”நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு”
நிலையாமைதான் இவ்வுலகம். இருந்தும் ஏனோ மனம் ஏற்க மறுக்கும் இழப்புகள் நிலையாமைக்கு அப்பாற்பட்டது. இயக்கமும் இயங்குதலுமாக இருந்தவர் படைப்பாளர் நாறும்பூநாதன். இவர் திருநெல்வேலி மாவட்டத்தில் (இன்றைய தூத்துக்குடி மாவட்டத்தில்) உள்ள கழுகுமலையில், ஆகஸ்ட் 27, 1960இல், இராமகிருஷ்ணன் - சண்முகத்தம்மாள் இணையருக்குப் பிறந்தவர். கோவில்பட்டி ஆரிய வைஸ்ய உயர்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வியையும் சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி மற்றும் கோவில்பட்டி ஜி.வெங்கடசாமி நாயுடு கல்லூரியில் கல்லூரிக் கல்வியையும் பெற்றவர்.
"வாசிப்பு ஒரு நீண்ட பயணம். ஒரு பரந்த வாசிப்பு மூலமாக மட்டுமே சமூகத்தைப் புரிந்து கொள்ள முடியும். இதுதான் நிறைய ஞானத்தைக் கொடுக்கும். வாசிப்பின் மூலமாக மட்டும்தான் ஒரு சமூகம் பண்பட்ட சமூகமாக மாறும்” என்பதை உணர்ந்தவர் தனது நான்காவது வகுப்பின்போதே வாசிப்புப் பழக்கத்தைத் தொடங்கியிருக்கிறார். அதன் விளைவாக இவர் மொட்டுக்கள் என்னும் கையெழுத்து பத்திரிகையையும் நண்பர்களுடன் இணைந்து தர்சனா என்ற நாடகக் குழுவையும் உருவாக்கியவர். எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுடன் சேர்ந்து ஸ்ருஷ்டி என்னும் நாடகக் குழுவில் இணைந்து நூற்றுக்கும் மேற்பட்ட நாடகங்களைத் தமிழகம் முழுவதும் நடத்தி நாடக உலகுக்கும் தமது பங்கைச் செலுத்தியுள்ளார். பரணிவாசம் என்ற பெயரில் சமூக ஊடகங்களில் வலம் வந்தவர்.
"ஒரு குழந்தைக்கு டெல்லி செங்கோட்டை பற்றி தெரிகிறது, தாஜ்மஹால் தெரிகிறது, பாபிலோனில் தொங்கும் தோட்டம் தெரிகிறது, ஏன் சீனப் பெருஞ்சுவர்கூட தெரிகிறது ஆனால் உள்ளூரில் ஒரு கோட்டை இருப்பது தெரியவில்லை. அதன் வரலாறு தெரியவில்லை. நம் ஊர் வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு நாம் சொல்லிக் கொடுக்கவில்லை என்ற உணர்வே அவற்றைப் பற்றி எழுதத் தூண்டியது” என்பதன் வெளிப்பாடுதான் ‘திருநெல்வேலி: நீர்-நிலம்-மனிதர்கள்’ எனும் நூல். திருநெல்வேலியைச் சுற்றியுள்ள பல வரலாற்றுத் தகவல்களைத் தேடித்தேடி தமிழ்ச் சமூகத்திற்குக் கொடுத்திருக்கிறார். திருநெல்வேலி வரலாற்றை ஆவணப்படுத்தியதால் இந்நூலை முன்வைத்து இவருக்குத் தமிழ்நாடு அரசு 2022க்கான உ.வே.சா., விருது வழங்கிப் பெருமைப்படுத்தியது.
சாகித்ய அகாடமி விருதுபெற்ற மேலாண்மை பொன்னுச்சாமி, கந்தர்வன் ஆகியோரைத் தனது இலக்கிய முன்னோடிகளாக ஏற்றுக்கொள்ளும் நாறும்பூநாதன், கரிசல் இலக்கியத்தின் தந்தை கி.ராஜநாராயணன் தொடங்கி, ச.தமிழ்ச்செல்வன், வண்ணதாசன், கலாப்ரியா, கழனியூரன், நாஞ்சில் நாடன், சோ.தர்மன் உள்ளிட்ட புகழ்பெற்ற எழுத்தாளர்களின் நெருங்கிய நட்பு வட்டத்தில் நட்பைப் பேணியதோடு சிறந்த சமூகச் செயற்பாட்டாளராகவும் விளங்கியிருக்கிறார். எழுத்தாளர்கள் உதயசங்கர், சாரதி, அப்பணசாமி, கோணங்கி, ஓவியர் மாரீஸ் ஆகியோரின் ஒருசாலைப் படைப்பாளராக உற்ற தோழமையுடன் அன்பு ததும்ப ஜோல்னா பையுடன் வலம் வந்தவர். இலக்கியக் கூட்டங்களிலும் புத்தகக் காட்சிகளிலும் இவரை அறியாதவர் இல்லை எனுமளவுக்கு பேச்சால் நிறைந்தவர்.
ஒரு முறை மேலாண்மை பொன்னுசாமியைச் சந்திக்க நேர்ந்த பொழுது அவர், "தம்பி நான் அஞ்சாப்பு தான் படிச்சிருக்கேன், ஏதோ நான் சந்தித்த மனிதர்களைப் பற்றி எனது அனுபவங்களைக் கதைகளாக எழுதுகிறேன் ஒரு கட்டத்தில் நீயும் எழுதலாம்" என்று அவர் சொல்லியது தன் மனதில் ஆழமாகப் பதிந்ததன் விளைவு பல கதைகள், கட்டுரைகள், குழந்தைகளுக்கானக் கதைகள், தான் ஒரு கதை சொல்லியாகத் திகழ்வதற்குக் காரணமாக நாறும்பூநாதனுக்கு அமைந்தன. குழந்தைகளால் பூ தாத்தா என்று அன்போடு அழைக்கப்பட்டவர்.
‘கனவில் உதிர்ந்த பூ’, 'ஜமீலாவை எனக்கு அறிமுகப்படுத்தியவன்’, 'இலை உதிர்வதைப்போல’ எனும் சிறுகதைத் தொகுப்புகளையும் 'தட்டச்சு கால கனவுகள்’ எனும் குறுநாவலையும்’ ஒரு தொழிற்சங்கப் போராளியின் டைரிக் குறிப்புகள்’, 'கடன் எத்தனை வகைப்படும்?’, 'வங்கி ஊழியர் டைரி’, 'கண் முன்னே விரியும் கடல்’, 'யானை சொப்பனம்’, 'ஒரு பாடல்... ஒரு கதை’, 'திருநெல்வேலி: நீர்-நிலம்-மனிதர்கள்’, 'வேணுவன மனிதர்கள்’ எனும் கட்டுரை நூல்களையும் 'பால்வண்ணம்’ எனும் வாழ்க்கை வரலாற்று நூலையும் 'கி.ரா.வின். கடைசி நேர்காணல்’ எனும் நேர்காணல் தொகுப்பையும் எண்ணத்தின் அலைகளாக எழுத்தில் பாய்ந்தோடச் செய்தவர். திருநெல்வேலியைச் சுற்றி வாழ்ந்த சாதாரண மக்கள்முதல் புகழ் பெற்றவர்கள்வரை பலரைப் பற்றியும் வரலாற்று நிகழ்வுகளையும் மக்களின் வாழ்வியலையும் நெல்லை வட்டார மக்கள் மொழியில் மணம் மாறாமல் பதிவு செய்தவர். நாறும்பூநாதனின் பல படைப்புகள் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திலும், பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா தன்னாட்சிக் கல்லூரியிலும் மாணவர்களுக்குப் பாடமாக வைக்கப்பட்டுள்ளன. தினமணி, இந்து தமிழ் திசை உள்ளிட்ட பல நாளிதழில் இலக்கியம், சமூகம் மற்றும் வரலாறு சார்ந்த பல கட்டுரைகள் வெளிவந்துள்ளன.
இயக்குநர் மாரி செல்வராஜின் ‘பரியேறும் பெருமாள்’ படத்தில் கதாநாயகனின் தந்தையாக நடித்த நடிகர் நெல்லை தங்கராஜ் அவர்கள் ஒரு கணியான் கூத்துக் கலைஞர். மிகவும் ஏழ்மையான நிலையில் குடும்பத்துடன் குடிசை வீட்டில் வாழ்ந்துவந்த அவரை, மாவட்ட ஆட்சியரிடம் அழைத்துச்சென்று அரசின் சார்பில் அவருக்கு ஒரு வீடு கட்டித்தர வேண்டுமென்று முன்முயற்சி எடுத்ததன் விளைவாக, நெல்லை தங்கராசுக்கு புதிய வீடு ஒன்றைத் தமிழக அரசு கட்டிக்கொடுத்தது.
கடந்த ஆண்டு, நாங்குநேரியில் 12ஆம் வகுப்பு மாணவர் சின்னதுரை, சக மாணவர்களால் சாதிய வன்மத்துடன் வீடு புகுந்து தாக்கப்பட்டார். சின்னதுரை தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதிலிருந்து அவரை உடனிருந்து கவனித்துக் கொண்டவர்களில் நாறும்பூநாதன் முக்கியமானவர். மாணவர் சின்னதுரைக்கு உற்றுளி உதவி உறுதுணையாக இருந்து வந்தவர்.
நெல்லையில் ஏழாம் நூற்றாண்டில் பாண்டியர்களால் கட்டப்பட்ட கோட்டைக் கொத்தளம், மேடை போலீஸ் ஸ்டேஷன் என்று அழைக்கப்பட்டது. தொன்மையான அந்த இடத்தின் சிறப்பை மாவட்ட ஆட்சியரிடம் எடுத்துச்சொல்லி, அதை மீட்டுருவாக்கம் செய்வதற்குக் காரணமாக இருந்தவர் நாறும்பூநாதன். இன்று அந்த இடம் தமிழக அரசால் புதுப்பிக்கப்பட்டு, பழைய கோட்டையின் புதுப்பொலிவோடு காணப்படுகிறது.
தாமிரபரணி ஆற்றின் மீது 1840ஆம் ஆண்டு கட்டப்பட்டது சுலோச்சனா முதலியார் பாலம். சுலோச்சனா முதலியார் என்ற தனி மனிதர் தனது சொந்த செலவில் அந்தப் பாலத்தை கட்டியிருக்கிறார். காலப்போக்கில், சுலோச்சனா முதலியாரின் வாரிசுகள் அடையாளம் காணப்படாமல் இருந்தனர். இந்த நிலையில், அவரது பத்தாவது தலைமுறையினர் சென்னைக்கு அருகே வசித்து வந்ததை அறிந்து, அவர்களைத் திருநெல்வேலிக்கு வரவழைத்து மாவட்ட ஆட்சியரிடம் அறிமுகப்படுத்தி, அவர்களுக்குரிய மரியாதை கிடைக்கச் செய்த பெருமை நாறும்பூநாதன் அவர்களையே சாரும்.
நாற்பது ஆண்டுகளாக நாறும்பூநாதன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் பல முக்கியப் பொறுப்புகளிலிருந்து பல அரிய பணிகளைச் செய்தவர். களப்பணியாளராக மாதந்தோறும் கூட்டங்கள், கருத்தரங்குகள் என்று தான் இயங்குவதோடு மாணவர் தலைமுறையையும் இயங்கச் செய்தவர். முற்போக்கு இலக்கிய மரபைக் காத்தவர்.
2021, மே17இல் கி.ரா., மறைந்தபொழுது நினைவஞ்சலி செலுத்தும்விதமாக 2021, மே25 முதல் 29 முடிய ஐந்து நாள் ’கி.ரா.,வின் படைப்புலகம்’ என்று இணையவழியாக ஒருங்கிணைப்புச் செய்தேன். அதில் எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் அவர்கள் தொடங்கிவைத்துப் பேசினார். அந்த நிகழ்வில் நாறும்பூநாதன் அவர்கள் 'கி.ரா.வின் கதாபாத்திரங்கள்’ குறித்துப் பேசினார். அநிநிகழ்வு கொரனா தீ நுண்மி காலத்தில் இணைய உலகத்தில் இணைந்தவர்களுக்கெல்லாம் வரப்பிரசாதமாக அமைந்தது. அவர் தேர்ந்த கதை சொல்லி என்பது அனைவரையும் ஈர்த்தது. அதற்குப் பிறகு, நான் இணையவழியில் 2021 ஜுன் 16 முதல் ஜூலை 2 முடிய ‘கலைஞர் படைப்புலகம்’ என்று பதினெட்டு நாள் ஒருங்கிணைப்புச் செய்த பன்னாட்டுக் கருத்தரங்கத்தில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தொடக்கவுரையாற்றினார். அந்நிகழ்வில் நாறும்பூநாதன் அவர்கள் ‘கலைஞரின் சிறுகதைகளும் கதைபாத்திரங்களும்’ என்னும் தலைப்பில் பேசினார். இப்படியாக எங்கள் கரிசல் மண்ணின் உறவு தொடர்ந்தது. விருதுநகர் மாவட்டத்தில் முதன் முதலாக நிலப்பகுதியின் அடிப்படையில் மாவட்ட நிருவாகத்துடன் இணைந்து கரிசல் இலக்கியத் திருவிழாவை 2023இல் முன்னெடுத்தவர். அதில் கரிசல் பகுதியின் இளம் படைப்பாளர்களை, பேச்சாளர்களை முன்னிறுத்தவேண்டும் என்ற பேரவாவுடன் எங்களுக்கெல்லாம் வாய்ப்பு நல்கி நாங்களும் இந்தக் கரிசக்காடுதான் என்பதை உணரச் செய்தவர்.
தமிழக அரசுடன் இணைந்து நெல்லை மாவட்டச் சிறுகதைகள், நெல்லை மாவட்டக் கவிதைகள், நெல்லை மாவட்டக் கட்டுரைகள் என்று முதன்முறையாகத் தொகுத்தது இவர்தான். நெல்லைப் புத்தகத் திருவிழா, பொருநை புத்தகத் திருவிழா, நெல்லை இலக்கியத் திருவிழா, தூத்துக்குடி புத்தகத் திருவிழா போன்றவற்றை ஒருங்கிணைத்ததோடு எதிர்காலத் தலைமுறையினரிடையே வாசிப்புப் பழக்கத்தையும் படைப்பாக்கத் திறனையும் ஊக்குவிக்கும் விதமாக பல பயிலரங்குகளில் படைப்பாக்கப் பயிற்சி தந்தவர். மற்ற மாவட்டங்களுக்கும் முன்மாதிரியாகச் செயல்பட வைத்தவர். எந்தப் பிரதிபலனும் எதிர்பார்க்காமல் ஓடி ஓடி களத்தில் பணியாற்றியவர் இன்று ஓய்வெடுக்கச் சென்றுள்ளார். அவர் மூச்சை நிறுத்திக் கொண்டாலும் அவர் செய்த பணிகள் அவரை நினைவுபடுத்திக் கொண்டேயிருக்கும். இதுதான் காலத்தின் கட்டாயம்.
- முனைவர் நா.சுலோசனா, உதவிப் போராசிரியர், தமிழ்மொழி(ம)மொழியியல் புலம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை-113.