"மஞ்சள்" - இந்த நிறம் இந்தியாவில் பெரும்பான்மை மக்களின் புனிதமான நிறமாக கருதப்பட்டு வருகிறது. பலருக்கு மஞ்சள் என்ற நிறம் பிடித்திருக்கும். ஆனால் 120 கோடி இந்திய மக்கள் தொகையில் வெறும் 20 லட்சம் மக்களுக்கு அதாவது 1% குறைவான மக்களின் வாழ்வில் இந்த "மஞ்சள்" என்பது நரக வேதனையான நிறம். கனவில் கூட வரக்கூடாது என வேண்டிக் கொள்ளும் நிறம் இந்த மஞ்சள்.

ஆம், மனித மலம் அள்ளும் தொழில் செய்யும் இந்த மக்களின் வாழ்வில் மலத்தின் நிறமான மஞ்சள் என்பது மரண வேதனையின் நிறமாகவே உள்ளது. தான் பெற்ற பிள்ளை மலமிருந்தால் தாயானவள் கூட முகம் சுழிப்பாள்.அப்பேற்பட்ட மனித மலத்தை தன் கைகளால் அள்ளி, கூடையில் சுமந்து செல்பவர்கள் மேல் வழிந்து உடல் முழுவதும் மல நாற்றத்தோடு வாழ்க்கையைக் கழிக்கும் இம்மக்களுக்கு மலத்தின் நிறமான மஞ்சள் நரகம்தான்.

ஆணுறையைக் கூட பல வாசனைகளோடு வாங்கும் இந்த நாட்டு மக்களுக்கு, மனித மலம் அள்ளும் தொழில் செய்பவரின் மனைவி அவரோடு கூடும் போது அடிக்கும் பீ நாற்றத்தில் அடையும் வேதனை நிச்சயமாகத் தெரிய வாய்ப்பில்லை.

இதை ஏன் அம்மக்கள் செய்ய வேண்டும் எனக் கேட்கலாம்.

manual scavenging 603மலம் அள்ளும் இழிதொழிலை அந்த மக்கள் செய்ய விரும்பவில்லை என்றாலும், இந்திய சாதிய வர்ண அமைப்பானது சாதியின் பெயரால் வலுவாகத் திணித்துள்ளது. ஒருவர் தான் செய்யப் போகும் தொழிலைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை இந்த சாதி அமைப்பு கொடுப்பதில்லை. மாறாக பிறப்பவன் எந்த சாதியோ, அந்த சாதிக்கு ஒதுக்கப்பட்ட தொழிலை விருப்பமில்லை என்றாலும் செய்ய வேண்டும் என நிர்பந்திக்கிறது.

இந்தியாவில் மனித மலம் அள்ளும் பணியில் அருந்ததியர் (தமிழ்நாடு), மாதிகா (ஆந்திரா), பங்கிகள் (குஜராத்), மகர் (மகாராஷ்டிரா) என நாடு முழுவதும் அந்தந்த மாநிலங்களில் உள்ள தலித் மக்களே ஈடுபட்டு வருகின்றனர்.

இச்சாதியை சேர்ந்த மக்கள் வேறெங்கும் வேலைக்கு சேர்த்துக் கொள்ளப்பட மாட்டார்கள், சொந்தமாக தொழில் செய்தாலும் அவர்களிடம் யாரும் தொடர்பு கொள்ள மாட்டார்கள். சாதி அந்தளவு இம்மக்களின் வாழ்வில் வினையாற்றுகிறது.

உலக அரங்கில் இந்தியா பெரிதாக புடுங்குவது போல் நம் ஆட்சியாளர்கள் மார்த்தட்டிக் கொண்டும், சொந்த தயாரிப்பில் செயற்கைக்கோள் விட்டோம் என்று பெருமை பீற்றிக் கொள்ளும் அதே வேளையில் தான் மலம் அள்ளும் தொழிலாளி மலக்குழிக்குள் இறங்கி பரிதாபமாக உயிரிழக்கிறான்.

எவ்வளவோ தொழில்நுட்பங்கள் கண்டறியப்பட்ட விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சியில் மலம் அள்ளுவதற்கு தொழில்நுட்பம் கண்டறிய இந்த அரசும் ,பெரிய விஞ்ஞானப் புடுங்கிகளும் நினைத்துக்கூட பார்ப்பதில்லை.

இதற்கெல்லாம் தீர்வாக இன்றைய நாளிலிருந்து உயர்சாதிக்காரர்கள் என்னும் 3 சதவீதத்தினரை மலம் அள்ளும் தொழில் செய்ய வேண்டும் என்று சட்டம் கொண்டு வந்தால்?

நாடே ஸ்தம்பிக்கும், இந்த இருபத்தொன்றாம் நூற்றாண்டிலும் மனித மலத்தை மனிதனையே அள்ளச் சொல்வது மனித உரிமை மீறல் என்று ஊரே கொந்தளிக்கும். இன்னும் ஒரு படி மேலே போய் மலம் அள்ள பல நவீன தொழில்நுட்பங்களை அடுத்த நாளே கண்டறிந்துவிடுவார்கள்.

இந்த அவலத்தை மாற்ற வாய்ப்பிருந்தும் முடியாமல் இருப்பதற்குக் காரணம் இந்தப் பொது சமூகம்தான். பெசவாட விசயன் போன்ற செயற்பாட்டளர்களின் தீவிரப் போராட்டத்தின் விளைவாக 1993 ஆம் ஆண்டு கையால் மலம் அள்ளும் செயலை தடைசெய்து மத்திய அரசு சட்டமியற்றியது. ஆனால் அச்சட்டம் நடைமுறைப்படுத்த அரசே முயற்சி செய்யவில்லை. இதற்கு இந்திய ரயில்வேயே உதாரணம்.

இந்திய ரயில்வேயில் துப்புரவுப் பணிக்கு இந்த தலித் சாதியைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் 100% இட ஒதுக்கீடு அளிக்கிறது. இது மிகப்பெரிய சமூக நீதி மீறல், மனித உரிமை மீறல்.

நம் பிரதமரோ "வால்மீகி சாதியினர்" மிகவும் விருப்பப்பட்டு இத்தொழிலை கடவுளின் மன திருப்திக்காக செய்கிறார்கள் என்று கூறுகிறார்.இது மிகவும் மோசமாக அம்மக்களை இழிவுபடுத்தும் செயலாகும்.

பள்ளி கழிப்பறையை சுத்தம் செய்ய அருந்ததியின மாணவர்களையே ஏவும் தலைமையாசிரியை இருக்கும் இந்த நாடு உருப்படவா போகிறது?

ஆட்சியாளர்கள்தான் இப்படியென்றால் மலம் அள்ளும் தொழிலாளர் பிரச்சினையில் நாமும் பெரும் குற்றவாளிகள்தான். ஜல்லிக்கட்டு, கதிராமங்கலம் என மட்டும்தான் பேச நமக்கு நேரம் இருக்கும்; தலித் மக்களின் பிரச்சினையைப் பேச நேரம் இருக்காது, மனமும் இருக்காது.

நாட்டையே சுத்தமாக வைத்தும் மனிதக் கண்களுக்கு புலப்படாத ஏலியன்களாக உள்ள துப்புரவுத் தொழிலாளர்களின் அவலத்தை நாம் உணரும்போதே அம்மக்களுக்கு விடிவு ஏற்படும்.

- திராவிடன் தமிழ்

Pin It