உலக நாடுகளின் தலைவர்கள் எல்லாம் மிக நுட்பமாகக் கவனித்து வந்த ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளை மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன் படி மாவட்ட பஞ்சாயத்துக் கவுன்சிலர் தேர்தலில் திமுக 243 இடங்களையும், அதிமுக 214 இடங்களையும், காங்கிரஸ் 15 இடங்களையும், பா.ஜ.க 7 இடங்களையும், தே.மு.தி.க 3 இடங்களையும், இந்திய கம்யூனிஸ்ட் 7 இடங்களையும், மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 2 இடங்களையும், பா.ம.க., த.மா.க உள்ளிட்ட பிற கட்சிகள் 22 இடங்களையும் கைப்பற்றி உள்ளனர். அது போல ஒன்றியக் கவுன்சிலர் பதவிக்கான தேர்தலில் திமுக 2100 இடங்களையும், அதிமுக 1781 இடங்களையும், காங்கிரஸ் 132 இடங்களையும், பா.ஜ.க 85 இடங்களையும், தே.மு.தி.க. 99 இடங்களையும், இந்திய கம்யூனிஸ்ட் 62 இடங்களையும், மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 33 இடங்களையும், பா.ம.க., த.மா.க உள்ளிட்ட பிற கட்சிகள் 795 இடங்களையும் கைப்பற்றி உள்ளனர்.

seeman 234இந்தத் தேர்தல் முடிவுகள் உலக நாடுகளின் தலைவர்களை எல்லாம் நிலைகுலையச் செய்திருக்கின்றது என்றால் அது மிகையாகாது. காரணம் இந்தத் தேர்தல் தமிழ்நாட்டு மக்களுக்கு வேண்டுமானால் வழக்கமாக வரும் ஒன்றாக இருக்கலாம். ஆனால் உலக நாடுகளின் தலைவர்களைப் பொருத்தவரை இது வாழ்வா, சாவா என்ற போராட்டமாகும். காரணம், அகில உலகத் தலைவர்கள் அனைவருமே தங்களுடைய ஒரே தலைவராக, சித்தாந்த குருவாக ஏற்றுக் கொண்டிருக்கும் வருங்கால அகில உலக அதிபரின் தலைமையில் செயல்படும் நாம் தமிழர் கட்சி இந்தத் தேர்தலில் களம் கண்டிருப்பதால்தான். அதன் வெற்றியும், தோல்வியும் உலக அரசியல் போக்கை அசைத்துப் பார்க்கக் கூடியது என்பதால், தேர்தல் முடிவுகள் வெளியான அன்று உலக நாடுகளின் தலைவர்கள் முதல் உள்ளூர் வாட்ஸ் அப், பேஸ்புக் போராளிகள் வரை ஊடகங்களின் முன்னால் உறைந்து போய் உட்கார்ந்திருந்தார்கள்.

ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்ற 515 மாவட்டக் கவுன்சிலர் மற்றும் 5 ஆயிரத்து 90 ஊராட்சி ஒன்றியக் கவுன்சிலர் பதவி முழுவதும் நாம் தமிழர் கட்சியே வெல்லப் போகின்றது, அவரை எதிர்த்துக் களம் கண்ட அனைவரும் கட்டுத்தொகையை இழப்பதோடு, ‘பகை முடிக்கப்படுவார்கள்’ என்று எதிர்பார்த்து, காத்துக் கிடந்தார்கள்.

ஆனால் வருங்கால அகில உலக அதிபரின் கட்சி கடைவரை சீனுக்கே வரவில்லை என்பது எவ்வளவு பெரிய சோகம்! ஏற்கெனவே தனக்கு ஓட்டுப் போடாதவர்கள் எல்லாம் தமிழர்களே இல்லை என்று மிரட்டியவர், தற்போது நடந்த முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளைப் பார்த்துவிட்டு இன்னும் உஷ்ணம் அதிகமாகி, தமிழ்நாட்டில் இருக்கும் எவனுமே தமிழன் இல்லை என்ற முடிவுக்கு வந்தாலும் வந்திருப்பார். ஆனால் அப்படி ஒரு பயங்கரமான நிலைப்பாட்டை அதிபர் அவர்கள் எடுத்து  விடக் கூடாது என்று அந்தக் கட்சியைச் சேர்ந்த சுனில் என்பவரை கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்க மங்கலம் ஒன்றியம் 11 வது வார்டில் பச்சைத் தமிழனுக்குப் பிறந்த தமிழக மக்கள் வெற்றி பெறச் செய்துள்ளனர்.. இதன் மூலம் இந்திய அரசியலில் மட்டுமல்லாமல் அகில உலக அரசியலிலும் அந்தக் கட்சி காலடி எடுத்து வைத்துள்ளது.

ஆனால் உலக நாடுகளின் தலைவர்கள் எல்லாம் எதிர்பார்த்த அளவிற்கு வருங்கால அதிபருக்கு ஓட்டு விழாததால் அனைவருமே பெருத்த சோகத்தில் மூழ்கி இருக்கின்றார்கள். சீமான் அவர்களின் நாதக வெற்றியை வைத்தே பல உலக நாடுகளின் தலைவர்கள் எல்லாம் தங்கள் நாட்டிலேயும் ‘வடுக வந்தேறி’ அரசியலைப் போலவே ஏதாவது வந்தேறி அரசியலை கையில் எடுக்கலாமா என்று ஆழமாக சிந்தித்து வந்தார்கள். ஆனால் நாதகவின் தோல்வி அவர்களைப் பின்வாங்க வைத்திருக்கின்றது.

இவ்வளவு பெரிய தோல்விக்குப் பிறகும் வருங்கால அகில உலக அதிபர் அவர்கள் இன்னும் மனம் தளரவில்லை என்பதுதான் அவரிடம் உள்ள தனிச் சிறப்பே. இந்தப் படுதோல்வி சம்மந்தமாக அவர் அளித்துள்ள பேட்டியில், "எங்களுக்குப் பின்னடைவு எனச் சொல்ல முடியாது. மக்களவைத் தேர்தலில் பெற்ற வாக்குகளை விட இத்தேர்தலில் அதிக வாக்குகள் பெற்றுள்ளோம். உள்ளாட்சித் தேர்தலில் சாதி, பணம் அதிகமாக வேலை செய்யும். அதையெல்லாம் தாண்டி நாங்கள் எவ்வளவு வாக்குகள் பெற்றோம் என்பதைப் பார்க்க வேண்டும். நாங்கள் மக்களவையில் பெற்ற 4 சதவீத வாக்குகளில் இருந்து 10 சதவீதத்திற்கு முன்னேறியிருப்பது எவ்வளவு பெரிய வளர்ச்சி. ஊரகப் பகுதிகளில் எங்கள் கட்சி சென்று சேராத இடமில்லை என்பதே எங்களுக்கு வெற்றி. 120-க்கும் மேற்பட்ட இடங்களில் ஊராட்சித் தலைவர் பதவிகளை வென்றுள்ளோம். பல இடங்களில் வார்டு உறுப்பினர்கள் பதவிகளை வென்றுள்ளோம். நாகர்கோவிலில் ஒன்றியக் கவுன்சிலர் பதவியை எங்கள் கட்சி வென்றுள்ளது. இரு பெரும் கட்சிகள், பணபலத்தைத் தாண்டி நாங்கள் வெல்வது பெரிய மாற்றம் தான்" என்று கூறியிருக்கின்றார். ஆனால் நாதக தம்பிகள் அண்ணன் சொல்லும் அந்த 10 சதவீதம் எங்கே என்று குழப்பமடைந்து சுற்றிக் கொண்டு இருக்கின்றார்கள்.

ஆனாலும் தம்பிப் பிள்ளைகளை சோர்வடையச் செய்யாமல் உற்சாகப்படுத்தி மீண்டும் மீண்டும் பேஸ்புக், வாட்ஸ் அப் போன்றவற்றில் களமாடச் செய்ய வேண்டியது வருங்கால அகில உலக அதிபரின் பெரும் கடமையாகும். இன்னமும் நாதக தம்பிகள் அண்ணன் தேர்தலில் சாதி பார்க்காமல்தான் வேட்பாளர்களை நிறுத்தினார் என்று மனமார நம்பிக் கொண்டு இருக்கின்றார்கள். அவர்களைப் பொருத்தவரை அண்ணன் தான் எல்லாம். மார்க்ஸ், லெனின், ஸ்டாலின், மாவோ, அவர்களின் வரிசையில் பிரபாகரனுக்கு அடுத்த நிலையில் அவர்கள் அகில உலக அதிபரை வைத்திருக்கின்றார்கள்.

ஏன் அப்படி வைத்திருக்கின்றார்கள் என்று நாமும் வியப்படையத் தேவையில்லை. காரணம் நாதக தம்பிகளைப் பொருத்தவரை மேற்கூறியதில் சீமானைத் தவிர வேறு யாரைப் பற்றியும் அவர்களுக்குப் பெரிதாக எதுவும் தெரியாது. அதனால் தான், வாயில் வடை சுட்டாலே அவர்களை எல்லாம் மாபெரும் புரட்சியாளர்கள் என்று தம்பிகள் நம்பிக் கொண்டு இருக்கின்றார்கள்.

ஆனால் உண்மை என்னவென்றால் வாயில் வடை சுடும் யாருமே புரட்சியாளர்களாக அல்ல, புழுக்கைகளாக கூட ஆக முடியாது என்பதுதான். கட்சிக்கென ஒரு சித்தாந்தம், அந்த சித்தாந்தத்தின் கீழ் அணிதிரட்டப்பட்ட வெகுஜனமக்கள் - இவை எல்லாம் ஒரு கட்சிக்கு மிக முக்கியம். அதைவிட மிக முக்கியமானது அந்தக் கட்சியை உயிர்ப்போடு வைத்திருக்க அந்த மக்களின் பிரச்சினைகளுக்காக அந்தக் கட்சி நடத்தும் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள் போன்றவை. ஆனால், நமக்குத் தெரிந்து நாதக நடத்திய பேர் சொல்லும் அளவிலான போராட்டமோ, ஆர்ப்பாட்டமோ, பேரணியோ எதுவுமே கிடையாது. எந்தப் பிரச்சினை என்றாலும் அகில உலக அதிபர் மட்டுமே கருத்து சொல்வார், கருத்து மட்டுமே சொல்வார். அதைத் தாண்டி எந்த உருப்படியான முன்னெடுப்புகளும் நாதக ஒரு போதும் செய்ததில்லை. காரணம், நாதகவின் தம்பிப் பிள்ளைகள் அனைவரும் வாட்ஸ் அப், பேஸ்புக் போன்றவற்றின் மூலம் காற்றிலேயே கம்பு சுற்றும் வீரர்கள் என்பதைத் தாண்டி, நாதகவின் நோக்கம் தேர்தலில் வெற்றி பெறுவது கிடையாது என்பதுதான். ஆச்சரியமாக இருக்கின்றதா? ஆனால் அதுதான் உண்மை. தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என நினைக்கும் யாருமே சீமானைப் போல முழு நேரப் பொய்யன்களாக இருக்கத் துணிய மாட்டார்கள்.

ஆமைக்கறி தின்றது, அரிசிக் கப்பலை சுட்டது, பொட்டு அம்மன் வீட்டில் இட்லி தின்றது என்று பிரபாகரனை இழிவு செய்யும் நோக்கில் சீமான் வாயில் போட்ட விட்டைகளை எல்லாம் கிளற ஆரம்பித்தால், இறுதியில் நாற்றம் ஒன்றுதான் மிஞ்சும். இதை எல்லாம் சீமான் நன்கு தெரிந்தேதான் சொல்லிக் கொண்டு இருக்கின்றார். அவருக்கு கொடுக்கப்பட்ட பணி என்பது திராவிட இயக்கங்களை நோக்கியும், புரட்சிகர அரசியல் இயக்கங்களை நோக்கியும் இளைஞர்கள் சென்றுவிடக் கூடாது என்பதுதான். அதைத்தான் அவர் தொடர்ச்சியாகவும் செய்து வருகின்றார். தேர்தலில் வெற்றி, தோல்வி எல்லாம் அதிபருக்கு ஒரு பொருட்டே இல்லை. நீங்கள் இந்த ஊரகத் உள்ளாட்சி தேர்தலை நன்கு கவனித்தாலே தெரியும், மாவட்ட பஞ்சாயத்துக் கவுன்சிலர் தேர்தலில் பா.ஜ.க. 7 இடங்களிலும், அது போல ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கான தேர்தலில் பா.ஜ.க. 85 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் நாதக? தமிழ்நாட்டில் ஒன்றுமே இல்லாமல் இருந்த பாஜக, இந்தளவிற்கு வெற்றி பெற்று இருக்கின்றது என்றால் அதன் பின்னணியில் அதிமுக மட்டும் இல்லை, நாதகவும் உள்ளது என்பதுதான்.

திமுகவை ஒழித்துக் கட்ட வேண்டும், பாஜக-வை தமிழ்நாட்டில் கொண்டு வர வேண்டும் என்பதைத் தாண்டி சீமானுக்கு எந்த அரசியல் அபிலாசைகளும் கிடையாது. அவருக்கு கொடுக்கப்பட்ட பணியை அவர் மிகச் சிறப்பாகவே இதுவரை செய்து வந்திருகின்றார், இனியும் செய்வார். ஆனால் சீமானை நம்பி தேர்தல் சூதாட்டத்தில் பணத்தைப் போட்ட தம்பிகள் அனைவருமே நடுத்தெருவுக்கு வந்து கொண்டு இருக்கின்றார்கள், இனியும் வருவார்கள். தமிழ்நாட்டில் பாஜகவின் வெற்றி என்பது சீமானின் தோல்வியில் இருந்தே முகிழ்த்தெழுகின்றது. அப்படினா சீமான் ஜெயிச்சா பிஜேபி தோற்றுவிடுமா என்று சிறுபிள்ளைத் தனமாகக் கேட்டால் நாம் என்ன சொல்ல முடியும்? சீமான் வெற்றி பெறுவதை சீமானே விரும்ப மாட்டார் என்றுதான் சொல்ல முடியும்!

- செ.கார்கி

Pin It