பின்நவீனத்துவம் என்ற பெயரில் மத மற்றும் வரலாற்று அம்சங்களை கேள்விக்குள்ளாக்கி வருகிறவர் என பெயர் பெற்றவர் ஓர்ஹான் பாமூக். துருக்கியப் படைப்பாளி. இவ்வாண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசைப் பெற்றுள்ளார்.

1998ல் அவருக்கான தேசிய விருதை ஏற்க மறுத்தார். குர்தீஷ் மக்களின் பிரச்சனைகளை எழுப்பிவரும் எழுத்தாளர்களை சிறைக்கு அனுப்புவதைக் கண்டித்துப் பேசி வந்தார். ருஷ்டிக்கு எதிரான் ஈரானின் பட்வா தண்டனையை எதிர்த்தும் குர்து மக்களின் உரிமைக்காகவும் பாமூக் குரல் கொடுத்தார்.

இசுலாமிற்கும் மதச்சார்பின்மைக்கும் இடையே துருக்கி அல்லாடி வருகிறது. கிழக்கிற்கும் மேற்கிற்குமான உறவில் தவிக்கிறது. இரண்டு ஆன்மாக்களின் கடைத்தேற்றத்திற்காக காத்து நிற்கும் துருக்கி நோயாளியல்ல. பூகோளப்படி அய்ரோப்பாவில் உள்ள நாம் அரசியல் ரீதியில் எங்கே என்ற கேள்விகளை அவர் எழுப்பினார்.

அவரது நாவல்கள் இருபதிற்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிமாற்றம் கண்டுள்ளன. அவரது ‘ஒயிட் காசில்’- துருக்கிய எசமானரும் அய்ரோப்பிய அடிமையாளும் நாவலில் மரபும் நவீனகாலமும் இழையோடுவதாக விமர்சகர்கள் எழுதுகின்றனர். இருவரிலும் யார் எவர் என்று இறந்து போவர் என்று துல்லியப்படுத்த முடியாத அளவில் கதை நகர்கிறது. அவரது ‘பிளாக் புக்’ சர்வதேச புகழை எட்டியது.

சூபி கதை சொல்லிகளையும் இசுலாமிய மரபு கதைகளையும் அவர் எடுத்துக் கொள்கிறார் என்பவர்களும் உளர். ‘ஸ்நோ’ நாவலில் இசுலாம் அடிப்படைவாதிகளின் மற்றும் துருக்கி அரசாங்கத்தின் கொடூரங்களை இவர் விளக்குகிறார். தனக்கு எல்லாமே தெரியும் என்ற பாணியில் அவர் அரசியல் அம்சங்களை விளக்குவதில்லை. இருபக்க நியாயங்களையும் தனது பாத்திரங்கள் மூலம் வெளிக் கொணர்கிறார். ரஷ்யாவின் அற்புதப் புகழ் பெற்ற எழுத்தாளர் தாஸ்தவெஸ்கி போல எழுதுகிறார் என்று விமர்சிப்போரும் உண்டு.

கதை சொல்லிக் கொள்வதன் மூலம் தனது நாடு தன்னைக் கண்டுணர்ந்துகொள்ள முடியும் என்பார் பாமூக். அவரது நாவல்கள் நவீன துருக்கி குறித்த விசாரணைகளாக அமைகின்றன. வாழ்க்கையைவிட ஆச்சரியமானது எதுவுமில்லை. எழுதுவது ஒன்று தான்- எழுதுவது மட்டுமே- எழுதுவதைத் தவிர்த்து என்ன ஆறுதல் என்கிறார் பாமூக். அவர் ஆவேசமாக எழுதுவதில்லை. படுநிதானமாக எழுதுகிறார்.

1982ல் ‘செவ்தெத்பே மற்றும் அவரது மகன்களும்’ என்ற நாவல் முதலில் வெளியானது. பிறகு சைலண்ட் ஷவுஸ் 1983ல், 1985ல் ஒயிட் காசில், 1990ல் பிளாக்வுக், 1994ல் நியூலைப். கட்டிட நிர்மாணம் போன்ற வேலையை அவர் தனது படைப்பில் செய்கிறார் என்ற கருத்தும் நிலவுகிறது. இசுலாம் உருவக்கலையை கொண்டாடுவதில்லை என அனைவரும் அறிவோம்.

பெனிம் அதிம் கிர்மசி என்கிற அவரது மை நேம் இஸ் ரெட் நாவல் உலகப் புகழைத் தேடித் தந்தது. புதிர்கள், காதல், தத்துவம் என இணைந்து நாவல் நகர்ந்தது. மூன்றாம் ஓட்டோமான் சுல்தான் மூரத் காலத்தில் 1591ல் கிழக்கு மேற்கு மோதல்களைச் சுட்டியது. இருபத்திநான்கு மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டது. ‘மை நேம் இஸ் ரெட்’ கதையின் நாயகன் பிளாக் ஒட்டோமான் சாம்ராஜ்ஜியத்தின் கீழைப்பகுதியில் தனது முறைப்பெண் செக்யூரால் நிராகரிக்கப்படுகிறான். பனிரண்டு வருடங்கள் கழித்து கான்ஸ்ட்டான்ட்டிநோபிள் வரும்பொழுது அனைத்தும் மாறிப்போய்விட்டது. செக்யூர் மணமாகி விதவையாக நிற்கிறாள். நாட்டின் சுல்தானுக்கு அற்புத இத்தாலியக் கலை முறையில்- படைப்பை தரும் வேலையில் அவளது தந்தை- மேற்குகலைகளை வெறுக்கும் அடிப்படைவாதிகள்- அப்படைப்பில் ஈடுபட்டவர்களை கொல்லும் மர்மங்கள் என நாவல் நகர்கிறது. கொலையாளியை அடையாளப்படுத்தும் வேலையில் செக்யூருக்கு துணைநிற்கிறான் பிளாக். இசுலாமியக் கலைகளை அழகாகப் படம் பிடிக்கிறார் பாமூக். மேற்குலகம் அதுகுறித்து ஏதாவது அறிந்திருக்குமா என்ற கேள்வியுடன் நாவல் நகர்கிறது.

கருப்பு புத்தகத்தில் (dark book) காலிப் என்ற வழக்கறிஞர்- அவர் விரும்பும் ருயா. அவள் மறுமொழி சொல்லாமல் சென்று விடுகிறாள். செலால் என்ற பத்திரிக்கையாளன்- கண்ணிலேயே படுவதில்லை. அவனது எழுத்துக்கள் தொடர்ந்து கொண்டேயிருக்கும். செலால் கூறும் கதைகளை தொடரும் காலிப்பிற்கு புதிதாய் கதைகள்- ருயா எனும் யதார்த்தம் கானல்நீராக- யதார்த்தத்தை கைப்பற்றிவிட முடியாது. அகப்படாது. நினைவு கொள்ளலாம். இலக்கியத்திற்குள் பிடித்து வைக்கலாம் என்பதை பேசும் நாவல். வாழ்வின் கொடூரங்களையும் அன்பையும் ‘காராகிதாப்’ ஒருசேரப் பேசுகிறது.

அமைதிவீடு (சைலண்ட் ஷவுஸ்) வயதான பாட்டியுடன் மூன்று குழந்தைகள் அவர்களின் ஏமாற்றம்- எதிர்பார்ப்புகளின் சரிவுகள் குறித்து பேசுகிறது. வில்லியம் பாக்னர், வர்ஜீனியா உல்ப், தாமஸ் போன்ற புகழ் பெற்ற படைப்பாளிகளின் தரத்தில் பாமுக் படைப்பும் அமைந்திருப்பதாக பாராட்டுரை கிடைத்தது. செவ்தெத்பே மூன்று தலைமுறைகளின் கதை. துருக்கியின் வாழ்வு முறைகளைப் பேசியது. துருக்கியில் முதலாளித்துவம் வளர்ந்ததை மெதுவாக சுட்டிக் காட்டியது. ஸ்நோ நாவலில் ஜெர்மனியில் வெளியேற்றப்பட்டிருந்த கவிஞர் கா துருக்கி வருகிறார். கார் என்ற பின்னடைந்த பகுதிக்கு சென்று பத்திரிக்கையாளராக செயல்படுகிறார். அவரது தோழி அய்தலக். அங்கு நடந்த தேர்தல், தொற்றுவியாதி, இளம்பெண்களின் தற்கொலை பற்றி எழுதுகிறான். பெண்கள் பர்தா அணியாமல் கல்லூரிகளில் நுழையமுடியாததை எழுதுகிறான். வகுப்புவாதம், மதவாதம் மற்றும் மதசார்பின்மை போராட்டங்களை வெளிப்படுத்தும் நாவல். எனது தாய்நாடு அல்லது தலைமறைப்பு என்ற நாடகம் அரங்கேறுகிறது. கதாநாயகி தலைமறைப்பு நீக்கி அதை கொளுத்துகிறாள்.

அனைத்தையும் மேற்கின் கண்கொண்டு காண விழைதல்- மேற்கை உணராமலேயே தனது சொந்த மரபையும் இழத்தல் என்பது தான் சாரம். தனது அடையாளத்தை இழந்ததின் கோபமது. இளம் வயதில் ஜார்ஜ்லூகாக்ஸ் என்ற மார்க்சியரின் எழுத்துக்களில் கவரப்பட்டார் பாமூக்.

பிப்.6, 2005ல் அவர் ஸ்வீடன் பத்திரிக்கை டாஜெஸ் அன்ஜெய்கர் என்பதில் கொடுத்த பேட்டி மாபெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ‘துருக்கியில் முப்பதாயிரம் குர்துக்களும் பத்து லட்சம் ஆர்மீனியர்களும் கொல்லப்பட்டிருப்பார்கள். யாரும் சொல்லத் துணியாத ஒன்றை நான் சொல்கிறேன்’. 1984ல் துருக்கி அரசு படைகளுக்கும் குர்தீஸ் விடுதலைகோரும் பிரிவினைவாதிகளுக்கும் நடந்த சண்டையில் உயிரிழந்தவர்களை அவர் குறிப்பிட்டிருந்தார். துருக்கியை அவமதித்த வழக்கில் அவர் ஈடுபடுத்தப்படார். விசாரிக்கப்பட்டார். சட்டப்படி மூன்று ஆண்டுகள் சிறை என்ற பேச்சு எழுந்தது. துருக்கியில் பாமூக் எதிர்ப்பு இயக்கங்களை அடிப்படைவாதிகளும் தீவீர தேசியவாதிகளும் எடுத்தனர். உலகப்புகழ் பெற்ற படைப்பாளிகள்- ஜோஸ், சரமாங்கோ, மார்க்வெஸ், குந்தர்கிராஸ், உம்பர்டோ இகோ, கார்லோஸ், ஜீவான், அய்னக், மரியோபார்க்கோவ் - மனித உரிமை குரலை பாமூக்கிற்கு ஆதரவாக எழுப்பினர். அவர் மீதான குற்றச்சாட்டுகள் ஜன 2006ல் கைவிடப்பட்டன. துருக்கி அய்ரோப்பிய யூனியனில் இணைவது என்ற பெரு முயற்சி அப்போது நடந்து கொண்டிருந்தது.

செப் 2001ல் அமெரிக்காவின் உலக வர்த்தகமையம் தகர்க்கப்பட்டதை- இஸ்தான்புல் முதியவர்கள் பலர் பாமூக்கிடம் சரியாகத்தான் செய்திருக்கிறார்கள் என்று சொன்னதை பாமூக் ஒரு கட்டுரையில் பதிவு செய்கிறார். இசுலாமிய அடிப்படைவாதம் குறித்து தான் புரிந்து கொள்ளவே முயற்சிப்பதாக பாமூக் கூறினார். ஏன் அவன் சரியானவன் என்பதல்ல- அவன் கோபம் என்ன என்பதை புரிந்து கொள்ளவே தேவையுள்ளது.

அவரின் ஸ்நோ போன்ற நாவல்கள் ஒரு லட்சத்து நாற்பதாயிரம் பிரதிகள் விற்றுத் தீர்ந்தன. தீவீர மதச்சார்பின்மை என்று பேசுவோரில் சிலர் பாமூக்கை விமர்சித்தனர். மதவிவகாரங்களில் புகுந்து ஏன் எழுதுகிறார் என்று- ஆனால் பாமூக் பேசுவார், ‘இசுலாமியர்களை மனிதர்களாக மதிக்காத போக்கை வெறும் மதவெறியர்களாக- காட்டுமிராண்டிகளாக பார்ப்பதை ஏற்கமுடியாது’ என்றார். மதப்பற்றாளர்கள் அவர்மீது கடும் விமர்சனங்களை வைத்தனர். இசுலாமியரின் பாலியல் உறவுகளை பகிரங்கமாக அவர் நாவலில் விவாதிப்பது குறித்து விமர்சித்தனர். நேர்த்தியான மனிதர்கள் என்ற மாதிரியை அவர்கள் என்னிடம் எதிர்பார்க்கிறார்கள் என்றார் பாமூக்.

இராக்கின் மீதான அமெரிக்க படையெடுப்பை வலுத்தவனின் தீயநடத்தை என்பார். இசுலாமியர்களைப் பற்றிய அமெரிக்காவின் நினைப்பு மோசமாக உள்ளது. பிற்போக்காளர்கள் முட்டாள்கள், சோம்பேறிகள், அமுங்கிக் கிடக்கும் பெண்கள் என்று நினைக்கிறார்கள். ஓர் அமெரிக்கனின் வாழ்க்கைக்காக ஆயிரம் பேர் கொல்லப்படலாம் என்ற நம்பிக்கையில் அவர்கள் யுத்தம் நடத்துகிறார்கள் என்று எழுதினார். அமெரிக்க சமூக, பொருளாதார மேம்பாடுகளை குறித்த பெருமித பார்வை கொண்டவராக பாமூக் இருந்தாலும் இராக் யுத்தம் குறித்த விமர்சனங்களை தயக்கமின்றி முன்வைத்தார்.

அமெரிக்காவின் அத்தனை வளங்களும் ஏன் இசுலாமிய நாடுகளில் இருக்கக்கூடாது மதம் சார்ந்த விக்ஷயமல்ல- சொந்த வளம் சார்ந்த பிரச்சனை என்றார் பாமூக். எனவே தான் பிரச்சனை வேறு வடிவங்களில் வெளியாகிறது. தேசியவாதம், பழமை, புகழ், பயங்கரவாதம் என்று.

ஓர்ஹான் பாமூக் ஜூன் 7, 1952ல் இஸ்தான்புல்லில் பிறந்தவர். நோபல்பரிசு பெறும் முதல் துருக்கியர் பாமூக். பெரிய தொழிலதிபர் குடும்பம். 1976ல் பத்திரிக்கைத் துறையில் பட்டம் பெற்றார். அயிலின் தரிஜன் என்பவரை 1982ல் மணந்தார். 2001ல் அவர்கள் மணமுறிவு பெற்றனர்.

பிரச்சனைகளின் நடுவில் மூன்றாவது மனிதனைப்போல் நின்று கொண்டு பாமூக் கதை சொல்கிறார். பொறுமையில்லாத இனக்குழு மற்றும் மதக் கலவரங்கள் வன்முறைகள்- கொலைகள் மலிந்த உலகை பாமூக் தனது நாவல்களில் படம் பிடித்துக் காட்டுகிறார். தன்னை ஒரு மனிதனாக இசுலாமயக் கலாச்சாரத்தில் வந்த மனிதன் என்பதாக வெளிப்படுத்துகிறார். இறைவனுடன் நேரடியாக தொடர்பு ஏதுமில்லை என்றாலும் என்னை நாத்திகன் என்றழைக்க முடியாது என்கிறார் பாமூக். தாஸ்தவெஸ்கியும் சார்த்தரும் தன்னை பதப்படுத்தியதாகக் கூறுகிறார். டைம்100, 2006 ஏப்.25 இதழில் பாமூக்கும் உலகை செதுக்கும் சிற்பிகள் வரிசையில் இடம் பெற்றார்.

நீங்கள் எப்படிப்பட்டவராக இவ்வுலகில் இருந்தாலும் அதற்கு வெளியிலும் நீங்கள் பெறும் பார்வையாளராகவும் இருக்கிறீர்கள் என்ற எண்ண ஓட்டம் அவரது நூல்களில் சரடாக ஓடுகிறது என்று பெருமைப்படுத்தும் விமர்சகர்களும் உள்ளனர். வாயால் கதை சொல்லும் மரபு பாமூக்கிற்கு முக்கியமானது. டீக்கடை உரையாடல் அவசியமானது.

- ஆரூர் பட்டாபிராமன்

Pin It