ஒரு ஊர்ல........ஒரு ராஜா இருந்தான்..........என்னடா புதுக்கதை என்று தலைப்பு எழுதிவிட்டு ராஜாகாலத்திற்கு அழைத்துக்கொண்டு போகிறானே என்று புத்தகத்தை மூடிவிட வேண்டாம். பழசு தெரிந்தால்தான் புதுசு புரியும் என்பதால் ராஜாவில் இருந்து ஆரம்பிக்கிறேன்.

அந்த ராஜாவின் ஆட்சியில் மக்கள் சந்தோஷமாக இருந்தார்கள். வயலில் உழுது, விதைத்து, அறுத்துக்கொண்டுவர தனியாக ஆட்கள் இருந்தார்கள்.

அதுபோல ராஜாவுக்கு ஆலோசனை சொல்வதற்கு...
மக்களுக்குத் தேவையான சாமான்களை வாங்கிக் கொண்டுவந்து விற்பதற்கு... துணிகளை நெய்து கொடுப்பதற்கு...
மரச்சாமான்களை செய்து கொடுப்பதற்கு...
துணிகளைத் துவைத்துக் கொடுப்பதற்கு...
அழுக்கான மூஞ்சியை அழகாக்கிக் கொடுப்பதற்கு...
குழந்தை பிறந்த செய்தியைச் சொல்லுவதற்கு...
அதைப்போலவே இறந்த செய்தியையும் சொல்லுவதற்கு...
சட்டிப்பானைகள் செய்துகொடுப்பதற்கு...
மாடுமேய்த்து பால்கறந்து கொடுப்பதற்கு...
செத்தவர்களை எரிப்பதற்கு, புதைப்பதற்கு...
என்றும் தனித்தனியாக ஆட்கள் இருந்தார்கள்.

இந்த ஆட்கள் எல்லாம் அவர்களுடைய வேலையை கண்ணும் கருத்துமாக செய்துவந்ததால் வெட்டிப்பேச்சு பேச நேரமில்லாமல் போயிற்று. ஒரே தொழில் செய்து வந்தவர்கள் தொழிலை நன்றாக செய்ய வேண்டுமே என்ற அக்கறையினால் அவர்களுக்குள்ளே பெண் எடுத்துக்கொண்டனர். பெண் கொடுத்துக்கொண்டனர்.

அந்த ராஜா ரொம்ப நல்லவன். தனக்காக வரிப்பணமும் கொடுத்து, உழைப்பையும் கொடுக்கும் மக்கள் நல்லவர்களாக இருக்கவேண்டும் என்பதற்காக எல்லோரும் படிக்க வேண்டும் என்று உத்தரவு போட்டான். பாடம் சொல்லிக் கொடுப்பதற்காக படித்தவர்களையும் பள்ளிக்கூடத்தையும் ஏற்பாடு செய்தான்.

அந்த ராஜா ரொம்பநேரம் அந்தப்புரத்திலேயே இருந்தான். அவனுக்கு ஆலோசனை சொல்வதற்காக இருந்த ஆட்களுக்கு எப்போதாவதுதான் வேலை இருக்கும். ஓய்வுநேரம் அதிகமாக இருந்ததால் அவர்கள் ஒழுங்காக பள்ளிக்கூடம் போய் பாடங்களைப் படித்துக் கொண்டார்கள். நிறைய புத்தகங்களைப் படித்தார்கள். படித்துக்கொண்டே இருந்தார்கள். ராஜா அவர்களை மரியாதையோடு அறிவாளிகள் என்று அழைத்தான்.

மற்றவர்கள் அவர்களுடைய வேலையிலேயே கண்ணும் கருத்துமாக இருந்து உழைத்துக் களைத்துப் போனார்கள். அடுத்தநாள் உழைப்பதற்காக அவர்களுக்கு அதிகமாக ஓய்வு தேவைப்பட்டது. அவர்களில சிலர் ஆரம்பத்தில் ஒழுங்காகப் பள்ளிக்கூடம் போனார்கள். நாள் ஆக ஆக அவர்களும் பள்ளிக்கூடம போவதற்கு நேரமில்லாமல் போயிற்று. பள்ளிக்கூடத்தை மறந்தே போனார்கள்.

பள்ளிக்கூடம் ஒன்று இருப்பதை பிள்ளைகளுக்கு சொல்லக்கூட மறந்து போனார்கள். அதனால் ராஜா அவர்களை உழைப்பாளிகள் என்று அழைத்தான். அப்படியிருந்தும் அவர்களில் சிலர் கஷ்டப்பட்டு பாடங்களைப் படித்துக் கொண்டார்கள்.

அறிவாளிகளாக இருந்தவர்கள் ராஜாவின் பக்கத்திலேயே அதிக நேரம் இருந்தார்கள். அவர்களுடைய அறிவினால் ராஜாவுக்கு நல்லதும் கெட்டதுமான யோசனைகளை சொல்லிக் கொடுத்தார்கள். ஆனால் தங்களைத் தவிர மற்றவர்கள் ராஜாவை நெருங்கிவிடாமல் கவனமாக பார்த்துக் கொண்டார்கள். அதிலும், உழைப்பாளிகளுக்குள் சில அறிவாளிகள் இருந்தார்கள் இல்லையா? அவர்களை ராஜாவின் பக்கத்தில் அண்டவிடாதபடி கவனமாக இருந்தார்கள்.

கொஞ்சநாளில் அந்த ராஜா செத்துப்போகாமல் இறந்துபோனான். அவனுக்குப் பிறகு அவனுடைய மகன் ராஜாவோட நாற்காலியில் உட்கார்ந்து அதிகாரம் செய்தான். அப்பனைவிடவும் அவன் புத்திசாலியாகவும் விவேகமுள்ளவனாகவும் இருந்ததினால் மக்கள் எல்லோரும் தங்களுடைய குறைகளை மனுவாக எழுதி தன்னிடம் நேரில் கொடுக்கலாம் என்றும் அப்படி மனுகொடுக்கும் நாளுக்கு மனுநீதிநாள் என்றும் பெயர் வைத்தான்.

ஒருநாள் நாங்கள் இருந்த ஊருக்கு ராஜா வரப்போவதாகவும், மக்கள் தங்களுக்கு உள்ள குறைகளை எழுதி ராஜாவிடம் கொடுக்கலாம் என்றும் உழைத்துக்களைத்து உறங்கிக் கொண்டிருந்த எங்களை தப்படித்து எழுப்பிச் சொல்லிவிட்டுப் போனார்கள். நாங்களும் எங்களுக்குத் தெரிந்த அறிவாளிகளின் கையைக் காலைப் பிடித்து ஒரு மனு எழுதி ராஜாகிட்ட கொண்டு போனோம். அந்த மனுவை எல்லோரும் கேட்கும்படி உரக்கப் படிக்கமாறு ராஜா உத்திரவு போட்டான். அதை எழுதிக்கொடுத்தவனே அதை உரக்கப் படித்தான்.

உழுது விதைத்து அறுக்கிற ஆளுகளுக்கு கலப்பையும் அரிவாளும் தேய்ந்து போய்விட்டதால் புதியது வாங்க காசு வேண்டும்.

தப்படித்து சேதி சொல்லும் ஆட்களுக்கு புது தப்பு வாங்க காசு வேண்டும்.

துணிநெய்து கொடுப்பவர்களுக்கு புது தறி வாங்க காசு வேண்டும். மரவேலை, நகை வேலை செய்பவர்களுக்கு புது சுத்தியல் குறடு வாங்க காசு வேண்டும்.

அழுக்கு மூஞ்சியைத் துடைத்து அழகாக மாற்றுபவர்களுக்கு புது துண்டும், புது கத்தரிக்கோலும் வாங்க காசு வேண்டும்.

துணிதுவைக்கிற ஆளுகளுக்கு பழைய பாறாங்கல் தேய்ந்துபோய்விட்டதால் புது பாறாங்கல் வாங்க காசு வேண்டும். சட்டிப்பானை செய்பவர்கள் மண் மிதித்து மிதித்து கால் வலிப்பதால் காலுக்கு தைலம் வாங்க காசு வேண்டும்.

சாமான்களை வாங்கி விற்பவர்கள் இன்னும் புதுப்புது சாமான்களை வெளிநாடுகளில் இருந்து வாங்கி விற்க வேண்டியிருப்பதால் வட்டியில்லாமல் ராஜா கடன் தரவேண்டும். கடனை திருப்பிக்கொடுக்காமல் போனால்கூட ராஜா கேட்கக்கூடாது.

பள்ளிக்கூடம் போய் இதுவரை படித்துவந்தவர்கள் எல்லா புத்தகங்களையும் படித்து முடித்துவிட்டதால் பக்கத்து நாடுகளில் உள்ள புத்தகங்களைப் படிக்க ராஜாவே அவருடைய செலவில் அவர்களை அனுப்பிவைக்க வேண்டும்.

இதையெல்லாம் ராஜா கவனமாகக் கேட்டான். மனு கொடுக்க வந்திருந்தவர்களையெல்லாம் உற்றுப் பார்த்தான். செருப்பில்லாத கால்களோடு நின்ற சட்டைபோடாத ஆளுகள் மட்டும் ஓர் ஓரமாக ஒதுங்கி நின்றுகொண்டிருப்பதைப் பார்த்தான். அவனுக்கு அறிவும் விவேகமும் இருந்தது. கருத்த உடம்பையும் வியர்வை நாற்றத்தையும் புரிந்துகொண்டான். மூக்கைப் பொத்திக் கொள்ளாமல் சொன்னான்:

''ஆகட்டும் பார்க்கலாம். நல்லா யோசிச்சு ஒரு முடிவு எடுப்போம்ணேன்.''

ராஜா அறிவாளி மட்டுமில்லாமல் விவேகமுள்ளவன் என்று முன்னாடியே சொன்னேன் இல்லையா?

கொஞ்சநாள் கழித்து ராஜா தானாக யோசித்து முடிவெடுத்து இப்படி உத்திரவு போட்டான்.

உழைப்பாளிகள் எல்லோரும் படிப்பைவிட வயிற்றுப்பசியையே முக்கியம் என்று நினைத்தபடியால் அவர்கள் பள்ளிக்கூடம் போகவில்லை. இனிமேல் அவர்கள் எல்லோரும் பள்ளிக்கூடம் போயே ஆகவேண்டும். அவர்களுக்கத் தேவையான உணவு ராஜா வீட்டில் இருந்து கொடுக்கப்படும். உழைப்பாளிகளுடைய வேலை இனிமேல் படிப்பது மட்டும்தான்.

அதாவது, அறிவாளிகளே உழுது, விதைத்து, அறுத்து உணவு சமைத்துக்கொள்ள வேண்டும். அறிவாளிகளே மாடுமேய்த்து, பால்கறந்து நெய் எடுத்துக் கொள்ளவேண்டும்.

அறிவாளிகளே அவர்களுடைய அழுக்குத் துணிகளைத் துவைத்துக்கொள்ள வேண்டும். அறிவாளிகளே அவர்களுடைய வேட்டி சேலையை நெய்துகொள்ள வேண்டும்.

அறிவாளிகளே அவர்களுக்குத் தேவையான சட்டிப் பானைகளை செய்துகொள்ள வேண்டும். அறிவாளிகளே அவர்களுடைய அழுக்கு மூஞ்சியையும் பரட்டைத் தலையையும் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.

அறிவாளிகளே அவர்கள் வீட்டில் விழும் செத்த பிணங்களை சுடுகாட்டில் கண்விழித்து எரித்துக்கொள்ள வேண்டும். அறிவாளிகளே மரம் ஏறி தேங்காய் பறித்துக்கொள்ள வேண்டும். இப்படி ஒரு உத்திரவை ராஜா போட்டபின் யாராவது மீறமுடியுமா? இப்போது என்றால் ப்பூ என்று ஊதிவிட்டு நம்ம பாட்டுக்குக் போய்க் கொண்டிருக்கலாம்.

உழைப்பாளிகள் எல்லோரும் படிக்க ஆரம்பித்துவிட்டார்கள். அவர்களுக்குத் தேவையான சாப்பாடு ராஜா வீட்டிலிருந்து டாண் டாண் என்று போய்க் கொண்டிருந்தது.

அறிவாளிகள் பழக்கமில்லாத வேலையை தட்டுத் தடுமாறி செய்து கொண்டிருந்தார்கள். அவர்களுடைய பிள்ளைகளுக்கும் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். இதனால் அறிவாளிகளின் பிள்ளைகள் பள்ளிக்கூடம் போகமுடியாமற் போனது. நாளடைவில் பள்ளிக்கூடத்தை மறந்துபோகவும் தொடங்கினார்கள்.

அறிவாளிகள் தப்பும் தவறுமாக உழுதார்கள். கலப்பை காலில் குத்தியது. காலம் தவறி விதைத்தார்கள். அறுக்கும்போது கைகளில் வெட்டிக்கொண்டார்கள்.

தேங்காய் பறிக்க மரம் ஏறியவர்கள் தேங்காய் மாதிரி தொப் என்று விழுந்தார்கள். மாடு மேய்க்கப் போன அறிவாளிகளை மாடுகளே முட்டித்தள்ளிவிட்டு தப்பி ஓடின. சுடுகாட்டில் நாய்கள் துரத்தியதால் செத்த பிணங்களை எரிக்காமலேயே போட்டுவிட்டு ஒடிவந்தனர்.

அவர்கள் நெய்த வேட்டியில் ஓட்டையும் சேலையில் பொத்தலும் இருந்ததால் அவர்கள் வீட்டுப் பிள்ளைகளே அவர்களை கேலி செய்தனர்.

இப்படியெல்லாம் அறிவாளிகள் பட்ட கஷ்டம் கொஞ்சமில்லை நஞ்சமில்லை. அவர்கள் கூட்டமாக ராஜாவிடம் போய் மனு கொடுத்தார்கள். அழுதார்கள். அவர்களோட மனுவை உரக்கப் படிக்குமாறு ராஜா உத்திரவு போட்டான். அவர்களில் சிவப்பாக குடுமி வைத்திருந்த ஒருவன் மனுவைப் படித்தான்.

உழைப்பாளிகளுக்கு ராஜா வீட்டில் இருந்து சாப்பாடு போவதில் எங்களுக்குப் பரம சந்தோஷம். உழைப்பாளிகள் பள்ளிக்கூடம் போவதில் எங்களுக்குப் பரம சந்தோஷம். உழைப்பாளிகளுடைய வேலையை நாங்களும் கற்றுக்கொண்டு செய்வதில் எங்களுக்குப் பரம சந்தோஷம்.

இத்தனை காலம் கழித்து உழைப்பாளிகள் பள்ளிக்கூடம் போக ஆரம்பித்து இருப்பதால் நாங்கள் படித்த புத்தகங்களில் பாதியை அவர்கள் படித்து முடித்தாலே போதும். ராஜா அவர்களையும் அறிவாளிகள் என்று அங்கீகாரம் செய்யலாம்.

இதையெல்லாம் கேட்ட ராஜா நீங்கள் சொல்ல வந்ததை சுருக்கமாக புரியும்படி சொல்லுங்கள் என்று உத்தரவு போட்டான்.

எல்லோரும் எல்லா தொழிலையும் செய்யவும். எல்லோரும் பள்ளிக்கூடம் போய் படிக்கவும், எல்லோரும் ராஜா வீட்டிலேயே சாப்பிடவும், உத்திரவு போடவேண்டும் என்று கேட்கிறோம்.

ராஜா உத்திரவு போட்டான்.

''ஆகட்டும்.''

- மு.குருமூர்த்தி

Pin It