rs jacobநெல்லை சதி வழக்கில் நீண்ட காலம் சிறையிலிருந்த கம்யூனிஸ்ட் ஆர்.எஸ்.ஜேக்கப் வாத்தியார் மறைந்தார்...

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைமறைவாக இயங்கிய 1948-50களில் நெல்லை சதி வழக்கு போடப்பட்டது. எனது பால்ய கால நண்பரும், எழுத்தாளருமான ஜேக்கப் வாத்தியார் அவர்களின் திடீர் மறைவு என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. நெல்லை சதி வழக்கில் இப்போது இருப்பவர்கள் நானும் அவரும் தான்.

ஒரு கிராமப்புற பள்ளிக்கூடத்தின் உறுதிமிக்க கிறிஸ்துவ ஆன்மீகவாதியாக, ஆசிரியராகப் பணியைத் தொடங்கிய ஆர்.எஸ்.ஜேக்கப் அவர்கள் மீதும் சதி வழக்கு பாய்ந்தது.

கடுமையான சித்திரவதை கொடுமையிலும், கம்யூனிஸ்ட்டுகளை காட்டிக் கொடுக்க மறுத்து விட்டதோடு, அவர் கைது செய்யப்பட்டு மூன்றாண்டு காலம் சிறையில் வாடினார். காவல்துறையினர் கடுமையாக அவரை தாக்கிவிட்டு "கட்சிக்காரர்கள் கொள்கைப் பிடிப்போடு இருந்து காட்டிக் கொடுக்க மறுப்பார்கள், நீ ஏன் காட்டிக் கொடுக்க மறுக்கிறாய்" என்று கேட்ட போது, ஜேக்கப் வாத்தியார் அவர்கள், "நான் ஜூலியஸ் பூசிக் எழுதிய தூக்குமேடை குறிப்புகள் நூல் படித்தேன். அதனால்தான் இந்த உறுதியைப் பெற்றேன்" என்று மறுமொழி கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவரது தாயாரும், மனைவியும் எப்போதும் கட்சிக்கு ஆதரவாகவே இருந்து வந்தனர். நாங்கள் அடிக்கடி அவரது இல்லத்திற்குச் செல்கிறபோது, இன்முகத்தோடு அவர்கள் பழகி இருக்கிறார்கள்.

வாத்தியார் உபதேசியாகவும் ஆன்மீகவாதியாகவும் நல்ல சமூக சிந்தனை உள்ளவராகவும் சமத்துவவாதியாகவும் வாழ்ந்தார்.

மரண தண்டனையையே சந்திக்க நேர்ந்த போதிலும் சிறிதும் மனம் கலங்காமல் தன்னுடைய நிலையில் உறுதியாக நின்று ஒரு கிறிஸ்துவ கம்யூனிஸ்டாக இறுதி வரை வாழ்ந்தவர் ஆசிரியர் ஆர்.எஸ்.ஜேக்கப்.

- ஆர்.நல்லகண்ணு

Pin It