முன்குறிப்பு:

(இந்தக் கட்டுரையை இளைஞிகள் பெண்பாலில் படித்துக் கொள்ளவும், இது இருபாலருக்கும் பொருந்தும், எழுத வசதியாக ஆண்பாலை தேர்ந்தெடுத்துள்ளேன். சினேகிதிகள் மன்னிப்பார்களாக :)

அன்புள்ள இளைய சமுதாயமே.... இளம் இரத்தங்களே.... பாரதத்தின் கனவுகளை சுமக்க வேண்டியவர்களே....உங்களோடு ஒரு அரைமணி நேரம் நான் உரையாடலாமா?

உங்களது வைர நிமிடங்களை நான் அதிகம் கொள்ளையிட விரும்பவில்லை...அரைமணி போதும் எனக்கு.

உங்களுக்கு அறிவுரை சொல்லும் அளவிற்கு நான் பெரியவன் இல்லை. அறிவுரை என்பது உங்களுக்கு பிடிக்காது என்பதும் நன்றாக உணர்ந்தவன் நான்.

ஆனாலும் மனசுக்குள் தவிக்கும் சில கேள்விகளை/ஆதங்கத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

முதலில் ஒரு கேள்வியுடன் ஆரம்பிக்கிறேன்.

இளைஞன் என்பவன் யார்?

என் சிறிய அறிவுக்கு எட்டிய பதில் இதோ..

"தனக்காக மட்டுமில்லாமல் தன்னைச் சார்ந்த மனிதர்களை/கிராமத்தை/நகரத்தை/தேசத்தை
முன்னேற்ற எள்ளளவு உதவியாவது செய்பவனாக இருக்க வேண்டும்"

பிறந்தேன் வளர்ந்தேன் இறந்தேன் என்று இருப்பது இளமைக்கு அழகா? ஆறாம் அறிவு மனிதனுக்கு மட்டும் ஏன் என்று யோசித்தாயா நண்பா?

சாதிக்க பிறப்பெடுத்தவனே மனிதன். இளமை நம் சாதனைகளுக்கு உரமிட வேண்டிய பருவம்.

ஓட்டப்பந்தையத்தில் ஓடுவது மட்டுமல்ல சாதனை. வாழ்க்கையை ஜெயித்த ஒவ்வொரு மனிதனும் ஏதேனும் ஒன்றை சாதித்திருக்கிறான்.

தன் பால்ய வயதிலேயே கவிச்சாதனை செய்தான் பாரதி.

தன் பதினாறாம் வயதில் கிரிக்கெட் உலகில் நுழைந்து இன்று சாதனை மன்னனாக திகழும் டெண்டுல்கரை நாம் நன்கறிவோம்.

இவ்விரு உதாரணங்களும் இளமைப் பருவம் வரும் முன்னரே சாதிக்க ஆரம்பித்தவர்கள் பற்றியது.

என் இளம் தோழனே,

நீ என்ன சாதித்திருக்கிறாய்?

நன்றாக படித்தேன், நல்ல வேலையில் சேர்ந்தேன், கை நிறைய, மனம் குளிர சம்பாதிக்கிறேன், பெற்றோருக்கு நல்ல பிள்ளையாக இருக்கிறேன், நல்ல நண்பர்களை சம்பாதித்தேன் இதை விட என்ன பெரிய சாதனை செய்திட வேண்டும் என்று நீ முணுமுணுப்பது என் செவிகளில் வந்து வேதனையாய் விழுகிறது நல்லவனே!

படித்து முடித்து வேலையில் சேர்ந்தவுடன் நம் இளைஞர்களுக்கு வாழ்க்கை முடிந்து போகிறது. திருமணமாகி குழந்தை பெற்றவுடன் தனக்காக தன் மனைவி மக்களுக்காக மட்டுமே இவ்வுலக
வாழ்க்கை என்று தப்புக் கணக்கு போட ஆரம்பித்து விடுகின்றனர்.

வாழ்க்கை என்பது மிகப்பெரிய வரம். மனித பிறப்பு என்பது அதைவிட பெரிய வரம்.

இருக்கின்ற ஒரு வாழ்க்கையை எவ்வளவு உபயோகமானதாய்/நல்லவிதமாய் நாம்
பயன்படுத்த வேண்டும்?

நம் வாழ்க்கையை மட்டுமே வாழ்வதோ வாழ்க்கை?

பிறருக்கு உதவி செய்து பிறர் வாழ ஏணியாய் நாமிருப்பது அல்லவா வாழ்க்கை!

பிறருக்கு செய்கின்ற நன்மைகளைத்தான் நண்பா நான் சாதனை என்கிறேன்.

கொஞ்சம் யோசித்து ஒரு பதில் சொல் தோழனே இதுவரை நீ இச்சாதனை செய்திருக்கிறாயா?

"நீ நூறு வருசம் நல்லா இருக்கணும்பா" என்று வாழ்த்து வாங்கி இருக்கிறாயா?

உன்னை வாழ்த்தியவரின் கண்களுக்குள் தெரிகின்ற நன்றியின் நிஜம் உணர்ந்து சிலிர்த்திருக்கிறாயா?

"எனக்கும் உதவி செய்யனும்னுதான் ஆசை ஆனால் நேரம்தான் இல்லை" என்று உங்களில் சிலர் சலிப்பது கண்டு என் மனம் வெதும்புகிறது தோழர்களே...

உங்களுக்கா நேரமில்லை?

ஆறாம் விரலாய் சிகரெட் பற்ற வைக்க நேரமிருக்கிறது. வாரம் தவறாமல "பார்ட்டி" என்கிற பெயரில் மதுவருந்தி கும்மாளமிட நேரமிருக்கிறது. காதல் என்கிற பெயரில் கட ற்கரை, திரையரங்கம் என்று துணைகளுடன் ஊர் சுற்ற நேரமிருக்கிறது.

இப்படி எத்தனையோ உதவாத விசயங்களுக்கு இன்றைய இளைஞனுக்கு நேரமிருக்கிறது. ஆனால் உதவும் மனப்பான்மை மட்டும் வெகு சிலருக்கே இருக்கிறது.

இளைஞர்களில் 75 சதவிகிதம் சிகரெட் குடிப்பவர்கள் இருக்கிறார்கள் 1 சதவிகிதமாவது பிறர்வாழ உதவ நினைக்கிறார்களா என்பது சந்தேகமே!

சிகெரெட் புகைக்கும் புகைஞர்களே எனக்கு வெகுகாலமாய் ஒரு சந்தேகம் அதெப்படி உங்களுக்கு மட்டும் காசுகொடுத்து நோய் வாங்கும் மனம் வாய்த்திருக்கிறது.!!!!

சிந்திக்க வேண்டுமெனில் சிகரெட் உங்களுக்கு தேவைப்படுகிறது. தனிமைக்கு துணையும் சிகரெட் இளமைக்கு நீ வைக்கும் நெருப்பல்லவா சிகரெட்!

உள்சென்று வெளிவரும் நச்சுப்புகைக்கா நீ தினமும் செலவிடுகிறாய்?

ஒரு நாளுக்கு ஒரே ஒரு சிகரெட் நீ குடிப்பதாக வைத்துக் கொள்வோம் ஒரு மாதத்திற்கு முப்பது சிகரெட். ஒரு சிகரெட்டின் விலை இரண்டு ரூபாய் என்று வைத்தால் கூட மாதம் அறுபது ரூபாயை வெறும் புகைக்காக செலவழிக்கும் உன்னை நினைத்தால் என்னால் கோபபடாமல் இருக்க முடியவில்லை!

உனக்குள் ஒரு சூரியன் இருப்பதை இந்த இரண்டு ரூபாய் சிகரெட்
புகை மறைத்து விட்டதை எண்ணி துயரப்படுகிறது என் மனசு.

இதுபோலவே மதுவிற்கு சில ஆயிரங்களை செலவழிக்கிறாய்.

கொஞ்சம் யோசியுங்கள் நண்பர்களே.... உங்கள் உடல் நன்றாக இருந்தால் மட்டுமே சாதிக்க முடியும்.


நான் சொல்லி புத்தனாக நீ மாற முடியாது. புத்தனாக மாறவும் வேண்டாம். முதலில் ஒரு நல்லொழுக்கம் மிக்கவனாக மாற முயற்சி செய். பின் சாதனைகள் உன்னைத் தேடி தானாக வரும்.

கல்வெட்டில் உனது பெயர் வரவேண்டும் என்றில்லை. நான்கு நல்ல இதயங்களில் உன் பெயர் துடிப்பாய் மாறினால் அதுவே நீ பாதி சாதித்ததாக ஆகிவிடும்.

அடுத்ததாக காதல் பற்றி கொஞ்சம் உன்னுடன் பேச வேண்டும். ஏனெனில் பல இளைஞர்கள் தங்களது முன்னேற்றத்தை இந்தக் காதல் என்கிற மூன்று எழுத்துக்குள் புதைத்துக் கொண்டதை இவ்வுலகம் அறியும்.

காதல் என்றவுடன் நீ நிமிர்வதை உணர்கிறேன். :)

முதலில் காதல் என்றால் என்னவென்று நீ புரிந்து வைத்திருக்கிறாய்?

காதலியுடன் மணிக்கணக்கில் பேசுவது, கவிதை எழுதுவது, கடிதம் வரைவது கைகோர்த்து கடற்கரையில் நடப்பது இதுமட்டுமா காதல்?

உன் காதலனோ/காதலியோ உன் வாழ்வில் ஒளியேற்றும் தீபமாக இருக்க வேண்டுமே தவிர உன்னை எரிக்கும் தீயாக இருக்க கூடாது.

காதல் தோல்வியால் தங்களது வாழ்க்கையை முடித்துக்கொண்ட எத்தனையோ இளைஞர்களிடம் நான் கேட்க நினைத்த ஒருகேள்வியை இன்று உங்கள் முன் வைக்கிறேன்.

வாழ்க்கை என்கிற அதிஅற்புதத்தை விட சிறந்ததா காதல்?

காதலே வாழ்க்கை என்று பிதற்றும் முட்டாள் கூட்டத்தில் இளைஞனே நீயும் இருக்கிறாயா?

இருமாதங்கள் காதலித்து பின் பிரிந்து உயிரை மாய்த்துக் கொள்ளும் சிலரைக் காணும்போது சிரிப்பதை தவிர வேறென்ன செய்ய முடியும்?

ஓடிச் சென்று ஓங்கி தலையில் ஒரு கொட்டு கொட்டி "அடேய் முட்டாளே இருமாதங்கள் காதலித்த ஒரு பெண்ணுக்காக/ஆணுக்காக உன் வாழ்க்கையை முடித்துக் கொள்ள எத்தனிக்கிறாயே உன்னை பெற்றோருக்கும் இவ்வுலகிற்கும் நீ என்ன செய்தாய்?" என்று கேட்க தோன்றுகிறது.

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
உன் அரைமணி நேரம் இதை வாசிக்க தந்தமைக்கு மிக்க நன்றி தோழா....

கொஞ்சம் சிந்தித்துப்பார் இளைஞனே.... வாழ்க்கையில் ஏதேனும் சாதிக்க முடிவெடு.

முதுமையில் பூக்களினாலான படுக்கை கிடைக்க இளமையில் முள்ளில் நீ நடக்க நேரிட்டாலும் தயங்காதே!

உன் சாதனைப் பயணத்தை இன்றே துவங்கிடு. நாளைக்காக காத்திருக்காதே!

வாழ்த்துக்களுடன் உன் நண்பன்.

இக்கட்டுரையை படித்து ஒரே ஒரு ஜீவன் திருந்த நினைத்தால் நானும் ஒரு சாதனையாளன் ஆவேன். ஒரு இளைஞன் திருந்தினால் நம் இந்தியா சாதனைகளின் மறுபெயராகும் என்கிற நம்பிக்கையுடன்,

- நிலாரசிகன்

Pin It