கீற்றில் தேட...

“ஒரு மலர் மலர்வதைப் போல, ஒரு செடி வளர்வது போல கவிதை என்பது இயல்பாக நிகழ வேண்டும்.

கவிதைகளை உங்களிடமிருந்து பிதுக்கி எடுக்க முயலாதீர்கள். நீங்கள் நிரம்பி இருந்தால் கவிதை தானாக வழியும்."

- பேரா.மா.லெ.தங்கப்பா, இந்திரனுக்கு எழுதிய கடிதத்திலிருந்து...

கவிதை எப்போதும் நம்முடன் வாழ்கிறது. சமூக, அரசியல், பண்பாட்டு இலச்சினையாக, நம்முடைய அன்பு, காதல், ஏக்கம், எதிர்பார்ப்பு, ஆசை, கோபம், துக்கம், ஆகியவற்றின் வெளிப்பாடாகக் கவிதை எப்போதும் நம்மோடு இருக்கிறது. மனிதன் எப்போதும் அழகைத் தேடிக் கொண்டிருக்கிறான். தன்னுடைய அறிவுக்கும் உணர்வுக்கும் ஒரு வடிவத்தைத் தேடிக் கொண்டிருக்கிறான். கவிதை அவனுக்கு ஒரு புதையல் என்பார் பேராசிரியர் தி.சு.நடராசன்.

சங்கத் தமிழின் கவிதைப் படைப்பாக்கம் அகம் - புறம் என்ற இரு திசைகளில் பாய்ந்து பிரகாசித்ததை நாமறிவோம்.

அகநானூறு, குறுந்தொகை, கலித்தொகை போன்றவை அகப்பாடல்களின் முத்திரையெனில், புறநானூறு, கலிங்கத்து பரணி போன்றவை புறப்பாடல்களின் புகழ் பாடுபவை.

பாரதி / கவிமணி / நாமக்கல்லார் / பாரதிதாசன் / சுரதா / கண்ணதாசன்/ ஏர்வாடினர், கருமலைத் தமிழாழன் ஆகியோரின் கவித்தூரிகை மரபின் செழுமையை ஓவியங்களாய்த் தீட்டித் தந்தது.

முண்டாகக் கவிஞனின் - வசன கவிதைகள் - ஓர் விதிவிலக்கு, பிச்சமூர்த்தி, சி.சு.செல்லப்பா, க.நா.சு. பசுவய்யா, எஸ்.வைதீஸ்வரன், சி.மணி, ஞானக்கூத்தன் போன்றவர்களின் கவியோவியங்கள். இவைகளில் அடர்த்தி பரவியிருந்தவை. அக உணர்வுகளும் இருண்மை பற்றிய வியாக்கியானங்களுமே.

வானம்பாடிகளோ சுதந்திர கீதம் இசைத்தனர் புவியரசு, ஞானி, சிற்பி, மு.மேத்தா, சக்திகனல், தமிழ்நாடன், மீரா, சிதம்பரநாதன், அப்துல் ரகுமான், கங்கை கொண்டான் என கவிதையில் ஜனநாயகமும், மக்கள் பிரச்சனைகளும் கலந்து அழகியல் பூசிய (அதிர்வுகளாக) முகிழ்த்தன.

மரபுக் கவிதையாய் தவழ்ந்து புதுக்கவிதையாய் வளர்ந்த இன்றையத் தமிழ்க் கவிதை நவீனம், பின் நவீனம் எனப் புதுப்புது திசைகளில் பாய்ந்தோடும் நதியாகப் பொங்குகிறது.

தற்காலக் கவிதைகளை ஆண்வயக் கவிதைகள் பெண் மொழிக் கவிதைகள் எனவும் பிரிக்கலாம்.

தற்காலக் கவிதைப் போக்குகள் :

“சுவை புதிது, பொருள் புதிது, வளம் புதிது சொற்புதிது, சோதிமிக்க நவ கவிதை எந்நாளும் அழியாத மகாகவிதை” யென கவிதைக்கு இலக்கணம் வகுத்தான் பாட்டுப்புலவன் பாரதி.

தற்காலத் தமிழ்க் கவிதைகளை எனது பார்வையில் மூன்றாகப் பிரிக்கலாமென்று நினைக்கிறேன்.

1. வெறும் வார்த்தை அடுக்குகள்; தேய்ந்த குறியீடுகள்; பழகியப் படிமங்களோடு மொழியின் செழுமையின்றி புதிய உள்ளடக்கங்களின்றி தேங்கியக் குட்டைக்குள் குளித்துச் சுகங்காணுவோர் ஒருவகை.

2. நுட்பமான அழகியல்; நுண்ணரசியல்; பரிகாசமான மொழியாளுமை உள்ளடக்கப் புதுமை; சிறப்பான வெளிப்பாட்டு உத்திகள்; இனஉணர்வின் நாகரீகமான வெளிப்பாடு; சமகால சமூக நிகழ்வுகளின் மீதான சரியான விசாரணை எனக் கவிதையை ஒர் உணர்வுக்கடத்தியாக பயன்படுத்தி வெற்றி பெற்றக் கவிதைகள் இன்னொருவகை.

இந்த வகையை எளிதாய் விளக்கும் வகையில் ஓர் கவிதை :

இசை மரம்

மரம் இசையால் நிரம்பியது
அதிகாலையில்
ஈரக்காற்று முழுவதும்
இசைக்குறிப்புகள்
அடிவானத்து மேகங்கள்
இசையின் கசிவு
வானம் முழுதும்
இசையைப் பூசின சிறகுகள்
கடற்கரைச் சாலையில்
வாகன நடமாட்டம் தொடங்க
காணாமல் போயிற்று இசைமரம்

- இந்திரன்

3. மூன்றாவதாக ஒர் வகை யுண்டு; நவீன கவிதை என்ற பெயரில் எழுதுபவனுக்கும் வாசகனுக்கும் விளங்காத ஒர் மொழி, சற்றும் கற்பனைக் கெட்டாத படிமச் சிடுக்குகள், கட்டுரைத்துண்டுகளை கவிதையென அடம்பிடிக்கும் மூடத்தனம், வாசகனுக்கும் படைப்பாளிக்குமான நெருக்கம் குறைந்து, இடைவெளி அதிகரித்து, இறுக்கமான மொழியின் மூலமாக கவிதையின் பெயரால் தனக்குத் தானே சேர்த்துக் கொள்கிற அதிகாரம்.

சமகாலக் கவிதைகளில் அகம் :

“கவிதைமொழி வாழ்வின் மவுனத்தை வாழ்வு சார்ந்த அதிர்வுகளையும் கூர்மையாக்குவது, மனதில் ஏற்படும் நமைச்சல்களையும், ஏக்கங்களையும் இழந்தவைகளையும் நினைவுப்படுத்த கூடியது” என்பார் முனைவர் அரங்க மல்லிகா.

சங்கத்தின் அகப்பாடல்கள் காதல், களவொழுக்கம், கற்பொழுக்கம், காமம் ஆகியவற்றைப் பாடுவதைப் போலவே சமகாலத் தமிழ்க் கவிதைகளும் அக உணர்வுகளைப் பிரதிபலிக்கின்றன.

காதலைப் பாடாத கவிஞனுண்டா இதோ காதல் குறித்த ஓர் கவிதை.

காதலைச் சொன்ன மாலை

காதலைச் சொன்ன மாலையில்
ஒரே வரிசையில் நீண்ட நட்சத்திரங்கள்
சதுரமாய்ச் சிரித்தது நிலவு.
மணலலைகள் கிளம்பிக் கடலுக்குள் சென்றன
கரையிலிருந்து
திமிங்கலமொன்றினை விழுங்கியது
சின்ன நெத்திலி
பகலிலேயே அல்லிகள் பூக்க
பாலையிலிருந்துப் பீறிட்டன நீரூற்றுகள்
பூமி தொடவில்லை பாதங்கள்
சிறகு விரித்துப் பறக்கத் தொடங்கினேன்
ஒன்பதாம் திசையில்
பட்டமரமொன்றிலமர புஷ்பித்தது விருட்சமாய்
இலைகளில் இருந்து கமழ்ந்தது சுகந்தம்
தீத்தொட இனிக்கிறது தித்திப்பாய்
மாலைச் சூரியன் பொழிந்தான் பனிமழை
எல்லாப் பறவைகளும்
காதல் பறவைகளாக மாறிவிட்டன
காதலைச் சொன்ன மாலையில்

- அன்பாதவன்

பெண்ணியம், தலித்தியம் போன்ற காதலுக்காக காதலியம் (டுடிஎளைஅ) என்ற புதுக்கோட்பாட்டையே உருவாக்குகிறார் தமிழ் மணவாளன்.

காதலியம் :

பெருமரங்கள் அவ்வளவு எளிதாய்
மாறிவிடுவதில்லை, சென்றவாரம்
ஊப்பிரயாணம் போயிருந்தேன்
இருபதாண்டுகளுக்குப் பின்
இலைகள் உதிர்ந்திருக்கும்
ஆண்டுதோறும், வேர்கள் மட்டும்
அப்படியே இன்னும் ஆழமாய்.
வசந்த ஸ்தலமாய் இருந்தது
அம்மரமும் மரம் சார்ந்த இடமும்
அர்த்தங்கள் அவசியப்பட்டதில்லை
நிழல் படர்ந்த உரையாடல்களில்
எனக்கும் சந்தனாவுக்கும்
இடப்பெயர்ச்சி ரொம்பவும் இலகுவாய்
விடுவித்துவிடுகிறது. ஏனோ
இலக்கியம் பேசுவது போலில்லை
எதார்த்தக் காதலியம்
சாதுர்யமாய் தவிர்த்துவிடும் ஞாபகத்தை
வாழ்வின் பரபரப்பு
நினைவுகளைக் கவிதையாக்கிப் பார்க்கிறேன்
இன்றும் அவ்விடத்தில்
இன்னொரு நானும் இன்னொரு சந்தனாவும்.

காதலியத்தோடு அறிவியல் மற்றும் வேறு இயல்களைக் கலந்து புதுமை செய்கிறவர் ஆனந்த்.

காதலியல்....

குளிர் காற்றுடன்
உன் நினைவு
சூடானது உயிர்
எந்த வேதியியல் வினையிது?
ஒளியலையில்
ஒலியலையாய்
பேசும் உன் கண்கள்
எந்த இயற்பியல் விதியிது?
இதயங்கள்
இடம் மாறிய பின்பும்
இயங்க முடிகிறது
அவரவராய்
எந்த உடலியல் விந்தையிது?
நிகழ்ச்சிகளுக்கிடையே
விளம்பரங்களைப் போல்
என் செயல்களுக்கிடையே
உன் நினைவு
எந்த உளவியல் விளைவிது?
என்னை பிடித்திருப்பதன்
காரணத்தை
எத்தனை முறை கேட்டாலும்
உன் பதில் மௌனம்
எந்த மொழியில் விளக்கமிது?
உன்னோடு இருக்கும்
கணங்களில் மட்டும்
புள்ளியாகிப் போகிறது
பூமி
எந்த புவியியல் மாற்றமிது?
இல்லை
இத்தனையும் சேர்ந்ததா
காதலெனும் ஓர் இயல்

சில நேரங்களில் காதலைச் சொல்ல முடியும், காதலைச் சொல்ல இயலாதபோது தவிக்கின்ற மனசின் பட்டாம்பூச்சி படபடப்பை இந்த கவிதையில் நீங்கள் உணர முடியும்.

உன் பிறந்த நாள்

கொண்டாட்டக் கொடியெனக் கதிர்பறக்க
உன் பிறந்தநாள் என விடிகிறது காலை
கம்பி ஜன்னலைத் தாண்டி
கன்னத்தை உரசிச் செல்கிறது
இன்று என் எளிய பரிசாக
இந்தப் பூவைத் தரவிரும்புகிறேன்
தோள்தொட்டும் கை தொட்டும்
உன்னைச் சுற்றி வழியும் ஒரு கூட்டம்
இனிப்பூட்டிச மகிழ்வூட்டி
இதயம் நிரப்பும் மறுகூட்டம்
நின்று நின்று
ஆவலில் வெடிக்கிறது நெஞ்சம்
இசைவழியும் அறைநடுவே
ஒரு படகுபோல மிதக்கிறாய் நீ
கிட்டாத தனிமையை எதிர்பார்த்து
ஒரு பறவையெனத் தவிக்கிறேன் நான்
நான் வந்திருக்கும் சேதியை
எப்படித் தெரிவிப்பதோ புரியவில்லை
உன் காதருகே ரகசியமாகச் சொல்ல
தகுந்த ஆள் யாரென்று தெரியவில்லை
கூட்டத்தை விலக்கிக்கொண்டு
தேடி வருவாயோ புரியவில்லை
என்னிடம் நின்று பேச
ஒரு கணம் இருக்குமோ தெரியவில்லை
உன்னிடம் தர நினைத்த பூவை
உன் வாசலில் வைத்துவிட்டுச் செல்கிறேன்
எடுத்துப் பார்க்கும்போது
என் வரவு சொல்லும் இதன் நிறம்

- பாவண்ணன்

காதல் எனும் போது ஆண்மையை எழுத்தில் உடல் வெகு முக்கிய கருவியாக இருக்கிறது. உடலை - புறந்தள்ளி ஆண் எழுத்து எழுதாது என்பதை உறுதிப்படுத்துகிறது இக்கவிதை...

நீயும் நானும்

நான் எழுதுகிறேன்
உனது
உடலில் பக்கங்கள் மேல்
என் கவிதை வரிகளை
நான் எழுதும் அதே கணத்தில்
அவை மறைந்துவிடுகின்றன
ஆனாலும்
உனது உடலில் பக்கங்கள்
எப்போதும்
ஏதேனும் ஒரு கவிதையை
எனக்குச் சொல்லிக் கொண்டிருக்கிறது
உன் பார்வையில் தெறிக்கும்
கனலைத்
தாங்கிக் கொள்ள முடிகிறது முடியவில்லை
உன் பார்வை பொழியும்
சாரலைக் கூட
ஒதுங்கி விடுகிறேன்
உனது உடலில் நிழலில்

- கள்ளழகர்

ஆனால், பெண்மையை எழுத்து உடலை மையமாகக் கொண்டதல்ல.... மாறாக மனதை மையமாகக் கொண்டது காதலை உணர்ந்து, வெளிச்சொல்ல முடியா வேதனை பெருந்துக்கம் பெண்களுக்கு மட்டுமே சாத்தியம். இது பெண்மொழி

மௌனம்

நான்
உனக்கு
என்ன எழுத வேண்டும் என்று
இதுவரையில் தெரியவில்லை
ஆனால்
என்ன எழுதக் கூடாதெனத் தெரிகிறது
நான்
உன்னிடம்
என்ன பேச வேண்டு என்று
இதுவரையில் தெரியவில்லை
ஆனால்
என்ன பேசக் கூடாதெனத் தெரிகிறது
அதனால்தான்
நீ நேரில் இருக்கையில்
பேசாமலும்
நீ தூரப் போய் விட்ட பிறகு
எழுதாமலும்
இருக்கிறேன்.

- வைகைச் செல்வி.

காதலோடு காமம் என்பது தண்டவாளங்களைப் போல இணையாய் வருவது.

சங்க காலம் தொட்டே காமத்தை எழுதுவது புதிதல்ல. வள்ளுவரும் கூட காமத்துப்பாலை காய்ச்சி தந்திருக்கிறார்.

காமம் குறித்து ஆணொருவன் கவிதையில் வெளிப்படுத்துவதற்கும் பெண் வெளிப்படுத்துவதற்கும் வேறுபாடு நிறையவே உண்டு என்பதை நிரூபணம் செய்யுமிக் கவிதை.

வரப்பிலமர்ந்து
வேடிக்கைப் பார்க்கிறது காலம்
வெறிச்சிடும் சாலையில்
பயணித்துப்
புடைக்கும் என் நரம்புகள்
இருள் கிழித்து
ஊரும் பாம்பு
ஒரு கோடை வெயிலின்
உக்கிரத்தில்
உருகிடும் தாராய்
வழிந்தோடும் என் காமம்

காமம் குறித்து யோசிக்கையில் ஆணுக்கு உடலே பிரதானமாகிறது பெண்ணுக்கு மனதும் உணர்வும்.

ஓர் ஆணுக்கு “சிறுகோட்டு பெரும் பழம்” தருகிற சிரமிங்கே கவிதையாகிறது.

ஒண்ணு ரெண்டு மூணுயென
எண்ணியும்
ராமாராமாவென
உச்சரித்தும்
கண்ணை மூடி
பல்லைக் கடித்து
அடக்கியும்
அடங்காமல் மீண்டும்
பார்த்து விட்டேன்.
பேருந்தில் கைதூக்கி
நின்றவளின் அக்குள் கிழிசலை

- மதியழகன் சுப்பையா

அகம் என்பது வெளிப்படுத்த இயலாதது, வெளிப்படுத்தி மாளாதது. தனக்குத்தானே குமைவது. தன்னுள்ளே குடைவது.

பகிரப்படாத நேசத்தின்
துயரென்னைத் தின்கிறது
தனக்குத் தானே கட்டிக் கொண்ட
கைகளின் தனிமை போல.

என்ற தமிழச்சி வரிகள் போல் நான்கு வரிகளுக்குள் அடக்க முடியாத பெருஞ்சோகமது.

தற்காலக் கவிதையில் புறம்

சங்கப் பாடல்கள், புறம் பற்றி பேசுகையில், பெரும்பாலும் மன்னர்களின் வீரம், போர்த்திறம், படைவலிமை குறித்தே பேசுகின்றன. ஆனால், தற்காலக் கவிதைகளில் புறம் என்பதற்கு பொருள் வேறு.

இன்றைக்கு நம் கண்முன்னே நடக்கும் நிகழ்வுகள் குறித்து சிந்திக்காமல், பேசாமல், கவிதை தராமல் சமகாலக் கவிஞனால் இருக்க இயலாது அப்படி இருப்பின் அவன் சமகாலத்தைப் பிரதிபலிக்கின்றது கவிஞனாய் இருக்க முடியாது.

குறிப்பாக சமூக நிகழ்வுகள், உலக நடப்புகள் அரசியல் குறித்து எழுதாமல் ஒரு சமூக கவிஞனாய் பரிணமிக்க ஏலாது. தமிழின் பல்வேறு கவிதைப் படைப்பாளிகளும் தம்மளவில் சமூக பிரக்ஞையோடே இருந்து, வளர்ந்து தம் படைப்புகளை உருவாக்கி கவிஞன் என்பவன் சமூகத்திலிருந்து பிரிந்த வேறு ஒன்றல்ல... என்றும் சமூகத்துள் இருக்கிறான் என்பதை நிரூபித்தபடி இருக்கிறார்கள்.

சமூக நிகழ்வுகள் குறித்த வெளிப்பாடே விமர்சனத்தை கவிதையில் பூரணமாக வைத்து எழுதும் போது தூய இலக்கியவாதிகள், இவை உரத்த குரல்களில் பேசுபவை : கலைத்தன்மை குறைந்தவை”. என, நிராகரிப்பதும் நிகழ்வதுண்டு. ஆனால் படைப்பாளிகளுக்கென்று, நிறுவனங்களுக்கென்று சமூக கடமைகள் நிச்சமாய் உண்டு. அதிலிருந்து தப்பிக்க நினைத்தால் வாசகனும், விமர்சகனும் படைப்பாளியை நிராகரித்துவிடும் நிகழ்வுகள் இருந்தே வருகிறது.

“பாதகம் செய்பவரைக் கண்டால் நீ பயங்கொள்ளல் ஆகாது பாப்பா” என பாரதி பாடும்போது அது உரத்த குரலல்ல அது அடுத்த தலைமுறைக்கு வழிகாட்டல்.

“கொலைவாளினை எடுடா - மிகு
கொடியோர் செயல் அறவே”

என புரட்சி கவிஞர் வீறு கொண்டு எழுகையில் அது வன்முறை யன்று : அது சமூக கோபம் ! நியாயமானக் கோபம்! சமூகம் விரைவில் மாறிட வேண்டுமென்ற ஆதங்கம். “எதிர்க்கிறோம்; அதனால் இருக்கிறோம்” என்பர் மார்க்சீயர்.

எனவே இன்றையச் சூழலில் புறம் என்பது எதிர்ப்பிலக்கியங்கள். இத்தகையக் கவிதைகளை புரிந்துணர்ந்து எதிர்வரும் இளையத் தலைமுறை அந்த கோப ஜோதியை தொடரோட்டமாக எடுத்து செல்ல வேண்டிய சமூக நிர்ப்பந்தம் இன்றைக்கும் உண்டு என்பதை மறுக்க இயலாது.

“உரத்து பேச வேண்டியத் தருணங்களில் மவுனம் காப்பது பிழைப்புவாதிகளின் செயல். எந்தப் பக்கத்தில் வேண்டுமானாலும் சேர்ந்து கொள்ள வாகாக கவிதையில் அழுகுணி ஆட்டம் ஆடுபவர்களும் இருக்கிறார்கள். எல்லா இலக்கியப் பிரதிகளுக்குப் பின்னும் ஓர் அரசியல் இருக்கவே செய்கிறது. ஒவ்வொரு வார்த்தைக்கும் பின்னாலும் பால், இன, மத, சாதி நலன் இருக்கிறது. தேவையை ஒட்டி எழும் உரத்த குரல் இவ்வாறு தான் கலை வடிவம் கொள்கிறது. எனவே சந்தர்ப்பங்களுக்கேற்ப கவிதையில் வெடிக்கும் உரத்தக் குரலும் கலை அழகியல் தான்” என்பார் கவிஞர் கரிகாலன். (நவீன தமிழ்க் கவிதையின் போக்குகள் : பக். 106)

ஏதோ ஓர் அற்பக் காரணம் சொல்லி ஒரு தேசத்தின் மீது படையெடுக்கிறது பெருந்தேசமொன்று. அப்பாவி மக்கள் அநியாயமாக கொல்லப்படுகிறார்கள். குண்டு வீச்சு... கதறல்... துயரங்கள் தொடர்கதையாக ஒரு நிகழ்வு உலகத்தையே உலுக்கி விடுகிறது. ஒரே ஒரு பத்திரிகையாளருக்கு மட்டும் சொரணையோடு எதிர்வினைப் புரிய நேரிடுகிறது. கைக்குக் கிடைத்ததோ காலணி!

ஷீக்களின் சைஸ் 10

ஆச்சரியமான விஷயம்தான்
ஈராக்கில்
ஒரு பத்திரிகையாளர் அணிந்திருக்கும்
ஷுக்களின் சைஸ்
அமெரிக்க அதிபருக்குத் தெரிந்திருப்பது
எல்லைதாண்டிய பயங்கரவாதம் பேசிய
ஒருவரின்
எல்லைதாண்டிய ஜனநாயகம் இது.
ஆனால் இது துயரமானதுதான்
ஷுக்களின் அளவு பத்து என்றாலும்
அமெரிக்க சர்வாதிகாரத்தின்
பரப்பளவைக் கடந்து செல்வது
அவ்வளவு எளிதல்ல
சூட்கமமாய்ச் சொல்லிவிட்டன
அந்த செய்தியாளனின் ஷுக்கள்
ஒரு கோழைக்கு கிரீடமாய் இருப்பதைவிட
ஒரு வீரனுக்கு ஷுக்களாய் இருப்பதுமேல்.

மிக அருமையான மொழியில் எள்ளல் தொனியில் பதிவு செய்கிற நா.வே.அருள் பாராட்டுக்குரியவரல்லவா!

ஒரு படைப்பாளியின் பார்வையில் மனிதனும், மனிதமும் தான் முக்கியமானது உலகின் ஏதோ ஒரு மூலையில் ஏதுமறியா ஒர் அப்பாவி பாதிக்கப்படும்போது படைப்பாளியின் எழுதுகோல் மவுனம் காக்காது. அத்தகைய அறச்சீற்றம் பொங்கும் ஓர் கவிதை இது.

உலகின் மிக அழகிய பெண்

இன்றைய தேதிக்கு நீதான் ஆயிஷா
எங்கெல்லாம் ஒரு பெண் அநீதியாக
வதைக்கப்படுகிறாளோ
அங்கெல்லாம்,
அறுபட்ட உனது மூக்கின் எச்சங்கள்
நீதிக்கு முன்பாகச் சென்று
முறையிடட்டும்,
முதன் முதலாக வாய்க்குப் பதில்
மூக்கு புன்னகைப்பதை
அவமானத்தின் ரணம் மிச்சமிருக்கும்
உன் சீர்திருத்தப்பட்ட
முகத்தில்தான் பார்த்தேன்.
எம் அனைவரின் கண்ணீரிலும்
சமைக்கப்பட்ட
உன் புதிய மூக்கு
வெறும் அழகினை மேம்படுத்துகின்ற
அறுவை சிகிச்சையின் பரிசல்ல.
உனக்கு இழைக்கப்பட்ட
கொடுமைக்கான
ஒரு எளிய பிரார்த்தனை.
எங்கள் சூர்ப்பனகையின் அறுபட்ட
மூலையும், முக்கும்
இத்தனை யுகங்களுக்குப் பின்னரும்
உன்னில் தொடரும் இத் துர்க்கனவை.
இலக்குவணனின் ஆண் திமிரை.
அரேபிய தேசத்தின் அத்தனை
வாசனைத் திரவியங்களும்
மறைக்க முடியாது தோற்றோடும்.
இன்றவும் காதலின் சின்னம்
மூக்கறுபட்ட அவஸ்தையுடன்
அவமானமும், வலியும் தெறிக்கின்ற
உனது மூளி முகம் தான்
என்றென்றும்
அநீதிக்கு எதிரான எம் அழகின்
சின்னம்

- தமிழச்சி தங்கபாண்டியன்

“நான் படித்த தலை சிறந்த தமிழ்க் கவிதைகளில் இதுவும் ஒன்றாகும் என்று பெருமிதப்படுகிறார் பெரியார் தி.க.சி (குமுதம் தீராநதி-திச.2010 பக்.51)

உலக நடப்புகள் மட்டுமல்ல உள்ளூர் சங்கதிகள் கூட புறப்பொருள் ஆகக்கூடிய வாய்ப்புண்டு.

கவிஞனுக்கு இரண்டு கண்கள் மட்டும் போதாது. அவை சராசரி மனிதருக்குண்டானது. படைப்பாளிக்கு மிக முக்கியமானது. மூன்றாம் கண்! ஞானவிழி!

அப்படியோர் பார்வையில் சிக்கிய அவலச் சுவை நிரம்பிய கவிதை உங்கள் பார்வைக்கு.

நெல்லடிச்சா
மொதபரி நெல்ல வித்துடுவாரு
தாள்போரு நெல்லதான்
சாப்பாட்டுக்கு வைப்பாரு.
மல்லாட்டையில
நல்ல பயிற வித்துடுவாரு
நன்னி பயிறதான்
காணம் ஆட்டச் சொல்லுவாரு.
கம்புல
நெல்ல கம்ப வித்துடுவாரு
பொட்டு கம்பதான்
கூழுக்குக் குத்திக்கச் சொல்லுவாரு.
தொவரையில
நல்ல தொவரைய வித்துடுவாரு.
சொத்த தொவரையதான்
வூட்டுச் செலவுக்கு வைப்பாரு.
மொளகாயிலும்
அப்பிடித்தான்
நெல்ல மொளகாய வித்துடுவாரு
சள்ள மொளகாயத்தான்
கொழம்பு வச்சிக்க கொடுப்பாரு.
ராத்திரியில, படுக்கப் போறப்ப
அப்பா சொல்லிக்கிறாரு:
“என்ன வித்து என்ன பண்றது?
எப்பிடி எப்பிடியோ
குடும்பம் நடத்திப் பார்க்கிறன்
கடனும் அடையில,
கவலயும் தீரல”

- கண்மணி குணசேகரன்

“ஒரு விவசாயியின் வாழ்க்கை அப்படியே வெளிப்படுத்தப் பட்டிருக்கிறது. குடும்பத்துக்கென நல்ல விளைபொருள் எதையும் எடுத்து வைத்துக் கொள்ளாமல் விற்றுப் போட்டும், கடனும் அடையாமல் கவலையும் தீராமல் காலம் கழிக்கிற நிலை. இப்படித்தானே இன்றைக்குக் கோடானுகோடி வேளாண் பெருங்குடி மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்” என்பார் கவிஞர் விக்ரமாதித்யன்.

பொதுவாக புறம் சார்ந்த கவிதைகள் எழுத மனத்திடம் வேண்டும், தைர்யம் வேண்டும், துணிவு வேண்டும், எல்லாவற்றுக்கும் மேலாக சமூக சங்கதிகள் குறித்த கவனம் வேண்டும். சமூக மாற்றம் குறித்து அக்கறை வேண்டும்.

“உனக்கொரு அறை
உனக்கொரு கட்டிலுண்டு
உனக்கொரு மேஜை உண்டு
உனக்குள்ளே ஒரே உரிமை
சிந்திப்பது மட்டும் தான்
மாற்றானைத் தூண்டு முன்னெழுத்து
எப்படிச் சமூகம் அனுமதிக்கும்
மலைகளைப் பார்!
மரங்களைப் பார்
பூச்செடிகளைப் பார்
இடையறாது ஓடும்
ஜீவ நதிகளைப் பார்
பரந்த கடலைப் பார்
இதமூட்டும்
கடற்கரையைப் பார்
எவ்வளவு இல்லை நீ பார்க்க
என் அக்கசடர்களைக் குறித்து
வருந்துகிறாய்
குமுறுகிறாய்
எழுத்துக் கூட்டங்களைச் சேர்க்கிறாய்
உன் வேலை,
உன் உணவு
உன் வேலைக்கு போய்வரச் சுதந்திரம்
இவற்றுக்கு மேல்,
வேறென்ன வேண்டும்
சாப்பிடு தூங்கு மலங்கழி
வேலைக்குப் போ
உன் மீது ஆசை இருந்தால்
குறுக்கிடாதே

- ஆத்மாநாம்

என அதிகாரம் மிரட்டவே செய்யும். ஆனால் அதை மீறி உயிர்ப்பதுதான் படைப்பு.

ஏதோ ஓர் வழக்கு, எதுவோ ஓர் தீர்ப்பு. ஆனால் அநியாயமாய் எரிக்கப்பட்டனர் போன்ற மூன்று மாணவிகள்.

கோபங் கொப்பளிக்க பாசமுள்ள தந்தையாய் பொறுப்புள்ள கவிஞனாய் எழுதிய படைப்பு இது.

நீதிதேவன் மயக்கம்

ஆச்சர்ய மொன்றுமில்லை
எதிர்பார்த்தது தான்
மீண்டுமொரு அதர்ம வெற்றி
எட்டுத் தொகை விசிறிட
பதிணென் கீழ்க் கணக்கும் மாறுமென்பது
நிகழ்கால நிரூபணம்
அவிழ்ந்திருக்கும் கண்கட்டை காட்டி
தேவதையை நோக்க
கைகொட்டி சிரிக்கிறது
ஏதோ சிலரின் கனத்தில்
நிலைதடுமாறும் தராசு நிறமிழப்பது
இயற்பியல் மாற்றமா வேதியியல் மாற்றமா
கால்நாக்கும் அடிமை நாய்கள்
வாலாட்டி ஊளையிடும்.
மிதமிஞ்சிய சந்தோஷ புளியேப்பத்தில்
மீண்டும் சிலரின்
உயிர்குடிக்காமலிருப்பின் உத்தமம்.
சூது கவ்விட
வெற்றிகளில் புன்னைக்கும்
அதர்மபுரியின் அரசி
முன்பு எரிந்த மூவரின் சாம்பலும்
உன்னை மன்னிக்காது போ!

- அன்பாதவன்

சமீபத்தில் ஊடகங்களின் பெருங்குரலோடு பேசப்பட்ட பிரம்மாண்டத்தை தனது மூன்றாம் விழியால் நோக்குகிறார். கோ(வை)க் காரக் கவிஞர் எனும் ந.முத்து

பிறப்பொக்கும்

அயல்நாட்டு
ஆய்வரங்க அறிஞருக்கும்
வாழும் வள்ளுவருக்கும்
அவர்தம் வம்சத்தார்க்கும்
ஐந்து நட்சத்திர விடுதி
நாடாளும் அமைச்சருக்கும்
அவர்தம் அன்னைகளுக்கும்
நான்கு நட்சத்திர விடுதி
முக்கியப் புள்ளிகளுக்கும்
சிக்கியப் புள்ளிகளுக்கும்
மூன்று நட்சத்திர விடுதி
இனிக்கும் வாயுடைய
இந்நாட்டு தமிழ் அறிஞர்க்கு
இரண்டு நட்சத்திர விடுதி
ஆட்சிபணி அலுவலர்க்கு
அடுத்த நட்சத்திர விடுதி
காவல் நட்சத்திர விடுதி
காவல் பணியாளர்களுக்கோ
கல்வி நிலையமே விடுதி
உதட்டிலும் உள்ளத்திலும்
தமிழைத் தவிர வேறு
அறிய உடன் பிறப்புக்கு
ஆயிரம் நட்சத்திரங்கள் பூத்திருக்கும்
வீதியே விடுதி.....
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்

தமிழிலக்கியத்தின் பீஷ்ம பிதா தி.க.சி. இலக்கியத்துக்கான பஞ்சசீலக் கொள்கை ஒன்றை அறிவித்தார்.

தமிழியம்
மார்க்சீயம்
தலித்தியம்
பெண்ணியம்
சூழலியம்.

இவற்றுள், தமிழியம், மார்க்சீயம் இரண்டை தற்காலிகமாக தள்ளிவைப்போம். மற்ற மூன்றும் மிக முக்கியமானவை. குறிப்பாக சூழலியம் இன்றைய சூழலில் மிக மிக அவசியமானது : அவரசமானது.

வனங்களையும், நதிகளையும் நீர் நிலைகளையும் ஆக்ரமித்து கொள்ளையடிக்கும் கூட்டமொன்று இருப்பதை நாமறிவோம்.

மரங்களும் வனங்களும் இல்லையெனில் ஏதுமழை? வைகைச்செல்வியின் வருத்தமும் இதுதான்.

இப்படித்தான்

இலையாய் மரமாய்
மலைகளைப் போத்திய
காடுகள் மறைவது தெரிகிறதா?
உடுக்கை இழந்தும் மானமின்றி
மனிதன் வாழ்வது புரிகிறதா?
கூட்டை இழந்த பறவையோலம்
சாட்டையடி போல் கேட்கிறதா?
இங்கே -
கருவில் பெண்ணை அழிப்பவர்க்குக்
காட்டை அழித்தல் பெரிதாமோ?

பூமியை நிலத்தில் நீரை அசுத்தப்படுத்திவிட்டு அமெரிக்க டாலர்களுக்காக காத்திருக்கும் கும்பலை அம்பலப்படுத்துகிறது வீர்யமான ஒர் கவிதை.

ஆட்கள் தேவை

அமில மழை பெய்யும் ஆரோக்கியமான நகரத்தில் தினமும் ஆயிரக்கணக்கான லிட்டர்கள் சாயக்கழிவுகளை வெளியேற்றி நிலங்களை விஷமாக்கும் ஒரு ஏற்றுமதி நிறுவனத்திற்கு
இருபத்து நான்கு மணிநேரமும் தொடர்ந்து இயக்கக்கூடிய மனித இயந்திரங்கள் தேவை.
தகுதி : பசிக்காமலும், உறங்காமலும் தொடர்ந்து இயங்கும் திறன் படைத்திருக்க வேண்டும்.
இமைப்போதும் ஓய்வெக்காத இயந்திரங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
ழ2டீ சாய டெக்ஸ், கழிவு பிளாக், அமிலப்பூர்.

தொடர்ந்து, சமூக, சூழலியல் ஆர்வலர்களின் குரல்களை எச்சரிக்கையை புறக்கணித்து கொண்டே இருந்தால் எதிர்காலம் எப்படி இருக்கும் செழியனின் ஓர் பயங்கரமான கனவு கவிதையாயிங்கு.

கி.பி. 2400 ஓரு ஞாயிற்றுக்கிழமை

புறஊதாக் கதிர்வீச்சு
நாளை முதல் ஐந்து நாட்களுக்குத்
தொடர்வதாகச் சொன்னது
வானிலை அறிக்கை
அருங்காட்சியகத்திற்குப் போகும்
கவசமணிந்த பள்ளிச் சிறுவர்கள்
பூமியில் முளைத்திருந்த மரங்களின்
பதப்படுத்தப்பட்ட மாதிரிகளைப் பார்த்து மகிழ்ந்தனர்.
குடும்பத் தலைவர்கள்
நியாய விலைக் கடைகளில்
இந்த வாரத்திற்குச் சுவாசிப்பதற்கான
காற்று வாங்கப் போயினர்.
வீடுகளில் தங்கிய பெண்கள்
ஆழ்துளையிட்ட குடிநீர்க் குழாய்களில்
தீக்குழம்பு வருவதாகப் பேசிக் கொண்டனர்.
தங்களின் இளமைப்பருவத்தில்
கடைசியாய்ப் பார்த்த மழைகுறித்த கதையினை
முதியவர்கள் சொல்ல
புகை மூடிய பின்மதியத்திலேயே
தெருவிளக்குகள் எரியத் துவங்கின
கனவுகளை உருவாக்கும் கருவினைத்
தலையில் பொருத்தி
தூக்க மாத்திரைகள் விழுங்கி
படுக்கைக்குப் போயினர் குழந்தைகள்.
பூமியின் ஈர்ப்பு பிறழ்வினால்
இன்னம் ஒரு வாரத்திற்கு
இரவுகள் நிகழாதுபோக வாய்ப்பிருப்பதாக.
தொலைகாட்சி அறிவித்தது.

“இன்றைய பெண் எழுத்துக்கள் வாழ்க்கை எங்களுக்கு அளித்த முரண்களிலிருந்து எழும்புகின்றது. யாதர்த்தமும், விருப்பமும் முரண்பாடு கின்றபோது எங்களுக்கு முன்னால் சமூகத்தால் திணிக்ப்பட்டிருக்கின்ற சடங்கார்த்தங்களிலிருந்து. அதன்ஆதிக்க அல்லது அடிமைச் சிந்தனைகளிலிருந்து வெட்டியும் ஒட்டியும் வெளிப்படுகின்றது. அது இதுவரைஇருந்த எல்லா வரைவிலயக்கங்களையும் கேள்விக்குள்ளாகியபடிக்கு புதியத் தேடல்களை நிகழ்த்துகின்றது" என்பார் கவிஞர் திலகபாமா (பெண் படைப்புலகம் இன்று). இன்றையச் சூழலில் கல்வியும், பணிகளும் கூட பெண்களுக்கு விலங்காகவே ஆகிவிட்டன. கூடவே உறவுகள் என்ற உறுத்தல்கள்

“எமக்கு என்று சொற்கள் இல்லை
மொழி எம்மை இணைத்துக் கொள்வதில்லை
உமது கவிதைகளில் யாம் இல்லை
எமக்கென்று சரித்திரமில்லை
நீங்கள் கற்றுத் தந்ததே நான்
வார்த்துக் தந்ததே நிஜம்
எனக்கென்று கண்களை
செவிகளோ, கால்களோ இல்லை
அவ்வப்போது நீ இரவலாய்
தருவதைத் தவிர.....”

என அரற்றும் கவிஞர் கனிமொழியின் கவிதையில் நிஜமுண்டு, நியாயமுண்டு

பெண்ணின் நுண்ணிய உணர்வுகளை வெளிச்சொல்ல வாய்ப்புண்டா... வசதியுண்டா? அப்படியே வெளிப்படுத்தினாலும் அதை கவனமாகக் கேட்கிற காதுகளுண்டா? தேன்மொழியின் கோபம் இதைத்தான் பதிவு செய்கிறது.

“அவகாசங்களில் என்னை வெளிப்படுத்த
எங்கே விட்டிருக்கிறாய்,
மான் தின்ற மலைப்பாம்பு
மரம் சுற்றி நெரிவதுமாதிரி
என் உணர்வுகளை
எனக்குள்ளேயே
சடசடக்க விடுகிறேன்.”

தாலியென்று விலங்காக உறவென்பது சிறையாகப் போய் விடுவதை பதிவு செய்கிறார் திலகபாமா.

“தாலி எனக்கு
வேலியாம் சொல்லிக் கொண்டாய்
நம்பிக் கொண்டிருந்தேன்
நிலம் உன்னுடையதாக்க அன்று
நீ பத்திரம் எழுதியது
தாலியைப் பார்க்கும் போதெல்லாம்
வந்து போனது நினைவில்”.

திருமணமென்பது இங்குப் பெண்ணின் மீதான ஆணின் அதிகார கைப்பற்றல். அதனால்தான் புருஷ உத்தமனான இராமனுங்கூட தன் துணைவியைத் தீக்குளியலுக்கு கட்டளையிட முடிகிறது.

அப்பாவுக்கு
அறுபதினாயிரம் மனைவிகள்
இருந்தும் ஒரு சந்தேகம் இல்லை
ராமனுக்கு ஒரு மனைவி
ஆயிரம் சந்தேகங்கள்

கபிலனின் கவிச் சாட்டை புனித பசுக்களான புருஷோத்தமர்கள் மீது சுழலும்போது சொக்கன் மீது விழுந்த பிரம்படியாய் விழுகிறது.

பெண்களைச் சிந்திக்கவும் செயலாற்றவும் விடாமல் அடிமைகளாகவே வைத்திருப்பது புராணங் பெரும்பங்குண்டு. ஆனால், சமகாலக் கவிமனமோ பழைய வரலாறுகளை, புராணங்களைப் புதியது வெளிச்சம் பாய்ச்சிக் கேள்வி எழுப்புகிறது.

“நம்பி அணைத்திருந்த
யசோதையின்
கையைப் புறந்தள்ளி நடந்தவர்
ரகசியமாகக்கூட
சொல்லிச் செல்லவில்லை
ஓர் ஆறுதல் மொழி”

என வரலாற்றை மறுவாசிப்பு செய்ய மகுடேசுவரன் முற்படுகையில் புத்தர்களின் மீதும் புதிய வெளிச்சம் விழுந்து புனிதங்களைக் கேள்வி கேட்கிறது.

கேள்வி கேட்டால் தான் கவிதை!

தலித்தியம்

பிரெஞ்சு தேசத்தின் புகழ் வாய்ந்த படைப்பாளி ழீன் பால் சார்த்தர், நீக்ரோவியம் குறித்து கூறினார் : “இது நிறவெறியை எதிர்க்கும் நிறவெறி” தலித் இலக்கியத்துக்கும் இது பொருந்தும்.

இந்திய சமூக அமைப்பின் உச்சக்கட்ட கொடுமையான சாதி அமைப்பை தகர்ப்பதற்காகவே இங்கு தலித் இலக்கியம் முன்னெடுக்கப்படுகிறது. இந்த அடிப்படையில் காலங்காலமாய் தொடரும் சாதீய வன்கொடுமைகளுக்கு எதிராகவும், சமூ பொருளாதார சுரண்டலுக்கு எதிராகவும் மதங்களின் ஆதிக்கத்தை எதிர்க்கும் பண்பாட்டு கலகங்களாகவும் தலித் படைப்பாக்கங்கள் தொடங்கின. தொடர்கின்றன! தலித் படைப்பாளிகள் பலரும் தம் வாழ்வியல் சோகங்களை, குமுறல்களை ஆவேசங்களாகவும் கோபங்களாகவும் படைப்பாக்கினர். தலித் கவிதைகளில் இத்தகைய உரக்க குரல் கோபமாக, பட்ட அவமானங்களுக்கு பழி தீர்ப்பதாக, வசைகளாக சாபங்களாக வெளிப்படுகின்றன. வழக்கமான அழகியல் கோட்பாடுகளுக்குள் இவற்றை அடக்கக்கூடாது. அடக்கவும் முடியாது. ஏனெனில் இவை திமிறி கடலலை சுழன்று அடிக்கும் புயற்காற்று.

“எழுத்துக்கலையின் செய்நேர்த்தி அதற்கு சமதையான அளக்கான கருப்பொருள் கொண்டதாக இல்லாதபோவது என்பது ஒரு மோசடி” என்பார் காஸ்டன்டின்ஃபிடின். இன்றையச் சூழலில் படைப்புக் கலை என்பது தலித் படைப்பாளிகளின் அனுபவங்களின் ஆழ அகலங்களுக்கு ஈடு கொடுக்க முடியாமல் திகைது நிற்கிறது.

தலித் படைப்புகள் வசதியாக சாய்வு நாற்காலிகளில் அமர்ந்து படிப்பவர்களின் உள் உலகங்களை அதிர்ச்சிக்குள்ளாக்குகின்றன. அவர்களின் மனசாட்சியைத் தொட்டு ஒடுக்கப்பட்டவர்களின் சார்பாக நியாயம் கேட்கின்றன.

அத்தகைய கசந்த வாழ்வின் அவல வாழ்வின் குமுறலை படம்பிடிக்கும். உதாரணமாக ஒரு கவிதை இங்கே.

காக்கைகளின் காலம்

காக்கைகளைப் பிடிக்குமா உங்களுக்கு
காக்கைகளை யாருக்கத் தான் பிடிக்காது
அழைத்தவுடன் வருபவை, தோழமையானவை
அசுத்தங்களை அகற்றும் ஆகாயத் தோட்டிகளான
காக்கைகளை யாருக்குத் தான் பிடிக்காது.....
ஆனால் பிடிக்காத தென்போரு முண்டு.
கறுப்பானவை
“கரகர” குரல்கள் அருவருப்பானவை
கூட்டமாய் சண்டையிடுபவை
உணவுக்காய் யாசிப்பவை
என்றெல்லாம் ஒரு சாரார்
குற்றங்கூறினாலும்
சமூகவியல் ஆய்வாளர்கள் சொல்வதில்லை :
காக்கைகள் கூட்மாய் வாழ்வதால்
ஒற்றுமையின் நம்பிக்கைச் சின்னம்
குயில்களுக்கும் கூடுகொடுக்கும்
மன விசாலம்
குயில்குஞ்சையும் பொன்குஞ்சாய்
போஷிக்கும் பெருந்தன்மை எல்லாவற்றையும்விட
“கறுப்பு என்று பலர் பரிகசித்தாலும்
நிறத்தைப் பற்றிய தன்னம்பிக்கை
இனத்துக்காய்க் குரல் கொடுக்கம் போராட்ட குணம்
கிளிகளின் மொழிகளை
இசையெனப் புகழ்ந்த காலமொன்றுண்டு
தன் குரலை
தனிக் குரலை
தனிக்குரலாய் பதிவு செய்யுமிது
காக்கைகளின் காலம்

- அன்பாதவன்

சமகாலக் கவிதைகளில் அகம் புறம்

அகம், புறம் என தற்காலக் கவிதைகளை மதிப்பிடும்போது மூன்றாம் வகையாக அகமும் புறமும் இணைந்த ஒரு போக்கு தற்காலக் கவிதைகளில் நிகழ்வதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

தனிமனிதன் ஒருவனின் அகப் பிரச்சனை, புறப்பிரச்சனையாக அதாவது சமூகப் படைப்பாக மாறும் விந்தையைத்தான் அகமும் புறமும் என்று பட்டியலிட விரும்புகிறேன்.

இந்தப் பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ள கவிதைகளை மிகச் சரியாக மதிப்பிடும்போது அவை தனிமனிதக் கவிதைகள் (ஞநசளடியேட ஞடிநஅள) மட்டுமின்றி, சமூக கவிதைகளாகவும்(ளுடிஉயைட ஞடிநஅள) நீட்சியடைவதை அறிவார்ந்த அவை ஏற்றுக்கொள்ளும்.

“வாழ்க்கையில் ஒரு அனுபவத்தை நாம் பெறுகிறபோது சிந்தனைப் பூர்வமாகவும், உணர்ச்சிப் பூர்வமாகவும் அதனைப் பெறுகிறோம். இப்படி சிந்தனையையும் உணர்வெழுச்சியையும் ஒரே நேரத்தில் எந்த அளவுக்குத் தரக்கூடியதாய் ஒரு கவிதை இருக்கிறதோ அந்த அளவுக்கு அது சிறப்புடையதாகிறது.

இங்கேதான் அந்தரங்க கவிதையும்கூட சமூகக் கவிதைகள் தான் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். சில நேரங்களில் ஒரு மனிதன் சொந்த ஆசாபாசங்களை பொதுவாணவர்களுடன் பகிர்ந்து கொள்ளத் தகுந்தாகிவிடுகிறது. பொதுவாக கவிதைகளை அந்தரங்க கவிதை சமூகக் கவிதை என்று பிரிக்கிறவர்கள் இதை கவனிக்க வேண்டும் என வலியுறுத்துவர் கலை விமர்சகர் இந்திரன்.

உனக்கான நான்

உன் பசிக்கான உணவாய்
பலமுறை குழைந்திருக்கிறேன்.
உன் செய்நேர்த்திக்கெல்லாம்
செயலூக்கியாய் இருந்திருக்கிறேன்.
உன்னைப் புகழ்ந்து பேசும்
அடுத்தவர் வார்த்தைகளை அடிக்கோடிட்டு
மனனம் செய்து மகிழ்ந்திருக்கிறேன்.
உனக்கான பாராட்டு மழையில்
உள்ளம் குளிர்ந்து சிலிர்த்திருக்கிறேன்.
உனக்கான வாழ்த்து மடல்களை
இதயச் சுவருக்குள்
ஆணியடித்து மாட்டியிருக்கிறேன்
நீ விருதைச் சுமந்து வீட்டுக்கு வருகையில்
விழி விளக்கேற்றி ஆரத்தி எடுத்திருக்கிறேன்.
உன் சுகதுக்கங்களில்
சரிபாதியாய்ச் சங்கமித்திருக்கிறேன்.
நான் இடறிவிழும் போதெல்லாம்
எள்ளி நகைக்கும் நீ எழுந்திருக்கையில்
ஒரே ஒருமுறை கடைக் கண்களாவேனும்
கௌரவித்திருக்கிறாயா என்னை....

- இரா.தமிழரசி

மிக மென்மையாக, தன்னைப் புறக்கணிக்கும் துணையிடம் கேள்வி எழுப்பும் இந்தக் கவிதை நிச்சயமாய் தனி மனிதக் கவிதைதானா....? ஒவ்வொருக் குடும்பத்திலும் கேட்கும் உரத்த உண்மைக் குரலல்லவா!

தனிமனித சோகத்தை எள்ளல் மொழியில்..... சொல்லும்போதே அது சமூகக் கவிதையாக பரிணமித்து விடுவதை கீழ்க்கண்ட கவிதையில் உணரலாம்.

“சித்தார்த்தனைப் போல்
மனைவி குழந்தைகளை விட்டுவிட்டு
நடுராத்திரியில்
வீட்டை விட்டு
ஒடிப் போக முடியாது என்னால்
முதல் காரணம்
மனைவியும், குழந்தையும்
என்மேல் தான்
கால் போட்டுக்கொண்டு தூங்குவார்கள்
அவர்கள் பிடியிலிருந்து
தப்பித்துக் கொள்வது அவ்வளவு எளிதல்ல
அப்படியே தப்பித்தாலும்
எங்கள் தெரு நாய்கள் எமன்கள்
லேசில் விடாது
என்னைப் போன்ற அப்பாவியைப் பார்த்து
என்னமாய் குரைக்கிறதுகள்
மூன்றாவது ஆனால்
மிக முக்கியமாக காரணம்
ராத்திரியே கிளம்பிவிட்டால் காலையில்
டாய்லெட் எங்கே போவது என்பதுதான்

- தபசி

எள்ளலும் பகடியும் மிக லேசானது என எடுத்துக் கொண்டால் தத்துவ வரிகளில் வலுவான கேள்வியை எழுப்புகிறார் வண்ணநிலவன்.

“அப்பாவுக்குப் பிண்டச் சோறும்,
குழந்தைக்குப் பீத்துணியும்,
எனக்குப் பொருத்திக் கொள்ளவொரு
யோனி முடுக்கும் போதுமோ?”

வண்ண நிலவன் எழுப்பும் வினா ஒவ்வொரு தனிமனிதனுக்கும் உரியது; அதே நேரம் அந்தக் கேள்வி சமூகத்தின் பதிலுக்கானது. ஆனால் சமூகம் இது நாள் வரை பதில் தந்துள்ளதா?

நமக்கெல்லாம் நன்கு தெரிந்த புறநானூற்றுப் பாடல், காவற்பெண்டு எழுதிய பாடல்.

“சிற்றில் நற்றூண் பற்றி நின் மகன்
யாண்டு உவனோ என வினவுதி என் மகன்
யாண்டு உளன் ஆயினும் அறியேனோரும்
புலி சேர்ந்து போகிய கல் அளை போல
ஈன்ற வயிறோ இதுவே
தோன்றுவன்
மாதோ போர்க்களத்தானே”
(புற. 86)

இன்று ஒரு தாய், அவள் அவசரங்கள், வலி, ஆதங்கம், அனுபவம், அன்புப் பிறழ்வு என்ன பாருங்கள்! என கவிஞர் கலாப்ரியா வியக்குமொரு அகம்புறம் சார்ந்த சக்தி ஜோதியின் கவிதை.

அனைத்து
தயாரிப்புகளும்
அந்த நாளை நோக்கியே
அமைந்துவிடுகின்றன
முன்னிரவில்
தொற்றிக் கொண்ட பதட்டத்துடன்
புலர்கிறது அன்றைய தினம்
நினைவுகள் நிரம்பித் தளும்பும்
மனதை அடக்க இயலாது
திணறுகிறேன்.
மரங்களையும்
நிலங்களையும்
விரையும்
வாகனம்
மன ஓட்டத்திடம்
தேற்றியபடியே செல்கிறது.
பயண முடிவில்
பிரிவைத் தாங்கிக்கொண்ட
துயரத்திற்குப் பிராயச் சித்தமாய்
அவனை முத்தமிடுகிறேன்
இறுக்கி அணைத்துக் கொள்கிறேன்.
பால் சுரக்காத
மார்பின் தவிப்பை உணரவியலாமல்
முலைப் பால் அருந்தி வளர்ந்தவன்
என்னை விலக்கி நகர்கின்றான்
ஒரு பெண்ணைத் தீண்டிய கூச்சத்தோடு

- சக்தி ஜோதி

இந்த உணர்வு சமகாலத் தாய்கள் பலரும் உணர்வது. வார்த்தையில் வடிக்க கூச்சப்படுவதை கவிதையில் வார்த்தெடுத்தது ஜோதியின் சாதனை.

அழகியல் அறிவியல், அறவியல் ஆகிய மூன்று பண்புகளும் சீராக இணைந்த கவிதைகளே இன்றையத் தேவை.

இன்றையத் தமிழ்க் கவிஞனுக்குத் தேசியப் பார்வையுடன் குறிப்பாக தமிழ்த் தேசியப் பார்வையுடன், சர்வ தேசியப் பார்வையையு இணைந்து பிணைந்திருக்க வேண்டும் என்பது என உறுதியான கருத்து” என்று திடமாகக் குரலில் சமகாலத்துக்கான இலக்கியக் கொள்கையை விடுக்கிறார் இலக்கியப் பிதாமகர் தி.க.சி.

ஆனால் யதார்த்தம் என்பது வேறு! அது நம் சிந்தனையிலிருந்து வேறுபடுவது நம்மை யோசிக்க வைப்பது.

இறுதியாக

தமிழ்ச்சூழலில் தற்கால கவிதையாக்கங்கள் எத்திசையில் செல்கின்றன என்பதை எனக்குக் கிடைத்த தரவுகளின் மூலமாக விளக்க முயற்சித்துள்ளேன். மெக்சிகோவின் ஆக்டோவியாபாஸ் என்கிற உன்னதப் படைப்பாளியின் சொற்களிவை.

“முடிந்த முடிவுகள் எதனையும் நாங்கள் கொண்டிருக்கவில்லை என்பதையும் எல்லா உண்மைகளையும், குறிப்பாக அரசியல் உண்மைகள் மாறும் தன்மை கொண்டவை என்பதையும் மக்கள் புரிந்து கொள்கிறபோது மற்றவர்களை நோக்கிய தங்களை நோக்கிய வஞ்சகப் புகழ்ச்சி இரக்கத்திற்கும் இடம் கிடைக்கும் இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய தேவை இதுதான். இரக்கத்தின் மறு உயிர்ப்பு.

ஆத்மாநாம் சொன்னபோல அடர்ந்த நம்பிக்கையோடு சொல்வோம், நாளை நமதே.

- அன்பாதவன்