இந்தியா சுதந்திரம் பெற்று 71 வருடங்கள் கடந்தும் இன்றுவரை மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் அவல நிலை மட்டும் மாறவில்லை..

கோவையில் பாதாளச் சாக்கடை சுத்தம்செய்த போது அதிலிருந்து வெளியேறிய விஷவாயு தாக்கி துப்புரவுப் பணியாளர்கள் இருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..

manual scavenging deathகோவை சிங்காநல்லூர் பகுதியில் அமைந்துள்ள பாதாளச் சாக்கடையை சுத்தம் செய்ய கோவை சிஎம்சி காலனியைச் சேர்ந்த முருகன், பாண்டித்துரை, சுரேஷ் ஆகிய மூவர் சென்றுள்ளனர். பாதாளச் சாக்கடை அடைப்பை சரி செய்ய மூன்று பேரும் சாக்கடையைத் திறந்து சாக்கடைக்குள் முதல் ஆளாக இறங்கிய முருகன் சாக்கடை அடைப்பை நீக்க முயற்சி செய்த போது அதிலிருந்து வெளியேறிய விஷவாயுவின் தாக்கத்தை தாங்க முடியாமல் மயக்கமாகி பாதாளச் சாக்கடையிலேயே விழுந்துள்ளார், இதைப் பார்த்துப் பதறிப் போன பாண்டித்துரை என்பவர் முருகனைக் காப்பாற்ற மேற்கொண்ட முயற்சியில் அவரும் அதே இடத்தில் மயங்கினார். விஷ வாயுவின் தாக்கத்தால் இரண்டு பேருமே பரிதாபமாக உயிரிழந்தனர்.

பல்வேறு விதமான ஹைடெக் தொழில்நுட்பங்கள் வளர்ந்துள்ள இன்றைய கால கட்டத்தில், மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் அவல நிலை மட்டும் அடுத்த நிலைக்கு எட்டப்படாமல் இருப்பது ஏன்?

பாதாளச் சாக்கடை சுத்தம் செய்தபோது அதிலிருந்து வெளியேறிய விஷவாயு தாக்கி துப்புரவுப் பணியாளர்கள் உயிரிழந்தனர் என்னும் செய்தி மட்டும் அன்றாடம் வந்த வண்ணம் தான் உள்ளது. நாமும் அதை வெறும் அன்றைய தினச்செய்தியாக மட்டும் பாவித்து கடந்துவிடுகிறோம்.

வெறும் 500 - 600 ரூபாய் கூலிக்காக உயிரைப் பணயம் வைத்து சாக்கடையில் இறங்கி சுத்தம் செய்யும் அவர்களும் நம்மைப் போன்ற மனிதர்கள் தானே, பொருளாதார வறுமை நிலைக்காகவும் அவர்களின் தின வாழ்வாதரத்திற்காகவும் பாதாளச் சாக்கடைகளுக்குள் இறங்கி அடைப்புகளை நீக்கும் இது போன்ற அபாயகரமான பணியை செய்கின்றனர்.

இந்த இழிநிலை மாற்றம் பெறவும், மலக்குழிக்குள் இறங்கி சுத்தம் செய்யும்போது விஷவாயு தாக்கி மனிதர்கள் மரணிப்பதைத் தவிர்க்கவும், பாதாளச் சாக்கடைக்குள் ஏற்படும் அடைப்புகளை சுத்தம் செய்ய மனிதர்களைப் பயன்படுத்தக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தும் தொடர்ச்சியாக இப் பணியை மனிதர்கள் தான் செய்து வருகின்றனர்.

இதை முற்றிலும் தடுக்க நம் அரசு மேற்கொண்ட முயற்சிகள் தான் என்ன?

இந்தியாவிற்கே முன்னோடியாக, நம் அண்டை மாநிலமான கேரளாவில் ஸ்டார்ட் அப் நிறுவனமான ‘ஜென்ரோபோடிக்ஸ்’ சாக்கடைகளைச் சுத்தம் செய்யும் ரோபோ இயந்திரத்தை சென்ற வருடம் சோதனை செய்து அதில் வெற்றியும் கண்டது. மேலும் இந்தியாவிலேயே முதல்முறையாகப் பாதாளச் சாக்கடையைச் சுத்தம் செய்யும் பணியில் மனிதனை தவிர்த்து ரோபோக்களைக் களமிறக்கும் முயற்சியை எடுத்தது கேரள அரசு தான் என்னும் பெருமை பெற்றதுடன் அந்த ரோபோ தயாரிப்புக்கான அனைத்து செலவுகளையும் கேரள அரசு ஏற்றுக்கொண்டது மேலும் சிறப்பு அல்லவா...

அண்டை மாநிலத்தைப் போல் நம் மாநில அரசும் பாதாள சாக்கடைகளில் ஏற்படும் அடைப்புகளை சீரமைப்பதற்கு கடந்த வருடம் ஆகஸ்டு மாதம் முதல்முறையாக இயந்திரம் வாங்கப்பட்டு கும்பகோணம் நகராட்சியில் சோதனையும் செய்யப்பட்டு வெற்றியும் கண்டது. ஆனால் இந்த இயந்திரப் பயன்பாட்டை மாநிலம் முழுவதும் தமிழக அரசு விரிவுபடுத்தாத‌து ஏனோ???

இதே போல் மத்திய அரசும் தூய்மை இந்தியா என்ற கோட்பாட்டின்படி துப்புரவுத் தொழிலாளர்களுக்கு மேலை நாடுகளில் இருப்பதைப்போல் நவீன இயந்திரங்களை வாங்கிக் கொடுத்து அவர்களைக் காப்பாற்றி அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தலாம். இதை அனைத்து மாநிலங்களுக்கும் தொடரவும் வலியுறுத்தலாம்...

மனிதனைத் தவிர்த்து, இயந்திரப் பயன்பாட்டை விரிவுபடுத்துவதன் மூலமே முற்றிலும் மலக்குழி மரணங்கள் தடுக்கப்பட்டு ஒரு முடிவு ஏற்படும்.

- அப்சர் சையத்

Pin It