தேசத்தின் குரல்
குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கும், தேசியக் குடிமக்கள் பதிவேட்டுக்கும், தேசிய மக்கள்தொகைப் பதிவேட்டுக்கும் எதிரான போராட்டம் இந்தியத் துணைக்கண்டமெங்கும் வீச்சுடன் நடந்து வருகிறது. மோதி அரசின் பாசிசப் போக்குகளுக்கு எதிரான குடியாட்சியப் போராட்டமாக இது உருவெடுத்துள்ளது.
ஜமியா மிலியா இஸ்லாமியா, ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகம் ஆகிய கல்வி நிறுவனங்களின் மாணவர்கள் மீது இந்திய அரசின் ஆயுதப் படைகள் ஏவிய வஞ்சகமான வன்முறைக்கு மறுக்கவியலாச் சான்றுகள் வெளிவந்துள்ளன. உத்தரப் பிரதேசத்தில் அரசின் அடக்குமுறையால் நூற்றுக்கு மேல் உயிரிழப்புகள் நடந்துள்ளன.
வடகிழக்கில், குறிப்பாக அசாமில், இந்தக் குடியுரிமைப் போராட்டம் இந்தியப் பேரரசியத்துக்கு எதிரான தேசிய இனத் தாயக உரிமைக்கான போராட்டமாக விரிவடைந்திருக்கிறது. மக்களை மத அடிப்படையில் பாகுபடுத்திப் பிரித்தாளும் இந்தியச் சூழ்ச்சி அங்கே எடுபடவில்லை.
இந்தியாவின் பிற பகுதிகளில் குடியுரிமைப் போராட்டம் பாசிச எதிர்ப்புப் போராட்டமாகவும், குடியாட்சிய உரிமைப் போராட்டமாகவும் முன்னெடுக்கப்பட்ட போதிலும், இடதுசாரி, குடியாட்சிய ஆற்றல்கள் அதில் முன்னின்ற போதிலும் பெரும்பாலும் இசுலாமிய மக்களின் பெருந்திரள் பங்கேற்புதான் போராட்டத்தின் முதுகெலும்பாகத் திகழ்கிறது. இந்த உண்மையைக் காரணங்காட்டி இதனை ’முசுலிம் போராட்டம்’ என்று குறுக்கிக் கொச்சைப்படுத்தும் முயற்சியில் இந்துத்துவ ஆற்றல்களும் இந்துத்துவத்தின் எடுபிடிகளும் ஈடுபட்டிருப்பதைக் காண முடிகிறது.
குடியுரிமைச் சட்டத்தின் கேட்டினை உணர்வதில் இசுலாமிய மக்கள் முந்திக் கொண்டிருப்பதில் குற்றம் எதுவுமில்லை. மற்றவர்களுக்காகக் காத்திராமல் அவர்கள் போராட்டத்தில் முனைந்து நிற்பதை வரவேற்கத்தான் வேண்டும். இசுலாமிய வெகுமக்களின் போராட்டம் இசுலாமிய அடையாளங்களோடு நடத்தப்படுவதும் இயல்புதான். இசுலாமிய அடையாளங்களும் இசுலாமிய இறை நம்பிக்கை சார்ந்த முழக்கங்களும் இந்தப் போராட்டத்தின் குடியாட்சிய உள்ளடக்கத்தை மறுதலிப்பதாகாது.
தமிழகத்தில் குடியுரிமைப் போராட்டத்தை முன்னெடுப்பதில் இசுலாமிய அமைப்புகளோடு, தமிழ்த் தேசிய, திராவிட இயக்க, இடது, குடியாட்சிய ஆற்றல்கள் இணைந்து நிற்கின்றன. ஆனால் இங்கேயும் இசுலாமிய மக்களின் பெருந்திரள் பங்கேற்புதான் அடித்தளமாக உள்ளது. போராட்டத்தின் அடித்தளத்தை விரிவாக்கி, அனைத்துப் பகுதித் தமிழ் மக்களும் பெருந்திரளாகப் பங்கேற்கச் செய்ய வேண்டும் என்று பாசிச எதிர்ப்புக் கூட்டமைப்பில் அக்கறையுடன் ஒரு மீளாய்வு நடைபெறுவதை வரவேற்கிறோம்.
அரபு வசந்தம் தந்த தகீர் சதுக்கம் போல், சல்லிக்கட்டுப் போராட்டத்தில் தமிழ் வசந்தம் கண்ட மெரினா போல் இப்போதைய குடியுரிமைப் போராட்டத்திலும் தில்லியின் சகீன் பாக் பெருந்திரள் கவன ஈர்ப்புக் கூடுகையின் களமாகியுள்ளது. சகீன் பாக்கிலும் இசுலாமியப் பெண்களின் பங்கேற்பே முதன்மையாகத் திகழ்கிறது.
சென்னையிலும் ஒரு சகீன் பாக் என்பது தொடக்கமுதலே போராடும் ஆற்றல்களின் விருப்பமாக இருந்த போதிலும் அண்மையில்தான் வட சென்னையில் வண்ணைப் பகுதியில், இங்கேயும் முதன்மையாக இசுலாமியப் பெண்கள் இப்படி ஒரு களம் அமைத்துள்ளார்கள். காவல்துறையின் அடக்குமுறையையும் தமிழக ஆட்சியாளர்களின் அவதூறுகளையும் மீறி விடாப்பிடியான உறுதியுடன் போராடி வரும் வண்ணைப் பெண்டிரின் அமைதியான வீரத்தை மதித்துப் போற்றுகிறோம்.
வண்ணையில் காவல்துறை தேவையற்ற வன்முறையை ஏவி அதனால் பெரியவர் ஒருவர் உயிரிழந்ததும், இந்த அடக்குமுறையைக் கண்டித்து தமிழக அளவில் தன்னெழுச்சியாக வெடித்த போராட்டமும் இசுலாமியரல்லாத தமிழ் மக்களின் குறைவான பங்கேற்பு பற்றிய வினாவை மீண்டும் முன்னுக்குக் கொண்டு வந்துள்ளன.
இந்திய அளவிலும் தமிழக அளவிலும் பாசிச எதிர்ப்புப் போராட்டத் தலைமையின் பெருங்குறைகளில் முதன்மையானது: காசுமீரம் பற்றிய பாராமுகம்! ஆறு மாதக் காலத்துக்கு மேலாக காசுமீர மக்களைக் கூண்டிலடைத்து வைத்திருக்கிறது மோதி - அமித் ஷா - அஜித் தோவல் கும்பல். விடுதலைப் போராளிகள் மட்டுமல்ல, இந்திய மேலாட்சியத்தை ஏற்றுக் கொண்ட தலைவர்களும் கூட கொடிய சட்டங்களின் கீழ் சிறை வைக்கப்பட்டுள்ளார்கள். இந்திய அரசின் நடவடிக்கையை இராணுவ முற்றுகை என்று நாடாளுமன்றத்தில் வண்ணித்த கட்சிகளே கூட பாசிச எதிர்ப்புப் போராட்டத்தில் காசுமீர மக்களின் உரிமைகளைப் பற்றி மூச்சும் விடுவதில்லை என்பதில் கவனமாயுள்ளன.
காசுமீரத்திலிருந்து இந்தியப் படை வெளியேற வேண்டும்! காசுமீர மக்களின் குடியாட்சிய உரிமைகள் மீட்டளிக்கப்பட வேண்டும்! சிறும அளவில் (குறைந்த பட்சமாக) இந்தக் கோரிக்கைகள் கூட இல்லாமல் பாசிச எதிர்ப்பு என்பது ஐயத்திற்குரியதே!
குடியுரிமைப் போராட்டத்தில் காசுமீரத்தைக் கவனமாக ஒதுக்கி விட்டு “ஆசாதி” முழக்கங்களும், “இன்குலாப்” முழக்கங்களும் எழுப்பப்படுவது நேர்மையின் பாற்பட்டதன்று.
“நாங்கள் இந்தியாவிலிருந்து விடுமை (சுதந்திரம்) கேட்கவில்லை, இந்தியாவிற்குள்தான் விடுமை கேட்கிறோம்” என்று கன்னையா குமார் பேசியதற்கு, "இந்தியாவிலிருந்து விடுமை கோரும் உரிமை இல்லாமல் இந்தியாவிற்குள் விடுமை என்பதில் பொருளுண்டா?” என்று உமர் காலித் கேட்டாரே, அதற்கு என்ன விடை? இந்தியப் பேரரசின் கனத்த மூடுபாதணிகளின் அடியில் மிதிபட்டு நசுங்கும் காசுமீருக்காகக் குரல் கொடுக்காமல் பாசிசத்தை எதிர்க்கிறோம் என்று பேசுவது கொடுமுரணல்லவா?
குடியுரிமைப் போராட்டங்களில் இந்திய தேசிய மூவண்ணக் கொடி அசைக்கப்படுகிறது. ஆனால் காசுமீரத்தில் இந்தக் கொடியை ஆண்டில் ஓரிரு முறை ஏற்றிப் பறக்க விடவும் கூட பட்டாளப் பாதுகாப்பு தேவைப்படுகிறது. இந்தக் கொடியை அம்மக்கள் தங்கள் தாயகத்தில் கால் பரப்பி நிற்கும் வன்கவர் படையின் அடையாளமாகவே கருதுகிறார்கள். காசுமீரத் தேசத்தின் தன்தீர்வுரிமையை (சுயநிர்ணய உரிமையை) மறுக்கும் இந்திய அரசமைப்பை அடிமை முறியாகவே கருதுகிறார்கள். அவர்கள் ஒருபோதும் ஒப்புக் கொள்ளாத அந்த அடிமைமுறியைப் புனிதப்படுத்தும் அடையாளம்தானே மூவண்ணக் கொடி!
இந்திய அரசமைப்பைத் தேசிய இனங்களின் அடிமைமுறியாகவே நாமும் கருதுகிறோம். ஒடுக்குண்ட மக்கள் அனைவருக்கும் வரலாற்று நோக்கில் அது அடிமைமுறியே ஆகும். இந்த அரசமைப்பைத் தகர்ப்பதில்தான் நமக்கான தேசிய விடுதலையும் குமுக விடுதலையும் அடங்கியுள்ளன. அரசமைப்பு உருவான வரலாற்றுப் பின்னணியின் காரணத்தால் அது சில முற்போக்குக் கூறுகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது என்பதை நாம் மறுக்கவில்லை. சமயச் சார்பின்மை, சமூக நீதிக்கான இட ஒதுக்கீடு போன்ற இவ்வாறான கூறுகளைச் சுட்டிக்காட்டிப் பாசிசத்தின் தாக்குதலுக்கு எதிரான போரட்டத்துக்கு வலுச்சேர்ப்பதில் பிழையில்லை.
ஆனால் ஒட்டுமொத்தமாக இந்திய அரசமைப்பைத் தூக்கிப் பிடிப்பதும், மூவண்ணக் கொடியைச் சீராட்டுவதும், பொருத்தமற்றுப் போன ’ஜனகணமன’ இசைப்பதும் காலவழுவே. இந்திய விடுதலைப் போராட்டக் காலத்தில் சில சிறந்த விழுமியங்களின் அடையாளமாகவே மூவண்ணக் கொடி வடிக்கப்பட்டது என்பதை மறுக்க முடியாது. கொடியின் நடுவில் சமூக நீதியின் அடையாளமாக அசோகச் சக்கரம் இடம் பெற்றதற்கு ஒரு வரலாறே உண்டு. அந்த விழுமியங்களைப் போற்றுவதாக இன்றைய இந்தியக் குடியரசு அமைதிருக்கவில்லை என்பதே உண்மை. நமது போராட்டம் உடனடிப் பார்வையில் இப்போதைய ஆட்சியாளர்களுக்கு எதிரானது என்றாலும் தொலைநோக்குப் பார்வையில் இந்தியக் குடியரசுக்கும், அதன் அரசமைப்புக்கும் எதிரானது என்பதை மறப்பதற்கில்லை. அசோகச் சக்கரத்தில் இன்று மறைந்திருப்பது இந்துத்துவத்தின் விசுணுச் சக்கரமே!
கருவாடு மீனாகாது. கறந்த பால் மடிபுகாது. சருகு இலையாகாது. சரிந்த மண் மலையாகாது. இந்துத்துவத்தால் விழுங்கி செரிக்கப்பட்ட இந்தியத் தேசியமும் உயிர் மீளாது. இது புரட்சியத் தமிழ்த் தேசியத்தின் காலம், புரட்சியச் சமூக நீதியின் காலம். பாசிச எதிர்ப்புப் போர்வையில் இந்தியத் தேசியத்தை உயிர்ப்பிக்கும் முயற்சி பலிக்காது.
இந்தியத் தேசியத் தளத்தில் நின்றே பாசிச எதிர்ப்புப் போராட்டத்தை நடத்த முடியும், அப்படி நடத்துவதே நல்லது என்று இப்போதும் நேர்மையாக நம்புகிற நண்பர்கள் காசுமீரத்தில் அந்த நம்பிக்கையை உரசிப் பார்க்கட்டும். காசுமீரத்தைப் பலியிட்டுத்தான் பாசிச எதிர்ப்பு ஒற்றுமையைக் காக்க வேண்டும் என்றால் கண்ணை விற்றுச் சித்திரம் வாங்கும் அந்த முயற்சியில் எங்களால் கைநனைக்க முடியாது.
நம் குடியாட்சிய நேர்மைக்கு காசுமீரம் போலவே மற்றொரு உரைகல் ஈழம். நம் கண்முன்னே இனவழிப்புக்கு ஆளான தமிழீழ மக்களுக்கு நீதி கேட்காத ஒரு போராட்டம் எப்படிப் பாசிச எதிர்ப்புத் தேர்வில் தேறி வர முடியும்?
எதிர்காலத்தில் குடியுரிமைப் பறிப்புக்கு ஆளாவோம் என்ற அச்சத்தினால் இசுலாமிய மக்கள் போராடுவது நியாயம் என்னும் போது, உயிர்க்கஞ்சி தாயகம் விட்டேகி ஏதிலியராய் (அகதிகளாக) கரையொதுங்கி நாடற்றவர்களாகி விட்ட ஈழத் தமிழர்களின் குடியுரிமைக்காகப் போராட வேண்டாமா? சற்றொப்ப இலட்சம் தமிழர்கள் ஏதிலியராகக் கூட அறிந்தேற்கப்படாமல் நாற்பதாண்டுக் காலமாகக் கந்தல் முகாம்களில் வாழ்ந்து வரும் அவல வாழ்வுக்கு என்ன முடிவு? தமிழ்நாட்டில் குடியுரிமைப் போராட்டத்தின் முதல் கோரிக்கையாக இருக்க வேண்டியது ஈழத் தமிழர்களுக்கான குடியுரிமைதான் என்னும் போது அது கடைசிக் கோரிக்கையாகக் கூட இல்லாத ஒரு போராட்டத்துக்குத் தமிழர்களின் முழு ஆதரவு எப்படிக் கிடைக்கும்?
பாசிசக் கொள்கைகளுக்கும் பாசிசப் போக்குகளுக்கும் அடிப்படையாக இருக்கும் பொருளியல் காரணிகள் குறித்து பாசிச எதிர்ப்பு ஆற்றல்களுக்குத் தெளிவு இருக்க வேண்டும். இப்போது நாட்டைச் சூழ்ந்துள்ள பொருளியல் நெருக்கடிக்கு முதலிய வளர்ச்சிப் பாதையும், அதன் ஆகக் கடைசியான புதுத் தாராளிய வடிவமுமே காரணமாகும். மக்களிடையே வறுமை மிகுந்து வாங்குந்திறன் வற்றி அங்காடி சுருங்கி உழவும் தொழிலும் நசிந்து கிடக்கின்றன. இது வந்து போகும் சுழல் நெருக்கடியன்று நிலைத்து நீடிக்கும் படியான கட்டமைப்பு நெருக்கடி என்பதைப் பொருளியல் அறிஞர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
ஆட்சியாளர்கள் நெருக்கடி என்ற ஒன்று நிலவுவதையே அறிந்தேற்க மறுக்கும் போது தீர்வு எப்படிக் காண்பர்? நெருக்கடியையும் கூட பன்னாட்டுப் பெருமுதலாளர்களை மேலும் கொழுக்க வைக்கவும், சுமைகள் அனைத்தையும் உழைக்கும் மக்கள் மீது சுமத்தவுமே அரசு பயன்படுத்த முயல்கிறது. பாசிச நடவடிக்கைகளை வெறும் திசை திருப்பும் முயற்சிகளாக மட்டும் பார்ப்பது பிழை. உழைக்கும் மக்களைப் பிளவுபடுத்தவும் மக்கள் போராட்டங்களை நசுக்கவும் ஆளும் வகுப்புக்குப் பாசிசம் தேவைப்படுவதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
1975ஆம் ஆண்டு நெருக்கடிநிலையின் பெயரால் இந்திரா காந்தியின் காங்கிரசாட்சி செயலாக்கிய பாசிசத்துக்குப் பொருளியல் காரணிகள் இருந்தது போலவேதான் இப்போது காசுமீரம் முதல் குடியுரிமைத் திருத்தம் வரை மோதியின் பாஜக ஆட்சி செயலாக்கும் பாசிசத்துக்கும் பொருளியல் காரணிகள் இருப்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். இல்லையேல் பாசிசக் கும்பல்கள் நடுவிலான பதவிச் சதுரங்கத்தில் நாம் பகடைகளாக உருட்டப்படும் ஆபத்து உள்ளது. எச்சரிக்கிறோம்!