சில இணைய தளங்கள் புதிதாத எழுத வருபவர்களுக்கு அது நல்ல படைப்பாக இருந்தாலும் வாய்ப்பு தருவதில்லை. அவர்களுக்கு என்று ஒரு வட்டம் இருக்கிறது. அவர்கள் தான் திரும்பத் திரும்ப அதே தோசையை ஊற்ற வேண்டும். ஊத்தப்பம், ரோஸ்ட் என்று குறைந்த பட்ச மாற்று பற்றி கூட அவர்களுக்குத் தெரிவதேயில்லை. அதற்கு அவர்கள் சொல்லும் விளக்கம், 'எங்கள் வாசகர்கள் இதெல்லாம் விரும்ப மாட்டார்கள். அவர்கள் சோளப் பொரியையும் சோத்துக் கத்தாழையும் மட்டும் தான் விரும்புவார்கள்' என்பது.

என்ன சொல்வது... வாசகனை கீழ் மட்டத்திலேயே வைத்துக் கொண்டிருப்பது கூட முதலாளித்துவ மனப்பான்மை தான்.

இலக்கியவாதி என்றாலே தொண்டைக்குள் ஐஸ் வைத்துக் கொண்டு தான் பேச வேண்டுமா? அதாவது கழுத்தே திரும்பால் பேசுவது போல... அத்தனை இறுக்கம்... அத்தனை சுருக்கம்... இடியட்ஸ்.

இறுதியாக ஒன்று சொன்னார்.

"உங்கள் எழுத்து எங்கள் வாசகர்களுக்குப் புரியவில்லை..."

"அட வெங்காயங்களா...!" நான் சிரித்து விட்டேன்.

நல்லவேளை அவர் இன்னமும் நாங்கள் மரபில் இருந்தே விடுபடவில்லை என்று கூறவில்லை.

அற்புதங்களை கொய்யா மரத்தில் இருந்து பறித்து விடலாம் என்று பல இலக்கியவியாதிகள் நினைக்கிறார்கள். ஒரு போதும் அது நிகழாது. கொய்யா மர அற்புதங்களை கொய்யா மரங்களே உதிர்க்கும். அது தான் புரிதல். பறிப்பதல்ல... சித்திரம். பார்ப்பது. ஒருவர் செய்வதையே தொடர்ந்து செய்து தன்னை இன்னொருவரிடமிருந்து பெற்றுக் கொண்டே இருப்பதெல்லாம் தற்காலிகம், தவமல்ல. நவீனத்துவத்தின் நங்கூரம் தனக்குத் தானே வைத்துக் கொள்ளும் ஆப்பு. நவீனத்திலும் சிறகுகள் தான் வானம் பறக்க வைக்கும்... நம்பு.

ஒரு கட்டுரையை ஒரு நாள் முழுக்க எழுதித் தான் ஒரு வடிவத்துக்குக் கொண்டு வர முடிகிறது. ஒரு பெண் அதை வெகு சுலமபாக திருடி - ஆம் இது திருட்டு தான்.... அவள் திருடி தான் - அதன் சாராம்சத்தை மட்டும் சுருக்குப் பையில் வடிகட்டி தன் வெளியில் பதிந்து விடுகிறாள். கழுதை சுமக்கும் கனவான்கள் ஓடோடி விரும்புகிறார்கள். விருப்பம் எதுவென்று யாம் அறிந்தும் கையறு நிலையில்... ஆண் சுமந்து நிற்பது கலைஞனின் நிர்க்கதி என்றால் அதன் வேற்று வடிவம்....."அவன் எதிர்பாக்கறது என்கிட்ட இல்லையே" என்பதெல்லாம்.

எது பற்றியும் விசாலமான பார்வையற்று எடுத்தோம், கவிழ்த்தோம் என்று மரியாதையற்ற குரல்கள் திரும்பும் பக்கமெல்லாம் திக்கு முக்காட வைக்கின்றன. மிகவும் பிற்போக்குத்தனமான தட்டையான பார்வையில் ஆப்பம் சுட்டு சாப்பிட எண்ணுகிறார்கள். ஆப்பத்தை திருப்பி போடக் கூடாது என்று தெரியவில்லை என்பதுதானே சட்னிக்கு உகந்த நாக்கு கடித்தல். எனக்குத் தெரிந்து ஐ-டி-யில் மனித வளத்தில் பணி புரியும் ஒரு சினிமா ரசிகனுக்கு....(!) சினிமாவின் அடிநாதமும் விளங்கவில்லை, மனித வளத்தின் மகத்துவமும் புரியவில்லை. தான்தோன்றித்தனமான பேச்சு. தவளை வாய் நமநமப்பு. இது ஒரு சோறு பதம். ஓராயிரம் சோற்றுப் பருக்கைகள் கொரோனாவுக்கு சாகக் கிடக்கும் இந்த சூழலிலும் வெந்தும் வேகாமல் பரிணாமமற்றுக் கிடப்பதுதான் அத்வைதக் காட்டில் அட்டூழிய அம்பித்தனம்.

இந்த ஜூம்-ன் வழியாக சுற்றிச் சுற்றி வீட்டுக்குள் வந்தே பேசுவதெல்லாம் அராஜகப் போக்கு. அது என்ன மாதிரியான பாவனை என்றால்.. பேசுவோர்க்கு திடீரென தன்னை கடவுளாக நினைத்துக் கொள்ளும்... அல்லது தான் தான் சேகுவேராவின் வாரிசு என்று நம்பச் சொல்லும்.... தான் வடக்கிருந்து வந்த ஒரு ரட்சகர்.... மேற்குலகில் இருந்து வந்த கிடாரிஸ்ட்... போன்ற ஆழ்மன அகம்பாவங்களால் பீடிக்கப்பட்டு விடுகிறார்கள். என்னால் தான் இந்த மக்களுக்கு விடிவு என்பது போன்ற ஆகிருதிகளால் ....... ஆ... ஆ... க்.... ஆ... என்று இடையிடையே கொசு விரட்டும் பாவனைகளில் மூக்கில் முக்கி முனங்குகையில் அதை அத்தனை அருகில் ஜூம்-ன் வழியாகப் பார்க்க நேரிடுகையில் மிக அச்சுறுத்தலாக இருக்கிறது.

எங்கிருந்து வருகிறதோ தட்டையான மேம்போக்கான இப்படி ஒரு மேதாவித்தனம். இந்த உலகுக்கும் எனக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை போன்றொரு அசிங்கமான தமிழ் உச்சரிப்பு வேறு. எனக்கு என்பதை "எனாஅக்கு" .... வேண்டும் என்பதை "வாண்டும்".. என்று பேசுவது. சத்தியமாக அன்றொரு நாள் அலைபேசி மீது த்தூவென துப்பி விட்டேன்.

அவையடக்கம் கூட அகம்பாவம் என்று பாலகுமாரன் சொன்னதை மீண்டும் உரக்கச் சொல்கிறேன்.

மாற்றம் வேண்டும், மாற்றம் வேண்டும் என்று மாறிக் கொண்டிருப்பதை போல.. செய்ய வேண்டும் செய்ய வேண்டும் என்று செய்து கொண்டிருப்பதைப் போல... பேச பேச வேண்டும் பேச வேண்டும் என்று பேசிக் கொண்டிருப்பதைப் போல எல்லா யதார்த்தங்களும் எல்லா வகைப் புனைவுகளோடும் கலந்து கட்டிய கூத்து நடந்து கொண்டு தானிருக்கிறது.

இங்கு அதிசயம் என்றெல்லாம் ஒன்றில்லை. அவரவரர் அவசியத்துக்கு வளைவு செய்து கொண்டிருக்கிறார்கள். பக்கத்து வீட்டுக்காரன் கார் வாங்கினா தானும் வாங்க வேண்டும் என்பது போலத் தான்... அவன் கட்டுரை போட்டா நானும் போடுவேன் என்பதும். அதுவும் அவன் எழுதிய அதே டாபிக்கை வெச்சு. மானங்கெட்ட இலக்கிய காலம் இது.

உற்று நோக்கின் கொக்கின் நடை பசிக்குத் தான். ராஜநடை விவரிப்பு தின்று கொழுத்தவனுக்கு.

எல்லாவற்றையும் தாண்டிய கிளாசிக்... மேலெழுந்து புகைப் படத்துக்குள் மாட்டிக் கொண்ட தூண்டிலுக்கு தப்பிய மீனாகவும் இருக்கிறது. 

- கவிஜி