பொதுப்பணித்துறை - வருவாய்த் துறைகளின் கழிப்பிணித்தனத்தைக் கண்டிக்கிறோம்!
செயங்கொண்டம் பக்கத்திலுள்ள பொன்னேரி, சேத்தியாத்தோப்பு வீர நாராயணன் (வீராணம்) ஏரி முதலானவை சோழர்கள் ஆட்சியில் 1,000 ஆண்டு களுக்குமுன் உருவாக்கப்பட்டவை.
திட்டக்குடியை அடுத்து உள்ள வெலிங்டன் ஏரி (எமனேரி), சேலம் மேட்டூர் அணை இவை வெள்ளை யர் ஆட்சியில் உருவாக்கப்பட்டவை.
சாத்தனூர் அணை, மங்கலம்மேடு அடுத்த எரையூர் ஏரி இவை காங்கிரசு ஆட்சியில் கட்டப்பட்டவை.
இப்படிப்பட்ட ஏரிகள் தமிழகத்தில் 41,000 உள்ளன. இவற்றில் சில தனியார் ஏரிகளும் உண்டு. அவை சிறிய ஏரிகள். அவை தனியாருக்குச் சொந்தமான நிலத் தில் அவரவரால் தோண்டிக் கொள்ளப்பட்டவை.
இந்த ஒவ்வொரு ஏரிக்கும் மழைநீர் ஓடிவரும். வரத்து வாய்க்கால்களும், ஏரி நீர் பாயும் போக்கு வாய்க்கால்களும் உண்டு.
அப்படிப்பட்ட வாய்க்கால்கள் அரசுத் தரிசு, புறம் போக்கு நிலங்கள், தனியாருடைய பட்டா நிலங்கள் வழியாகப் பல நூற்றாண்டுகளாக-ஓராயிரம் ஆண்டுக்கு மேலாக உள்ளவை.
இவை வருவாய்த்துறை நில வரைபடத்திலும், பொதுப் பணித்துறை நீர்நிலைகள் வரைபடத்திலும் துல்லியமாக இருக்கும்.
இவை அந்தந்த ஏரியின் நீர் கொள்ளவு (ஆயக் கட்டு), ஏரியின் பரப்பளவு, ஏரிக்கரையின் உயரம், அகலம், கலங்கின் அளவுகள், மதகுகளின் அளவுகள் எல்லாம் துல்லியமாகக் காட்டும்,
இவை அரசின் கவனமின்மையால் ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டன.
தமிழக அரசின் வருவாய்த்துறை கணக்கர் மற்றும் கீழ்நிலை அலுவலர்கள் ஆகியோர்க்கும்; பொதுப்பணித் துறை கண்காணிப்பாளர் மற்றும் லஸ்கர் முதலான கீழ்நிலைப் பணியாளர்களுக்கும், ஊர் நாட்டாண்மைக் காரர்களுக்கும் இவை பற்றித் துல்லியமாகத் தெரியும்.
இந்த நிலைமை வெள்ளையன் ஆட்சியில் செப்ப மாக இருந்ததை நான் நன்கு (1946 வரை) அறிவேன்.
வெள்ளையன் வெளியேறிய பிறகு - 1960 முதல் இவையெல்லாம் காங்கிரசு ஆட்சியினராலும் திராவிடக் கட்சி ஆட்சிகளாலும் கண்காணிப்பும், பராமரிப்பும் இன்றி விடப்பட்டன.
1969க்குப் பிறகு, ஆளுங்கட்சியினரும், 1977க்குப் பிறகு ஆளுங்கட்சியினரும் எதிர்க்கட்சியினரும்-இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகளும் - மற்ற உயர்நிலை - கீழ் நிலை அதிகாரிகளும் - கட்சிப் பொறுப்பாளர்களும் நெஞ்சில் ஈரம் இன்றி - மக்களைப் பிழிந்து கைக்கூலி பெறுவதிலும்-அரசுப் பணியைப் பொறுப்புடன் செய்யாமல் கழிப்பிணித்தனமாகவும் நடந்துகொண்டனர்.
பொது மக்கள் தலைவர்கள் என்பவர்களும் சமூக அக்கறையின்றிப் போயினர்; இவர்களுள் சிலர் ஆளுங்கட்சி - எதிர்க்கட்சிகளின் தரகர்களாக ஆகிவிட்டனர்.
வடஇந்தியாவில் மேலே கண்ட நிலைமை 1980க் குப் பிறகு உருவாகிவிட்டதை நேரில் நான் பார்த்தேன்.
புதிய பொருளாதாரக் கொள்கையின் காவலர் களாக, 1991க்குப் பிறகு விளங்கிய பி.வி. நரசிம்மராவ், டாக்டர் மன்மோகன் சிங், ப. சிதம்பரம் மற்றும் இவர் களின் கால ஆட்சிகள் வேளாண்மையைப் புறக்கணித் தன; நீராண்மையைப் புறக்கணித்தன; மின் ஆக் கத்திலும், மக்கள் நலக் காப்பிலும் (யீரடெiஉ ழநயடவா), பொதுக் கல்வி வளர்ச்சியிலும் நாட்டம் செலுத்தத் தவறின.
மேலே கண்ட இந்திய மய்ய அரசின் கையாள்களாகவும் கூட்டுக்கொள்ளைக்காரர்களாகவும் இருந்த திராவிடக் கட்சி ஆட்சிகள் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் கூச்ச நாச்சமின்றி இறங்கின.
2011லும், 2016லும் வெற்றி பெற்ற செயலலிதாவும், அவருடைய அமைச்சரவையினரும், உயர்நிலை - கீழ்நிலை அதிகாரிகளும் பகல் கொள்ளைக்காரர்களா கவே செயல்பட்டார்கள். பொதுநலனை வேண்டி, இதற்கு நாமே பலியானோம் என்பதை வெட்கமின்றி ஒப்புக் கொள்கிறோம். நிற்க.
செயலலிதா மறைவுக்குப்பிறகு, அவருக்குக் கையாள்களாக இருந்த சொந்தக் கட்சித் திருடர்கள் - “சுருட்டிய வரையில் இலாபம்” - “யாருக்குக் கொடி பிடித்தாலும் சரி, நம்மை கொள்ளையடிக்கவிட்டால் போதும்” என்று கருதி - இன்றைய முதல்வர் மாண்பு மிகு எடப்பாடி பழனிசாமியும், நேற்றைய முதல்வர் பன்னீர் செல்வமும், சசிகலா, டி.டி.வி. தினகரன் குடும்பத்தினரும் பிரதமர் நரேந்திர மோடியின் காலைச் சிக்கெனப் பிடித்துக் கொண்டனர்.
இந்த இக்கட்டான சூழலில், 17.6.2017 அன்று, தமிழக முதலமைச்சர் - பொதுப் பணித்துறை மாவட்டத் தலைமைப் பொறியாளர்கள், கண்காணிப்புப் பொறி யாளர்கள், செயற்பொறியாளர்கள் முதலான 100க்கு மேற்பட்ட உயர் அதிகாரிகளையும் பொதுப் பணித் துறை முதன்மைச் செயலாளர் முதலானோரையும் கூட்டி - எந்தெந்தத் திட்டங்கள் நிறைவு பெற்றுள்ளன - எவை எவை தேங்கி நிற்கின்றன என்று ஆய்வு செய்துள்ளார். இது வரவேற்கத்தக்கது.
இதே வேகத்தில் வருகிற வடகிழக்குப் பருவ மழை தொடங்குவதற்குள் - 1,000 பெரிய ஏரிகளைத் தூர் அள்ளி ஆழப்படுத்தவும், ஏரிக்கரைகளைக் கெட்டிப் படுத்தவும், வரத்து - போக்கு வாய்க்கால்களை ஊர் மராமத்து மூலம் தூர் வாரவும் வேண்டும் என்றும்; வேளாண் கூட்டுறவுக்கடன் முழுவதையும் தமிழக அரசினர் தள்ளுபடி செய்ய ஆவன செய்ய வேண்டும் எனவும்; தேசிய வங்கிகளில் பெற்ற வேளாண் கடன் களைத் தள்ளுபடி செய்ய முடியாது என்று கூறும் மோடி அரசைக் கண்டனம் செய்து, தமிழகச் சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் வற்புறுத்திக் கோருகிறோம்.