சமீபத்தில் சென்னை அடையாறில் உள்ள முத்தமிழ்ப் பேரவையில், 'வளர்க்கப்படுகின்ற வெறுப்பு அரசியல்’ என்ற பெயரில் கருத்தரங்கம் ஒன்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய பா.ம.க நிறுவனர் ராமதாஸ் அவர்கள் "கல்கத்தாவிலிருந்து வெளிவரும் பத்திரிகையின் நிருபர் ஒருவர், என்னிடம், 'நீங்கள் மரம் வெட்டினீங்களாமே?’ என்று கேட்டார். அப்போது நான் சொன்னேன், '100 தடவை அதற்கு நான் பதில் கூறிவிட்டேன். நீங்கள் அதே நோக்கத்தில் கேள்வி எழுப்ப என்ன காரணம்?' என்று கேட்டேன். இனிமேல் அதுபோல ஏதாவது போராட்டம் என்றால் மரங்களை வெட்ட மாட்டோம். இதுபோல கேள்வி கேட்பவர்களைத்தான் வெட்டி குறுக்கே போடுவோம்" என்று கூறி இருந்தார். அத்தோடு பத்திரிகையாளர்களை நாய்கள் என்றும் இன்னும் பல கீழ்த்தரமான வார்த்தைகளாலும் அர்ச்சனை செய்திருந்தார்.

ramadoss 323‘வளர்க்கப்படுகின்ற வெறுப்பு அரசியல்’ என்று கருத்தரங்கத்திற்குப் பெயர் வைத்துவிட்டு அங்கேயே உட்கார்ந்து வெறுப்பு அரசியலைப் பேசியதுதான் ராமதாஸ் அவர்களின் சிறப்பே. காரணம் அவருக்கு வெறுப்பு அரசியலை மட்டுமே பேசத் தெரியும். அதைத்தான் அவர் எப்போதுமே செய்து வந்திருக்கின்றார். பத்திரிகையாளர்களை எல்லாம் நாய்கள் என்று ராமதாசு சொன்னதற்கு பத்திரிகையாளர் சங்கங்கள் கண்டனம் தெரிவித்ததோடு ராமதாஸ் தனது பேச்சுக்காக வருத்தம் தெரிவிக்க வேண்டும் என தாழ்ந்த பணிவுடன் கேட்டுக் கொண்டிருக்கின்றன‌. அதைத் தாண்டி கேள்வி கேட்கும் பத்திரிகையாளர்களை வெட்டிக் கொல்வேன் எனப் பேசிய ராமதாசைக் கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கும் அளவிற்கெல்லாம் அவர்களுக்குத் தெம்பும் இல்லை, திராணியும் இல்லை. நாளை ராமதாசு சொன்னது போலவே கேள்வி கேட்பவர்களை எல்லாம் வெட்டிப் போட்டாலும் அப்போதும் இந்த உதவாக்கரை பத்திரிகைப் பேர்வழிகள் இதைத்தான் செய்யப் போகின்றார்கள்.

ராமதாசும் அவரது மகன் அன்புமணியும் தேர்தல் படுதோல்விக்கு தாங்கள் முன்னெடுத்த சாதிவெறி அரசியல்தான் காரணம் என்பதை மறைக்கவே, ஊடகங்களின் மீதும், பத்திரிகையாளர்கள் மீதும் பழி போடவும், மிரட்டவும் தொடங்கி இருக்கின்றார்கள். இத்தனைக்கும் தமிழகத்தில் செயல்படும் பெரும்பாலான ஊடகங்கள் ராமதாசு மிகக் கீழ்த்தரமான சாதிய அரசியலை முன்னெடுத்த போதெல்லாம் மெளனமாகத்தான் அதை எதிர்கொண்டன. அப்படி இருந்தும் தங்களின் தோல்விக்கு ஊடகங்கள் மீதும், பத்திரிகையாளர்கள் மீதும் பழி போடுவதன் மூலம் தங்கள் மேல் எந்தக் குற்றமும் இல்லை என தனது கட்சித் தொண்டர்களை நம்ப வைக்க அவர்கள் முயற்சிக்கின்றார்கள்.

ஆனால் ராமதாசும், அன்புமணியும் என்ன தான் முட்டுக் கொடுக்க நினைத்தாலும் பாமகவின் வீழ்ச்சி என்பது அதல பாதாளத்திற்குச் சென்றுவிட்டதை இனி யாரும் தடுக்க முடியாது என்பதுதான் உண்மை. பெயரை மட்டும் பாட்டாளி மக்கள் கட்சி என்று வைத்துக் கொண்டு பட்டாளி மக்களின் ஒற்றுமைக்கே வேட்டு வைத்துக் கொண்டு இருக்கும் அந்தக் கட்சியை இன்று ஒட்டுமொத்த தமிழக மக்களும் புறக்கணித்து இருக்கின்றார்கள். ராமதாசின் கணக்குப் பொய்த்துப் போய் இருக்கின்றது. அனைத்து சாதி சங்கங்களையும் ஒருங்கிணைத்து அதற்கு தலைமை தாங்கினால் மற்ற சாதிக்காரர்களின் ஓட்டு கிடைக்கும், அதன் மூலம் தன் மகன் அன்புமணியை முதல்வராக்கலாம் என்ற கனவுடன் தர்மபுரி கலவரத்தைத் தொடர்ந்து மதுரையில் 51 சாதி சங்கங்களை ஒருங்கிணைத்து ‘அனைத்து சமுதாயப் பாதுகாப்புப் பேரவை’ என்ற அமைப்பை உருவாக்கினார். ஆனால் புதிய பொருளாதாரக் கொள்கையால் திடீர் பணக்காரர்களாக உருவாகி, அதைக் காப்பாற்றிக் கொள்ள அரசியலில் காலூன்றத் துடித்துக் கொண்டு இருந்த சில சாதிவெறி பிடித்தவர்க‌ளை மட்டுமே அடித்தளமாக கொண்டு ஆரம்பிக்கப்பட்ட சூத்திர சாதிச் சங்கங்கள் எப்போதுமே ஒட்டுமொத்த உழைக்கும் மக்களிடமிருந்து தனிமைப்பட்டே இருந்தன அல்லது அவற்றை அந்த மக்கள் தங்களுக்கான அடையாளமாக ஏற்றுக் கொள்ளவில்லை.

ராமதாசு நினைத்ததற்கு மாறான விளைவையே அவர் முன்னெடுத்த சாதிய அரசியல் உருவாக்கியது. குறிப்பாக "வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் தவறான பயன்பாட்டில் இருந்து அப்பாவி சமுதாய மக்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காதல் நாடகங்களால் பாதிக்கப்படும் இளம்பெண்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்களுக்குப் பாதுகாப்பு கொடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். காதல் நாடகங்களைத் தடுக்க பெண்களின் திருமண வயதை 21 ஆகவும், ஆண்களின் திருமண வயதை 23 ஆகவும் உயர்த்த வேண்டும். இந்த வயதுகளுக்கு முன்னர் திருமணம் செய்வது என்றால், அதற்கு பெற்றோரின் ஒப்புதல் அவசியம் என்பதை சட்டப்பூர்வமாக அறிவித்து, சட்டத்திருத்தம் கொண்டு வரவேண்டும். பணம் பறிக்கும் நோக்குடன் இளம் பெண்களை காதல் வலையில் வீழ்த்துபவர்களுக்கு, கடுமையான தண்டனை பெற்றுத் தர காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்” போன்ற அவரது விஷக் கருத்துக்கள் வன்னிய சாதி இளைஞர்களிடம் இருந்து மட்டுமல்லாமல் சாதியை விட்டொழிக்க நினைக்கும் ஒட்டு மொத்த தமிழக இளைஞர்களிடம் இருந்தும் பாமகவைத் தனிமைப்படுத்தியது.

சூத்திர சாதி மக்களிடம் தலித்துகள் மீது வெறுப்பை ஏற்படுத்தி, தனியே பிரித்து அதன் மூலம் அரசியல் ஆதாயம் அடைய நினைத்த அவரது அரசியல் திட்டம் தவிடுபொடியாக மாறியிருக்கின்றது. ஆனால் அதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டால் மல்லாக்கப் படுத்துக் கொண்டு எச்சில் துப்புவது போல ஆகிவிடும் என்பதால், இன்னமும் தங்களின் தோல்விக்கு இல்லாத காரணத்தைக் கண்டுபிடித்து சொல்லிக் கொண்டு இருக்கின்றார். மாறிவரும் சமூக அமைப்புக்கு எதிராக பிற்போக்கு அரசியலை கையில் எடுத்து, தன்னுடைய அரசியல் வாழ்க்கைக்கு தன்னுடைய கையாலேயே சவக்குழி தோண்டிவிட்டார் ராமதாசு. இனி அவர் என்னதான் உத்தமர் வேடம் போட்டாலும் அவரை தமிழ்நாட்டு மக்கள் ஏற்கப் போவதில்லை.

குறைந்த பட்சமாகக்கூட தன்பக்க நியாயத்தை வலுவாக எடுத்துச் சொல்ல முடியாத அளவிற்கு தன்னுடைய பிழைப்புவாதத்தாலும், காரியவாதத்தாலும் அந்தக் கட்சியை செல்லரிக்க வைத்துவிட்டார்கள் ராமதாசும், அவர் மகன் அன்புமணியும். அந்தக் கட்சி தற்போது ராமதாசு மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் நலனுக்காக மட்டுமே செயல்படும் கட்சியாக மாற்றப்பட்டிருக்கின்றது. வன்னிய சாதிவெறி பிடித்த சிலரைத் தவிர இன்று அவரை நம்புபவர்கள் யாரும் அவர் பின்னால் இல்லை.

தன்னுடைய சாதிவெறி அரசியலால் முற்றிலும் அம்பலப்பட்டுப் போய் இருக்கும் ராமதாசும் அவரது மகன் அன்புமணியும் இனி ஊடகங்களின் முன்னால் முற்போக்கு வேடம் போடுவதற்கான அத்தனை வாய்ப்புகளையும் இழந்து விட்டதால்தான், தற்போது இனி ஊடக விவாதத்தில் கூட பாமகவினர் யாரும் பங்கேற்க மாட்டார்கள் என்ற முடிவுக்கு வந்திருக்கின்றார்கள். டயர் நக்கி என்று சொல்லிவிட்டு அவர்களுடனேயே கூட்டணி வைத்து ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் கழுவிக் கழுவி ஊற்றும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதால், நிச்சயம் எந்த முகத்தை வைத்துக் கொண்டு ஊடக விவாதங்களில் பங்கெடுத்துக் கொள்ள முடியும்? அதனால் இனி நேரடியாக பாசிச பிஜேபி போன்று அப்பட்டமான மக்கள் விரோத வலதுசாரி அரசியலையே பாமக முன்னெடுக்கப் போகின்றது.

தமிழ்நாட்டு மக்களை சாதி ரீதியாகவும், மத ரீதியாகவும் பிரித்து அரசியல் ஆதாயம் அடைய செயல்பட்டுக் கொண்டு இருக்கும் ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி சங்கி கும்பலைப் போல பாமகவும் ஒரு தீவிர வலதுசாரி பாசிச அமைப்பாக தன்னை கட்டமைத்துக் கொள்ளப் போகின்றது. ஏற்கெனவே சில பள்ளர் சாதி அமைப்புகள் ஆர்.எஸ்.எஸ்.ஸின் கிளைப் பிரிவுகளாக மாற்றப்பட்டுள்ளதைப் போல இனி பாமகவும் வன்னிய சாதி மக்களிடம் இந்துத்துவ அரசிலை முன்னெடுத்து, அவர்களை கடும் பிற்போக்குவாதிகளாக மாற்றி அதன் முலம் தன்னுடைய அரசியல் களத்தை விரிவுபடுத்துக் கொள்ள முயற்சிக்கும்.

ஆனால் தமிழ்நாடு வெறுப்பு அரசியலை விதைக்கும் கட்சிகளுக்கும், இயக்கங்களுக்கும் எதிரான தீவிர முற்போக்கு கருத்தியலால் சித்தாந்த ரீதியாக வலுவாக்கப்பட்ட மண் என்பதால் ராமதாசு உட்பட அனைத்து பிற்போக்குவாத சக்திகளும் நிச்சயம் படுதோல்வியே அடைவார்கள்.

- செ.கார்கி

Pin It