள்
முகம்புகல் முறைமையின் கிழவோற்கு உரைத்தல்
அகம்புகல் மரபின் வாயில்கட்கு உரிய. (தொல் கற். 150)

என்று தொல்காப்பியர் பாடியதையும்,

ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே

என்ற புறநானூற்றுப் பாடலையும்,

வினையே ஆடவர்க்கு உயிரே – மனைஉறை
மகளிர்க்கு ஆடவர் உயிரே

என்னும் குறுந்தொகைப் பாடலையும்,

தற்காத்து, தற்கொண்டான் பேணி, தகைசான்ற
சொற்காத்து சோர்வுஇலாள் பெண். (குறள். 56)

பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மை உண்டாகப் பெறின்

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை

போன்ற குறட்பாக்களையும், இன்னபிற பாடல்களையும் பெண்களுக்கு எதிரான பாடல்கள் என்று கருத்துரைப்பதை விடுத்து, அற்றைக் காலத்தில், நடைமுறையில் இருந்த வாழ்வியல் நடப்புகளை அடிப்படையாகக் கொண்டு தொல்காப்பியர் முதலானோர் பெண்ணியல்புகளையும் ஆணியல்புகளையும் வகுத்துப் பாடல்களை இயற்றியிருக்கலாம்.

ஆனால், ‘பழையன கழிதலும், புதியன புகுதலும் வழுவல கால வகையினானே’ என்பதற்கேற்பக் கால மாற்றத்தைக் கருத்தில்கொண்டு, "அச்சமும் நாணும் நாய்களுக்கு வேண்டும்" என்று பாரதி பாடியதைப் போன்று ஆண்களையும் பெண்களையும் சம உரிமையுள்ள உயிர்களாகப் பார்க்கக்கூடிய புதிய வரையறைகளை வகுத்துக் கொள்ளலாம்.

இந்தப் பணிகளையும் பெண் கவிஞர்கள் தங்கள் படைப்புகளின்வழி முன்னெடுக்கவேண்டும். அப்படிச் செய்தால்,

ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்
அறிவில் ஓங்கி வையம் தழைக்குமாம்

என்று பாரதி பாடுவதுபோன்று வையம் தழைத்தோங்கும்.

- புதுவை யுகபாரதி