நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த பிறகு, இந்தியாவில் பல மாநிலங்களில் நடைபெற்ற 13 இடைத்தேர்தல்களின் முடிவுகள் வந்திருக்கின்றன. அவற்றுள் 10 இடங்களில் இந்தியா கூட்டணியும், ஓரிடத்தில் சுயேச்சையும் வெற்றி பெற்று இருக்கிறார்கள். இரண்டே இரண்டு இடங்களில் பாஜக தப்பிப் பிழைத்திருக்கிறது!
தமிழ்நாட்டின் விக்கிரவாண்டித் தொகுதியில் திமுகவின் வெற்றி தொடர்கதை ஆகியிருக்கிறது! எதிர்பார்த்த வெற்றிதான் என்றாலும், எதிர்பாராத அளவிற்கு வாக்கு வித்தியாசத்தில் திமுகவின் வெற்றி அமைந்துள்ளது.
2021 பொதுத் தேர்தலில் 9,500 வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே வெற்றி பெற்றிருந்த திமுக கழகம், இப்போது 67,000 வாக்குகளுக்கும் கூடுதலான வித்தியாசத்தில் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது! கடந்த மூன்று ஆண்டு கால ஆட்சிக்கு மக்கள் தந்துள்ள பாராட்டுப் பத்திரம் என்று இதனைக் கொள்ளலாம்!
அதிமுக, தேமுதிக ஆகிய கட்சிகள் இந்தத் இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை. தேர்தலைப் புறக்கணிக்கும் படி அக்கட்சிகளின் தலைவர்கள் கூறியிருந்தார்கள். ஆனாலும் 84.2 வாக்குகள் பதிவாகியுள்ளன என்றால், தலைமையின் பேச்சைப் புறந்தள்ளிவிட்டு அதிமுகவினர் தேர்தலில் வாக்களித்திருக்கிறார்கள் என்பது தெரிகிறது.அவர்கள் எந்தக் கட்சிக்கு வாக்களித்திருக்கக் கூடும்? பாமகவினர் தங்களின் சுவரொட்டி, பதாகைகளில் ஜெயலலிதா படத்தையும் பொறித்திருந்தார்கள். சீமானோ, தேர்தலில் போட்டியிடாத நீங்கள் எங்கள் கட்சிக்கு வாக்களியுங்கள் என்று காலில் விழாத குறையாகக் கெஞ்சினார். ஆனால் விழுந்திருக்கும் வாக்குகளின் எண்ணிக்கையைப் பார்த்தால் இருவருக்குமே அதிமுகவினர் வாக்குகள் போய்ச் சேரவில்லை என்று புரிகிறது. அதிமுகவின் பெரும் பகுதியினர் திமுகவிற்கே வாக்களித்திருக்கிறார்கள் என்பதும் தெரிகிறது!
தேர்தல் நேரத்தில் எப்படியாவது ஒரு கலவரத்தை உருவாக்கி விடச் சீமான் கட்சியினர் முயற்சி செய்தார்கள். திமுகவினர் கூடி நிற்கும் இடங்களுக்குத் திரும்பத் திரும்பப் போய் வாக்கு கேட்டார்கள். ஏதேனும் ஒரு கலவரம் வந்து விடாதா என்று ஏங்கினார்கள். ஆனால் அப்படி எதுவும் நடைபெறவில்லை.
15 நாள்களும் அந்தத் தொகுதியிலேயே தங்கி, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஊரில் பொதுக்கூட்டம் போட்டுச் சீமான் பேசினார். என்னென்னவோ வித்தைகள் எல்லாம் செய்து பார்த்தார். கடைசியில் வழக்கம் போல் கட்டுத்தொகையை ( Deposit) இழந்தது மட்டும்தான் மிச்சம்!
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் 8.2 விழுக்காடு வாக்குகளைச் சீமான் கட்சியினர் பெற்றிருந்தார்கள். பாருங்கள், விக்கிரவாண்டியில் அது பத்தாகும், அடுத்த 12 விழுக்காடு என்று கற்பனைக் கோட்டைகளை கட்டி முடித்தார்கள். ஆனால் இப்போது விக்கிரவாண்டியில் அவர்கள் 5.4 விழுக்காடு வாக்குகளை மட்டுமே பெற்று இருக்கிறார்கள். எதுவோ தேய்ந்து கட்டெறும்பாகி விட்டது என்பார்கள். அப்படி ஆகிவிட்டது அவர்கள் நிலையும்!
இப்போது 10,000 வாக்குகளை அவர்கள் பெற்றிருக்கிறார்கள். இன்னும் இரண்டு மடங்கு வாக்குகளை அதாவது 20 ஆயிரம் வாக்குகளைக் கூடுதலாகக் கிடைத்தால்தான் கட்டுத் தொகையே திரும்ப வரும்! இந்த லட்சணத்தில்தான் நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் .... நாங்கள் முதல்வராக வந்தவுடன் .... என்று கொஞ்சமும் கூச்சம் இல்லாமல் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆம், என்னைப் போன்றவர்கள், விக்கிரவாண்டியில் திமுகவின் வெற்றியை மட்டும் இல்லை, எங்கள் உயிரினும் மேலான தலைவர் கலைஞரைத் தவறான சொற்களால் பேசிய சீமான் கட்சியின் படுதோல்வியையும் சேர்த்தே கொண்டாடுகிறோம்!
- சுப.வீரபாண்டியன்