libraryபாண்டிய மன்னர்களின் துறைமுக நகரான கொற்கையிலிருந்து பயணம் மேற்கொண்டால், தொடர்ச்சியாக சாலைகளின் இருபக்கங்களிலும் வாழை மரத்தோப்பாக காட்சியளிக்கும். சில இடங்களில் ஏக்கர் கணக்கில் அமைந்த குளங்களும் நம் பார்வைக்கு தென்படும்.

சுமார் 80 கிலோ மீட்டர் பயண தூரத்தில் நாம் பாண்டவர்மங்கலம் என்ற கிராமத்தை அடையலாம். கொற்கை பகுதி பச்சைப்பசேலென இருக்க கோவில்பட்டி வட்டாரத்தின் கிராமப்பகுதிகள் கரிசல் மண் காடுகளாக அமைந்திருக்கும்.

கோவில்பட்டி நகரின் நுழைவுவாயில் போல் அமைந்துள்ள பாண்டவர்மங்கலம் கிராம வாயிலில் அமைந்துள்ள அறிவுத்தந்தை பெரியார் சிலை நமக்கு வழிகாட்டும். இங்கு மழைத் தண்ணீருக்குத்தான் பஞ்சம், மனதின் அறிவுக்கு எந்தவொரு பஞ்சமுமில்லை. அறிவுப் பசியெடுத்தோருக்கு மனதார அறிவுக் களஞ்சியங்களான படைப்புகளை அள்ளித் தருவது கோவில்பட்டி.

தமிழகத்தின் தென்கோடியில் தூத்துக்குடி மாவட்டத்தில், அமைந்துள்ளது கோவில்பட்டி நகரம். இது ஒரு தீப்பெட்டி தொழிற்சாலைகள் மற்றும் நூற்பாலைகள் நிறைந்த தொழில் நகரமாகும்.

தற்போது கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு (கடலை மிட்டாய்க்கு 18 சதவீதம் புளுவு வரிவிதித்திருந்த மத்திய அரசால்) மத்திய அரசாங்கத்தால் ‘புவிசார் குறியீடு” (Geographical Indication tag) வழங்கப்பட்டுள்ளது.

சிறப்பு நிலை நகராட்சியாகவும் விளங்குகிறது கோவில்பட்டி நகரம். மாவட்டத்தில் தூத்துக்குடிக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய நகரம் இதுவாகும். 49 சதுர கிலோமீட்டர் (19 சதுரமைல்கள்) பரந்து விரிந்தது இந்நகரம். 2011 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, ஆண்: பெண் பாலின விகிதம் 1000:1065 என தேசிய சராசரியைக் காட்டிலும் உயர்ந்து நிற்கிறது கோவில்பட்டி. கல்வியறிவும் 81.27 சதவீதம் என தேசிய சராசரியை விட அதிகம்.

கோவில்பட்டி ஒரு குட்டி இந்தியா என்றால் அது மிகையல்ல. இந்து, முஸ்லீம், கிறிஸ்தவ, சீக்கிய, பௌத்த மற்றும் இதர சமயங்ககைப் பின்பற்றும் பலதரப்பட்ட மக்கள் வாழும் பூமி இது. வடக்கே ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் தலைநகரான ஸ்ரீநகரையும், தெற்கே கன்னியாகுமரியையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை -44 -ல் அமைந்துள்ளது கோவில்பட்டி நகரம்.

அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான வடகிழக்கு பருவமழைக் காலத்தில் ஏதோ கொஞ்சம் மழைப்பொழிவை பெறுகிறது கோவில்பட்டி நகரம். கோவில்பட்டியின் அருகில் 15 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது மகாகவி பாரதி பிறந்த எட்டயபுரம். எட்டயபுரத்தில் பாரதி பெயரில் நூலகமும் அமைந்துள்ளது.

கோவில்பட்டி அருகே கழுகுமலை கிராமத்தில் அமைந்துள்ள மலைப்பகுதியில் ‘சமணப்பள்ளிகள்” உள்ளன. தென்னிந்தியாவின் எல்லோரா குகைகள் என்று கழுகுமலை கிராம மலைப்பகுதி அழைக்கப்படுகிறது.

தூத்துக்குடி பாராளுமன்றத் தொகுதிக்குட்பட்டது கோவில்பட்டி நகரமாகும். கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் 1967 முதல் 1990 வரை நீண்ட காலம் சட்டமன்ற உறுப்பினராக மக்கள் பணியாற்றியவர் தோழர் அழகர்சாமி ஆவார்.

சாகித்திய அகாதெமி விருதுபெற்ற கு.அழகிரிசாமி, தாத்தா கி.ராஜநாராயணன், பூமணி, சோ.தருமன் ஆகியோர் கோவில்பட்டி கரிசல் மண்ணின் மைந்தர்கள்.

நிலம் மறுகும் நாடோடி எனும் நாவலை இவ்வுலக மக்களுக்கு வழங்கிய படைப்பாளி அய்யா, மே.சு.சண்முகம் அவர்கள் வாழ்ந்து வரும் ஊர் கோவில்பட்டி.

தோழர் ச.தமிழ்ச்செல்வன் எழுதிய ‘ஜிந்தாபாத் ஜிந்தாபாத்” என்ற நூல் கோவில்பட்டி மண்ணில் உழைக்கும் மக்களின் வரலாற்று தொகுப்பாகும்.

உழைக்கும் மக்களை பருவகால இதழான ‘கல்குதிரை” - ல் பயணிக்க வைப்பவர் எழுத்தாளர் கோணங்கி. மாயக் கண்ணாடி என்ற கதை நூலின் மூலம் குழந்தைகளுக்கு வளமான வாசிப்பனுபவத்தை தந்தவர் எழுத்தாளர் உதயசங்கர். ஆண்ட்ராய்டு கதைசொல்லி நாயகன் ‘சாரதி” -யும் இவ்வூர்க்காரரே.

கோவில்பட்டியில் எழுத்தாளர்களுக்கு பஞ்சமில்லை . ஆனால் மக்களின் வாசிப்பு நிலை என்ன? இந்த கேள்விக்கு விடை தருகிறது கோவில்பட்டி மந்தித்தோப்பு ரோட்டில் அமைந்துள்ள ‘பாரதி இல்லம்”.

உழைக்கும் மக்களால் கட்டப்பட்ட இந்த இல்லத்தின் அமைப்பு நல்ல காற்றோட்டமான மனதிற்கு இதமான இடமாகும்.

பெரிய பெரிய புத்தகமெல்லாம் எழுந்த இடமடா, பல அரிய பெரிய தத்துவமெல்லாம் விளைஞ்ச நிலமடா என்ற பாடல் வரிகளுக்கேற்ப, இந்த பாரதி இல்லம் வாசிப்பின் பக்கம் மக்களை ஈர்க்கும் பணியினை செவ்வனே செய்து வருகிறது.

18.10.2020 அன்று பாரதி இல்லத்தில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் உழைக்கும் மக்கள் திரளாக கலந்து கொண்டனர். பல திருமணங்கள் மற்றும் விசேசங்கள் நகரின் பல பகுதிகளில் நடைபெற்ற அந்நாளிலே, நடைபெற்ற சிறுகதைத் தொகுப்பு வெளியீட்டு விழாவிற்கு உழைக்கும் வர்க்க மக்கள் திரளாகக் கூடியிருந்தது வாசிப்பின் மீது மக்களுக்கு உள்ள ஆர்வத்தை பறை சாற்றுவதாக இருந்தது.

வந்திருந்த உழைக்கும் மக்கள் வெறுமனே கூடிக் களைபவர்களாக இல்லாமல், தாங்கள் வாசித்த சிறுகதைத்தொகுப்பு குறித்து தங்களின் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

பாடுபட்டு உழைத்த மக்கள் பாரினிலே ஆள வேண்டும் என்ற சிறுகதைத் தொகுப்பின் முன்னுரையை 90 வயதைக் கடந்தாலும் இன்றும் பல இளையோருக்கு எழுத்துலகில் வழிகாட்டியாக செயல்படும் அய்யா மே.சு.சண்முகம் அவர்கள் எழுதியுள்ளார்.

புத்தக வாசிப்பின் வாயிலாக அறிவுப்புரட்சி என்பதே அங்கு கூடியிருந்தவர்களின் முழக்கமாக இருந்தது. தொழிற்புரட்சி, பசுமைப் புரட்சி போல அறிவுப் புரட்சிக்கு தயாராக வேண்டும் என்பதே அங்கு பேசியவர்களின் நோக்கமாக அமைந்தது.

இந்த உலகம் அழிவுப்பாதையிலிருந்து மீண்டு அறிவுப்பாதையில் செல்ல புத்தக வாசிப்பு வழிகாட்டும்.

ஒரு பெண், ஒரு குழந்தை, ஒரு பேனா, ஒரு புத்தகம் இந்த உலகத்தை மாற்றும் என்றார் பெண் கல்விக்காக தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடிய மலாலா யூசுப்சாய்.

உலகம் என்றால் மக்கள். ஆக மக்களின் மனதை பண்படுத்தி முற்போக்கான முன்னேற்றப் பாதையில் செல்வதற்கான நடைமுறை செயல்திட்டங்களை விதைக்க புத்தக வாசிப்பு உறுதுணையாய் இருக்கும்.

தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகியவை பெரும்பாலான தமிழக மக்களால் பேசப்படும், எழுதப்படும், அறியப்படும், வாசிக்கப்படும் மொழிகள். வீட்டிலும், அலுவலகத்திலும், பள்ளிகளிலும் இன்னபிற இடங்களிலும் நாம் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உள்ள பெயர்ப்பலகைகள், சுவரொட்டிகள், துண்டுபிரசுரங்கள், கடிதங்கள், அரசாணைகள், செய்தித்தாள்கள், புத்தகங்கள் ஆகியவற்றை வாசித்து விரபம் அறிந்து கொள்கிறோம்.

வாசிக்கும்போது தமிழ் மிக எளிதாகப்புரியும். ஆங்கிலம் முதலில் சிரமமாகவும், பின்னர் வாசிக்க வாசிக்க எளிதாகப் புரிகிறதோ இல்லையோ, நம் தேவைகளுக்குப் பயன்படும் விதத்தில் மாறிவிடும். எந்த மொழியைப் படித்தாலும், வாசித்தாலும், எழுதினாலும் நம்மால் நம் தாய் மொழியின் வழியாக மட்டுமே சிந்திக்கும் திறனைப் பெற்றிருக்கிறோம். ஆக ஆங்கிலத்தில் வாசிப்பதை நம் மூளை தாய்மொழியான தமிழில் மொழிபெயர்த்தே நம்மை சிந்திக்க தூண்டுகிறது.

புத்தக வாசிப்பின் மூலம் அறிவு புரட்சிக்கு தயாராவோம் என்பது ‘பாரதி இல்லம்” தோழர்களின் இலக்கு.

இந்தியாவின் தொழிற்புரட்சி என்பது சோசிலிச ரஷ்ய நாட்டின் கைமாறு கருதாத உதவியுடன் நிறைவேறியது. நெய்வேலி நிலக்கரி நிறுவனம், சேலம் இரும்பு உருக்காலை ஆகியவை தமிழ்நாட்டில் ரஷ்ய நாட்டின் தொழில்நுட்ப உதவியுடன் மேற்கொள்ளப்பட்டவை ஆகும்.

இந்தியாவின் பசுமைப்புரட்சி , வேளாண் விஞ்ஞானி திரு.மான்கொம்பு சதாசிவன் சுவாமிநாதன் என்கிற எம்.எஸ். சுவாமிநாதன் கமிட்டி நிர்ணயித்த விவசாயப் பொருட்களுக்கான உற்பத்தி செலவுக்கான விலையை விவசாயிகளுக்கு ஆளும் அரசாங்கங்கள் வழங்கும் பட்சத்தில் மட்டுமே நிறைவேற வாய்ப்புள்ளது.

அறிவு புரட்சியானது, புத்தக வாசிப்பின் மூலம் ஒவ்வொரு தனிநபரும் முன்னெடுக்க வேண்டிய இலக்காகும்.

வாசிப்பின் ஆழம் பார்த்தவர்கள் எல்லாவிதமான சமகால பிரச்சனைகள் எனும் கடலில் மூச்சடக்கி முத்து எடுக்கும் உயிராற்றலை பெருகின்றார்கள்.

சமூக ஊடகங்களால் பழுதுபட்ட மக்களின் பார்வையினை புத்தக வாசிப்பு மீட்டெடுக்கும் என்பது எனது கருத்து.

நம் சந்ததிகள் நடக்கும் பாதையினை செழுமையாக்க நாம் அனைவரும் புத்தகங்கள் வாசிப்போம். வாசித்த கருத்துக்களை பகிர்ந்து கொள்வோம். ஓர் வாசிப்பு இயக்கமாக மாறுவோம். நாம் அனைவரும் அவ்வியக்கத்தில் பங்கெடுத்துக் கொள்வோம். வாருங்கள் தோழர்களே ‘பாரதி இல்லம்” உங்களை அழைக்கிறது.

‘கற்பிக்க விரும்புவோர் முன்னே வாருங்கள், கற்க விரும்புவோர் தயாராகுங்கள்”

‘யாருமே வாசிக்காத இந்த புத்தகத்தை நீங்கள் வாசிக்க தயாராகுங்கள்” - ஹியுகோ சாவேஸ் (முன்னாள் வெனிசுலா அதிபர்)

- சுதேசி தோழன்

Pin It