மனித மலத்தை மனிதன் சுமக்கும் இழிவுக்கு முற்றுப்புள்ளி வைக்க முன்வர வேண்டும் என்று, ஆதித் தமிழர் பேரவை நிறுவனர் அதியமான, திருப்பூர் விழாவில் அறைகூவல் விடுத்தார். தந்தை பெரியார் திராவிடர் கழகம் இந்தப் போராட்டத்தில் பங்கேற்கும் என கழகத் தலைவர் கொளத்தூர் மேடையிலே அறிவித்தார்.
தமிழர் எழுச்சி விழா. ஆம் இந்துத்துவாவிற்கு சாவு மணி அடிக்கின்ற விழா. இந்த விழா நடக்கின்ற இடம் திருப்பூர். திருப்பூர் என்று சொன்னாலே வணிக ரீதியாக டாலரைக் குவிக்கின்ற இடம். இன்றைக்கு இந்தியாவிலே ஆர்.எஸ். எஸ் சின் தலைநகரம் நாக்பூர் என்று சொன்னால், தென்னிந்தியாவிலே ஆர்.எஸ்.எஸ்.சின் தலைமையகமாக திருப்பூரை மாற்றிவிட முயலும் என்று சில இந்துத்துவாவாதிகள் தவறான கணக்குப் போட்டு கடந்த காலங்களை தங்களின் செயல்கள் மூலம் செய்து காட்டி வந்திருக்கிறார்கள். ஆனால், நேற்றைக்கு இங்கே நடந்த மூடநம்பிக்கை ஒழிப்பு பேரணியிலே கலந்து கொண்ட அந்த கருஞ்சட்டைப் பேரணி இந்த இந்துத்துவாவாதிகளை இந்த திருப்பூரை விட்டு அடித்து துரத்துகிற பணியை செய்திருக்கிறது. தந்தை பெரியாருக்குப் பிறகு இன்றைக்கு அவருடைய தத்துவங்களை எடுத்து இந்த மக்களிடையே கொண்டு செல்லுகிற அருமையான பணியை ‘தந்தை பெரியார் திராவிடர் கழகம்’ மரியாதைக்குரிய அண்ணன் கொளத்தூர் மணி தலைமையில் நடத்திக் கொண்டிருக்கிறது.
நேற்றைக்கு நான் பத்திரிகையிலே ஒரு விளம்பரத்தைப் பார்த்தேன். தந்தை பெரியாரின் நூல்கள் எல்லாம் வெளிவரவில்லை என்று சொல்லி சில கோயபல்ஸ்கள் வருத்தப்படுகிறார்கள். அவர்கள் புரட்டை உடைக்கின்ற வகையிலே, தந்தை பெரியாருடைய கலெக்சன்ஸ் பெரியார் ஈ.வெ.ரா. என்று ஆங்கிலத்திலும், பிரஞ்சிலும், வெளி வருகிறது என்கிற விளம்பரத்தைப் பார்த்தேன்.
தோழர்களே, உண்மையிலே நான் வருத்தப்படுகிறேன். இந்த விளம்பரம் பெரியார் திடலிலே இருந்து வந்திருக்கிறது. ஆதித் தமிழர் பேரவை பல இடங்களிலே ஒரு கருத்தை மிகக் கூர்மையாக வைத்துக் கொண்டிருக்கிறது. புரட்சியாளர் அம்பேத்கர் 1956லே இறக்கிறார். ஆனால் அவருடைய ஒட்டுமொத்த நூல்கள் அத்தனையும் ஏறத்தாழ 35 ஆண்டுகள் வெளிவராமல் தடுக்கப்பட்டு நீதிமன்ற வளாகத்திலே சீல் இடப்பட்டு அடைக்கப்பட்டு இந்த மக்களினுடைய கைகளுக்கு கிடைக்காமல் 90களின் மத்தியிலே தான் அந்த நூல்கள் எல்லாம் வெளிவர ஆரம்பித்தன. அதற்குப் பிறகு மராட்டிய மாநிலத்திலே இருந்த மரியாதைக்குரிய முதலமைச்சர் சரத்பவர் ஒரு குழுவை அமைத்து அம்பேத்கருடைய பேச்சையும், எழுத்துக்களையும் இன்றைக்கு ஆங்கிலத்திலும், தமிழிலேயும் மற்ற இந்திய மொழிகளிலே மொழி பெயர்த்து வெளிவர ஏற்பாடு செய்து உலகமெங்கும் புரட்சியாளர் அம்பேத்கருடைய கருத்துகள் எல்லா இடங்களிலும் பரவியிருக்கிறது. அந்த நிலை தந்தை பெரியாருக்கு வந்திருக்கிறதா?
2003 நவம்பரில் குடிஅரசு 1925 என்ற நூலை ‘தந்தை பெரியார் திராவிடர் கழகம்’ வெளியிட்டு, 1926 குடிஅரசை இப்போது வெளியிடுகிறது. இப்படியே வெளியிட்டுக் கொண்டு போனால், எத்தனை ஆண்டுகள் வெளியிடுவது? தந்தை பெரியாரின் பெயரைச் சொல்லி இந்த நாட்டிலே நாம் ஒரு 40 ஆண்டு காலமாக இந்த அரசை ஆட்சி செய்திருக்கிறோம். அந்த அரசுகளெல்லாம் ஏன் தந்தை பெரியாரின் அனைத்து எழுத்தையும், பேச்சுக்களையும் அரசுடைமையாக்கவில்லை என்கிற கேள்வியை ஆதித் தமிழர் பேரவை தொடர்ந்து முன் வைத்துக் கொண்டிருக்கிறது.
நம்முடைய சக்திக்கேற்றவாறு இன்றைக்கு குடிஅரசு 1925, குடிஅரசு 1926 என்று வெளியிட்டுக் கொண்டிருக்கிறோம். ஆனால், உலகத் தலைவர்களிலேயே மிக அதிகமாக எழுதியவரும், பேசியவரும் தந்தை பெரியாரைத் தவிர, உலகிலே வேறு யாரும் கிடையாது. 365 நாட்கள் என்று சொன்னால் குடிஅரசிலே 365 நாட்களும் ‘எடிட்டோரியல்’ ஆசிரியருடைய உரை வருகிறது. விடுதலையிலும் வந்து கொண்டேயிருக்கிறது. இதையெல்லாம் எந்தக் காலத்திலே தொகுத்து, எந்தக் காலத்திலே நம்முடைய இளைஞர் கைகளிலே வழங்கப் போகிறோம்? 21 ஆம் நூற்றாண்டிலே இண்டர்நெட் யுகத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிற நாம் இன்னும் அவர்களின் முழுமையான எழுத்தையும் பேச்சையும் மக்களிடத்திலே கொண்டு செல்லவில்லை என்று சொன்னால் இது எப்பொழுது சாத்தியம். இதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
இந்த மேற்கு மாவட்டங்களிலே உங்களுக்கு எல்லாம் தெரியும். இங்கே இடுவாய் என்கிற ஊராட்சிக்கு மன்றத் தலைவராக இருந்தவர் மரியாதைக்குரிய இரத்தினசாமி மிக மோசமான நிலையிலே வெட்டிக் கொல்லப்பட்டார். 35 இடங்களிலே வெட்டுக் காயங்கள். 2 ஆண்டுகள் வரை அவரை யார் வெட்டிக் கொன்றது என்று கண்டுபிடிக்க முடியவில்லை, இந்த அரசாங்கத்தால்! (கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டுவிட்டனர்) அவர் இருந்த பொழுது அவரை தலைகீழாக கட்டி தொங்கவிட்டு தலைக்கு கீழே ஒரு துண்டுசீட்டு எழுதிப் போட்டிருந்தனர்.
அதில் என்ன எழுதப்பட்டிருந்தது? இரத்தினசாமி அவர்களே இனிமேல் நீங்கள் தாழ்த்தப்பட்ட அருந்ததியர்களுக்கு உதவி செய்வதை நிறுத்துங்கள். ரத்தினசாமி எந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்? கொங்கு வேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர். நீ தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உதவி செய்வதை உடனடியாக நிறுத்த வேண்டும். அதுதான் முதல் நிபந்தனையே அவருக்கு. அப்படியென்றால் இங்கே இந்துத்துவா சக்திகள் எப்படி வேலை செய்கின்றன.
தந்தை பெரியார் அவர்கள் ஏதோ பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு தலைவர் என்று இன்றைக்கு சிலர் பேசிக் கொண்டு திரிகிறார்கள். ஆனால், தந்தை பெரியார் பொதுப்பணி ஆற்ற வந்த பொழுது இந்த சமுதாயம் எந்த நிலையில் இருந்தது. தாழ்த்தப்பட்ட மக்கள், சாலையிலே செருப்பு போட்டு நடக்க முடியாது. கோயில்களிலே உள்ளே நுழைய முடியாது. பொதுக் கிணற்றிலே தண்ணீர் எடுக்க முடியாது. இன்றைக்கும் சில இடங்களிலே இருக்கிறது, அது வேறு விசயம். தோள் மேல் துண்டு போடக் கூடாது.
ரவிக்கை போடக்கூடாது. தங்க நகைகள் அணியக் கூடாது. இன்னும் எத்தனையோ கட்டளைகள் போட்டிருந்தனர், ஆதிக்க சாதியைச் சார்ந்தவர்கள். ஆனால் தந்தை பெரியார் 60ஆண்டுகள் உழைப்பிற்குப் பிறகு தமிழ்நாட்டிலே அந்த நிலை நூற்றுக்கு தொண்ணூறு சதவீதம் மாறியிருக்கிறது. நன்றியுள்ள எந்த தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவனும் பெரியாரை மறக்க மாட்டான். பெரியார் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு என்ன செய்தார் என்று நாக்கிலே நரம்பில்லாமல் பேசுகிறீர்களே இந்த மாற்றம் எப்படி வந்தது?
உங்களுக்கு எல்லாம் தெரியும் ‘பகுசன் சமாஜ் பார்ட்டி’ கன்சிராம் அவர்கள் தங்களுடைய கட்சிக்கு சின்னத்தையும் கொடிக்கு வரை படத்தையும் இதே கோவையில் நடைபெற்ற திராவிடர் கழகம் மாநாட்டிலே இங்கு இருந்து தான் கொண்டு சென்றார்கள். தந்தை பெரியாரை வடநாட்டிலே அறிமுகப்படுத்தியதிலே முக்கிய பங்கு வகித்தவர் கன்சிராம். ஆனால் தந்தை பெரியாரின் பணி அங்கு இல்லாத காரணத்தால் அங்கே என்ன நிலை?
தமிழ்நாட்டிலே மாற்றங்கள் வந்திருப்பதை மறுக்க முடியாது; ஆனால் எந்த அளவுக்கு வந்திருக்கிறது? தமிழ்நாட்டிலே இருக்கிற அத்தனை மாவட்டங்களுக்கும் தலைவர்களின் பெயர் சூட்டப்பட்டது. இங்கே இருக்கிற ஈரோடு மாவட்டத்திற்கு பெரியார் மாவட்டம் என்று பெயர் சூட்டப்பட்டது. இன்னும் பல்வேறு மாவட்டங்களுக்கு தலைவர்கள் பெயர் சூட்டப்பட்டன. அதேபோல் போக்குவரத்துக் கழகங்களுக்கும் பெயர்கள் சூட்டப்பட்டன. எல்லாம் ஏற்றுக் கொண்டார்கள். ஆனால் ஒரு பகுதியிலே போக்குவரத்து கழகத்திற்கு சுந்தரலிங்கம் பெயர் சூட்டப்பட்டதற்கு எதிர்ப்பு வந்தது.
ஒரு தாழ்த்தப்பட்ட தலைவரின் பெயர் சூட்டப்பட்ட பேருந்தில் ஏற மாட்டோம் என்று ஆதிக்க சாதிகள் முரண்டு பிடித்தார்கள். என்ன நடந்தது, ஆதிக்க சாதியின் அந்த மிரட்டலுக்கு பயந்து இனிமேல் தலைவர்களுடைய பெயரே வேண்டாம் என்று அண்ணா, பெரியார் அத்தனை பெயர்களும் அந்த ஒரே காரணத்திற்காக தூக்கி எறியப்பட்டது. இப்படிப்பட்ட நிலை இன்னும்சில இடங்களிலே தொடர்ந்து கொண்டிருக்கிறது. தோழர்களே நான் அதிக நேரம் இங்கே பேச விரும்பவில்லை. ஒரே ஒரு கருத்தை மட்டும் சொல்லி நான் பேச்சை முடிக்க விரும்புகிறேன்.
தமிழ்நாட்டிலே மரியாதைக்குரிய கலைஞர் ஆட்சி செய்தபொழுது மனிதனை வைத்து மனிதன் இழுக்கின்ற ரிக்ஷா சென்னையிலே ஓடியது. உடனே கலைஞர் அதை ஒழித்து விட்டு சைக்கிள் ரிக்ஷா கொடுத்தார். ஒரு ஆயிரம் ரிக்ஷாவை இலவசமாக சென்னையிலே கொடுத்தார்.
மனிதனை மனிதன் இழுக்கின்ற அந்தக் காட்சியைக் கூட கலைஞரால் ஜீரணிக்க முடியவில்லை. சரியான செயல். ஆனால் தோழர்களே இந்த தமிழர் எழுச்சி விழா ஆதித் தமிழர் இல்லாமல் நடக்கக் கூடாது. ஆதித் தமிழர்கள் பங்கு கொண்டுதான் இது நடக்க வேண்டும் என்கிற ஒரு அருமையான நல்ல அவா இன்றைக்கு ஏற்பட்டு, இன்றைக்கு நம்மை அழைத்திருக்கிறார்கள். பொதுவாக திராவிடர் கழகம் என்று சொன்னாலே பள்ளன் பறையன் கட்சி என்று இப்பொழுது அல்ல 40 ஆண்டுகளுக்கு முன்னரே அதுதான் நிலை. அதை இன்றைக்கு மாற்றிவிட முடியாது. அப்படிப்பட்ட சூழலிலே இன்றைக்கும் என்ன நடந்து கொண்டிருக்கிறது.
தமிழ்நாட்டிலே தாழ்த்தப்பட்டவர்களிலே மூன்றில் ஒரு பகுதியாக இருக்கிற அருந்ததியர் என்று சொல்லக் கூடியவர்கள் மனிதனுடைய மலத்தை ஒரு மனிதன் சுமக்கின்ற ஒரு அவலத்தை இன்றைக்கு தமிழ்நாட்டிலே நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். நான் கேட்கின்றேன், உலகத்தில் எந்த மூலையிலாவது மனிதனுடைய மலத்தை இன்னொரு மனிதன் சுமக்கின்ற நிலை இருக்கிறதா? வெள்ளையன், கருப்பன், அடிமை பிரச்சினை இருக்கிறது. இன்னொருவனை அடிமைப்படுத்துகிறான். உலகத்தில் எந்த நாட்டிலுமே ஒரு மனிதனுடைய மலத்தை இன்னொரு மனிதன் சுமக்கின்ற அவலம் இருக்கிறதா? அதையும் நாம் 40, 50 ஆண்டுகாலமாக வேடிக்கை பார்த்துக் கொண்டு அனுமதித்துக் கொண்டு இப்படி ஒன்றும் நடக்காதது போலவே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். கேட்டால் அதை ஏன் அவன் செய்கிறான். அதை அவனாகவே விரும்பி செய்கிறான் என்கிறார்கள்.
இன்றைக்கு தாழ்த்தப்பட்டவர்களும் சரி, பிற்படுத்தப்பட்டவர்களும் சரி பார்ப்பான் வந்தால் சாமி என்று சொல்கிறார்களே, நான் கேட்கிறேன், சாமி என்று சொல்லுவது அவர்கள் விரும்பி செய்வதா? இல்லை; பார்ப்பனியம் இவர்களை அப்படி செய்யச் சொல்லி வற்புறுத்தியது. நிச்சயமாக விரும்பி இதைச் செய்து இருக்க மாட்டார்கள். இவர்கள் இதை எப்படி விரும்பி செய்யவில்லையோ அதைப் போல்தான் தாழ்த்தப்பட்டவர்களும் இந்த மலம் அள்ளும் தொழிலை விரும்பிச் செய்தது கிடையாது. ஆங்கிலேயர் இந்த நாட்டிற்கு வரும் பொழுது கழிப்பிடங்களே கிடையாது. கக்கூஸ் என்பதே ஆங்கிலேயர் வந்த பின் தான் வந்தது. அதற்கு முன் இந்த நாட்டிலே என்ன நடந்தது என்று யாருக்குமே தெரியாது. தந்தை பெரியார் தான் ஒரு முறை கேள்வி கேட்டார்.
மைசூர் மகாராஜா அரண்மனையைப் பார்த்துவிட்டு எல்லாம் சுற்றிப் பார்த்து விட்டு வெளியில் வந்து கேட்டார். எல்லாம் சரி தான், அரண்மனை ரொம்ப நல்லா இருக்கிறது. இந்த ராஜாவும், ராணியும் வெளிக்கு எங்கே போவார்கள். அதை சொல்லுஙக, இந்த நாட்டிலே அந்த விழிப்புணர்வே இல்லை. ஆங்கிலேயன் வந்ததிற்குப் பிறகுதான் இருந்தது. ஆங்கிலேயர் 400 ஆண்டுகளுக்கு முன்னர் வந்தபிறகுதான் துப்புரவு பணி ஒன்று ஒரு பணியே இருந்திருக்கிறது. அதற்கு முன்பு அது கிடையாது. ஆங்கிலேயனோடு கூட இருந்த பார்ப்பனர்கள் பஞ்சமர்கள் தான். இதைச் செய்ய சொல்ல வேண்டும் என்கிற கட்டாயத்தை திணித்து இன்றைக்கு வரைக்கும் அதைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில் ஆதித் தமிழர் பேரவை ஒரு முடிவை எடுக்கிறது. என்ன முடிவு? எல்லாரும் இங்கே எல்லா இடங்களிலும் செய்து கொண்டிருக்கிறார்கள். அது வேறு விசயம். ஆனால் இந்த நாட்டினுடைய முக்கியமான, உலகத்திலே மிகப் பெரிய நிறுவனம இரயில்வே துறை. ஏறத்தாழ 40 இலட்சம் பேர் அதிலே பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இந்த இரயில்வே துறையில் இன்றைக்கும் தண்டவாளத்திலே மனிதனுடைய மலத்தை கையால் தான் அகற்றிக் கொண்டிருக்கிறார்கள். அதை அரசாங்கம் செய்ய வைத்திருக்கிறது.
இரயில்வே தண்டவாளங்களில் இப்படிப்பட்ட கொடுமை இருக்கக் கூடாது. சப்பானில் புல்லட் ரயில் ஓடுகிறதே அங்கே எப்படி அந்தக் கழிவுகளை அகற்றுகிறார்களா? ரசியாவிலே என்ன செய்கிறார்கள்? நீ எது எதற்கோ வெளிநாட்டைப் பார்க்கிறாயே, இதை இன்னும் பார்க்க வில்லையா? இதையெல்லாம் கேள்விக்குட்படுத்தி ஒரு போராட்டத்தை இரயில் மறியல் போராட்டத்தை நவம்பர் 28லே ஆதித் தமிழர் பேரவை அறிவித்திருக்கிறது.
இதை ஏன் இங்கு சொல்லுகிறேன் என்றால், மரியாதைக்குரிய கொளத்தூர் மணி அவர்கள் திராவிடர் கழகத்திலிருந்து விலகிய போது, இப்போது நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்று அவரைப் பார்த்து கேட்டார்கள். அப்பொழுது அவர்கள் சொன்னார்கள், நான் ஆதித் தமிழர் பேரவையில் இணைந்து பணியாற்றப் போகிறேன் என்று அந்த பேட்டியிலே சொன்னார்கள். எதற்காக அதை அவர் சொல்ல வேண்டும்? ஆதித் தமிழர் பேரவை இந்த அடிதட்டு மக்களை மற்ற மக்களுக்கு சமமாக கொண்டு வர வேண்டும் என்ற முனைப்போடு இன்றைக்கு போராடிக் கொண்டிருக்கிறது.
தந்தை பெரியார் இன்று உயிரோடு இருந்திருந்தால் இந்த இரயில் மறியல் போராட்டத்தை தானே தலைமையேற்று நடத்துவார் என்பதில் அய்யமில்லை என்பதை இந்த நேரத்திலே தெரிவித்து, மனிதனுடைய மலத்தை மனிதனே சுமக்கின்ற ஒரு கேவலமான நிலைமை இந்த நாட்டை விட்டு ஒழிப்பதற்கு அத்தனை மனித நேயமுள்ள, மனிதனை நேசிக்கின்ற அத்தனை பேரும் நீங்கள் ஆதரவு தரவேண்டும் என்று இந்த நேரத்திலே தெரிவித்து இந்த அருமையான வாய்ப்பினை இந்த இடத்திலே எனக்கு கொடுத்த தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் அத்தனை தோழர்களுக்கும், அதன் தலைவர்களுக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்து முடிக்கிறேன்.