கேரளாவின் பாலக்காடு மாவட்டம், அட்டப்பாடி கிராமத்திலுள்ள மஞ்சக்கண்டி வனப்பகுதியில் கடந்த அக்டோபர் மாதம் 28 -ஆம் தேதி கேரள காவல்துறையின் மாவோயிஸ்ட் தடுப்புப் பிரிவான தண்டர்போல்ட் படையினரால் 4 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். சுட்டு கொல்லப்பட்ட மணிவாசகம், கார்த்தி, ஸ்ரீமதி, சுரேஷ் ஆகிய நான்கு பேரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். ஆனால் இப்படியொரு கொடூரம் அரங்கேற்றப்பட்டதைப் பற்றி தமிழ்நாட்டில் உள்ள எந்த ஒரு அரசியல் கட்சியும், முற்போக்கு இயக்கங்களும் ஏன் தமிழர்களின் ஒட்டுமொத்த அத்தாரிட்டி தாங்கள்தான் என்று மார்தாட்டிக் கொள்ளும் தமிழ்த் தேசியவாதிகள் கூட இதற்கு எதிர்வினை ஆற்றியதாகத் தெரியவில்லை.

maoist killed in palakkadகார்ப்ரேட்டுகளின் ஏவல் நாய்களாக வாழ்வதையே தங்களின் கொள்கையாகக் கொண்ட முதலாளித்துவத்தையும், பார்ப்பனியத்தையும் ஏற்றுக் கொண்ட கட்சிகளும், இயக்கங்களும் தங்களுக்கு எதிர்நிலையில் இருந்து அதை எல்லாம் அழித்தொழிக்க வேண்டும் என்று பாடுபடும் மாவோயிச அமைப்பை ஒழித்துக் கட்ட கங்கணம் கட்டிக் கொண்டு அலைவதை நம்மால் புரிந்து கொள்ள முடிகின்றது. அவர்களின் வளர்ச்சி என்பது தொலைநோக்குப் பார்வையில் அரசதிகாரத்தை கேள்விக்கு உட்படுத்தும், சுரண்டல் அமைப்பை முடிவுக்குக் கொண்டு வரும். எனவே மாவோயிச அமைப்பை ஒழித்துக் கட்ட வேண்டும் எனத் தீவிரமாகக் களமாடி வருகின்றார்கள்.

இதற்காக பசுமை வேட்டை என்ற பெயரில் மூன்று லட்சத்துக்கும் அதிகமான துருப்புகளை காடுகளில் இறக்கி விட்டுள்ளது இந்திய அரசு. அவர்களின் அன்றாடப் பணி என்பது பழங்குடியின மக்களை காடுகளில் இருந்து விரட்டி அடிப்பதற்காக அவர்களின் வீடுகளைக் கொளுத்துவது, பெண்களை பாலியல் வன்புணர்வு செய்வது, சுட்டுக் கொல்வது, ஊனமாக்குவது போன்றவைதான். இப்படிப்பட்ட அநீதியான ரத்தம் உறைய வைக்கும் வன்முறைகள் மூலம் லட்சக்கணக்கான பழங்குடியின மக்கள் காடுகளில் இருந்து, அவர்கள் காலம் காலமாக வாழ்ந்த பூர்வீக இடங்களில் இருந்து அகதிகளாக விரட்டி அடிக்கப்பட்டுள்ளனர்.

ஜார்கண்ட், சட்டீஸ்கர், ஒரிசா, மத்தியப் பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் எல்லைகளைத் தொட்டுச் செல்லும் தண்டகாரண்யா காடுகளில் புதைந்து கிடக்கும் பாக்சைட், நிலக்கரி, தங்கம், வைரம், கிரானைட், இரும்புத் தாது போன்றவற்றைக் கொள்ளையிட வேதாந்தா, ஜிண்டால், எஸ்ஸார் போன்ற நிறுவனங்கள் துடித்துக் கொண்டிருக்கின்றன. இவர்களின் ஏவல் நாய்களாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் அடிவருடிகள்தான் இந்தப் போரை தலைமையேற்று நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். பட்டாளி வர்க்கத்திற்கு எதிர் சித்தாந்த நிலைப்பாடு கொண்ட இவர்கள் செய்யும் அரக்கத்தனத்தை வரலாறு முழுவதும் நாம் அறிந்திருக்கின்றோம். அதனால் பெரிய ஆச்சரியம் எதுவும் எழவில்லை.

ஆனால் இன்று கம்யூனிஸ்ட்கள் ஆளும் கேரளாவில் தண்டர்போல்ட் படையினரால் 4 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டதை எப்படி எடுத்துக் கொள்வது?. கார்ப்ரேட்டுகளின் நலனைக் காப்பாற்றுவதில் ஆளும் வர்க்கத்தின் கூட்டாளியாக தாங்கள் இருக்கின்றோம் என்பதை CPM நிரூபிக்கின்றதா? மன்மோகன் சிங் “நக்ஸலிசம் நம் நாட்டிற்கு மிகப்பெரிய உள்நாட்டு பாதுகாப்பு அச்சுறுத்தல்” என்று சொன்னதை CPM மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கின்றதா? ஏற்றுக் கொள்கின்றது, அதனால்தான் பன்னாட்டு முதலாளிகளுக்காக தன் சொந்த நாட்டு மக்களை வேட்டையாட உருவாக்கப்பட்ட தண்டர்போல்ட் படையை ஏற்றுக் கொண்டிருக்கின்றது. தன்னை ஒரு பாட்டாளி வர்க்கக் கட்சி என்று சொல்லிக் கொண்டிக்கும் CPM, அதே பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை ஆயுதப் போராட்டத்தின் மூலம் கொண்டுவர முடியும் என நம்புவர்களை வேட்டையாடும் என்றால், இவர்கள் உள்வாங்கிக் கொண்ட மார்க்சிய- லெனினியம் பல்லிளிக்கின்றது.

இவர்கள் மாவோயிஸ்ட்கள் மீது வைத்திருக்கும் வன்மம், முதலாளித்துவ பயங்கரவாதிகள் வைத்திருக்கும் வன்மத்திற்கு எந்த வகையிலும் குறைவில்லாதது. பாராளுமன்றத்தைக் கோயிலாகவும், தேர்தல் பாதையை கதி மோட்சம் அடையக் கிடைத்த ஒரே வழியாகவும் தரிசிக்கும் நிலைக்கு வந்துவிட்டதன் வெளிப்பாடுதான், இவர்களை மாவோயிஸ்ட்கள் மீது வெறி கொண்டு பாய வைக்கின்றது. இந்தியாவில் முதலாளித்துவ பயங்கரவாதிகள், பார்ப்பன பயங்கரவாதிகள், கம்யூனிசம் பேசிக் கொண்டே கழுத்தறுக்கும் CPM என்ற மூன்று எதிரிகளை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு இன்று மாவோயிஸ்ட்கள் தள்ளப்பட்டு இருக்கின்றார்கள்.

CPM, மாவோயிஸ்ட்களை எதிர்முரணாக வைத்தே அணுகும் போக்கானது நிச்சயம் ஆளும்வர்க்க முதலாளித்துவவாதிகளுக்கே பயனுள்ளதாக அமையும். அவர்களின் ஆயுதப் போராட்ட அரசியலில் கருத்து மாறுபாடு இருந்தால், அதை சித்தாந்த ரீதியாக அணுகுவதே சரியானதாக இருக்கும். ஆனால், ஆர்.எஸ்.எஸ். கும்பலுக்கும் CPMக்கும் இன்று பெரிய வேறுபாடு எதுவும் இல்லாத நிலை ஏற்பட்டிருக்கின்றது. கோவிந்த் பான்சாரே, தபோல்கர், கல்புர்கி, கெளரி லங்கேசு போன்றவர்களை சுட்டுக் கொன்றவர்களும், மணிவாசகம், கார்த்தி, ஸ்ரீமதி, சுரேஷ் ஆகியோரை சுட்டுக் கொன்றவர்களும் ஒரே மனநிலையில் இருந்துதான் இதைச் செய்துள்ளார்கள். அது தங்களின் சித்தாந்தத்திற்கு எதிர்நிலையில் இருப்பவர்களை சுட்டுக் கொல்வது என்பதுதான்.

கேரள உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ஒருவரின் மகனான ஷியாம் பாலகிருஷ்ணன் 2014ல் மாவோயிஸ்ட் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட போது, கேரள உயர்நீதிமன்றம் 2015 மேயில் வழங்கிய தீர்ப்பில் ‘பாதுகாவலர்களாக இருக்க வேண்டிய போலீஸ்காரர்களே அக்கிரமக்காரர்களாக மாறிவிட்டார்கள். இது ஒரு மறைமுகமான சட்டமீறல்’ என்று கடிந்து கொண்டது.

நீதியரசர் ஏ. முகமது முஷ்டாக், ‘மாவோயிஸ்ட்களின் அரசியல் தத்துவம் நமது அரசியலமைப்பு அரசியலோடு ஒத்துப் போகாவிட்டாலும் கூட, மாவோயிஸ்ட்டாக இருப்பது ஒரு குற்றமல்ல. மனித அபிலாசைகளின் அடிப்படையில் சிந்திப்பது என்பது ஒரு அடிப்படை உரிமை. எனவே ஒருவரது நடவடிக்கைகள் சட்டவிரோதமானவை என்பதற்கு ஏற்கத்தக்க அளவு போலீசிடம் ஆதாரம் இருந்தாலன்றி அவர் மாவோயிஸ்ட் என்ற ஒரே காரணத்திற்காக அவரைக் காவலில் வைக்க முடியாது’ என்று குறிப்பிட்டார்.

ஆனால் இன்றோ சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். முப்படைகளையும் வைத்து தேசிய இனப் போராட்டங்களையும், முதலாளித்துவ, பார்ப்பனிய எதிர்ப்புப் போராட்டங்களையும் ஈவு இரக்கமற்று ஒடுக்கி வரும் இந்திய அரசின் உற்ற நண்பனாக மாறியிருக்கின்றது CPM. தண்டர்போல்ட் படை என்பது கேரள அரசே நடத்தும் மற்றொரு சால்வாஜீடும் ஆகும். சிறை, சித்தரவதை, என்கவுண்டர், போலீஸ் காவலில் கொலை, வன்புணர்ச்சி என அனைத்துமே இனி மாவோயிஸ்ட்கள் மீது கேரள அரசு கட்டவிழ்த்துவிடும் என நாம் உறுதியாக நம்பலாம்.

நாம் எந்த வகையிலும் மாவோயிஸ்ட்களின் ஆயுதப் போராட்டத்தை ஆதரிக்கவில்லை. சமவெளிப்பகுதியில் கருத்தியல் பரப்புரை மூலம் பெரும் எண்ணிக்கையிலான மக்களை வென்றெடுக்க முயற்சி செய்யாமல், துப்பாக்கி முனையில் அதை வென்றெடுக்க முடியும் என நினைப்பது அவர்களைத் தனிமைப்படுத்தவே உதவும். அதைத்தான் தொடர்ச்சியாக கார்ப்ரேட் ஊடகங்களும், முதலாளித்துவ ஆதரவு கட்சிகளும், இயக்கங்களும் செய்து வருகின்றன. ஒரு சிறு ஆயுதக் குழுவை வைத்துக் கொண்டு இந்திய அரசின் மிகப் பெரிய படையை தோற்கடிக்க முடியும், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை வென்றெடுக்க முடியும் என நினைப்பதெல்லாம் சமூகத்தை மதிப்பிடுவதில் அவர்கள் பாரிய பிழை இழைத்திருக்கின்றார்கள் என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டும். குறிக்கோள் உயர்ந்ததாக இருந்தாலும் அடையும் வழிமுறையில் அவர்கள் தவறு செய்கின்றார்கள். அந்தத் தவறை தங்களுக்கு சாதகமாக முதலாளித்துவ, பார்ப்பன பயங்கரவாதிகள் பயன்படுத்திக் கொள்கின்றார்கள்.

நான்கு பேர் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். ஆனால் எந்த எதிர்வினையும் இந்த மக்கள் மத்தியில் இருந்து எழவில்லை என்பதை மாவோயிசத் தோழர்கள் சிந்திக்க வேண்டும். சாதியவாதிகளும், மதவாதிகளும், இனவாதிகளும் முதலாளித்துவ ஆதரவு என்ற ஒற்றைப் புள்ளியில் ஒன்றுபட்டு இருக்கின்றார்கள். அதனால் தான் அவர்கள் மாவோயிஸ்ட்கள் கொல்லப்பட்டதைப் பற்றி கவலை கொள்ளாமல் இருக்கின்றார்கள். பெரும்பான்மை மக்களின் ஆதரவைப் பெற தோழர்கள் முயற்சிக்க வேண்டும். அதன் மூலம் மட்டுமே யார் மக்களுக்காக உண்மையாகப் போராடுகின்றார்கள், யார் பாட்டாளி வர்க்க அரசியலை முன்னெடுக்கின்றார்கள் என்பதை நாம் மக்களுக்கு விளங்க வைக்க முடியும்.

- செ.கார்கி

Pin It