நம்பிக்கைக்கும் மூட நம்பிக்கைக்கும் பெரிய இடைவெளி எதுவும் கிடையாது. இரண்டுக்கும் அடிப்படையானது அறிவியல் பகுத்தறிவு சிந்தனை மறுப்பு தான். கேரளாவில் இரண்டு பெண்கள் நரபலி தரப்பட்ட கொடுமையான செய்தி நாட்டில் பலத்த விவாதங்களை எழுப்பியிருக்கிறது. கேரளாவில் தொடர்ந்து நரபலிக் கொடுமை மாந்திரீகவாதிகளால் நடத்தப்பட்டு வருகிறது என்ற செய்திகள் வருகின்றன. வடமாநிலங்களில் ‘பில்லி சூன்யம்’ என்ற நம்பிக்கையில் பல தலித் பெண்கள் கொல்லப்படுகிறார்கள். குடும்பப் பிரச்சினையைத் தீர்த்து வைக்க ‘மந்திரவாதியை’ நாடிச் செல்கிறார்கள். அங்கே நகைகளையும் பணத்தையும் பறிகொடுத்து ஏமாற்றப்படுகிறார்கள். ‘பேய் பில்லி சூன்யம்’ என்ற நம்பிக்கைகளும் மண்டிக் கிடக்கின்றன.

இந்த ஆபத்தான மூடநம்பிக்கைகள் பற்றி அறிவியல் அடிப்படையில் மக்களுக்கு பகுத்தறிவுப் பரப்புரை செய்யக்கூடிய ஒரே இயக்கம் பெரியார் இயக்கம் தான். கேரளாவில் நரபலிக்குப் பிறகு தான் மக்களிடம் அறிவியல் விழிப்புணர்வை உருவாக்க வேண்டும் என்று அம்மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கொள்கை முடிவு எடுத்துள்ளது.

கடவுள் நம்பிக்கை என்பதே அறிவியலுக்கு எதிரானது தான். மூடநம்பிக்கையை எதிர்த்தால் கடவுள் நம்பிக்கையைக் குலைத்து விடுமே என்ற அச்சத்தின் காரணமாகவே மூட நம்பிக்கையை எதிர்க்கவும் கண்டிக்கவும் பலரும் தயங்கு கிறார்கள்.

மதத்தின் சடங்குகளும் கடவுளின் மீதான நம்பிக்கையும் அதற்காக செலுத்தும் காணிக்கைகளும் தங்கள் வாழ்க்கையில் வளம் செழிக்க வைக்கும். குடும்பப் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கும் என்ற நம்பிக்கையின் நீட்சி தான் நரபலி, பேய், பில்லி சூன்யம், மாந்திரீக நம்பிக்கைகளும். நம்பிக்கை இருக்கலாம்; ஆனால் மூட நம்பிக்கை கூடாது என்று பேசு வோரைப் பார்க்க முடிகிறது. இரண்டுக்கும் உள்ள பிணைக்க முடியாத தொடர்பை திட்டமிட்டு மறைக்கிறார்கள்.

தலையில் தேங்காய் உடைப்பது, தீக்குழியில் இறங்குவது, உடலை கத்தியால் வெட்டிக் கெள்வது, சேறுவாரி இறைப்பது, துடைப்பத்தால் அடித்துக் கொள்வது என்று பல்வேறு வடிவங்களில் தமிழ்நாட்டில் கிராமங்களில் திருவிழாக்கள் சடங்குகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஊர்க் கட்டுப்பாடு, ஜாதிக் கட்டுப்பாடு இந்த நம்பிக்கைகளைப் பாதுகாத்துக் கொண்டிருக்கிறது. மக்களிடம் பகுத்தறிவுப் பரப்புரை செய்யும் பெரியார் இயக்கம் செயல்பட விடாமல் முடக்கப்படுகிறது. காவல்துறை பகுத்தறிவுப் பரப்புரைகளை அனுமதிப்பதே இல்லை.

இதைவிடக் கொடுமை மூடநம்பிக்கையை உறுதிப்படுத்தும் திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள் சமூகத்தை சீரழித்துக் கொண்டிருக்கின்றன. ஏதேனும் பகுத்தறிவுக் காட்சிகள் இடம் பெற்றால் ‘இந்துக்களைப் புண்படுத்துகிறார்கள்’ என்று கூக்குரலிடும் ஒரு கூட்டம் புதிதாக உருவாகி வருகிறது.

திராவிடர் விடுதலைக் கழகம் சில ஆண்டுகளுக்கு முன்னால், ‘நம்புங்க அறிவியலை; நம்பாதீங்க சாமியார்களை’ என்ற தலைப்பில் பரப்புரைக் கூட்டங்களை நடத்தியபோது பல ஊர்களில் பா.ஜ.க., இந்து முன்னணி எதிர்ப்பால் காவல்துறை அனுமதியே தரவில்லை. மனிதர்களை யாகத்தால் அழித்துவிட முடியும் என்று ‘சத்ரு சம்ஹார யாகம்’ என்ற யாகமே வேதத்தில் இடம் பெற்றிருக்கிறது. இராவணன் உருவத்தை தீ வைத்து எரித்தால் தீமைகளை அழிக்க முடியும் என்று மக்களை நம்ப வைக்கிறார்கள். ‘சம்ஹாரம்’ என்ற அழித்தொழிப்பு கோயில் திருவிழாக்களாக அரசு, காவல்துறை பாதுகாப்புடன் நடக்கிறது. சூத்திரர்கள் கோயில் பிரவேசத்தால் உருவான தீட்டைக் கழிக்க அவ்வப்போது வேத மந்திரங்களை ஓதி, குடமுழுக்கு நடத்தி தீட்டைக் கழிப்பதாகவும் கூறுகிறார்கள்.

நம்பிக்கைகள், பக்தி, சடங்கு என்ற அடிப்படையில் இவை அனைத்துமே மக்களின் பொதுப் புத்தியில் திணிக்கப்படுவதால் அது நரபலி, மாந்திரீகம், பெற்ற குழந்தையையே பிறந்த நேரம் சரியில்லை என்று பெற்ற தாயே கொலை செய்யும் கொடுமை என்ற எல்லை வரை நீள்கிறது.

மூடநம்பிக்கை தடுப்புச் சட்டங்கள் பல மாநிலங்களில் இருக்கின்றன. கேரளாவிலும் இருக்கிறது. தமிழ்நாட்டில் அப்படி ஒரு சட்டம் இல்லை. சட்டம் வரவேண்டும் என்று வலியுறுத்துகிறோம். ஆனால் சட்டங்களினால் மட்டுமே இதைத் தடுக்க முடியும் என்பதுகூட ஒரு மூடநம்பிக்கை தான். சட்டங்களை நாம் வரவேற்றாலும் அதைவிட மக்களிடம் பகுத்தறிவு - அறிவியல் பரப்புரையைக் கொண்டு செல்ல வேண்டும் என்பதே முக்கியம். அதன் தேவையைத் தான், பெருகி வரும் மூடநம்பிக்கைகள் உணர்த்திக் கொண்டிருக்கின்றன.

 - விடுதலை இராசேந்திரன்

Pin It