சமீபத்தில் வெளியான உலகப் பிரசித்தி பெற்ற பத்திரிகையின் பெண்களுக்கான பாதுகாப்பு குறித்த சர்வே நமது தேசத்திற்கு கடைசி வரிசையிலேயே இடம் அளித்துள்ளது. இந்த சர்வே ஆளும் பாஜக ஆட்சிக்கு எதிரான சதி என்று அரசியல் ரீதியான குற்றசாட்டுகள் ஒருபுறம் இருந்தாலும், பெண்கள் பாதுகாப்பு குறிப்பாக பெண் குழந்தைகள் பாதுகாப்பு விஷயத்தில் நமது தேசத்தின் உண்மை நிலவரம் மிகவும் கவலை அளிப்பதாகவே உள்ளது.

மத்திய அரசின், பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம், குழந்தைகள் மீதான அத்துமீறல் பற்றிய ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில், சிறு குழந்தைகள், குறிப்பாக பெண் குழந்தைகள் 5 முதல் 12 வயதிற்குட்பட்டோர் அதிகளவில் அத்துமீறலுக்கு ஆளாகிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளது. உடல் ரீதியான அத்துமீறல், பாலியல் வன்முறை, உணர்வு ரீதியான அத்துமீறல் என்பவை பெண் குழந்தைகள் சந்திக்கும் முக்கியமான அத்துமீறல்களாகும்.

Pedophiliaபெண் குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் என்பது இனம், சமூக நிலை அல்லது பொருளாதாரப் பிரிவுகளைத் தாண்டியது. பாலியல் வன்முறை பெண் குழந்தைகளின் மன நலனில் நீண்ட காலப் பாதிப்புகளைக் கொண்டிருக்கும். குழந்தைப் பாலியல் வன்முறையின் உடனடித் தாக்கமானது, குழந்தைகள் மற்றவர்களிடம் இருந்து ஒதுங்கி இருத்தல் , சிறு சிறு விஷயங்களுக்குக் கூட பயப்படுதல் அல்லது சில நிகழ்வுகளில் கோபம் ஆகியவையாக இருக்கலாம் மற்றும் குழந்தை மனச்சோர்வு, PTSD போன்ற குறைபாடுகளாக இருக்கும். தொலைநோக்கில் பார்க்கும்போது, சிறுவயதில் துன்புறுத்தலை அனுபவித்த குழந்தை எதிர்மறைச் சுயபார்வை கொண்டிருக்கலாம், பிறரை நம்பச் சிரமப்படலாம், மற்றும் அவர்களுடைய வாழ்க்கை முழுவதும் வன்முறையான உறவுகளுடன் இருக்கலாம். துன்புறுத்தலால் வருந்திய குழந்தை பதின்பருவம் மற்றும் பருவ வயதை அடையும் போது மனநலப் பிரச்னைகள் உண்டாவதற்கான சாத்தியங்கள் அதிகம் உள்ளன.

பெண் குழந்தைகளின் மீதான பாலியல் வன்முறைக்குப் பின்னால் இருக்கும் மிக முக்கிய காரணம் பெற்றோர்களின் அறியாமை மற்றும் அலட்சியமே. படிப்பு அறிவில்லாத பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் மிகப் பெரிய பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாவது மட்டுமே பாலியல் வன்முறை என்று நினைக்கின்றனர். குழந்தைகளின் அன்றாட நிகழ்வுகளில் குறிப்பிடத்தக்க மாற்றம் தெரிந்தால் அதற்குப் பின்னால் இது போன்ற பாலியல் அல்லது உளவியல் ரீதியான பிரச்சனைகள் இருக்கும் என்பதை உணரும் அறிவு அவர்களுக்கு இருப்பதில்லை.

படித்த பெற்றோர்கள் பெரும்பலான சமயங்களில் படிக்காதவர்களை விட அறிவில்லாதவர்களாகவே நடந்து கொள்கின்றனர். இன்றைய இளம் தலைமுறையினருக்கு சம கால அரசியல் மற்றும் சமூக அறிவு என்பது பெரும்பாலும் பூஜ்ஜியமாகவே உள்ளது. இது போன்ற படித்த முட்டாள்களுக்கு வாழ்க்கை என்பது ஒரு கார்ப்பொரேட் கம்பெனியில் பெரிய சம்பளம், நகரின் நல்ல இடத்தில் ஒரு வீடு, கார் மற்றும் வார இறுதியில் காமெடி என்ற பெயரில் திராபையான ஒரு திரைப்படம் அவ்வளவே. தங்களைச் சுற்றி நடக்கும் அரசியல் மற்றும் சமூக விஷயங்களுக்குப் பின்னால் இருக்கும் சதி அல்லது காரணம் புரிவதில்லை. புகழ் பெற்ற ஜெர்மானிய நாடக ஆசிரியரும், கவிஞருமான Bertolt Brecht 'அறியாமையில் மிக பெரிய அறியாமை அரசியல் மற்றும் சமூக அறியாமையே' என்று கூறுகிறார். இது போன்ற படித்த முட்டாள்களுக்கு தங்களுக்கு அரசியல் ஆர்வம் இல்லை அல்லது I Hate Politics என்று சொல்லிக் கொள்வதில் பெருமை வேறு. அண்ணா நகரில் ஆயிரம் பள்ளி மற்றும் கல்லூரிகள் இருந்தும் அஸ்ஸாமிற்குச் சென்று நீட் தேர்வு எழுத வேண்டிய நிர்பந்தத்திற்குப் பின்னால் இருக்கும் அரசியல் மற்றும் சமூகக் காரணங்கள் புரிவதில்லை. நாளை அவர்கள் வீட்டில் இது போன்ற ஒரு நிகழ்வு நடந்தால் என்ன செய்ய வேண்டும் என்ற அடிப்படை அறிவு கூட இருப்பதில்லை. பெண் குழந்தை பாலியல் வன்முறை தொடர்பான பத்தில் எட்டு வழக்குகள் படிப்பறிவில்லாத மற்றும் பெரிய பின்புலம் இல்லாத பெற்றோர்களாலே பதிவு செய்யப்படுகின்றது. குழந்தைப் பாலியல் வன்முறை நிகழ்வு புகார் அளிக்கப்படவில்லையெனில், குற்றம் புரிந்தவர் தண்டனையின்றிச் செல்வதோடு, தொடர்ந்து மற்ற குழந்தைகளைத் துன்புறுத்தலாம். இது போன்ற சம்பவங்களில் படித்தவர்களை விட படிக்காதவர்களே துணிந்து காவல் நிலையம் மற்றும் நீதிமன்றத்தை நாடுகிறார்கள்.

இந்திய அரசால் உருவாக்கப்பட்ட POCSO சட்டம் (பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல்) குழந்தைகள் பாலியல் வன்முறைகளைப் புகார் அளிப்பதைக் கட்டாயமாக்குகிறது (மருத்துவமனைகள் புகார் அளிக்கக் கடமைப்படுத்தப்பட்டுள்ளன). குற்றம் புரிந்தவருக்கு எதிராகக் குழந்தையின் குடும்பத்தினர் வழக்கைப் பதிவு செய்யத் தீர்மானித்தால், சட்டம் குழந்தையைப் பாதுகாக்கப் பல விதிகளை வழங்குகிறது. எடுத்துக்காட்டாக, குழந்தையின் வாக்குமூலம் நம்பகமான ஒரு பெரியவரின் முன்பு பதிவு செய்யப்படுகிறது. வழக்கின் போது அல்லது அதன்பிறகு குழந்தையின் அடையாளம் ஒருபோதும் வெளியிடப்படாது. குழந்தையின் உதவிக்காக நீதிமன்றத்தில் நிபுணர்கள் உள்ளனர் (எகா: ஆலோசகர், சிறப்புக் கல்வியாளர், மொழிபெயர்ப்பாளர்).

பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகளில் 50-60% சம்பவங்கள் பாதிக்கப்பட்ட குழந்தையின் குடும்பத்திற்கு நெருக்கமான நபர்களாலேயே நிகழ்கின்றது. இது போன்ற சம்பவங்களில் கைது செய்யப்பட்டவர்களிடம் நடைபெற்ற விசாரணைகள் குறித்த தகவல்கள் சொல்லும் அதிர்ச்சியான உண்மை என்னவெனில், குற்றவாளிகளை அத்தகைய செயலைச் செய்யத் தூண்டியது அந்தக் குழந்தைகளின் பெற்றோர் அல்லது குடும்ப உறுப்பினர்கள் மீதான கோபமே. ஒரு குடும்பத்தைச் சேர்ந்த பெரியவர்களைப் பழிவாங்குவதற்கு அந்த குடும்பத்துப் பெண் குழந்தைகளை சீரழித்தால் போதும் போன்ற எண்ணம் தோன்றுவதற்கு முக்கிய காரணம் பிற்போக்கான நமது சமூகக் கோட்பாடுகளே. ஒரு குடும்பத்தின் கெளரவம் அல்லது பெருமை என்பது அந்தக் குடும்பத்தில் உள்ள பெண்களின் உடல் ரீதியான தூய்மையை வைத்தே இங்கு கட்டமைக்கப்படுகின்றது. ஒரு குடும்பத்தில் உள்ள பெண்கள் உடல் ரீதியான பாதிப்புக்கு உள்ளாவது என்பது குற்றவியல் நிகழ்வாக பார்க்கப்படாமல் மிக பெரிய இழுக்காக அல்லது கௌரவப் பிரச்னையாக பார்க்கப்படுவது இன்னும் இந்த சமூகம் பெண்ணடிமைத்தனத்தில் மூழ்கிக் கிடைப்பதையே காட்டுகிறது.

இயற்கையின் பரிணாம வளர்ச்சியில் பெண்களுக்கும் ஆண்களுக்கும் உள்ள உடல் ரீதியான வேறுபாடுகள் ஆணாதிக்க சமூகத்தால் இங்கு கடவுள் நம்பிக்கை மற்றும் குடும்ப பழக்க வழக்கங்களோடு நுட்பமாக தொடர்பு படுத்தப்படுகின்றது. கார்ப்பொரேட் கம்பனிகள் கூட தங்கள் விளம்பரங்களில் எங்கள் கம்பெனி நாப்கினை உபயோகித்தால் நீளம் தாண்டலாம், டென்னிஸ் விளையாடலாம் என்று காட்டுகின்றனவே அன்றி எங்கள் கம்பெனி நாப்கினை உபயோகப்படுத்தினால் கோவிலுக்குச் செல்லலாம் அல்லது வீடு பூஜை அறையில் விளக்கேற்றலாம் என்று சொல்வது இல்லை.

பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பெற்றோர்கள் இது போன்ற சமூக அவலங்களை எதிர்த்து புரட்சி செய்யா விட்டாலும் இதற்குப் பின்னால் உள்ள உளவியல் ரீதியான காரணங்களைப் புரிந்து கொள்ள வேண்டும். Pedophilia (ஃபிடோஃபிலியா) இந்த சொல்லை பலரும் அறிந்திருக்க மாட்டர்கள். Pedophilia என்றால் வயதுவந்தோருக்கு, சிறுவர்கள் மீது இருக்கும் பாலியல் இச்சையாகும். உண்மையில் இந்த Pedophilia என்பது ஒரு மன நோயாகக் கருதப்படுகிறது. Pedophilia நோய்த்தாக்கம் பொதுவாக ஆண்களிடையே அதிகம் காணப்படும். இத்தகைய பாதிப்புக்கு உள்ளானவர்களின் நடவடிக்கைள் சிறிவர், சிறுமியருக்கு பாலியல் படங்களைக் காண்பித்தல் போன்றவையாக இருக்கும். இத்தகைய நோயாளிகள் பெரும்பாலும் தமது அண்டைவீடு, அல்லது உறவினர்களின் குழந்தைகளையே பொதுவாக தமக்கு இரையாக்குவார்கள். சம்பந்தப்பட்டவர்களை நீங்கள் இனங்காண்பீர்களானால், உடனடியாக அவர்களது குடும்ப உறுப்பினர்களிடம் பேசி மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள். நட்பு, உறவு, முகம் கருதி தட்டிக் கழித்தீர்களானால், அவரின் எதிர்காலத்திற்கும் பல குழந்தைகளின் எதிர்காலத்திற்கும் பெரிய ஆபத்தாக‌ அமையும்.

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் இது போன்ற விஷயங்களை விவாதிக்கத் தயங்கக் கூடாது. குழந்தைகளுக்கு good touch, bad touch போன்ற விஷயங்களை விளக்க வேண்டும். குழந்தைகள் அன்றாட வாழ்வில் யாரோடு பழகுகிறார்கள் (school cab driver, tuition master) என்ற விவரங்களைத் தெரிந்து வைத்திருத்தல் அவசியம். குழந்தைகளின் அன்றாட நடவடிக்கைகளில் குறிப்பான மாற்றம் தெரிந்தால் அலட்சியம் செய்யாமல் உடனடியாக அத்தகைய மாற்றத்திற்கு காரணம் என்னவென தெரிந்து கொள்ள வேண்டும். நெருடலான விஷயமாக இருந்தால் உடனடியாக காவல் துறை அல்லது குழந்தைகள் நல உதவி எண்ணைத் தொடர்பு கொள்ள வேண்டும்.

பெண்கள் விடுதலை அடையாமல் இந்த தேசம் விடுதலை அடைய முடியாது என்ற உண்மையை உணர்ந்த காரணத்தினாலே நாடு விடுதலை அடைய போராடிய தலைவர்கள் மற்றும் சமூக சிந்தனையாளர்கள் பெண் விடுதலைக்கும் சேர்த்தே போராடினார்கள்.

இன்றைக்கும் உலக வல்லரசான அமெரிக்காவோ அல்லது செல்வச் செழிப்பு மிக்க வளைகுடா (GULF) தேசங்களோ மிகவும் மகிழ்ச்சியான நாடுகளாக இல்லை. பொருளாதார வசதிகளில் சற்று பின் தங்கியிருந்தாலும் பெண் உரிமைகள் அதிகம் பேணும் ஐரோப்பிய நாடுகளே மகிழ்ச்சியான நாடுகளாக உள்ளன.

பெண்களை நதியாக, நாடாக , தெய்வமாக ஒரு பெரிய புனித பிம்பத்தில் அடக்காமல் தனக்கு இருக்கும் எல்லா உரிமைகளும் உணர்வுகளும் உள்ள ஒரு சக உயிராக இந்த சமூகம் பார்க்குமானால் அதுவே உண்மையாண பெண் விடுதலையாகும்.

- கல்யாண குமார்

Pin It