தனக்குப் பிடிக்காத, தன்னுடைய பாசிச சித்தாந்தத்தை ஏற்றுக்கொள்ள மறுக்கும் அனைவரையும் தீர்த்துக் கட்டிவிட்டு சட்டப்படியே தப்பிக்க முடியும் என்ற நிலை ஒரு நாட்டில் நிலவுவது என்பது வலதுசாரி கொலைவெறி பிடித்த கும்பலுக்கு எவ்வளவு மகிழ்ச்சியானது. அசீமானந்தம் என்றால் 'எல்லையற்ற ஆனந்தம்’ என்று பொருளாம். அதனாலேயே என்னவோ, அசீமானந்தா அவர் சம்மந்தப்பட்ட அனைத்து குண்டுவெடிப்பு வழக்குகளில் இருந்தும் விடுதலையாகி எல்லையற்ற மகிழ்ச்சியில் தற்போது இருக்கின்றார். முற்போக்குவாதிகள் மிக ஆவலாக எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தது போலவே சம்ஜெளதா ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் இருந்தும் அசீமானந்தா உட்பட நாலு பேரை ஹரியானாவின் பஞ்ச்குலாவில் இருக்கும் என்ஐஏ நீதிமன்றம் விடுதலை செய்திருக்கின்றது. ஒருவேளை அசீமானந்தா தண்டிக்கப்பட்டிருந்தால், என்ஐஏ மோடியின் கைக்கூலி அமைப்பு இல்லை என்ற தவறான முடிவிற்கு இட்டுச் சென்றிருக்கும். நல்லவேளையாக அப்படியான எந்த விபரீதமான முடிவுக்கும் போகாமல் தன் அம்மணத்தை வெளிப்படையாகவே என்ஐஏ காட்டிவிட்டது.
சென்ற ஆண்டு மெக்கா மசூதி குண்டுவெடிப்பு வழக்கில் இருந்து அசீமானந்தா உட்பட 5 பேரை ஹைதராபாத்தில் உள்ள நாம்பல்லி என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றம் விடுவித்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். இது மட்டுமல்ல 2007 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ராஜஸ்தானில் உள்ள ஆஜ்மீர் தர்காவில் குண்டு வெடித்து மூன்று பேர் கொல்லப்பட்டனர், 17 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த வழக்கு சம்மந்தமாக அசீமானந்தா உட்பட 13 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கில் இருந்தும் அசீமானந்தா உட்பட 7 பேரை ஜெய்பூர் என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றம் விடுவித்தது. 3 பேர் மீது குற்றம் உறுதி செய்யப்பட்டது. இன்னும் வழக்கில் சம்மந்தப்பட்ட மூன்று பேரை பத்து வருடங்களாக என்.ஐ.ஏ. தேடிக்கொண்டே இருக்கின்றது. இதுதான் என்ஐஏ நீதிமன்றங்களின் நிலை. அசீமானந்தாவுக்கு மட்டும் அல்லாமல், பெண் சாமியார் பிரக்யா சிங் தாக்கூர் வழக்கிலும் என்ஐஏ இதே போலத்தான் நடந்து கொண்டது. காவி பயங்கரவாதிகள் மீது என்.ஐ.ஏ நீதிமன்றங்களில் நடந்த அனைத்து வழக்குகளிலும் இருந்தும் அவர்கள் தொடர்ச்சியாக விடுவிக்கப்பட்டிருக்கின்றார்கள் என்பதுதான் கடந்தகால வரலாறாக உள்ளது.
'இஸ்லாமிய தீவிரவாதிகள் இந்துக்களை திட்டமிட்டு கொலை செய்வதற்காக குண்டு வைப்பதால், அவர்களைப் பழிக்குப் பழி வாங்கத்தான் இவர்களும் பதிலுக்கு குண்டு வைத்தார்கள், இந்த குண்டுவெடிப்புகளில் தொடர்புள்ளவர்கள் அனைவரும் இந்துக்களின் நலுனுக்காக தன் வாழ்வை அர்ப்பணித்தவர்கள்' என்று நீங்கள் தவறாக முடிவு செய்துவிடக்கூடாது. காரணம் இந்தக் குண்டுவெடிப்புகளை நிகழ்த்தியவர்களின் நோக்கம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதுதான். பல தசாப்தங்களாக உரம்போட்டு வளர்க்கப்பட்ட இஸ்லாமிய வெறுப்பு என்பதே, இந்துக்கள் மத்தியில் மதவெறியைத் தூண்டிவிட்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்காகத்தான். இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட மற்றொரு காவி பயங்கரவாதியான பிரக்யாசிங் தாக்கூர் தன் சகோதரியுடன், பிப்ரவரி 19 2007 அன்று டிவியில் சம்ஜெளதா ரயிலில் விபத்துச் செய்தி அறிவிக்கப்படும்போது காத்திருந்து பார்த்தார் என்று வாக்கு மூலம் அளித்த அவரின் உதவியாளர் நீரா, விபத்தில் இறந்து போனவர்களின் காட்சிகள் காட்டப்படும்போது தான் அதை சகிக்க முடியாமல் அழுததாகவும், அதற்கு அவரிடம் பிரக்யாசிங் தாக்கூர் “அழ வேண்டாம். இறந்ததெல்லாம் முஸ்லிம்கள்தான்” என்றும் சொல்லியிருக்கின்றார். அதற்கு நீரா அதில் ஹிந்துக்களும் செத்திருப்பதாக சொல்கின்றார். அதற்குப் பிரக்யாசிங் தாக்கூர் “புழுக்கள் அரைபடும்போது கொஞ்சம் தானியமும் சேர்த்து வீணாகும்” என்று நீராவுக்கு ஆறுதல் சொல்லியிருக்கின்றார். அதற்குப் பின்னால் சம்ஜெளதா ரயிலில் வெற்றிகரமாக குண்டு வைக்கப்பட்டதைக் கொண்டாடும் விதமாக நீராவுக்குப் பிரக்யாசிங் தாக்கூர் ஐஸ்கிரீம் வாங்கிக் கொடுத்துள்ளார் (நன்றி:கேரவான் இதழ்). இதுதான் இவர்களின் உண்மையான முகம். ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக காவி பயங்கரவாதிகள் திட்டமிட்டு நடத்தியதுதான் அனைத்து குண்டுவெடிப்புகளும்.
மேலும் இந்தக் குண்டுவெடிப்புகள் அனைத்தும் மோகன் பகவத்தின் ஒப்புதலோடு செய்யப்பட்டது என்பதை கேரவன் ஆங்கில இதழுக்கு அளித்த தன்னுடைய பேட்டியில் அசீமானந்தா ஏற்கெனவே கூறியிருக்கின்றார். மோகன் பகவத் தன்னைச் சந்தித்து “நீங்கள் இதைச் செய்தால் நாங்கள் சற்று இளைப்பாறுவோம். எந்தத் தவறும் அதன் பின் நடக்காது. அது கிரிமினல் வழக்காக மாறாது. இதை நீங்கள் செய்தால் அதன்பின் ‘ஒரு குற்றத்திற்காகவே நாம் இந்தக் குற்றத்தைச் செய்தோம் என்று மக்கள் கூற மாட்டார்கள். இது நமது தத்துவத்தோடு இணைக்கப்பட்டது. இது இந்துக்களுக்கு மிகவும் முக்கியமானது. தயவு செய்து இதைச் செய்யுங்கள். உங்களுக்கு எங்கள் ஆசீர்வாதங்கள் உண்டு” என்று தன்னிடம் கூறியதாக அசீமானந்தா தெரிவித்தார்.
(அசீமானந்தாவுடன் மோடி - பழைய புகைப்படம்)
ஆனால் அசீமானந்தாவை குண்டு வைக்கத் தூண்டிய மோகன் பகவத் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பதோடு குண்டுவெடிப்பு வழக்குகளில் தொடர்புடைய அனைவரையுமே ஆர்.எஸ்.எஸ்.இன் ஆணைப்படி மோடி காப்பாற்றியும் விட்டார். ஆர்.எஸ்.எஸ்.இன் ஆசியுடன் நடத்தப்படும் கலவரங்களும், குண்டுவெடிப்புகளும் ஒருநாளும் சட்டப்படி தண்டிக்க முடியாதவை என்பதைத்தான் அசீமானந்தவின் விடுதலை காட்டுகின்றது. பல அசைக்க முடியாத ஆதாரங்கள் இருந்தும், குஜராத் கலவர வழக்கில் இருந்து எப்படி மோடி மோசடியான முறையில் விடுவிக்கப்பட்டாரோ, அதே போலத்தான் தற்போது அசீமானந்தாவும் விடுவிக்கப்பட்டுள்ளார். மிக நீண்ட காலமாக அரசு உறுப்புகளில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் ஊடுறுவ செய்யப்பட்ட அதன் உறுப்பினர்கள்தான் தற்போது இந்த நாட்டின் விதியைத் தீர்மானிப்பவர்களாய் இருக்கின்றார்கள். அனைத்து ஆதாரங்களும் அப்பட்டமாக இருந்தாலும் உங்களிடம் அந்த ஆதாரங்கள் அனைத்தும் பொய் என்று அவர்களால் சொல்ல முடியும். அவை எல்லாம் இந்துமத எதிர்ப்பாளர்களால் திட்டமிட்டு புனையப்பட்டவை என்று அனைவரையும் நம்ப வைக்கவும் முடியும்.
2007 ஆம் ஆண்டு பிப்ரவரி 18 இல் நடந்த சம்ஜெளதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு, அதே ஆண்டு மே மாதம் மெக்கா மசூதியில் நடந்த குண்டுவெடிப்பு, அக்டோபர் மாதம் ராஜஸ்தான் ஆஜ்மீர் தர்க்காவில் நடந்த குண்டுவெடிப்பு, 2006 செப்டம்பர் மற்றும் 2008 மகாராஷ்டிராவில் மாலேகானில் நடந்த இரு குண்டுவெடிப்பு வழக்கு என மொத்தம் ஐந்து குண்டுவெடிப்புகளிலும் சேர்த்து மொத்தம் 119 பேர் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். இந்த ஐந்து குண்டுவெடிப்புகளையும் நடத்த சதி செய்தவர்களில் முக்கியமானவர்கள் அசீமானந்தா, சுனில் ஜோஷி மற்றும் பிரக்யாசிங் தாக்கூர் ஆவார்கள். அசீமானந்தா ஆஜ்மீர் தர்க்கா குண்டுவெடிப்பு வழக்கில் இருந்தும், தற்போது சம்ஜெளத்தா ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் இருந்தும் என்.ஐ.ஏ நீதிமன்றங்களால் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றார். அதே போல மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் இருந்து பெண்சாமியார் பிரக்யாசிங் தாக்கூரை விடுதலை செய்ய எந்த ஆட்சேபணையும் இல்லை என்று தேசிய புலனாய்வு அமைப்பு மும்பை என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றத்தில் ஏற்கெனவே தெரிவித்து இருக்கின்றது.
நடக்கும் அநீதிகளை எல்லாம் வாய்மூடி கைக்கட்டி வேடிக்கை பார்ப்பதைத் தவிர வேறு எதுவும் செய்ய முடியாத ஒரு சர்வாதிகார நிலையை மோடி நாட்டில் ஏற்படுத்தி இருக்கின்றார். எதிர்த்து கேள்வி கேட்பவர்கள் தேசவிரோதிகள் என்று முத்திரை குத்தப்பட்டு வேட்டையாடப்படுகின்றார்கள். நீதிபதிகள், பத்திரிகையாளர்கள், அறிவுஜீவிகள் என அனைவருமே கடுமையான ஒடுக்குமுறைக்கு ஆளாக்கப்படுகின்றார்கள். பாசிசம் மக்கள் அங்கீகாரத்துடன் ஆட்சியைக் கைப்பற்றும் போது என்ன நடக்குமோ, அதே தான் இன்று இந்தியாவிலும் நடந்துள்ளது. இன்னொரு முறை மோடி ஆட்சியமைக்க மக்கள் வாய்ப்பு கொடுப்பார்களேயானால் அசீமானந்தாக்களும், பிரக்யாசிங் தாக்கூர்களும் முஸ்லிம்களையும், ஏன் அவர்களுடன் சகோதரர்களாக பழகும் இந்துக்களையும் கூட சவுக்கிதாரின் துணையுடன் அழித்தொழிப்பார்கள். ஆனால் அவர்களைத் தண்டிக்க இந்த நாட்டில் நீதிமன்றம் என்ற ஓர் அமைப்பே இருக்காது. காரணம் அவர்கள் நீதிமன்றங்களை எல்லாம் மனிதர்களை அறுக்கும் இறைச்சிக் கூடங்களாக மாற்றியிருப்பார்கள்.
- செ.கார்கி