தமிழ் நாட்டின் ஐந்து தென்மாவட்ட மக்களுக்கு நீராதாரமாக விளங்குகிறது முல்லைப் பெரியாறு நீர்தேக்கம். அதன் தற்போதைய நீர்த் தேக்க அளவை உயர்த்த வேண்டும் என்பது தமிழ்நாட்டின் நெடுநாளைய கோரிக்கை. ஆனால், பெரியாறு அணை பலவீனமாக உள்ளது என்ற பொய்யான காரணத்தைக் கூறித் தமிழகத்தின் உரிமையை மறுத்து வருகின்றன கேரள ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள்.

பெரியாறு அணை 142 அடி நீரைத் தேக்கும் அளவுக்கு மிக வலுவாகவே உள்ளதாக அணையை ஆய்வு செய்த வல்லுனர் குழு கூறிவிட்டது. இதை அடிப்படையாக வைத்து உச்சநீதிமன்றமும், முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி அளவுக்கு நீரைத் தேக்கலாம் என்றும் கூறியிருக்கிறது. ஆனாலும் முன்பு இருந்த இந்திரா காங்கிரஸ் அரசு அடம்பிடித்தது போலவே, தேசியம்(?) பேசும் கம்யூனிஸ்ட் அரசும் அணையின் உயரத்தை அதிகரிக்க முட்டுக்கட்டை போடுகிறது.

தமிழகத்தின் நீலகிரி மலையில் உற்பத்தியாகும் பவானி நதி கேரளாவிற்குள் சென்று பிறகு தமிழ்நாட்டிற்கு வருகிறது. கேரளப்பகுதியில் இந்த நதி நீரையும் தடுக்க திட்டம் தீட்டி இன்னும் 100 மீட்டர் தூரம் கால்வாய் வெட்டும் பணி மட்டுமே மிச்சம் இருப்பதாகச் செய்திகள் வருகின்றன. இப்படி முல்லைப் பெரியாறு மட்டுமின்றி பவானி நீரையும் கொள்ளையடிக்க கேரளம் முயன்று வருகிறது.

30 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் நீர் நிறைந்து ஓடிய பாலாறு, ஆந்திரத்தின் அடாவடித் தனத்தால் தற்போது வெறும் மணல் படுகையாக ஆனதை நம்காலத்திலேயே நாம் காண்கிறோம். காவிரி நீரும் கானல் நீர் ஆகிவருகிறது. இந்நிலையில் முல்லைப் பெரியாறின் மீது தமிழகத்திற்குள்ள உரிமையை மறுத்துப் பெரும் குரலெடுத்து ஒரு ஒலி கிளம்பியது. கன்னடத்து வாட்டாள் நாகராஜின் குரலை ஒத்த அந்தக் குரல் கேரள முதல்வர் அச்சுதானந்தத்தின் குரல் என்று தெரிந்ததும் தமிழ்நாட்டு மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

தேசியம் பேசும் கம்யூனிஸ்ட்டுகளின் மனத்தில் சம்மணமிட்டு அமர்ந்து இருப்பது தமிழின விரோதம் என்பதைத் தமிழ்நாட்டார் புரிந்து கொண்டனர். ஆனால் தமிழ்நாட்டு கம்யூனிஸ்ட்டுகள் இன்னும் வாய்மூடி மெளனமாக இருக்கிறார்களே ஏன்? 1952 சட்டமன்றத் தேர்தலில் 62 இடங்களைப் பெற்று தமிழ்நட்டின் முதன்மையான எதிர்க்கட்சியாக இருந்தது ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் இயக்கம். தமிழ்நாட்டின் உரிமையை மறுக்கும் முல்லைப் பெரியாறு அணைச் சிக்கலில் வாயைத் திறக்காமல் இருப்பதன் மூலம், கட்டெறும்பு சிற்றெறும்பு ஆனகதை போல நடக்கத்தான் போகிறது என்பதையாவது உணர்ந்து இருக்கிறார்களா தமிழ்நாட்டுக் கம்யூனிஸ்ட்டுகள்?

டான்யூப் நதி அய்ரோப்பா கண்டத்தின் பல நாடுகளுக்கிடையில் இன்றும் எந்தச் சிக்கலும் இல்லாமல் ஓடிக்கொண்டு இருக்கிறது. கனடாவில் உற்பத்தியாகி அமெரிக்கா வரை செல்கிற லாரன்ஸ் நதியின் கதையும் இதேதான். உலகின் மிக நீளமான நைல்நதி ( 6700 கி.மீ) பல நாடுகளைக் கடந்து, தான் உற்பத்தியாகும் நாட்டிற்குத் தொடர்பே இல்லாத எகிப்து நாட்டிற்குத்தான் அதிக வளத்தைக் கொடுக்கிறது. அதனால் நைல் நதிக்கு எகிப்தின் நன்கொடை என்றே பெயர். அவ்வளவு ஏன்? இந்தியாவில் பிறக்கும் சிந்து நதி பாகிஸ்தானுக்குச் சென்றுதான் கடலில் கலக்கிறது. இவ்வாறு பல நாடுகளைக் கடந்து செல்லும் எந்த ஒரு நதிக்கும் இன்றுவரை எந்தச் சிக்கலும் இல்லை.

அப்படி ஏற்படாதவாறு அனைத்துலக நதிநீர் ஆணையத்தின் சட்டதிட்டங்கள் மிகத்தெளிவாக உள்ளன. ஆனால் இந்திய நாட்டில் மாநிலங்களுக்கு இடையில் ஓடும் நதிகளில் மட்டும் ஏன் இந்தச் சிக்கல். பிரித்தாளும் பார்ப்பனச் சூழ்ச்சிக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் பலியானதன் விளைவே இது. கம்யூனிஸ்ட் கட்சிக்கு உள்ளேயே கேரள முதல்வர் அச்சுதானந்தத்திற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு ஆதரவு தேட அவர் முல்லைப் பெரியாறு சிக்கலை கையில் எடுத்து இருக்கிறாரோ என்று அய்யப்படவேண்டி உள்ளது.

“காவிரியின் மீதான கருநாடக அணைகள் தமிழர்களுக்காக

திறக்கத் தவறினால் தமிழ்நாடு இந்தியாவை துறக்கத் தயங்காது”

என்ற கவிஞர் அறிவுமதியின் சொற்கள் முல்லைப் பெரியாறுக்கும் பொருந்தும்.

- மேட்டூர் அமிர்தராஜ்

Pin It