பேரறிஞர் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையம்... காஞ்சிபுரம்
1992-93-94 கல்வியாண்டில் எனது கல்லூரி அனுபவம் மிகவும் மகிழ்ச்சிகரமானவை தான்...
நேரடிப் பயிற்சிக்காக மதுராந்தகம் சர்க்கரை ஆலை, படாளம், தாமல் தொடக்க வேளாண்மை வங்கி, ரேசன் கடை, நிலவளவங்கி, கடன் சங்கம், மத்திய கூட்டுறவு வங்கிகள் - இப்படி பல இடங்கள் அழைத்துச் சென்று பயிற்சி கொடுத்தனர்.
அதே கல்லூரிக்கு 26 ஆண்டுகள் கழித்து மகிழ்ச்சியோடு சென்றேன்.....
மிகுந்த கவலையோடு செல்பி எடுத்துக் கொண்டு திரும்பினேன்.
ஒரே ஒரு வகுப்பறையில் மட்டும் மாணவ-மாணவிகள் இருந்தனர், நூலக அறை பூட்டிக் கிடந்தது ...
பின்பக்கத்தில் சிறுவர்கள் இந்திய கிரிக்கெட் அணியில் எப்படியும் சேர்ந்துவிட வேண்டும் என்று அக்னி வெயிலிலும் பயிற்சி எடுத்துக் கொண்டு இருந்தனர்.
கல்லூரி கட்டிடத்தின் ஜன்னல்கள் எப்படி இருந்தது என்பது தான் ஆட்சியாளர்களின் யோக்கியதைக்கு சாட்சி... படங்களைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
புத்தகத்தின், நூலகத்தின் அருமை இந்த 'அறிவாளிகளுக்கு' எப்படித் தெரியும்...?
சென்னை அண்ணா நூலகமே ஒட்டடை அடிக்காமல் இருக்கும் போது இதை என்ன சொல்ல...?
அரசு அலுவலர்கள் மாறும் போது அரசு வீடுகளும் கலர் மாறுகிறது. அத்துடன் அவர்களின் செல்வாக்கின் அளவுகோல்படியும் மாற்றியமைக்கிறார்கள் அல்லது கட்டிடங்களையே மாற்றுகிறார்கள்.
நாசமாப் போவது மக்களின் வரிப்பணம் தான்...
காஞ்சிபுரம் கலெட்டரேட் ஏரியா முழுவதும் வனப்பிரதேசமாகவே அப்போது இருக்கும்... மாலை நேரங்களில் நடந்து செல்லும்போது ரம்மியமாக இருந்த பகுதி.. இன்று புதர் மண்டி பாழடைந்த கட்டிடங்களாகவே கிடக்கிறது.
மெத்தப் படித்த IAS, IPS அதிகாரிகளுக்கு ஒரு வேண்டுகோள்...
இந்த பாழாப்போன கட்டிடங்களை சரி செய்து வீடற்ற நாலு ஏழைகளுக்காவது கொடுக்கலாமே...
படிக்கும் நண்பர்களுக்கு, தோழர்களுக்காக... இன்னும் சில தகவல்களை கீழே தருகிறேன்..
அண்ணாத்துரை பிறந்த ஊரும் அது தான்... சங்கரராமனை போட்டுத் தள்ளிய சங்கராச்சாரி மடம் இருப்பதும், கருவறையில் பாலியல் கல்வி சொல்லிக் கொடுக்கும் தேவநாத அய்யர் இருப்பதும் காஞ்சிபுரம் தான்.
பிளாஸ்பேக்...
1990-முதற்கொண்டு கூட்டுறவுத் துறையில் அரசு வேலை வாய்ப்பு அதிகம் என்றதின் பொருட்டும், சென்னை மாநில கல்லூரியில் BSc chemistry படிக்க வேண்டியவன் கூட்டுறவு மேலாண்மைப் படிப்பை தேர்வு செய்தேன்.
தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியம்- சென்னை நடத்திய தேர்வில் முதல் வகுப்பிலும், கல்லூரியில் முதல் மாணவனாகவும் தேர்வு பெற்றேன்.
காதல் கத்தரிக்கா இல்லாம கல்லூரி வாழ்க்கை கடந்து போகுமா என்ன..?
படிப்பு முடிந்த வருடமே மாமாவுக்கும் ட்ரான்ஸ்பர் தேனி மாவட்டத்திற்கு... எனக்கும் தாமல் கிராம தொ.கூ.வங்கியில் பழகுநர் பணி வாய்ப்பு சம்பளம் 700+TA, வீட்டு வாடகை ₹250/-
பணி நிரந்தரமான்னே தெரியாத நிலையில் அதே மாடியின் பக்கத்து வீட்டில் வசித்த ஜெகதீஸ்வரியை காதலித்தது வீட்டார்களுக்குத் தெரிந்த பின்பு திருமணத்திற்கு இருந்த ஒரே தடங்கல் சாதி தான்.
பின்பு அதை வெற்றிகரமாக சமாளித்து 1995ல் ஊர்த் தலைவரின் மகனும் அப்போது அரசியலில் நுழைந்து இன்று தேனி மாவட்டத்தில் பிரபலமாக இருக்கும் அண்ணன் திரு. தங்க.தமிழ்ச்செல்வனின் தலைமையில் திருமணம் இனிதே நடந்து முடிந்தது.
20 நாள் கழித்து திரும்ப வேலைக்கு வந்தா அப்போது தான் ஆப்பு வச்சாங்க... சங்கத் தலைவர் தேர்தல் முடிந்து தேர்வான தலைவர், அவருக்குத் தேவையான பசையைக் கொடுத்ததால் நிரந்தரப் பணியாளர் நியமிக்கப்பட்டு விட்டார், நீங்க வேறு பக்கம் போய் வேறு ஆணியைப் புடுங்குங்கள் என்று கூறிவிட்டார்.
நானும் சென்னை புளியம்பேடு ARC Parcel Service Company ன் மைய அலுவலகத்தில் TLUS பிரிவில் (₹1750+அலவென்ஸ்), எனது மனைவிக்கு சவீதா மருத்துவமனை அருகில் லெதர் சூ ஏற்றுமதி நிறுவனத்தில் ₹950/-சம்பளத்திலும் வாழ்க்கையெனும் ஆணியைப் புடுங்க ஆரம்பித்தோம்..
இரண்டு குழந்தைகளையும் பார்த்துக் கொள்ள முடியாமல் நாங்க சென்னைக்கு டாடா சொல்லிவிட்டு சொந்த ஊருக்கே சென்றுவிட்டோம்...
மதுரை, கோவை, திருச்சி, நீடாமங்கலம் என கூட்டுறவுத் துறை நேர்முக தேர்வுகளை சந்தித்துவிட்டு கடைசியில் எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்று தலைவர் கேட்ட ₹90,000/-கொடுக்க வக்கற்று கம்பம் கூட்டுறவு நிலவள வங்கி வேலையின் நேர்முகத் தேர்வில் என்னோடு +2 படித்தவனிடமே (கூட்டுறவு படிப்பை நான் 1993-94 ல் முடித்தபோதும் அவன் 1997-1998 தான் படித்துள்ளவனிடம்) வேலையைப் பறிகொடுத்தேன்.
பின்பு படையப்பா படத்தில் சூப்பர் ஸ்டார் ஒரே பாடலில் பணக்காரன் ஆவது போல எங்களால் ஆக முடியவில்லை ...
2000 ஆண்டிலிருந்து இன்று வரை திருப்பூர் பனியன் கம்பெனிகளில் அணுகுண்டு விஞ்ஞானி, கனவு நாயகன் அய்யா அப்துல் கலாம் அவர்களின் வைரவரிகளான
"வேலை தேடுபவனாக இருக்காமல், நாலு பேருக்கு வேலை கொடுப்பவராக மாறுங்கள்"
என்பதை நனவாக்கிக் கொண்டுள்ளேன்.
கூடிய விரைவில் மோடியின் தயவில் திரும்ப வேலை தேடுபவனாக மாற வாய்ப்புண்டு..
இளைஞர்களே நீங்க எப்படி...?
- தருமர், திருப்பூர்