உலகம் முன்னேற்றப் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கும் போது எப்போதும் ரிவர்ஸ் கியரைத் தேடுவது தான் பிற்போக்குவாதிகள், மதவாதிகள், பாசிஸ்டுகளின் போக்காக இருக்கும். அதிலும் குறிப்பாக இந்தியாவில் பிற்போக்குக் கும்பல்தான் இன்றைக்கு ஆட்சியில் இருக்கிறது. தமிழர்களை எப்படியேனும் தங்கள் வழிக்கு கொண்டு வந்து விட வேண்டும் என்று ‘பகீரதப் பிரயத்தனத்தில்’ ஈடுபட்டிருக்கும் ஒன்றிய பாஜக அரசு திராவிட இயக்கம் கட்டி எழுப்பிய தமிழ் மொழி உணர்வைத் தமிழ் பெருமிதமாக மாற்றி, அதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பார்க்கிறது. தமிழ்நாட்டின் பெருமைகள் என்று எவையெல்லாம் அவர்கள் கண்ணுக்குப் படுகிறதோ, அவற்றுக்கெல்லாம் காவிச் சாயம் பூச முனைந்தார்கள்.
கடந்த 10 ஆண்டுகளில் இதற்கான பல்வேறு முயற்சிகளில் இறங்கியிருக்கிறது. தட்டுத் தடுமாறி தமிழ்க் கொலை செய்யும் மோடியின் உச்சரிப்பில் பண்டைத் தமிழ் இலக்கிய வரிகள் எல்லாம் பஞ்சர் ஆகிப் போய் இருக்கின்றன.
எம்.ஜி.ஆரில் தொடங்கினார்கள். ராஜேந்திர சோழனின் ஆயிரம் ஆண்டு விழா என்றார்கள். இராமலிங்க வள்ளலாரை அபகரிக்க முயற்சிக்கிறார்கள். திடீரென்று திருக்குறள் காதலராகத் தருண்விஜய் என்று ஒருவர் ஓடி வந்தார். அவர் பங்குக்கு வள்ளுவரைக் காசிக்கு கொண்டு போய் கோணியில் மூடி வைத்திருக்கிறார்கள்.
இப்போது இன்னும் பின்னால் போய் தொல்காப்பியருக்கும் முன்பு அகத்தியர் தமிழ் இலக்கணம் எழுதினார் என்று பழைய கரடியைச் சீவி சிங்காரித்து புதுக் கரடியாகக் கொண்டு வருகிறார்கள்.
முத்தமிழறிஞர் கலைஞரின் பெரும் முயற்சியால் செம்மொழியான தமிழின் வளர்ச்சிக்கு, ஒன்றிய அரசிடமிருந்து அவர் பெற்றுத் தந்தது தான் செம்மொழித் தமிழாய்வு நிறுவனம். கடந்த 10 ஆண்டுகளில் மட்டுமல்ல, அதற்கும் முன்பு செல்வி ஜெயலலிதா ஆட்சிக்காலம் தொடங்கியதிலிருந்தே, அதற்குரிய சிறப்பை அது இழக்கத் தொடங்கியது. ஆர்.எஸ்.எஸ். கூடாரமாக அதை மாற்றத் தொடர்ந்து முயன்று வருகிறது ஒன்றிய அரசு.
செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் துணைத்தலைவராக மருத்துவர் சுதா சேஷய்யன் நியமிக்கப்பட்டதற்குக் கண்டனங்கள் எழுந்தன. அதன் இயக்குநராக ஏற்கெனவே ஒருவர் அமர்த்தப்பட்டிருக்கிறார். அவர் ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர் என்று அப்போதே குற்றச்சாட்டு எழுந்தது. இப்போது முழுமையாகக் கூடாரம் காவிமயம்.
இப்போது அகத்தியரின் கமண்டலத்தைத் தேடி நாடு முழுக்க அலைந்துகொண்டிருக்கிறார்கள். இன்னும் கொஞ்சம் கவிழ்த்தால் மீதமுள்ள காவிரியும் பெருக்கெடுக்கும் என்று கருதுகிறார்களோ என்னவோ?
தொல்காப்பியத்திற்கு முந்தையது அகத்தியம். அகத்தியர் எழுதியது தான் தமிழின் முதல் இலக்கண நூல். அதை அவர் வடமொழியை ஒட்டியே உருவாக்கினார். வடநாட்டுக்கும் தென்னாட்டுக்கும் இணைப்பு அவர் என்று அளந்துவிடுகிறார்கள். தேவாரத்தைத் தொகுத்தார். அவர் தான் தலைச் சித்தர் என்கிறார்கள். சித்தர்கள் காலம் எப்போது? தேவாரத்தின் காலம் எது? தொல்காப்பியத்தின் காலம் எது? குறைந்தபட்ச தமிழ் வரலாற்று அறிவும் இல்லாத இக் கதைகளைத் தான் கருத்தரங்குகள் மூலமும், பேச்சு, கட்டுரைப் போட்டிகள் மூலமும் மாணவர்களிடம் கொண்டு சேர்க்க முனைகிறார்கள்.
திருக்குறள் இருக்கிறது; தொல்காப்பியம் இருக்கிறது; அகத்தியம் எங்கே? எதை வைத்து அகத்தியரின் தமிழ்ப் பணியை, இலக்கியச் செழுமையை அளவிடுவார்கள். அள்ளிவிடுவதென்று முடிவெடுத்தபின் இருக்கவே இருக்கின்றன - வேதங்கள், இதிகாசங்கள், புராணங்கள்! பள்ளி, கல்லூரிகளில் ஆன்மீக கதாகாலட்சேபம் நடத்தலாம். அதில் சுதா சேஷய்யன்களுக்கு அனுபவமுண்டு.
பதவிச் சில்லறைகளை விட்டெறிந்தால், அவர்கள் சொல்லுகிறபடியெல்லாம் பேச, கருத்தரங்குகள் நடத்தி, ஆளுநருக்கும், ஒன்றிய அரசுக்கும் விசுவாசம் காட்ட நாடெங்கும் சிலர் கிடைத்திருப்பது தமிழினத்தின் கேடுகால அடையாளம்! ஒன்றிய அரசின் அனுசரணை, கடைக்கண் பார்வை வேண்டி நிற்கும் கல்வி நிறுவனங்கள், நேரடி பார்ப்பன - ஆர்.எஸ்.எஸ். நிறுவனங்கள், பினாமி நிறுவனங்கள் எல்லாம் வரிசை கட்டி அகத்தியரைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
அவர்களிடம் ஒரு கதை இருக்கிறது. அதில் வடக்கு தாழ்ந்து, தெற்கு உயர்ந்துவிட்டபோது, அதைச் சமன் செய்ய வடக்கிலிருந்த் வந்தவர் தான் அகத்தியர். அது மூடக் கதை என்பது ஒருபுறம். ஆனால், தெற்கு உயர்ந்துவிடக் கூடாது என்பதற்காகத் தான் இப்போதும் வடக்கிலிருந்து அனுப்பப்பட்டிருக்கிறார் அகத்தியர்!
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் 'அகத்தியன் விட்ட புதுக்கரடி’ என்று எழுதினார். புரட்சிக் கவிஞர் திராவிட இயக்கக் கவிஞர். அவரை விடுங்கள்! அவாளின் அடையாளம் சுப்பிரமணிய பாரதியார் என்ன எழுதினார்?
“கடலினைத் தாவும் குரங்கும்
வெங் கனலிற் பிறந்ததோர் செவ்விதழ்ப் பெண்ணும்,
வடமலை தாழ்ந்தத னாலே
தெற்கில் வந்து சமன்செயும் குட்டை முனியும்,
நதியி னுள்ளேமுழு கிப்போய்
அந்த நாகர் உலகிலோர் பாம்பின் மகளை
விதியுற வேமணம் செய்த
திறல் வீமனும் கற்பனை என்பது கண்டோம்.”
உயிர் பெற்ற தமிழர் பாட்டு இப்படித் தானே இருக்க முடியும்? அகத்தியர் கட்டுக் கதையை அம்பலப்படுத்தியிருக்கும் பாரதியாரின் வரிகளுக்கு மாலன்களின் பதில் என்ன?
தமிழர் தம் வரலாற்றுச் சான்றுகளை அறிவியல் முறையில் அகிலம் வியக்க அறிவித்து விட்டார் தமிழ்நாட்டின் முதலமைச்சர்! அதை எப்படி மாய்ப்பது? உண்மையோடு பொய்யைக் கலந்து, பிறகு பொய்யே மெய்யென்று புராணக் குப்பைகளையே வரலாறாகக் காட்டி வழக்காடுவது காவிகளுக்குக் கைவந்த கலை.
தமிழின் வரலாற்றுப் பெருமையை அழிக்க என்ன செய்ய வேண்டும்? அதில் புராணப் புளுகுகளை, போலிப் பெருமிதத்தை உள்ளே செருக வேண்டும். கேட்க இனிக்கும்; பொய்கள், கட்டுக்கதைகள் பெருகும்; உண்மை வரலாறு அடிபட்டுப் போகும். உலக ஆய்வாளர்கள் முகம் சுளிப்பர். இன்னொரு புறம் தமிழுக்கு வழங்கப்பட்டது என்று சொல்லி, அதே பணத்தில் ஆரியப் பண்பாட்டுக்கு விளம்பரம் தேடலாம். ஒரே நேரத்தில் பல முனைகளையும் தாக்க முயற்சிக்கிறார்கள்.
எச்சரிக்கை மணி அடித்திருக்கிறார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி! தமிழ்நாடு அரசு இதனை முற்றிலும் தடுக்க முயற்சிக்க வேண்டும். தமிழின் மீதான ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்பு - கண்டன மாநாடு - தமிழறிஞர்களைக் கொண்டு கூட்டப்படும் என்று அறிவித்துள்ளார்.
ஒன்றிய ஆட்சியாளர்கள் அதிகாரத்தின் மூலமும், நாளும் கொட்டப்படும் நிதியின் மூலமும் நேரடியாகவும், மறைமுகமாகவும் திணிக்கும் பண்பாட்டுப் படையெடுப்பை தமிழர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எதிர்த்துப் போராட வேண்டிய வேளை வந்து விட்டது.
- பிரின்ஸ் என்னாரெஸ் பெரியார்