மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செப். 14, 2018 அன்று செய்தியாளர் சந்திப்பில் மேல்நிலைப் பள்ளிக் கல்வி இரண்டாம் ஆண்டு (+2) பொதுத் தேர்வின் மதிப்பெண்கள் மட்டுமே கல்லூரிக் கல்விக்கான தகுதியாக கருதப்படும் எனவும் அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Tamilnadu school studentsஇந்நிலையில், பள்ளிக் கல்வி முடித்து உயர்கல்விக்காகக் கல்லூரிக்குச் செல்லும் மாணவர்களின் சமூக, பொருளாதாரப் பின்புலம் மற்றும் உளவியல் பாங்கு ஆகியவற்றை நன்கு அறிந்து, அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள், சவால்கள், உயர்கல்வி வாய்ப்புகள் ஆகியவற்றைக் குறித்த புரிதலும் அக்கறையும் கொண்டு கல்வித் தளத்தில் நீண்டகாலமாகச் செயல்பட்டு வரும் கல்விச் செயல்பாட்டாளர்கள் மற்றும் தமிழகக் கல்வி நலனில் அக்கறைகொண்ட பல்வேறு அமைப்பினர் இணைந்து வெளியிடும் கூட்டறிக்கை.

1. மேல்நிலைக் கல்வி முதலாண்டுப் (+1) பொதுத் தேர்வை நடத்திக்கொண்டே அதன் மதிப்பெண் உயர்கல்வியில் சேர்வதற்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது மிகுந்த வியப்பையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது. மேல்நிலை முதலாண்டுக்குப் (+1) பொதுத் தேர்வு நடத்த வேண்டும் என்று தமிழக அரசு கடந்த ஆண்டு அறிவித்ததன் நோக்கங்கள் இனி நிறைவேற வழியேயில்லை.

2. அரசின் கொள்கை மாற்றம் தனியார் பள்ளிகளின் அழுத்தத்தால் நேர்ந்தது என்பதை மறுக்க முடியாது. மேனிலைக் கல்வியில் தனியார் பள்ளிகளின் தாக்கம் மிக அதிகம். தனியார் பள்ளிகள் இடும் கட்டளையைக் கல்வித் துறை நிறைவேற்றும் என்பது அண்மைக்கால வரலாறு. தற்போதும் அது நிறைவேறியுள்ளது.

3. தொடர்ந்து மூன்றாண்டுகளுக்குப் பொதுத் தேர்வு எழுதினால் மாணவர்களுக்கு மன அழுத்தம் நேர்கிறது என்கிற பொத்தாம் பொதுவான காரணத்தை முன்வைப்பது ஏற்கத்தக்கதல்ல. மேல்நிலை முதலாண்டு (+1) பொதுத் தேர்வு மதிப்பெண்களை உயர்கல்விச் சேர்க்கைக்கு எடுத்துக் கொள்ளாமல் விடுவதால் மன அழுத்தம் குறையும் என்பதும் சரியான காரணமல்ல.

4. மாணவர்களுக்கு நன்மை செய்யும் உண்மையான நோக்கம் தமிழக அரசின் புதிய முடிவில் இல்லை. மேல்நிலை முதலாண்டு (+1) பொதுத்தேர்வு மதிப்பெண்கள் உயர்கல்விச் சேர்க்கைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று கடந்த கல்வி ஆண்டில் அறிவித்துவிட்டு, இக்கல்வியாண்டில் மூன்று மாதங்கள் முடிவடைந்த நிலையில், அரசு வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பு தற்போது மேல்நிலை வகுப்பில் படித்துவரும் மாணவர்களுக்கு ஏமாற்றத்தையும் குழப்பத்தையும் மன அழுத்தத்தையும் ஏற்படுத்தும்.

5. புதிய அரசாணை எண் 195, அரசாணை எண் 100-க்கு முரணாக உள்ளது. அரசாணை எண் 100-இல் 6, 7, 8 ஆகிய பத்திகளில் கூறப்பட்டுள்ள மோசமான நிலைக்கு மேல்நிலைப் பள்ளிக் கல்வியை மீண்டும் பின்னுக்கு இழுக்கும் வேலையை அரசாணை எண் 195 செய்கிறது. 

6. மேல்நிலை முதலாண்டு (+1) மதிப்பெண்களைக் கல்லூரிக் கல்விக்கான தகுதியாக ஏற்பதில்லை எனும் முடிவு, அரசுப் பள்ளிகள் மட்டுமே மேல்நிலை முதலாண்டுப் (+1) பாடங்களை நடத்துவதும், தனியார் பள்ளிகள் அதைப் புறக்கணிப்பதுமான நிலையை மீண்டும் உருவாக்கும். இதனால், கல்லூரிக் கல்விக்கான சேர்க்கையில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் கிராமப்புற ஏழை மாணவர்களைக் காட்டிலும் தனியார் பள்ளி மாணவர்கள் கூடுதல் வாய்ப்புகளைப் பெறும் சமூக அநீதி தொடரும். அரசின் தற்போதைய பரிந்துரை சமூக நீதிக்கு எதிரானதாகும்.

7. மேல்நிலை இரண்டாமாண்டு (+2) மதிப்பெண்கள் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்ற அறிவிப்பு அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மேலும் குறைவதற்கே வழிவகுக்கும். "தனியார் பள்ளிகள் தான் அதிக மதிப்பெண்களைப் பெற்றுத் தரவல்லவை" என்று ஏற்கனவே பெற்றோர்களிடம் ஏற்படுத்தப்பட்டுள்ள மனநிலையினால் அரசுப் பள்ளி மேனிலைப் பிரிவுகளில் மாணவர் சேர்க்கை கணிசமாகக் குறைய நேரிடும். இதன் தொடர் விளைவாகக் கல்வி வணிகத்திற்கு மக்கள் மேலும் ஆட்படுவர். மாணவர் எண்ணிக்கை போதுமான அளவு இல்லை என்று அரசுப் பள்ளிகளையும் மேல்நிலை வகுப்புப் பாடப்பிரிவுகளையும் மூடும் நிலைக்கு அரசே வழிவகுப்பது ஒரு சமூகக் குற்றமாகும்.

8. மேல்நிலைப் பள்ளிக் கல்வி என்பது இரண்டாண்டுப் படிப்பைக் கொண்ட ஒரு பாடத்திட்டம். இரண்டாம் ஆண்டு படிப்பு முதலாண்டுப் படிப்புடன் நெருங்கிய தொடர்புடையது. இரண்டாண்டுகளும் முழுமையாகப் பாடங்கள் நடத்தப்பட்டு மாணவர்கள் அவற்றைப் புரிந்து படித்தால் மட்டுமே உயர்கல்விக்கு முழுத் தகுதியுடையவர் ஆவர். முதலாண்டு முழுமையாக நடத்தப்படாமல் இரண்டாம் ஆண்டில் முழு மதிப்பெண் பெற்றிருந்தாலும் அம்மாணவர்கள் கல்லூரியில் சேர்ந்தபின் பட்டப் படிப்பில் முதலாண்டில் தடுமாறுவதும் தோல்வி அடைவதும் அனைவரும் அறிந்ததே. அரசுப் பள்ளிகளில் படித்த ஏழை மாணவர்கள் உயர்கல்வி வாய்ப்புகளை இழப்பதற்கும் தனியார் பள்ளி மாணவர்கள் கல்வித் தரமின்றி உயர்கல்வியில் சிக்கலுக்கு ஆளாவதும் தொடர்வதற்கே அரசின் முடிவு வழிவகுக்கும்.

9. நாடுதழுவிய அளவிலான போட்டித் தேர்வுகளில் நமது மாணவர்கள் அதிகம் தேர்ச்சி பெறாமல் போவதற்கு மேல்நிலை முதலாண்டுப் (+1) பாடங்கள் முறையாகப் கற்பிக்கப்படாததும் ஒரு முதன்மைக் காரணம் என்பது கடந்த காலங்களில் தெளிவாகியுள்ளது. அரசின் புதிய முடிவினால் இந்த அவலம் மீண்டும் தொடரும்.

தமிழக அரசுக்கு முன்வைக்கும் கோரிக்கைகள்

1. ஏற்கனவே உள்ள அரசாணை 100 இன் படி, மேல்நிலைக் கல்வி முதலாண்டு (+1) மற்றும் இரண்டாம் ஆண்டு (+2) பொதுத் தேர்வுகளை நடத்துவதும் இரண்டாண்டுப் பொதுத்தேர்வு மதிப்பெண்களையும் உயர்கல்விச் சேர்க்கைக்கு எடுத்துக்கொள்வதும் மட்டுமே சரியான தீர்வாகும். இத்தகைய அணுகுமுறை குழப்பமற்றதாகவும், மன அழுத்தமற்றதாகவும் எளிமையானதாகவும் அமையும். உயர்கல்விக்குத் தேவையான நல்ல அடித்தளத்தையும் இது அமைத்துத் தரும்.

2. மாணவர்களைப் பொதுத் தேர்வுக்குத் தயார்படுத்தும் முறைகளை மன அழுத்தமற்றவையாக மாற்றவேண்டும். தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள், விடுமுறை நாள் வகுப்புகள் நடத்துவதைத் தீவிரக் கண்காணிப்பின் மூலம் முற்றிலுமாக ஒழிக்கவேண்டும். அரசின் ஆணையை மீறும் பள்ளிகளின் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கவேண்டும். எளிமையான தேர்வுகள், பாடச்சுமைக் குறைப்பு, தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு ஆகியவையே மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்கும்.

3. தற்போது முதல் வகுப்பிலிருந்து ஒன்பதாம் வகுப்பு வரை கல்வி ஆண்டில் மூன்று பருவத் தேர்வுகள் (முப்பருவ முறை) நடத்தப்படுகின்றன. 10-ஆம் வகுப்பில் முப்பருவ முறை இல்லை. ஆண்டிறுதிப் பொதுத் தேர்வுக்குக் கல்வி ஆண்டின் பாடநூல்களை முழுமையாகப் படிக்கவேண்டும். தனியார் பள்ளியினருக்கிடையிலான வணிகப் போட்டியினால், பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு மதிப்பெண்களைக் கவனத்தில் கொண்டு ஒன்பதாம் வகுப்பிலிருந்தே பத்தாம் வகுப்புப் பாடங்களைக் குருட்டு மனனம் செய்ய வைக்கின்றனர். ஒன்பதாம் வகுப்பு வரை முப்பருவ முறையில் படித்துவிட்டுப் பத்தாம் வகுப்பில் ஆண்டு இறுதிப் பொதுத் தேர்வு முறைக்கு மாணவர்களைத் தள்ளுவது குறித்தும் கவலைப்படவேண்டும். பத்தாம் வகுப்புக்கு அகமதிப்பீட்டு மதிப்பெண்கள், மொழிப்பாடத்தாள்கள் ஒன்றாகக் குறைப்பு போன்ற நடவடிக்கைகள் குறித்தும் ஆராயப்படவேண்டும்.

4. தனியார் பள்ளி மாணவர்கள் தனிப்படிப்பிற்கும் சிறப்பு வகுப்பிற்கும் சென்று கற்கின்றனர். இதுபோன்ற வாய்ப்புகள் அற்றவர்களே அரசுப் பள்ளி மாணவர்கள். பள்ளி வகுப்பறை ஒன்றே அவர்கள் கல்வி பெறும் இடம். அங்கு பழுதற்ற, தரமான கல்வியை உறுதி செய்யும் கடமையினின்று கல்வித்துறை விலகிக் கொள்வது மன்னிக்க முடியாத குற்றம். உட்கட்டமைப்பு வசதிகளோடு ஆசிரியர் தான் கற்றலுக்கு உதவும் பெரிய கருவி. அரசுப் பள்ளி மாணவர்களுடைய முழுமையான கற்றல் வாய்ப்புகளுக்கான பல்வேறு தடைகளைக் குறித்து உடனடியாக அக்கறையுள்ள ஆழமான ஆய்வு நடத்தித் தீர்வு காணவேண்டும்.

5. அரசுப்பள்ளிகளில் செப். 30 வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகின்றது. புதிய பள்ளிகளைத் தரம் உயர்த்துவது ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்படுகிறது. புதிய பணியிடங்களுக்கும் காலிப் பணியிடங்களுக்கும் தலைமையாசிரியர்கள், பாட ஆசிரியர்கள் நியமனம் உடனடியாக நடைபெறுவதுமில்லை. பல அரசுப் பள்ளிகளில் மேனிலை வகுப்புப் பாடங்களுக்கு நீண்ட நாட்களுக்கு ஆசிரியர் நியமனங்கள் நடப்பதில்லை. அரசுப் பள்ளிகளில் ஒரு கல்வி ஆண்டில் 120 நாட்களுக்கு முழுமையான கற்பித்தல் நடப்பதே சாத்தியமற்றதாக உள்ளது. அரசுப் பள்ளி மாணவர் எதிர்கொள்ளும் இப்படிப்பட்ட சிக்கல்களுக்கு விடிவு காண வேண்டும். அரசுப் பள்ளி மாணவர்களை நிர்வாகக் குறைபாடுகளுக்குப் பலிகடாவாக்குவதிலிருந்து விடுவிப்பதே அரசின் கல்வி நெறியாக இருக்க வேண்டும். கற்பித்தலும், கற்றலும் முழுமையாக நடைபெற்ற பின்னரே பொதுத்தேர்வுகள் நடத்தப்படவேண்டும்.

6. மேல்நிலை இரண்டாமாண்டு (+2) பொதுத் தேர்வு முடிவுகள் வந்தவுடன் அரசு-தனியார், ஆண்-பெண், சாதி, நகர்ப்புறம்-கிராமப்புறம் போன்ற பல்வேறு காரணிகள் முன்வைக்கப்பட்டு ஆராயப்படும். அதுபோல, மேல்நிலை முதலாமாண்டு (+1) பொதுத் தேர்வு முடிவுகளையும் ஆராயவேண்டும். குறைகளைச் சரி செய்யவேண்டும். ஏற்கனவே +2 பொதுத்தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்கள் பின்தங்கியுள்ளனர். கடந்த பத்தாண்டுகளில் மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளியில் படித்த மாணவர்கள் ஒரு விழுக்காட்டினர் (1%) கூடச் சேர முடியவில்லை. போட்டி நிறைந்த வேளாண்மை, கால்நடை மருத்துவம் போன்ற உயர்கல்விப் படிப்புகளிலும் அரசுப் பள்ளி மாணவர்களின் சேர்க்கை விகிதம் மிகவும் குறைவாகவே உள்ளது. கல்வியில் உள்ள ஏற்றத்தாழ்வுகள், கற்றல் – கற்பித்தல் குறைபாடுகள் போன்றவற்றால் அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் தனியார் பள்ளி மாணவர்களுக்கும் உயர்கல்வி வாய்ப்புகளில் சமமான போட்டிக்கு வழியில்லாமல் போவதைத் தடுப்பதற்கும் உடனே வழி காணவேண்டும்.

7. தனியார் பள்ளியினரின் அழுத்தத்தாலும் அவர்களின் வணிக நோக்கத்தாலும் கல்வியில் அரசின் கொள்கை மாற்றங்கள் நடைபெறக் கூடாது. அரசுப்பள்ளிகள் மற்றும் அரசுப்பள்ளி மாணவர்களின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் நடவடிக்கைகள் இனியும் கல்வியில் தொடரக்கூடாது.

மேற்கூறியவற்றைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு புதிய அரசாணை 195 –ஐத் திரும்பப் பெற வேண்டுகிறோம். 

1. பேரா. பிரபா கல்விமணி (தலைவர், தாய்த்தமிழ்க் கல்விப் பணி) 
2. பேரா. ச. மாடசாமி (எழுத்தாளர், கல்விச் செயல்பாட்டாளர்)
3. கண. குறிஞ்சி (மாநிலத் தலைவர், மக்கள் சிவில் உரிமைக் கழகம் - பியூசிஎல்) 
4. பேரா. சே. கோச்சடை (தலைவர், மக்கள் கல்வி இயக்கம்)
5. பெ. மணியரசன் (ஒருங்கிணைப்பாளர், தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம்)
6. பொழிலன் (ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாட்டுக் கல்வி இயக்கம்) 
7. செ. நடேசன் (மொழி பெயர்ப்பாளர், முன்னாள் ஆசிரியர் இயக்கப் பொறுப்பாளர்) 
8. சீ.தினேஷ் (மாநிலச் செயலாளர், அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் – AISF)
9. சே. இளையராஜா (தமிழ்நாடு மாணவர் முன்னணி) 
10. சா.கிள்ளிவளவன் (தலைவர், பெற்றோர் மாணவர் சங்கம்)
11. முனைவர் விஜய் அசோகன் (ஆராய்ச்சியாளர், சால்மர்ஸ் பல்கலைக்கழகம், சுவீடன்)
12. பேரா. சி. ஜோசப்பிரபாகர் (கல்விச் செயல்பாட்டாளர்) 
13. சு.மூர்த்தி (கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு)
14. உமாமகேஸ்வரி (அசத்தும் அரசுப்பள்ளி ஆசிரியர் அமைப்பு - A3)
15. சுடரொளி (குழந்தை நேயப்பள்ளிகள் கூட்டமைப்பு)
16. வீ.சிவகாமி (அமைப்பாளர், தமிழ்நாடு அறிவியல் மன்றம்)
17. க.மகாலட்சுமி கண்ணன் (தெருவிளக்கு கல்வி அறக்கட்டளை)
18. தமிழாசான் (குழந்தைகளைக் கொண்டாடுவோம் கல்வி அமைப்பு) 
19. செ. சி. நடராஜ் (சுடர் – பழங்குடிக் குழந்தைத் தொழிலாளர் கல்வி அமைப்பு) 
20. சு.தங்கவேல், அ.இருளப்பன் (தமிழகக் கல்விப் பாதுகாப்பு இயக்கம்)
21. விழியன் (சிறார் இலக்கிய எழுத்தாளர்)
22. மு. சிவகுருநாதன் (ஆசிரியர், எழுத்தாளர்)
23. ரெ. சிவா (ஆசிரியர், கலகல வகுப்பறை)
24. க.சரவணன் (ஆசிரியர், எழுத்தாளர்)
25. செ.மணிமாறன் (ஆசிரியர், கல்விச் செயல்பாட்டாளர்)
26. தா. வே. நடராஜன் (கல்பாக்கம் அணுமின் நிலைய விஞ்ஞானி – பணிநிறைவு)
27. முனைவர் தி. ராமகிருட்டிணன் (‘பரிதி’) (எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர்)
28. க. இரா. சுப்பிரமணியன் (காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம்)
29. சுப்ரபாரதிமணியன் (எழுத்தாளர்)
30. எல். பெர்னாட் (மனித உரிமைக் கல்விச் செயல்பாட்டாளர்) 
31. ஜெ. சியாம்சுந்தர் (ஆசிரியர் – சமத்துவக் கல்வி)
32. அ.சத்தியமாணிக்கம் (கலிலியோ அறிவியல் மையம்)
33. அமரந்தா (எழுத்தாளர், தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் சங்கம்)
34. இரா. முருகப்பன் (திண்டிவனம் நகரக் கல்வி மேம்பாட்டுக் குழு) 
35. எழில் அ. சுப்பிரமணியன் (செயலாளர், தாய்த்தமிழ்க் கல்விப்பணி அறக்கட்டளை, திருப்பூர்)
36. ப. க. அருள்குமார் (செயலாளர், பசுவபட்டி அரசுப்பள்ளி முன்னாள் மாணவர் அமைப்பு)

தொடர்புக்கு: பேரா. பிரபா கல்விமணி, தலைவர், தாய்த்தமிழ்க் கல்விப் பணி

Pin It