24.12.2024 அன்று கோவையில் நடைபெற்ற புரட்சியாளர்கள் அம்பேத்கர் - பெரியார் நினைவுநாள் பொதுக்கூட்டத்தில் தோழர் இனியவன் ஆற்றிய உரை. கடந்த இதழின் தொடர்ச்சி..

இதனைக் கண்டித்து மகத் நகரில் மீண்டும் அமைதியான வழியில் போராட்டம் நடத்துவது என பம்பாய் தாமோதர் கூட்ட அரங்கில் பேசிய அம்பேத்கர் “சட்டம் சாத்தியமான இடங்களில் வன்முறையற்றதாகவும், தேவையான இடங்களில் வன்முறையாகவும் இருக்க வேண்டும்” என அரசின் பாராமுகத்தைக் கடுமையாக சாடினார் (11 செப்டம்பர் 1927). 1919இல் புதிய சட்டங்களை வடிவமைக்க பிரிட்டிஷ் இந்திய அரசால் அமைக்கப்பட்ட சவுத்பரோ குழுவில் அம்பேத்கர் ஓர் தரப்பின் சாட்சியமாக அழைக்கப்பட்டார் (தலித்துகளுக்கு தனித் தொகுதி, இரட்டை வாக்குரிமை ஆகியவை இந்த குழுவில் தான் அம்பேத்கரால் முதன் முதலில் முன் வைக்கப்பட்டது), 1925இல் சைமன் குழுவில் பம்பாய் மாகாண உறுப்பினராக பணியாற்றிய நிலையில் கூட அவர் தீண்டத்தகாதோர் நலனில் அக்கறை அற்ற பிரிட்டிஷ் இந்திய அரசின் போக்கை விமர்சனம் செய்யவும் தயங்கவில்லை என்பதுடன் சாத்தியமான இடங்களில் வன்முறையும் அவசியமாக இருக்கிறது என்பதையும் தமக்கே உரிய பாணியில் சுட்டிக் காட்டியுள்ளார். ஏற்கனவே முடிவு செய்தபடி 25, 26 டிசம்பர் 1927இல் மகத் நகரில் ஜாதி தீண்டாமைக்கு எதிராக தீண்டாத்தகாதோர் உரிமை மாநாடு நடைபெற்றது.

மாநாட்டின் முதல் நாளான 25 டிசம்பர் காலையில் மாநாட்டு பந்தலில் தீண்டாமை, பெண்ணடிமை ஆகியவற்றை வலிந்துத் திணிக்கும் வர்ணாசிரம சனாதன ஜாதி படிநிலையைக் கற்பிக்கும் “மனுஶ்ருமிதி” நூலை மக்கள் அனைவரும் புறக்கணிக்க வேண்டும் எனக் கூறி தீக்கிரையாக்கினார். அத்துடன் பிறப்பை அடிப்படையாகக் கொண்ட சதுர் வர்ணாவை நான் நம்பவில்லை, ஜாதி வேறுபாடுகளை நான் நம்பவில்லை என்ற உறுதிமொழியையும் அனைவரும் ஏற்றுக் கொள்ள செய்தார். இந்த மாநாட்டில் 15,000க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள், பல்வேறு தரப்பில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கூடிய இந்த மாநாட்டில் 3000 பெண்கள் தன்முனைப்பாகப் பங்கேற்றனர் என்பது வரலாற்றில் ஒரு மைல்கல். கம்யூனிஸ்ட் கட்சிகள் முன்வைக்கும் திட்டத்தில் பாலின பேதம் அழிப்பு, பெண் உரிமை ஆகியவை. முக்கிய அம்சங்களாக இருக்கும். பெண்ணுரிமை வெறும் பேசு பொருளாக மட்டும் இல்லாமல் செயல் தளத்திலும் அண்ணல் அம்பேத்கர் நிகழ்த்திக் காட்டியுள்ளார் என்பதற்கு மகத் அறவழி போராட்டம் ஓர் வரலாற்று சான்றாகும்.

 1921 - 24 வரை கம்யூனிஸ்ட் கட்சியினர் மீது பல்வேறு வழக்குகள் பதியப்பட்டன. பிரிட்டிஷ் இந்திய காலனிய அரசால் தொடுக்கப்பட்ட பெஷாவர் சதி வழக்கு, மீரட் சதி வழக்கு, கான்பூர் சதி வழக்கு ஆகியவற்றின் அடிப்படையில் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்கள் கைதானதுடன், பலர் தலைமறைவாகவும் நேர்ந்தது. இதனால் கம்யூனிஸ்ட் கட்சி என்கிற முழு நிலையை அடையாத காரணத்தால் தெளிவான அரசியல் முடிவுகள் எட்ட இயலாமல் போய்விட்டது. அரசின் அடக்கு முறையால் நாடு முழுவதற்குமான ஒன்றிணைந்த கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்க இயலவில்லை என்கிற சூழ்நிலையும் நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். 26 டிசம்பர் 1925 இல் தான் நாடு தழுவிய அளவில் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் மாநாடு கான்பூரில் நடைபெற்றது. அம்மாநாட்டில் வர்க்க விடுதலைப் போரில் ஜாதி ஒழிப்பும் அவசியமானது என்ற கருத்தாக்கம் வலுவாக பதிவாகியுள்ளது. என்கிற போதும் அதற்குப் பின்னரும் அரசின் நெருக்கடி 1931 வரை கம்யூனிஸ்ட் கட்சிகளின் வர்க்க ஸ்தாபனங்களான தொழிற்சங்கம், விவசாயிகள் சங்கம் ஆகியவைதான் போராட்டங்களை முன் நின்று நடத்தினர். மேற்கண்ட சூழலை புரிந்து கொண்டால் அண்ணல் அம்பேத்கர் ஜாதி ஒழிப்புப் போராட்டங்களை முன்னெடுத்த பொழுது கம்யூனிஸ்டுகள் என்ன செய்தார்கள் என்கிற கேள்வி எழுவதற்கு வாய்ப்பில்லை.

1927 கால கட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சி வெளிப்படையாக செயல்பட முடியாத நெருக்கடியில் சிக்கி இருந்த நிலையில் கூட அப்போது துளிர் விட துவங்கிய ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நோக்கம், அதன் போக்கு, மக்களிடையேப் பிரிவினையை உண்டாக்கி கலவரத்தைத் தூண்டும் அதன் வகுப்புவாதப் போக்கினை, செயல்பாடுகளைக் கவனத்தில் கொண்டு அதனை கடுமையாக விமர்சித்துள்ளது. இருந்த போதும் மதம் என்கின்ற கட்டுமானத்தை நேரடியாகத் தாக்குவது வரட்டு நாத்திகமாக ஆகிவிட சாத்தியம் அதிகம் எனக் கூறி மதத்தை நேரடியாக தாக்காமல் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒதுங்கிக் கொண்டது காலப் பிழையே! அப்போது இருந்த முரண்பாடான சமூக - பண்பாட்டு சூழல்களின் காரணமாக மேற்கண்ட முடிவினை கம்யூனிஸ்ட் கட்சிகள் எட்ட வேண்டிய இடர் ஏற்பட்டிருக்கலாம் என்கிறபோதும் இந்திய சமூகவியல் நோக்கில் மதத்தின் பங்கைக் கணக்கில் கொண்டு அண்ணல் அம்பேத்கர் மதம் என்கிற சுரண்டல்வாத நிறுவன அமைப்பை கருத்தியல் ரீதியாகவும், செயல் தளத்திலும். நேரடியாக தாக்கியுள்ளார் என்பது மிகவும் முற்போக்குத் தன்மை வாய்ந்தது.

நில உரிமையும் அம்பேத்கரும்

கம்யூனிஸ்டுகளின் முதன்மை முழக்கம் “உழுபவருக்கே நிலம் சொந்தம்” சோவியத் புரட்சிக்கு முந்தைய சூழலிலும், புரட்சி நடந்து முடிந்த சூழலிலும் மேற்கண்ட முழக்கமே உழைக்கும் வர்க்கத்தில் பெரும்பான்மையாக இருந்த விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களின் சோவியத் எழுச்சிக்கு வழி கோலியது.

நில உடமை என்பது தலித்துகளுக்கு மறுக்கப்பட்டது என்பதை இந்திய சமூகச்சூழல் தெளிவாக படமிட்டு காட்டுகிறது. அவ்வகையில் வரலாற்று நெடுகில் இந்தியா முழுவதும் சல்லடையிட்டு தேடினாலும் கூட ஆதிக்க நில உடமை ஜாதிய சமூகத்தில் ஒடுக்கப்பட்ட தலித் ஜாதியினர் எவரும் இருந்திட வாய்ப்பு இல்லை. நில உடமை மட்டுமல்ல ஆயுதம், தங்கம், நெய், நல்ல ஆடைகள் என எதையும் வைத்துக்கொள்ள சூத்திரர்களுக்கு உரிமை இல்லை என மநுவாதம் தெளிவாகக் குறிப்பிடுகிறது. தலித்துகள் எவரும் சூத்திரர் இல்லை, இந்துக்கள் இல்லை என்பது வேறு கதை.

இந்தியாவில் பெரும்பான்மையான விவசாயிகள் ஏழையாக இருந்தபோதிலும் அவர்கள் ஜாதி உணர்வின் காரணமாக நில உரிமைப் போராட்டத்தில் விவசாயக் கூலிகளாக இருந்த ஒடுக்கப்பட்ட தலித் மக்களுடன் முழுமையாக இணைந்து போராடத் தயாராக இல்லை. இந்தக் காரணத்தால் கம்யூனிஸ்ட் கட்சி முன்வைத்த உழுபவருக்கே நிலம் சொந்தம் என்கிற முழக்கம் முழுமையான பொருளை எட்ட முடியாமல் போய்விட்டது. இந்தியாவில் காலனி ஆதிக்கத்தின் வழியாகத்தான் முதலாளிய சமூக உருவாக்கம் தொடங்கியது. அத்தகைய உருவாக்கம் கூட ஏற்கனவே இங்கே நீடித்திருந்த நில உடமை சமூகத்தின் இணைக்கரமாகவே வளரத் தொடங்கியது. இந்திய கிராமங்களில் உழைக்கும் வர்க்கத்தினர் கூட தீண்டத்தக்கவர், தீண்டத்தகாதவர் என்கிற ஜாதிய முறைப்படியே சமூகத்தில் வாழ முடியும். பொருளாதார வளர்ச்சியிலும், அன்றாட வாழ்வினை மேற்கொள்ளவும் நிலம் தான் அடிப்படையாக இருந்தது. ஆனால் பல நூற்றாண்டுகளாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நிலத்தின் மீது எந்த உரிமையும் இல்லை என்பதனையும் அத்தகைய நிலைக்கு ஜாதி அமைப்பு முறையே காரணம் (Dr Babasaheb Ambedkar Writings and Speeches - Vol 5) என்பதையும் முழுமையாகப் புரிந்து கொண்ட காரணத்தினால் தான் அண்ணல் அம்பேத்கர் “இங்கே ஜாதி என்பது வர்க்கத்தை உள்ளடக்கியதாக உள்ளது” என 1916லேயே தெளிவுபட கூறியுள்ளார். கம்யூனிஸ்ட்களின் நிலம் குறித்தான ஆய்வுகள் இந்தியாவில் ஜாதி என்பது நில உடமை சமூகத்தின் வளர்ச்சியின் போக்கில் நிலைபெற்றுள்ளது எனவும் நில உடமை வீழ்ச்சி அடையும் பொழுது ஜாதியும் வீழ்ச்சியடையும் என்பதாகவே கருதினார்கள். ஆனால் வரலாற்றின் போக்கில் இன்றளவும் கூட ஜாதி இறுக்கத்தை நாம் தெளிவாக அறிய முடிகிறது.

1915 கொலம்பியா பல்கலைக்கழகத்தில் சமர்ப்பித்த ஓர் ஆய்வறிக்கையில் காலனிய ஆட்சியில் கூட நிலத்தின் மீதான அதிக வரி, அதீத வாடகை காரணமாக ஜமீன்தாரர்கள் மட்டுமல்லாமல் மதராஸ் மாகாணத்தின் ராயத்வாரிகள் (அரசிடம் இருந்து நேரடியாக நிலங்களை குத்தகைக்குப் பெற்ற சிறு குறு விவசாயிகள்) கூட அதிக வரி பாதிப்புக்கு உள்ளானார்கள் என்பதையும், வரி வசூலிக்கும் பணியைப் பரம்பரை, வாரிசு உரிமையைக் காரணம் காட்டி கையிலே வைத்திருக்கும் இடைத்தரகர்களின் நெருக்கடிக்கும் விவசாயிகள் ஆளாக வேண்டியுள்ளது” என விவசாயிகள் பிரச்சனையையும் எடுத்துரைத்துள்ளார்.

கோட்டி முறைக்கு எதிரானப் போராட்டம் (1920 - 1949)

மகாராஷ்டிரா மாநிலம் கொங்கன் பகுதியில் 1502 முதல் தொடங்கிய “கோட்டி” முறை (கூட்டி முறை எனவும் கூறுவார்கள்) என்பது நிலத்தின் மீதான அதிகாரத்தை வலியுறுத்தும் ஜமீன்தாரி வகையைச் சார்ந்தது. கோட்டி அதிகாரிகளாக இருந்தவர்கள் பெரும்பாலும் சித்பவன் பார்ப்பனர்கள், குஜராத்தி வாடிகள், மார்வாரிகள் ஆவர். கோட்டி அதிகாரியாக உள்ளவர் தனது இஷ்டம்போல் நிலத்தின் மீது வரியை வசூலித்துக் கொள்வதுடன், உழைக்கும் மக்களிடமிருந்து தனது நிலத்திற்கான உழைப்பை இலவசமாகப் பெற்றுக் கொள்வதும், விவசாயிகள் உற்பத்தியின் லாபத்தை பெரும் பங்கு வாங்கிக் கொள்ளவும் அதிகாரம் கொண்டவர்களாக இருந்தார்கள். இம்முறையை தடை செய்ய பிரிட்டிஷ் அரசு எடுத்த முயற்சியை எதிர்த்து பால கங்காதர திலகர் போராட்டம் நடத்தினார். இதிலிருந்து இம்முறையினால் பலன் பெற்றவர்கள் நமக்கு யார் என்று தெரியும். அதன் பிறகு பார்ப்பனர் அல்லாத வகுப்பினை சார்ந்த எஸ்.கே.போலே அவர்கள் கோட்டி முறையினை முற்றிலுமாக ஒழித்திட வேண்டி முன்னெடுத்தப் போராட்டத்திற்கு அண்ணல் அம்பேத்கர் தன்முனைப்பாக ஆதரவளித்தார். 1929இல் விவசாயக் கருத்தரங்கில் அண்ணல் அம்பேத்கர் கோட்டி முறைக்கு எதிராக அனைவரும் அணி திரள வேண்டும் என முழங்கினார். அதன் தொடர்ச்சியாக 1930களில் அம்பேத்கரின் ஒத்துழைப்போடு கொங்கன் பகுதியில் கோட்டி முறையை ஒழிக்கக் கோரி விவசாயிகள் போராட்டம் வலுவாக நடைபெற்றது.

1936 அண்ணல் உருவாக்கிய சுதந்திரத் தொழிலாளர் கட்சியின் முதன்மை நோக்கம் நிலமற்றவர்கள், வரிய வாடகைதாரர்கள், விவசாயிகள் மற்றும் நகர்ப்புற தொழிலாளர்களின் பிரச்சனைகள் மற்றும் கோரிக்கைகளை முன்னெடுத்து செல்வது ஆகும். ஜாதி மற்றும் வர்க்கம் ஆகியவற்றின் அடிப்படையில் பிரச்சனைகளை அணுகுவதை தனது கட்சியின் தனது கட்சியின் முதன்மை கருத்தாக கொண்டிருந்தார். தனது கட்சி நில அடமான வங்கிகள் உருவாக்குவது, உற்பத்தியை அதிகப்படுத்த விவசாய உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் மற்றும் விற்பனை சங்கங்கள் உருவாக்குவது, மேலும் “கோட்டி” முறையை ஒழிப்பது ஆகியவற்றை முதன்மை வேலையாக Times of India நேர்காணலில் தெரிவித்திருந்தார் (15 ஆகஸ்ட் 1936).

17 செப்டம்பர் 1937 இல் பம்பாய் மாகாண சபையில் கோட்டி முறையை ஒழிக்கக் கோரி சுதந்திரத் தொழிலாளர் கட்சியின் சார்பாக அண்ணல் அம்பேத்கர் முன்வைத்த வரைவை இந்து மகாசபை உறுப்பினர் கடுமையாக எதிர்த்தார்கள். அப்போது ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ், அம்பேத்கரின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள மறுத்து புறந்தள்ளியது. கோட்டி முறையினால் விவசாயிகள், வாடகைதாரர்கள் படும் துயர்களை உழைக்கும் மக்களிடம் அம்பேத்கர் கொண்டு சென்றார் அதனைத் தொடர்ந்து கோட்டி முறையை ஒழிக்கக் கோரி 12 ஜனவரி 1938இல் 25,000 விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் பங்கேற்ற மாபெரும் பேரணி பம்பாயில் நடைபெற்றது. இப்பேரணிக்கு கம்யூனிஸ்ட் கட்சியும் தனது முழுமையான ஆதரவை வழங்கி பெருமளவு பங்கேற்றது. அதன்பிறகு கூட ஆளும் வர்க்க அரசுகள் கோட்டி முறையை ஒழிக்க முன்வரவில்லை. இந்தியா சுதந்திரம் அடைந்து இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில் 1949ஆம் ஆண்டு கோட்டி முறை முற்றிலுமாக தடை செய்யப்பட்டது. எப்படி இருந்த போதிலும் 1920 முதல் 1949 வரை கோட்டி முறைக்கு எதிராக நடைபெற்றப் போராட்டத்தில் அண்ணல் அம்பேத்கர் ஜாதிரீதியாக பிளவுபட்டிருந்த விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களை பெருமளவில் ஒன்றிணைத்து போராட்டங்களை முன்னெடுத்து உழைக்கும் வர்க்க ஒற்றுமையை செயல்படுத்திக் காட்டியுள்ளார் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

(தொடரும்)

இனியவன்