பொன்பரப்பி கலவரத்திற்கு முக்கிய காரணம் அந்தப் பகுதியில் இருக்கும் இராஜசேகரன் என்ற வன்னிய சமூகத்தைச் சேர்ந்த இந்து முன்னணி பொறுப்பாளரே.
கள ஆய்விற்காக தோழர்களுடன் அங்கு சென்று கலவரம் தொடர்பாக அந்த மக்களிடம் இருந்து கேட்டறிந்து கொண்டு இருந்தேன். அப்பொழுது ஒருவர் கூறிய தகவல் எனக்கு மிகுந்த அதிர்ச்சி அளித்தது.
"இந்து முன்னணி அமைப்பு பொறுப்பாளரும் வன்னிய சமூகத்தைச் சார்ந்த இராஜசேகரன் அவர்களின் உடன் பிறந்த அக்காவை தலித் கிருத்துவப் பறையர் ஒருவர் திருமணம் செய்துள்ளார். அவர் அரசுப் பணியில் இருக்கிறார் என்று எண்ணுகிறேன். அவர்களுடன் இராஜசேகரன் மற்றும் அவருடைய உறவினர்கள் எவ்வித வேறுபாடு இன்றி சொந்தம் கொண்டாடுகின்றனர்" என்று ஒருவர் எங்களிடம் கூறினார். பக்கத்தில் இருக்கும் இன்னொருவர் "அவுங்களாம் கிருஸ்டின்ஸ் அவுங்களுக்கு
என்ன பிரச்சனை" என்று கூறினார்.
எனக்கு இதைக் கேட்டவுடனே நினைவுக்கு சட்டென்று வந்தது பாபாசாகேப் பௌத்தம் தழுவியதுதான். நான் அவர்களிடத்தில் கூறினேன், "மதம் அவர்களுக்கு எவ்வளவு பாதுகாப்பாக இருக்கிறது பார்த்தீர்களா? இந்து மதத்தில் இருப்பதால்தான் இந்த இழிநிலையில் நாம் இருக்கிறோம். இதையெல்லாம் அறிந்துதான் பாபாசாகேப் அம்பேத்கர் 1956-ல் 10 லட்சம் மக்களுடன் புத்த மதத்திற்கு மாறினார்"
"அண்ணன் திருமா அவர்கள் கூட நம்மளைப் போல தலித் மக்கள் இஸ்லாம் மதத்திற்கு மாறியது பற்றிதான் ஆய்வு செய்து Phd முனைவர் பட்டம் பெற்றார். இன்று அந்த மக்களை யாரும்
சாதிப் பெயரைச் சொல்லி இழிவாக அழைப்பதில்லை. அவர்கள் சாதியக் கொடுமையை அனுபவிப்பதும் இல்லை. அவர்கள் பொருளாதார ரீதியாக சமூக ரீதியாக உயர்ந்து இருக்கிறார்கள். அவர்களின் பிள்ளைகளை இன்று அனைவரும் இஸ்லாமியராகத்தான் பார்க்கிறார்கள்" என்றேன்.
ஒரு நிமிடம் அனைவரும் என்னை வியப்பாகப் பார்த்தனர்.
நான் மீண்டும் தொடர்ந்தேன், "தமிழ்நாட்டில் இருக்கிற எல்லா சேரிகளிலும் அம்பேத்கர் பிறந்த நாள், இறந்த நாள் மட்டும் கொண்டாடுகிறோம். ஆனா அவரைப் பற்றி படிப்பது இல்லை, அறிந்து கொள்வது இல்லை. விஜய், அஜித் போன்ற நடிகர்களுக்கு மன்றம் வைப்பது மாதிரி அம்பேத்கர் அய்யாவுக்கும் நாம் எல்லாம் மன்றம் வைத்துக் கொண்டு இருக்கிறோம்."
"அவர் எழுத்துக்களும் பேச்சுகளும் 37 தொகுதி புத்தகங்களாக இருக்கிறது. இதைப் படிக்கவே நமக்கு ஆயுள் போதாது. அதனால் குறைந்தபட்சம் இளைஞர்களாவது பாபாசாகேப் பற்றி தேடுதலைத் தொடங்குங்கள். ஓர் தலைமையின் கீழ் அரசியல்மையப் படுங்கள். அப்பொழுதான் இந்த சமூகத்தில் இருந்து யாராவது ஒரு தலைவர் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற இயலும்" என்று கூறினேன்.
பாபாசாகேப் அம்பேத்கர் ஜாதி-தீண்டாமையை ஒழிக்க தம் வாழ்நாளில் எண்ணற்ற களப் போராட்டங்களையும் கருத்தியல் போராட்டங்களையும் நடத்தியுள்ளார்.
இறுதியில் தலித்துகளின் விடுதலைப் போராட்டத்திற்கு முடிவுரை எழுதுவதற்காகத்தான் பத்து லட்சம் மக்களைத் திரட்டி நிராயுதபாணியாக நின்று விடுதலை சாசனத்தை பிரகடனப்படுத்தினார்.
"நான் இந்துவாகப் பிறந்தேன். அது ஒரு விபத்து. ஆனால் இந்துவாக சாக மாட்டேன். இந்து மதத்தையும் அது முன் வைக்கும் பண்பாட்டையும் மறுதலிக்கிறேன்" என்று அவர் அறிவித்த செயல்திட்டம்தான் தலித் சுதந்திரப் போராட்டத்திற்கான போர் முரசு.
நான் ஓர் இந்துவாக சாகமாட்டேன்
- அம்பேத் கோகுல்