books tamilசமீபத்தில் மதுரையில் 'கணேஷ் ராமின்' தமிழ் மொழிபெயர்ப்பில் வெளியான 'அகுதாவின்' 'சுழலும் சக்கரங்கள்' நூலின் அறிமுக விழா நடைபெற்றது. கரிசல் நிலத்தின் புனைவு எழுத்தாளர் 'கோணங்கி' அறிமுக உரையில் நகரத்தார்களின் தொன்ம நூல் சேகரிப்பே இத்தகைய நிகழ்வுகளை நமக்கு சாத்தியப்படுத்துகிறது என்று குறிப்பிட்டார்.

அதுவே இப்பதிவின் தூண்டுதல். புத்தக சேகரிப்பு மற்றும் வாசிப்பின் முக்கியத்துவத்தையும் உணர்தலின் மூலமே நாம் நம்மை மீட்டெடுக்க முடியும்; புத்துயிர்ப்பான சமூகத்தை உயிர்த்தெழச் செய்ய முடியும். ஆழ்ந்த அறிவார்ந்த தேடல் நோக்கிய காத்திரமான நகர்வே மீட்சிக்கான ஒரே வழி. 

காவிரிப் பூம்பட்டினத்தைப் பூர்வீகமாகக் கொண்டு வாழ்ந்த நகரத்தார்கள் பாண்டிய நாட்டிற்கு இடம் பெயர்ந்து காரைக்குடி, புதுக்கோட்டை சுற்றிய 96 கிராமங்களில் குடியேறினர். இப்பகுதியே செட்டிநாடு என்றழைக்கப்படுகிறது.

சிங்கப்பூர், மலேசியா நாடுகளில் கடல்வழி கடந்து வாணிபம் செய்த இவர்கள் தாங்கள் கால்பதித்த நிலங்களில் சைவ சித்தாந்தம், சைவ சமயம் மற்றும் தமிழ் மொழி தழைக்கச் செய்தார்கள். 'வேள் வணிகர்', 'நானா நகரத்தார்கள்' என்ற பெயர்களும் இவர்களுக்கு உண்டு. 'கண்ணகி இக்குலத்தாரின் குலக்கொழுந்தே. 'பூம்புகாரின் சதுக்க பூதம்' அமைப்பை ஒட்டியே நாட்டரசன் கோட்டையில் சதுக்கம் அமைத்து நகரை வடிவமைத்தனர். வனப்புமிகு 'கண்ணாத்தாள்' கோவில்கட்டி இன்றளவும் வழிபட்டு வருகிறார்கள். நிலத்தால் ஒன்றுபட்டு பின் நீரால் பிரிக்கப்பட்ட ஈழத்தின் நாக நாட்டில் வாழ்ந்த தமிழ் குடியினர் இவர்கள்.

"நாக நீள் நகரொடு

அதனோடு போக் நீள் புகழ்

மண்ணும் புகார் நகர்...."

எனும் சிலம்பு வரிகளைச் சான்றாகக் கொண்டவர்கள்.

கி.மு மூன்றாம் நூற்றாண்டில் ஈழத்து வணிகக் குடியாகவும், பொருள் வணிகத்தையும் ஈழத்து மலைப்பகுதிகளின் இரத்தினப் படிமங்களை எடுத்து தெற்காசிய, சீனா முதலிய நாட்டினரோடு தொடர்பு கொண்டிருந்தனர்.

நகரத்தார்களின் இடப்பெயர்ச்சி அரசியல் காரணங்களாலும் முக்கியமாக ஆழிப் பேரலையின் சீற்றத்தாலும் நிகழ்ந்துள்ளது. இதன் காரணமாகவே இடம் பெயர்ந்து குடியேறிய நகரங்களில் தங்களது வள மனைகளை இவர்கள் நீர்ப்பெருக்கால் அழிந்துவிடாத கோட்டைகளாக அமைத்தனர்.

தனித்துவமான கலையையும், பண்பாட்டையும் கொண்டவர்கள் இந்த நாட்டுக்கோட்டை செட்டியார்கள் என்றழைக்கப்படும் நகரத்தார். வாணிபத்திற்காக தட்டுக் கப்பலில் கடல் வழிப் பயணங்களில் 'முருகன் மரப்பாச்சி'யை திருநீற்றுப் பைக்குள் எடுத்துச் செல்லும் வழக்கம் கொண்டிருந்தனர். 'செட்டிக் கப்பலுக்கு செந்தூரானே துணை'. நகரத்தார் வரலாறு அரசியல், பொருளாதார, கலைப் பண்பாட்டை உள்ளடக்கியது. பெரும் செல்வந்தர்களையும், மன்னர்களையும் கவனிக்கச் செய்த அறம் இவர்களுடையது.

தமிழகத்தின் பல திசையிலிருந்தும் ஆய்வு மாணவர்கள், சமூக ஆய்வாளர்கள், மொழிப் பெயர்ப்பாளர்கள் மற்றும் காத்திரமான படைப்பாளிகள் தேடிவரும் வேடந்தாங்கலாகத் திகழ்ந்த நகரத்தார் நூலக வித்தகர் 'ரோஜா முத்தையா' அவர்கள். 5-6-1926-ல் கோட்டையூரில் செல்வந்த குடும்பத்தில் பிறந்தவர்.

கல்கத்தாவில் கப்பல், பம்பாயில் சர்க்கரை ஆலை, கொல்லத்தில் சீமை ஓடு மில் என செழித்த குடும்பம். இவரது தந்தை நெருங்கிய ஒருவருக்கு போட்ட ஜாமீன் கையெழுத்தால் பூர்வீக வீடு ஏலத்தில் கைவிட்டுப் போனது. 7ஆம் வகுப்பு வரையே இவரது படிப்பு. தனது இருபத்தைந்தாவது வயதில் சென்னை சென்று நிறுவனங்களுக்கு போர்டு எழுதி வாழ்வை நகர்த்தினார்.

புத்தகங்களின் மீதான தாகம் இயற்கையிலேயே இவரிடம் இருந்தது. அன்றைய மவுண்ட் ரோடு வீதிகளில் அலைந்து இருபுரமும் விரவிக் கிடந்த பழைய புத்தகக் கடைகளில் கைப்பணம் அனைத்திற்கும் புத்தகம் வாங்கிச் சேர்த்துவிட்டு தண்ணீரால் வயிற்றை நிரப்பி வாழ்ந்தார்.

புத்தக்த்தின் மீதான தாகம் வாழ்வெல்லாம் அவரை விரட்டியது.

சென்னையிலும், மதுரையிலும் வாங்கிச் சேர்த்த புத்தகங்களை கோணிப்பையில் கொண்டு வந்து கோட்டையூர் வீட்டை நிரப்பினார். புத்தகங்களே அவர் தேடிச் சேர்த்த அரிய பொருட்செல்வம். நெல் வாசம் நிறைந்த குதிர் போல் புத்தகங்களின் அபூர்வ தொன்ம வாசனையில் கோட்டையூர் வீட்டை நிறைத்தார்.

புத்தக பராமரிப்பிலேயே பெரும் பொழுதுகள் கழிந்தது. புத்தகங்களை கரையான் அரிப்பில் இருந்து காக்க கமாக்சின் எனும் மருந்துத் தூள் உபயோகிப்பார். இம்மருந்தின் தாக்கத்தால் அவரது நுரையீரல் பாதிப்படைந்தது. பிரிட்டீஷ் மியூசியத்திற்கு பழைய அச்சு தமிழ் நூல்களை விற்று வந்தார்.

அவ்விற்பனையையும் Dr. Albertine Gaur அவர்களின் அறிவுருத்தலுக்குப் பின் நிறுத்திவிட்டார். தன்னிடம் குவிந்திருந்த பல ஆயிரம் புத்தக பொக்கிஷங்களைச் சீர்படுத்தி 'Library Service of India' எனும் நூலகத்தை உருவாக்கினார். இதனை ஒரு சேவையாக முழு ஆத்ம நேசத்துடன் தான் செய்தார். இவரது சேகரிப்பு எளிய கற்பனைக்குள் அடங்கா அளப்பெரிய ஈடுபாட்டை உள்ளடக்கியது.

வேறு எங்கும் கிடைக்காத, காணமுடியாத மிகப் புராதன பழுபேறிய அதி நூதன பிரதிகளை இவரது சேகரிப்பில் காணலாம். பழமையான முதற் பதிப்பு நூல்களும் இவரது சேகரிப்பில் அடங்கும். 'ஆறுமுக நாவலரின்' பெரிய புராணம் வசன நூலின் 23 பதிப்புகளையும் இவரது நூலகத்தில் காணலாம்.

அன்றைய காலத்தில் வெளிவந்த செய்திகளின் கத்தரித்து ஒட்டிய சேகரிப்பு பைண்டிங்குகளையும் இவர் வைத்திருந்தார். கடலுக்குள் மூழ்கி இவர் கண்டெடுத்த அரிய வகை முத்துக்கள் எண்ணிலங்காது. பிக்காசோவின் ஓவியம் பத்து கோடிக்கு விற்பனை, கூட்டன்பர்க் பைபிள் விற்பனையான தொகைக் குறித்த கத்திரிக்கப்பட்ட செய்திகள் இவரது பைண்டிங் தொகுப்பில் அடங்கும்.

1932ல் ஏரவாடா சிறையில் 'அண்ணல்' மேற்கொண்ட உண்ணா நோன்பு குறித்து 'மகா வம்சம்' நூல் அதே ஆண்டில் வெளியானது. அண்ணல் காந்தி குறித்த ஆய்வுகள் புத்துயிர் பெற்றுள்ள இக்காலத்தில் ஆய்வாளர்கள் இவரது நூல் சேகரிப்பு நோக்கி பயணிப்பதன் மூலம் வரலாற்றில் ஒலித்த ஒரு மகாத்மாவின் முழு வரலாற்று முகத்தை அறியலாம்.

'மனிதக் குரல் ஒலிக்காத இடத்தில் புத்தகங்கள் மடிந்து விடும்' என வாழ்நாளெல்லாம் உச்சரித்தபடி பயணித்த ரோசா முத்தையாவின் மூச்சு 1992ல் பிரிந்தது. முத்தையா அவர்களின் மறைவுக்குப் பின் "ஒரு புகழ் பெற்ற நூலகம் விற்பனைக்கு" என அவரது குடும்பத்தாரால் விளம்பரம் வெளியிடப்பட்டது.

எழுத்தாளர் 'அம்பையின்' கோரிக்கையை ஏற்று 'சிக்காகோ பல்கலைக்கழகத்தின்' ஆசியப்பிரிவு தலைவர் 'ஜேம்ஸ் நை' முன் முயற்சியில் " ரோசா முத்தையா ஆராய்ச்சி நூலகம்" சென்னை, தரமணியில் 1994ல் உருவாக்கப்பட்டது. ரோசா முத்தையாவின் சேகரிப்பான 1,20,00க்கு மேற்பட்ட நூல்கள், இதழ்கள், செய்தித்தாள்களுடன் இந்நூலகத்தின் தொடக்கம் அமைந்தது.

மேற்குலகத்துத் தமிழை ஆழமாக அறிமுகம் செய்த ஏ.கே. ராமானுஜத்தின் புத்தகத் தொகுப்பும் இப்பொழுது இந்நூலகத்துடன் இணைந்துள்ளது. இன்று நூலகத்தின் புத்தக எண்ணிக்கை நாலு இலட்சத்தை கடந்து கம்பீர பொக்கிஷமாக நிமிர்ந்து நிற்கிறது.

இன்று நூலகத்தின் புத்தக எண்ணிக்கை நாலு இலட்சத்தை கடந்து கம்பீர பொக்கிஷமாக நிமிர்ந்து நிற்கிறது. இந்நூலகம் இணைய வழி பட்டியலிடுதலில் முன்னோடியாகத் திகழ்கிறது.

யாழ்ப்பாண நூலக எரிப்பு தமிழ் மக்களின் இதயத்தில் கீறிய ரணத்தின் தீராத வடுவிலிருந்து வெளிப்பட்ட முயற்சியே புத்தக சேகரிப்பும் இந்நூலகமும். இது நகரத்தார் வரலாறு குறித்த ஆய்வல்ல; வாசிப்பிற்கும், புத்தக சேகரிப்புக்குமான சிறு பொறியைக் கிளர்ந்தெழச் செய்வதற்கான எளிய முயற்சியே இப்பதிவு. நூலக வித்தகரின் பயணம் தொடர்கிறது...

-  துரைஅறிவழகன்

Pin It