“வறுமைக்கு முடிவுகட்டாமல் இந்தியா வல்லரசு ஆக முடியாது” சமீபத்தில் தமிழகம் வருகை தந்த முதல் குடிமகன் அப்துல்கலாம் உதிர்த்த பொன்மொழி இது. 2020க்குள் இந்தியாவை வல்லரசாக மாற்ற வேண்டும் என்றும் பள்ளிக் குழந்தைகளிடம் உரையாற்றியுள்ளார். அவர் ஆசை நியாயமானதுதான். ஆனால் வெறும் கனவும், ஆசையும், அறைக்கூவலும் இவைகளை சாதித்திடாது. இன்றைய யதார்த்தம் என்ன 1991ல் ஒரு குடும்பத்திற்கு கிடைத்த உணவு தானியம் 174.3 கிலோ அதுவே 2001. 151 கிலோவாக குறைந்து விட்டது. கிராமபுற விவசாய தொழிலாளர்கள் 2001ம் ஆண்டு கணக்கின் படி 10 கோடியே 75 லட்சம் பேர், இவர்களுக்கு கிடைக்கும் வேலைநாட்கள் 1991ல் 100 நாட்களாக இருந்தது 2001ல் 78 நாளாக குறைந்து விட்டது. இந்த 78 நாள் வருமானத்தில்தான் அவர்கள் வாழ்க்கைச் சக்கரம் 365 நாட்கள் சுற்ற வேண்டும்.

நாட்டில் 70 சதமான மக்கள் கிராமபுறத்தில் வாழ்கிறசூழலில், பாரதத்தாயின் குழந்தைகளான 110 கோடி மக்களில் 26 கோடி மக்கள் வறுமை கோட்டுக்கு கீழே வாழ்கின்றனர். இவர்களின் வறுமையை ஒழிப்பது ஆளும் ஆட்சியாளர்களின் கடமை. சுதந்திர பொன்விழா கொண்டாடும் நமது நாட்டில் கடமை மறந்த ஆட்சியே இன்றுவரை நடந்துள்ளது.

வறுமை ஒழிப்புக்கு முக்கிய வழி நிலம் என்பதை உணர்ந்த இடதுசாரி இயக்கங்கள் தொடர்ந்து தீவிர நிலச் சீர்திருத்தத்தை அமுல்படுத்த வேண்டுமென கோருகின்றனர் அதற்காக போராடுகின்றனர். ஆனால் இடதுசாரிகள் ஆளுகின்ற மேற்கு வங்கத்தை தவிர வேறு எங்கும் இத்திட்டம் தீவிரமாக அமுல்படுத்தப்படவில்லை, மேற்கு வங்கத்தில் 13 லட்சம் ஏக்கர் நிலத்தை 25 லட்சம் குடும்பங்களுக்கு வழங்கினார்கள். இது இந்தியாவில் மொத்தமாய் செய்யப்பட்ட நிலவிநியோகத்தில் 22 சதமாகும். எனவேதான் அங்கு கிராமப்புற வறுமை மற்ற மாநிலங்களை ஒப்பீட்டு நோக்கும் போது குறைவாக உள்ளது. இந்தியாவில் உள்ள 15 முக்கிய மாநிலங்களில் விவசாய வளர்ச்சியின் சராசரி விகிதம் 11.28 சதமாக இருக்கும்போது மேற்கு வங்கத்தில் 28.28 சதமாக உள்ளது.

ஆனால் தமிழகத்தின் நிலை என்ன? 1993_93ல் 24.1 சதமாக இருந்த கிராமப்புற வேலையின்மை 2003_04ல் 36.5 சதமாக அதாவது வேலையின்மை 12 சதம் அதிகரித்துள்ளது. இதன் விளைவாய் கிராமப்புரங்களில் வசித்த மக்கள் வேலை தேடி திருப்பூர் போன்ற தொழில் நகரங்களுக்கும், பெங்களூர் போன்ற பெரும் நகரங்களுக்கும் புலம் பெயர்ந்து செல்லும் அவலம் நடைபெறுகிறது. தமிழகத்தில் 50 லட்சம் ஏக்கருக்கு மேல் அரசு தரிசு நிலம் உள்ளது. ஆனால் 25 லட்சம் குடும்பங்களுக்கு வீட்டுமனை பட்டா இல்லாத சூழல். தமிழகத்தின் நில உச்சவரம்பு சட்டத்தின் கதை என்ன ? 1961ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது நில உச்சவரம்பு சட்டம். 44 ஆண்டுகளை கடந்து 2005ம் ஆண்டு வரை கணக்கெடுத்தபோது 1.88.234 ஏக்கர் மட்டுமே மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதிலும் சில குடும்பங்கள் 5000 ஏக்கர் வளைத்த கதையும் உண்டு.

அதே நேரம் பிரிட்டிஷ் ஆட்சியில் தலித் மக்களுக்கு வழங்கப்பட்ட பஞ்சமி நிலம் 3.50 லட்சம் ஏக்கர் இப்போது அவர்கள் கையில் இல்லை, ஆதிக்க சாதியினர் அதிகார வர்க்கத்துனையுடன் அந்நிலங்களை அபகரித்துக் கொண்டனர். 1967ம் ஆண்டு அறிஞர் அண்ணா சிறுதாவூரில் உள்ள 20 குடும்பங்களுக்கு 53 ஏக்கர் நிலம் பட்டா வழங்கினார். இதற்கு அருகில் அண்ணாவின் பெயரில் கடை மன்னிக்கவும் கட்சி நடத்தும் ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரி சசிகலா 300 ஏக்கர் நிலப்பரப்பில் பங்களா கட்டினார். இத்தோடு அந்த அப்பாவி மக்களின் 53 ஏக்கர் நிலத்தையும் தங்களது பினாமிபெயரில் மாற்றிக்கொண்டது ஆதிக்க அதிகார துஷ்பிரயோகத்தின் நிகழ்கால உதாரணம்.

ஆக தமிழக மக்களின் தேவையான நிலத்திற்கான போராட்டம் கடந்த சில வருடங்களாய் விஸ்வரூபம் கொள்ள துவங்கி உள்ளது. அதன் வெளிப்பாடுத்தான் கடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் நிலம் பிரதான வாக்குறுதியாய் முன்னுக்கு வந்ததும், சமீபத்தில் தமிழக அரசு செப் 17 பெரியார் பிறந்த தினத்தில் 28,036 ஏக்கர் நிலத்தை 29,383 நிலமற்றவர்களுக்கு 30 ஆண்டுகளுக்கு விற்ப்பனை செய்யக்கூடாது என்ற நிபந்தனையுடன் வழங்கியது.

கடந்த ஜூலை 22 தேதியன்று விவசாயிகள் சங்கமும், விவசாய தொழிலாளர் சங்கமும், ஜனநாயக வாலிபர் சங்கமும் வீரம் மிக்க போராட்டத்தை நடத்தி சிறுதாவூரில் ஜெயா_சசி கூட்டம் அபகரித்த நிலத்தை மீட்டெடுத்து அம்மக்கள் கையில் கொடுத்தனர்.

அதற்கு அடுத்ததாக சென்னையில் ஆகஸ்ட் மாதம் 17ம் தேதி நடைபெற்ற விவசாய, விவசாய தொழிலாளர்கள் பிரும்மாண்டமான மாநாட்டில், தமிழகம் முழுவதும் நிலமற்ற மக்கள் சந்திப்பு இயக்கம் நடத்தி செப்டம்பர் 21ம் தேதியன்று மாவட்ட ஆட்சியர்களிடம் மனு கொடுப்பது என்று முடிவெடுக்கப்பட்டது.

கடந்த செப்டம்பர் 21ம் தேதி அணைத்து மாவட்ட தலைநகரங்களும் ஸ்தம்பித்தன. ஆயிரமாயிரமாய் நிலமற்ற மக்கள் அணிதிரண்டனர். மாவட்ட ஆட்சியர் அலுவுலகங்கள் அதன் சரித்திரத்தில் சந்திக்காத மக்கள் கூட்டத்தை சந்தித்தன, அன்று காலை முதல் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் வந்த செய்திகள் மற்ற மாவட்ட களப் போராளிகளுக்கு அளவில்லா உற்சாகத்தையும் நம்பிக்கையையும் அளித்தது. மகக்கள் கூட்டம் பெருக.. பெருக அறிவிக்கப்படாத சாலைமறியலாய் மாறி போக்குவரத்து திசைமாற்றப்பட்டது. ஐந்து லட்சத்திற்க்கு மேற்ப்பட்ட உழைப்பளி வர்க்க ஆண்களும் பெண்களும் திரண்ட இப்போரட்டத்தை பார்த்து தமிழகம் திகைத்தது ஆனால் இப்போராட்டத்தை கொச்சை படுத்தும் வேலையைத்தான் தமிழகத்தின் முன்னணி பத்திரிக்கைகள் செய்தன.

நமிதா காமத்தீவிரவாதியா என்று கேவலமான அட்டைப்படம் போடும், குஷ்பு எந்த வேடத்தில் நடித்தால் நல்லது என்று வாக்கெடுப்பு நடத்தும், சங்கராசாரி படத்தை புளோஅப் போடும், இரண்டுபக்கம் சாதகம் கணிக்கும் பத்திரிக்கைகளுக்கு, நிலமற்ற வீட்டுமனை பட்டா இல்லாத வாழ வழியில்லாத இந்த உழைப்பாளிமக்களின் போராட்டம் கண்ணுக்கு தெரியாதது ஆச்சரியம் இல்லைத்தான். நான்கு பேர் குடித்துவிட்டு பேருந்துநிலையத்தில் சண்டை போட்டால் அந்த ஊரில் பதட்டம் போலிஸ் குவிப்பு என்று தலைப்பு செய்தி சொல்லுகிற, “அப்பப்பா தனுஷ் அப்பாவாக போகிறார் தமிழக மக்கள் கொண்டாட்டம் ஸ்ஸ்ஸ்பெஷல் ரிப்போட் வாங்கிவிட்டீர்களாஆஆஆஆ இந்தவாரம்” என்று விளம்பரம் செய்யும் தொலைக்காட்சிகட்சிகளின் கேமிராக்கள் அன்று மட்டும் பழுதடைந்ததை நம்மால் புரிந்துக்கொள்ள முடிகிறது
.
இதற்கெல்லாம் சோர்ந்துவிடுகிறவர்கள் அல்ல போராட்டம் நடத்திய களப்போராளிகள். வீதிகளில் நடந்து மக்களுடன் மக்களாய் இயக்கம் நடத்துபவர்களுக்கு செய்தி சொல்ல பலவழி உள்ளது. நிலம் கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என்ற செய்தியை.. போராட்டக் களத்தில் உழைப்பாளி மக்களை திரட்டும் பணியை இடதுசாரி அமைப்புக்களோடு வாலிபர் படையும் இணைந்து செய்யும். அந்தப் பணி ஒரு இறுதிப் போராட்டத்தை நோக்கிச் செல்லும்.

(நன்றி: DYFI இளைஞர் முழக்கம்)

Pin It