சிண்டரெல்லா, சின்னச் சின்ன வளையல்கள், ரோஜாப்பூ, பட்டுப் பாவாடை, பளிங்குச் சிரிப்பு. பெண் குழந்தை என்றதுமே எத்தனையோ இனிய விஷயங்கள் நினைவை நிறைக்கின்றன! வீட்டுக்குள் வெள்ளிக் கொலுசுகள் சிணுங்க, ஓடிவிளையாடும் பெண் குழந்தை - ஒவ்வொரு குடும்பத்திலும் உலவிடும், உலக அதிசயம் ஆவாள்.

Female Childவையத்தின் இயக்கத்துக்கு உயிரூட்டமாய் இருக்கின்ற பெண், மிகவும் மென்மையானவள். ஒவ்வொரு பெண் குழந்தையும் கண்மணியைப் போல போற்றி வளர்க்கப் பட வேண்டியவள். ஆயினும், இனிமையான இந்த விஷயங்களைத் தாண்டி, பெண் குழந்தைகள் எதிர்கொள்ளும் அவலங்கள் ஏராளம். இது பெண்ணுரிமை கேட்டு வாதிடப்போகும் கட்டுரை அல்ல.

சமூகம், அரசியல், வேலைச் சந்தை ஆகியவற்றில் இடம் ஒதுக்குங்கள் என்று கொடிதூக்கப் போவதுமில்லை. எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும், அவற்றைச் சவாலாக ஏற்று, மிகப் பெரிய பதவிகளை அடைந்திருக்கிறாள் பெண். நினைத்துப் பார்க்கவே முடியாத சாதனைகளை நிகழ்த்திக் காட்டியிருக்கிறாள். ஆனால், இந்த வெற்றிகளைத் தாண்டி, நம்மில் பலர் புறக்கணித்து வரும், மறைமுகமான, மிக பயங்கரமான பிரச்னை ஒன்று இருக்கிறது.

அது - பெருமளவில், பெண் குழந்தைகளை, நிரந்தரமான மனக் குமுறலுக்கு ஆளாக்கவல்ல பாலியல் முறைகேடு என்கிற குற்றமாகும். ஆண் குழந்தைகளும் இந்த கொடூரத்திலிருந்து தப்புவதில்லை. என்றாலும், மூன்றில் ஒரு பெண் சிசு இந்த அரக்கத்தனத்துக்கு பலியாகின்றாள்! இது இலேசான விஷயமே அல்ல.

யதார்த்தம்:

இந்த விஷயத்தைப் பற்றி இப்போது பேச வேண்டாமே! இதனை, இப்படி வெளிப்படையாக பேசத்தான் வேண்டுமா? என்று பலர் நினைக்கலாம். ஆனால், பொதுவாக மழலையர் கதைகளில் வருவதுபோல, இனி எல்லாம் சுகமாக முடிந்தது, என்று, இந்த ரகசிய பலாத்காரத்தை ஒதுக்கிவிடலாகாது.

தங்கள் செல்ல மகள், மகன் மீது உண்மையான அக்கறை கொண்ட ஒவ்வொரு தாய், மற்றும் தகப்பனும், இந்த கருத்துக்களை, ஆராய்ச்சி முடிவுகளை, புள்ளி விவரங்களை முகம் சுளிக்காமல், மனம் கோணாமல், நிதானமாக புரிந்து கொள்ளவேண்டும். கண்ணுக்குத் தெரியாத இந்த கொடுமையினை இனங்கண்டு, விழிப்புணர்வோடு நடந்துகொள்ள வேண்டும்.

இந்த கோடூரத்தைப் பற்றி கண்டும் காணாமல் இருந்து விடுவோமானால், உலகறியாத பிஞ்சுகளுக்கு நாம் புறமுதுகு காட்டுகின்றோம். சத்தமே இல்லாமல் நிகழும் இந்த நயவஞ்சகத்தை, நிறுத்தத் துணியாமல், அப்பாவியான குழந்தைகளை, அமைதியில் குமுற விடுகின்றோம். இந்தத் தீமையிலிருந்து முகத்தைத் திருப்பிக் கொள்வது, ஒளிந்திருக்கும் கொடூரமான விலங்கினை பாதுகாப்பது போன்றதாகும்.

தெரியாதவங்க கிட்ட பேசக் கூடாது. வெளி ஆளுங்க மிட்டாய் கொடுத்தா வாங்கிக்க கூடாது. இவை பொதுவாக நாம் குழந்தைகளுக்கு சொல்லித் தரும் போதனை. இல்லையா? நாம் அன்போடு சொன்னால் குழந்தைகள் கேட்பார்கள். அதனால் வெளியாட்கள் இடமிருந்து தன்னைத் தானே பாதுக்காத்துக் கொள்கின்றார்கள்.

ஆனால். ஒருவேளை, ஒன்று விட்ட மாமா, நெருங்கிய தோழியின் கணவர், பக்கத்து வீட்டு நடுத்தர வயது அங்கிள், பணியாள் என்று நீங்கள் சற்றும் சந்தேகிக்கவே இயலாத போர்வைக்குள், உங்கள் குடும்பத்தில் ஒருவராக, உங்கள் குழந்தைகளுடன் சுதந்திரமாக பழகும் சூழ்நிலை அமையப்பெற்ற ஒருவர், பாலியல் முறைகேட்டில் ஈடுபடுபவராக இருந்துவிட்டால்!!

அதிர்ச்சியாக இருக்கின்றது. இல்லையா? இவர்களிடமிருந்து தங்கள் குழந்தையை எப்படி பாதுகாப்பீர்கள்?

கள்ளம் கபடமறியாத குழந்தைகளுக்கு, இவர்கள் தம்மிடம் தவறாக நடந்துகொள்கிறார்கள் என்று வேறுபடுத்தி பார்க்கத் தெரிவதில்லை. அம்மா, அப்பாவிடம் இது குறித்து பேசினால், கோபப்படுவார்களோ என்று அஞ்சுகிறார்கள். இதனால், வேறு வழியறியாத குழந்தைகள் இந்த சித்ரவதையை மெளனமாக தமக்குள்ளேயே அனுபவிக்கின்றார்கள்.

உண்மை:

பொதுவாக பாலியல் ரீதியில் குழந்தைகளைத் தாக்கும் குணமுடைய நபர், தமது வாழ்நாளில், சுமார் 380 குழந்தைகளை அணுக முயற்சி செய்வாராம்! பெரும்பாலும் இந்த குற்றவாளிகள், ஆண்கள் என்றாலும், இவர்களில் சில பெண்களும் நிச்சயமாக அடக்கம். ஆய்வுகளின்படி, எல்லா பெண் குழந்தைகளும். ஆம், எல்லா பெண் குழந்தைகளும், 18 வயதுக்குள், மனநிலை பாதிக்கும் ஏதோவொரு அவலத்துக்கு ஆளாகின்றனர்.

கல்வி, சம உரிமை, வேலை வாய்ப்பு போன்றவைகளுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம், அறிவு முதிர்ச்சியடையாத வயதில், நம் சிறார்கள் எதிர்கொள்ளும் சவால்களுக்கு கொடுக்கப்படுவதில்லை. பத்தில் ஒரு பெண், சமூகம், மற்றும் குடும்ப சூழ்நிலைகளால் பாதிக்கப்படுகின்றாள் என்றால், மூன்றில் ஒரு பெண் குழந்தை தகாத பாலியல் முறைகேட்டினால் மனதளவில் பாதிக்கப்படுகின்றாள். சட்டம், மருத்துவம் போன்ற துறையினரால், குழந்தை பாலியல் பலாத்காரம் என்கிற பூதாகாரமான பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண முடிவதில்லை.

ஏனென்றால், பாதிப்பு நிகழ்ந்த பிறகே குற்றவாளி யார், பாதிக்கப்பட்ட குழந்தை யார் என்று இத்துறையினர் அறியப் பெறுகின்றனர். மேலும் சட்டம், மற்றும் மருத்துவர்கள் இந்த விஷயத்தைப் பற்றி முன்கூட்டியே குழந்தையிடம் பேச இயலாது. அதனால், பெற்றோர்கள்! பெற்றோர்களால் மட்டுமே தங்கள் குழந்தைகளை இந்த அநியாயத்திலிருந்து பாதுகாக்க முடியும்.

82 சதவிகித குழந்தைகள் அறிமுகமானவர்களால்தான் தாக்கப்படுகின்றனர். 2/3 பகுதி பாதிக்கப்பட்ட சிறு குழந்தைகள், சொந்தக்காரர்கள், அல்லது நண்பர்களினால் பாதிக்கப்பட்டுள்ளனர். எட்டு வயதுக்கு மேல் உள்ள பெண் குழந்தைகள்தான் மிக அதிகமாக பாலியல் ரீதியில் தாக்கப்படுகின்றனர்.
குழந்தைகளைப்போய்..ஏன்?

அழகுக் குழந்தைகள் அப்பாவித்தனம், வெள்ளை மனம் கொண்டவர்களாக இருப்பதினால், இந்த ஈனச் செயலின் மென் இலக்காகின்றனர்.

குழந்தையர் எப்போதும் அன்பு மற்றும் அரவணைப்பு நாடுபவர்களாக இருப்பதால், இது போன்ற பாதகர்களின் கபட கைகளுக்குள் அகப்படுகின்றனர். முதலில் இதனை அன்பின் பரிணாமமாகவே குழந்தைகள் நினைக்கின்றனர்.

தாக்கப்படுகிறோம் என்று பிஞ்சு குழந்தைகள் அறிய வாய்ப்பே இல்லை. எல்லாவற்றுக்கும் மேலாக, இதனைப் பற்றி குழந்தை பேசினாலோ, குற்றம் கூறினாலோ, அவர்களே தவறு செய்தது போல பழிக்கப்படுகின்றனர்.

பாலியல் முறைகேடு என்கிற இந்த படுபாதகமான குற்றம், பல காரணங்களால், திரைக்குப் பின்னாலேயே மறைக்கப்பட்டு வருகின்றது.

அவை -
1. நமது குடும்ப அமைப்பு. வீட்டுக்குள், குடும்பத்துக்குள் நடக்கும் விஷயங்கள் ரகசியமாக நான்கு சுவர்களுக்கு உள்ளேயே பாதுகாக்கப் பட வேண்டியவை என்கிற எண்ணம்.

2. பெரும்பாலும் குழந்தைகள் தமக்கு நேரும் அவலத்தை வெளியே கூற அஞ்சுகின்றனர்.

3. இது எங்கேயோ, யாருக்கோ நேர்கின்றது. நாம், நம் குழந்தைகள் பாதுகாப்பாக இருக்கிறோம். நமக்கு சம்பந்தமில்லாத இந்த விஷயத்தைப் பற்றி ஏன் கவலை கொள்ள வேண்டும் என்கிற உதாசீனப்போக்கு.

இந்த அறியாமையினால் எண்ணிலடங்கா பிஞ்சு இதயங்கள், உடல்கள், நிரந்தரமாக காயப்படுகின்றன! இது பொதுவாக நிகழக் கூடிய துஷ்டச்செயல். இது யாருக்கோ நேரக்கூடிய கொடுமை அல்ல.

யார்?

பாலியல் குற்றவாளிகள் பெரும்பாலும் குழந்தையின் சொந்தக்காரராக இருக்கக்கூடும். 82 சதவிகிதம், அறிமுகமானவர்களால்தான் பிள்ளைகள் தாக்கப்படுகின்றனர்.

வயதானவர், தூரத்து அத்தை, பக்கத்து வீட்டுக்காரர், ஆசிரியர்கள், குடும்ப நண்பர் என்று குழந்தையிடம் மிகவும் நெருக்கமாக பழகும் வாய்ப்பு அமையப் பெற்ற யாரும், இது போன்ற குணமுடையவராக இருக்கலாம். எல்லோரையும் சந்தேகிக்க வேண்டிய அவசியம் இல்லை. என்றாலும், விழிப்புணர்வோடு இருப்பது சாலச் சிறந்தது.

போதாக்குறைக்கு, இன்டர்நெட் என்கிற விஞ்ஞான விந்தை, உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் பாலியல் அரக்கனுக்கு, நம் குழந்தைகளின் அறைக் கதவுகளை திறந்துவிடுகின்றது. இன்டர்நெட் வாயிலாக குழந்தைகளைத் தாக்கும் குற்றவாளிகள் பற்றி பேசவேண்டுமானால், மற்றுமொரு விரிவான கட்டுரை எழுதவேண்டும்.

பாலியல் குற்றவாளிகளுள், ஆண்கள், பெண்கள், இருபது வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் ஆகியோர் அடக்கம். ஆனால் பெரும்பாலான பாலியல் பெருச்சாளிகள், 25 முதல் 40 வயதுக்குட்பட்ட ஆண்கள் தான் என்கின்றன ஆய்வுகள்.

Girlபெரும்பாலும் இந்த நாசச் செயலில் ஈடுபடும் நபர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம்.
இவர்கள் அரவணைப்பு நாடுபவர்களாக இருக்கக்கூடும். தங்களது குடும்பம், வாழ்க்கைத் துணையிடம் பெறத் தவறிய சந்தோசங்களை அவர்கள் குழந்தைகளிடம் ஈடு கட்டிக் கொள்ள நினைக்கலாம்.

சில நபர்கள், தமது ஆளுமையை வெளிப்படுத்திக்கொள்ள இந்த யுக்தியைக் கையாளுகின்றனர். பலர் பாதுகாப்பு, மற்றும் அரவணைப்பு கிடைக்காத குழந்தைப் பருவத்தை அனுபவித்திருக்கலாம். பச்சிளம் பருவத்தில் அவர்களும் பாலியல் கொடுமைகளை அனுபவித்திருக்கலாம்.

எப்படி?

சென்னை வடபழனியில், மூன்று வயது பெண்குழந்தையொன்று, கற்பழிக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நடந்திருக்கிறது. அமெரிக்காவில், கேட்கவே வேண்டாம். காணாமற் போன குழந்தைகளின் சடலங்கள் சில பல தினங்களுக்குப் பிறகு வேறு மாநிலங்களிலோ, ஊர்களிலோ கண்டறியப்படுவது நாம் மிகச் சாதாரணமாக செய்திகளில் பார்ப்பதுதான்.

இவை இந்த கொடூரச் செயலின் எல்லைகள் என்றாலும், குழந்தைகளுக்கே தெரியாமல், அவர்களை தவறான முறையில் தொடுதல், தடவிக் கொடுத்தல், அவர்கள் முன்பு ஆடைகள் இல்லாமல் தோன்றுதல் போன்றவை கண்டிக்கத்தக்க பாலியல் துஷ்டசெயல்கள்தாம்.

சமயங்களில், குழந்தைகளைத் தொடாமலேயே இந்த பலாத்காரம் நடக்கின்றது. குழந்தையிடம் தேவையில்லாத பாலியல் விஷயங்களைப் பேசுவது. தகாத உறுப்புகளை குழந்தைகளுக்கு காண்பித்தல், குழந்தையை நிர்வாணமாக பார்த்தல். இளமனங்களில் நஞ்சை விதைக்கக்கூடிய படங்கள் காட்சிகளைக் காண்பித்தல், போன்ற செயல்களும், இந்த கீழ்த்தரமான குற்றத்தின் பரிணாமங்களே.

கண்டறிவது?

குழந்தைகளின் வயதுக்கேற்ப, சூழ்நிலைக்கேற்ப அவர்களது எதிர்செயல் மாறுபடும். இதனால் பொதுவான அட்டவணைக்குள் இக்குழந்தைகளின் நடவடிக்கைகளை பட்டியலிட முடிவதில்லை. எனினும், இவ்வாறு தாக்கப்பட்ட குழந்தைகளிடம், கவனிக்கத்தக்க சில அறிகுறிகள் தென்படலாம். அவை -

1. குழந்தையின் குணாதிசியங்கள், பழக்க வழக்கங்களில் திடீர் மாற்றம்.
2. குடும்பத்திலிருந்து விலகி இருத்தல்.
3. கோபம், எரிச்சல் போன்ற குணங்களை வெளிப்படுத்துவது.
4. வழக்கத்துக்கும் மாறாக மெளனமாக இருப்பது. அல்லது அளவுக்கு அதிகமாக அழுவது.
5. ஒரு குறிப்பிட்ட நபர், அல்லது சூழ்நிலையில் வித்தியாசமாக நடந்துகொள்வது. அல்லது அந்த சூழலைத் தவிர்க்க நினைப்பது.
6. குழந்தை எதையோ மறைப்பது போல நடந்துகொள்வது.
7. சில குழந்தைகள் படுக்கையிலேயே சிறுநீர் கழித்துவிடக்கூடும்.
8. கெட்ட கனவுகள் கண்டு அலறுவது. தூக்கத்தில் மாறுதல்.
9. பொது இடங்களில், குடும்பத்தினர் முன்னிலையில், தகாதவிதத்தில் நடந்துகொள்வது.
10. தாயிடமோ, தந்தையிடமோ அதிகமாக ஒட்டிக்கொள்ளுதல், விலக அஞ்சுதல்.
11. குழந்தையின் உடலில் விளக்கமற்ற காயங்கள், கீறல்கள் போன்றவை.
12. பிறப்பு உறுப்புகளில் வலி, அரிப்பு, உதிரப்போக்கு, ஈரம் படுதல், பச்சைக் காயங்கள் போன்றவை.

மேற்கண்டவை உண்மையாக பாதிக்கப்பட்ட குழந்தைகளிடம் காணப்பட்ட அறிகுறிகள்தான் என்றாலும், இவற்றை பொதுமைப்படுத்தி அஞ்சவேண்டிய அவசியம் இல்லை. குழந்தையின் பாதுகாப்பு கருதி புதிய முடிவுகள், நடவடிக்கைகள் எடுப்பதற்கு முன்பு, சந்தேகத்தை ஊர்ஜிதப்படுத்திக் கொள்ளுதல் மிகவும் முக்கியம்.

பெரும்பாலும், குடும்பங்களில் அன்பு, அரவணைப்பு, கவனிப்பு என்பன கிடைக்கப் பெறாத பிள்ளைகள்தான் பாலியல் குற்றவாளிகளின் வஞ்சக சூழ்ச்சிக்குள் சிக்கித் தவிக்கின்றனர். காணாமற்போன, கற்பழிக்கப்பட்ட, கொலை செய்யப்பட்ட சிறுவர்களுள் பெரும்பாலானோர் இந்த வகையைச் சார்ந்தவர்களே எனச் சான்றுகள் கூறுகின்றன. ஆதலால், பெற்றோரின் முழு கவனம், அன்பு, அரவணைப்பு மற்றும் ஆதரவில் வளரும் குழந்தைகள், பெரும்பாலும் இந்த படுகுழியிலிருந்து தப்பித்துவிடுகிறார்கள்.

பாதுகாத்தல்

பெரியவர்களை மதித்து நடக்க வேண்டும் என்று நாம் கற்றுக் கொடுப்பதால், குழந்தை பாலியல் பழித்தலைத் தடுப்பது மிகப் பெரிய சவாலாக இருந்து வருகின்றது. என்றாலும், இந்த கொடுமையிலிருந்து நம் கண்மணிகளை பாதுகாத்துக் கொள்ள ஏராளமான வழிகள் இருக்கின்றன. அவை -

1. மிக முக்கியமாக, ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டிய விஷயம் - குழந்தைகள் பெரும்பாலும் அறிமுகமான சொந்தக்காரரால் , நண்பரால்தான் தாக்கப்படுகின்றனர்.

2. குழந்தைகளுக்கு, அவர்களது உரிமையை தெளிவாக எடுத்துக் கூற வேண்டும். அவர்களுடன் பழகும் நபர், பெரியவராக இருந்தாலும், மதிப்புக்குரியவராக இருந்தாலும், நெருக்கமான உறவுக்காரராக இருந்தாலும். தங்களுக்கு சங்கடமாக, தொந்தரவாக அமையும் செயல்களை, அந்த வளர்ந்த நபர் செய்வாரேயானால். அதனை உடனே மறுக்கவும், தடுக்கவும் தமக்கு முழு உரிமை இருக்கின்றது என்று பிள்ளைகளுக்குப் புரியவைக்க வேண்டும்.

3. தாய், தந்தையர் குழந்தையுடன் நெருக்கமான உறவை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். தமக்கு தொந்தரவு தரும், மன உளைச்சல் கொடுக்கும் விஷயங்களை, பிள்ளைகள் தயங்காமல், நம்பிக்கையோடு, பெற்றோரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும். சிறுவர்களுக்கு அந்த சூழ்நிலையை நாம் அமைத்துக் கொடுக்க வேண்டும்.

4. குழந்தைகளுக்கு உடல் பற்றிய தெளிவு ஏற்படுதல். முறையான தொடுதல், முறையில்லாத தொடுதல் போன்றவற்றை விளையாட்டாக குழந்தைகளின் காதில் சொல்லி வைத்தல்.

5. நம்பத்தகாத ஆசாமிகளுடன் எக்காரணம் கொண்டும் குழந்தைகளைத் தனிமையில் விடாதீர்கள்.

6. குழந்தையை வேறொருவரின் பாதுகாப்பில் விடுவதற்கு முன்பு, அந்த நபரைப்பற்றி முழுவதாக தெரிந்து கொள்ளவும்.

7. குழந்தைகளுக்கு அளிக்கப்படும் பரிசுப்பொருட்கள், பொம்மைகள் ஆகியவை யாரிடமிருந்து வருகின்றன என்று கண்காணிக்கவும்.

8. வேற்று மனிதர்களிடமிருந்து உணவு, மிட்டாய் ஏற்கக்கூடாது. உடன் செல்லக் கூடாது என்று கற்பிக்க வேண்டும்.

9. பள்ளி முடிந்து நேராக வீட்டுக்கு வரும் வழக்கம் ஏற்படுத்தல் வேண்டும்.

10. எந்த நேரமும் குழந்தைகள் எங்கே இருக்கிறார்கள். யாருடைய கண்காணிப்பில் இருக்கிறார்கள் என்ற தகவல் அறிந்து வைத்துக் கொள்ளுங்கள்.

11. குழந்தைகள் பார்க்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள். படிக்கும் புத்தகங்கள். கணினி கோப்புகள், இன்டர்நெட் தொடர்புகள், வலை இயக்கங்கள், தொலைபேசி தொடர்புகள் ஆகியவற்றை கவனமாக கண்காணித்தல்.

12. சமூகத்தில், பள்ளியில் இது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பாதிப்பு ஏற்படும் முன்னரே அதனை தடுக்கும் வழிகளை அறிந்து கொள்ள வேண்டும். சந்தேகத்துக்குரிய நபரை சட்டத்துக்கு அடையாளம் காட்ட வேண்டும்.

வெள்ளைக் காகிதங்கள்

மொத்தத்தில் நம் சிறார்கள் வெள்ளைக் காகிதங்களைப் போன்றவர்கள். அவர்களின் அப்பழுக்கற்ற மனதில், மூளையில் நல்ல விஷயங்கள். மானிடத்தின் முன்னேற்றத்துக்கான அறிவு தீபங்கள் ஏற்ற வேண்டும்.

வருங்கால சந்ததி செழுமையாக வளரட்டும்.

பிள்ளைச் செல்வங்களுக்கு, தெளிவாக வளர்ந்த பாஷை பேசத்தெரியாது. நாம்தான் அவர்களைப் புரிந்து கொள்ள வேண்டும். பாதுகாக்க வேண்டும். குழந்தைகளின் வெள்ளை மொழிக்கு மொழிபெயர்ப்பு தேவையில்லை.

வெள்ளைக் காகிதங்களுக்கு அழுக்கு தேவையில்லை.

- கற்பகம் இளங்கோவன்

Pin It