கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

தமிழ்நாட்டை பொறுத்தவரை துப்புரவுப் பணிகளில் பெருவாரியான பணியாளர்கள் ஈடுபடுகிறார்கள். அவர்கள் அனைவரும் நிரந்தரத் தொழிலாளர்கள் அல்ல. மாறாக ஒப்பந்தம் மற்றும் தினக்கூலி உள்ளிட்ட அடிப்படையில் பணியமர்த்தப்பட்டிருக்கிறார்கள். துப்புரவுப் பணியை மேற்கொள்ளும் எந்தவொரு பணியாளரும் அவர் மேற்கொள்கின்ற பணிச்சூழலால் எதிர்பாராத மரணத்தை தழுவ வேண்டிய அவலம் நேர்ந்து விடுகின்றன. இத்தகைய சூழல் திட்டமிட்டு செய்யப்படா விட்டாலும் மனிதர்களை கொண்டு ஆபத்தை விளைவிக்கும் வகையில் இருக்கக்கூடிய துப்புரவுப் பணிகளை செய்யக்கூடாது என சட்டம் கொண்டு வரப் பட்டாலும் அரசுத் துறையே அதை மீறி மனிதர்களை பாதாள சாக்கடை உள்ளிட்டவற்றில் அடைப்புகளை எடுக்கும் பணிகளுக்காக பயன்படுத்தி வருவதை நாம் பரவாலப் பார்க்க நேர்கிறது. அதேநேரத்தில் துப்புரவுப் பணியாளர்களுக்கு இழைக்கப்படும் அநீதியான நிகழ்வுகளும் நடந்த வண்ணம் இருக்கின்றன. இருப்பினும் லட்சத்தில் ஒன்று என்பதை போல சில நம்பிக்கையளிக்கும் நிகழ்வுகள் நடக்கின்றன. அவை பலநேரங்களில் வெறுமனே கண்துடைப்பாக மாறிவிடக் கூடாது என்ற ஆதங்கமும் நிறையவே இருக்கிறது. அதுகுறித்து இக்கட்டுரையில் பார்ப்போம்.

பாதாள சாக்கடை மரணமும் நிவாரணமும்

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட, ஜெ.பி. எஸ்டேட்- சரஸ்வதி நகர் பகுதியில் கடந்த ஆகஸ்டு 11-ம் தேதி பாதாளச் சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பு அகற்றும் பணியில், ஒப்பந்த ஊழியரான கோபி ஈடுபட்டிருந்திருக்கிறார். அப்போது, அவர் திடீரென மயங்கி பாதாளச் சாக்கடைக்குள் விழுந்ததில் விஷ வாயு தாக்கி உயிரிழந்தார்.manual scavenging 497இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த ஆவடி போலீஸார், ஒப்பந்த நிறுவன மேலாளர் ரவி, மேற்பார்வையாளர் ஆனந்த்பாபு ஆகிய இருவரை கைது செய்தனர். தொடர்ந்து, ஒப்பந்த நிறுவனம் தரப்பிலான நிவாரணம், வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான அரசின் நிவாரணம், தூய்மை பணியாளர் நல வாரியம் சார்பிலான நிவாரணம் என, ரூ.41 லட்சம் கோபியின் மனைவியான தீபாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் தீபாவுக்கு இளநிலை உதவியாளர் பணியையும் அரசுத் தரப்பில் வழங்கப்பட்டுள்ளது.

ஒரு துப்புரவுத் தொழிலாளர் பாதாள சாக்கடை அடைப்பு எடுக்கப் போய் உயிரிழந்த விவகாரத்தில் எனக்குத் தெரிந்து உடனடியாக நிவாரணம் வழங்கப்பட்டதும், அதுவும் இவ்வளவு பெரிய தொகை கொடுக்கப்பட்டதும் இதுதான் முதல் முறையாக இருக்கும் என்று நினைக்கிறேன். அதோடு உயிரிழந்த தொழிலாளியின் மனைவிக்கு இளநிலை உதவியாளர் பணியும் வழங்கப்பட்டிருப்பதும் ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது. வழக்கமாக துப்புரவுப் பணியாளர் ஒருவர் இறந்து விட்டால் அவரின் வாரிதார்களுக்கும் அதேபோன்றதொரு பணியினைத்தான் வழங்க முன்வருவார்கள். ஆனால் இங்கு முற்றிலும் மாறுபட்டதாக நிகழ்ந்திருக்கிறது என்பதே அந்த ஆச்சர்யத்திற்கான காரணம். இதெல்லாம் எப்படி சாத்தியமானது?

தேசிய தூய்மை பணியாளர் ஆணைய தலைவர் வெங்கடேசன் ஆவடியில் விஷ வாயு தாக்கி, கோபி உயிரிழந்த பாதாளச் சாக்கடை பகுதியை நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்திருக்கிறார். தொடர்ந்து, அவர் கோபியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியதைத் தொடர்ந்து, அவர், தனியார் ஒப்பந்த நிறுவனம், தூய்மைப் பணியாளர்களுக்கு மருத்துவக் காப்பீடு மற்றும் சீருடை, ஷு உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும். மருத்துவ முகாம் நடத்த வேண்டும் என அறிவுறுத்தியிருக்கிறார். (தி இந்து தமிழ் திசை நாளிதழ் ஆக- 23)

தொடர்ச்சியான ஆய்வுகள் தேவை

பாதாள சாக்கடை அடைப்புகளை எடுக்க மனிதர்களை பயன்படுத்தக் கூடாது என்று கையால் மலம் அள்ளும் தொலுக்குத் தடை மற்றும் மறுவாழ்வுக்கான சட்டம் – 2013, சொல்லியிருந்தாலும் இன்னும் பெரும்பாலான இடங்களில் இயந்திரங்களை கொள்முதல் செய்யாததால் அங்கு பணியிலுள்ள துப்புரவுப் பணியாளர்களை கொண்டு பாதாள சாக்கடை அடைப்புகளை எடுப்பதும், அதனால் அப்பணியில் ஈடுபடுத்தப்படும் தொழிலாளர்கள் மரணமடைவதும் பரவலாக நடந்து வரக்கூடிய செய்தி. அதுபோன்ற கோர நிகழ்வுகள் நடைபெறும் போதெல்லாம், பாதிக்கப்பட்ட தொழிலாளரின் குடும்பத்தினருக்கு உரிய நிதியுதவியைப் பெற பலகட்ட போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய சூழல்தான் இன்றும் இருக்கிறது. ஆனால் தற்போது ஆவடி மாநகராட்சியில் பணிபுரிந்த கோபி என்ற துப்புரவுப் பணியாளர் பாதாள சாக்கடை அடைப்பு எடுக்கப் போய், மரணமடைந்த அவரின் குடும்பத்திற்கு இழப்பீடு உரிய முறையில் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இதற்கு முன்னர் பல்வேறு இடங்களில் நடந்த பாதாள சாக்கடை உள்ளிட்ட பணிகளின் போது மரணமடைந்த துப்புரவுப் பணியாளர்கள் பலருக்கும் உரிய நிவாரணம் கிடைக்காமல் காலம் தாழ்த்தும் நிகழ்வுகளே நடந்திருக்கின்றன. அவர்களுக்கு எல்லாம் உரிய முறையில் இதுபோன்ற நிவாரண உதவிகளும், அவர்களின் குடும்பத்தினருக்குரிய வாரிசு அடிப்படையிலான மாற்று வேலைகளும் கொடுக்கப்பட்டுள்ளனவா? என்பதை தேசிய தூய்மைப் பணியாளர் ஆணையத்தின் சார்பில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற பாதிப்புகளுக்கு உள்ளான குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு கிடைக்க உத்தரவாதப்படுத்த முடியும். அதோடு அந்தக் குடும்பத்தினருக்குரிய மாற்று வேலை அளிக்கும் பட்சத்தில் அவர்கள் பொருளாதாரத்தில் ஓரளவு தங்களை தேற்றிக் கொள்ளவும் வழிவகுப்பதாகவும் அமையும்.

அதுமட்டுமில்லாமல் பாதாள சாக்கடை உள்ளிட்ட பணிகளில் மனிதர்களை பணியில் அமர்த்தவோ அல்லது அதுபோன்ற ஆபத்தான பணிகளில் மனிதர்களை ஈடுபடுத்தவோ கூடாது என்பதையும் மீறி பணி செய்ய வற்புறுத்தும் போது அத்தகைய நபர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போதுதான் இதுபோன்ற கோரச் சம்பவங்களை தவிர்க்க முடியும். இதுகுறித்து ஆய்வு வேலைகளை தொடர்ச்சியாக தேசிய தூய்மைப் பணியாளர் ஆணையம் மேற்கொள்ளும் போது இனி எக்காரணம் கொண்டும், பாதாள சாக்கடைக்குள் சக மனிதர்கள் மாண்டு போகும் அவலம் நேராமல் இருக்கும்.

மறுவாழ்வு கோரி வழக்கு

மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் சகாய பிலோமின் ராஜ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், ”மனித கழிவுகளை மனிதர்களே அகற்றுவதற்குத் தடை விதித்தும், அவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பது குறித்தும் கடந்த 2013-ஆம் ஆண்டில் சட்டம் இயற்றப்பட்டது. இந்தச் சட்டத்தின்படி மேற்கண்ட தொழிலாளர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கி, மறுவாழ்வு அளிக்க குழு அமைக்கும் படியும் உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவு தற்போது வரை நிறைவேற்றப்படவில்லை.

இதையடுத்து 2015-ஆம் ஆண்டு மதுரை சட்ட விழிப்புணர்வு ஒருங்கிணைப்பு குழு என்ற குழுவை உருவாக்கி மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் உள்ள துப்புரவுப் பணியாளர்களிடம் இந்தச் சிறப்பு சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினோம். அதன்படி மதுரை, விருதுநகர் மாவட்டங்களை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டவர்கள் தங்களுக்கு அடையாள அட்டை கேட்டு விண்ணப்பித்துள்ளனர். இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதற்கிடையே பாதாள சாக்கடை கழிவுகளை அகற்றும்போது பல தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி இறப்பது தொடர் கதையாகி வருகிறது. எனவே அவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பது அவசியம். அந்த வகையில் மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் மனித கழிவுகளை அகற்றும் தொழிலாளர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கி மறுவாழ்வு அளிக்க உத்தரவிட வேண்டும்” இவ்வாறு கூறியிருந்தார்.

இந்த வழக்கை நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி ஆகியோர் நேற்று விசாரித்தனர். அப்போது நீதிபதிகள், இந்த வழக்குத் தொடர்பாக, எடுத்த நடவடிக்கைகள் குறித்து மதுரை மாநகராட்சி ஆணையர், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டு, விசாரணையை 4 வாரத்துக்கு ஒத்தி வைத்தனர். (தினத்தந்தி ஆக- 17)

செய்யப்பட வேண்டியது என்ன?

கையால் மலம் அள்ளும் தொழிலுக்குத் தடை மற்றும் மறுவாழ்வு சட்டத்தின் படி அத்தகைய தொழிலில் மனிதர்கள் யாரையும் ஈடுபடுத்தக்கூடாது என்பது உறுதிபட சொல்லப்பட்டுள்ளது. அதேநேரத்தில் துப்புரவுப் பணியை மேற்கொள்ளக் கூடிய எந்தவொரு பணியாளரும் அவர்கள் பணியை மேற்கொள்ளும் போது அவற்றில் வெறுமனே குப்பைகள் மட்டுமே இருப்பதில்லை. அவற்றில் எல்லாவிதமான கழிவுகளும்தான் கிடக்கின்றன. ஆகையால் ஒருவகையில் அனைத்து துப்புரவுப் பணியாளர்களும், கையால் மலம் அள்ளும் தொழிலாளர்கள்தான். அப்படித்தான் வகைப்படுத்தப்பட வேண்டும். ஆனால் கையால் மலம் அள்ளும் தொழிலாளர்கள் எனும் போது பலரும் என்ன புரிந்து கொள்கிறோம்? தொழிலாளர்கள் தங்களின் கைகளால் மலத்தை வாரி எடுத்துக் கொண்டுப்போய் முன்னர் நகரங்களில் பணிசெய்தது போன்று, இப்போதும் செய்தால்தான் அந்த வகைப் பட்டியலில் சேர்க்க முடியும் என்று நினைக்கின்றனர்.

முன்னர் இருந்தது போன்று இப்போது உலர் கழிப்பறைகள் இல்லை. பெரும்பாலும் ஒழிக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் இன்னும் வடமாநிலங்களில் சில பகுதிகளில் இருப்பதாகவும் செய்திகள் சொல்கின்றன. இருப்பினும் பேருந்து நிலையங்களில், முறையாக பராமரிக்கப்படாத கழிவறைகள் பலவும் இருக்கின்றன. அவைகள் பயன்பாட்டுக்குரியதாக இல்லை என்று பலரும் பேருந்து நிலையங்களை சுற்றியுள்ள பகுதிகளில் சிறுநீர் மற்றும் மலம் கழிக்கும் போக்கும் தொடரத்தான் செய்கின்றன. அல்லது அத்தகைய கழிப்பறைகளில் போதிய தண்ணீர் வசதியுடன் பராமரிக்கப்படாததால் அவற்றில் மலம் கழித்துவிட்டுப் போய்விடும் போது அவற்றை சுத்தம் செய்யும் பணியாளர்களை எந்த வகைப்பாட்டில் அடக்குவது?

ஆக இப்படியாக ஏதேனும் ஒருவகையில் துப்புரவுப் பணியாளர்கள் மலத்தை சுத்தம் செய்ய வேண்டிய அவலத்திற்கு ஆளாகிறார்கள். அவைகளை சுத்தம் செய்யாமல் விட்டுவிட்டு, ஆய்வாளர் அல்லது கண்காணிப்பாளர்கள் ஆகியோரின் பார்வையிலிருந்து ஒரு துப்புரவுப் பணியாளர் தப்பித்துவிட முடியுமா? அதனால் துப்புரவுப் பணியாளராகப் பணியாற்றும் அனைவரையும் கையால் மலம் அள்ளும் தொழிலாளர்கள் என்ற வகைப்பாட்டில்தான் பார்க்க வேண்டும். அப்படியிருக்கும் போது அவர்கள் தாங்கள் இந்த இழிதொழிலை விட்டு வெளியேற நினைத்தால் அவர்களின் மறுவாழ்வுக்குரிய அனைத்து ஏற்பாடுகளையும் உரிய அரசாங்கம் செய்து கொடுக்க வேண்டுமென சட்டம் சொல்கிறது.

ஆனால் சட்டத்தை செயல்படுத்த வேண்டிய அரசாங்கம் படிப்படியாக இத்தகைய இழிதொழிலிலிருந்து துப்புரவுத் தொழிலாளர்களை வெளியேற்றுவதற்குப் பதிலாக அப்படியே தக்க வைத்துக் கொள்ள வேண்டுமென நினைக்கிறது போலும். துப்புரவுப் பணியாளர்களுக்கு உரிய வழிகாட்டுதல்கள் கிடைக்கப் பெற்று, அதன் வழியாக அவர்கள் மறுவாழ்வுக்கு உரிய முறையில் விண்ணப்பம் செய்தும், அதைப் பரிசீலனை செய்து அவர்களுக்கான மாற்றுத் தொழிலுக்குரிய ஏற்பாடுகளை செய்து கொடுக்காமல் காலம் கடத்தியும், துப்புரவுப் பணியாளர்களின் கோரிக்கையை கிடப்பில் போட்டு வைத்துள்ளனர் என்பதைதான் சட்ட விழிப்புணர்வு குழுவினர் நீதிமன்றம் வாயிலாக அதைக் கவனப்படுத்தியுள்ளனர். இனிமேலாவது துப்புரவுப் பணியாளர்கள் அவர்களாக விருப்பத்தின் பெயிரில் மறுவாழ்வுக்கென விண்ணப்பித்தவர்களுக்கு உரிய ஏற்பாட்டினை செய்து அவர்களுக்குரிய மாற்றுத் தொழிலுக்கான நிதியுதவியை அரசு அளித்து அவர்களை கண்ணியமாக நடத்திட முன்வர வேண்டும்.

நம்பிக்கையளிக்கும் முன்னெடுப்பு

மனிதக் கழிவுகளை மனிதனே அகற்ற சட்டம் இயற்றப்பட்ட பிறகு, உச்சநீதிமன்றமும் இதற்காக கடுமையான தடையை விதித்துள்ளது. இதனால் இத்தொழிலில் ஈடுபட்டுவந்த தூய்மைப் பணியாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில், அவர்களை தொழில் முனைவோர்களாக மாற்ற தமிழ்நாடு அரசு புதுவிதமானதொரு நடவடிக்கையை முன்னெடுத்திருக்கிறது.

அதன்படி, தொழில் முனைவோர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட தூய்மைப் பணியாளர்களுக்கு கழிவுநீர் குழாய்களை இயந்திரங்கள் மூலம் பராமரிக்கும் பயிற்சி வழங்கும் முகரம் கீழ்ப்பாக்கத்தில் உள்ள சென்னை குடிநீர் வாரிய பயிற்சி மையத்தில் ஜுலை 08 ஆம் தேதி நடைபெற்றிருக்கிறது.

சென்னை குடிநீர் வாரிய மேலாண் இயக்குநர் டி.ஜி. வினய், முகாமை தொடங்கி வைத்து அவர் பேசியதாவது, ”தூய்மைப் பணியாளர்களை தொழில் முனைவோர்களாக மாற்றும் உன்னதமான முயற்சிக்கான வழிகாட்டுதலில், தலித் இந்திய வர்த்தக மற்றும் தொழிற்சங்கத்துடன், முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த ஆண்டு செய்யப்பட்டிருக்கிறது.

அதன்படி, இறந்த தூய்மைப் பணியாளர்களின் வாரிசுதாரர்கள், தூய்மைப் பணியாளர்களின் சமூக பொருளாதார நிலையை மேம்படுத்தும் வகையில் தகுதியான 213 பேரை கண்டறிந்து அவர்களை தொழில் முனைவோர்களாக மாற்றுவதற்குத் தேவையான தொழில்நுட்ப உதவிகள் வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு நவீன கழிவுநீர் அகற்றும் ஊர்திக்கான கடன் உவிக்கான ஆணைகளை முதல்வர் ஸ்டாலின் அண்மையில் வழங்கினார்.

 இவர்களை சென்னை குடிநீர் வாரிய கழிவுநீரகற்று பணிகளில் ஈடுபடுத்த ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு, 7 ஆண்டுகளுக்கு கழிவுநீர் அகற்றும் பணிகளை மேற்கொள்வதற்காக 524 கோடி இறுதி செய்யப்பட்டுள்ளது. 2 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட வாகனம் வைத்திருப்போர். ஒரு மீட்டர் நீள கழிவுநீர் குழாயை பராமரிக்க 17.60, ஆறாயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட வாகனம் வைத்திருப்போர் ஒரு மீட்டர் நீளத்துக்கு பணியாற்ற ரூ.20.70 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தூய்மைப் பணியாளர் தாங்கள் மேற்கொள்ளும் பணிகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும். தூய்மைப் பணியாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதோடு, பாதுகாப்பாக பணிகளை மேற்கொள்வதற்கும் இத்திட்டம் உறுதுணையாக இருக்கும் என இவ்வாறு முதல்வர் கூறியிருக்கிறார். (தி இந்து தமிழ் திசை, ஜுலை – 09, சென்னை)

மாற்றுத் தொழில் என்பதில் அரசின் பார்வை

தற்போது தமிழ்நாடு அரசு முன்னெடுத்துள்ள இந்த வழிமுறையை சென்னை பெருநகரத்தில் மட்டுமில்லாது, தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களை சார்ந்த மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேருராட்சி உள்ளிட்ட நிர்வாகங்களில் இதுபோன்றதொரு நடைமுறையை பின்பற்றி, பாதிக்கப்பட்ட துப்புரவுப் பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு மாற்றுத் தொழிலுக்கான வாய்ப்பினை உருவாக்கிக் கொடுக்க வேண்டும். அப்போதுதான் துப்புரவுப் பணியாளரின் குடும்பத்தினர் மாற்றுத் தொழிலுக்குள் போய் இத்தொழிலை விட்டு வெளியேற முடியும். இல்லையென்றால் துப்புரவுத் தொழிலாளியின் வாரிசுதார்களும் அதே பணியினை தொடர வழிவகுத்துவிடும்.

துப்புரவுப் பணியாளர்களின் வாரிசுதார்களுக்கு நிதியுதவி அளித்து அவர்களை நேரடியாக துப்புரவுப் பணியில் ஈடுபட விடாமல் மாற்றுத் தொழிலுக்குக் கொண்டு செல்கிறோம் என்று அரசு சொல்வது சரிதான் என்றாலும், மீண்டும் அதே துறைக்குள் இயங்குவதற்கான சூழலையை மாற்றுத் தொழில் அல்லது தொழில் தொடங்குவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கிறோம் என்ற பெயரில் உருவாக்கியிருக்கிறது. ஒருவேளை துப்புரவுத் தொழிலாளர்களின் வாரிசுகள் என்பதால் கழிவுநீர் அகற்றும் பணியை தாண்டி வேறு வேலைகளுக்குள் ஈடுபடுத்த யோசிக்க முடியவில்லை போலும். ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரிகளின் சிந்தனை எத்தனை சீர்கொட்டு கிடக்கிறது என்பதற்கு இது பொருத்தமாக இருக்கிறது எனலாம்.

இருப்பினும் நேரடியாக துப்புரவுப் பணியை தாண்டி தொழில் முனைவோர்கள் என்ற அடிப்படையில் கொஞ்சம் யோசித்திருக்கிறார்கள். அதேநேரத்தில் உரிய பயிற்சிகள் அளித்தும், நிதியுதவி வழங்கியும் கழிவு நீர் அகற்றும் பணியை வாகனத்தின் வழியாக செய்யும் இந்த ஒப்பந்தமானது எத்தனை வருடங்கள் போடப்பட்டுள்ளன என்பது உள்பட சரிவரத் தெரியவில்லை. இதற்கான ஒப்பந்தங்கள் குறைந்தபட்சம் தொழில் முனைவோர்களாக உருவாக்கும் இந்த அரிய முயற்சியில், அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட கடன் நிலுவையை திரும்பச் செலுத்தும் காலம் வரையிலும் எக்காரணம் கொண்டும் மற்றவர்களுக்கு ஒப்பந்தத்தை மாற்றித் தரக்கூடாது என்பது உள்ளிட்ட புரிதலுடன் ஒப்பந்தம் செய்து கொள்வதும் சாலச் சிறந்தது. இல்லையென்றால் தொழில் முனைவோராக்கும் முயற்சியும் பலன் அளிக்காமல் போய்விடும் அபாயமும் இருக்கிறது. இதையும் அரசுத் தரப்பில் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

வெறுமனே மாற்றுத் தொழில் என்ற அடிப்படையில் அவர்கள் தொழில் தொடங்க நிதியுதவி அளிப்பது மட்டுமில்லாது, தொழில் தொடங்கி அதை செயல்படுத்திட வாய்ப்பற்றவர்களுக்கு குறிப்பாக பெண்களை தமிழ்நாடு அரசின் பிற துறைகளில் கன்னியமான பணியில் அமர்த்தப்படும் போது, துப்புரவுப் பணியாளரின் வாரிசுதார்கள் அடுத்தடுத்த தலைமுறைகள் அத்தொழிலிலிருந்து மாற்றுத் தொழில் நோக்கி நகர்வதற்கும், அவர்களின் மீது இச்சமூகம் சுமத்தியிருக்கிற அசிங்கமான பார்வையையும், அவலத்தையும் துடைத்தெறிய முடியும்!

மு.தமிழ்ச்செல்வன்