தனது நிலத்தில் தானே எருதாக - ஏர் கலப்பையை முதுகில் பூட்டி உழும் ஒரு விவசாய குடும்பம். இது சமீபத்தில் தி ஹிந்து பத்திரிக்கையில் படத்துடன் வெளிவந்த ஒரு கட்டுரையின் பாதிப்பில் எழுதியது.

குட்டக் குட்டக் குனிய கற்றுக் கொடுத்த நமது பாரம்பரிய வர்ணாசிரம் பண்பாட்டை ஆளும் வர்க்கம் தூக்கிப் பிடிக்கும் மர்மம் இதோ இங்கே தெரிகிறது.

நாம் அஹிம்சா விரும்பிகளாம்....சொல்லுவது யார்? மூன்று வேலையும் மூக்குப் பிடிக்க உண்ணும் புண்ணிய ஆத்மாக்கள்.

அடிமையாய் வாழ பழக்கப்பட்டவன், உரிமை என்பதை பற்றி எந்த அறிமுகமும் இல்லாதவன், ஜனநாயகத்தை அவனுக்காக ஓட்டுப் பொறுக்கும் ஆத்மாக்களின் வாய்களிலும், வசவுகளிலுமே அறிந்தவன் - எப்படி தனக்கான உரிமைகளை கேட்டு போராடுவான்? அவன் அஹிம்சாவின் வன்முறையை தனது பிறப்பால் ஏற்றுக் கொண்டவன்.

அவனை பீடித்திருக்கும் அத்தனை பழமைவாத தத்துவ, பித்துவ பண்பாட்டு மாயைகளையும் அதன் மூல வேர்களையும் அடித்து நொறுக்க வேண்டும்.

அதுதான் அவனை, எமது மக்களை, இந்த நாட்டின் முதுகெலும்பாய் கூனிக் குறுகி வாழ்க்கை நடத்தும் பெரும்பான்மை உழைக்கும் மக்களை விழிப்புறச் செய்யத் தேவையான முதல் நடவடிக்கையாக உள்ளது.

இந்த விவசாயிக்கு சலுகைகளை அல்ல தனக்கான நியயமான கோரிக்கைகளைக்க்கூட எழுப்பத் தெரியவில்லை.

தொடர்ச்சியாக நிலத்தால் வஞ்சிக்கப்பட்ட அந்த விவசாயிடம் பின்வரும் கேள்வி கேட்கப்பட்டது:
"இந்த வருடமும் சரியாக விளையாது என்று தெரிந்த பின்னும் ஏன் பயிர் செய்கிறீர்கள்?"

அதற்க்கு அவர் சொன்ன பதில்:
"நாங்கள் கடவுள் குழந்தைகள் எங்களை அவர் கைவிட மாட்டார்".

இது மத வெறியர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் விசயம்தான்.

எமக்கும் கூட ஒருவகையில் இது மகிழ்ச்சியளிக்கிறது. ஏனெனில் இந்த நம்பிக்கை இல்லையெனில் அவர் தற்கொலை செய்திருப்பார்.

இதை அவரே சொல்கிறார்:
"வேறு யாராகவும் இருந்தால் இன்னேரம் தற்கொலை செய்திருப்பார்கள்".

இன்னொரு வகையில் மகிழ்ச்சி. அவரது தத்துவ மயக்கத்தை போக்கினால் அவரது எதிரிகளின் முதுகில் ஏர்கலப்பையை கட்டி உழுவ செய்வதற்க்கு ஒரு உயிர் அங்கே காத்திருக்கிறது என்பது.

இந்த செய்தி, நேபாளத்தில் எனது சகோதரன் இதே நடவடிக்கையை மேற்கொண்ட போழுது இங்கே குய்யோ முறையோ என்று கூவிய மதவெறியர்களுக்கு உறுதியாக மகிழ்ச்சியளிக்கும் விசயமல்ல.

பிறப்பால் வர்ணாசிரம பிரிவை/ஏற்றத்தாழ்வை மறைமுகமாக/நேரடியாக அறியாமலேயே வரவேற்பவர்கள் அந்த பெரியவரின் - தனது தொழிலின் மீதான காதலை பாருங்கள். நிலத்தை விற்று பான்மசால கடை வைப்பதற்க்கு தனது மகனை அனுமதிக்கவில்லை அவர். மாறாக இப்பொழுது நிலத்தை தனது முதுகில் பிணைத்துள்ளார். சுயமரியாதையுள்ள மனிதர்.

நகரங்களுக்கு சென்று வேலை செய்யவும் அவர் தாயாராயில்லை.

வெறும் பழைமைவாத கருத்துக்களால் கட்டுண்ட சுயமரியாதையின் அவலம் இது. புரட்சிகர சுயமரியாதைதான் இன்றைய தேவை. விடுதலையின் திறவுகோல் அதுதான்.

இதை ஐந்திலக்க எச்சில் சோற்றுப் பருக்கையுண்ணும் சுய நல, தனிமனித சிந்தனை வெறிபிடித்த, நுகர்வுகலாச்சார ரோகம் பாதித்த யுப்பி வர்க்கம் ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.

அமெரிக்க ஊழியனின் வேலையிழப்பில் தனது சந்தோசத்தை உத்திரவாத படுத்திக் கொண்டு. சொந்த சகோதரர்களுக்கிடையிலேயே (அமேரிக்க, இந்திய தொழிலாளர்கள்) போட்டியை உருவாக்கி தனது லாபத்தை மட்டும் உத்திரவாதப்படுத்தியுள்ள பன்னாட்டு பன்றிகளையே-அஸீம், நாரயணமூர்த்தி- கடவுளாக கருதும் யுப்பி வர்க்கம் சிந்திக்க வேண்டும்.

தனது பொருள் உற்பத்தி திறமை அல்ல மாறாக தனது மூலதன(லாபம்) உற்பத்தி திறன்தான் முதன்மையாக தனது சந்தை மதிப்பை உழைப்பு சந்தையில் நிர்ணயிக்கிறது என்பதையும் இந்த வர்க்கம்(யுப்பி) உணர வேண்டும்(குறைந்த கூலியில் உழைப்பை விற்கும் இடத்திற்க்கு MNCக்கள் செல்லும்). அதாவது எச்சில் சோறின் உத்திரவாதமின்மை.

இது யுப்பி வர்க்க நலன் சாராத பொது நலமல்ல...

சமூக அக்கறையற்ற அவனது(யுப்பியின்) நலனும் மேலதிகமாக பின்னிப் பிணைந்துள்ள ஒரு விசயம் இது.

கிராமப் புறத்தில் வேலையிழந்து நகரங்களை நோக்கிப் படையெடுக்கும் எதிர்கால உதிரிப் பாட்டாளியும், நகர சேரிகளிலேயே வளர்ந்த இன்றைய உதிரிப் பாட்டாளியும் தான் இந்த சமூகம் மிக மிக அதிகமாக உற்பத்தி செய்யும் சந்தைப் பொருள்.

கேட்க நாதியற்ற அடிப்படை வசதிகள் மறுக்கப்பட்ட இந்த வர்க்கம் சமூகம் தன்மேல் திணித்த வன்முறையை திருப்பி செலுத்துவான். அதுவும், தன்னை பண்படுத்திக் கொள்ளும் வாய்ப்புகள் மறுக்கப்பட்டவனுடைய வன்முறையைப் பற்றி நான் விவரிக்க விரும்பவில்லை.

இவனது இலகுவான இலக்கு யார்? அவனது அருகிலேயே அவனைவிட சிறிது அதிகமான சுகவாழ்வு வாழும் நடுத்தர வர்க்கம்தான்.

வருத்தப்படா வாலிபர் சங்கங்களா? அல்லது வர்க்க ஸ்தாபனங்களா? என்பதை முடிவு செய்ய நிர்பந்திக்கும் தருணங்களாய் அவை இருக்கும்

ஒவ்வொரு வினையும் அதற்க்கு சம்மான எதிர்வினைகளை கொண்டது.
கேடு கெட்ட இந்தியா - யானை கட்டியா போரடித்தோம்?

****************

தொடர்புடைய பதிவு:

இழிச்சவாயர்களும், இந்திய விவசாயமும்
http://poar-parai.blogspot.com/2006/07/blog-post_14.php

Are We living at the mercy of their Profit? -
http://kaipulla.blogspot.com/2006/07/are-we-living-at-mercy-of-their-profit.php

- அசுரன்

Pin It