(இதை நோக்கிய செயல்திட்டங்கள்தான் நாட்டின் வெகுமக்களின் உண்மையான வளர்ச்சியையும் மேம்பாட்டையும் ஓரளவுக்காவது உயர்த்த உறுதி செய்யும்)

ஒரு நாட்டின் சிறப்புக்கு அளவு அந்த நாட்டின் வெகுமக்களின் மனித மேம்பாடுதான் அடிப்படையாக அமைய வேண்டும். அந்த அளவுகோலின்படி இந்திய ஒன்றியத்தின் நிலை மிகவும் அவலமானது. ஆனால் இந்தியப் பொருளாதார வளர்ச்சி பற்றி ஆட்சியாளர்கள், பொதுப் பொருளாதார வல்லுநர்கள், ஏன் வேளாண் அறிஞர்கள் கூட விதந்து பாராட்டிக் கொள்வது நகை முரணாகும். எனவே நாட்டின் வளர்ச்சி வளம் பெற்றோராக உள்ள ஒரு சிறுபான்மையருக்கே என்ற நிலை மாறிட வேண்டும். வளர்ச்சி பரந்துபட்ட வெகுமக்க ளைச் சென்றடைய வேண்டும். அதுமட்டுமன்றி அவர்களின் வளர்ச்சியின் அளவு பெருக வேண்டும். அந்த வகையில் பெருந்திரளான 65 விழுக்காடு மக்கள் உழைப்பையும், உடல் உழைப்பையும் ஈந்து புரக்கும் வேளாண் தொழிலில்தான் உள்ளனர்.

எனவே வேளாண் துறையின் விரிந்த, பரந்த வளர்ச்சி தான் வெகுமக்களுக்கு மேம்பட்ட வாழ்க்கையை உறுதி செய்யும் என்பது திண்ணம். ஒன்றியப் பொருளாதாரத்தில் வேளாண் தொழிலின் பங்கு என்ன என்பதைப் பற்றியும் வளர்ச் சிக்கு இடையூறாக உள்ள தடைகளை உடைத்தெறிந்து எந்த அளவுக்கு வளர்த்தெடுக்கப்பட வேண்டும், ஒப்பீட்ட ளவில் நம் நாட்டை ஒத்த வேறு நாடுகளின் வேளாண் தொழில் வளர்ச்சி எத்தன்மையது, பெருவளர்ச்சி பெற்ற நாடுகள் போன்று வளர வகுத்தெடுக்கப்பட வேண்டிய வழிமுறைகள் பற்றியும் விரிவாக, தொடர்ச்சி யாக ஆய்வு மேற்கொள்வோம்.

இங்கு பொருளாதார ஆய்வுக்குப் பயன்படுத்தப் படும் புள்ளி விவரங்கள் (பெரும்பாலானவை) ஒன்றிய அரசால் நாடாளுமன்றத்தில் ஒவ்வொரு ஆண்டு நிதி - வரவு செலவுக் கூட்டத் தொடருக்குமுன் வைக்கப்படும் “பொருளாதார (Economic Survey) பொருளாதார ஆய்வறிக்கைகளிலிருந்துதான்” கையாளப்பட்டுள்ளன. பிற நாடுகளின் பொருளாதாரம் பற்றிய விவரங்கள்யாவும் அ.நா., ப.நி.நி., உலக வங்கி ஆகியவைகளின் அறிக்கைகளிலிருந்து எடுக்கப்பட்டவை.

பொதுவாகப் பொருளாதார வளர்ச்சிக்கு நாட்டிலுள்ள உழைக்கும் ஆற்றல் பெற்றோர் அனைவருக்கும் வேலை வாய்ப்பு அளித்து பொருளுற்பத்தியில் ஈடுபடுத்த வேண்டும். குறிப்பாக மதிப்புடன் கூடிய வேலை வாய்ப்புகளாகவும், மதிப்புடை ஊதியம் பெறும் தொழி லாளர்களாகவும் இருக்க வேண்டும். இவ்விரண்டையும் உடைய வேலை வாய்ப்பு அமைப்புசார் வேலைகளில் மட்டும்தான் உள்ளது. ஏனைய வேலை வாய்ப்பெல் லாம் அமைப்புசாரா வேலைகளாகத்தான் உள்ளன. அமைப்புசார் வேலை வாய்ப்புப் பணிகளில் வரையறுக்கப்பட்ட விதிகள் கடைப்பிடிக்கப்படும். அதாவது பாதுகாக்கப்பட்ட பணி, முறைப்படுத்தப்பட்ட வேலை நேர அளவு, அதற்கேற்ற சம்பள விகிதம். விடுப்பு வாய்ப்புகள், ஓய்வூதியப் பலன்கள், பணியாளர்கள் சங்கம் அமைத்து அவர்கள் குறைகளை முறையிட்டு தீர்வுக்குள்ளாக்கும் வாய்ப்புகள் போன்றவை அடிப் படை உரிமைகளாக அமைப்புசார் பணிகளில் உள்ளன. ஆனால் இவ்வாறு எந்தவிதமான வரையறையுமற்ற உறுதிசெய்யப்பட்ட பணியிடங்கள், முறைபடுத்தப்பட்ட சம்பளம் இல்லாமை, அன்றாடக் கூலி ஊதியம், பணி நலன் சார்ந்த வேலை நேரம், கால அளவு இன்மை, விடுப்பு வசதி அற்ற தன்மையிலானதாக அமைப்பு சாராப் பணி வாய்ப்பு வேலைகள் உள்ளன.

இந்திய ஒன்றியத்தில் வேலை வாய்ப்புப் பெற் றோருள் ஏழு விழுக்காட்டினர் அளவுக்குத்தான் அமைப்பு சார் பணிகளில் உள்ளனர். எஞ்சிய 93 விழுக்காட்டினர் அமைப்புசாரா  வேலைகளில் உள்ளோர். பின்னை யரின் பிழைப்பு நிலை மிகவும் இரங்கத்தக்கதாக உள்ளது என்பதில் இருவேறு கருத்திற்கிடமில்லை. அமைப்புசார் பணியிலுள்ளோரில் 80 விழுக்காட்டிற்கும் மேலானோர் வரையறுக்கப்பட்ட சம்பள விகிதம் பெறு வோராக இருப்பினும் அவை மிகவும் குறைவான அளவிலேதான் வைக்கப்பட்டு கிட்டத்தட்ட அமைப்பு சாரா பணியிலுள்ளோர் நிலையில்தான் வைக்கப்பட் டுள்ளனர். ஆனால் அமைப்புசார் பணியாளர்களுள் வெறும் 10 விழுக்காட்டு அளவினர்தான் உயர் ஊதியம் பெறுவோராக உள்ளனர். இவ்விரு ஊதிய விகிதங் களுக்கிடையே உள்ள வேறுபாடு மலைக்கும் மடுவுக்கு முள்ள அளவில் உள்ளது.

பொதுவாக அமைப்புசாரா வேலைகளில் உள்ளோ ருள் பெரும் பகுதியினர் வேளாண் துறை சார்ந்த வேலைகளில்தான் உள்ளனர். இன்னும் குறிப்பாக வேளாண் துறைப் பணிகளில் உள்ளோருள் 97 விழுக் காட்டிற்கும் மேலானோர் அமைப்புசாரா வேலைகளில் தான் உள்ளனர். அதாவது வரையறுக்கப்படாத தினக் கூலிகளாகவும் ஈனக் கூலி பெறுவோராகவும் வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வேலையும் உறுதி செய்யப் படாத நிலையில், வாய்ப்புக் கிட்டினால்தான் வேலை என ஆண்டில் வெறும் 100 நாள்கள்தான் வேலை வாய்ப்புப் பெறுபவர்களாக உள்ளனர். ஊதியமோ குறைந்த அளவிலான தினக்கூலி, மிகக் குறைந்த நாள்களே வேலை கிடைக்கும் என்ற நிலையில் இவர் களின் உழைப்புத் திறன் பயன்பாடு, வாய்ப்பு, பெரிதும் மறுக்கப்பட்டு அவர்களின் திறனுக்கு ஏற்ற பொருள் உற்பத்தி செய்ய இயலாதவர்களாக ஆக்கப்பட்டுவிட்டனர். அதன் விளைவாகப் பொருளாதாரத்தில் வேளாண்மை வாயிலாக உற்பத்தியாகக் கிடைக்கும் விளைபொருள்களின் களமதிப்பு (Cost Price) வெறும் 8 விழுக்காடு அளவிலேயே உள்ளது.

ஆனால் வேளாண்சார் முதன்மைத் துறைகளின் கீழ்வரும் மீன்வலம், காடுகள், நிலக்கரி, வாயு போன்றவைகளின் பங்கு மொத்தப் பொருளாதாரத்தில் ஏறத்தாழ 9 விழுக்காடு அளவுக்கு உள்ளது. இந்த வேலையில் இரண்டாம் நிலை தொழில் துறை, மூன்றாம் நிலை சேவைத் துறை ஆகியவற்றின் பொருளாதாரத்தில் பங்கு ஒப்பீட்டளவில் முறையே 29 விழுக்காடு, 54 விழுக்காடு என்ற அளவில் உள்ளது. அதாவது இவற்றின் பங்கு வேளாண்துறை சார்ந்த துறைகளின் பங்கைக் காட்டிலும் முறையே கிட்டத்தட்ட 1ஙூ மடங்குக்கு மேலும், மூன்று மடங்குக்கு மேலுமாக உள்ளன. இவற்றின் உற்பத்தியில் மிகக் குறைந்த அளவிலேயான தொழிலாளிகள், பணியாளர்கள், வேலையாள்கள் மட்டுமே ஈடுபடுத்தப்படுகின்றனர் என்பதை விரிவாகக் கீழே பார்க்கலாம். கீழேயுள்ள அட்டவணை 2016-17 ஆண்டின் பொருளாதார வளர்ச்சி விவரங்களைத் தருகின்றது.

2016-2017-இல் பெரும் தொகுப்பு அலகுகள் வாரியாக

ஜி.வி.பி.இல் பங்கு (ஜி.வி.பி. Grass Value Added - மொத்த உற்பத்திப் பொருள்களின் மதிப்பு)

Grass Value Added census 600இங்கு துறைவாரியான ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பு (ஜி.வி.பி.) கணக்கில் கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் ஜி.டி.பி. (G.D.P. - Gross Domestic Product) உற்பத்தியின் சந்தை மதிப்பு ஆகும். பொதுவாகச் சந்தை மதிப்பு ஜி.வி.பி.யைக் காட்டிலும் அதிகமாகவே இருக்கும். ஏனெனில் உற்பத்திப் பொருள்களைக் கொள் முதல் செய்து, பொது விற்பனைக்கு வரும் வரையில் வணிக, தரகு, சரக்குப் போக்கு வழிச் செலவு எனப் பொருள்களின் விற்பனை விலையை அதிகரிப்பதாக அமையும். எனினும் உண்மையான வேளாண் ஜி.வி.பி. குறைவாக 17.32 விழுக்காடு என உள்ளது.

2016-2017-ஆம் ஆண்டின் வேளாண் விளை பொருள் உற்பத்தி மதிப்பு சென்ற நான்காண்டுகளில் சரிவைக் கண்டுள்ளது. (கீழே அட்டவணை).

அட்டவணை 2

agri census 600முன்பக்கம் உள்ள அட்டவணையிலிருந்து 65 விழுக்காடாகவுள்ள வெகுமக்களான உழைக்கும் மக்கள் வேளாண் துறை சார்ந்துள்ள நிலையில் அவர்கள் உழைப்பின் பயனால் பெறும் விளைவால் பொருள் களின் மதிப்பு நாட்டில் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் வெறும் 8 விழுக்காடு அளவிற்கே உள்ளது. மேலும் அத்துறை தொடர்ந்து சரிவடைந்து வருவதை அத் துறை ஆண்டு வளர்ச்சி விகிதம் 2015-16-இல் 0.7 விழுக்காடு அளவுக்கு வந்துள்ளதிலிருந்து காண முடி கின்றது. மேலும் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் வேளாண் அது சார்ந்த துறைகளின் உற்பத்தி மதிப்புப் பங்கும் மிகப்பெரும் சரிவையும் கண்டு 17.5 விழுக் காடு அளவில் இதில் வேளாண் துறை மட்டும் வெறும் 8 விழுக்காடு அளவுக்குத்தான் பங்களிக்கிறது எனவும் அறிய முடிகின்றது.

நம்மை ஒத்த நாடான சீனாவுடன் ஒப்பிட்டால், அதன் மொத்த உற்பத்தி மதிப்பான 12.75 கோடி டாலர் அளவில் வேளாண் துறை உற்பத்தி மதிப்பு ஒரு இலக்கம் கோடி டாலர் என 8 விழுக்காடு பங்களிக்கிறது. அதாவது 70 இலக்கம் கோடி ரூபாய் அளவுக்கு. ஆனால் இந்திய ஒன்றிய வேளாண் துறை வெறும் ரூ.11.0 இலக்கம் கோடி அளவுக்குத்தான் என ஒன்றிய ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் 8 விழுக்காடு தான் பங்களிக்கிறது. அமெரிக்காவின் 2 விழுக்காடு மக்கள்தான் வேளாண் துறையில் உள்ளனர். ஆனால் நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பான 20 இலக்கம் கோடி டாலரில் வேளாண் பங்கு 5 விழுக்காடாக 1 இலக்கம் கோடி டாலராக (ரூ.70,00,000 கோடி) உள்ளது.

இவ்வளவு பெரிய வேறுபாட்டிற்கு உண்மையான காரணங்கள் வேளாண் விளைபொருள்களுக்கு மதிப் புடன் கூடிய விலையும், வேளாண் தொழிலாளர்களுக்கு மதிப்புடை ஊதியம் வழங்கப்பட்டு சீனாவின் அரிசி உற்பத்தித் திறன் எக்டேருக்கு 3 டன் ஆக உள்ளது. அரிசி, கோதுமை-ஒரு எக்டேருக்கு உலகின் நிகரளவு உற்பத்தித் திறன், இந்தியாவைவிட அதிகமாக உள்ளது.

எக்டேருக்கு நிகர அளவு உற்பத்தி அரிசி : இந்தியா 2191 கிலோ. உலகம் 3026; கோதுமை : இந்தியா 2750 கிலோ. உலகம் 3281 கி. இதுகுறித்து மேலும் விரிவாக அடுத்தடுத்த கட்டுரைகளில் ஆய்வு செய்யலாம்.

வேளாண் துறை மேம்பாடடைய சில தீர்வுகளைக் காணலாம். கருத்தியல் நிலையிலாவது இதனை விவாதிக்கலாம். விவசாயிகள் ஒவ்வொருவரும் தனித் தனி அலகுக்காக பற்பல இன்னல்களுக்குட்பட்டு விளை விக்கும் உழவுத் தொழிலில் ஈடுபட்டுச் சாகுபடி செய்து விளைச்சல் பொருள்களை விற்பதில் தனித்தனியே தாமாகவோ, தரகர்கள் வழியாகவோ நல்ல நியாய மான விலைகள் பெறுவதில் இன்னல்கள் எழுகின்றன. அதன் விளைவால் அவர்கள் ஏமாற்றப்படுகிறார்கள்; சுரண்டப்படுகிறார்கள். நடுவில் வந்தவர்கள்தான் தரகர் களாகப் பெரும் பயன் அடைகின்றனர். குறு, சிறு விவசாயிகள் விளைவிக்கும் விளைச்சல் அளவு ஒரு டன், இரு டன் தானியமாக மிகவும் சிறிய அளவிலே தான் இருக்கக் கூடும். அந்த நிலையில் நல்ல விலை கிடைக்காத அளவுக்கு நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டு அரசுகள் அறிவித்த விலை மிகவும் குறைந்த அளவு விலையிலும் குறைந்த விலைக்கு விற்கக் கூடிய நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். இந்த வகையில் அவர்கள் ஒவ்வொரு வரின் கேட்கும் திறன் இயல்பாக முடக்கப்பட்டுவிடுகின்றது.

ஆனால், பலரின் மூல முதலுடன் திரண்ட முதலீடு செய்து வணிக நிறுவனங்கள் (Firms) அமைத்து பொருள் கள் உற்பத்தி செய்து அதற்கான விலையை அவர் களுக்கு பெருமளவுக்கு இலாபம் கிட்டும் வகையில் நிர்ணயித்து பெரும் வருவாய் ஈட்டி அவரவர்களின் பங்கீடுகளின் அடிப்படையில் பகிர்ந்து கொண்டு பலன் அடைகின்றார்கள். அந்த அமைப்பை நடத்துவதற்கு அவர்களுள் ஓரிருவர் நிருவாகிகள் என்ற நிலையில் அவர்கள் ஊதியமாகவும் பெற்றுக் கொள்கின்றனர்.

மேற்சொன்ன தன்மையில் பல 10, 20, 30, 40 விவசாயிகள் ஒருங்கிணைந்து அவர்கள் ஒட்டுமொத்த விவசாய நிலங்களை 50, 75, 100 ஏக்கர் என்ற அளவில் ஒரே நிலப்பரப்பாக அமைத்து, வளர்ந்து வரும் வேளாண் தொழில்நுட்பக் கருவிகளைக் கொண்டு நாற்று நடல், களையெடுத்தல், உரமிடல், பூச்சிக்கொல்லி மருந்தடித்தல், அறுவடை என அனைத்துப் பணிகளையும் மேற்கொண்டு விளைச்சலை ஈட்டிக் கொள்ளலாம். அவ்வகையில் 200, 300, 500 டன் என மொத்த விளைச்சல் பெற்றிட முடியும். இதேபோன்று திரளான விவசாயிகள் பல கூட்டுக் குழுக்களாக இணைத்து, அவர்களின் விளைபொருள்களுக்கு நல்லவிலை நிர்ண யிக்கும் திறன் பெறுவது அதாவது அவர்கள் ஈந்த உழைப்பு, செய்திட்ட திரண்ட மூல முதல், இயற்கை இடர்களினால் இழப்பேற்பட்டிருப்பின் அதற்கீடான மதிப்பு, இந்த ஒவ்வொரு குழுவையும் நிர்வகித்தவர் களுக்கான நியாயமான ஊதியம், மேலும் இவ்வாறான உழைப்புகள், இடுபொருள்களுக்கான முதலீடுகளுக் கெல்லாவற்றிற்கான ஈட்டுத் தொகைகளையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டு விளைபொருள்களுக்கு நல்ல விலையை நிர்ணயிக்கும் கேட்புத்திறன் பெறக் கூடிய வாய்ப்பைப் பெற்றவர்களாவர்.

மேலும் இந்த விவசாயக் குழுக்கள் ஒருங்கிணைந்து அரசிடம் தம் விளைபொருள்களுக்கு நல்ல விலை தரும்படி கெஞ்சிக் கேட்க வேண்டிய நிலை மாறும். மாறாக, தங்களுக்குக் கட்டுப்படியாகும் நல்ல விலையைக் கொடுக்கும்படியும் அரசுக்கு நெருக்கடி தந்திட முடியும். இவர்கள் கேட்பதை அடிப்படையாகக் கொண்டுதான் விளைபொருள்களின் விலைகளை அரசு நிர்ணயிக்கும் என்ற கட்டாய நிலைக்குத் தள்ளப்படும்.

இப்படி, கட்டுப்படியான சற்று உயர்வான விலைகள் கிடைக்கின்ற நிலை ஏற்படும் போதும் வேளாண் விளை பொருள்கள் மொத்தத்தையும் அதிக விலைக்கே நாடு முழுவதும் கொள்முதல் செய்யப்படுவதற்கு ஒன்றிய அரசும், மாநில அரசுகளும் உரிய வழிவகைகளை வகுத் தெடுத்துச் செயல்படுத்திட வேண்டுமென வேளாண்குடி மக்கள் ஓரணியாகத் திரண்டு அரசுக்கு நெருக்குதல் கொடுத்துப் பணிய வைத்திட வேண்டும். இந்த ஒற்றைக் கோரிக்கைக்கு நாட்டிலுள்ள முதலாளியக் கட்சிகள் செவி மடுக்கிறதோ இல்லையோ பொதுவுடைமை அமைப்புகள், கட்சிகள் என அனைத்து இடதுசாரிச் சிந்தனையாளர் களும் விவசாயிகளை ஒருங்கே திரட்டி நெடிய கடும், தொடர் போராட்டம் நிகழ்த்தி வென்றெடுக்க வேண்டும். இது வேளாண் மக்களின் தன்மான விடுதலைக்கு வித்தாக அமைவது உறுதி.

வேளாண் தொழிலின் பெரும் தொகுப்பான இடு பொருளே உழைப்புத்தான்; உடல் உழைப்புத்தான். எனவே வேளாண் தொழில் இழிதொழில் எனப் பார்ப் பான் முத்திரையிட்டான். அதை வழிமொழிந்தவனே படிப்பைப் பெற்ற பிற உழைப்புச் சமூகத்தினரும். எனவே பார்ப்பனியம் வேளாண் தொழிலில் ஈடுபடும் இந்திய உழவனுக்குப் படிப்புத் தேவையற்றது என்று சொல்லுமளவுக்குத் திமிர் கொண்டவர்களாகிவிட்டனர். குறிப்பாகச் சங்கப் பரிவார் கூட்ட பாரதிய சனதாக் கட்சியின் தலைவர்கள் அமெரிக்காவில் ஊடகவியலாளர்கள் இந்த 21ஆம் நூற்றாண்டில் 30 கோடி மக்கள் பட்டறிவு அற்றவர்களாக வைக்கப்பட்டுள்ளது நாட்டிற்குத் தலை குனிவல்லவா? இழிவல்லவா! அவலத்தின் வெளிப்பாடல் லவா, என மனம் நொந்து வினவிய போது பார்ப்பனிய அரசியல்வாதிகள் உழைப்புச் சமூகத்திற்குக் குறிப்பாக உழவர்களுக்கு படிப்பறிவு தேவையில்லை என்று சொல்லுமளவுக்கு அகந்தையுடன் பதிலிறுத்துள்ளனர்.

இந்நாட்டின் இந்த இழி மனநிலை பார்ப்பனியச் சமயத்திற்கு காலமும் ஆட்பட்டுள்ள சட்டமன்ற, நிருவாக, அறமன்றத் துறைகளில் உயர்நிலையில் உள்ளோரின் உண்மையாகவே இயல்பாகவே அமைத்துவிட்ட உள நிலை. இக்கூற்றின் நோக்கம் யாரையும் தூற்றுவதற் கன்று. மாறாகத் தீர்வை நோக்கிப் பயணிக்க உண்மை நிலையை உணர்த்தவே. எனவே உழைப்பின் மேன்மை சொல்லில் மட்டுமல்ல; மதிப்பாலும், உயர்நிலை எய்துவது முறையான கல்வி முறையால்தான். படிப்பால் அல்ல என்பதை உணர வேண்டும்.

சமூக மேம்பாட்டுக்கான அடிப்படையான இடுபொரு ளான கல்வியைச் சமயத்தின் பேரால் பார்ப்பனியச் சமூகம் அச்சமயம் சார்ந்த அனைத்துப் படிநிலையிலு மிருந்த சமூகங்களுக்கும் முற்றிலுமாக மறுத்து, அவர் களை இழிமக்களாக நடத்தி வந்ததோடு, தாம் இழி மக்களாக நடத்தப்படுகிறோம் என்ற உணர்வு அற்ற வர்களாக வைத்துக் கொண்டது மட்டுமின்றி, அவ்வாறு இழிநிலையில் பிழைப்புக்கு வழி அற்றவர்களாகவும், வயிறுக்குச் சோறு அற்று வறுமையில் வாடுவதும் இழி சமூகங்களுக்காக விதிக்கப்பட்ட நியதி என்றெண்ண வைத்து விலங்கினும் கீழான நிலையில் இருப்பது நிறைவானதே என்றெண்ணத்துடனும் வைக்கப்பட்டி ருக்கின்றனர். அந்நிலையில், “உழைப்பின் விளைவு தான் எல்லாம் என்ற எண்ணம்” துளிர்விடாத வகையில் சனாதனத் தர்மப்படி உடல் உழைப்பு இழிவானது என்றெண்ணத்திலும் வைக்கப்பட்டனர். இதில் பார்ப்ப னர்கள் படிப்புப் பெற முற்றுரிமை பெற்றவர் என்ற நிலை மாறி வந்த உழைக்கும் சமூகத்திலிருந்து படிப்புப் பெற்றவர்களும் உடல் உழைப்பு இழிவானதே என்ற பார்ப்பன சனாதன தர்மத்திற்கு ஆட்பட்டவர்களாகி விட்டனர்.

முதலில் இந்த நிலை வேளாண்மை தொழில் வளர்த்தெடுக்கப்படுவதுடன் மாறிடும் வகையில் அடிப் படைப் பள்ளிக் கல்வியையாவது எல்லோருக்கும் கிடைக் கும் வகையில் பள்ளிக் கல்வி எனக் கல்விக்கான ஒதுக் கீட்டில் பெரும் பகுதியை ஒதுக்கீடு செய்திட வேண்டும். தற்போது கல்விக்கு நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் 2-3 விழுக்காடு அளவே ஒதுக்கப்படுவது ஆறு விழுக்காட்டு அளவுக்கு உயர்த்தப்பட வேண்டும். அதில் உயர் கல்வி பெருமளவு நிதி தற்போது ஒதுக்கீடு செய் வதை மாற்றி கல்விக்கு மேலே சொன்னவாறு பள்ளிக் கல்விக்கு பெருமளவு, நிதி ஒதுக்கீடு செய்திடல் வேண்டும்.

இதில் முதன்மையாகக் கருத்தில் கொள்ளப்பட வேண்டியது, பார்ப்பனியம் காலமும் படிப்பு வழிதான் ஊதியம் அளிக்கப்பட வேண்டுமென உளவியலை மொத்த சமூகத்தில் ஊடுருவ வைத்து உழைப்பு மதிப் பளிக்கத்தக்கதல்ல என்ற உளவியலை நிலைநிறுத்தச் செய்துவிட்டது. அதை நொறுக்கித் தவிடுபொடியாக்கு வதற்கு அனைவருக்கும், இலவச உயர் பள்ளிக் கல்வி அளித்து அனைவரும் ஓர் நிறை என்ற நிலையை உரு வாக்கிட வேண்டும். அதன் விளைவாகப் படிப்புப் பெற்ற வர்கள் வேளாண் தொழில் முதல் எல்லாத் துறைகளிலும் நிரவி சமநிலை பெற்றவராவர். அப்போது உழைப்பு, உடல் உழைப்புக்கு உரிய மதிப்புக்குரியதாகும் என்ற உணர்வு மேலெழும்.

மேலே சொல்லப்பட்டுள்ள தீர்வுக்கான கருத்துக்கள் சிலவற்றைக் குறிப்பிட்டுள்ளோம். இன்னும் பல தீர்வுக்கான கருத்துக்களை நம் போன்ற தன்மையுடைய நாடுகளின்றி, மேலும் பல நாடுகளைப் பற்றி வேளாண் துறை அலகின் செயல்பாடுகளை ஒப்பீட்டளவில் கணக் கிற் கொண்டு தொடராக விரிவாக விவாதிக்க வேண்டியுள்ளது. அதாவது பல்துறை வேலை வாய்ப்புத் தளங்களில் வேலை செய்வோர் அமைப்புசார், அமைப்பு சாரா பிரிவுகளில் எந்தெந்த விகிதத்தில் உள்ளனர், குறிப்பாக வேளாண் துறையில் உள்ள இருப்பு நிலை அவர்களின் பல்வகைப்பட்ட பணிகளுக்கான வருமான அளவுகள், அவர்களின் பணி வகைகள், வேளாண் உற்பத்தித் திறன், ஆண்டுக்கு நிகரளவு உற்பத்தி, வேளாண் சாகுபடி நிலங்களின் மொத்தப் பரப்பளவு அவற்றில் எந்தளவு சாகுபடிக்கு வேறு துறைகளில் வேளாண் வேலைக்காரர்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. சாகுபடிக்கான முன் நடவடிக்கைகள் (Backward Linkages) விளைபொருள்களை மதிப்புடை பொருளாக்க தொடர் நடவடிக்கைகள் (Forward Linkages) எடுப்பது பற்றியும் எந்தளவு ஈடுபட வாய்ப்புப் பெற்றுள்ளனர், சாகுபடி முறைகள், தொழில்நுட்பப் பயன்பாடுகள், இன்றும் குறிப்பாக உரமிடல், பூச்சிக்கொல்லிகள் பயன்பாடுகள் என்பனவற்றையும் ஒப்பீடு செய்திட வேண்டும்.

வேளாண் துறையில் இன்றி அதில் ஈடுபடும் மக்களின் சமூக, கல்வி, மருத்துவ நலன் சார்ந்த நிலைகளை யும் ஒப்பீட்டளவில் கொள்ளவும் வேண்டும். அதன் அடிப்படையில் கருத்துக்களையும் தொகுத்து இந்திய ஒன்றியத்தின் வேளாண் மக்களின் விடுதலையை மய்யமாகக் கொண்டு ஒவ்வொரு தளத்திலும் செயல் திட்டங்கள் சார்ந்தும் கருத்துரைக்க வேண்டியுள்ளது. தொடரும் கட்டுரைகளில் அவற்றை விரிவாகப் பார்ப்போம்.

இங்கு வேளாண் துறையில் வேளாண்துறை சார்ந்த மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் அன்றி கல்வி, மருத்துவம், சமூக விடுதலை நிலை களில் பார்ப்பனியம் ஊடுருவி இவற்றையெல்லாம் திட்டமிட்டு இவர்களுக்கு மறுத்து வருவதை எதிர் கொள்வது, முறியடிப்பது என்பன பற்றி கருத்துக்களையும் நிரல்படுத்தி, மேற்கொள்ள வேண்டிய செயல் திட்டங்களும் வகுக்கப்பட வேண்டும். ஆனால் அரசு ஊடகங்கள், தொழில்நுட்ப ஊடகங்கள், தொழிலகங்கள், அரசுப் பணிகள், தனியார் பணிகள், இன்ன பிற தளங்களிலெல்லாம் 80-90 விழுக்காடு என நீக்கமற நிறைந்து பார்ப்பனிய சங் பரிவார் கூட்டங்களும், பிற தொங்கு சதைகளும் எந்த மாற்றத்தை செயல்படுத்த விடுமா என்ற பெரும் வினா நம்முள் உள்ளது.

ஆனால் வேளாண்சார் தொழில்களில் ஈடுபடும் உடல் உழைப்பாளிகளை ஒன்றிணைத்து, சரியான புரிதலை வகுத்தெடுத்து மக்கள் பற்றாளர்களாக உள்ள அமைப்பு, கட்சி சார்ந்த பலரும் ஒருங்கிணைந்து செயல் திட்டங்களை உடனடியானவை, நெடுங்காலத் திற்கானவை என வகைப்படுத்தி மேற்கொண்டால் தான் வேளாண்மைத் தொழிலும் மேம்படும்; வேளாண் மக்களும் மேம்படுவர். நாட்டின் மனிதவள மேம்பாடு உயரும்.

Pin It